Tuesday, March 24, 2020

நெடுந்தீவின் செவி வழி வரலாறு

நெடுந்தீவின் செவி வழி வரலாறு

——   வ.ஐ.செ.ஜெயபாலன்



     நெடுந்தீவுக்கு முதன் முதலில் தென்னிந்தியக் குடியேறிகள் வந்தபோது (எல்லா குடியேற்றங்களும் தனிநாயக முதலி வரவு எனப் பொதுப்பட அழைக்கப்படுகிறது), நெடுந்தீவில் வாழ்ந்த ஆதிக்குடிகளின் இரண்டு தலைவர்களுக்கும் ”தனிநாயக முதலிக்கும்” பேச்சு வார்த்தை நடந்ததுபற்றி சொன்னார்கள். இக்கதை தெரிந்த ஒருசிலர் இப்போதும் இருக்க வாய்ப்புள்ளது. ஒரு தலைவன் பெயர் ’கிடந்தான்’ என ஞாபகம். முதியவர்களை யாராவது இதுபற்றி தகவல் கேட்டு எழுத வேண்டுகிறேன்.

     கதைகள் பலவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது நெடுந்தீவு (Delft Island)  பௌத்தர்களின் இரகசிய பின்தளமாக இருந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. முக்குவர்கள் (வெடியரசன் முக்குவ தலைவர்களின் பொதுப்பெயர் ) அரசபகையால் பாதிக்கப் பட்டவர்களை (பௌத்தர்களை என நினைக்கிறேன்) படகுகள் மூலமாக நெடுந்தீவுக்கு கொண்டுவர,  நெடுந்தீவு மூலமாக இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். முக்குவருக்கும் மீகாமன் படைகளுக்கும் (கரையார் தலைவர்களின் பொதுப்பெயர்) மோதல்கள் பற்றியும் பௌத்த பிக்குணிகள் கரை இறங்கும்போது கடற்கரை வரைக்கும் பந்தல் போடப்பட்டது பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று டச்சு கோட்டையுள்ள இடத்தில் முதலில் மீகாமன் கோட்டை இருந்ததாம். நெடுந்தீவு மக்களுக்கும் சோழர்களுக்கும் இருந்த சிக்கல் முக்குவர்களின் அகதிப் படகுகளின் தளமாக நெடுந்தீவு இருந்ததுதான். அரச பகையால் வெளியேறியவர்களும் மத மோதல்களாலும் வெளியேறிய பெளத்த அகதிகளை இலங்கைக்குத் தப்ப வைத்ததில் முக்குவர் பங்கு ஆராயப்படவேண்டும். 

     முக்குவர்களுக்கும் சோழர் கடற்படையிலிருந்த கரையாருக்கும் இடையிலான மோதல்கள்தான் நெடுந்தீவு புத்தளம் மட்டக்களப்பில் வழங்கும் பல்வேறு வெடியரசன் கதைகளின் மூலம் எனத் தோன்றுகிறது. நான் கேட்ட செவிவழிக் கதைகளும் என் ஆய்வுகளும் கிழக்கு மாகாணத்தில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலும் பெரிய அளவு முக்குவர் வாழ்ந்திருக்கிறார்கள். கரையாருடனான மோதலில் புத்தளம் கிழக்கு மாகாணம் எனப் புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமன்றி கணிசமான பகுதிகள் கரையோரங்களைவிட்டு உள்நாட்டுக்கு வந்து வெள்ளாளர்களோடு கலந்துவிட்டமையை உணர்த்துகிறது. தமிழ் பௌத்தத்துக்கும் முக்குவருக்கும் உள்ள தொடர்பு ஆராயப்பட வேண்டும்.

[யாழ்ப்பாண வெள்ளாளர் சமுகம் யாழ்ப்பாணத்தில் நில உடைமை பெற்ற உள்ளூர் மற்றும் ஆங்கிலேயரின் ஆரம்பக் காலம்வரை தமிழகத்திலிருந்து அடிமைகளோடு வந்து குடியேறிய பல்வேறு சாதிகளது ஒருங்கிணைவால் உருவானதாகும். இவர்களுள் போர்த்துக்கீச டச்சு ஆவணங்களில் அதிகம் குறிப்பிடப்படும்  மடப்பள்ளிகள் ஆவர். மடப்பள்ளிகள் பௌத்தர்களான முக்குவர் என்பது என் கருத்து. 1977ல் நான் யாழ்மாவட்ட சாதிகளை ஆராய்ந்தபோது மடப்பள்ளி வெள்ளாளர் என்கிற பெயரில் அவர்களை யாழ் பெருமாள்கோவில் வட்டாரங்களில் அடையாளம் கண்டேன். ஆய்வு மேற்கொண்டபோது அவர்கள் பெருமாளை வழிபடுகிறவர்களாக இருந்தார்கள். கரையாருக்கு அஞ்சி நயினாதீவில் இருந்து புத்தளம் கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளில் முக்குவர்களுள் ஒரு பகுதியினர் முஸ்லிம்களாகிவிட்டார்கள்.]

     யாழ்ப்பாண மன்னரின் நண்பர்களும் போர்த்துக்கீசர் கடற்கொள்ளையர்களாகக் குறிப்பிடப்படும் குஞ்சாலி மரைக்காரின் பரம்பரைகள் (Mappila Muslim) நெடுந்தீவில் முகாமிட்டிருந்திருக்கிறார்கள். என் தாய்வழி முன்னோர் முஸ்லிம்களோடு சேர்ந்து போர்த்துக்கீசருக்கு எதிராகப் போராடி இருக்கிறார்கள். அதனால் எங்கள் தாயின் தந்தை வழி முன்னோர்கள் “கலிமா கூட்டம்” எனப் பட்டம் பெற்றனர். கடைசிக் குஞ்சாலி மரைக்கார் சிரச்சேதம் செய்யப்பட்ட பின்னர் அவர்களது மருமகன் டொம் பெட்ரொ ரொட்ரிக்கோ என போர்த்துக்கீச பெயர்பெற்ற சின்ன மரைக்கார் உதவியுடன் 1919ல் போர்த்துக்கீசரை நெடுந்தீவில் இருந்து சொற்ப காலம் துரத்தி இருக்கிறார்கள். இவர்கள் போரில்  இறந்துபோனாலும் தங்கள் நண்பர்களைச் சுவர்க்கத்தில் சந்திக்க வேண்டும் என்பதால் குஞ்சாலி மரைக்காரின் கடற்படையினர் அவர்களுக்குக்  காதுகளில் கலிமா ஓதி வந்திருக்க வேண்டும்.

     கச்சத்தீவு, நெடுந்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, எழுவைதீவு,  அனலைதீவு, ஊர்காவல்துறை தீவு, மண்டைதீவு, காரைதீவு வரைக்குமான ஒன்பது தீவுக்கூட்டங்களும் என் சின்ன வயதுகள் வரை ஊர்காவற்துறை நிர்வாகப் பிரிவுக்குள் இருந்ததில் ஊர்காவற்துறை என்கிற பொதுப்பெயராலும் அழைக்கப்பட்டுள்ளது. இதனால் போர்த்துக்கீச ஆவணங்களில் தனதீவா (Tanadiva Island) - ஊர்காவற்துறை என்கிற குறிப்புகள் ஊர்காவற்துறையை மட்டுமல்ல சில சந்தர்ப்பங்களில் நெடுந்தீவு உட்பட ஒன்பது தீவுக் கூட்டங்களுக்கும் பொதுப்பெயராகவும் பயன்பட்டுள்ளது எனத் தோன்றுகிறது. இதுபோல சங்க, சங்க மருவிய காலத்து மணிபல்லவம் என்றசொல் பௌத்தர்கள் இரகசிய பின்தளமாக பயன்படுத்திய தீவுக்கூட்டங்களைக்  குறிக்கும் பெயராகவும் பயன்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். ஆய்வுக்குரிய எனது ஊகம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

     சொற்ப காலம் நெடுந்தீவை இலங்கையின் தலைவாசலாகவும் பாக்கு நீரிணையின் காவல் கோட்டமாகவே சோழர்களும் முஸ்லிம்களும் போர்த்துக்கீசரும் டச்சுக்காரரும் கருதினார்கள் எனத் தோன்றுகிறது. தற்போது என் தந்தைவழி ஒன்றுவிட்ட சகோதரன் சசி நெடுந்தீவு பிரதேச சபை தலைவராக இருக்கிறார். அவர் நம்முன்னோர் சொல்லிய ஊர்க் கதைகள் தெரிந்த முதியவர்களை அடையாளம்காண உதவக்கூடும்.

பசுத் தீவு என்கிற நெடுந்தீவு (Island of the Cows):
     அரை நூற்றாண்டுக்கு முன்புவரை நெடுந்தீவில் முற்றங்களில்  பூங்கன்றுகள் போல வளர்க்கப்பட்ட எங்கள் ஊரின் பணியாமைக்கும் வீரத்துக்கும் அடையாளமான பண்டைய பருத்தி இனம் பெரும்பாலும் அழிந்து போயிற்று. நெடுந்தீவு மக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்; எங்காவது குப்பை மேடுகளில் அல்லது காடுகளில் நெடுந்தீவுப் பருத்தி இனத்தைக் கண்டால் தயவு செய்து அதனை உங்கள் வீட்டிலும் பாடசாலைகளிலும் நட்டு வளர்த்துப் பாதுகாக்கவும். எங்காவது நூல் நூற்கும் ராட்டினம் போன்ற கருவிகள் இருந்தால் அவற்றைப் பாதுகாப்பதுடன் எனக்கும் அறியத்  தாருங்கள்.

     நெடுந்தீவுக்கு போர்த்துக்கீசர் வைத்த பெயர் Ilha das Vacas இது பசுத் தீவு என்கிற நெடுந்தீவின் பழைய பெயரின் மொழி பெயர்ப்பாகும். பதிவுகளில் பருத்தி தீவு என்கிற பெயரும் காணப்படுகிறது. நெடுந்தீவு காலம்காலமாக சிறந்த பருத்தி விளை நிலமாக இருந்துள்ளது. பல நூற்றாண்டுகளாகப்  பருத்திச் செய்கையும், ஆடு மாடு வளர்ப்புமே நெடுந்தீவின் செல்வமாக இருந்தது. தமிழ் நாட்டில் ஆசீவக பௌத்த சமண மதங்கள் கொலை வெறியுடன் அழிக்கப்பட்ட காலங்களில் படகுகளில் தப்பி வந்த அகதிகளுக்குச்  சோறிட்டுப்  புகல் அளித்து இலங்கையின் ஏனைய பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ வழி அனுப்பிவைத்த செல் விருந்தோம்பி, வரும் விருந்து பார்த்திருந்த அறம் நெடுந்தீவுக்கு உரியது.

     கலோனியர் கால பதிவுகள் பலவற்றில் நெடுந்தீவு மக்கள் பலர் நூற்றாண்டுக்குமேல் வாழ்வதுபற்றிய சேதி குறிப்பிடப்படுகிறது. அதற்குக் கள் முக்கிய உணவாக எல்லோராலும் உண்ணப்பட்டதே காரணம் எனச் சிலர் கருதினர். ஆனால் நீண்ட ஆயுளுக்குக் கள் காரணமென உறுதியாகச் சொல்லமுடியாது என 1929இல்  வெளிவந்த Romantic Ceylon நூலின்  ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவர் கருத்துப்படி நெடுந்தீவு மக்கள் அதிக காலம் வாழ்வதற்கு நல்ல பால், பனை ஒடியல் சாப்பாடு, கடல் காற்று, கவலையின்மை, மக்களின் அப்பாவி மனதுமே காரணம். அவர் தனது புத்தகத்தில் 160 வயது  குஞ்சிச்சியையும் 100 வயசு சின்னாசியையும் நெடுந்தீவில் சந்தித்ததுபற்றிக்  குறிப்பிடுகிறார். 98 வயசு வரைக்கும் குஞ்சிச்சி யாழ்ப்பாணத்திலிருந்த தனது உறவினர் வீட்டுக்குப் போய் வந்ததாகவும் குறிப்பிடுகிறார். இன்று எமக்கு ஒடியல் உணவுகளும் சின்ன மீன்களும் இனிப்புக்கள் அல்லது பதநீர் இவை எட்டாத பொருட்கள் ஆகிவிட்டனவே.

     அரேபிய மற்றும் மாப்பிள்ள முஸ்லிம் கப்பல் வாணிகர்களின் கொச்சி தமிழ்நாட்டில் வேதாளை (மண்டபம்) நெடுந்தீவு வர்த்தக கப்பல் வலைப்பின்னல் ஊடாக நெடுந்தீவு வர்த்தகம் செழித்தது. போர்த்துக்கீசருக்கு எதிரான கடற்போர்கள் நெடுந்தீவிலும் நடந்துள்ளது. டொன் பீத்ரோ றொட்றிகோ என போர்த்துக்கீசரால் அழைக்கப்பட்ட கடற்போராளி அலி மரைக்காருடன் சேர்ந்து நெடுந்தீவில் இருந்து சிலகாலம் போர்த்துக்கீசரை துரத்தி அடித்த வரலாறும் நெடுந்தீவுக்கு உண்டு. இத்தகைய போர்க் குணத்தின் ஆதாரம் பருத்திச் செய்கைதான். நெடுந்தீவின் வீரத்தின் அடையாளமான பருத்தியைத் தேடிக் கண்டுபிடித்துக் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

     போர்த்துக்கீசர் முதலில் குதிரை வளர்க்க ஆரம்பித்ததுமே பருத்தி கிழக்கூரில் இருந்து சாறாப்பிட்டிவரை நீண்டிருந்த எங்கள் பருத்தி தோட்டங்கள் பாதிக்கப்பட்டன. மேலும் பருத்தி நூல் ஆடை வர்த்தகமும் டச்சுக் காரரின் ஏகபோகமானது. இதற்கு எதிராக எங்கள் மக்கள் கிளர்ச்சி செய்தனர். டச்சுக்காரர் நெடுந்தீவின் வளமான பருத்தி தோட்டங்கள் முழுவதையும் அழித்து குதிரைகளுக்கான புல்வெளியாக்குவதும், அதனை மீறி எங்கள் முன்னோர் பருத்தி செய்கையில் ஈடுபடுவதுமாக டச்சுக் காரர் காலம் பருத்திக் கலகக் காலமாகவே இருந்தது. இறுதியில் பருத்திச் செய்கையைத் தடை செய்து டச்சுக் காரர் கடும் சட்டம் போட்டனர்.  எங்கள் முன்னோர் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் முன்னோர் தமது பணியாமையின் அடையாளமாக வீடுகளில் பருத்தியை பூங்கன்றுகளாக வளர்த்தனர். இதன் மூலம் எங்கள் முன்னோரின் போராட்ட உணர்வும் பருத்தி விதைகளும் எதிர்காலங்களுக்காகக் காப்பாற்றப் பட்டது.

     1950ல் சின்ன வயசில் உடுவிலில் இருந்து என் தந்தையாரதும் தாய்வழிப் பாட்டனாரதும் ஊரான நெடுந்தீவுக்குக் குடிபெயர்ந்து சென்றபோது நெடுந்தீவு வீடுகளின் முற்றங்களில் பருத்தி பூங்கன்றாக வளர்க்கப் படுவதைக் கண்டேன். மூன்று நூற்றாண்டுகள் நெடுந்தீவு மக்களின் பணியாமைக்கும் வீரத்துக்கும் அடையாளமாகப் பாதுகாக்கப் பட்ட பருத்தியை எங்களால் பாதுகாக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடாகும். தயவு செய்து நெடுந்தீவு இளைஞர்கள் மீண்டும் எங்கள் வாழ்வின் வரலாற்றின் வீரத்தின் சின்னமான பருத்தியைத் தேடிக் கண்டுபிடித்து வீடுகளிலும் பள்ளிக்கூடங்களிலும் வளர்க்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோளாகும்.

     அதுபோல நெடுந்தீவு பற்றிய கலோனியக் கால பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள எங்கள் தீவின் தாவரவியல் அடையாளங்களெனக் குமரி கற்றாளை, கர்ப்பூரப்புல், சிவப்பு கற்றாளை, காவோதி,  பனை என்பவை நினைவுக்கு வருகிறது. காவோதி வருடா வருடம் ஏலம் விடப்பட்டு யாழ்ப்பாணத்திற்குப் புகையிலை செய்கைக்கு உரமாக ஏற்றப்பட்டது பற்றிய கலோனியப்  பதிவுகள் உண்டு.  அரிய மருத்து பொருளான செங்கத்தாளை போர்க்காலத்திலும் பின்னரும் தென்னிலங்கை பயணிகளால் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டது. இவற்றைத் தேடிக் காப்பாற்றுவது இளைஞ தலைமுறையினரின் தலையாய கடமையாகும்.





தொடர்பு:  
வ.ஐ.செ.ஜெயபாலன்
Jaya Palan 
https://www.facebook.com/jaya.palan.9
+91 99414 84253

No comments:

Post a Comment