Saturday, March 28, 2020

சிதம்பரம் கோயிலில் சரஸ்வதி பண்டாரம்: ஒரு புதிய பார்வை

சிதம்பரம் கோயிலில் சரஸ்வதி பண்டாரம்: ஒரு புதிய பார்வை

 ——   முனைவர் ஆ.பத்மாவதி



      சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் சரஸ்வதி பண்டாரம் என்ற ஒரு நூல் நிலையம் இருந்தது. இச்செய்தியை முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனது கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

      சரஸ்வதி பண்டாரம் என்றால் நூல் நிலையம் என்று பொருள். சரஸ்வதி என்பது நூல்களையும், பண்டாரம் என்பது கருவூலம் என்பதையும், சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் என்பதையும் குறிக்கும்.

      சிதம்பரம் சரஸ்வதி பண்டாரத்தில் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் இருந்தன. இந்த சுவடிகளைப் பார்த்து மீண்டும் புது ஓலைகளில் எழுதுவதற்கு இருபது பண்டிதர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தமிழ் சுவடிகளையும், சமஸ்கிருத சுவடிகளையும் ஒப்பிட்டு எழுதும் பணியும் நடைபெற்று வந்தது. இந்த சுவடிகளில் “சித்தாந்த ரத்னாகரம்”- என்ற சுவடி நூல் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது. நூல் நிலையத்தை நிர்வாகம் செய்வதற்கு, பாண்டிய மன்னன் காலத்தில் நிலம் தானமளிக்கப்பட்டிருந்தது. நூல் நிலையத்தைச் சரிவரப் பராமரிப்பது, விரிவுபடுத்துவது, பண்டிதர்களைக் கொண்டு ஓலைச்சுவடிகளை எடுத்து எழுதுவது போன்ற  பணிகளைக் கவனித்து வந்தவர் சுவாமி தேவர் என்பவர். இச் செய்திகளை எல்லாம் கூறும் பாண்டிய மன்னனின் காலம் கி.பி. 1251 முதல் 1284 வரை ஆகும்.

      சிதம்பரம் சரஸ்வதி பண்டாரத்தைப் பராமரித்து வந்த சுவாமி தேவர், சித்தாந்த ரத்னாகரம் எழுதியவராக இருக்கலாமோ என எண்ணத்தோன்றும். அப்படி நினைப்பதில் தவறொன்றுமில்லை. இவர்தான் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு ராஜகுருவாகத் திகழ்ந்தவர். இம்மன்னன் காலத்தில்தான் இந்நூலை அவர் எழுதியிருக்கிறார். எனவே இந்த சரஸ்வதி பண்டாரம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திற்கு முன்னமேயே மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் இயங்கி வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் காலம் கி.பி. 1178 முதல் 1218 வரை ஆகும்.

      சேக்கிழார் எழுதிய சைவ சமய நாயன்மார்களின் வரலாறு தான் பெரியபுராணம். சிதம்பரம் கோயிலிலிருந்துதான் பெரியபுராணத்தை எழுதினார் என்று கூறுகிறது திருமுறைகண்ட புராணம். அவர் சிதம்பரம் கோயிலைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? நாயன்மார்களின் வரலாற்றை எழுதுவதற்குத் தேவையான மூலங்களும், சைவ சமயத் தத்துவ நூல்களும் நிறைந்த ஒரு அருமையான நூல் நிலையம் சிதம்பரம் கோயிலிலிருந்ததுதான் காரணமாக இருந்திருத்தல் வேண்டும். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் முதல்மந்திரியாகப் பணிபுரிந்தவர். எனவே மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்திற்கு முன்னர் வாழ்ந்த, இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்திலேயே சிதம்பரத்தில் நூல்நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது. இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் காலம் கி.பி. 1133 முதல் 1150 வரை ஆகும்.

      மணவிற்கூத்தன் என்ற ஒரு சிற்றரசன், மூவர் முதலிகள் எனக்கூறப்படும் அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் எழுதிய தேவாரப் பாடல்கள் அனைத்தையும் செப்பேடுகளில் எழுதி சிதம்பரம் கோயிலில் வைத்தான் என்று அக்கோயில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அப்படியென்றால் இந்தத் தேவாரச் செப்பேடுகள் அங்குள்ள சரஸ்வதி பண்டாரத்தில் தானே வைக்கப்பட்டிருக்கும். அதனால் இந்த சிற்றரசன் வாழ்ந்த காலமாகிய, முதலாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலத்திலும் சரஸ்வதி பண்டாரம் இயங்கிக் கொண்டிருந்தது என்றுதானே பொருள். முதலாம் குலோத்துங்கச் சோழன் கி.பி. 1070 முதல் கி.பி. 1122 வரை ஆட்சி புரிந்தவனாவான்.

      இன்று நமக்குக் கிடைக்கும் முதல் மூவரின் தேவாரத் திருமுறைகள் சிதம்பரத்திலிருந்து எடுத்த ஏட்டுப்பிரதிகளின் நகலாகும். கண்டுபிடித்துத் தொகுத்து அளித்தவர்கள் முதலாம் இராஜராஜ சோழனும் நம்பியாண்டார் நம்பி என்ற கல்வியாளரும் ஆவார். இவர்கள் சிதம்பரம் கோயிலில் மூடிக்கிடந்த ஓர் அறையினுள்ளிருந்து எடுத்தார்கள் என்கிறது திருமுறைகண்ட புராணம். இந்தச்சுவடிகள் ஏன் சிதம்பரத்தில் வைக்கப்பட்டிருந்தன? அங்கு நூல்நிலையம் இருந்த காரணத்தினால் தான் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

      இந்த சரஸ்வதி பண்டாரம் சிதம்பரம் கோயிலில் எந்த இடத்திலிருந்தது? “மன்றுளாடும் கூர்த விருட் கண்டர் புறக்கடையின் பாங்கர், ஆர்ந்த தமிழிருந்தவிடம்” என்று கூறும் திருமுறைகண்ட புராணம்.  மற்றொரு பாடலில் “ஐயர் நடமாடும் அம்பலத்தின் மேல் பால்” இருந்தது என்றும் கூறுகிறது.

       திருமுறைகண்ட புராணம் கூறுவதைக் கொண்டு பார்க்கும்போது, சரஸ்வதி பண்டாரம் நடராஜர் கோயிலில் வடமேற்கிலிருந்தது என்பது தெரிகிறது. சரஸ்வதி பண்டாரம் பற்றிக்கூறும் சுந்தர பாண்டியனது கல்வெட்டு, மூன்றாம் பிரகாரத்தின் சுப்பிரமணியர் சன்னிதியின் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. எனவே திருமுறைகண்ட புராணம் கூறும் இடமும் சரஸ்வதி பண்டாரம் பற்றிய கல்வெட்டு உள்ள இடமும் ஒன்றாக இருப்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.

      இராஜராஜ சோழன் காலத்தில் மூடிக்கிடந்த அறையினுள் உள்ள சுவடிகள் செல்லரித்துக்கிடந்தன, என்று கூறப்பட்டுள்ளதால் ராஜராஜன் காலத்திற்கு  முன்பிருந்தே இந்த சரஸ்வதி பண்டாரம் மூடிக்கிடந்திருக்கிறது. என்ன காரணத்திற்காக யாரால் மூடப்பட்டது என்பது தெரியவில்லை. மேற்கூறிய செய்திகள் மூலம் சரஸ்வதி பண்டாரம் ராஜராஜனுக்குப் பின்னர் வாழ்ந்த மன்னர்கள் காலத்தில் சிறப்பாக இயங்கி வந்திருக்கிறது என்பதால் மூடிக்கிடந்த அறையைத் திறந்த ராஜராஜன் காலம் முதல் அந்த சரஸ்வதி பண்டாரம் சரிவரப் பராமரிக்கப்பட்டு, செயல்பட ஆரம்பித்திருக்க வேண்டும் என்று கூறலாம்.

      ராஜராஜனுக்கு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் சுந்தரர். இவர் எழுதிய திருத்தொண்டர் தொகையில் முதல் வரியிலேயே “தில்லைவாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்கிறார். சேக்கிழார் புராணத்தின் மூலம் தில்லையில் வாழ்ந்த அந்தணர்கள் மூவாயிரவர் என்று தெரிகிறது.  இவ்வாறு மூவாயிரவர், ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்று கூறப்பட்டு ஒரு குழுவாகச் செயல்பட்டு வந்த இடங்களில் எல்லாம் பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே சிதம்பரத்தில் கல்வி நிறுவனம் ஒன்று இருந்திருத்தல் வேண்டும். அந்த நிறுவனத்தின் நூல்நிலையம் தான் இந்த சரஸ்வதி பண்டாரம்.

      இங்கிருந்துதான் ராஜராஜன் உடன் சென்ற நம்பியாண்டார் நம்பி என்ற கல்வியாளர் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையையும் எடுத்திருக்கிறார். பின்னர் அதைப் பின்பற்றி நம்பி எழுதியதுதான் திருத்தொண்டர் திருவந்தாதி. சுந்தரர் காலத்திலேயே இங்கு ஒரு நூல்நிலையம் இருந்த காரணத்தினால் அவர் எழுதிய தேவார நூல்கள் அங்கு வைக்கப் பட்டிருந்தன. சுந்தரர் காலத்திலேயே தில்லை வாழ் அந்தணர்களால் நுால் நிலையம் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது என்று கூறலாம். இந்த நூல்நிலையத்தில் அதாவது சரஸ்வதி பண்டாரத்தில் அப்பரும், ஞான சம்பந்தரும் எழுதிய தேவாரப்பாடல்களும் இடம் பெற்றிருந்தன. முதலாம் ராஜராஜன், நம்பியாண்டார் நம்பியின் உதவியுடன் தேவாரங்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்தான். மூடிக்கிடந்த சரஸ்வதி பண்டாரத்தை. ராஜராஜனே திறப்பு விழா செய்தான் என்பதை உமாபதி சிவாச்சாரியார் திருமுறைகண்ட புராணத்தில் 'பண்டாரந் திறந்து விட்டான் பரிவு கூர்ந்தான், என்கிறார்.




தொடர்பு:
முனைவர் ஆ.பத்மாவதி, மேனாள் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர்
(drepipadma@gmail.com)



No comments:

Post a Comment