Wednesday, January 13, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 7


-செல்வன். 
பேரா: ஹ்யூகோ: ஆனால் விழிப்புணர்வை ஏற்படுத்த அவை உதவின அல்லவா?

சன்னா: ஆமாம், ராஜதந்திர ரீதியில் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்ட அவை உதவின. இதற்கு அடுத்தகட்டம் தலித்துகளை அரசியல் ரீதியாக அதிகாரத்தை அடையவிடாமல் தடுப்பவர்கள் யாரோ அவர்களிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதே ஆகும். அரசியல் வளர்ச்சியின் இயல்பான பரிணாமமே இது. தேர்தலை புறக்கணித்து வந்த தலித் கட்சிகள் அதிகாரத்தை தாமே கையில் எடுப்பது அல்லது அதிகாரம் உள்ளவர்களிடமிருந்து அதிகாரத்தை பறிப்பது எனும் தேர்வுகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு ஆளாகின. விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் இணைந்தவர்களின் அரசியல் வலு குறைவதை இது தடுக்கும் என்ற நோக்கில் அவை தேர்தலில் பங்கெடுக்க முன்வந்தன. இப்படி முடிவெடுத்ததும் அரசியல் கூட்டணிகள், தேர்தல் வேலைகள் போன்றவற்றை செய்யும் அவசியம் உருவானது. அனால் நான் முன்பே சொன்னதுபோன்ற 30 வருட காலசுழற்சியை அவை மிக சிறப்பாக பயன்படுத்தி மக்களைத்திரட்டி போரிட தயார் செய்தன

பேரா ஹ்யூகோ: சரி 1999 வரை நீங்கள் "தேர்தல் பாதை திருடர் பாதை" எனவும் "அரசியல் ஒரு சாக்கடை" என்றும் கூறீவந்தீர்கள். இப்போது சாக்கடையில் புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இறங்கிவிட்டன. இதன்பின் தலித் அரசியலை எப்படி முன்னெடுக்கிறீர்கள்?

சன்னா: தேர்தலில் இறங்கியபின் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாருடன் கைகோர்த்து மூன்றாவது அணியை அமைத்தோம். இதன் நோக்கம் திமுக, அதிமுக அல்லாத புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை உள்ளிட்ட இடைநிலை சாதிகளின் அமைப்பை உருவாக்குவதே. ஆனால் மூப்பனார் இதற்கு இணங்காமல் 1999க்கு பிறகு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். அதன்பின் 2001, 2011, 2006 என அனைத்து தேர்தல்களிலும் திராவிட கட்சிகள் இல்லாத மாற்று அமைப்பை உருவாக்குவதே விடுதலை சிறுத்தைகளின் நோக்கமாக இருந்தது. இதை நிறைவேற்ற இக்கட்சி கடுமையாக முயன்றாலும் வெற்றி கிட்டவில்லை. இது அரசியல் நிலையில் மாற்றம் வருவதற்கான சிறந்த வாய்ப்பாகும். விடுதலை சிறுத்தைகளுக்கு மாற்றம் வேண்டும் எனும் ஆர்வம் இருந்தாலும் மற்ற கட்சிகளின் மனதில் அப்படிப்பட்ட விருப்பம் இல்லை. உதாரணமாக மருத்துவர் ராமதாஸை எடுத்துக்கொள்வோம். ராமதாஸ் எளியவர்களை ஒருங்கிணைக்க முயன்றார். மீனவர்கள், முஸ்லிம்கள் முதலானோரை இடைநிலை சாதியினருடன் ஒருங்கிணைக்க முயன்றார். அவர் எங்களுடன் சேர்ந்து தமிழ் பாதுகாப்பு அமைப்பை துவக்கி ஈழம் முதலான போராட்டங்களில் பங்கெடுத்தாலும் இதுவரை மூன்றாம் அணியாக எங்களுடன் இணைந்து தேர்தலை சந்திக்க அவர் முன்வரவில்லை. 2009ல் மூன்றாவது அணியை அமைக்க முயன்றோம். எங்கள் தலைவர் தொல். திருமாவளவன் மாற்று அணியை அமைக்க மிகுந்த முன்னேற்பாட்டுடன் முயற்சிகளை எடுத்தார். அதே சமயம் 2007ல் ஒரு தலித் சித்தாந்தம் உருவானது. இதன்படி தமிழகத்தில் தலித்துகள், கிறிஸ்துவர்கள், மீனவர்கள், முஸ்லிம்கள், ஆதிவாசிகள் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தினர் ஆகியோர் பாமகவுடன் இணைந்தால் அது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பினோம். அரசியல்ரீதியாக இத்தகைய அமைப்பு திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு சமமான மாற்று அமைப்பாக இருக்கும். 1996 தேர்தலில் இது ஒரு புரட்சிகர மாற்று சித்தாந்தமாக முன்வைக்கபட்டது. 1996 தேர்தலில் இதை ஓரளவு நிறைவேற்ற முயன்றார்கள். தலித்துகள் இதை செய்ததும் உடனே தலித் அல்லாத சாதிகளும் அரசியல் கட்சிகளை உருவாக்கினார்கள். உருவாக்கி திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார்கள். கூட்டணி சேர்ந்ததும் பெரும்தோல்வியை அடைந்தார்கள். இந்த அனுபவத்திற்கு பின் சாதிகட்சிகளுடன் கூட்டணி அமைக்க 1996க்கு பிறகு திமுக முன்வரவில்லை. ஆக அச்சமயத்தில் மாற்று அமைப்பை உருவாக்க இச்சாதிகட்சிகள் முயன்றாலும் திமுக அதை தன் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக்கொண்டது.

இது நிகழ்ந்தபின் சிறுகட்சிகளின் மேலான மக்களின் நம்பகதன்மை குறைந்து மூன்றாவது அணிக்கான வாய்ப்பு மங்கியது. இச்சயமத்தில் தான் புதிய தமிழகம் அரசியலில் நுழைந்தது, விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் தன் அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்தது.அதன்பின் 1999, 2001 தேர்தல்களில் ஜாதிகட்சிகளுடன் சேரமாட்டோம் என அறிவித்த திமுக ஜாதிகட்சிகள் என தங்களை வெளிப்படையாக அறிவிக்காத கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தது. இதனால் விடுதலை சிறுத்தைகளுக்கு அதில் சேர வாய்ப்பு கிடைக்காமல் அதிமுகவுடன் சேரும் நிலை உருவானது. ஆனால் மாற்று அணி என அந்த சமயம் உருவான திட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய செயல்திட்டமாகவே இருந்து வருகிறது. அன்றிலிருந்து 2011 வரை அத்தகைய அணியை உருவாக்கவே முனைந்து செயல்பட்டு வருகிறோம். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாமே தோல்வியையே சந்தித்துள்ளன.ஆக இதன் அடிப்படை உண்மை என்னவெனில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியலில் நுழைந்தாலும் தன் கொள்கையில் உறுதியாகவே இருந்து வருகிறது. ஆனால் அதை நிறைவேற்றுவதில் அவர்கள் வெற்றி பெறவில்லை

பேரா ஹ்யூகோ: சரி, இப்போது திராவிட கட்சிகளுடன் இணைந்து செயல்படவேண்டியது அவசியம் ஆகிவிட்டது. அவர்கள் தங்கள் கூட்டணியில் உங்களுக்கான அங்கீகாரத்தை வழங்குகிறார்களா? தேர்தல் சமயம் களத்தில் இறங்கி உங்களுக்காக அடிமட்ட அளவில் பணியாற்றுகிறார்களா? உங்களுக்கு ஓட்டு போடுகிறார்களா? உங்கள் தலைவருக்கு மேடையில் மரியாதை கொடுக்கிறார்களா? கூட்டணியில் உங்கள் நிலை என்ன?

சன்னா: இரு கட்சிகளையும் பார்த்தால் அதிமுக இப்போது ஒரு தேவர் கட்சியாக- அதாவது முக்குலத்தோர் கட்சியாக மாறிவிட்டது. ஜெயலலிதா என்று சசிகலாவுடன் சேர்ந்தாரோ அன்றே அது முக்குலத்தோர் கட்சியாக மாறிவிட்டது. வடக்கே வன்னியர் ஓட்டுக்கள் பாமக, திமுக என இரண்டாக பிரிந்துள்ளன. அதிமுகவை பொறுத்தவரை அவர்களின் வன்னியர் வாக்குவங்கி மிக சிறியதே. அதிமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர்ந்தால் வடக்கே விடுதலை சிறுத்தைகளே அதிமுகவை தாண்டி ஆதிக்கம் செலுத்தும். ஆனால் பல அடித்தட்டுமக்கள் அதிமுகவில் இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடவேண்டும். இதனால் அதிமுகவில் விடுதலை சிறுத்தைகளுக்கு நல்ல மரியாதை கிடைத்தது. திமுகவை பொறுத்தவரை மேடையில் எங்கள் தலைவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் அடிமட்ட அளவில் கிடைப்பதில்லை. திமுக மேடைகளில் எங்கள் தலைவர்கள் கருணாநிதிக்கு சமமாக மேடையில் அமராலம். அவர்கள் கட்சிதலைவர்கள் எங்கள் கட்சி மேடைகளுக்கு வருவார்கள். ஆனால் மேடையில் கிடைக்கும் மரியாதை அடிமட்ட அளவில் கிடைப்பதில்லை. அதிமுகவை பொறூத்தவரை அவர்கள் தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் கட்சியாக இருப்பதால் அங்கே அவர்கள் எங்களை மதிப்பதில்லை. இந்த சமூகத்தில் நாங்கள் எந்த மேடைகளில் எங்களை ஏற்றுகொள்கிறார்கள் என்பதை மட்டுமே பார்க்கும் சூழலே நிலவுகிறது.

அரசியல் சாக்கடையில் இறங்கியபின்னர் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையேயான வித்தியாசம் இதுவே என ஆகிவிட்டது. இம்மாதிரி பார்த்தால் அவர்கள் எங்களுக்கு கொடுத்த பங்கு மிக சிறிது என்பதுடன் எக்கட்சியிலும் எங்களுக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர்கள் எங்களை "தலித் கட்சி" என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். இக்க்கண்ணோட்டம் மாற சிறிது காலம் ஆகலாம்.



---..(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்...)..---






   
செல்வன்

 
holyape@gmail.com





 

 

No comments:

Post a Comment