Monday, February 20, 2017

காமராசரும் கல்வியும்

- இராம.கி.


காமராசரையும், கல்வியையும் பற்றிய பேச்சு இங்கு எழுந்தவுடன், 46 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பழைய சிறு நிகழ்வு என் நினைவிற்கு வந்தது.

கோவை நுட்பியற்கல்லூரியில் நான் வேதிப்பொறியியல் படித்த காலத்தில் நெருங்கிய நண்பரில் ஒருவன் அரங்கராசன் நற்சிந்தனையாளன். குமுகவுணர்வும் செயற்துடிப்பும் மிக்கவன். திருச்சிராப்பள்ளித் தென்னூர் அக்கரகத்தைச் சேர்ந்த அரங்கராசன் குடும்பத்தார் திருவிண்ணவ நெறியாளர். நண்பனுக்கு 3 அக்காக்கள். இவன் ஒரே பையன். அம்மா தவறிப்போன காரணத்தால், இரண்டாவது அக்கா தன் கணவரோடு வந்துதங்கி அரங்கராசனின் அப்பா கிருஷ்ணனைப் பார்த்துக்கொண்டார். அரங்கராசன் நண்பர் யாராயினும் அவர்களின் நடுவீட்டு ஊஞ்சல்வரை ஊடி வரமுடியும். அக்கார வடிசல் முதற்கொண்டு எல்லா அமுதுகளும் எங்களுக்குத் தருவார். எங்கள் நண்பர்கள் யாருக்குள்ளும் ஒருவேற்றுமையும் காணாத உன்னதமான குடும்பம்.

அரங்கராசனின் மூத்த அக்கா இலட்சுமி ஒரு காந்தியவாதி. திருச்சிராப்பள்ளி தென்னக இருள்வாய் (Southern Railways) மருத்துவமனையில் செவிலியாய் வேலைபார்த்தார் பொன்மலையில் அவரின் துணைவர் ஒரு பேராயத் தொழிற்சங்கவாதி. திருவிண்ணவரில்லை. இருவருக்கும் எப்படி உறவேற்பட்டது என்று எனக்குத்தெரியாது. துணைவரின் மூத்த மனைவி வேறோரிடத்திலிருந்தார். மூத்தாரின் பிள்ளைகள் அக்காவீட்டிற்கும் வந்துபோய்க் கொண்டிருப்பர். அக்காவிற்குப் பிள்ளைகளில்லை. தென்னூரிலில்லாது அக்கா அத்தானோடு பொன்மலையில் தங்கியிருந்தார். இவ்வுறவை அரங்கராசனின் அப்பா ஏற்றுக்கொண்டதில்லை. குடும்பத்தில் மற்றவர் ஏற்றும் ஏற்காமலும் இருந்தார். அக்காவும் அத்தானும் தென்னூர் வீட்டினுள் வராவிட்டாலும், வாசல்வரை வந்திருக்கிறார்கள்.

எங்கள்மேல் கொண்ட ஆழ்ந்த அன்பால் அரங்கராசன் அக்கா எங்களெல்லோர்க்கும் அக்காவானார். அப்பொழுதெல்லாம் மதுரைவழிப் பேருந்துகள் குறைந்திருந்ததால் காரைக்குடியிலிருந்து கோவைபோகத் திருச்சிவழி இருள்வாயிற் பயணிப்பேன். திருச்சி வரும்போதெல்லாம் அரங்கராசன் அகத்திற்கும், அக்காவைப் பார்க்கப் பொன்மலைக்கும் போவேன். அகவைமுதிர்ந்த காரணத்தால் அம்மா போலவே அக்கா பரிவுகாட்டுவார். அக்காவோடு அரங்கராசனும் நானும் காரசாரமாய் அரசியல் வாதங்கள் செய்ததுண்டு. 70 களின் காலத்தில். உலகமெங்கும் இடதுசாரிச் சிந்தனை பரவியிருந்தது.. தமிழிளையோர் பலரும் அன்று இடதுசாரி, தி,மு.க.வின் வழி சிந்தனைவயப்பட்டதால், பேராயக்கட்சியை ஏற்காதிருந்தார். எங்களின் பெருமுயற்சியால் பேராயக்கட்சியைத் தோற்கடித்திருந்தோம் அல்லவா? எனவே ஒருவித இறுமாப்பும் கூட எங்களுக்கு வந்தது. (67 இல் விருதுநகரிற் தோற்றிருந்த) காமராசரை வம்பிற்கிழுத்தே பலநேரம் அக்காவுடன் பேசிவிளையாடுவோம். ஆனாலும் அக்கா எங்களைக் கோவிக்கமாட்டார். எம்மேற்கொண்ட அன்பு சற்றுங் குறையாது. “போங்கடா, போக்கத்த பயல்களா? உங்களுக்கு என்னடா அரசியல் தெரியும்?” என்று சொல்லிவிடுவார்.

இலட்சுமியக்காவிற்கு பெருந்தலைவர் காமராசர்மேல் இன்னதென்று சொல்லமுடியாத ஈடுபாடு; ஒரு பக்தி. சொந்தக்காரர், தெரிந்தவரெனப் பலருக்கும் இது பெரும்வியப்பைக் கொடுத்தது. .அரங்கராசன் அப்பாவோ, மூதறிஞர் இராசிமேல் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர். சுதந்திராக்கட்சி தலைதூக்கிய காலம். எப்படியிருந்தாலும் காமராசரின் பிறந்தநாளுக்கு அக்கா சென்னைக்கு வந்துவிடுவார். எப்படியும் அவரை அன்று கண்டு வாழ்த்துச்சொல்லாது ஓய மாட்டார். 1970-72 இல் சென்னையிலுள்ள இந்திய நுட்பியற்கழகத்தில் நான் முது நுட்பியல் (வேதிப்பொறியியல்) படித்தேன். அரங்கராசன் வெங்காலூர் இந்திய அறிவியற்கழகத்தில் முது பொறியியல் (வேதிப்பொறியியல்) படித்தான். நாங்கள் இருவருமே இடதுசாரிச் சிந்தனையில் தீவிரமாய்ச் சென்றுகொண்டிருந்தோம். அக்காவிற்கும் அது தெரியும்.

1971 இல் நாட்டில் மாற்றங்கள் நடைபெற்ற காலம். 1969 இல் பிரிந்துபோன இந்திராகாந்தி தனக்கென ஒரு பேராயக்கட்சியை உருவாக்கிப் 1971 மார்ச்சுத் தேர்தலில் பெருவெற்றி ஈட்டியிருந்தார். சிண்டிகேட் இண்டிகேட் என்று பேராயக்கட்சி இரண்டாய் உடைபட்டது. தமிழகத்திலோ கலைஞர் தலைமையில் தி.மு.க. பென்னம்பெரிய வெற்றிபெற்றது. நாகர்கோயிலில் பாராளுமன்ற உறுப்பினராய் காமராசர் தேர்ந்தெடுக்கப்பெற்ற போதும் அவர் சார்ந்த நிறுவனப் பேராயம் (Organization Congress) மிகுந்த தோல்விகண்டு சோர்ந்துகிடந்தது. சட்டப்பேரவையிலும் பேராயக்கட்சியினர் வெறும் 15 பேராய்க் குறுகிப்போனார். பெருந்தலைவர் நிகழ்ச்சிகளிற் கலந்துகொள்வது குறைந்துபோயிருந்தது. 1971 தேர்தலுக்கப்புறம் நன்றிதெரிவிக்கும் கூட்டம் சைதாப்பேட்டையில் நடந்த போது அவருடைய நொகையான பேச்சைக்கேட்டு அதிர்ந்துபோனேன். இப்படி இவர் மக்களைத்திட்டினால் எப்படி இனி இவருக்கு வாக்களிப்பர்? பென்னம் பெரிய கட்சிக்குப் ஒரு பொதிவானதிட்டம் வேண்டாமா? வெறுமே சு.ம. பயல்கள் என்று எதிரியைக் குற்றஞ்சாட்டினாற் போதுமா? இப்படியெல்லாம் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. அவர்மேல் எனக்குக் கிடுக்கங்கள் (criticisms) நிறைய இருந்தன. நாளைக்கே புரட்சி வந்துவிடப்போகிறது என்பதுபோல் எண்ணிக்கொண்ட இளம்பிள்ளைவாதம் எம்முள் குடிகொண்டிருந்தது.

1971 ஆம் ஆண்டு சூலைமாதம் 15 ஆம் நாள். ஏற்கனவே வெங்காலூரிலிருந்து அரங்கராசன் வந்திருந்தான். திடீரென்று அன்றுகாலை திருச்சியிலிருந்து 11/12 மணிக்கு இலட்சுமியக்கா சென்னை  இ.நு.க. கிருட்டிணா விடுதிக்கு வந்துசேர, “என்னவிது? என்னைத்தேடி வந்திருக்கிறார்” என்று வியந்துபோனேன். அக்காவை விருந்தோம்பியபின் பேசிக்கொண்டிருந்தோம். “புறப்படுங்கடா, தலைவரைப் பார்க்க; இன்னைக்கு அவர் பிறந்தநாள். மாலையில் அவர் வெளிநிகழ்ச்சிகளுக்குப் புறப்படுமுன் பார்க்கலாம்” என்றார். “வேண்டாங்க்கா, ஏதாவது இடக்குமடக்காக நாங்கள் அவரிடம் பேசிவிட்டால் உங்களுக்கும் கஷ்டம், நீங்கள் பாட்டிற்கு உங்கள்தலைவரைப் பார்க்கச்செல்லுங்கள். நாங்கள் இங்கே கதைத்துக்கொண்டிருக்கிறோம். இன்றுமாலை சில தோழர்கள் வருவதாகச் சொன்னார்கள்.” என்றுசொன்னோம். அக்கா ஒப்பவில்லை. ”உங்களுக்கு என்னடா அரசியல்பற்றித் தெரியும்? வெறும் தியரி பேசுவீர்கள். புரட்சி வந்துருச்சா? உள்ளேர்ந்து ஊறி என்ன பேச்சு வருமென்று உங்களுக்கு அனுபவமுண்டா?” என்றுகேட்டார். “இவ்வளவு தூரம் சொல்கிறாரே! பெரியவர் நம்பூதிரிப்பாட்டையே மறுத்துக்கிடந்த நாம் இவருக்குப்பிடித்த தலைவரையும் தான் பார்த்து விடுவோமே?” என்று எங்களுக்குள்  மருக்கமும் கிடுக்கமும் இருந்தாலும் புறப்பட்டோம்..

இன்று காமராசர் நினைவில்லமாய் இருக்கிறதே அத் திருமலைப்பிள்ளைத் தெரு வீட்டிற்கு மாலை 3.30 மணி அளவிற் போய்ச்சேர்ந்தோம். வீட்டுக்கு வெளியில் யாரும் அவ்வளவாயில்லை. ஓரிருவர் வந்துபோய்க் கொண்டிருந்தார். பிற்பகல் பெருந்தலைவர் மாடியில் ஓய்வெடுக்கும் நேரம். 4 மணிக்குத் தான் கீழே வருவார் என்று தெரியும். தலைவரைப் பார்க்கவந்திருப்பதை அக்கா  உதவியாளரிடம் சொன்னார். கீழே காத்திருந்தோம். 15 நுணுத்தங்களில் அவர் எழுந்து தன்னைச் செவ்விக்கு அணிமைசெய்தது தெரியவந்தது. அக்கா மேலேபோய் வாழ்த்துச்சொல்லி ஆசிபெற்று எங்களையும் கூட்டி வந்திருப்பதைச் சொல்லியிருப்பார் போலும். 10 நுணுத்தங்கள் அவர்கள் கட்சிநிலை பற்றிப் பேசிக்கொண்ட பின்னால் ஓர் உதவியாளர் வழி எங்களிருவரையும் மேலேயழைத்தார்.

அப்பொழுதுதான், அவ்வளவு நெருக்கத்தில் நான் பெருந்தலைவரைப் பார்த்தேன். “வாங்க, தம்பி” என்றழைத்தார். தயங்கித்தயங்கி நாங்கள் உள்ளே சென்றோம். பிறந்தநாள் வாழ்த்துக்களையும், வணக்கங்களையுஞ் சொன்னோம்.

“அப்புறம் லெட்சுமி, இவரு யாரு?, இவரு யாரு?”

“ஐயா, இவன் என் தம்பி, ரங்கராஜன், இவன் அவன் நண்பன் கிருஷ்ணன். உங்களைப் பார்க்கணும்னு கூட்டிக்கிட்டு வந்தேன். இவங்கள்லாம் உங்களை நம்ப மறுத்து. என்னோடெ வழக்காடிக்கிட்டே யிருப்பாய்ங்க. ஆனாலும் இவய்ங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தோணும்னு கூட்டிட்டு வந்தேன்.”

“அப்படியா, நல்லது! தம்பி என்ன பண்ணுறீங்க”

“ஐயா, இங்கே சென்னை ஐ,ஐ,டி,யில் எம்டெக் (கெமிகல் இஞ்சினியரிங்) படிங்கிறேங்கய்யா. இவன் பெங்களூர் ஐ.ஐ.எஸ்ஸியில் எம் இ.(கெமிகல் இஞ்சினியரிங்) படிக்கிறான்.”

அரங்கராசனைப் பார்த்துச் சில கேள்விகள் கேட்டார். அவர்கள் அப்பாவைப் பற்றியும் விசாரித்தார். திரும்ப என்னைப் பார்த்து,

”தம்பி, உங்களுக்கு எந்தவூரு”

“காரைக்குடிக்குப் பக்கமய்யா”

“அப்படியா நம்மூரு. ராமநாதபுரம் மாவட்டம். ஊருலே மழை கிழை பெய்யுதா? போற வர்ரப்பல்லாம் பாக்குறேனே? ஒரு பொட்டுத் தண்ணியில்ல. இன்னும் மாடுவிரட்டி மேய்ச்சுக்கிட்டு நம்ம பயக இருக்காய்ங்களா? நல்லாப் படிக்கணும் தம்பி ”படிங்கடா, படிங்கடா”ன்னு சொல்லிச்சொல்லி நாதான் வறண்டுபோகுது. எங்கே கேக்குறாய்ங்க?”.

“இன்னம் மழை வரல்லைய்யா! படிப்பு முக்கியந்தான்யா. நிச்சயம் படிப்பொம்யா!

எங்களுடைய பழைய பள்ளி, கல்லூரிக் கல்வி விவரங்களை ஓரளவு கேட்டறிந்தார். ”எல்லாத்தையும் பேசுங்க, அலசுங்க. ஆனாப் படிங்க” என்றபடி மீண்டும் சில அறிவுரைகள். அடுத்த நிகழ்ச்சிக்குப் போக  நேரமாகிவிட்டதை உதவியாளர் ஞாவகப்படுத்தினார். நாங்கள் கீழேயிறங்கிவந்த பிறகும், அக்காவும் தலைவரும் 10 நுணுத்தங்கள் கட்சிவிவரங்களைப் பேசியபின் மாடியிலிருந்து  கீழே வந்தனர். அங்கிருந்து அவருடைய பழைய அம்பாசிடர் வண்டியில் ஏறிச்செல்லும்வரை பார்த்துக்கொண்டிருந்தோம். கீழே 7,8 பேர் அவரைச் சந்திக்கக் காத்துக்கொண்டிருந்தார். ஒருசில முகமன்களைக் கூறிவிட்டு அங்கிருந்து அவர் புறப்பட்டுவிட்டார்.


தான் முற்றுமுழுதாக முடிந்துபோன காலத்திலும் அவர்சிந்தனை இளைஞர் படிக்கவேண்டுமென்பதிற்றான் இருந்தது. கல்விக்காக அவரெடுத்த முயற்சிகள் ஒவ்வொன்றும் இந்நிகழ்வின் ஊடாக அடியுணர்வில் எழும்பிவந்தது புரிந்தது.  ஒரு பெருந்தலைவனை அப்படித்தான் இன்றும் நினைவு கூருகிறோம்.”நல்லாப் படிக்கணும் தம்பி” இன்றும் அந்த வாசகம் என் காதுகளில் ஒலிக்கிறது. அவர் வாழ்க்கையின் சாரம் அதுதான். கல்வி என்று வந்தால் காமராசர் தான் என்கண்ணில் நிலைத்துநிற்பார். அக் கருப்புத்தமிழன் இல்லாது தமிழ்நாட்டிற் கல்வியேது? 

பி.கு: தோல்வியில் நைந்துபோன, மனம்வெறிச்சொடிய, காமராசரின் வாழ்க்கை அதற்கப்புறம் 4 ஆண்டுகளில் முடிந்தது.

படங்கள்: இணையத்திலிருந்து

__________________________________________________________________













 
இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com

__________________________________________________________________

No comments:

Post a Comment