Wednesday, July 15, 2015

தமிழர்களின் விளையாட்டு

மனித வாழ்க்கை அடிப்படையில் இயற்கையோடு பின்னிப் பிணைந்து இருப்பது. இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே உலகில் உள்ள எந்தவொரு இனமாக இருந்தாலும் ஒவ்வொன்றும் தனக்கென்று அடிப்படையான பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கின்றன. இவ்வகை பண்பாட்டுக் கூறுகள் அந்த இனமக்களின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத வகையில் அங்கம் வகிப்பனவாக பன்முகத்தன்மையோடு வெளிப்படும் வகையில் சடங்குகளாகவும், சம்பிரதாயங்களாகவும் ஆடை அணிகலன்களின் வழி வெளிப்படும் விதமாகவும், உணவு, கலை என்றும் பொழுது போக்கு அம்சங்களாகவும் வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதில் விளையாட்டுக்களும் அடங்கும்.

 
பண்டைய நாகரிகங்களில் முக்கிய அம்சங்களாக விளங்கும் வழிபாட்டுச் சடங்கு விசயங்களைப் போலவே, விளையாட்டுக்களும் சமூக அங்கீகாரம் பெற்ற ஒரு விசயமாகவே இருந்து வருவதை அத்தகைய நாகரிகங்களைப் பற்றி வாசிக்கும் போது அறிகின்றோம், உதாரணமாக கிரேக்க, ஜப்பானிய, எகிப்திய நாகரிகங்களைக் குறிப்பிடலாம். தமிழ் இலக்கியங்களை வாசித்தறியும் போது தமிழர் தம் பண்டைய வாழ்க்கை முறையில் விளையாட்டுக்கள் பெருமை கொள்ளத்தக்க வகையில் அங்கம் வகித்திருக்கின்றன என்ற செய்தியை அறிகின்றோம்.

வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டு, அழகியல் கூட்டும் விளையாட்டு, முதியோருக்கென்று விளையாட்டு, இளம் குழந்தையர் விளையாட்டு, பெண்களுக்கென்று தனி விளையாட்டு என்று விளையாட்டுக்கள் பன்முகப் பரிமாணங்களில் அமைந்திருந்தன. இந்த விளையாட்டுக்கள் உடலுக்கு புத்துணர்ச்சியையும் உள்ளத்திற்கு மலர்ச்சியையும் அளிப்பனவாக அமைந்திருந்தன. இந்த அவசர யுகத்தில், மாறி வரும் கால ஒட்டத்தில் இந்த விளையாட்டுக்களில் ஏறக்குறை பெரும் எண்ணிக்கையிலானவை தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து படிப்படியாக மறைந்து வரும் நிலை எற்பட்டுள்ளதை நாம் மறுக்க முடியாது.

திருச்சியிலிருந்து ஏறக்குறைய 45 கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் மலையடிப்பட்டி.  இது புதுக்கோடையைச் சார்ந்த கிராமம். இங்கு எழில் நிறைந்த இயற்கைச் சூழலில் ஒரு மாபெரும் பாறையில் இரண்டு கோயில்கள் ஒன்றாக என இணைந்து ஒரு குடைவரைக் கோயில் அமைந்திருக்கின்றது.  ஒன்று சிவபெருமானுக்காகவும் மற்றொன்று அனந்தபத்மநாப ஸ்வாமிக்காகவும் என அமைக்கப்பட்ட கோயில்கள் இவை. இக்கோயில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த  தந்தி வர்மன் எனும்  பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என அறிய முடிகின்றது. இக்கோயில் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பினை உணர்த்தும் கலைக்கோயில்கள் பட்டியலில் ஒன்றாக இடம்பெறுகின்றது. எண் 134, 135 http://asi.nic.in/asi_monu_alphalist_tamilnadu.asp.

இந்தக் குடைவரை கோயிலின் அருகில் இருக்கும் பிரமாண்ட வடிவ பாறைகளின் மேல் சமணப் படுகைகள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்பகுதியில் பாறைகளில் கீறப்பட்ட ஆடுபுலியாட்டம் விளையாட்டினை ஒத்த ஓவியம் ஒன்று காணப்படுகிறது,  இதன் காலம் பிற்காலத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம்.   



நாகரிக உலகின் துரித செயல்பாடுகளில் மக்கள் சிந்தனை கிராமப்புரப் பழக்க வழக்கங்களை ஒதுக்கி விட்டு பொது நீரோடையில் பயணிக்க விரும்பும் போக்கையே வெளிப்படுத்துவதைக் காண்கின்றோம். இது தமிழர் பண்பாட்டு அம்சங்களைப் பாதுகாக்க உதவாது. மாறாக படிப்படியாக இவை மக்கள் மனதிலிருந்தும் புழக்கத்திலிருந்தும் மறைந்து செல்லும் நிலையே ஏற்படும். இந்த நிலை வளம் நிறைந்த, கலை அழகும் நேர்த்தியும் நிறைந்த தமிழர் பண்டைய விளையாட்டுக்களுக்கு ஏற்படக் கூடாது.

இதனை மனதில் கொண்டு நமது பாரம்பரிய வளங்களில் முக்கியமானதான விளையாட்டுக்களை மக்கள் மத்தியில் மீண்டும் பரவலாக்கி அவற்றை நாம் புழக்கத்தில் கொண்டு வரும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் எல்லாத் தரப்பினருக்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள் பற்றிய அடிப்படை தகவல்களை இன்றைய செய்தி தகவல் ஊடகங்களின் வழி சரியான வகையில் அறிமுகப்படுத்துவதும் இப்பணியில் அடங்கும். பள்ளிகள் கல்லூரிகள் ஆகியனவும் இம்முயற்சியில் தமது பங்கினை ஆற்றுதல் இளம் தலைமுறையினர் இளம் வயது முதலே இந்த விளையாட்டுக்களைப் பழகிக் கொள்ள வாய்ப்பளிப்பதாக அமையும்.

 ________________________________________________________ 
 
சுபாஷிணி
ksubashini@gmail.com
________________________________________________________ 

No comments:

Post a Comment