Saturday, June 22, 2019

அசோகனுக்கு முன் இலங்கையில் பௌத்தம்

——    ப. முகுந்தன்


               இந்தக்கட்டுரையின் நோக்கம் இலங்கையில் பௌத்தத்தின் தோற்றம் பற்றிய பல்வேறு கருதுகோள்களைப் பற்றிய ஒரு அறிமுக உரையாடலாகும்.

உரையாடப்படும் விடயங்கள்:
1. அசோக மன்னன் காலத்தில் மகிந்த தேரரால் அனுராதபுர மன்னன் தேவநம்பிய தீசன் பௌத்தத்திற்கு மாற்றப்பட்டமை.
2. புத்தரின் மும்முறை இலங்கை வருகை.
3. புத்தர் ஞானம் பெற்ற காலத்தில் அவரது கேசதாதுவை வைத்து நாக அரசுக்குட்பட்ட கிழக்கிலங்கையில் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது பௌத்த தூபி.

               மகாவம்சம் கூறும் பௌத்த வரலாறு பொ.மு 3ம் நூற்றாண்டில் இந்தியாவில் பேரரசினை நிறுவிய மௌரியச் சக்கரவர்த்தி அசோகனின் மகன் மகிந்த தேரருடன் ஆரம்பமாகிறது. அசோகச் சக்கரவர்த்தி பௌத்த மதத்தைத் தழுவி, பின்னர் மூன்றாவது பௌத்த மகா நாட்டினை நடாத்தி பௌத்த மதத்தை உலகெங்கும் பரப்புவதற்காகத் தூதுக்குழுக்களை அனுப்பினான். அதன்படி அசோகரின் மகன் மகிந்தரும் குழுவினரும் இலங்கை மிகிந்தலை மலையை வந்தடைந்தனர்.

               அனுராதபுரத்தை ஆண்ட தீச மன்னன் வேட்டையாடுவதற்காக மிகிந்தலை மலையை வந்தடைந்தான். அங்கே தீச மன்னனைச் சந்தித்த மகிந்ததேரர், மன்னனுக்கும் அவனது பரிவாரங்களுக்கும் சூளகதிபதூபம சூத்திரத்தை உபதேசித்து பௌத்தத்திற்கு மாற்றிக்கொண்டார். இது நிகழ்ந்தது புனித பொசன் முழுமதி தினத்திலாகும்.


               மகாவம்சத்தின் முதலாம் அத்தியாயம் புத்தரின் மும்முறை இலங்கை வருகையைப் பற்றி விவரிக்கின்றது. தனது மார்க்கம் பிற்காலத்தில் புகழுடன் திகழப்போகும் இடம் இலங்கை எனத் தெரிந்திருந்த புத்தர் இலங்கையில் நிரம்பியிருந்த இயக்கர்களை விரட்டுவதற்கு முதன்முறை இலங்கைக்கு வந்தார். அவர் 'ஞானம் பெற்று 9ம் மாதத்தில்' தைப்பூச முழுமதி தினத்தில் இலங்கை வந்தார். தற்போதைய மகியங்கனை ரஜ மகா விகாரை அமைந்துள்ள மகாநாகவனம் என்னும் இடத்தில் எல்லா இயக்கர்களும் கலந்துகொள்ளும் இயக்கர்களின் பேரவைக் கூட்டம் நடைபெறும்போது புத்தர் அங்கே சென்றார். மழையையும் புயலையும் இருளையும் உண்டாக்கச் செய்து இயக்கர்களை அச்சமடைய வைத்த புத்தர் கேட்டதற்கிணங்க இயக்கர்கள் மகாமேகவனத்தை விட்டு கிரித்துவீபத்திற்குச் சென்றனர். அதன்பின் புத்தர் தேவர்களை அங்கே வரவழைத்தார்.

               தேவ வம்ச அரசன் மகா சுமணன் சமந்தகூட மலையை (சிவனொளிபாதமலை) ஆண்டுவந்தான். புத்தரின் போதனைக்குப் பின் அனைத்துத் தேவர்களும் பௌத்தத்தைத் தழுவினர். வணங்கத்தக்க எதையாவது தரும்படி மகா சுமணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க புத்தர் கொடுத்த தலைமுடியை, புத்தர் அமர்ந்திருந்த இடத்தில் நவரத்தினங்களைக் குவித்து அதன்மீது வைத்து மகியங்கனை தூபி தாபிக்கப்பட்டது. அதன்பின் அவர்  இந்தியாவின் மகத நாட்டு உருவெலவுக்குத் திரும்பிச் சென்றார்.


               புத்தரின் இரண்டாவது வருகை அவர் 'ஞானம் பெற்ற 5ம் ஆண்டில்' சித்திரை முழுமதி தினத்தில் நிகழ்ந்தது. அக்காலத்தில் நாகதீபத்தை (யாழ்ப்பாணக் குடாநாடு) ஆண்டவன் மகோதர நாகன். அவன் சகோதரி கண்ணவர்த்தமானம் எனும் நாட்டை ஆண்ட நாக மன்னனை மணமுடித்திருந்தாள். அவர்களது மகன் சூலோதரன். மகோதரனின் தந்தையால் மகோதரனின் சகோதரிக்குக் கொடுக்கப்பட்டிருந்த இரத்தின சிம்மாசனத்தை யார் வைத்திருப்பது என்ற போட்டியில் மகோதரனுக்கும் அவனது மருமகன் சூலோதரனுக்கும் போர் நிகழும் சூழல் ஏற்பட்டது.

               அங்கு வந்த புத்தர் நாகர்கள் மீது இருள் கவியச் செய்தார். அச்சமுற்ற நாகர்களின் அச்சத்தைப் போக்கி ஒளி ஏற்பட வழிசெய்து சமாதானத்தைப் போதித்தார். போருக்குத் தயாரான இரு நாகப் பிரிவுகளும் ஒன்றுபட்டு தங்கள் சண்டைக்குக் காரணமாயிருந்த இரத்தின சிம்மாசனத்தைப் புத்தருக்கு அளித்து அவரைச் சரணடைந்தனர். அவர்கள் அளித்த அமுதை உண்டுவிட்டு புத்தர் அவர்களைப் பௌத்தத்திற்கு மாற்றினார். அப்போரில் கலந்துகொள்ள கல்யாணி (களனி) நாக மன்னன் மணியக்கிகனும் வந்திருந்தான். அவன் மகோதரனின் தாய்மாமனாவான். அவன் மீண்டும் ஒருமுறை தமது நாட்டுக்கு வரும்படி புத்தரை வேண்டிக்கொண்டான். அதற்குச் சம்மதித்த புத்தர் மகத நாட்டு ஜேதவனத்திற்குத் திரும்பினார்.

               இச் சம்பவத்தை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை “வேக வெந் திறல் நாக நாட்டு அரசர் சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு அறச் செவி திறந்து மறச் செவி அடைத்து பிறவிப் பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி” என்று குறிப்பிடுகின்றது. (மணிமேகலை - பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை)


               புத்தரின் மூன்றாவது வருகை அவர் 'ஞானம்பெற்ற 8ஆம் ஆண்டில்' நடந்தது. மணியக்கிகன் அவரைச் சந்தித்து தமது நாட்டிற்கு வரும்படி அழைத்தான். வைகாசி முழுமதி தினத்தன்று ஐந்நூறு பிக்குகள் புடைசூழக் கல்யாணி நாட்டிற்கு அவர் சென்றார். அங்கு ரத்தினங்கள் பதிக்கப்பட்ட மண்டபத்தில் பிக்குகளுடன் அமர்ந்தார். அவர் அமர்ந்த இடத்தில் பிற்காலத்தில் களனி ரஜமகா விகாரை கட்டப்பட்டது. நாகமன்னனின் உபசரிப்பிற்குப் பின்னர் அவர்களுக்கு உபதேசம் செய்தபின் சுமணகூட மலைக்குப் புறப்பட்டார். அங்கே தனது பாதச்சுவடுகளைப் பதித்தபின்னர் ஜேதவனத்திற்குத் திரும்பினார்.


               மேற்குறிப்பிட்ட சம்பவங்களைக் கூறும் மகாவம்சம் பொ.பி 5ம் நூற்றாண்டில் தாதுசேன மன்னன் காலத்தில் மகாநாம தேரரால் எழுதப்பட்டது. தேவநம்பிய தீசனால் ஸ்தாபிக்கப்பட்ட மகாவிகாரையைச் சேர்ந்த பிக்குகளால் காலத்துக்குக்காலம் நடைபெற்று வந்த நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுப் பேணப்பட்டுவந்தன. அவை அட்டகதா என அழைக்கப்பட்டன. இதனை மூலமாகக் கொண்டு மகாவம்சம் எழுதப்பட்டது.

               மகாவம்சத்தில் புத்தரின் மும்முறை இலங்கை வருகையைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருந்தாலும் புத்தரின் போதனைகளின் தொகுப்பான திரிபிடகத்தில் அது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

               மகாவம்சத்தைப் பாளி மொழியிலிருந்து ஜெர்மன் மொழிக்கு 1908ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புச் செய்தவர் வில்லியம் கெய்கர் என்னும் ஜெர்மன் அறிஞராவார். அவர் மகாவம்சம் மொழிபெயர்ப்புக்கு வழங்கிய அறிமுகவுரையில் மகிந்தருக்கு முன்பும் பலர் இலங்கைக்குப் புத்தமதத்தைப் பரப்புவதற்கு முயன்றுள்ளனர் எனக் கூறியுள்ளார். மகிந்தர் அனுராதபுர மன்னனை வெற்றிகரமாக மதம்மாற்றியதாலேயே அவரது பெயர் நிலைத்திருப்பதாகக் கூறுகின்றார்.
(But at what result do we arrive if we put together these established facts and the mention of Ceylon in the earlier Asoka Inscriptions? Simply and solely that which is self- evident, namely, that before Mahinda relations existed between continental India and Ceylon and efforts were made to trans- plant the Buddhist doctrine to Ceylon. But with Mahinda this process comes to a successful end. We can understand therefore that all the interest became con- centrated in his person, and that tradition wrought together in dramatic fashion that which was a thing of slow con- tinuous development. But it shows us that, even from the point of view of the Chronicles of Ceylon, Buddhism was not quite unknown in that country already before Mahinda's time. - Mahavamsa : the great chronicle of Ceylon , Wilhelm Geiger, 1912)
               மகாவம்சம் குறிப்பிடும் புத்தரின் வருகை மற்றும் மகிந்தரின் வருகை காலத்திற்கு முன்பு பௌத்தத்தின் இலங்கை வருகை நிகழ்ந்திருக்கின்றது. புத்தரின் புனித கேசதாதுவை வைத்துக் கிழக்கிலங்கையில் ஒரு தூபியும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

               கௌதம புத்தர் நேபாளத்தில் சாக்கிய குல மன்னர் சுத்தோதனுக்கும் மாயாவுக்கும் சித்தார்த்தர் என்ற பெயரில் பிறந்தார். தனது 16ஆவது வயதில் யசோதரையை மணந்து ராகுலன் என்ற மகனைப் பெற்றார். தனது 29ம் வயதில் வாழ்க்கையின் துன்பங்களைப் பற்றி யோசிக்கவைக்கும் சம்பவங்களைக் கண்டார். குடும்பத்தையும் அரச சுகபோகங்களையும் விட்டு வாழ்வின் இரகசியத்தைத் தேடிக் கானகம் சென்ற சித்தார்த்தர் கடும்பட்டினியுடன் உடலை வருத்தித் தியானம் செய்தார். உடலை இறுக்கிக் கடுமையாக இருப்பதால் தான் தேடுவது கிடைக்காது என்று உணர்ந்துகொண்ட அவர், சுஜாதா எனும் சிறுமி கொடுத்த பாற்சோறு வாங்கி உண்டுவிட்டு தியானத்தில் ஆழ்ந்தார். 49 நாட்கள் தொடர்ந்த தியானத்தின் பின் வாழ்வின் உண்மையை உணர்ந்து ததாகரானார். அந்நிகழ்வே புத்தர் ஞானம் பெற்ற நிகழ்வாகக் கூறப்படுகின்றது. அவர் ஞானம் பெற்றபின் உண்ட முதலாவது உணவை வழங்கியவர்கள் தபுஸ்ஸ மற்றும் பல்லுக என்னும் இரு சகோதரர்கள்.

               தபுஸ்ஸ மற்றும் பல்லுக இருவரும் வர்த்தகத்திற்காக இந்தியா வந்த சகோதரர்கள். பல்வேறு நாடுகளுக்கும் பயணித்துவிட்டு மகத நாட்டின் தலைநகரம் ராஜகிருகத்திற்குச் செல்லும் வழியில் புத்தரைக் கண்டார்கள். போதிமரத்தடியில் ஞானம் பெற்ற நிலையிலிருந்த புத்தர் அவர்கள் வழங்கிய தேன் கலந்த அரிசி உணவை உண்டார். சகோதரர்கள் இருவரும் அவரின் சீடரானார்கள்.

               சிறிது காலத்தின் பின் அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினார்கள். தங்களுக்கு வணங்குவதற்காக ஏதாவது தரும்படி அவர்கள் கேட்க புத்தர் தனது தலையிலிருந்து எட்டுத் தலைமுடிகளை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்.

               தங்கள் நாட்டிற்குத் திரும்பும் வழியில் அவர்கள் கிழக்கிலங்கையிலுள்ள திரியாய் என்ற இடத்தை அடைந்தனர். திரியாய் பிரசித்திபெற்ற நாகர் குடியிருப்பாகும். பண்டைய வர்த்தகத் துறைமுகத்துடன் குடியிருப்புக்களையும் கொண்டிருந்த திரியாயில் கந்தசாமிமலை என்று அழைக்கப்படும் ஒரு சிறிய குன்றில் அவர்கள் தங்கியிருந்து தமது வர்த்தக நடவடிக்கைகளைச் செய்தனர். வர்த்தகம் முடிந்தபின்னர் நாடு திரும்ப விரும்பிய சகோதரர்கள் புத்தரின் கேசதாது வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை எடுக்க முயன்றபோது அதனை வைக்கப்பட்ட இடத்திலிருந்து தூக்க முடியவில்லை. அதன்பின்னர் அங்கே ஒரு சிறிய ஒரு தூபி கட்டப்பட்டு கேசதாதுவில் ஒருபகுதி அங்கே வைக்கப்பட்ட பின் அவர்கள் மீதியைக் கொண்டு தம்நாடு திரும்பினார்கள்.

கிரிகண்டிக சைத்தியம் எனும் அவ்விகாரை பொ.பி 8ம் நூற்றாண்டளவில் பெரிதாக்கிக் கட்டப்பட்டது. பல்லவர் பாணியில் அமைக்கப்பட்ட துவாரபாலகர் மற்றும் மகாயான பௌத்தத்தின் சுவடுகளை இன்றும் அங்கே காணலாம். ( அவலோகிதேஸ்வரர் - Icongraphy of Avalok Itesvara in Mainland South East Asia, Nandana Cūṭivoṅgs, 1984)
திரியாய் கிரிகண்டி சைத்தியம் (பட உதவி : Vathsala Karunanayake)

               பொ.பி 8ம் நூற்றாண்டில் ஆறாம் அக்கபோதி மன்னன் காலத்தில் பல்லவ கிரந்தத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டொன்று கிரிகண்டி சைத்தியத்தில் காணப்படுகின்றது. மேற்குறிப்பிடப்பட்ட தபுஸ்ஸ மற்றும் பல்லுக சகோதர்களால் இத் தூபி ஸ்தாபிக்கப்பட்டதை அக்கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. 


Tiriyay rock  inscription  - Epigraphia Zeylanica 4 - H. W. Codrington &   Paranavitana, S.

               இக்கதையின் ஒரு வடிவம் பர்மா ஷ்வேடகோன் தூபிக் கல்வெட்டில் காணப்படுகின்றது. (Ephigraphia Birmanica Vol I Part I) அதன்படி தபுஸ்ஸ மற்றும் பல்லுக பர்மிய வர்த்தகர்கள். புத்தரிடமிருந்து பெற்ற 8 முடிகளில் இரண்டை மகத மன்னன் அஜாத சத்ருவின் வேண்டுகோளிற்கிணங்க அவரிடம் கொடுத்தனர். அஜாத சத்ரு புத்தரின் நண்பரான பிம்பிசார மன்னனின் மகன். அதன்பின் கப்பலில் பயணம் செய்த அவர்கள் நாகநாட்டு மன்னன் ஜெயசேனனிடம் இன்னும் இரண்டை இழந்துவிட்டு பர்மா திரும்பினார்கள்.

               அங்கு ஆட்சிபுரிந்த ஓகலப்ப மன்னரின்(யாங்கன்) உதவியுடன் சிங்குட்தரா மலையில் எஞ்சிய முடிகளை வைத்துத் தங்கத் தூபி எனப்படும் ஷ்வேடகோன் தூபி கட்டப்பட்டது.

ஷ்வேடகோன்  தூபி

               பர்மிய அரசர்களின் வரலாறான The Glass Palace Chronicle கிரிகண்டி பற்றி இன்னொரு வரலாற்றைக் கூறுகின்றது. ( Glass Palace Chronicle Of The Kings Of Burma ,1924, Page 94) தபுஸ்ஸ மற்றும் பல்லுக வுக்குத் தெரியாமல் நாக அரசன் ஜெயசேனன் புனித கேசதாதுவைத் திருடியதாகவும் , அது பின்னர் காவந்தீச மன்னன் காலத்தில் (பொ.பி 2ம் நூற்றாண்டு) அது தோண்டியெடுக்கப்பட்டு சேருவில் மங்கள மகா விகாரை கட்டப்பட்டதாகவும் கூறுகின்றது. உருகுணையை ஆண்ட காவந்தீச மன்னன் புகழ்பெற்ற துட்டகைமுனு மன்னனின் தந்தையாவான். இதன்படி கிரிகண்டிக சைத்தியம் கட்டப்பட்ட காலத்தில் திரியாய் நாக மன்னன் ஜெயசேனனால் ஆளப்பட்டிருக்கின்றது.

               திரிபிடகத்தின் விநயபிடகம் - மகாவிபங்க பகுதியிலும் தபுஸ்ஸ மற்றும் பல்லுக சகோதரர்கள் குறிப்பிடப்படுகின்றனர். (The Book of the discipline (Vinaya-pitaka) Vol iv ( Mahavagga) - Horner, I. B , 1962 - Page 5)

               பொ.பி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சீனப் பயணி யுவான் சுவாங் தபுஸ்ஸ மற்றும் பல்லுக சகோதரர்கள் பற்றிக் குறிப்பிடும் போது கேசதாதுவைக் கொடுத்த புத்தர் தனது ஆடையைச் சதுரமாக மடித்து அதன் மேல் பிச்சைப்பாத்திரத்தைத் தலைகீழாக வைத்து ஸ்தூபி உருவாக்கும் மாதிரி உருவையும் அவர்களுக்குப் போதித்தாகக் குறிப்பிடுகின்றார். (Relics of the Buddha - By John S. Strong, Stephen Teiser , 2004)

               இலங்கையில் மட்டுமல்ல உலகத்திலேயே முதன்முதலில் கட்டப்பட்ட புத்த ஸ்தூபி மற்றும் புத்தரால் அதன் வடிவமைப்புக் கூறப்பட்டு அதன்படி கட்டப்பட்டது என்ற பெருமையும் திரியாய் கிரிகண்டி சைத்தியத்தையே சாருகின்றது என்று John S. Strong தனது Relics of the Buddha புத்தகத்தில் குறிப்பிடுகின்றார் .

               திரியாய் கந்தசாமி மலையில் வேறு இரண்டு பிராமிக் கல்வெட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று பேராசிரியர் செ.பரணவிதான Epigraphia Zeylanica 4இல் கூறுகின்றார். அதில் ஒன்று கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தையது. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு மற்றும் அவலோகிதேஸ்வரர் வழிபாடு நிலவியிருந்ததை வைத்து மகாயான பௌத்தத் தலமாக கிரிகண்டிக விகாரையைக் குறிப்பிடுகின்றார். 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பூஜாவளியவும் இச்சம்பவத்தைக் குறிப்பிடுவதாக அவர் மேலும் கூறுகின்றார்.

(பொது யுகத்திற்கு முன்(கிறிஸ்துவுக்கு முன்) எழுதப்பட்ட பிராமிக் கல்வெட்டில் ”உதியனின் மகளின் குகையும் பிகல அனுதியின் குகையும் சங்கத்தாருக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டதைக்” கூறுகின்றது எனப் பேராசிரியர் செ.பரணவிதான குறிப்பிடுகின்றார். - Ceylon Journal of Science Section G Vol 2 Page 117)

               மகாவம்சத்தின் படி இலங்கையின் அரச வம்சம் விஜயன் வருகையுடனே ஆரம்பிக்கின்றது. புத்தர் தனது 80 ஆவது வயதில் இரட்டைச் சாலமரத்தடியில் பரிநிர்வாணம் அடைந்த நாளில் இலங்கைக்கு விஜயன் வந்ததாக மகாவம்சம் 7ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (விஜயன் வரும்போது இலங்கையை காளிசேன நாகன் ஆண்டதாக மட்டக்களப்பு மான்மியம் குறிப்பிடுகின்றது. ) புத்தர் ஞானம் பெற்றுச் சில ஆண்டுகளுக்குள் நடைபெற்ற மேற்குறிப்பிட்ட சம்பவங்களைத் தொகுத்துப்பார்க்கும் போது விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இயக்க, நாக, தேவ வம்சங்களால் பௌத்தம் பின்பற்றப்பட்டமை தெளிவாகின்றது.

முடிவுரை:
               இலங்கையில் பிரபலமாகக் காணப்பட்ட பௌத்த பிரிவுகள் தேரவாத மற்றும் மகாயானமாகும். தென்னிந்தியாவிலிருந்து பரவிய மகாயான பௌத்தம் மகாசேனன்(பொ.பி 325-352) காலத்தில் வலுவாகக் காணப்பட்டது. ( மட்டக்களப்பு மான்மியம் மகாயான பௌத்தத்தை வைதூலிக சைவம் எனக் கூறுகின்றது ) . மகாசேனனின் தேரவாத எதிர் நடவடிக்கைகளால் தேரவாத – மகாயான பூசல் உச்சத்தை எட்டியது. பின்னர் பொ.பி 12 ம் நூற்றாண்டளவில் மகா பராக்கிரமபாகுவினால் இலங்கையில் தேரவாதம் மீண்டும் முக்கியத்துவம் பெற்று மகாயானம் வலுவிழந்துவிடுகின்றது .

               வடக்கு மற்றும் கிழக்கிலங்கைக் கந்தரோடை, வல்லிபுரம், திரியாய் , குச்சவெளி போன்ற பிரதேசங்களில் கிடைத்த சாசன ஆதாரங்களின்படி இலங்கையின் வடகிழக்குப் பிரதேசங்களில் பொ.பி 10 ம் நூற்றாண்டு வரை மகாயான பௌத்தம் பரவலாகக் காணப்பட்டுள்ளது.

               மகாவம்சம் எழுதப்பட்டது தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றும் பிக்குகளின் பிரதான தலமான மகாவிகாரையைச் சேர்ந்த பிக்குவான மகாநாமதேரரால் ஆகும். மகாயான- தேரவாதப் பூசலின் விளைவாக மகாயானப் பௌத்த முக்கிய தலங்களை முன்னிலைப்படுத்தாமல் தேரவாதத் தலங்களை முன்னிலைப்படுத்தும் போக்கு மகாவம்சத்தில் காணப்படுகின்றது. கிரிகண்டி சைத்தியம் ஸ்தாபிக்கபட்ட நிகழ்வும் மகாவம்சத்தில் காணப்படவில்லை.

               இலங்கையில் அசோகனுக்கு வெகுகாலம் முன்பே பௌத்தத்தின் அறிமுகம் நிகழ்ந்த முக்கிய நிகழ்வான கிரிகண்டிக சைத்தியம் ஸ்தாபிக்கப்பட்ட நிகழ்வு இலங்கை வரலாற்றில் மகாவம்சத்தின் ஒளியின் முன் மங்கியே காணப்படுகின்றது. 




உசாத்துணை நூல்கள்:
1. Mahavamsa : the great chronicle of Ceylon , Wilhelm Geiger, 1912
2. மகாவம்சம் எஸ். சங்கரன்,  1962
3. Epigraphia Zeylanica 4 1904-1934,  H. W. Codrington &   Paranavitana, S. 
4. Glass Palace Chronicle Of The Kings Of Burma ,1924
5. Ephigraphia Birmanica Vol I Part I
6. The Book of the discipline  (Vinaya-pitaka) Vol iv ( Mahavagga) - Horner, I. B , 1962
7. மட்டக்களப்பு மான்மியம்  , எவ். எக்ஸ். சி. நடராசா - 1998


தொடர்பு: ப. முகுந்தன் (mukunthan@gmail.com)







No comments:

Post a Comment