அரியலூரின் தொல்லுயிர் எச்சங்கங்களும் டைனோசார் முட்டைகளும்
-- திரு. சபாரத்தினம்
அண்மையில் அரியலூரில் கண்டெடுக்கப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல, ஆனால் இந்த முட்டை போன்ற உருண்டைகள் கடல்வாழ் உயிரினங்களின் படிமப் பாறைகள். முற்காலத்தில் கடலில் வாழ்ந்து பிறகு அழிந்துவிட்ட அம்மோனைட் உயிரினங்களின் மீதும் மற்றும் மேலும் பல்வேறு வகையான தொல் உயிர் எச்சங்களின் மீதும் ஏற்படும் சுண்ணாம்புப் படிமங்களால் பெரிய உருண்டைகளாகியுள்ளது என்று புவியியலாளர் திரு. சபாரத்தினம் விளக்கம் அளிக்கிறார்.
மேலும் அரியலூர் அருங்காட்சியகத்தில் இருக்கும் உண்மையான டைனோசர் முட்டையின் படத்தையும் பகிர்ந்து கொண்டார். அந்த முட்டை குறித்து ஆய்வு செய்த ஜெர்மானிய புவியியலாளர்கள் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரையானது ஆய்விதழில் வெளியானது என்றும் குறிப்பிட்டார்.
________________________________
லேம்ப்டன் சிகரம் (Lambtons peak)
கோவை நகரத்தின் மேற்கு அரணாகச் செல்லும் நீண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் கவனித்திருக்கிறீர்களா!?. அதில் ஒரு சிகரம் கட்டைவிரலை வளைத்து தம்ஸ்அப் காட்டுவது போலிருக்கும். அதுதான் லேம்ப்டன் பீக். இது எங்கிருக்கிறது? வெள்ளக்கிணர், துடியலூர் பகுதிகளிலிருந்து சில கிமீ தொலைவில் இதை அடையலாம். இதே மலைப் பகுதியில்தான் குருடி மலை(குரு_ரிஷி ?) உள்ளது.
யார் இந்த லேம்ப்டன்?
இவர் இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரல்.
Great meridional arc என்ற , நில அளவைக்கான அடிப்படைக் கோட்டை வரையத் துவங்கியவர்(1802). அதை ஆங்கிலத்தில் trigonometrical survey என்பர். நிலங்களைப் பல முக்கோணங்களாகப் பிரித்து அளவை செய்வர். இந்த நில அளவைகளுக்கு அடிப்படையான கோடுதான் Great meridional arc. முசோரியில் இருந்து கன்னியாகுமரி வரை வரையப்பட்டது. இந்தப் பெருமுயற்சியின் இடையில் லேம்ப்டன் காலமாகிவிட ஜார்ஜ் எவெரெஸ்ட் பொறுப்பு ஏற்றார். உலகின் உயர்ந்த சிகரமான எவெரெஸ்ட் இந்த சர்வே யின் விளைவாகவே கண்டுபிடிக்கப்பட்டது. ஜியார்ஜ் எவெரெஸ்ட் நினைவாக அந்த சிகரத்துக்குப் பெயர் வைக்கப்பட்டது போல், இந்த மாபெரும் பணியின் முன்னோடி லேம்ப்டன் இந்த பகுதியில் பணியாற்றியதால்(1806 வாக்கில்) இந்த சிகரத்துக்கு இவர் பெயர் சூட்டப்பட்டது
இந்த மாபெரும் பணியில் ஈடுபட்டபோது(ஏன் உயிரிழப்புக்கள் கூட) நடந்த சம்பவங்களையும், சிரமங்களையும் திரு ரமணன் அவர்கள் தனது "கடைசிக்கோடு" என்னும் நூலில் சுவை படக்கூறியிருப்பார். அவருக்கு எனது நன்றிகள்.
புகைப்பட உதவி: திரு. சுபாஷ் சுந்தரம்
________________________________
நீலகிரி (Blue mountain)
தமிழ் நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும், நீலகிரியோடு இணைகின்றன. இந்த மலை சார்னோகைட் (Charnockite) எனும் பாறைகளால் ஆனது. இது ஒரு வகை கருங்கல் (Granite) ஆகும். ஹைப்பர்ஸ்தீன் கிரானைட் (Hypersthene Granite) என்று அழைக்கப்படும். ஹைப்பர்ஸ்தீன் அடர் பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு கனிமம், அந்த வகை கிரானைட் பாறைகளின் ஒரு அங்கமாகக் காணப்படும். தூரத்திலிருந்து பார்க்கும்போது இந்த சார்னோகைட் மலைகள் நீல நிறமாகத் தெரியும். எனவே நீலகிரி என்று அழைக்கப் படுகிறது.
முதன் முதலாக இந்த வகைப் பாறையைக் கண்டு பிடித்தவர் ஜேம்ஸ் ஹாலண்ட் (James Holland) என்னும் புவியியலாளர். கல்கத்தா நகரைக் கட்டமைத்து உருவாக்கிய ஜாப் சார்னோக் (Job Charnock) எனும் ஆங்கிலேயரின் கல்லறையில் (tomb stone) இந்த பாறை முதன் முதலில் காணப்பட்டதால், இப் பாறைக்கு சார்னோகைட் என்று பெயரிடப்பட்டது. சென்னை பல்லாவரம் பகுதிகளில் காணப்படுவதும் இவ்வகைப் பாறைகளே.
சில தாவரவியலாளர்கள் 12 ஆண்டுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப்பூ காரணம் கொண்டு, நீலகிரி என்று அழைக்கப் படுவதாகக் கூறுவதும் உண்டு.
________________________________
#Geologist Sabarathinam
No comments:
Post a Comment