— முனைவர்.ப.பாண்டியராஜா
பாடல்களில் வரும் உவமைகளில் சில கவிதைக்கு அழகூட்டும்; சில காட்சிக்கு மெருகேற்றும், இன்னும் சில புலவரின் கூர்த்த அறிவைக் காட்டும். இவை மூன்றுமே அமையப்பெற்ற ஓர் உவமையை இங்குக் காண்போம்.
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழும் கஞ்சி
யாறு போல பரந்து ஒழுகி
ஏறு பொர சேறாகி
தேர் ஓட துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறுபட்ட வினை ஓவத்து
வெண் கோயில் மாசு ஊட்டும் - பட் 43 - 50
சோழநாடு சோறுடைத்து என்பார்கள். வற்றாத காவிரியால் வளம் கொழித்த அன்றைய சோழநாட்டில் ஒரு காட்சி இது. இன்றைக்குப் பஞ்சகாலத்தில் கஞ்சித்தொட்டிகள் அமைத்து, இல்லாதோர்க்கு உணவளிப்பர். அன்றைக்கும் இது போல் நடந்திருக்கிறது. அப்படி என்றால் காவிரி பாயும் நாட்டில் கஞ்சித்தொட்டிகளா? அவ்வளவு வறுமையா? என்று வியக்க வேண்டாம். உழைக்க முடியாதோரும், கவனிப்பார் இல்லாதோரும், சோற்றுக்கு வழியின்றிப் பிச்சையெடுத்துப் பிழைப்பர். இது அரசுக்கு இழிவானது. இந்த இழிவைப் போக்க, கரிகால்வளவன் தன் ஊர்களில் அட்டில்களை உருவாக்கினான். (அட்டில் = அட்டு + இல்) அடுதல் என்பது சமைத்தல் என்ற பொருள் தரும். எனவே அட்டில் என்பது சமையலறை என்ற பொருள் தரும் அழகிய சிறிய சொல். இன்றைக்கு நாம் அதைப் பெரும்பாலும் கிச்சன் (kitchen) என்றே சொல்லிப் பழகிவிட்டோம். சிறிது சிறிதாக இம்மாதிரிச் சொற்களைப் பயன்படுத்துவது நாம் தமிழுக்கு - நம் தமிழுணர்வுக்குச் செய்யும் தொண்டு ஆகும்.
இந்த அட்டிலில் வடித்துக்கொட்டிய கஞ்சி ஆறு போல ஓடுகிறதாம். முன்பெல்லாம், சோற்றை ஆக்கி, வடிப்பார்கள். வடிக்காமல் ஆக்குவதைப் பொங்குவது என்பார்கள். விறகடுப்பில் இது சிரமமானது. சரியான பக்குவத்தில் இறக்கிவைக்காவிட்டால், சோறு அடிப்பிடித்துப்போகும், அல்லது வேகாமலோ, குழைந்தோ போய்விடும். எனவே, அரிசியை உலையிலிட்டு, நிறைய நீர் வார்த்து, கிண்டிக்கொண்டே இருப்பார்கள். அவ்வப்போது, அகப்பையால் எடுத்து வெந்துவிட்டதா என்று நசுக்கிப் பார்ப்பார்கள் (ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்). சரியான பதத்துக்கு வந்தவுடன் மீதமுள்ள நீரை வடித்துவிடுவார்கள். அதற்கு, பாத்திரத்தின் மேல் துளையிட்ட ஒரு தட்டை மூடி, முன்புறமாக ஒரு சட்டியை வைத்து அதன் விளிம்பில் சாய்த்து வைப்பார்கள். எஞ்சியுள்ள நீர் எல்லாம் இறங்கிவிடும். இந்த நீரையே கஞ்சி என்பார்கள். பெரும்பாலும் இதை மாடுகளின் குழிதாளியில் ஊற்றிவிடுவார்கள். அல்லது பருத்தி ஆடைகளுக்கு விறைப்புக்காகப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு வடித்து விடுவதால், சோறு பெரும்பாலான சத்துகளை இழந்துவிடுகிறது என்பர் அறிவியலார்.
மன்னன் அமைத்த அட்டில்களில் எந்நேரமும் சோறாக்கி வடித்துவிடுவதால், கீழே கொட்டிய கஞ்சி தெருக்களில் ஆறு போலப் பரந்து ஒழுகியதாம். இது மிகைப்படுத்தல் ஆகாதா? இல்லை. மாறாக வியப்பையும், பெருமையையும் தோற்றி நிற்பது. ஓர் அரசியல் நிகழ்ச்சிக்கு வந்த பெருந்திரளான கூட்டத்தைப் பார்த்துக் கடலெனத் திரண்ட கூட்டம் என்று வருணிப்பதோ, கண்கள் மிக்க நீர் சொரிந்தால், மழையெனப் பெருகிய கண்ணீர் என்று கூறுவதோ மிகைப்படுத்தல் ஆகாது. இது அன்றாட வழக்கு. நம் மரபுகளில் ஒன்று. சொல்லப்போனால், இப்போது சொன்னது இங்குள்ள ஒவ்வோர் அடிக்கும் பொருந்தும்.
மாடுகள் கஞ்சியை விரும்பிக் குடிக்கும். வீட்டு மாடுகளை அவரவர்கள் பார்த்துக்கொள்வர். முந்தைய காலங்களில், ஒவ்வோர் ஊரிலும், சாமிக்கு நேர்ந்துகொண்டு, காளைக் கன்றுகளைப் படைப்பார்கள். இவற்றைக் கோயில் மாடுகள் என்பர். பார்ப்பதற்கு முரட்டுக்காளைகள் போல் தோன்றும். ஆனால் யாரையும் முட்டமாட்டா. அவை ஊர் முழுக்கச் சுற்றித்திரியும். அப்படிச் சுற்றித் திரியும் காளைகள் ஒன்றையொன்று பார்த்துவிட்டால், சீறியெழுந்து பாய்ந்து சண்டையிடும். அப்படிப்பட்ட காளைகள் இந்தக் கஞ்சியைக் குடிக்க வருகின்றன. போட்டியிருந்தால் சும்மா விடுமா? இவற்றின் சண்டையில், கஞ்சியும் மண்ணும் கலந்து தெருவே சேறாகிவிடுகிறது. இந்தச் சேற்றின் மீது வேகமாகத் தேர்கள் ஓடிவந்தால் எப்படியிருக்கும்? பார்த்தவர்கள் பயந்துபோய் ஒதுங்கிக்கொள்வார்கள். அப்படி ஒதுங்கமுடியாத சுவர்களில் இந்தச் சேறு திட்டுத்திட்டாய்ப் படிகிறது. அரண்மனை அட்டில் அல்லவா? அதன் சுவர்கள் நன்கு வெள்ளை அடிக்கப்பட்டு அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டனவாய்த் திகழ்கின்றன. இந்த வெண்சுவற்றில் கருப்புக்கருப்பாகச் சேறு அப்பிக் கிடக்கிறது. இக்காட்சி, புலவருக்கு, சுண்ணாம்பைப் பூசிக்கொண்ட யானையைப் போல் தோன்றுகிறது. நீறு என்பது வெண்சாம்பல் என்ற பொருள் தரும். நெற்றியில் பூசிக்கொள்ளும் விபூதி என்பது திருநீறு - திருநீர் அல்ல.
வெண்மையான சுண்ணத்துகளில் விழுந்தெழுந்த களிறு, கருமையான சேறு படர்ந்த வெண்சுவருக்கு உவமை.
உவமானம் ←→ உவமேயம்
களிறு ←→ சுவர்
சுண்ணம் ←→ சேறு
இவ்வாறு நேர்நேராய் அமைந்த பொருள்களில் ஒரு முரண் இருப்பதைக் கவனித்தீர்களா?
களிற்றின் நிறம் கருப்பு ←→ சுவரின் நிறம் வெள்ளை
சுண்ணத்தின் நிறம் வெள்ளை ←→ சேற்றின் நிறம்.கருப்பு.
அதாவது, வெள்ளை நிறச் சுண்ணம் பூசிய கறுப்பு நிறக் களிறு, கறுப்பு நிறச் சேறு படர்ந்த வெள்ளை நிற மதிலுக்கு ஒப்பாகிறது. இப்படி முரண்பாடான உவமையைக் கையாளலாமா?
சாதாரணமாக, முகத்தில் தாடி, மீசை வைப்பது வழக்கம். சிலர் மிகப் பெரிய தாடி,மீசை வைத்திருப்பர். காதுவரை உயர்ந்த தாடி கன்னங்களையும் மறைத்து நிற்கும். மீசையோ மிக உயர்ந்து மேலுள்ள மூக்கையே மூடிவிடும். அப்படிப்பட்டவர்களைப் பற்றிக் கூறும்போது, தாடிமீசைக்குள் முகத்தை வைத்திருப்பவர்கள் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவது வழக்கம். இப்பொழுது உங்கள் ஐயம் தீர்ந்துவிட்டதா? இல்லையென்றால் விளக்குகிறேன்.
வெள்ளையும் கருப்புமாக ஒரு யானை வந்தால் நமக்கு ஐயம் எழுவதில்லை. கரிய யானை வெள்ளையாக எதையோ அப்பிக்கொண்டு வந்திருக்கிறது என்போம். வெள்ளையும் கருப்புமாக ஒரு சுவர் இருந்தாலும் நமக்கு ஐயம் இல்லை. ஆனால், வெண்மையான சுவரில், ஏகப்பட்ட கருப்பு இருந்தால், வெள்ளைச் சுவரில் கருப்பு அப்பியிருக்கிறதா அல்லது கரிய சுவரில் யாரோ அங்கங்கே வெள்ளை தடவியிருக்கிறார்களா என்று வேடிக்கையாகக் கேட்போம். மிகப் பெரிய அளவில் கஞ்சி ஓடி, மிகப் பெரிய அளவில் சேறு உருவாகி, அதன் துகள்கள் மிகப் பெரிய அளவில், இது வெள்ளையாக இருந்த சுவர்தானா என்று நாம் வியக்கும் அளவுக்குப் படிந்திருக்கிறது என்பதை வலியுறுத்தவே புலவர் இந்த உவமையைக் கையாண்டிருக்கிறார் எனலாம்.
இது தொடர்பான இன்னொரு கேள்வி. கருப்புக் குதிரைகள் உண்டு. வெள்ளைக் குதிரைகளும் உண்டு. வரிக்குதிரையின் படத்தைப் பார்த்திருப்பீர்கள். வெள்ளைக் குதிரையின் மீது கருப்புக் கோடுகளா அல்லது கருப்புக் குதிரையின் மீது வெள்ளைக் கோடுகளா? ஆண்டவனுக்கே வெளிச்சம்!
தொடர்பு:
முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/
No comments:
Post a Comment