Monday, July 11, 2016

FETNA ஆண்டு விழா 2016

FETNA  ஆண்டு விழாவிற்கு வந்து கலந்து கொண்டு இன்று ஜெர்மனிக்கு என் இல்லம் திரும்புகின்றேன். விமான நிலையத்தில் இப்போது.

மனம் FETNA நிகழ்வை நினைத்துப் பாக்கின்றது.

நான் நிகழ்வுக்கு ஒரு நாள் முன்னராகவே வந்திறங்கி விட்டதால் ஏற்பாட்டாளர்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் போதே அவர்களது பணிச்சுமையை உணர முடிந்தது. ஆண்டு விழா.

அதிலும் வட அமெரிக்கா மட்டுமன்றி கனடா, தமிழகம் மற்றும் ஏனைய பிற நாடுகளிலிருந்தும் பங்களிப்பாளர்கள் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து நிகழ்வை நடத்த வேண்டும். 1800 பங்கேற்பாள்ர்களுக்கு உணவு ஏற்பாடு. தங்கும் வசதி ஏற்பாடு. சிறப்பு விருந்தினர் மேற்பார்வை என தங்கும் விடுதில் ஏற்பாட்டாளர்கள் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தனர்.

மாலை விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உணவு மிகத்தரமான வகையில் அமைந்திருந்தது. FETNA தலைவர் திரு.நாஞ்சில் பீற்றர் பிரத்தியேகமாக தமிழ் மரபு அறக்கட்டளையை அறிமுகப்படுத்தி என்னை பேச அழைத்தமை எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை அளித்தது. தமிழ் மரபு அறக்கட்டளை எனும் எமது தன்னார்வ தொண்டூழிய நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளாக விரிவான தமிழ் வரலாறு, சுவடி, பழம் நூல்கள் மற்றும் ஆவணங்களை மின்னாக்கம் செய்து பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதைச்  சிறப்பித்துக் கூறி என்னை பேச அழைத்தமை FETNA த.ம.அ  மீது கொண்டிருக்கும் மதிப்பை எனக்கு உணர்த்தியது. இதற்காக எனது பிரத்தியேக நன்றியை நான் பதிவு செய்கின்றேன்.

முதல் நாள் அமர்வு இசைக்கச்சேரி, மாணவர் நிகழ்வு, கலை நாட்டிய நிகழ்வுகள் என மிக அருமையாக அமைந்தன. காலை தொடங்கி ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கண்டு களித்தேன். மதியம் எனது அமர்வு. நண்பர் சிவக்குமார் கூடுதல் அக்கறை எடுத்து என் அமர்வுக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தார். எல்லா உபகரணங்களும் இருந்தன. அறை முழுதும் ஆர்வலர்கள் வந்து கலந்து கொண்டு எனது 2 மணி நேர உரையையும் வீடியோ வெளியீட்டையும் கண்டு மகிழ்ந்ததோடு தங்கள் கருத்துக்களையும் ஆர்வத்துடன் பதிந்தனர்.

த.ம.அ செய்யும் வரலாற்றுப் பணிகளைப் பற்றி அறிந்ததுமே அதனைப் பாராட்டி தம்மால் இயன்ற அளவு உதவுவோம் என உடனடியாக சிலர் தமது பெயர்களை பதிவு செய்து கொண்டனர். அவ்வகையில் சகோதர சகோதரியர் ராமு இளங்கோ, கீர்த்தி ஜெயராஜ், தினகர், மைதிலி, திரு.திருமதி. வேலு, பேரா.அ.ராமசாமி , தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் ஆகியோர் உடனடியாக உதவுவதற்குத் தயாராக தம்மையும் இப்பணிகளில் இணைத்துக் கொண்டனர். முன்னாள் FETNA தலைவர்  டாக்டர்.முத்தரசன் அவர்களும் துணைவியார் கற்பகமும் மிகுந்த ஈடுபாட்டுடன் பல பயனுள்ள கருத்துக்களை வழங்கினர். முன்னாள் தமிழ்நாடு  தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் டாக்டர்.நாகராஜன் நல்ல ஆலோசனைகளையும் கருத்தாகப் பதிந்தார்.

அன்றைய மாலை நிகழ்வில் நடிகர் திரு,அரவிந்தசாமியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். மிக நல்ல சேவை மனப்பாண்மை கொண்டவர் என்பதை அவரது தூய தமிழ் பேச்சிலிருந்து அறிந்து கொண்டேன். பெண் குழந்தைகளுக்கு பள்ளிக் கூடங்களில் சரியான கழிப்பறை வசதி இல்லாமையால் அவர்கள் தங்கள் கல்வியைத் தொடராமல் செல்லும் நிலை எற்படுகின்றது. அதற்காக பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகளை அமைக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதை விவரித்தார். இது சிறந்த சேவை. இவரது சேவைக்கு என் பாராட்டுக்கள்.

அன்று மாலை நிகழ்ந்த கச்சேரியில் டி.எம்.கிருஷ்ணாவின் இசைக்கச்சேரி மிகப் பிரமாதம். ஆனால் நேரம் செல்லச் செல்ல வருகையாளர்கள் ஏறக்குறைய எல்லோருமே அரங்கை காலி செய்து விட்டது வருந்தத்தக்க ஒன்றே. அவரது கச்சேரியை காலையில் ஏற்பாடு செய்திருக்கலாம். அதனை விட்டு மாலையில் அமைந்ததால் கச்சேரி பொதுமக்களை  கவரத் தவறி விட்டது என்று சொல்லித்தான் ஆகவேண்டும்.

இரண்டாம் நிகழ்வுகள் பல வகைப்பட்டனவாக இருந்தன. முடிந்தவரை நான் எனக்கு ஆர்வம் தரும் வகையிலான நிகழ்வுகளை பார்த்து ரசித்தும் புதிய நண்பர்களுடன் பேசி த.ம.அ பற்றிய செயல்பாடுகளை விவரித்தும் கலந்துரையாடியும் மகிழ்ந்தேன். அன்று தமெரிக்கா தொலைக்காட்சி பேட்டியும் நடைபெற்றது. அதில் எனக்கு 45 நிமிட பேட்டிக்கு இடம் அளித்து பேட்டி எடுத்த இருவருமே எனது  ஞாயிற்றுக்கிழமை பொதுமேடை சொற்பொழிவிற்கும் வந்திருந்து பாராட்டினர்.

பொதுவாகவே வந்திருந்த அனைத்து தமிழ் ஆர்வலர்களுமே தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பற்றி அறிந்ததும் மிகவும் பாராட்டிப் பேசி தங்கள் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்திக் கொண்டமை எனக்கு மன நிறைவளிக்கும் படி அமைந்தது.

2ம் நாள் மாலை சினிமா இசைக்கச்சேரியும் அதில் கலந்து சிறப்பித்த கலைஞர்களும் வந்திருந்தோரை முழுமையாக மகிழ்வித்தனர். பொதுமக்களும் ஆடிப்பாடி தங்கள் உல்லாச உணர்வை வெளிப்படுத்திக் கொண்டனர்.

எல்லா இடங்களில் இருப்பது போல ஆய்வு தொடர்பான அரங்குகளில் இல்லாத மக்கள் பங்கேற்பை சினிமா நிகழ்ச்சிகளில் காண முடிந்தது. 1800 பேர் கூடக்கூடிய அரங்கம் அன்று மாலை முழுமையாக நிறைந்திருந்தது.

மூன்றாம் நாள் நான் கலிபோர்னியா புறப்பட்டு  விட்டதால் என்னால் தனித்தமிழ் இயக்க அரங்கில் கலந்து கொள்ள இயலவில்லை. முன்னரே இந்த கூடுதல்  நிகழ்வைப் பற்றி அறிந்திருந்தால் அதில் பங்கேற்றுச் செல்ல முயற்சித்திருப்பேன்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என நான் பெரிதும் எதிர்பார்த்த பேரா.கல்யாணி வரமுடியாது ஆனது என்பதும் கவிஞர் சுகிர்தராணி விசா பிரச்சனைகளால் வர இயலவில்லை என்றும் அறிந்தேன். இத்தகைய ஆண்டு விழாவிற்கு சிறப்பு வருகையாளர்களுக்கு விசா ஏற்பாடுகளை சில மாதங்களுக்கு முன்னரே செய்வது தானே சிறப்பு. அதனை ஏன் கவனம் கொள்ளவில்லை என்பது எனக்கு எழுந்த கேள்வி.  இதனைத்தவிர ஏனைய அனைத்துமே மிகச் சிறப்பாக மனம் நிறைந்த வகையில் அமைந்திருந்தன.

எனக்கு தனிப்பட்ட வகையில் எனது பயணப்பெட்டி தொலைந்து பின்னர் அது கிடைக்கும் வரை உதவி செய்த நல்லுள்ளங்கள் சிவக்குமார், விஜயா, தேவி, நிர்மலா ஆகியோரை மறக்க முடியாது. இவர்கள் அனைவருக்கும் என் நன்றி.

FETNA 2016 எனக்கு மன நிறைவளிக்கும் வகையில் அமைந்திருந்தது. தமிழ் மரபு அறக்கட்டளைக்கு பங்கேற்க வாய்ப்பளித்த FETNA நிர்வாகக் குழுவிற்கும் நியூ ஜெர்சி ஏற்பாட்டுக் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றேன். வாய்ப்பமைந்தால் அடுத்த ஆண்டு சந்திப்போம்.

அன்புடன்
முனைவர் சுபாஷிணி
ஜெர்மனி

No comments:

Post a Comment