Friday, July 31, 2015

உளுந்தூர்ப்பேட்டை விமான ஓடுதளம்

மன்னார்குடி நகர், உளுந்தூர்ப்பேட்டையில் இருந்து 3ஆவது கி.மீ.இல் இருக்கும் சின்னஞ் சிறிய கிராமம்.  திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்ப்பேட்டை டோல் கேட்டைக் கடக்கும் போது, கன நேரத்தில் இந்தக் கிராமத்தைக் கடந்து விடலாம்.  ஆனால், சற்று இறங்கி சாலையின் கிழக்கே உள்ள இந்த ஊருக்குள் நடந்துச் சென்றால் நீங்கள் திரும்புவதற்கு இரண்டு மணி நேரம்கூட ஆகலாம். இதற்குக் காரணம் இங்குள்ள விமான ஓடுதளம்.

1942இல் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இந்த ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது இங்கு போர் விமானங்கள் ஓயாமல் வந்துச் செல்லுமாம். மேற்கில் உள்ள ஓடுதளப் பாதையில் ஜெ 1, 2 என 50 வரை எண்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஜெட் விமானங்கள் வந்து நிற்பதற்கான அடையாளங்களாக இருக்கக்கூடும்.




இந்த ஓடுதளம் கிழக்கில் பச்சவெளி, மேற்கில் மன்னார்குடி, வடக்கில் நயினார்க் குப்பம், தெற்கில் மாம்பாக்கம் ஆகிய கிராமங்களைத் தொட்டு நிற்கின்றன. நான்கும் ஒரு புள்ளியில் இணைகின்றன.  ஒவ்வொரு திசையிலும் சுமார் ஒரு கி.மீ.க்கும் குறையாமல் இவற்றின் நீளம் இருக்கிறது. அகன்றப் பரப்பில் ஏற்ற இறக்கங்களுடன் ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், 1954இல் சென்னையில் இருந்து விமானம் மூலம் இங்கு வந்த இந்தியப் பிரதமர் நேரு அவர்கள், இங்கிருந்து நெய்வேலி சென்றிருக்கிறார். தொடர்ந்து, 1961இல் சோவியத் அதிபர் லியோனித் பிரஷ்னெவ் அவர்களும் இந்த விமானத் தளத்திற்கு வந்துள்ளார். மேலும், 1966 நவம்பர் மற்றும் 1967 மார்ச் மாதங்களில் இங்கு விமானங்கள் வந்துச் சென்றதாக, தனது “கெடிலக் கரை நாகரிகம்” நூலில் பதிவு செய்துள்ளார், திரு.சுந்தர சண்முகனார்.

நகர் மன்னார்குடி உள்ளிட்டக் கிராமங்களை விமான ஓடுதளம் இணைப்பதால், அருகில் உள்ள நகரமான உளுந்தூர்ப்பேட்டையின் பெயராலேயே “உளுந்தூர்ப்பேட்டை விமான ஓடுதளம்”  என்றழைக்கப்படுகிறது. 

கடந்த 1.10.2013இல் நகர் (மன்னார்குடி) கிராமத்துக்கு நான் சென்றிருந்தேன்.  அப்போது வீட்டுக்கு வெளியே குளித்துக் கொண்டிருந்த ஒருவர் “எங்கப் போறீங்க?” என விசாரித்தார். “பழைய ஏர்போட்டுக்கு” (இப்படிச் சொன்னால்தான் அவர்களுக்குப் புரியும்) என பதிலளித்தேன்.

“ஏன் ஜெட் வருதுங்களா?” அவரது அடுத்தக் கேள்வியில் ஆர்வம் தெறித்தது. இதே கேள்வியைத் தான் பலரும் என்னிடம் கேட்டனர். அவர்களில் பலர் ஜெட்டைப் பார்த்தது கிடையாது. ஆனால், ஜெட் எப்போது வந்திறங்கும் எனும் எதிர்பார்ப்பு அவர்கள் கண்களில் தெரிந்தது.   

தற்போது இந்த விமான ஓடுதளம், இப்பகுதி மக்களால் கம்பு, கேழ்வரகு உள்ளிட்டத் தானியங்களை உலர வைக்கும் களமாகவும், சுற்றுவட்டப் பகுதிகளில் இருந்து உளுந்தூர்ப்பேட்டைச் செல்ல குறுக்குவழிச் சாலைகளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  சுட்டெரிக்கும் வெயிலில் ஓடுதளப் பாதைகளைச் சுற்றி வந்து கொண்டிந்தபோது, பல இடங்களில் கீரிப் பிள்ளைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடித்திரிவதைப் பார்க்க முடிந்தது.


ஒரு காலத்தில் போர் விமானங்கள் சீறிப் பாய்ந்தன. இப்போது கீரிப் பிள்ளைகள் விளையாடித் திரிகின்றன.  எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது, உளுந்தூர்ப்பேட்டை விமான ஓடுதளம்.

 ________________________________________________________ 
 
கோ.செங்குட்டுவன் 
ko.senguttuvan@gmail.com
________________________________________________________ 

No comments:

Post a Comment