—— முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
தற்பொழுது நம்மிடம் காகித தாளும், பேனாவும் எழுது கருவிகளாகப் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் பாட்டன், முப்பாட்டன் யார் என்பதைப் பார்ப்போம்.
1. களிமண் சுவடிகள்:
களிமண்ணைப் பிசைந்து சிறு சிறு பலகை போல் அமைத்து, பலகை காய்ந்து போவதற்கு முன்னமே அவற்றின் மீது கூர்மையான கருவியால் எழுதி உலரவைத்து, புத்தகமாக உபயோகித்தார்கள்.
பயன்படுத்தியோர்: யூப்ரடீஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கின்ற இடத்திலிருந்த கால் டியா, சிரியா பகுதி மக்கள். அந்த எழுத்திற்கு கூனிபார்ம் எழுத்து என்று பெயர்.
2. பேப்பரைஸ்:
'பேப்பரைஸ்' என்பது எகிப்து தேசத்தின் சதுப்புநிலங்களிலும், தண்ணீர் தேக்கம் உள்ள இடங்களிலும் வளர்ந்த ஒரு வகை செடியின் பெயர். இக் கோரை ஆனது 10லிருந்து 15 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டும், அதன் ஒவ்வொரு தாளும் ஓர் ஆளின் கை பருமன் கொண்டதாகவும் இருக்கும். இதனை வெட்டி பட்டையை உரித்து, ஒரே அளவாக வெட்டி வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி, பயன்படுத்தி உள்ளனர். இதன் மேல் நாணர் செடியின் தண்டினால் செய்த பேனாவை வைத்து எழுதி உள்ளனர். அதாவது நாணற் குழாய்களை 6 அங்குல நீளத்திற்கு வெட்டி, ஒரு முனையைக் கூர்மையாகச் சீவி, கூரின் நடுவே சிறிது பிளந்து, அதில் கறுத்த மை கொண்டு நிரப்பி எழுதி உள்ளனர்.
பயன்படுத்தியோர்: எகிப்து, பாலஸ்தீனம், கிரேக்கர்கள், உரோமர்கள்.
3. கோடெக்ஸ் புத்தகம்:
'கோடெக்ஸ்' புத்தகம் என்றால் லத்தின் மொழியில் மரப்பலகை ஆகும். சிறிய பலகையை நன்றாக இழைத்து அதன் மீது மெழுகு பூசி, அதற்கு மேல் கூரிய பொருள் கொண்டு எழுதுவது கோடெக்ஸ் ஆகும்.
பயன்படுத்தியோர்: உரோமர்களது பண்டைக்கால வழக்கம்.
4. தோல் புத்தகம்:
வெள்ளாடு அல்லது செம்மறியாட்டுக் குட்டியின் தோலைச் சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து மயிர்களைக் களைந்து விட்டு, சதை பற்றுக்களையும் நீக்கி, மரச் சட்டத்தின் மேல் உலரவைத்து, சீமைச் சுண்ணாம்பு மற்றும் கல்லினால் தேய்த்து மெருகேற்றி இருபுறமும் எழுதக்கூடியதாக மாற்றுவார்கள். இதற்கு 'மெம்ரெனா' என்று பெயர். கன்றுக்குட்டியின் தோலினால் செய்யப்பட்ட எழுது கருவிக்கு 'வெல்லம்' என்று பெயர்.
பயன்படுத்தியோர்: மத்தியதரைக்கடல் ஓரத்தில் உள்ள நாடுகள் மற்றும் இத்தாலி பகுதியினர்.
5. பட்டு மற்றும் மூங்கில்:
பட்டுத்துணி மற்றும் மூங்கிலின் மேல் துகிலிகையினால் மையைத் தொட்டு எழுதியுள்ளனர்.
பயன்படுத்தியோர்: சீனா மக்கள்
6. எலும்பும் ஓடுகளும்:
அகலமான எலும்புகளிலும் ஓடுகளிலும் எழுதிப் பயன்படுத்தியுள்ளனர்
பயன்படுத்தியோர்: அரேபியர்கள்
7. காகிதம்:
மரக் கூழிலிருந்து இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் ஆகும். தற்போதும் பயன்பாட்டில் உள்ளது.
பயன்படுத்தியோர்: சீனா மற்றும் உலகெங்கும் வாழும் மக்கள்.
8. ஓலைச் சுவடிகள்:
ஒருவகை பனைமரத்தின் முற்றிய, இலேசான ஓலைகளைத் தவிர்த்து நடுத்தர ஓலையை எடுத்து மணல் பூசி, தண்ணீரில் வேகவைத்து,மஞ்சள் மற்றும் எண்ணை பூசி, இவ்வாறாகப் பலவகையில் ஓலைகளைப் பதப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, துளையிட்டு, அடுக்கி, கம்பியோ கயிறு கொண்டு அவற்றை இணைத்து மேலும் கீழும் பலகையிட்டு கயிற்றால் பிணைத்த சுவடிகளாக்கப்படும். இந்த ஓலையின் மீது எழுத ஆணி பயன்படுத்தினர்.
பயன்படுத்தியோர்: இந்தியா, பர்மா, இலங்கை பகுதியில் வாழ்ந்த மக்கள்.
நன்றி:
'பழங்காலத்து எழுது கருவிகள்', நுண் கலைகள், மயிலை. சீனிவேங்கடசாமி, பக்கம்: 132-144, இரண்டாம் பதிப்பு - 1972, மணிவாசகர் நூலகம்.
http://www.tamildigitallibrary.com/admin/assets/book/TVA_BOK_0008143_நுண்கலைகள்.pdf
தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
https://www.facebook.com/devipharm
No comments:
Post a Comment