Monday, December 30, 2013

இரண்டு திருக்குறட்பாக்களுக்கான புதிய சிந்தனைகள்

கி.காளைராசன்

தெய்வந் தொழாள்? 
(புதிய சிந்தனை)

ஐயன் திருவள்ளுவர் ‘வாழ்க்கைத் துணைநலம்‘ என்ற அதிகாரத்தில்
“தெய்வந்  தொழாஅள்  கொழுநற்  றொழுதெழுவாள்
பெய்யெனப்  பெய்யும்  மழை“ (55)
என்று குறள் கூறியுள்ளார்.

கணவனை வணங்கும் குணமுடைய பெண், கணவனுக்கும் மேலான தெய்வத்தை வணங்காததற்கான காரணம் என்ன?  என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

இக்குறளுக்கு,
தெய்வம் தொழா அள் = தெய்வத்தை வணங்க மாட்டாள்
கொழுநன் தொழுது எழுவாள் = கணவனை வணங்கி எழுந்திருப்பாள்
பெய் எனப் பெய்யும் மழை = மழை பெய்யவேண்டும்  என்று   சொன்னால் மழை பெய்யும்

“தெய்வத்தை வணங்கமாட்டாள், கணவனைத் தொழுது எழுவாள், அவள் ‘பெய்‘என்று சொன்னால் மழை பெய்யும்“ என்பது பொருள்.

பொழுது = அதிகாலை
இடம் = இல்லம்

இவள் ஏன் தெய்வத்தை வணங்கவில்லை? என்பதற்கான காரணத்தை மட்டும் ஒவ்வொரு உரையாசிரியரும்  ஒவ்வொருவிதமாக விளக்கம் கூறியுள்ளனர்.

1) தெய்வத்திற்குப் பதிலாகத் தினந்தினம் காலையில் கணவனை வணங்கி எழுந்திருப்பாள் என்றும்,
2) கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடுவாள் என்றும்,
3) வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் என்றும்,
4) பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி என்றும்,
5) பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் என்றும்
6) தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதுபவள் என்றும்
விளக்கம் கூறியுள்ளனர்.

ஆனால், தெய்வத்திற்குப் பதிலாகக் கணவனை ஏன் வணங்க வேண்டும்?
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கை விட மேலானதாக ஏன் கருத வேண்டும்?
என்பதற்கான காரணத்தை உரையாசிரியர்கள் குறிப்பிடவில்லை.


ஒரு பெண் தெய்வத்தை வணங்கமாட்டாள் என்று திருவள்ளுவரா குறிப்பிடுகிறார்?  இவ்வாறு வள்ளுவன் சொன்னால், எந்தப் பெண்ணும் எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கமாட்டார்களே?

புதிய சிந்தனை
இக் குறளில்,
தெய்வம், பெண், கொழுநன், மழை என்ற பெயர்ச் சொற்களும்,
தொழுதல், எழுதல், பெய்தல் என்ற வினைச் சொற்களும் பயன் படுத்தப் பெற்றுள்ளன.


‘எழுவாள்‘ என்று வினைமுற்று உள்ளதால், இப்பெண் எழுவதற்கு முன் துயில் நீங்கி எழுந்துள்ளாள் என்பது பொருள். துயில் எழுந்த இந்தப் பெண், தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுதுள்ளாள்.
எனவே இவள் அருகிலேயே கணவன் துயில்கொண்டுள்ளான் என்பதும் பொருள். எனவே, இந்தப் பெண் தூங்கி எழுவதற்கு முன்பாகக் கணவனுடன் சேர்ந்து படுத்துள்ளாள் என்பதும் பொருளாகிறது.

இரவில் கணவனுடன் சேர்ந்து படுத்துத் தூங்கிய பெண் காலையில் எழும்போது தன்னுடைய உடற்தூய்மை கருதித் தெய்வத்தைத்   தொழமுடியாத நிலையில் இருப்பாள். எனவே, தெய்வத்திற்கு அடுத்தநிலையில் உள்ள தன் கணவனைத் தொழுது எழுவாள்.  கணவனைத் தொழுது எழும் இப் பெண்ணின் வயிற்றில் ஓர் உயிர் தோன்றி வளர்கின்றன காரணத்தினால், உலகில் தோன்றியுள்ள  உயிர்கள் எல்லாம் வளர்வதற்குக் காரணமான மழையானது இவளது வேண்டுகோளுக்கு இரங்கும் என்பது பொருளாகிறது.


குறளுக்கான உரை

இரவில் கணவனுடன் ஒன்றாய்ச் சேர்ந்து படுத்திருந்த பெண்ணானவள், காலையில் எழுந்திருக்கும் போது,  அவளது உடற்தூய்மை கருதித் தெய்வத்தை வணங்காமல், தனது கணவனை வணங்கி எழுகின்றாள்.  உலகில் தோன்றியுள்ள
உள்ள உயிர்கள் எல்லாம் வளர்ந்து நன்கு வாழ்வதற்குக் காரணமானது மழை.  இம்மழையானது, இவள் வயிற்றில் தோன்றியுள்ள உயிரும் நன்கு வளர்ந்து வாழும் பொருட்டு, இப் பெண்ணின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பெய்யும் என்பது கருத்து.

புத்தாண்டில் புதிய சிந்தனைகள் பிறக்கட்டும்.
வள்ளுவன் வகுத்த வழியில் வாழ்ந்திடுவோம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


அன்பன்
கி.காளைராசன்
-------------------------
(கற்புக்கரசி கண்ணகி கோவலனுடன் சேர்ந்திருக்காத காரணத்தினால் மழையை வேண்டவில்லை.  மாறாக  அவள் அழைத்தவுடன் அக்கினி வந்தது என்பதும், தனித்திருக்கும் பெண்தெய்வங்களின் ஜடாமுடியானது அக்கினி வடிவத்தில் இருப்பதும் சிந்தனைக்கு உரியன)

வாசிக்கப் பெற்றவை

“தெய்வந்  தொழாஅள்  கொழுநற்  றொழுதெழுவாள்
பெய்யெனப்  பெய்யும்  மழை“ (55)

கலைஞர் உரை:
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.

மு.வ உரை:
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.

சாலமன் பாப்பையா உரை:
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

பரிமேலழகர் உரை:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது,  'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை:
தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

Translation:
No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word!.
Explanation:
If she, who does not worship God, but who rising worships her husband, say,  "let it rain," it will rain.
----------------------------

வாசிக்கப்பெற்ற குறள்கள்

தெய்வம் 43, 45, 50, 55, 619, 702, 1023

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை (43)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும் (50)

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (55)

தெய்வத்தா னாகா  தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (619)

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வ
மடிதற்றுத் தான்முந் துறும்  (1023)


தொழுதல் 55, 260, 268, 828, 970, 1033

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும் (260)

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும் (268)

தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா
ரழுதகண் ணீரு மனைத்து (828)

இளிவரின் வாழாத மான முடையா
ரொளிதொழு தேத்து முலகு (970)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர் (1239)


மழை  12, 15,  55,  1239

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை  (12)

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉ மெல்லா மழை (15)

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண் (1239)

3 comments:

  1. காளை! இனி எமக்கு நீ நந்தியாகத் தான் தென்படுகிறாய். அருமையான, தெளிவான, கட்டுமானத்துடன் நடை போடும் கட்டுரை. 2014 வாழ்த்துக்கள்.
    இன்னம்பூரான்

    பி.கு. கலவியையும், மாதவிடாய்யையும், அவை இயற்கைக்கு ஓத்தவை என்பதால், நான் அவற்றை என்றுமே தூய்மையற்றதாக கருதவில்லை. விளக்கமொன்று உண்டு. பின்னர்.

    ReplyDelete
  2. எனது கருத்தோட்டம் இது :

    தெய்வத்தைத் தொழாமல், கணவனைத் தினமும் தொழுது எழுகின்ற மனைவி பெய்யென்று சொன்ன வுடன் மழை பெய்துவிடும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதி யிருப்பது, அக்கால இல்லங் களில் ஆட்சி செய்து வந்த ஆணாதிக்க வர்க்கத்தின் விதிகளையும், வரலாற்றையும் காட்டுகிறது! எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப் பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார்.

    வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி, கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத் தவறு மில்லை! தெய்வம் தொழாள் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. அந்தக் காலத்துப் பெண்டிரின் அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே, வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி யிருக்கிறார்! கணவனைத் தினமும் தொழுகின்ற பெண், பெய்யென்றால் மழை மெய்யாகப் பெய்யாதென்று மேதை வள்ளுவருக்குத் தெரியாதா என்ன ?

    சி. ஜெயபாரதன்

    ReplyDelete
  3. வாழ்க ஐயா
    பெய்யென்றால் பெய்யும் மழை என்பது கற்பனை / கவிதை கலந்த ஒன்று.. குறளில் ஐயன் பெரும்பாலும் நடைமுறையையே சொல்லி இருக்கிறான் .. கற்புடையப் பெண்கள் ‘ உலகுக்கே அமுதாகும் வான் மழையைப் போன்று’
    என்றுதான் ஐயன் சொல்லி இருப்பதாகக் கருதுகிறேன் ..

    மேலும் ‘குளியல்’ சம்பந்தமான பொருள் கொஞ்சம் அதீத சிந்தனைதான் :))

    வாழ்க .. வணக்கம்

    ReplyDelete