Thursday, January 14, 2016

தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம்

-- தேமொழி.

இக்கால இந்தியாவின் அரசியலிலும், சமூக அமைப்பிலும் எண்ணற்ற மாற்றங்கள் எத்தனையோ ஏற்பட்டிருந்தாலும், வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலம் வரையில், ஒரு மாறுதலற்ற தேக்க நிலையில் இந்தியாவின் சமூக வாழ்வு அமைந்திருந்தது என்பதாக கார்ல் மார்க்ஸ் (The British Rule in India – Karl Marx) கருதினார். அதுபோன்றே, இந்தியாவின் நிலையில், பொருளாதார அடிப்படையில் படிப்படியாக புராதனப் பொதுவுடைமை, அடிமையுடமை, நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், சோஷலிசம் எனப் பல நிலைகளைச் சந்தித்ததற்கான வரலாற்றுச் சான்றுகளைக் காட்ட இயலாது என்று மார்க்சிய வரலாற்று ஆசிரியர் டி. டி. கோசாம்பி கருதினர்.

இக்கருத்தைப் பெரியார் தனது கோணத்தில், நமது நாட்டில் இந்தச் சாதீய அடிப்படையிலான அடிமைத்தனம் ஒவ்வொரு அரசகுலத்தின் ஆட்சியிலும், பேரரசுகளிலும்மாறாது, காலம் காலமாக ஊறிப்போயிருப்பதாகக் குறிப்பார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட்ட இந்திய மக்கள் கணக்கெடுப்பு அறிக்கை ஒன்று (1901), சென்னை மாகாணத்தில் நிலவிய சாதீயமானது மனிதர் ஒருவரின் வாழ்வை, வேலையை, இருப்பிடத்தை, சமூக அந்தஸ்தை, உணவை,பெயரை, உடையைத் தீர்மானிக்கிறது என்றே குறித்திருந்தது. இவ்வாறு வாழ்வில் பிறந்ததிலிருந்து, இறப்பதுவரை பிரிக்கவழியின்றி வாழ்வோடு கலந்து ஒருவரது வாழ்வின் போக்கையே தீர்மானிக்கும் நிலையில் புரையோடிப் போயிருந்த பாகுபாட்டையும், சமத்துவமற்ற பேத நிலையையும் அசைத்துப் பார்க்க முற்பட்டவர் தந்தை பெரியார். வரலாற்றுப் போக்கில் பெரியார் புரட்சி செய்த காலம் ஒரு மிக முக்கியமான காலகட்டம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஒரு எழுத்தாளராக … இதழியலாளராக … தனது எழுத்து, உரை ஆகியவற்றால் தமிழக வரலாற்றைப் புரட்டிப்போட்ட பெரியாரை, அறிஞர் அண்ணா, “பெரியார் ஒரு சகாப்தம்; ஒருகாலகட்டம்; ஒரு திருப்புமுனை” என்று புகழ்ந்துரைத்தார். அத்தகைய பெரியாரது கருத்துப் பரப்பல் முயற்சியை மீண்டும் திரும்பிப் பார்க்கும் பொழுது மலைக்க வைக்கிறது.

ஒரு எழுத்தாளராக, இதழியலாளராக போராட்டங்கள் பல சந்தித்து தனது கருத்துகளை, உரைகளை மக்களிடம் தனது பத்திரிக்கைகள் மூலம் கொண்டு சேர்த்த பெரியாரின் பணி வியக்கவைப்பது. தமிழகத்தில் வெறும் 7% மக்களே எழுதப் படிக்கத் தெரிந்திருந்த ஒரு காலகட்டத்தில், அவர்களிலும் 5% பிராமண குல மக்களாகவும் இருந்த காலத்தில், இந்துமதத்தின் ஆணிவேரை அசைக்கும் நோக்கில், சனாதன தர்ம அமைப்பையும், வர்ண முறையையும் தீவிரமாக எதிர்க்கும் கருத்துகள் நிரம்பிய ஏடுகளை, வசதியற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தினர் ஓரணா, ஈரணா என்ற விலையையும் கூடப் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கும் நிலையை உருவாக்கிய பெரியாரை, அதனால் மக்களின் சிந்தனையில் தெளிவை வளர்க்க விரும்பிய பெரியாரை எழுத்தாளராக, இதழியலாளராக பாராட்டுவது என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவராலும் கூட சிறப்பாகச் செய்ய இயலாது.

கொள்கை பரப்பவே பத்திரிக்கை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவோ அல்லது செயலாளராகவோ காங்கிரசுடன் பெரியார் இணைந்திருந்த மிகக்குறுகிய ஐந்தாண்டு காலகட்டத்தில், 1922 ஆம் ஆண்டு அவர் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதால், கோவை சிறையில் பெரியார் அடைக்கப்பட்டார். பெரியாருடன் அவரது தோழரான ஈரோடு கருங்கல்பாளையம் வழக்கறிஞர் தங்கபெருமாள் பிள்ளையும் சிறையில் அடைபட்டிருந்தார்.சிறைவாழ்க்கையில் இருவரது சிந்தனையில் உதித்தது “குடிஅரசு” என்ற இதழைத் துவக்கும் எண்ணம்.

சிறை வாழ்க்கை முடிந்தவுடன் 1923 ஆம் ஆண்டு ஜனவரி 19 இல் ‘குடிஅரசு’ மற்றும் ‘கொங்குநாடு’ என்ற பெயர்களில் பத்திரிக்கைக்கான பதிவைத் துவக்குகிறார் பெரியார். சுமார் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, 1925 ஆம் மே மாதம் இரண்டாம் நாள், சனிக்கிழமையன்று ஈரோட்டில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் தலைமையில் முதல் இதழ் வெளியிடப்பட்டு, ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ‘குடிஅரசு’ வார இதழாக, பெரியார் காங்கிரசில் இருக்கும்பொழுதே குடியரசு அவர் எழுத்தில் வரத்துவங்குகிறது. அதன்பிறகே, சற்றொப்ப ஆறு மாதங்கள் கழித்து காங்கிரசின் காஞ்சிபுரம் மாநில மாநாட்டில், தேவையான உறுப்பினர் எண்ணிக்கைக்கும் அதிக அளவில் ஒப்புதல் பெற்று அவர் முன்வைத்த “வகுப்புரிமை தீர்மானம்” விவாதத்திற்கு ஏற்காமல் நிராகரிக்கப்பட்டு, கட்சி விதிகளுக்கு புறம்பாகப் புறக்கணிக்கப்பட்டதால், கட்சி மேலிடத்தின் மீது சினம் கொண்டு தனது நண்பர்களுடன் வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் துவக்குகிறார். ஆகவே, காங்கிரசில் உறுப்பினராக இருந்த காலத்திலேயே தனது கொள்கை பரப்பும் கருவியாக ‘குடிஅரசு’ வார ஏட்டை வெளியிடும் எழுத்தாளராக, இதழியலாளராக பெரியார் இருந்தார். அப்பொழுதே, “ஒவ்வொரு வகுப்பும் முன்னேறவேண்டும். இதை அறவே விடுத்து தேசம், தேசம் என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று. மக்களுக்குள் தன்மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்” என்று காங்கிரசில் இருக்கும்போதே முதல் குடிஅரசு இதழில் தனது நோக்கத்தையும் பெரியார் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி
அரும்பசி யெவர்க்கு மாற்றி
மனத்துள்ளே பேதா பேதம்
வஞ்சகம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ?
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகுந்தானே!

என்று திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் ‘குடி அரசை’ ஆரம்பித்து வைத்த போது ஆற்றிய உரைமொழிகள் தொடர்ந்து (தமிழர் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் – சாமி.சிதம்பரனார்), பெரியாரின் கோணத்தை சாற்றும் விதமாக குடிஅரசு இதழில் வெளிவந்தது.

முதல் இதழின் அட்டையை பாரதியாரின் “சாதிகள் இல்லையடி பாப்பா” மற்றும் “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்” ஆகிய வரிகள் அலங்கரித்தன. பின்னாளில் மேலும் பல திருக்குறள்களும், பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினாலும் ” மகாத்மா காந்தி வாழ்க”, “கதர் வாழ்க” போன்ற வரிகளும் மாறி மாறி இடம் பிடித்தன. சுயமரியாதை இயக்கத்தின் துவக்கமும், குடிஅரசு இதழின் துவக்கமும் ஒரே ஆண்டிலேயே அமைந்து பெரியாரின் கொள்கை மக்களிடம் சேர்வது என்பது சரியான பாதையில் பயணிக்கத் துவங்குகிறது. பெரியாரின் புரட்சிகர எழுத்தும் பேச்சும் சமுதாய மாற்றத்துக்கான போர்க்கருவிகளாக அமைந்தன.

ஆரம்ப நாட்களிலேயே தங்கபெருமாள் பிள்ளை உடல்நலக் குறைவு காரணமாக ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறார். 1925 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 1949 நவம்பர் முடிய வெளிவந்த குடி அரசு வார ஏட்டின் ஆரம்ப நாட்களில், வார இதழின் 12 பக்கங்களையும் பெரியாரே எழுதி வந்ததாய் பெரியார் குறிப்பிட்டுள்ளார். பின்னர் பகுத்தறிவுப் பாதையில் அவருடன் பயணித்த திராவிடக் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ம.சிங்கார வேலர், சாமி.சிதம்பரனார், கைவல்யசாமியார், மயிலை.சீனி.வேங்கடசாமி, பாரதிதாசன், ஜீவானந்தம் எனப் பலரும் எழுதியுள்ளனர்.

பெரியார் வரலாற்றைத் தமிழர்களுக்கு படைத்தளித்த சாமி. சிதம்பரனார் பெரியார் பற்றிக் கூறும்போது …

இவர் எதைப்பற்றியும் அஞ்சாமல் எழுதுவார். இவருக்கு இலக்கணம் தெரியாது. எழுதுவதில் எழுத்துப் பிழைகளும் மலிந்திருக்கும். சொற் பிழைகள் நிறைந்திருக்கும். ஒருவாக்கியம் எப்படி இருக்கவேண்டும் என்பதே இவருக்குத் தெரியாது. இவர் எழுதுவதில் காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளிக்கு வேலையில்லை. ‘கிணர்’ ‘வயிர்’ ‘சுவற்றில்’ ‘ஆஷி’ ‘சூஷி’ ‘ஆருதல்’ ‘பொருமை’ போன்ற பிழைகள் தாராளமாகக் காணப்படும். சாதாரணமாகப் பேசுந் தமிழில்தான் எழுதுவார். அதிலும் எழுவாயெங்கேயிருக்கிறது, பயனிலை எங்கேயிருக்கிறது என்று தேடினாலும் சில சொற்றொடர்களில் அகப்படா. ஒரு வாக்கியம் நான்கு முழம் ஐந்து முழம் நீண்டிருக்கும். இவ்வளவுபிழைகள் மலிந்திருந்தாலும் படிப்போரை தன்வசமாக்கும் சக்தி இவர் எழுத்துக்கு மட்டும் தனியாக அமைந்துள்ளது. அது என்ன சக்தி என்று நம்மாற் சொல்லமுடியாது.” (‘தமிழர் தலைவர்’ .ப.169) என்கிறார்.

இதனைப் பெரியாரும் ஒருநாளும் மறுத்ததில்லை. அவர் சிலவேளை ஒரே பத்தியில் அனுகூலம் – அநுகூலம், அன்னியர் – அந்நியர், கட்சி – கஷி, சூழ்ச்சி – சூஷி, முஸ்லீம் – முஸ்லிம், தேசீய – தேசிய என்று மாற்றி மாற்றித் தொடர்ந்து எழுதியும், பேச்சுத் தமிழிலும் எழுதியதை அவரே அறிந்திருந்தாலும், இதற்காக இலக்கணம் கற்கப்போவதில்லை என்று கூறி தான் சொல்ல நினைத்த கருத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தார்.

பெரியார் பல்வேறு புனைப் பெயர்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவற்றில், “சித்திரபுத்திரன்’, ‘பழைய கருப்பன்’ என்பவை நன்கு அறியப்பட்ட புனைப்பெயர்களாகும். இதைத் தவிர தேசீயத்துரோகி, ஒரு தொழிலாளி, சுமைதாங்கி, யார் எழுதினாலென்ன, எவர் எழுதினாலென்ன, ஒருநிருபர், நமதுஅரசியல் நிருபர், பொதுநலப்பிரியன், குறும்பன், உண்மை காண்போன், நம்பிக்கையிழந்தவன், பார்ப்பனரல்லாதான், உண்மை விளம்பி, வம்பளப்போன், பழைய காங்கிரஸ்காரன், வம்பன் என்ற புனைப் பெயர்களிலும் இவர் எழுதியிருக்கலாம் என்ற பெரியாரியலில் ஆர்வம் கொண்டோர், அவர் எழுதும் முறையை நன்கறிந்த வாசகர்கள் கருதுவதுண்டு.

ஆண்டு, மாதம்,தேதி ஆகியவற்றைக் குறிக்க முறையே ௵, ௴, ௳ என்ற குறியீடுகளும், மேற்படி என்பதைக் குறிக்க ௸ என்ற குறியீடும் , ரூபாய், அணா, பைசா எனும் அன்றைய நாணயமுறைக் கணக்குகளையும் அப்படியே பயன்படுத்தினார். பெரியார் முதல் முதலாக எழுத்துச் சீர்திருத்தத்தை குடி அரசில் அறிமுகப்படுத்த எண்ணி இருந்தாலும், எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியது 1935 ஆண்டு ஜனவரி 6 ஆம் நாள் வெளிவந்த அவரது மற்றொரு பத்திரிக்கையான “பகுத்தறிவு” வார இதழில்தான். எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை, இதற்கு முதல் வார (30.12.1934) “பகுத்தறிவு” இதழின் துணைத் தலையங்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்…

__________ “இன்னமும் தமிழ் பாஷை எழுத்துகளில் அனேக மாறுதல்கள் செய்யவேண்டி இருந்தாலும் இப்போதைக்கு இந்த சிறுமாறுதலை அனுபவத்திற்குக் கொண்டு வரலாம் என்று கருதி அந்தப்படியே எழுத்துக்களை உபயோகித்து அடுத்தாப்போல் பிரசுரிக்கப்போகும் ‘குடிஅரசு’ பத்திரிகையைப்பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம்” __________ (பகுத்தறிவு 30.12.1934, ப.12)

சமூக சீர்திருத்தம் மட்டுமே பத்திரிக்கையின் குறிக்கோள்:
ஒவ்வொரு வாரமும் 10,000 ‘குடிஅரசு’ பத்திரிகைகளை அச்சேற்றினாலும், வருவாய் கிடைக்கக் கூடிய விளம்பரங்களை அதிகம் வெளியிட பெரியார் அதிக ஆர்வம் காட்டியதில்லை. விளம்பரங்களுக்கு அதிக பக்கங்களை ஒதுக்கினால் கருத்துகளை அதிகம் சொல்ல இயலாது போகிறது என்பது பெரியாரின் கருத்து. அதிக பக்கங்களை விளம்பரத்திற்கு ஒதுக்க இயலாது என்ற தனது நிலையை வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் வெளிப்படையாகவே பத்திரிக்கை வாயிலாகக் குறித்து கீழ்வருமாறு அறிவிப்புச் செய்தி அனுப்புகிறார். __________“கொஞ்சநாளைக்கு ‘குடிஅரசு’ 16 பக்கத்துடனே வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என்றாலும் இதனால் வாசகர்களுக்கு அதிகமான குறை ஏற்படாதிருக்கும் பொருட்டு இப்போது விளம்பரத்திற்காக உபயோகப்படுத்தி வரும் சுமார் 7, 8 பக்கங்களை இனி 3 அல்லது 4 பக்கங்களுக்கு அதிகப்படாமல் செய்துவிட்டு, சற்றேறக்குறைய 12 அல்லது 13 பக்கங்களுக்கு குறையாத விஷயங்கள் வெளியாக்க உத்தேசித்திருக்கின்றோம். இதனால் ஒரு சமயம் விளம்பர வியாபாரிகளுக்கு சற்று அதிருப்தி இருக்கலாம்” __________ (குடி அரசு -23.12.1928), என்று தன்நிலை விளக்கம் அளித்துள்ளார்.

“சமதர்ம அறிக்கை”(Communist Manifesto)யின் முதல்பாகம் மொழிபெயர்க்கப்பட்டு, 1931 ஆண்டு, அக்டோபர் 4 ஆம் நாள் குடிஅரசில் தொடங்கி, அந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள்வரை தொடர்ந்து 5 இதழ்களில் வெளிவந்துள்ளது. இது போன்றே ‘ஜாதியொழிய வேண்டும்’ என்ற தலைப்பில் அறிஞர் அம்பேத்கர் கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ‘சமதர்ம அறிக்கை’, ‘ஜாதியொழிய வேண்டும்’ இவையிரண்டும் இந்தியமொழிகளில் தமிழிலும், ஏடுகளில் ‘குடிஅரசி’லும் தான் முதலில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘ஒன்றே குலம்’ என்பதை வலியுறுத்த குடிஅரசு இதழைத் துவக்கிய பெரியாரிடம், நீதிக்கட்சி நடத்தி வந்த ‘திராவிடன்’ நாளேட்டை அவர்களால் நடத்த முடியாத நிலை ஏற்பட்ட பொழுது ‘திராவிடன்’ நாளேட்டை நடத்தும் பொறுப்பும் பெரியாரிடம் வந்து சேர்ந்தது.   கொள்கைகளின் படி ‘குடிஅரசு’ பத்திரிக்கை போலத்தான் அதே கொள்கையுடன் ‘திராவிடன்’ நாளேட்டையும் நடத்துவேன், ஒப்புக்கொள்ளாவிட்டால் ஒத்துழைக்காமல் விலகிவிடுவேன் என உறுதியாக அறிவித்துவிட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் பெரியார்.

நீதிக்கட்சி, தங்கள் கட்சியில் பார்ப்பனர்களையும் சேர்த்துக்கொள்ளும் முடிவை எடுத்த பொழுது அதை அவர்களது திராவிடன் நாளேட்டிலேயே கண்டித்து எழுதத் துவங்கினார் பெரியார். அதிர்ச்சி அடைந்த நீதிக்கட்சி, ‘திராவிடன்’ நாளேட்டை அவரிடம் இருந்து திரும்பப்பெற்றது. அலர்மேலுமங்கைத்தாயார் எனும் அம்மையாரை ஆசிரியராக அமர்த்தி, ‘திராவிடன்’ நாளேட்டை நீதிக்கட்சி தனது சார்பில் மீண்டும் வெளிக்கொண்டு வந்தபொழுது, “திராவிடன் மதவேறுபாடு, வகுப்புவேறுபாடு காட்டாமல் இனி வெளியிடப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டு, பெரியாரிடம் இருந்து திராவிடன் நாளேடு திரும்பப் பெறப்பட்டதன் நோக்கத்தை வெளிப்படுத்தியது. திராவிடன் நாளேட்டுடன் கொண்ட தொடர்பில் பெரியாருக்கு பொருளிழப்பு ஏற்பட்டும், தனது கொள்கைக்குப் புறம்பாக இருந்தால் விலகிவிடுவேன் என்று சொல்லியது போலவே, ‘திராவிடன்’ ஏட்டின் பொறுப்பிலிருந்து விலகினார் பெரியார்.

போராட்டங்களுக்குள்ளான பத்திரிக்கை எழுத்துப்பணி:
பெரியாரின் பத்திரிக்கைகள், பகுத்தறிவு பாசறைகள் மட்டுமல்ல, தமிழக வரலாற்றுப் போக்கையும், அக்கால இந்திய வரலாற்றுப் போக்கையும் படம் பிடித்துக் காட்டுவன. பெரியார் துவக்கிய சுயமரியாதை இயக்கம் என்னும் சமூகப்புரட்சியை, அதனோடு தொடர்புள்ள பெரியாரின் பொதுவாழ்வுப் பயணத்தை, அவர் தமிழகத்தில் கொண்டுவந்த சிந்தனை மாற்றத்தைச் சிறந்த முறையில் பதிவு செய்துள்ள ஆவணங்களாகவும் விளங்குகின்றன.

குடிஅரசு :-
குடிஅரசு தொடங்கிய எட்டு ஆண்டுகளில், “இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும்?” என்ற தலைப்பில் பெரியார் எழுதிய தலையங்கத்துக்காக பிரிட்டிஷ் அரசு பெரியார்மீது ‘அரசு துரோகக் குற்றச்சாட்டு’களின் கீழ் வழக்கு தொடர்ந்து, 1933 ஆம் ஆண்டில் ரூ.300 அபராதமும் விதித்து, 9 மாதங்கள் சிறையிலும் அடைத்தது. பெரியாரின் மனைவி நாகம்மாளின் மறைவிற்குப் பிறகு, குடிஅரசின் பதிப்பாளராகப் பொறுப்பேற்ற பெரியாரின் தங்கை கண்ணம்மாளுக்கும்   ரூ.100 அபராதமும், 6 மாத சிறைத் தண்டனைக்கு விதிக்கப்பட்டது. குடியரசு முடக்கப்படலாம் என எதிர்பார்த்த பெரியார் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. குடியரசு தடைப்பட்டால் அதேநாளில் வேறு பத்திரிக்கை வரும் என குடிஅரசில் அறிவிக்கிறார். அறிவித்ததுபோலவே, குடிஅரசு வரவேண்டிய அதேநாளில் ‘புரட்சி’ என்ற பத்திரிக்கையை தடைபடாது வெளியிட்டு விட்டு, அதில், “குடிஅரசை” ஒழிக்கச்செய்த முயற்சியால் “புரட்சி” தோன்ற வேண்டியதாயிற்று. கண்டிப்பாகப் புரட்சி தோன்றியேதான் ஆகவேண்டும்” என்று காரணமும் குறிப்பிடுகிறார்.

பெரியாரின் ‘குடியரசு’ இதழ் அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்வதும் தொடர்கதையானது. பெரியார் சிறையிலிருந்த 1933 ஆம் ஆண்டு நவம்பர் 19 லிருந்து ‘குடிஅரசு’ தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் 1935 ஆம் ஆண்டு ஜனவரி 13 லிருந்து வெளிவரத்தொடங்கியது. பிறகு மீண்டும் 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 29 இல் நிறுத்தப்பட்டு, மீண்டும்   1943 ஆம் ஆண்டு அக்டோபர் 16 லிருந்து வெளிவரத்தொடங்கி, மீண்டும் 1949ஆம் ஆண்டில் அரசின் ஒடுக்கு முறைக்கு உள்ளானது. மேலும் அரசு ரூ.3000 ஜாமீன் தொகை கேட்கவே, குடி அரசு தொடராமல் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனாலும் 1925 ஆம் ஆண்டு துவங்கி 1949 ஆம் ஆண்டுவரை ‘குடி அரசு’ தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் தலைமுறைகள் கடந்து இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

புரட்சி:-
குடியரசு ஏடு மட்டுமல்ல, தொடர்ந்து வந்த “புரட்சி”யும் அடக்கு முறைக்கு உள்ளானது, ஆசிரியர் பெயர் பத்திரிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்று கூறி மீண்டும் வெளியிட்டாளர் கண்ணம்மாள் மீது வழக்கு தொடரப்பட்டு ரூ 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரே ஆண்டில் அடுக்கடுக்காக மூன்று வழக்குகள், ஆயிரக்கணக்கில் அபராதங்களுக்கு மேல் அபராதங்கள் எனத் தொடர்ந்து தீட்டப்பட்டு, சுமார் ரூ. 5,000 க்கும் மேல் பொருளிழப்பில் “புரட்சி” இதழும் வெளிவரமுடியாத நிலையை எட்டியது.

பகுத்தறிவு :-
“புரட்சி’ ஏடு வெளிவரும்போதே ‘பகுத்தறிவு’ எனும் நாளிதழைத்தொடக்கிய பொழுது அதுவும் இரண்டு மாதங்கள் என்ற குறுகியகாலத்தில் முடங்கிப் போனது. ஆனால் அதே பகுத்தறிவை தொடர்ந்து வார ஏடாகவும், பிறகு மாத ஏடாகவும்   ஏறத்தாழ ஒரு நான்கு ஆண்டுகள் நடத்தியுள்ளார் பெரியார். பகுத்தறிவு வார இதழுக்கும், அதன் உண்மை விளக்கம் அச்சகத்துக்கும் இரண்டாயிரம் ரூபாய் பிணையத் தொகை கட்டவேண்டும் என்று 1935 ஆம் ஆண்டு ஜனவரி 29 இல் அரசு ஆணை பிறப்பித்தது. தடைபட்ட ‘பகுத்தறிவு’ இதழ் பிறகு மீண்டும் 1935 ஆம் ஆண்டு தொழிலாளர் தினமான மே முதல் நாளிலிருந்து பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில், பகுத்தறிவு மாத இதழாக வெளிவரத்தொடங்கியது.

விடுதலை :-
‘குடி அரசு’ம் வார இதழாக வெளிவந்து கொண்டிருந்த காலத்தில், நீதிக்கட்சியின் சார்பில் வெளிவந்து நின்று போயிருந்த ‘விடுதலை’ இதழும் ஜூன் 1, 1935 ஆம் ஆண்டு முதல் வாரம் இருமுறை இதழாக வெளிவரத் தொடங்கியது. பிறகு 1937 ஆண்டுமுதல் ‘விடுதலை’ வாரம் இருமுறை பதிப்பு என்பது நிறுத்தப்பட்டு, ‘விடுதலை’ நாளேடாக வெளிவருகிறது

ரிவோல்ட்:-
இவற்றோடு பெரியார் ஆங்கில இதழும் வெளியிட்டுள்ளார். சோவியத் புரட்சி நாளான நவம்பர் 7 ஆம் நாளைத் தேர்ந்தெடுத்து 1928 ஆம் ஆண்டில், ரிவோல்ட் (Revolt) என்ற ஆங்கில வார ஏட்டைத் தொடங்கி 55 இதழ்கள் வரையும் வெளியிட்டுள்ளார்.

‘குடிஅரசு’ இதழையும், சுயமரியாதை இயக்கத்தையும் 1925 ஆம் ஆண்டில் துவக்கி, அவற்றின் உதவியுடன் தனது ‘பகுத்தறிவு கொள்கை’ பரப்பும் இயக்கப் பயணத்தைத் தொடங்கிய பெரியாரின் எழுத்தும், பேச்சும் 1938 ஆம் ஆண்டு காலம் வரை முழுமையான வீச்சோடு தமிழகத்தில் மாறுதல்கள் பலவற்றைக் கொண்டு வந்தன.   அவற்றின் விளைவுகளால் அவரது கருத்துப் போர்க்களங்களான ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’ பத்திரிக்கைகள் தொடர்ந்து சந்தித்த அரசின் அடக்குமுறைகளும், இழப்பை ஏற்படுத்தி பத்திரிக்கையை முடக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கில் தீட்டப்பட்ட அபராதத் தொகைகளும், பிணைப் பணம் கட்டச் சொல்லி தடை செய்த அரசின் கெடுபிடிகளும் பெரியாரை அசைக்க முடியாமல், அவரது போராட்டத்தை தீவிரப்படுத்த மட்டுமே செய்தன.

அடக்குமுறைகள் பல எதிர்கொண்டாலும், பத்திரிக்கை நடத்துவதை ஒரு வருவாய் வரும் வாய்ப்பு என்றே கருதாமல், பகுத்தறிவு கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் கருவியாகவும் கருதியவர் பெரியார். இதனால் அவர் என்றும் எழுத்துக்காகப் பெறும் சிறைத் தண்டனைகளையும், அபராதங்களையும் துச்சமாக மதித்திருந்தார். தனது கொள்கைகளில் இருந்து பிறழாமலும், விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலும் இதழ் நடத்திய பெரியார் பத்திரிக்கை துறையில் ஒரு முற்றிலும் மாறுபட்ட ஒரு வியத்தகு மனிதர்தான்.

பெரியார் சந்தேகமற உணர்ந்திருந்தது… எவ்வாறாயினும் தமிழக மக்களை சிந்திக்கத் தூண்டி, அவர்களைப் பகுத்தறிவு சிந்தனைப்பாதையில்   திருப்பிவிட்டால், அவர்கள் மீண்டும் தங்கள் தன்மதிப்புக்கு இழுக்கு தரும் பாதையில் திரும்பிச் செல்லவே வாய்ப்பிருக்காது என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மட்டுமே. தமிழர் உரிமை மீட்பராகப் பெரியார் இதனை அவரது ‘பகுத்தறிவு’ இதழின் தலையங்கத்திலும் குறிப்பிடுகிறார்…

“முடிவாய்க் கூறுமிடத்து. பகுத்தறிவு மனித ஜீவாபிமானத்துக்கு மக்களை வழிநடத்திச் செல்லுமேயொழிய எக்காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது என்பதேயாகும்” (பகுத்தறிவு-தலையங்கம்-26.8.1934)

வாழ்க பெரியாரின் சிந்தனையும் நல்முயற்சியும்.

நன்றி:
சிறகு: http://siragu.com/?p=18458
சிறகு: http://siragu.com/?p=18518
____________________________________________________
கட்டுரைக்கு உதவிய நூல்:
குடிஅரசு 1925, பெரியாரின் எழுத்தும் பேச்சும், தொகுதி 1 (இரண்டாம் பதிப்பு – 2008)

பார்க்க:
பெரியாரின் குடி அரசு மின்னூல்கள்
http://thfreferencelibrary.blogspot.com/2015/03/blog-post_6.html

தமஅ வெளியீடு # 221 முதல்  தமஅ வெளியீடு # 244    வரை
அறிமுகம் & தொகுதி 1 --- 23
____________________________________________________

படம் உதவி: சுபாஷிணி டிரம்மல்


தேமொழி
தேமொழி

themozhi@yahoo.com
 

No comments:

Post a Comment