Tuesday, December 31, 2013

பாரதத்தின் பிற மாநிலங்களில் தமிழர் குடியேற்றம் - திவாகர்


திவாகர்

இருபதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆண்டபோதும் சரி, அதற்குப் பிறகு சுதந்திரமடைந்த இந்தியாவிலும் சரி, வேலை இல்லா திண்டாட்டம் என்ற ஒன்று மக்களைப் பாடாய்ப் படுத்தியதால் எங்கெல்லாம் வேலை இருக்கின்றதோ எங்கெல்லாம் வாழ்வாதாரத்துக்கு சந்தர்ப்பங்கள் தோன்றுகின்றனவோ எங்கெல்லாம் சென்றால் உழைப்பால் பசியை வெல்லலாம் என்று தோன்றியதோ அங்கெல்லாம் மக்கள் மொழி பேதமில்லாமல் குவியத் தொடங்கினர் என்பதை யாரும் மறுக்கமுடியாதுதான். ஆனால் இக்கட்டுரை இப்படி சமீபகாலங்களில் நடைபெற்ற மாற்றங்களை விட்டு சற்று ஆழமாக திரும்பிப்பார்க்கவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது. முக்கியமாக தமிழர்கள் இடமாற்றம் அதுவும் தமிழ் பேசப்படும் தமிழ் மாநிலத்தை விட்டு பாரதத்தில் மற்ற மாநிலங்களில் தமிழர்கள் குடியேற்றம் எப்படி ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆராயப்பட்டு எழுதப்பட்டதாகும்.

உலகிலுள்ள பண்டைய குடி இனங்களில் காலம் காலங்களாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றத்தை தன்னுள் வாங்கிக்கொண்டு அதனால் புத்துணர்ச்சி பெற்று மென்மேலும் பெருமை பெற்று வாழும் குடி தமிழ்க்குடி ஒன்றுதான் என்று மிகத் தைரியமாக சொல்லவேண்டும். தமிழர்களின் தோற்றத்தைக் காலக் கணக்குக் கொண்டு நிச்சயமாகக் கணக்கிடமுடியாது. அவர்கள் எந்தப் பகுதியில் முதலில் தோன்றினார்கள் என்பதையும் நம்மால் இன்னமும் நேர்த்தியாக விளக்கமுடியவில்லை. கடலால் அழிந்த குமரிக்கண்டத்தில் தமிழர்கள் தோன்றினார்கள் என்று பொதுவாக நிறுவப்பட்டாலும், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் மத்தியில் இந்தோனிஷியாவையும் இணைத்துக் காணப்பட்ட பூமி என்று பல தன்னார்வக் கட்டுரைகள் வெளியிடப்பட்டாலும் நிறுவப்படாத செய்திகளை நாம் இக்கட்டுரையில் கொண்டு வரப்போவதில்லை. தற்போதுள்ள தமிழக-கேரள  பூமியே தமிழர்கள் தோன்றிய பூர்வ நிலம் என்ற வழக்கையே தமிழர் சொந்த பூமியாக ஏற்றுக்கொண்டு, இப்படி தம் சொந்த பூமியிலிருந்து பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்த வரலாற்றை மட்டும் கவனிப்போம்.

சங்கத் தமிழ் சொல்லும் குமரிமுனையிலிருந்து திருவேங்கடம் வரை உள்ள நிலப்பரப்பில் ஆதியில் நிலங்களின் தன்மைக்கு ஏற்ப தமிழர்கள் வாழ்ந்தாலும், தங்கள் நாகரீகத்தை தங்கள் சொந்த பூமியிலிருந்து கொண்டே வளர்த்துக்கொண்டும் மேன்மைப்படுத்திக் கொண்டும் வாழ்ந்தாலும் இன்றைய பாரதத்தில் பிற இடங்களிலும் சங்ககாலம் தொட்டே தங்கள் இனப்பெருக்கத்தைக் கொண்டு சென்றார்கள் என்றே சொல்லலாம். அதே போல இன்றைய தென்னக மொழிகளான கன்னடம், தெலுங்கு, துளு (மலையாளத்தையும் தமிழையும் தற்போதைக்குப் பிரித்துப் பார்க்கவில்லை. காரணம் தமிழின் மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்ட மொழியாக மலையாளம் உள்ளது) ஆகியவைகளில் தமிழின் வழக்கமான அளவில் பேசப்படும் சாதாரணச் சொற்கள் கலந்து மக்கள் வாயால் பேசப்படும்போதுதான் தமிழர்கள் இங்கெல்லாம் குடியேறி இருக்கிறார்கள் என்பது விளங்கும். இந்தச் சொற்களைப் பற்றி அதிகமான அளவில் கட்டுரைகள் வடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, துளு நாட்டிலும் (மேற்குக் கடையோர மங்களூர் உடுப்பி போன்ற இடங்கள்) அதே போல தென் கலிங்கநாட்டில் (இன்றைய வடகிழக்கு ஆந்திரா) மக்களால் பேசப்படும் சாதாரண பேச்சு வழக்கில் கூட தமிழுக்கே தனிப்பட்ட உரிமையான பல சொற்கள் அந்தந்த மொழிகளோடு கலந்து விட்டதையும் அவர்களிடத்தில் நாம் பேசும்போது சாதாரணமாகவே அறியலாம். உதாரணத்துக்காக உயரமான மலைக்குடியேற்றத்துக்காக செல்லும் ஆரம்பப்பகுதியை தமிழில் அடிவாரம் என்றழைப்பது சகஜம்தான். இன்றைக்கும் தென் கலிங்கத்து மலைகளின் கீழ்ப்பகுதியை அடிவாரம் அல்லது அடவிவரம் என்றே அழைக்கிறார்கள். இது உதாரணத்துக்குச் சொல்லப்பட்டதுதான். தமிழர்கள் எந்தந்த சமயங்களில் இப்படி குடியேற்றம் மாறினார்கள் என்பதை சற்று விளக்கமாகக் கவனிக்கலாம்.

தமிழர்கள், பற்பல ஆண்டுகளாகவே கடும்  உழைப்பாளிகளாகத்தான் இருந்ததாக தமிழர் பற்றிய ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன். இன்றைக்கும் கூட கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் கிரானைட் குவாரிகளில் ஏராளமான அளவில் தமிழர் குடும்பங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இன்றைக்கும் கூட கிரானைட் ஏற்றுமதி இந்தியாவிலிருந்து மிக அதிக அளவில் ஐரோப்பிய நாடுகளுக்கும் கீழை ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது என்பதும் அந்த ஏற்றுமதி பெரிய அளவில் நடைபெற தமிழர்கள்தாம் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதும் எத்தனை பேர் அறிந்தார்களோ நாம் அறியோம். (ஒருவேளை பழைய நாளேடுகளில் கொத்தடிமை மீட்கப்பட்டனர் என்ற சிறு செய்திகள் படித்திருப்போருக்கு இவை ஞாபகம் இருக்கவாய்ப்புண்டுதான்.)
தமிழர்கள் மூன்றுவிதமாக செயல்திறன்களில் சிறந்து விளங்கினார்கள். பண்டைய காலத்தில் இரும்பு உற்பத்தி மிக அதிக அளவில் சக்கரக்கோட்டம் (இன்றைய பல்சார் மாவட்டம், சட்டிஸ்கர் மாநிலம்) என்ற நகரத்தைச் சூழந்த காடுகளில் நடைபெற்றது. பதினோராம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலும் மத்தியிலும் இந்த சக்கரகோட்டத்தில் மிகப் பெரிய இரண்டு யுத்தங்கள் நடைபெற்றன. ராஜேந்திர சோழன் காலத்தில் (கி.பி 1012-1042) நடைபெற்ற ஒரு யுத்தம் அங்குள்ள இரும்புச் சுரங்கங்கள் சோழர்கள் வசம் முழுமையாக சிக்குவதற்குக் காரணமாக இருந்தது. இரும்பு என்பது மக்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கமாக அமைந்து விட்ட காலகட்டத்தில் இந்த இரும்புச் சுரங்கங்களை சோழ அரசே தங்கள் வசம் வைத்திருந்ததற்கான பல ஆதாரங்களை சரித்திர ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாகவே கண்டறிந்துள்ளனர். இரும்புச் சுரங்கங்களில் தமிழர்களே வேலை செய்தனர். தமிழர்களே காவல் காத்தனர். ராஜேந்திர சோழனுக்குப் பிறகு குலோத்துங்க சோழன் (கி.பி 1070-1120) காலத்திலும் இந்த இரும்புச் சுரங்கங்களைத் தக்க வைத்துக் கொள்ள இன்னொரு முறை ஒரு யுத்தம் நடந்ததாக  குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியில் ஒரு வரி உள்ளது. ஆனால் காலம் செல்ல செல்ல இந்தச் சுரங்கங்கள் மத்திய இந்தியாவின் உள்ள வேறு பல அரசர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும், பிறகு தில்லி சுல்தான்களின் கட்டுப்பாட்டிலும் வந்து விட்டது. ஆனால் பத்து, பதினோராம் நூற்றாண்டில் குடியேறிய தமிழ்த் தொழிலாளக்குடும்பங்கள் நிலையாக அங்கேயே தங்கள் வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்துள்ளனர். வீரர்களுக்குத்தான் எப்போதுமே இடமாற்றம் உண்டாகுமே தவிர தொழிலாளப் பெருமக்களுக்கு ஏது இடமாற்றம். மேலும் ஒரு தொழிலில் தம் திறமையைக் காண்பிக்க முற்பட்டுவிட்டால், அதன் சிறப்புத் தன்மையால் எந்த இடத்தில் தங்கள் தொழிலைச் செய்கிறோமோ அங்கேயே தங்கிவிடும் பழக்கம் எல்லாக் குடியினரிடத்திலும் உண்டு. இப்படியாக கூட்டம் கூட்டமாக அனுப்பப்பட்ட தமிழ்க்குடும்பங்கள்தாம் இன்றைக்கும் பிஜித்தீவி கரும்புத் தோட்டங்களிலும், மலேஷிய ரப்பர் தோட்டங்களிலும், இலங்கை தேயிலைத் தோட்டங்களிலும் வேர்விட்டு மரமாகி ஆலமாகி நின்று விட்டதை யார்தாம் மறுக்கமுடியும். அதே போலத்தான் அன்றைக்கு சக்கரக்கோட்டக் காடுகளிலும் மேலும் வடக்கே நீண்ட கனிமச் சுரங்களிலும் வேலைக்காகச் சென்ற தமிழர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.

ஆனால் காலம் கொடுமையானது. பின் வந்த காலங்கள் இரும்புக்காக எத்தனையோ போர்களை சந்தித்தன. போர்களை நடத்தியவர்கள் இந்திய சிற்றரசர்கள் மட்டுமல்ல, துருக்கியில் இருந்து வந்து நம்மை ஆண்ட துருக்கர்களும் அதற்குப் பின்னர் வந்த ஐரோப்பியர்களும் கூட. சுரங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் பிழைப்பு அவ்வளவாகப் பாதிக்கப்படாவிட்டாலும் அவர்களது பரம்பரை பழக்கவழக்கங்கள் காலத்தால் மாறுபட ஆரம்பித்தன. இந்தக் கலாசார மாற்றம் தமிழனின் வாழ்க்கை முறையையும், மொழியையும் பாதித்தது என்று கூட சொல்லலாம்.

பீஹார், மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் தமிழ்க்கடவுளான முருகர் வழிபாடுகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. பின்னால் வந்த கதைகள் முருகனை வடநாட்டுக் குமாரசுவாமியாக ஆக்கினாலும் தமிழனின் தலைக் கடவுள் முருகனை என்றும் தமிழர்களின் வாரிசுகள் மறக்கவில்லை என்பதற்கான சான்றுதான் இது. இன்று அவர்கள் அந்த மண்ணின் மைந்தர்களாக மாறிப்போனாலும் முருக வழிபாடு ஒன்றே அவர்களை இன்னமும் தமிழகத்தின் வேரை மிகப் பலமாக அவர்கள் மனதில் ஊன்றியிருக்கிறது என்று சொன்னாலும் மிகை அல்ல.

அதே போல ஆந்திரத்தில் வேறு வகையான நிலையில் தமிழர்கள் குடிபெயர்ந்தனர். கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை ஆந்திரம் முழுவதும் போயர்கள் எனும் மலைவாழ் இனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்த போயர்கள் மிகவும் உன்னத நிலையில் இருந்ததாக அவர்களைப் பற்றிய சரித்திரம் சொல்கிறது. மேலும் இவர்கள் வடநாட்டில் உள்ள காசியில் வேதம் பயின்று, புரிநூல் தரித்து அவர்கள் வேதக் கொள்கைகளை ஏற்று அவைகளை மலைவாழ் மக்களிடம் பரப்புவதற்குக் காரணமாக இருந்தனர். மடிபோயா என்பவர் மடிசர்மா என்று பெயர் மாறியதற்கான ஆதாரங்களும் ஆந்திர சரித்திரத்தில் உள்ளன. ஆனால் எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளில் வந்த சாளுக்கிய வம்சத்தினர் ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து கீழைச் சாளுக்கியம் என ஆந்திரக் கிழக்குப் பகுதியையும் மேலைச் சாளுக்கியம் என இன்றைய மேற்கு ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரத்தின் தென்பகுதியையும் ஆள ஆரம்பித்தனர். இவர்கள் வேத மதத்தை முறையாகப் பரப்ப கோவில்களை அதிகம் கட்ட ஆரம்பித்தனர். 9ஆம் நூற்றாண்டில் ஐந்து பெரும் சிவன் கோவில்கள் ஆந்திரத்தில் எழுப்பப்பட்டு இன்றும் பஞ்சராமம் ஸ்தலங்கள் என்ற பெயருடன் சிறப்பாக போற்றப்படுகின்றன.

சரி, இவை எதற்காக சொல்கிறோம் என்றால் வேதபாடங்கள் சொல்வதற்கு போயர்கள் ஏற்கத்தக்கவர் இல்லை என்று கீழைச் சாளுக்கிய ராஜாக்கள் அந்த இனத்து மக்களோடு யுத்தம் செய்ததாகவும் கலிங்கம் முதல் இன்றைய ஓங்கோல் வரை நீண்ட நாட்களாக நடந்த சண்டைகளில் போயர்கள் வீழ்த்தப்பட்டதையும் ஏகப்பட்ட செப்புப்பட்டயங்கள் பறைசாற்றுகின்றன. இந்த சமயத்தில் தமிழகம் மட்டுமே கல்வி கேள்விகளில் சிறந்து விள்ங்கியதால் கல்வியறிவு பெற்ற வேத விற்பன்னர்கள் பலர் குடும்பம் குடும்பங்களாக ஆந்திர தேசத்துக்கு அனுப்பப்பட்டனர், என்றும் அவர்களுக்குத் தோதாக ஆங்காங்கே கோவிலக்ள் கட்டப்பட்டு அவர்கள் பராமரிப்பில் நிலங்கள் நிவந்தமாகவும் விடப்பட்டதற்கு செப்புப்பட்டயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.. இன்றைய குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டண  மாவட்டங்களில் இந்தத் தமிழ் அந்தணர்கள் குடியேற்றம் நடந்ததையும் குலோத்துங்கனின் செப்புப் பட்டயம் உறுதி செய்கிறது. காஞ்சி பரமாச்சாரியார் தனது தெய்வத்தின் குரல் புத்தகத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, இவர்கள் வடநாட்டைச் சேர்ந்த அந்தணர்கள் இல்லை என்றும் சாமவேதம் கற்ற தமிழ் அந்தணர்கள்தாம் என்றும் உறுதி செய்கின்றார். இன்றைக்கும் இந்தத் தமிழர்கள் தங்கள் குடிப்பெயராக ’திராவிட’ என்ற பெயரை வைத்துக்கொண்டுள்ளார்கள். தமிழை திராவிடமொழி என்று வடநாட்டார் பல்லாண்டுகளாக எழுதி வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த திராவிட குடும்பத்தார் பல்லாயிரக்கணக்கில் ஆந்திராவில் இருந்தும், தம் முன்னோர் அனைவரும் தமிழர்களே என அறிந்தும் தம் மொழியை மட்டும் மறந்துபோயினர்.. இன்று அதற்காக வருத்தப்படும் பல குடும்பங்கள் இங்கு உள்ளன என்றாலும் காலம் எனும் காலன் செய்த கோலம் இது என்று சொல்லலாமா அல்லது முன்னோர்கள் முயலாததால்  காலத்தின் மாற்றத்தில் தமிழ்மொழியை நழுவவிட்டக் கொடுமையை என்று நம் முன்னோர்கள் மீது பழியைப் போடுவோமா?
அதே போல வைணவத்தைப் பரப்புவதற்காக நாதமுனி எனும் வைணவப்பெரியார் – 10ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர், இவர் வைணவமதத்தின் ஆதி குரு எனப்போற்றப்ப்படுபவர். அவர் வைணவ மதத்தைத் தனிப்பட்ட வகையில் பரப்புவதற்காக பல வைணவக் குடும்பங்களை தமிழகத்திலிருந்து ஆந்திரா முழுவதும் அனுப்பி வைத்தார். இப்படி ஒரு வைணவக் குடும்பத்துக்கு நிலம் நிவந்தம செய்யப்பட்டதற்கான இன்றைய பிரகாசம் மாவட்டம் காரம்சேடு வேணுகோபாலசுவாமி கோயிலில் கல்வெட்டுக் குறிப்பு ஒன்று எடுத்துக் காட்டுகிறது, இன்றும் ஆந்திரத்தின் கடைக்கோடியில் உள்ள ஸ்ரீகூர்மம், சிம்மாசலம் கோயில்களில் கூட இந்த வைணவக்குடும்பங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவர்களால் தமிழ் பேசமுடியவில்லை என்றாலும், கோயில்களில் தமிழ்ப்பிரபந்தங்கள் பாடுவதை வழக்கத்தில் இன்னமும் வைத்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதே போல ஜெயங்கொண்டார் தான் பாடிய கலிங்கத்துப் பரணியில் இன்றைய ஒடிஷா-ஆந்திர எல்லையில் தமிழ்வீரர்கள் கலிங்கத்தோடு நடைபெற்ற போரில் வெற்றி கிடைத்ததும், கலிங்க வீரர்களைத் தேடித் தேடிப் பிடிக்கையில் கலிங்க வீரர்கள் மாறு வேடம் பூண்டு தாம் புத்தர்கள், தாம் தெலுங்கர்கள், தாம் அரவமொழி பேசும் தமிழர்கள் என்று சொல்லித் தப்பித்தனராம். அரவம் என்றால் தமிழ்மொழி என்பதும் அவர்கள் அந்த மண்ணின் மைந்தராக மாறினாலும் அரவமொழியைப் பேசியதால் அரவர்கள் என்றே அழைக்கப்பட்டதாக அந்தச் செய்தி சொல்கிறது. இது பதினொன்றாம் நூற்றாண்டுச் செய்தியாகும்.

வடநாடுகளில் தமிழர் குடியேற்றம் பல நூறாண்டுகளாகவே வணிக நிமித்தமாக நடைபெற்று வந்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கன்னோசி நகரத்துக்கு ராஜேந்திர சோழர் காலத்தில் சில சிங்களக்குடும்பங்களும், தமிழ்க்குடும்பங்களும் அனுப்பப்பட்டன என்று இலங்கை மஹாவம்சத்தினர் எழுதியுள்ளார்கள். இதற்கு ஆதாரத்தகவல்கள் சோழநாட்டில் உண்டு. ராஜேந்திரர் இலங்கையை முழுவதும் தங்கள் ஆட்சியில் கொண்டு வந்த போது, இலங்கைக்கு கன்னோசி மன்னர் உதவியதாகக் கல்வெட்டுச் செய்திகள் உள்ளன.  இன்றைக்கும் தமிழே அறியாத பீஹார் தமிழர்கள் பாடலிபுத்திரம் என்கிற பாட்னாவிலும் ராஞ்சியிலும் ஏராளமான அளவில் வசித்து வருகிறார்கள்.
வணிகர்கள் குடியேறுவது என்பது காலம் காலமாக நடைபெறும் நிகழ்ச்சிகள்தான். தமிழ் வணிகர்கள் ஆந்திரத்தின் வடபகுதியில் குடும்பஙளோடு வசித்ததையும், அப்படி ஒரு குடும்பம் சிம்மாசலம் கோயிலுக்காக ஒரு பெரு நிலத்தில் தோட்டத்தை வளர்த்து, அந்த நந்தவனத்தை நிவந்தமாக (தானம்) அளித்ததையும் ஒரு தமிழ்க்கல்வெட்டு பேசுகிறது. எங்கோ ஆந்திராவில் வடகோடியில் உள்ள இந்தக் கோயில் பற்றிய முதல் கல்வெட்டு கூட தமிழ்தான் என்பது ஆச்சரியமான விஷயம்தானே. அத்தோடு பெருநிலம் ஒன்றினை ஒரு தமிழ் வணிகன் தானம் செய்தான் என்றால் அவன் இன்னும் எத்தனை பெரிய இடங்களை அந்தச் சமயத்தில் தன் வசத்தில் வைத்திருந்தானோ.. அவனைப் போல பல தமிழ் வணிகர்களும் அங்கு இருந்ததாக திரு பி.சுந்தரம், ஆந்திர பல்கலைக் கழகப் பேராசிரியர் 1963 இல் ‘தி ஹிண்டு’ பத்திரிகையில் ஒரு பெரிய கட்டுரையாகவே வடித்திருக்கிறார்.

தமிழர் குடியேற்றம் குழுமங்களாகத்தான் நடைபெற்றன. இந்தக் குழுமங்கள் வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில் சங்கங்கள் வைத்து தங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்துக்கொண்டதற்கான உதாரணங்கள் வெகுவாக நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில் தமிழ் வணிகர்கள் கடல்கடந்த வெளிநாடுகளில் எண்பேராயம், ஐந்நூற்றவர் என்று தங்கள் சமூகத்துக்காகவே சங்கங்கள் அமைத்தவை பற்றிய கல்வெட்டுச் சான்றுகள் அந்தந்த நாடுகளில் கிடைத்துள்ளன. இந்தியத் திருநாட்டில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் உள்ள சங்கங்களைப் பற்றிய பழைய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் இன்றைய பெரிய நகரங்களில் உள்ள தமிழர்கள் எப்போதுமே சங்கம் வைத்துக் கொண்டு காலத்துக்கு ஏதுவாக செயல்பட்டது தெரியவருகிறது.

ஆனாலும் இப்படி பழையகாலத்தில் குடியேறிய தமிழ் மக்கள் தங்கள் வாரிசுகளைப் பற்றியோ, அவர்களுக்கு மொழிப்பற்று கொடுக்காமல் மறைந்தது பற்றியோ நாம் இனியும் பேசிக் கொண்டிராமல் தற்காலத்தில் இப்படி குடியேறும் தமிழ்க் குடும்பங்கள் மறவாமல் தம் பிள்ளைகளுக்கு தேனினும் இனிய தமிழறிவை எப்பாடுபட்டாவது புகட்டவேண்டும். அன்று அப்படிக் குடியேறிய தமிழர்கள் செய்த பிழையை நாமும் செய்யலாமா.. இன்று முனோர்களைச் சுட்டிக்காட்டி தவறு செய்துவிட்டார்களே என்று நாம் சுமத்தும் அவப்பெயர் நாளைய இளையதலைமுறையினரால் நமக்கும் ஏற்படக்கூடாது அல்லவா..

நாவுக்கினிய நம் இனிய தமிழ் மொழியை நம் செல்வங்களுக்குத் தந்து நாம் பெருமை கொள்வோம். இதை இந்தப் புத்தாண்டு உறுதிமொழியாக ஒவ்வொரு தமிழ்க்குடியின் தலைவனும் தலைவியும் மேற்கொண்டால் அதுவே அவர்கள் தம் வாழ்நாளில் மொழிக்குச் செய்த பெரும் சேவையாகும்..

2 comments:

  1. ஈற்றடிக்கு தமிழ் சம்பிரதாயமாக நெடுஞ்சாங்கிடையாக விழுந்து தொழுத பின்னர், இந்த அருமையான வரலாற்றுக்கட்டுரையை வரவேற்கிறேன் வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் ஒரு வரி.

    Sir William Sleeman, famous for his disciplining the Thugs (plunderers) speaks of a Chettiyar's cheque being honored in some remote north indian village. I cannot cite the authority as my notes in a different laptop got reformatted.
    Happy New year 2014 to you, Vizag Surya

    ReplyDelete
  2. ஆந்திர பிரதேசம்,தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை விவரம் யாவை?

    ReplyDelete