Wednesday, December 9, 2015

குருவித்துறைக் கோயில் கல்வெட்டுகள்

--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.


குருவித்துறைக் கோவில் கல்வெட்டுப்படங்களைப் படித்துப் பார்த்தபோது கல்வெட்டு வரிகள் மூலம் தெரியவந்த சில செய்திகளையும் அவற்றோடு தொடர்புடைய சில செய்திகளையும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். இரண்டு தூண் கல்வெட்டுகள் படிக்கப்பட்டன.


 முதல் தூண் கல்வெட்டின் பாடம்:
1         சோழ குலாந்தகச்ச
2         (துர்வேதி) மங்கலத்(தி)ல் இ
3         ன்னாயனார் சிவநாமத்தா
4         ல் அனுபவித்து வருகிற
5         பாடகம் இருபதாலுள்ள
6         பாடிகாவல் ஸ்ரீ ஸுந்தர பா
7         ண்டிய தேவற்கு யாண்டு
8         20 ஆவது முதல் இன்னா
9         யனாற்கு அமுதுபடியாக
10     க்குடுத்தோம் இவ்வோ


குறிப்பு : வரி 6-இல் உள்ள “ஸ்ரீ ஸுந்த”  என்பது கிரந்த எழுத்துகளால் ஆனது.

இரண்டாம் தூண் கல்வெட்டின் பாடம்:
1         தென்னவன் மூவே
2         ந்த வேளா(ந்) எழுத்
3         து இந்த சிலா
4         லே(கை) பண்ணி
5         னேந் இந்நாயனார்
6         கோயில் தச்சாசாரி
7         யன் (சீயன்) சிவலவ
8         னான பாகனூர் கூற்ற
9         த்து ஆசாரியன் எழு
10     த்து இந்த சிலா(லே)


குறிப்பு : வரிகள் 3,4,10-இல் உள்ள “சிலாலேகை”  என்பது கிரந்த எழுத்துகளால் ஆனது.


முதல் கல்வெட்டு மூலம் பெறப்படும் செய்திகள்:
சோழகுலாந்தகச் சதுர்வேதி மங்கலம் – தற்போதைய சோழவந்தான் ஊரின் பழம்பெயர். சோழவந்தான் பண்டு சதுர்வேதி மங்கலமாக (பிராமணர்குடியேற்றம்) இருந்தது. சதுர்வேதிமங்கலங்கள் உருவாக்கப்படும்போது அரசன் ஒருவனின் பேராலே அமைக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. அவ்வகையில் இவ்வூரும் ”சோழகுலாந்தகன்” என்னும் அரசனின் சிறப்புப் பெயராலே அமைந்துள்ளது. சோழகுலாந்தகன் என்னும் சிறப்புப் பெயர் எந்த அரசனின் பெயர் என்னும் கேள்வி எழுகிறது. பாண்டியன் இரண்டாம் வரகுணனின் தம்பியான சடையவர்மன் பராந்தக பாண்டியனின் பேரனான வீரபாண்டியன் என்னும் அரசனின் சிறப்புப் பெயரே சோழகுலாந்தகன். அதாவது சோழகுலத்துக்குக் காலன். இவன் கி.பி. 946 முதல் கி.பி. 966 வரை ஆட்சி செய்தவன். இவனைப்பற்றி டாக்டர் கே.கே.பிள்ளை தம் “தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும்”  என்னும் நூலில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

“இராசசிம்மன் மகன் வீரபாண்டியன் பாண்டி நாட்டுக்கு ஏற்றம் புரிந்தவர்களுள் ஒருவனாவான். பராந்தக சோழன் ஆட்சியில் சோழப்பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த பாண்டி நாட்டுப்பகுதிகளை அவன் மீட்டுக்கொண்டான். அவன் ‘சோழன் தலைகொண்ட கோவீரபாண்டியன்’ என்று தன்னைப்பாராட்டிக்கொண்டுள்ளான். அவன் கொண்டது சோழ இளவரசர்களுள் ஒருவனது தலையே போலும். முதலாம் இராசராசனின் தமையனாகிய ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வென்று அவன் முடியைக்கொண்டிருக்கவேண்டும் என்று சோழர்களின் கல்வெட்டுகளிலிருந்து விளங்குகிறது. வீரபாண்டியன் கி.பி.966-இல் போரில் உயிர் துறந்தான்.”

மேற்படி சதுர்வேதிமங்கலத்து நாயனார் (இறைவன்)  பெயரில் உள்ள இருபது பாடகம் அளவுள்ள நிலத்தின் விளைவிலிருந்து பெறப்படும் வரிவருமானம் பாடிகாவல் செலவினங்களுக்குத் தற்போது பயன்பட்டு வருகிறது. அவ்வருமானம் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவரின் இருபதாவது ஆட்சியாண்டிலிருந்து இக்கோயில் இறைவற்கு அமுதுபடிச் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படவேண்டும் எனக் கல்வெட்டு ஆணை கூறுகிறது.

பாடகம் – ஒரு நில அளவு.
பாடிகாவல் – ஊர், நாடு முதலியவற்றைக் காத்தல்; அதன்பொருட்டுத் தண்டும் வரி.
அமுதுபடி – படையல் சோறு (நைவேத்தியம்?)

முன்னர் நான் எழுதிய குறிப்பில் இக்கல்வெட்டு அரசனின் நேரடி ஆணையைக் குறிப்பதாகச் சொல்லியிருந்தேன். அது தவறான குறிப்பு. சதுர்வேதிமங்கலத்துச் சபையார் பாடிகாவல் வருமானத்தை அமுதுபடிச் செலவினங்களுக்கு மாற்றிக்கொடுத்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு, சுந்தரபாண்டியன் என்னும் அரசனின் இருபதாம் ஆட்சியாண்டுக் காலத்தது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என இரு அரசர்கள் சிறப்பானவர்கள் உளர். அவர்களுள் முதலாமவன் கி.பி. 1219 முதல்  கி.பி. 1239 வரை ஆட்சியிலிருந்தவன். இரண்டாமவன் கி.பி. 1251 முதல் கி.பி. 1268 வரை ஆட்சியிலிருந்தவன். கல்வெட்டு இருபதாம் ஆட்சியாண்டைக்குறிப்பதால் கல்வெட்டு மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது என்பது பெறப்படுகிறது. எனவே, கல்வெட்டு கி.பி. 1239-ஆம் ஆண்டைச் சேர்ந்தது எனக்கொள்ளலாம்.


இரண்டாம் கல்வெட்டு மூலம் பெறப்படும் செய்திகள்:
இக்கல்வெட்டு முதல் கல்வெட்டின் இறுதிப்பகுதியா எனத்தெரியவில்லை. வேறொரு கல்வெட்டின் இறுதிப்பகுதியாகவும் இருக்கக்கூடும். எவ்வாறெனினும், இக்கல்வெட்டு வரிகள், ஒரு கல்வெட்டின் இறுதிப்பகுதியைச் சேர்ந்தன. கல்வெட்டின் முடிவில் அரச ஆணையைத் தெரிவித்துச் சான்றுக் கையெழுத்து (கையொப்பம்) இடுபவர்களின் பெயர்கள் விளக்கமாகக் குறிப்பிடப்பெறும். அவ்வாறே, இக்கல்வெட்டிலும் சான்றுக் கையெழுத்திட்டவர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.

1. தென்னவன் மூவேந்த வேளான் எழுத்து -   அரச அலுவலர்களில் உயர்ந்த பதவி வகித்தவர்களின் பட்டங்களில் “மூவேந்த” என்னும் முன்னொட்டுபெயர் வருவதுண்டு. அவ்வகையில் வேளான் ஒருவரின் பெயர் இது. தென்னவன் என்பது பாண்டியனைக் குறிக்கும் முன்னொட்டு.

2. கோயில் தச்சாசாரியன் சிவலவன் எழுத்து -  தச்சாசாரியன் என்பவர் தற்காலத்து வழக்கிலுள்ளதுபோல் மரவேலை செய்கின்ற தச்சர் அல்லர். இவர் கல்தச்சர். அதாவது சிற்பி (ஸ்தபதி). கோயிலில் காணி உரிமை பெற்ற தச்சராயிருக்கவேண்டும். சான்றுக் கையெழுத்திட்டதோடு, இக்கல்வெட்டைப் பொறித்தவரும் இவரே. இவர் பாகனூர் கூற்றத்தைச் சேர்ந்தவர். (சோழ நாடு  கூற்றங்கள் என்னும் பல நிருவாகப்பிரிவுகளைக் கொண்டிருந்தது என்பது நாம் அறிந்த ஒன்று.) இவர் பெயர் சிவலவன் என்பது. ஸ்ரீவல்லபன் என்னும் இப்பெயர் தமிழ்ப்படுத்தப்பெற்று ஸ்ரீ>சீ ,   வல்லபன் > வல்லவன் > வலவன் என மருவியது. (நா.கணேசன் அவர்கள், கேரளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழிக் கல்வெட்டு குறித்து “ஸ்ரீ பழமி” என்பது ”சீ பழமி” என எழுதப்பட்டுள்ளது என நிறுவியுள்ளதை நினைவு கூர்க.)

3. சிலாலேகை – சிலா=கல் லேகா (லேகை) = ரேகா, ரேகை, கோடு, எழுத்து. (Graph).



ஆசிரியரின் நன்றி : செய்திகள் தந்துதவிய தொல்லியல் துறை அறிஞர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்களுக்கு.





து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
 
 
 

No comments:

Post a Comment