Tuesday, December 31, 2013

ஜபம் - பார்வதி ராமச்சந்திரன்


கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியில், மன அமைதி என்பது பலருக்கும் கிட்டாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்தப் புனித பாரத மண்ணில் தோன்றிய ஞானியரும், யோகியரும், மஹான்களும், மன அமைதி, நிம்மதி மட்டுமல்லாது, இறைவனின் சந்நிதியையும் சாயுஜ்யத்தையும் அருளும் மிக எளிமையானதொரு வழியை, நமக்குக் காட்டிச் சென்றுள்ளனர். அற்புதமான மார்க்கம் அது. 'ஜபம்' என்ற இந்த ஒற்றை வார்த்தையின் பொருளை முழுமையாகப் புரிந்து கொண்டு, பயன்படுத்துபவர் நிச்சயம் பேறு பெற்றவர்களே!! இது சாமானியர்களும் மனிதப் பிறவியின் பயனை அடைவதற்காக அருளப்பட்ட உன்னத சாதனம்.

பொதுவாகவே ஒலி வடிவங்கள் ஒருவரது மனதிலும் வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் திறனுடையவை. நேர்மறை மற்றும் எதிர்மறையான  சொற்கள் ஏற்படுத்தும் பாதிப்பு விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கபட்ட ஒன்று. இசையின் மகத்துவம் அறியாதவர் யார்?. இறை நாமம் அல்லது மந்திரம் சொல்வது, நம் உடலில் நேர்மறையான விளைவுகளைத் தரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

ஜபம் என்றால் என்ன என்பது பற்றிய ஒரு சின்ன விளக்கம். இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை அல்லது  மந்திரத்தை திரும்பத் திரும்பச் சொல்வதே ஜபம்.
 மனதுக்குள் இதைச் செய்வது மானசீக ஜபம் என்றும், தனக்கு மட்டுமே கேட்கும்படி மிக மெதுவாக இதைச் செய்வது 'உபாம்சு' என்றும் பிறருக்குக் கேட்கும்படியான ஜபம், 'உச்சாடனம்' என்றும் கூறப்படுகிறது. லிகித ஜபம் என்பது, நம் இஷ்டதெய்வத்தின் திருநாமத்தை எழுத்தால் எழுதுவது. எழுதும் போது, மௌனம் அனுசரிப்பதும், முழு மன ஈடுபாட்டுடன் செய்வதும் மிக முக்கியம்.

இதில் இறைவனின் திருநாமத்தைச் சொல்வது 'நாம ஜபம்'. குறிப்பாக, ஒரு தெய்வத்துக்கு உரிய மந்திரத்தை, முறையாக, குருவிடம் இருந்து உபதேசம் பெற்று, அவர் காட்டிய வழியில் ஜபிப்பது 'மந்திர ஜபம்'. நாம ஜபத்திற்கு கட்டாயமான நியமங்கள் அவசியமில்லை.   ஆனால், மந்திர ஜபத்திற்கென்று நியமங்கள் உண்டு.

ஜபமானது, யோகத்தில் ஓர் அங்கமாதலால் ஜபயோகம் என்றே அழைக்கப்படுகின்றது. மிக நீண்ட நேரம், பலரால் சேர்ந்து செய்யப்படும் ஜபம், 'ஜபயக்ஞம்' என்று அழைக்கப்படுகின்றது. ஸ்ரீமத் பகவத் கீதையில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, 'யக்ஞங்களில் நான்  ஜப யக்ஞமாக இருக்கிறேன்'  (யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி ) என்று அருளுகிறார்.
சுவாமி சிவானந்தர், 'பகவானையும், பக்தனையும் இணைக்கும் பாலமே ஜபம்' என்கிறார்.

ஜபம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை விவரித்துச் சொல்ல ஒரு ஆயுள் போதாது!!!.  மனம் ஒருமுகப்படுதல் என்பது ஒவ்வொரு செயலின் வெற்றிக்கும் இன்றியமையாதது. அதுவும் ஆன்மீகப் பாதையில் செல்ல விழைவோருக்கு மனமே மூலதனம். ஸ்ரீசாரதா தேவியார், 'ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு, ஒருவரது மனமே அவருக்கு அருள் புரிவதாக இருக்க வேண்டும்' என்று அருளுகிறார். தியானம், தவம், யோகம் அனைத்தும், தூய மனம் வாய்த்தோருக்கு மட்டுமே தனக்கான பாதைகளைத் திறந்து விடுகின்றன. மனம் தூய்மைப்படுவதற்கு, ஒருமைப்பட்ட மனதோடு ஜபம் செய்வது அவசியம்.
தியானம், முதலில் ஜபத்தோடு கூடியதாகச் செய்யப்படுகின்றது. அதன் பின், மெல்ல மெல்ல ஜபம் தானே நின்று, தியான நிலை, நிலைபெறுகிறது.
ஆன்மீக வாழ்வு என்பது இவ்வுலக வாழ்வுக்குப் புறம்பானதன்று. தீவிரமான ஒரு எண்ணமோ சிந்தனையோ மனதில் எழுமாயின், மனம் திரும்பத் திரும்ப அதிலேயே அலைபாயாது நிலைபெற்றிருக்கும். அதைப் போல, இயல்பாகவே அலைபாயும் மனது, இறைநாமத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வதால்,   மெல்ல மெல்ல அடங்கி, ஒரு புள்ளியில் ஒடுங்குகிறது. மனதில் தோன்றும் எண்ணங்கள், செயல்கள் அனைத்தையும் மனம் உற்று நோக்கத் துவங்குகிறது. இதன் காரணமாக, எண்ணங்கள், செயல்பாடுகள் இவற்றில் ஒரு ஒழுங்குமுறை செயல்படுத்தப்படுகின்றது. அநாவசியமான எண்ணங்களோ, செயல்பாடுகளோ நிகழ்வதில்லை. சாந்தமான, தூய மனமானது, தன்னைச் சுற்றியுள்ள அனைத்திலும் நேர்மறை சக்தியை வியாபிக்கச் செய்கிறது. இதன்  மிக உச்ச நிலையில், 'தன்னையறிதல்' மிக இயல்பாக நிகழ்கிறது.
தொடர்ந்த ஜபம், ஒருவர், தமது உலகக் கடமைகளை, எவ்விதப் பற்றுதலுமின்றி, அமைதியான முறையில் நிறைவேற்ற நிச்சயம் உதவுகிறது.
நெருப்புக்கு எப்படி தன்னைச் சார்ந்தவற்றை எரிக்கும் தன்மை இருக்கிறதோ அப்படியே இறை திருநாமங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லுதலுக்கும் ஒருவரது பாவங்களை, கர்ம வினைகளை பஸ்மமாக்கும் தன்மை இருக்கிறது.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், " தெரிந்தோ, தெரியாமலோ, தன்னறிவுடனோ, அறிவில்லாமலேயோ எந்த ஸ்திதியிலாகட்டும், ஒருவன் பகவந்நாமத்தை சொல்வானானால் அவனுக்கு அதன் பலன் கிட்டும். தானாகவே விரும்பி ஆற்றுக்குப் போய்க் குளிப்பவனுக்கும், வேறொருவனால் ஆற்றில் தள்ளப்படுபவனுக்கும் அல்லது தூங்கும்போது வேறொருவன் கொட்டிய தண்ணீரில் நனைபவனுக்கும் ஸ்நான பலன் ஒருங்கே ஏற்படுகிறது அல்லவா?" என்று நாம ஜபத்தின் மகிமையைச் சொல்கிறார்.
ஜபம் செய்வோர், அது நாம ஜபமாயினும் சரி,மந்திர ஜபமாயினும் சரி, தமக்கு மட்டுமல்லாது பிரபஞ்சத்துக்கே நன்மை செய்பவர்களாகிறார்கள். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், 'பணம் இருப்பவர், பணத்தின் மூலம் சேவை செய்யட்டும், இல்லாதவர், ஜப தவங்களின் மூலம் சேவை செய்யட்டும்' என்று அருளியிருக்கிறார்.   ஒருவர் தொடர்ந்து ஜபம் செய்யும் போது, அந்த ஜபமானது, மிக அற்புதமான அதிர்வலைகளை அவரிடத்திலிருந்து வெளிப்படச்செய்து, அவரைச் சுற்றிலும் தெய்வீகமான, அவரைக் காண்பவருக்கு அமைதியை ஏற்படுத்தும் ஒரு சூழலை உருவாக்குகிறது.
ஸ்ரீமத் பாகவதம் கூறும் அஜாமிள சரிதமும், இறைநாமம் சொல்லுதலின் மகிமையையே பேசுகிறது. இறக்கும் தருவாயில், தன் குழந்தையின் பெயரை, 'நாராயணா' என்று உச்சரித்தவாறே இறந்ததால், அஜாமிளனுக்கு அவன் கர்மவினைகளிலிருந்து விடுதலை கிடைத்தது. ஒரு  முறை , இறைநாமத்தை உச்சரித்ததற்கே இத்தகைய பலன் என்றால், ஜபத்தின் மகிமையை நாம் தெளிவாக அறியலாம்.
'மரா, மரா' என்று உச்சரிக்க ஆரம்பித்த வேடன், வால்மீகி முனிவரானது  இறைநாமத்தின் மகிமையை விளக்கும்  ஒரு உதாரணம்!!..
காஞ்சி ஸ்ரீபரமாச்சாரியாரின் திவ்ய சரிதம், ஜபத்தின் மகிமையை விளக்கும் ஒரு நிகழ்வை எடுத்துக் காட்டுகிறது. மாங்காடு ஸ்ரீகாமாட்சி அம்மனின் ஆலயம் பெரும் சிறப்பு வாய்ந்ததாக இருந்த போதிலும், ஸ்ரீஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மஹா தெய்வீக சக்திகள் வாய்ந்த ஓர் அர்த்த மேருவுடன் கூடியதாக இருந்த போதிலும், அங்கு, அந்த நற்பலன்களை அடைய வருவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. ஆலயத்தின் பரம்பரை அர்ச்சகராகிய மறைதிரு. ஏகாம்பர சிவாச்சாரியார், ஸ்ரீமஹாபெரியவரின் ஆலோசனைப்படி, ஆலயத்தினுள் தீவிரமான ஜப யோக சாதனையில் ஈடுபடலானார். இன்று ஸ்ரீமாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம், கோடிக்கணக்கான பக்தர்களால்  கொண்டாடப்படும்  தலமாகத் திகழ்கிறது. இந்த நிகழ்வு, ஆசுகவி வேலனாரின், 'மாங்காடு காமாட்சி மகிமை' நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இறைநாமத்தைச் சொல்வது மட்டுமல்ல, யாரேனும் சொல்வதைக் கேட்பதாலேயே ஒருவர் தமது கர்மவினைகளிலிருந்து விடுபடுகிறார். இதை விளக்கும் ஒரு கதை பிருஹதாரணிய புராணத்திலிருந்து..
பிங்களா என்னும் பெண், முறையற்ற வாழ்வு வாழ்ந்து வந்தாள். ஒரு நாள், ஒரு திருடன், தான் திருடிய ஒரு கிளியை அவளுக்குப் பரிசளித்தான். அந்தக் கிளி, ஒரு பக்தரின் வீட்டில் வளர்ந்து வந்த கிளி. அது,'ராம ராம' என்று சொல்லப் பழகியிருந்தது. இடைவிடாது, தன் ராம நாம ஜபத்தால் அந்த இல்லத்தையும் பிங்களையையும் புனிதப்படுத்தியது அந்தக் கிளி. இறைநாமத்தின் மகிமையை அறியாதவளாயினும், தன்னை அறியாமல், தன் பாவங்களிலிருந்து விடுதலை அடைந்தாள் பிங்களை.
 “எல்லாம் சரி!!!... நாம ஜபத்தின் மகிமை அளப்பரியது. மனதைத் தூய்மைப்படுத்தி, கர்ம வினைத் தளைகளிலிருந்து விடுபட உதவுகிறது. அமைதியான முறையில் நம் கடமைகளைச் செய்தவாறே, இவ்வுலகப் பிரச்னைகளினூடாக நம் வாழ்க்கைப் படகைச் செலுத்த உதவுகிறது. ஆனால் நேரம் வேண்டுமே!!!” என்பவர்களுக்கு, அன்னை ஸ்ரீசாரதா தேவியாரின் ஒரு அமுத வாக்கே நல்லதொரு பதிலாக இருக்குமென்று நினைக்கிறேன்.
ஒரு முறை, அன்னையின் ஜபத்திற்கான நேரம் குறித்து, சுவாமி மாதவானந்தர் அன்னையிடம் கேட்ட போது, அன்னை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்..
'என்ன செய்வது மகனே!. நாங்கள் பெண்கள். வீட்டு வேலைகள் எப்போதும் இருக்கின்றன. இவற்றை விடுத்துத் தனியாக ஜபம் செய்ய முடியாதே!.  சமைப்பதற்காக உலை வைக்கிறேன். அரிசி கொதித்து சாதம் ஆகும் வரை ஜபம் செய்கிறேன். பிறகு குழம்பு தயாரிக்க வேண்டும். அது பதமாகும் வரை மீண்டும் ஜபம் செய்கிறேன். சமையல் முடிந்ததும் மீண்டும் ஜபம் செய்கிறேன். இவ்வளவு தான் என்னால் செய்ய முடியும். நான் வேறு பெரிதாக என்ன ஆன்மீக சாதனை செய்துவிட  முடியும்?' என்ற அன்னையின் மொழிகளே 'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு'  என்பதை  அழகாக விளக்குகிறது.
தினம் மிகக் குறைந்த அளவு, மிகக் குறைந்த நேரத்தில் செய்யப்படும் ஜபத்தின் மகிமையை, எவ்வளவு சொன்னாலும் அனுபவத்தின்  மூலமே உணர முடியும். நம் தினசரிக் கடமைகளுள் ஒன்றாக ஜபம் செய்வதைச் சேர்க்க‌ முடியுமெனில், நமக்குள்ளும் அற்புதங்களை உணரலாம்!!!
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!


3 comments:

  1. தெளிவான விளக்கங்கள். ஜபம் எல்லா சமயங்களிலும் முக்கிய ஸ்தானம் வகிக்கிறது.
    'ஓம்' என்று உரைச்சாச்சு என்பார் மஹாகவி. இஸ்லாமியரின் வைகறை 'அல்லாஹூ அக்பர்' செவிக்கு அமுதம். தொழுகை முடிந்துவுடன், 'துவா' பெற்றுக்கொள்ள இந்துக்கள் நிற்பர். இன்றளவும் கிரகேரியன் சேண்ட் என்ற கிருத்துவ ஜபம் என்னை ஆழ்த்துகிறது. 'புத்தம் சரணம் கச்சாமி' என்றாலே மனம் அங்கே போய்விடுகிறது. சமணமும் அப்படியே. சீக்கியர்களின் 'க்ரந்த சாஹேப்' கேட்டிருக்குறீர்களோ? மனம் உருகும்.
    வாழ்த்துக்கக்கள், பார்வதி.
    இன்னம்பூரான்

    ReplyDelete
  2. என் கட்டுரையை வெளியிட்ட திருமதி.சுபா அவர்களுக்கும், மின் தமிழுக்கும் மனமார்ந்த நன்றி..

    அன்பார்ந்த திரு.இன்னம்பூரான் ஐயா, தங்களது உற்சாகமூட்டும் வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

    ReplyDelete
  3. very good article Mrs. Parvathi ramachandran

    ReplyDelete