Sunday, July 2, 2017

பாண்டியன் நெடுமாறனின் இளையான்புத்தூர்ச் செப்பேடு

-- திரு. துரை  சுந்தரம்,  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

இச்செப்பேட்டைப் பற்றி ஆவணம்-2007 இதழில் வெளியான விரிவான ஆய்வுக்கட்டுரையில் உள்ள முதன்மைச் செய்திகள் இங்கு குறுக்கமாகத் தரப்படுகின்றன.

1 .  அழகிய செய்யுள் நடையுடன் தொடக்கத்திலும் முடிவிலும் வடமொழிச்  சுலோகங்கள். நடுவில் தமிழ்ப்பகுதி. சுலோகங்கள் கிரந்த எழுத்துகளாலும், தமிழ்ப்பகுதி வட்டெழுத்துகளாலும் எழுதப்பட்டுள்ளன.

2.  செப்பேடு நெடுமாறன் ஆட்சிபுரிந்து நூறாண்டுகள் கழித்து எழுதப்பட்டது.

3.  மன்னனின் வேறு பெயர்கள்: மாறவர்மன் அரிகேசரி, சேந்தன் மாறன் அரிகேசரி, பராங்குசன், நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன், கூன்பாண்டியன்.

4.  திருஞானசம்பந்தரின் காலத்தவன்.

5.  செப்பேட்டின் காலம் கி.பி. 676 ஆகலாம். நெடுமாறனின் 36-ஆம் ஆட்சியாண்டு.

6.  செப்பேட்டில் இவ்வரசனின் தந்தை பெயர் “ஜயந்தவர்மன்” என்றுள்ளது. கட்டுரை ஆசிரியர்கள் இப்பெயரைச் “செழியன் சேந்தன்”  என்று குறிப்பிடுகிறார்கள்.

(இக்கட்டுரை ஆசிரியர் குறிப்பு:  ஜயந்தன் என்னும் வடமொழிப்பெயர் தமிழில் சேந்தன் என்று மருவி வழங்குவது கருதத்தக்கது.  இது போன்ற மற்றொரு அரசன் பெயர் நினைவுக்கு வருகிறது. தொல்லியல் துறையின் “கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்” நூலில், கொங்குநாட்டை ஆண்ட வீரகேரளர் அரசர்களில் ஒருவனாக அதிசய சோழன் வீரநாராயணன் என்பவனின் பெயர் குறிப்பிடப்படுகிறது. அரசனின் பெயரில் “அதிசயம்” எப்படி வந்தது? இந்த ஐயம், இக்கட்டுரை ஆசிரியர், உடுமலை-மூணாறு சாலைக்கருகில் அமைந்துள்ள தளிஞ்சி என்னும் ஓரூரில் பார்த்த கல்வெட்டில், இவ்வரசனின் பெயர், கிரந்த எழுத்தான “ஜ”  கலந்து “அதிஜெயசோழன் வீரநாராயணன்”   என்று எழுதப்பட்டிருந்ததைப் படித்தபோது நீங்கியது.)

7.  இச்செப்பேட்டில், பாண்டியர் கால உக்கிரன்கோட்டைப்பகுதியில் உள்ள களக்குடி என்னும் ஊர் குறிப்பிடப்படுகிறது.

8.  சோழநாட்டுப் பிராமணன் நாராயணபட்ட சோமயாஜி என்பவனுக்குப் பாண்டியன் பிரமதேயமாக அளித்த ஊர் ஆசி நாடு என்னும் சிறு நாட்டுப்பிரிவில் இருந்தது. ஆசி நாட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த கம்பலை என்னும் மறக்குடித் தலைவனை வென்று அவனுடைய நிலத்தைக் கொடையாக அளித்தான்.

9.  மேற்சொன்ன ஆசிநாடு இன்றைய கோவில்பட்டி, சங்கரன்கோயில் வட்டப் பகுதியாகும். இளையான்புத்தூர் இப்பகுதியில் இருந்திருக்கலாம்.

10.  மறக்குடி மக்களின் நிலங்களை அரசனின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள ஊர்களாக மாற்றிப் பிராமணர்க்கு வழங்கியபோது அதற்கு மறக்குடித் தலைவர்களிடமிருந்து எதிர்ப்புத் தோன்றியது. அதனை முறியடித்து நெடுமாறன் பிரமதேயத்தை ஏற்படுத்தியுள்ளான். மறக்குடி மக்கள் பிராமணர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து பிரமதேயங்களுக்குரிய அரச ஆவணங்களை அழிக்கிறார்கள். இந்தக்கிளர்ச்சி, தளவாய்புரச் செப்பேட்டில் “மறக்கேடு”  என்று குறிப்பிடப்பெறுகிறது. இத்தகைய மறக்கேட்டினால் ஆவணங்களை இழந்தவர்கள் மீண்டும் உரிமை கோரி எழுதியதன் காரணமாகவே, அரசனின் ஆட்சிக்கு நூறாண்டுகள் கழித்து இந்த ஆவணம் எழுதப்பட்டுள்ளது.

11.  ஆவணத்தைச் செப்பேட்டில் பொறித்து நிறைவேற்றும் “ஆணத்தி”  (அதிகாரி)யின் பெயர் அண்டநாட்டுக் குண்டூர்க் கூற்றத்துச் குமரன் தாயன் வடதரன் ஆகும். குண்டூர்க் கூற்றம் இன்றைய ஒட்டன்சத்திரம் பகுதியாகும்.











ஆவணம்-2007 இதழ் - கட்டுரை  ஒளிப்படங்கள் பகிர்வு
கல்வெட்டுப் படங்கள்: திருவாளர்கள் து. சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை;  மயிலை நூ.த.லோக சுந்தரம்; 

___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________

No comments:

Post a Comment