Tuesday, July 12, 2016

வெந்து தணிந்தது காடு

-- ருத்ரா இ.பரமசிவன்



இது வரை என்ன சாதித்தாய்?
இந்த கேள்வி தான் ஆரம்பிக்கிறது
வரட்டிகளின் தீக்குரலில்.
எல்லாம் வெந்த பின்
இனி என்ன சமையலுக்கு
நான் அடுப்பு மூட்டுவது?
விடைத்த கேள்விக்குள்ளேயே
விடை இருக்கலாம்.
என்ன தான் சாதிப்பது?
இந்த நீண்ட கேள்வியின்
படுக்கை விரிப்பிலும்
படுக்கை சுருட்டலிலும்
ஆவி பறக்கும் 
டபரா தம்ளர் காப்பியிலும்
பத்திரிகையின் பூச்சி பறக்கும்
எழுத்துக்களின் பத்திகளிலும்
புரள புரளக் கிடந்தது தவிர‌
எதையும் சாதிக்க வில்லை.
குடும்பத்தை
குடும்பமே பார்த்துக்கொண்டது.
நான்
அந்த சுவர்களில் கிறீச்சிடும்
வெறும் சுவர்க்கோழி.
என்னால்
யாருக்கும் பைசா லாபம் இல்லை.
வாய் அளப்பது மட்டுமே
என் சொத்து.என் பொக்கிஷம்.
பூர்வார்த்த உத்தரார்த்த மீமாம்சங்களையும்
நியாய வைசேஷிக தர்க்கங்களையும்
நீள் நாக்கில் சொட்டு விட்டுக்கொண்டு
ஸ்லோகங்களால் நனைத்து
இந்த பூமியை குளிரவைக்க முடியுமே
என்னால்.
இன்னும் ஆர்ய பட்டரின் 
அரிய கணிதங்களை
அடுக்கி அடுக்கி சொல்ல முடியுமே
என்னால்.
இவையெல்லாம்
ஏன் உங்களை உறுத்தவில்லை?
..................
..................
.....................
வெந்து தணிந்தது காடு.
பொடிப்பொடியாய் போன‌
மண்டை எலும்புகளும்
கை கால் முட்டிகளுமே மிச்சம்.
அது போதும்.
இலையில்சுருட்டி
குடத்தில் அமுக்கி
அந்த ராமேஸ்வரம் கடலில் கொட்டுவதற்கு!
நான் இப்போதெல்லாம்
அந்த கடல் மீன்களோடு
பிரம்மசூத்திரங்களை தூவி
பொழுது போக்கிக்கொண்டிருக்கிறேன்.

ஸ்ருதி
ஆத்மவிசித்ரம்
ஸ்வபட்சதோஷம்
சர்வ உபேதம்
விகர்ணத்வம்
ந ப்ரோயஜனம்
லீலா கைவல்யம்

இவை இரண்டாம் காண்டம்
முதல் அத்தியாயம்
27லிருந்து 33 வரைக்கும்
உள்ள சூத்திரங்கள் எனும்
சுறுக்கு சொற்கள்.
முண்டைக்கண் துருத்திக்கொண்டு
இந்த மீன்கள் உற்றுக்கேட்கின்றன.
இவற்றின்
அர்த்தங்களை..
உங்களுக்கு மீண்டும் சொல்வேன்.
கரை ஏறி வந்து
அடுத்த பிறவியில்.
காதை தீட்டிக்கொண்டு
காத்திருங்கள்.


______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________
 

No comments:

Post a Comment