ஆதியில் அவள்
இப்படித்தான் இருந்தாள்
காதலும் காமமும்
இயல்பாய் இருந்தன அப்போது
இடையில் வந்தது ஆடை
அணிகலப்பின்னலில் பிணைக்கப்பட்ட
அவளும் அடிமையானள்
கண்டுபிடிக்கப்பட்ட
கடவுள் சாத்தானின் முன்
தன் நிலையை இழந்தாள்
போர்த்தப்பட்ட நாகரீகப் போர்வையில்
பொதிந்து கிடந்த
நிர்வாண வனப்பு
அமிழ்ந்தே போயிற்று
காதலும் காமமும்
விரசத்துக்குத் தள்ளப்பட்டன
ரத்தக்கவுச்சி நிறைந்த
தொடர் நினைவுகளை
உதறி எறிய விழைந்தாலும்
என்றும் அவள் நினைவினில்
ஆதி மனித வேட்கை
கூட்டை உடைத்து வெளியேறும் கூட்டுப்புழு
பலவண்ணச் சிறகுகளுடன் வெளிப்படுவதாய்
சட்டென நிகழ்ந்ததொரு
வளர்சிதை மாற்றத்தில்
அனைத்தையும் உதறியெறிந்து வெளியேறினாள்
காதலுக்கும் காமத்துக்கும்
புதுவீச்சினை
அளிக்க விரைந்தெழுகிறாள்
எதுவும் இல்லை
அவளின் கவனத்தில்
இப்போது இலக்கு
அவன் அவன் அவன் மட்டுமே
ஜென்மாந்திரங்கள் கடந்தும்
யுகம் யுகமாய்
அவள் சீரான பாதங்களை
எடுத்து எடுத்து வைத்து
பயணித்துக்கொண்டே இருக்கிறாள்
அவனை நோக்கி
அங்கிருந்து அவனும்
பயணித்துக்கொண்டே இருக்கிறான்
இவளை நோக்கியே
பயணம் ஓர் நேர்புள்ளியில்
இணையும் போது
இருவரும் இவ்வுலகில் நிறுவுவார்கள்
காமத்தின் மேன்மையை
அன்புடன்
மதுமிதா
21.06.2012
குறிப்பு: பேஸ்புக்கில் சித்தன் ப்ரசாத் வரைந்து போஸ்ட் செய்த இந்த ஓவியத்தை சாக்காக வைத்து எழுதப்பட்ட கவிதை இது
அன்பின் மதுமிதா,
ReplyDeleteசிந்திக்கச்செய்த சிறந்த படைப்பு! வாழ்த்துகள்.
அன்புடன்
பவளா