Wednesday, December 9, 2015

சேலம் கவிச்சிங்கம் இராஜரிஷி அர்த்தநாரீச வர்மா


--கோ.செங்குட்டுவன்.


“மலையாளர், வங்கர், வடுகர், துருக்கர்
நிலையாகத் தாய்மொழியில் நிற்கத் – தலையாம்
தமிழ்மாது பெற்ற தனயர்க்கு மட்டும்
அமிழ்தமோ இங்கிலீஷ் அறை”

-தமிழர்களின் மொழிப்பற்றுக் குறித்து அர்த்தநாரீச வர்மா அவர்களின் கவிதை வரிகள் இவை.

அர்த்தநாரீச வர்மா பாரதிக்கு முன்பு பிறந்தவர். பாரதிக்கும் பின்பும் இருந்தவர். பாரதியின் மறைவுக்கு (அந்தச் சமயத்தில் - 12.9.1921) இரங்கற்பா பாடிய ஒரே கவி எனும் பெருமை படைத்தவர்.

சேலத்தில் சுகவனேசுவரர்- லட்சுமி ஆகியோரின் மகனாக 27.7.1874இல் பிறந்தவர். திருச்செங்கோட்டில் உறையும் அர்த்தநாரீசுவரரின் அருளால் பிறந்ததால் அர்த்தநாரீசு வரர் என்றே பெயரிட்டனர்.

இவர் தமிழில் ஈடுபாடும் தேர்ச்சியும் உடையவர். சிறுவயதிலேயே கவிபாடும் திறன் படைத்தவர். ஆங்கிலத்தில் பழைய மெட்ரிகுலேசன் வரை இவர் தேச்சியுற்றிருக் கிறாராம். சமஸ்கிருத்ததிலும் புலமை வாய்ந்தவராக இருந்திருக்கிறார்.

“அர்த்தநாரீசர் மொத்தத்தில்  தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, இசை, வானசாஸ்திரம், பூகோளம், வரலாறு, சோதிடம், மருத்துவம் இன்னும் பல நூல்களைக் கற்று சகலகலா வல்லுநர் எனப் பெயர் பெற்றிருந்தார்” என்பார் “அர்த்த நாரீச வர்மா” நூலாசிரியர் கவிஞர் த.பழமலய்.

1912இல் சேலத்தில் இயங்கிவந்த சுதேசாபிமானி அச்சுக்கூடத்தின் மேலாளராக இருந்த வர்மா, அச்சுக்கலையில் தேர்ச்சிப் பெற்றவராவார். பத்திரிகைகளுக்கு ஓவியங்களையும் வரைந்து கொடுத்திருக்கிறார்.

சேரமான் பெருமாள் நாயனார் சரிதம் (1909), முதலாவது கரிகாற் சோழன் (1913), பராசரஸ்மிருதி–மூலமும் உரையும் (1923), விதிமதி விளக்கம், வன்னி வம்ச ப்ரகாசிகை (1912), சம்புவராயர் வரலாறு உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.

க்ஷத்திரியன், க்ஷத்திரிய சிகாமணி, வீரபாரதி, தமிழ் மன்னன், சூரியோதயம் உள்ளிட்ட இதழ்களையும் நடத்தியிருக்கிறார்.

சுதேசியம், சுதந்திரம், பெண்கல்வி, மதுவிலக்கு குறித்து இவர் எழுதியக் கவிதைகள் அப்போது மிகவும் பிரபலம். எழுச்சியை ஊட்டியவை.

கல்வியைக் கல், கட்சியொழி, கட்குடியை வேண்டாதே, கொல்லாதே, தன்னலத்தைக் கோராதே, நல்லோரைப் போற்று, புலை நீக்கு, புண்ணியஞ் செய், ஆவினங்காப்பாற்று, மரப்பொழுக்கம் பற்று – ஆகியவை அர்த்தநாரீச வர்மா அவர்களின் உபதேச உரைகளாகும்.

தமது 90ஆவது வயதில் 7.12.1964இல் திருவண்ணாமலையில் மறைந்தார் அர்த்தநாரீச வர்மா.

“சுப்பிரமணிய பாரதியின் பாடல்களும், சேலம் அர்த்தநாரீச வர்மா அவர்களின் பாடல்களும் மக்கட்கு தேசபக்தி ஊட்டுவதுபோலக் கற்றைக் கற்றையாக அரசியல் நூல்களை ஓதியவரின் சொற்பெருக்குகளும் அப்பக்தியை ஊட்டா” – திரு.வி.க.

“வர்மா அவர்கள் நம் இந்திய தேசத்தின் பொதுச்சொத்துப் போன்றவர். இவரது கவித்துவம் அபாரமானது. அற்புதமானது. ஆழ்ந்த புலமை நிறைந்தது. கவிதைகள் அனைத்தும் சொற்செட்டானவை. இன்பமளிக்கும் இசையைப் போல இனிமையா னவை” – திவான் பகதூர் ஆர்.வி.கிருஷ்ணய்யர்)

“அர்த்தநாரீச வர்மா அவர்கள் தம் பெருஞ்செல்வத்தைத் தரும மார்க்கத்தில் மக்களை உயர்த்துவதற்காகச் செலவிட்டு மிகப்பெரும்பணி செய்துவந்தார். தாழ்ந்தவர்களை உயர்த்துவது சமூகச் சீர்திருத்தம், உயர்ந்தவர்களைத் தாழ்த்துவது சமூகப்பணி அல்ல என்பதை நன்குணர்ந்தமகான். அடக்கத்தையும் தெய்வ பக்தியையும் சத்திய வாழ்க்கையும் பெரிதாக மதித்த ஒருவர்.” – இராஜாஜி.

சேலம் கவிச்சிங்கம் இராஜரிஷி அர்த்தநாரீச வர்மா அவர்களின் சமாதி, திருவண்ணா மலையில் கிரிவலப்பாதையில் ஈசான்ய லிங்கேசுவரர் கோயில் அருகே அமைந்துள்ளது.

அன்னாரின் நினைவுதினம் இன்று..!         



 
 
கோ.செங்குட்டுவன் 

ko.senguttuvan@gmail.com
 
 
 
 
 


No comments:

Post a Comment