-- சொ.வினைதீர்த்தான்
தமிழை பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ்; பைந்தமிழ்; வண்தமிழ்; ஒண்தமிழ்; கன்னித்தமிழ் என்று சிறப்புச் சொற்களைச் சேர்த்துச் சொல்கிறோம். தமிழ் மூன்றாகப்பிரிந்து இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழாயிற்று. முதலாழ்வார்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் தமிழுக்கு மேலும் சிறப்பான ஓர் அடைமொழியிட்டு அழைக்கிறார்.
ஆழ்வார் தந்த நன்முத்து “ஞானத் தமிழ்” என்ற அடைமொழி. தமிழை ஞானத்தமிழ் என்று சொல்லுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழை ‘இருந்தமிழ்’ என்றும் தன்னைப் ‘பெருந்தமிழன்’ என்றும் சொல்லிக் கொண்டும் பெருமையடைகிறார்.
தமிழ் அறிவூட்டும் ஆற்றல் உள்ளது. தமிழால் தான் கடைத்தேற முடியும். உய்தியளிக்க வல்லது. கற்றவரின் அறிவை நேர்மையான நெறியில் செலுத்தும் தன்மை தமிழுக்கு உண்டு. ஆதலால் ஞானத்தமிழ் என்கிறார். பூதத்தாழ்வார் பாடல்கள் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதி என்ற பெயரில் அமைந்துள்ளன. அவ்வந்தாதியின் முதல் வெண்பாவிலேயே தமிழுக்கு அடைமொழி தந்துவிடுகிறார்.
அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இன்புஉருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.
அன்பும், அது ஈனும் ஆர்வமுடைமையும், உருகும் சிந்தையையும் அளித்தது தமிழ். அதனால் நாரணற்கு ஞானஒளி விளக்கு என்னால் இயற்ற முடிந்தது என்கிறார் ஆழ்வார் பெருமான். தமிழ்மொழியை அறிந்திராவிட்டால், படித்திராவிட்டால் எனக்கு அறிவு வளர்ந்திருக்காது: ஞானச்சுடர் விளக்கை ஏற்றியிருக்க முடியாது என்பதே பூதத்தாழ்வாரின் உள்ளக்கருத்து.
இக்கருத்துக்கு எழுபத்து நாலாம் பாடலில் மேலும் அசைக்க முடியாத உறுதி சேர்க்கிறார் ஆழ்வார். “இருந்தமிழே உன்னால் இருந்தேன்” என்ற தமிழ்விடு தூது ஆசிரியருக்கு வழிகாட்டியாக “இருந்தமிழ்” என்ற சொல்லாட்சியும் “பெருந்தமிழன் யானே” என்ற மட்டிலாப்பெருமையையும் இப்பாடலில் காணக் கிடைக்கின்றன.
“யானேதவம் செய்தேன்; ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
யானேதவம் உடையேன்; எம்பெருமான் - யானே
இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது!”
”நானே சிறந்த தமிழன்; தமிழனாக இருப்பதனால் நல்லவன் ஆனேன்; முயன்ற தவத்தை என்றும் கைக்கொண்டுள்ளேன். சிறந்த, பெரிய தமிழிலே நல்ல பாமாலை உன் திருவடிகளிலே சூடத்தக்கதாகக் கூறினேன்” என்பதே இப்பாடலின் பொருள் அல்லவா!
திருமால் நெறியோடு இவ்விரு பாடல்கள் நமக்குத் தருகின்ற அறிவுரைகள், ”தமிழை விரும்பிப்படியுங்கள்: அறிவு பெறலாம்! தமிழர் பண்பாட்டினை மறவாதீர்கள்; சிறந்த தமிழராக வாழலாம்! நல்ல மனிதனாகவும் வாழலாம்!” என்பதே.
"யானே பெருந்தமிழன்; நல்லேன்" என்று ஆழவார் கூறும் பெருமிதம் நெஞ்சைக்கவர்கிறது. எல்லோரும் அவ்வாறு சொல்லிக்கொள்ள முடியுமா?
தமிழர் பண்பாட்டினை மறவாதவர்களே அவ்வாறு சொல்லிக்கொள்ள முடியும்!
---
அருமை
ReplyDelete