-- முனைவர். ஒளவை அருள்
பதிணென் கீழ்கணக்கு நூல்களின் பாவளத்தில் பன்னிரண்டாது நூலாக தித்திப்புப் பாடல்கள் நிரம்பிய திணைமாலை நூற்றைம்பதிலிருந்து ஒருசில பாடல்களின் சுவை அறிவோம்…
திணைமாலை நூற்றைம்பது- அறிமுகவுரை
‘திணை’ என்ற சொல்லுக்கு, ‘ஒழுக்கம்’ என்பது ஒரு பொருள். இச்சொல்லை, திண்+ஐ என்று பிரிக்கலாம். நிலைமொழியாகிய ‘திண்’ என்பதற்கு, ‘உறுதி’ என்று பொருள். வழிமொழியாகிய ‘ஐ’ என்பதற்கு, ‘அழகு’ என்று பொருள். (ஐ என்பது, இரண்டாம் வேற்றுமை உருபாகவும், அசைச் சொல்லாகவும், இடைச்சொல்லாகவும் கொள்ளப்படும்). இங்குத் ‘திணை மாலை’ என்பதற்கு ‘உறுதியுடைய அழகு பொருந்திய பாமாலை’ என்று கொள்ளலாம். நூற்றைம்பது என்பது, எண்ணிக்கையைக் குறிக்கும்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையெனும் ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் ஒழுகலாற்றை வகுத்துத் தொகுத்துக் கூறுவது இந்நூல். கீழ்க்கணக்கு நூல்களில், அகநூல்களாக ஆறு உள. அவற்றுள் நான்கு நூல்கள், ‘திணை’ என்ற பெயரோடு அமைந்துள்ளன. அவற்றுள்ளும் மிகுதியான பாடல்களை உடையது இந்நூல்.
ஒழுக்கம், உரிப்பொருள் எனப்படும். குறிஞ்சி-புணர்தலும் புணர்தல் நிமித்தமும். முல்லை-இருத்தல் இருத்தல் நிமித்தமும், மருதம் – ஊடலும் ஊடல் நிமித்தமும், நெய்தல் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும், பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும். இவற்றின் அடிப்படையிலேயே பாடல்கள் அமைந்துள்ளன
பாடல் 132-ன் மூன்றாமடியில் நான்காஞ்சீரும், பாடல் 146 -ன் முதலடியில் இரண்டாஞ்சீரும் சிதைந்துள்ளன.
இந்நூலின் ஆசிரியர், ‘கணிமேதாவியார்’. ஏலாதி என்னும் நூலின் ஆசிரியரும் இவரே. ‘கணிமேதை’ என்றும் இவரைக் கூறுவர். இவர், சோதிடக்கலை வல்லவரெனவும், சமணச் சமயத்தாராகக் கொள்ளத்தக்காரெனவும், ‘ஏலாதி’ அறிமுகவுரையில் கண்டனவே,
குறிஞ்சித்திணை
(தலைமகளும் தோழியும் ஒருங்கிருந்த வழிச்சென்ற, தலைமகன், தோழியை மதியுடம்படுத்தது)
நறைபடர் சாந்தம் அறஎறிந்து, நாளால்
உறைஎதிர்ந்து வித்தியஊழ் ஏனல் – பிறையெதிர்ந்த
தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர்!- காணீரோ
ஏமரை போந்தன ஈண்டு. (1)
மணம் மிகுந்த சந்தன மரங்களை வேருடன் வெட்டியெடுத்துச் சீரமைத்து, நலமிகு நாளதனில், பருவமழை பெய்யுங்காலத்தையும் எதிர்கொண்டு வித்திட்டதனால், முதிர்ச்சியடைந்த திணைப்பயிர் விளைந்துள்ள மலைப்புனத்தைக் காவல் செய்யும் தலையணி வகையினை நிகர்க்கும் தாமரை மலர் போன்ற அழகு முகத்தையும், நீண்டு வளர்ந்துள்ள கூந்தலையும் பெற்றுள்ள மெல்லிய நீண்டு வளர்ந்துள்ள கூந்தலையும் பெற்றுள்ள மெல்லியரே! இப்போது இவ்விடத்தில் திணைப்புனம் காவல் செய்வதைக் காண்பீராக!
(இராக்குறி வேண்டிய தலைமகளுக்குத் தோழி, மறுத்துச் சொல்லியது)
கறிவளர்பூஞ் சாரல் கைந்நாகம் பார்த்து
நெறிவளர் நீள்வேங்கை கொட்கும் – முறிவளர்
நன்மலை நாட! இரவரின் வாழாளால்,
நன்மலை நாடன் மகள். (7)
தலைவன், தலைவியைப் பகற்பொழுதில் காணவரின், ஊரானது அலர் தூற்றும். அடுத்தபடி, இரவுப்பொழுதில்தான் காணவர வேண்டும் அந்தப் பொழுதையும் ஆராய்ந்து பார்ப்பின், காட்டில் ஐந்து தலை நாகங்களும், யானைகளும் நிறைந்துள்ளன. பதினாறடி பாயக்கூடிய வேங்கைப் புலிகளும் திரியும். ஆகையால் தலைவனைத் தோழி, இரவில் வர வேண்டாமெனக் கூறுகிறாள். இரண்டு பொழுதுகளும் வேண்டாமென்றால், என்னதான் செய்வது ? எனவே, தலைவியை விரைந்து மணம் செய்துகொள்ள வருமாறு கூறுகிறாள்.
(தோழி, படைத்து மொழி கிளவியான் வரைவு கடாயது)
பனிவரைநீள் வேங்கை பயமலைநன் நாட
இனிவரையாய் என்றெண்ணிச் சொல்வேன் – முனிவரையுள்
நின்றான் வலியாக நீவர யாய்கண்டாள்
ஒன்றாள்காப்(பு) ஈயும் உடன்று. (27)
‘வேங்கை மரங்கள் சூழ்ந்த பனிபடர்ந்த மலை நாட்டுக்குத் தலைவனே! இதுவரை தலைவியை மணம் செய்து கொள்ளாமல், களவுக் காலத்தை நீளச் செய்தாய். இனியும் அவ்வாறு நீளச் செய்ய மாட்டாய் என்றெண்ணி உனக்குச் சொல்வேன். நீ இந்த மலைச்சாரலில் வந்து செல்வதை என் அன்னை அறிந்தனள். இனியும் தலைவி, இற்செறிப்புக்கு ஆளாக வேண்டா. எனவே, விரைவாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல் வாழ்வை மேற்கொண்டு, இருவீரும் துன்பற்ற இன்ப வாழ்வை மேற்கொள்வீராக! ‘ என்று, தோழி கூறினாள்.
நெய்தல் திணை
(தலைமகனைத் தோழி, வரைவு கடாயது)
திரைபாக னாகத் திமில்களி றாகக்
கரைசேர்ந்த கானல் படையா – விரையாது
வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்ப! நாள்
ஆய்ந்து வரைதல் அறம். (52)
நெய்தல் நிலத் தலைவனாம், கடற்கரைக் கானலைச் சேர்ந்தவனுமாகிய தலைமகன், திருமணம் செய்து கொள்வதை நீட்டித்து வருகின்றான். தலைவியைச் சந்திக்கப் பகலின் வருவதாயின், ஊரார் அலர் தூற்றுவர். இரவில் வருவதாயின், இடர்ப்பாடுகள் பலவும் உண்டு. எனவே, அவனைத் தலைமகளின் தோழி எதிர்கொண்டு, நல்ல நாளொன்றைத் தேர்ந்தெடுத்து விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றாள். அவ்வாறு வரைவினை மேற்கொள்வதே அறமுமாகும் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றாள்.
(‘இப்பொழுது வாரல்!’ என்று, வரைவு கடாயது)
பகல்வரின் கவ்வை பலவாம் பரியாது
இரவரின் ஏதமும் அன்ன – புகஅரிய
தாழை துவளும் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே
ஏழை நுளையர் இடம். (59)
இரவுக் குறியிலும், பகற்குறியிலுமென இரண்டு குறியிடங்களிலும் வரவேண்டா என மறுத்துரைப்பது இடம்பெற்றுள்ளது. தலைமகன் பகற்பொழுதில் வருவதாயின், ஊர்மக்களின் பழிச்சொல் உண்டாகும். அதை விடுத்து இரவுப் பொழுதில் வருவதாயின், பகற்பொழுதைப் போன்றே துன்பங்கள் பலவும் உண்டாகும். பகற்பொழுதின் பழிச்சொல்லானது, தலைமகனுக்கும், தலைமகளுக்குமானது. இரவுப்பொழுதின் இடர்ப்பாடுகள், தலைமகனுக்கானது. மேலும், ஓயாது அலைவீசிக் கொண்டிருக்கும் நெய்தலங்கானத்தில், தாழைகளோ மிகவும் செறிவாக மண்டிக்கிடக்கும். வந்து செல்வது, மிகவும் அரிய செயல். எனவே, ‘இனிமேலும் வரவேண்டா. வரைந்து கொள்வதே வேண்டற்பாலது’ என்று தோழி அறிவுறுத்தினாள்.
பாலைத்திணை
(பருவம் காட்டி, தலைமகளைத் தோழி வற்புறுத்தியது)
உருவேற் கண்ணாய்! ஒரு கால்தேர்ச் செல்வன்
வெருவிவீந்து உக்கநீள் அத்தம் – வருவர்
சிறந்து பொருள்தருவான் சேட்சென்றார் இன்றே
இறந்துகண் ஆடும் இடம். (80)
கண் துடித்தல் என்பது, ஒருவகைச் சகுனமாகும். மகளிர்க்கு இடக்கண் துடிப்பதென்பது, நன்மையைச் செய்யுமென்பர். நெடிய பாலை நில வரியாகப் பொருள்தேடச் சென்ற தலைமகன், இன்றேனும் வருவானென்று தலைவி, நம்பிக்கை கொள்கின்றாள். அதனைக் குறிக்கும் சகுனமாகத் தலைவியின் இடக்கண் துடிக்கின்றது. இதனைத் தோழியானவள், வேலைப் பழிக்கின்ற விழிகளைக் கொண்ட தலைமகளிடம் கூறி, பருவங்காட்டி வற்புறுத்தினாள்.
(தலைமகள் இற்செறிப்புக் கண்ட பின்னை, அவள் நீங்கிய புனங்கண்டு, ஆற்றானாய் மீள்கின்ற தலைமகன் சொல்லியது. சுரத்திடைச் சென்ற செவிலித்தாய் சொல்லிய தூவம் ஆம்)
கொன்றாய்! குருந்தாய்! கொடி முல்லாய்! வாடினீர்
நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் – சென்றாளுக்(கு)
என்னுரைத்தீர்க்(கு) என்னுரைத்தாட்(கு) என்னுரைத்தீர்க்(கு) என்றுரைத்தாள்
மின்னுரைத்த பூண்மிளிர விட்டு? (81)
சுரத்திடைச் சென்ற செவிலித்தாய், தலைவியின் பொருட்டாக, ஆங்குள்ள கொன்றை, குருந்தம் ஆகிய மரங்களையும், முல்லைக் கொடியையும் எதிர்கொண்டு பின்வருமாறு வினவுகின்றாள். “தலைவியைக் காட்டி, கண்டு, நீங்கள் என்னதான் சொன்னீர்கள்? அதற்குத் தலைவியும் என்னதான் சொன்னாள்? மீளவும் அவளிடம் நீங்கள் என்னதான் சொன்னீர்கள்? அதன் பிறகும் தலைவி என்னதான் சொன்னாள்?”
மரங்கள் தலைவியைப் பார்த்து, “எங்களையெல்லாம் விட்டுவிட்டுச் செல்லத் துணிந்துவிட்டாயா?” என்றன. தலைவி மரங்களைப் பார்த்து, “உங்களைப் பிரிந்து செல்லத் துணியவில்லை. தலைவனிடம் உடன்போக்கு மேற்கொள்கின்றேன்” என்றாள். மரங்கள், “உன் தாய் தேடிவரின், என்ன சொல்வது?” என்றன. தலைவி, “இவ்வழியாகத் தான் தலைவி உடன்போக்கு மேற்கொண்டாள். அவள் மகிழ்ச்சியுடன்தான் காணப்பட்டாள். நீங்களும் வருந்தாமல் வீடு திரும்புங்கள்” என்றாள். இவ்வாறு நடந்திருக்குமென்பது, செவிலித்தாயின் கற்பனை.
முல்லைத்திணை
(பருவங்கண்டு அழிந்த கிழத்தி, தோழிக்குச் சொல்லியது)
வண்டினம் வௌவாத ஆம்பலும் வாரிதழான்
வண்டினம் வாய்வீழா மாலையும் – வண்டினம்
ஆராத பூந்தார் அணிதேரான் தான்போத
வாராத நாளே வரும். (101)
தலைமகன் தோழியை நோக்கி, ‘தேன்வண்டுக் கூட்டம், கவர்ந்து கைப்பற்றிக் கொள்ளாத புல்லாங்குழல் என்பதன் மூலம் அல்லி மலரையும், வாய் மடுக்காத மாலைப் பொழுதைச் சுட்டாத மலர் மாலையையும் குறித்தன. வௌவாத ஆம்பல், வாய் வீழா மாலை, ஆராத பூந்தார் என்பனவற்றுள், வௌவாத, வீழா, ஆராத என்பவை, எதிர்மறை முகத்தான் கூறப்பட்டன. அவற்றைப் போலவே, ஈற்றடியை ‘வாராத நாளே வரும்’ என்று, தலைவியின் உருக்கத்தை உணர்த்தியுள்ளார் புலவர். ‘வண்டினம்’ என்பது, மூவிடங்களில் வந்து நரே பொருள் தந்தமையால், ‘சொற்பொருள் பின்வருநிலை’ யாகும். ‘வௌவாத’, ‘வாய் வீழா’, ‘ஆராத’ என்பன, ‘பொருள் வருநிலை’ யாகும்.
மருதத்திணை
(பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது)
மென்கண் கலிவய லூரன்தன் மெய்ம்மையை
எங்கட்(கு) உரையாது எழுந்துபோய் – இங்கண்
குலம்காரம் என்(று(அணுகான் கூடும்கூர்த்(து) அன்றே
அலங்கார நல்லார்க்(கு) அறை. (127)
‘மென்மையான கண்ணோட்டமுடைய வளமையான மருதநிலத் தலைவன், தன்னுடைய உள்ளத்துணர்வினை எங்களிடம் சொல்லாமல் எழுந்து போனதுடன், இவ்விடத்தில் குடிகொண்ட சினமென்றெண்ணி, எம்மை நெருங்காதவனானான். அச்செயலானது, அளவற்ற அதிசயமானதென்ற, சிறப்புடைய தலைவனுக்கு எடுத்துரைப்பாயாக!’ என்று, பாணனிடம் தலைவி கூறினாள்.
பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
மாலையாழ் ஓதி வருடாயோ? – காலையாழ்
செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
நையும் இடமறிந்து நாடு. (133)
‘பாலைப் பண்ணை இசைக்கும் பாணனே! முன்பு உன் தலைவனுக்கு அந்திவேளை யாழிசைத்து, வருடியதில்லையோ? வைகறையில் யாழிசைக்கும் இடத்தை அறியமாட்டாய் போலும்! இப்போது வந்துள்ள உனது பொய்மைச் சொல்லுக்கு, எங்கே இரங்குவாரோ, அந்த இடத்தை அறிந்து கொண்டு, அங்குச் செல்வாயாக!’ என்று, தலைவனுக்காகத் தலைவியைக் காண வந்த பாணனிடம் தலைவி மொழிந்தாள்.
--
No comments:
Post a Comment