Tuesday, October 22, 2013

அலர்மேல் மங்கை அந்தாதி - காப்பியக் கவிஞர் நா.மீனவன்

காப்புச் செய்யுள்
                                   
கலைமலி  கனகச்  செம்பொன்  கதிரவன் ஒளியை  வெல்லும்
நிலைமலி  மாட  கூடம்  நிறைந்தொளிர்  வேங்க  டத்தான்
தலைவியாம்  அலர்மேல்  மங்கை  தன்புகழ்  ஓதும்  பாடல்
நலமுற  அருளை வேண்டி நாரணற்  போற்றி  னேனே.


நூல்

1.
பொன்மகள்  திகழு  மார்பன்  பூமகள்  தழுவு  கேள்வன்
தன்னடி  போற்று  வார்க்குத்  தண்ணருள்  ஈயும்  வள்ளல்
தன்னவள்  என்று  கொண்ட  தாயினும்  இனிய  நங்கை
அன்னவள்  அலர்மேல்  மங்கை  அவளடி  அகத்துள்  வைப்பாம்.

2.
பாம்பணை  துயின்ற  தெய்வப்  பரம்பொருள்  உலகம்  உய்ய
வாம்பரித்  தேர்ந  டாத்திப்  பாண்டவர் வாழ்வு  காத்தோன்
தேம்பினோர்  நலங்கள்  காத்தாள்  திருமலை  மணந்து  கொண்ட
காம்பன  தோளி  யாளைக்  கருத்தினால்  போற்றி  செய்வாம்.

3.
செய்யவள்  அலர்மேல்  மங்கை  சித்திரம்  அனைய  கன்னி
மையுறு  தடங்கண்  மங்கை  மானிடர்  மாசு  போக்கும்
தையலாம்  நமது   தாயின்  தளிரடி  வணங்கி  நின்றால்
மைமலை  மாலின்  செல்வி  மங்கலம்  தந்து  காப்பாள்.

4.
காப்பவள்  மணந்த  கன்னி  கலையழ குடைய செல்வி
ஆப்பயன்  கொள்ளும்  ஆயர்  அழகனைக்  கண்டு  நெஞ்சம்
பூப்பவள்  ஆகி  வந்த பொன்னிறத்(து)  அலர்மேல்  மங்கை
தோப்பென  நம்மைப்  பேணித்  துலங்குவாள் அடிகள்  போற்றி.

5.
போற்றியோ  போற்றி  என்று பொழுதெலாம்  பணிவார்  துன்பம்
மாற்றுவாள்  அலர்மேல்  மங்கை  மங்களச்  செல்வி  யாகித்
தேற்றுவாள்  வேங்க  டத்தான்  தேவியாய்  வந்த  அன்னை
மாற்றுவாள்  பிறவி  நோயை  மனைகளின்  விளக்கம்  ஆவாள்.

6.    
வாள்விழி  கொண்ட  நங்கை  வரிவிழி   அழகு  கண்டு
தோள்மெலி  வுற்ற  நாதன்  துணையென  ஆக்கிக்  கொண்டான்
வேள்வியைச்  செய்த  வேளை  விரும்பியே  உழுத  மண்ணில்
ஆளென  வந்த  பெண்ணாள்  அடிமலர்  சிந்திப்  போமே.

7.  
சிந்தனை  செய்வார்  நெஞ்சில்  சித்திரம்  ஆன  செல்வி
வந்தனை  செய்வோர்க்(கு)  எல்லாம்  வரமருள்  அலர்மேல் மங்கை
மந்திகள்  தாவு  கின்ற  மலைவளர்  திருமால்  தன்னைச்
சொந்தமாய்க்  கொண்ட  தாயின்  சுடரடி  தொழுது  பாரும்.

8.  
பாருடன்  அனல்கால்  விண்நீர்  பகரைந்து  பூத  மாகிப்
பாருடன்  விண்ண  ளந்து  மாவலி  படிக்குட்  செல்ல
ஓரடி  தலைமேல்  வைத்தான் உயர்துணை  அலர்மேல்  மங்கை
சீரடி  சரணே  என்று  சேருவீர்  கமல  பாதம்.

9.  
பாதகம்  செய்வார் தம்மைப்  படிமிசை  அகற்றிக்  காக்கும்
போதகம்  அனைய  கண்ணன்  புணர்ந்தவள்  அலர்மேல்  மங்கை
காதலால்  கடைக்கண்  வைத்தால்  காரியம்  வெற்றி  யாகும்
ஆதலால்  குவித்த  கையர்  ஆகிநாம்  அருள்தேன்  உண்போம்.

10.  
உண்பவை அலர்மேல்  மங்கை  உதவிய  பொருளே  அன்றோ
கண்படும்  பொருளில்  எல்லாம்  காண்பவள்  அவளே  அன்றோ
பண்படும்  சொல்லி அந்தப்  பரம்பொருள்  மணந்த  கோதை
விண்படும்  சுடரே  ஆன  வித்தகி  காப்பாள்  அன்றோ.

11.
அன்(று)இவள்  தரணி  பெற்ற  அன்னமாய்  வளர்ந்து  வானார்
குன்றினில்  வாழும்  கோமான்  கோவலன்  காதல்  பெற்றாள்
மன்றலும்  கொண்ட  மாது  மார்புறை  அலர்மேல்  மங்கை
நின்றடி  வணங்கு  வாரின்  நினைவினில்  தெய்வம்  ஆவாள்.

                                 12.  ஆவதும்  அவளால்  என்றே  அருமறை  முழங்கக்  கண்டோம்
                                        காவலுக்(கு)  உரிய  கண்ணன்  கலைமலி  வேங்க  டத்தான்
                                        மாவலி  கர்வம்  மாற்றும்  மாலவன்  மணந்து  கொண்ட
                                        தேவியை  அலர்மேல்  மங்கைத்  திருவினைப்  புகழ்ந்து  பாடும்.

                                 13.   பாடுவார்  இதயம்  என்னும்  மனமணித்  தவிசை  என்றும்
                                        நாடுவாள்  அலர்மேல்  மங்கை  நற்றவம்  செய்வார்க்(கு) என்றும்
                                        பீ(டு)அருள்  தெய்வத்  தாயாய்ப்  பிறங்குவாள்  பணிந்தோர்  பாலே
                                        கூடுவாள்  ஆயர்  நம்பி  குலவிளக்(கு)  ஆன  பெண்ணாள்.

                                 14.  பெண்ணிவள்  கமல  பாதம்  பிறப்பினை  மாற்றும்  என்றே
                                        கண்ணனை ஆழ்வார் எல்லாம்  காலடி  பற்றி  நின்றார்
                                        மண்ணினை  உண்ட  மாயன்  மனையென  ஆன  தேவி
                                        புண்ணியம்  தந்து  காப்பாள் பொற்புடை  அலர்மேல்  மங்கை.

                                 15.  மங்கையாள்  மானின்   நோக்கி  மதுவினை ஒத்த  சொல்லி
                                       சங்கது  கொண்ட  மாயன்  சதிஎன  ஆகி  வையம்
                                       எங்கணும்  இருந்து  வந்தே  இணையடி  வணங்கு  வார்க்கு
                                       மங்கலப்  பொலிவு  தந்தே  மனைக்கொரு  விளக்கம்  ஆவாள்.

                                 16. விளக்கமாய்  அமைந்த  நங்கை  வித்தகி  அலர்மேல்  மங்கை
                                      துளக்கமில்  அடியர்  தங்கள்  துயரினை  மாற்ற  வல்லாள்
                                      அளிக்குலம்  அமர்ந்து   பாடும்  அழகிய  கூந்தல்  கொண்ட
                                      தளிரன  மேனி  யாளைத்  தாயெனப்  போற்றி  செய்க.

                                 17. செய்யவள்  அலர்மேல்  மங்கை  சேவகன் கண்ணன்  தேவி
                                      வையத்தை  அளந்த  மாலின்  வாழ்விலே  இடங்கொண்  டாளை
                                      மெய்யமும்  கோட்டி  யூரும்  மேவினான்  மனையி  னாளைக்
                                      கையினால் வணங்கு  வார்க்குக்  காட்டுவாள்  கமல பாதம்.

                                18.  பாதமாம்  பங்க  யத்தைப்  பார்த்தன்தேர் ஓட்டி  வைய
                                      நீதியைக்  காத்த  மாலின்  நெஞ்சிலே  இடங்கொண்  டாளை
                                      ஆதியை  அகிலத்  தாரின்  அருந்துணை  ஆன  செய்ய
                                      சோதியை  நெஞ்சில்  வைத்தார்  சொர்க்கமே  வாழ்வில்  காண்பார்.

                                19.  காண்பவர்  தம்க  ரங்கள்  கமலம்போல்  குவிந்து  நிற்கப்
                                      பூண்நகை  பொலியத்  தோன்றும்  பொற்பினாள்  அலர்மேல்  மங்கை
                                      ஊண்முதல்  யாவும்  ஈந்தே  உற்றதாய்  போலக்  காப்பாள்
                                      வாணுதல்  தெய்வ  மாதை  வணங்குவார்  மன்னர்  ஆவார்.

                                20. ஆவினைக்  காத்த  கோவின்  அரண்மனை  அரசி  யான
                                      தேவினை  மணந்த  தெய்வக் கற்பினாள்  மாந்தர்  செய்யும்
                                      பாவமே  போக்கு  வாளைப்  பார்மகள்  அலர்மேல்  மங்கை
                                      காவலில் அமரர்  போலக்  களிப்புடன்  வாழ்வர்  அம்மா.

 21.   அம்மையை  அலர்மேல் மங்கை  அமுதினை  நமக்கு  வாழ்வில்
     செம்மைசேர்  செல்வம்  சீர்த்தி  சிறந்தநல்  ஞானப்  பேறு
     நம்மவர்  அடியர்  என்றும்  நலத்துடன்  பெற்று  வாழ
     இம்மையில்  உதவு  வாளை  ஏற்றினால்  உயர லாமே.

22. ஆமையாய்  ஏனம்  ஆகி  ஆயரில்  கண்ணன்  ஆகிச்
      சேமஞ்செய்  இராமன்  ஆகிச்  சீர்பல  இராமன்  ஆகி
      வாமனன்  ஆய  வள்ளல்  வரதனின்  மனைவி  ஆன
      தாமரை  முகத்துத்  தாயின்  தாளிணை  சரணாய்க்  கொள்க.

23. கலைமலி  திருவி  னாளைக்  கமலமென்  முகத்தி  னாளைச்
     சிலைபிறை  புருவ  மாதைச்  செங்கயல்  விழியி  னாளை
     நலமலி  அலர்மேல் மங்கை  நாரணன்  துணையி  னாளைப்
     புலம்நிறை  அலர்மேல் மங்கா  புரத்துறை  தாயைப்  போற்று.

24. போற்றினார்  மனைகள்  தோறும்  பொன்மழை  பெய்ய  வைப்பாள்
     காற்றினான்  பெற்ற  மைந்தன்  கவிக்குலத்(து)  அனுமன்  என்பான்
     ஏற்றியே  தொழுத  ராமன்  இதயமே  வாழும்  மாது
     மாற்றுவாள்  கவலை  எலலாம்  மலையுறை  தெயவம்  ஆனாள்.

25.ஆனொடு  கன்று  மேய்த்தான்  அகலத்தில்  இடத்தைப்  பெற்ற
     மானிவள்  அலர்மேல் மங்கை  மனமதில் இடம்பி  டித்தார்
     தான்நிலம்  போற்ற  வாழ்வார்  தளிரடி  தலையிற்  சூட்ட
     மாநிலம்  மதிக்கும்  பேறு  மாதவள்  ஈவாள்  அன்றோ.

26.ஓதம்ஆர்  கடலின்  மேலே  உரகமெல்  அணைபொ  ருந்தி
     மாதவள்  கமலச்  செல்வி  மலரெனும்  கரங்க ளாலே
     சீதரன்  அடிபி  டிக்கும்  சிறப்பினை  கண்டு  போற்றிப்
     போதினில்  அமரு  வாளைப்  போற்றுவார்  புகழ்மிக்  கோரே.

27.ஓர்பகல்  போல  மின்னும்  ஒளிமணி  மகுடச்  செல்வி
     கார்பொலி  ஆழிப்  பாம்பில்  கண்வளர்  கின்ற  மாயன்
     பார்படி  அடிகள்  பற்றும்  பத்தினி  அலர்மேல் மங்கை
     சீர்படித்  தார்கள் அன்னாள்  சேவடிக் கமலம்  பெற்றார்.

28. பெற்றவள் இவளே  என்று  பேரடிக்(கு)  அன்பு  செய்வார்
      பெற்றமே  மேய்த்த  பிள்ளை  பேய்முலை  நஞ்சுண்  டானின்
      சுற்றமே   தழுவி  வாழும்  சுடர்மணி  அலர்மேல் மங்கை
      நற்றவம்  செய்வார்க்(கு)  எல்லாம்  நல்லருள்   சுரத்தல்  திண்ணம்.

29. திண்ணிய  வில்லை  ஏந்தித்  தென்திசைக்  கோனை  வென்று
     மண்ணினில்  தீமை  மாய்த்த  மன்னவன்  இராம  மூர்த்தி
     கண்ணிலே  காதல்  காட்டிக்  கருத்திலே  புகுந்த  மங்கை
     விண்ணவர்  தம்மைக்  காத்த  வித்தினை  மறப்பார்  உண்டோ.

30. உண்டமைக்  கண்ணி  னாளை  ஒருவரும்  அறியா  தாளை
     முண்டகம்  போன்ற  வான  முழுநிலா  முகத்தி  னாளை
     வண்டொலிக்  கூந்த  லாளை  வார்கடல்  அமுதி  னாளைக்
     கண்டவர் அலர்மேல் மங்கை கருத்தினில்  நிறைகு  வாரே.

31.வார்கடல்  உலகி  னோடு  வருந்திருக்  கரங்கள்  பற்றி
    மாமிசை  ஏற்றி  வைத்து  மகிழ்மா(று)  உற்ற  தேவி
    பார்மிசை  வேங்க  டத்தின்  பதிக்கொரு  சதியாய் ஆன
    கார்குழல் அலர்மேல்  மங்கை  கருத்தினில்  இடம்பி  டிப்பீர்.

32.பிடிபடா  ஞானம்  காட்டும்  பெரியவள்  அவளின்  செய்ய
    அடிதொடார்  எவரே  உள்ளார்  அச்சுதன்  மணந்த  நங்கை
    படிதொடாப்  பாதப்  போதைப்  பணிந்தவர்  கோடி கோடி.
    முடிவுறாப்  பிறவி  நோயை  முடிப்பவள்  அலர்மேல்  மங்கை.

33.மங்கையை   மறந்தார்  யாரே  மதியினைத்  துறந்தார்  யாரே
    செங்கயல்  விழிமீன்  கண்டு  செழிப்பினைப்  பெற்றார்  எல்லாம்
    பங்கயத்(து)  அயனை  ஈன்ற  பரம்பொருள்  துணைவி  என்றே
    தங்கரம்  தலைமேல்  கூப்பித்  தரணியில்  மன்னர்  ஆனார்.

34.நாரொடு  சேர்ந்த  பூவாய்  நாமவட்  சேர்ந்து  நிற்போம்
    பார்முதல்  ஐம்பூ  த்ங்கள்  படைத்தவள்  அலர்மேல்  மங்கை
    கார்முகில்  அனைய  மாயன்  கலந்தவள்  கருணை  ஊற்றாய்
    ஏர்பெற  அன்பு  செய்வாள்  இறையவள் நமது  செல்வம்.

35.செல்வமாக்  கோதை  ஆன  சித்திரம்  அலர்மேல்  மங்கை
     நல்லவர்  தொழுது  போற்றும்  நாயகி  நார  ணன்தன்
     இல்லுறை  நங்கை  அன்பர்  இதயமாம்  கோவில்  வாழும்
     நல்லவள்  பாதம்  போற்றி  நாளும்நாம்  பணிய  லாமே.

36.பணிபவர்  வாழ்க்கை  என்றும்  படிமிசை  ஓங்க  வைக்கும்
    பணிதலை  ஆன(து)  என்னும்  பாவைநல்  அலர்மேல்  மங்கை
    மணியிதழ்க்  கமல  மாதை  மனத்தினில் வைத்தோர்  எல்லாம்
    பிணியிலர்  ஆகி  வாழப்  பேரருள்  செய்வாள்  அம்மா.

37அம்மையை  அலர்மேல்  மங்கை  அமுதினை  வாடல்  இல்லாச்
    செம்மைசேர்  கமலத்  தாளை  சீர்மிகு  பவள  வாயாள்
    தம்மையே  வணங்கும்  பேறு  தரணியில்  வாய்த்தோர்  எல்லாம்
    இம்மையோ(டு)  அம்மை  தன்னில்  இன்னருள்  பெறுவர்  மெய்யே.

38.மெய்யவள்  உலக  நைத்தும்  மேலவள்  என்று  போற்றும்
    செய்யவள்  நாமம்  சொல்லிச்  சிந்தனை  பீடம்  ஏற்றி
    வையமேல்  வாழ்வார்  எல்லாம்  வளந்தரு  வாழ்க்கை  காண்பார்
    தையலாம்  அலர்மேல்  மங்கை  தாளிணை  பணிய  வாரும்.

 39.வார்உறை  மார்பு கொண்ட  வனசமென் முகத்தி  னாளை
  ஏர்உறை  பங்க  யத்தின்  இடையினில்  இடங்கொண்  டாளைப்
      சீருறை  வேங்க  டத்தான்  சிந்தையில்  வைகுவாளைப்
      பார்உறை  மாந்தர்  கூடிப்  பணிவதே  கடமை  என்பார்.


40.என்பெரும்  தெயவம்  என்று  மாருதி  எடுத்துச்  சொல்லி
    மன்பதை  போற்றி  என்றும்  மகிழ்ந்திடச்  செய்தான்  அந்த
    அன்பினை  எண்ணி எண்ணி  அழகிய  அலர்மேல்  மங்கை
    தன்பதம்  வணங்க  வாரீர்  தரணியிற்  பிறந்தோர்  எல்லாம்.


41.எல்லினை  ஒத்த  மேனி  இராகவன்  தேவி  ஆகி
    வல்வினை  அரக்கர்  தம்மை  வதைத்திடத்  துணைய  தான
    செல்வி  வேங்க டத்தான்  சேர்துணை  அலர்மேல்  மங்கை

    நல்விதி  காட்ட  நின்றாள்  நாயகி  நாமம்  வாழ்க.

42.கடல்படு  முத்தம்  என்னக் காண்ஒளி  மூர  லாளைக்
     கடல்படு  சங்கு  போலக்  காண்பதோர்  கழுத்தி  னாளைக்

     கடல்படும்  அலைகள்  போலக்  காண்கருங்  குழலி  னாளைக்
     கடல்படு சேல்கள்  போன்ற  கண்ணியை  வணங்கிப்  பாடும்.

43.பாடினார்  ஆழ்வார்  பாடிப்  பயன்மிகப் பெற்றார அன்றோ
     தேடினார்  தெளிவு  பெற்றார்  திருத்தகு  ஞானம்  பெற்றார்
     மாடம்ஆர்  வேங்க  டத்தின்  மலையவன்  துணைய  தான
     பீடுசால்  அலர்மேல்  மங்கை  பேரடி  போற்றி  வாழ்க்.

44. கற்பனைக்(கு)  எட்டாக்  கன்னி  கலைமலி  அலர்மேல்  மங்கை
     அற்புதத்  தெய்வம்  ஆகி  அருள்பவள்  மலையப்  பன்தன்
     இற்பொலி  அரசி  வானத்(து)  இமையவர்  வந்து  போற்றும்
     பற்பல  நாமம்  கொண்டாள்  பாதமே  சரண்என்(று)  ஓது.

45.ஓதுவார்  உள்ளக்  கோவில்  ஒளியென  விளங்கு  செல்வி
     காதலால்  வேங்க  டத்தான்  கைபிடி  அலர்மேல்  மங்கை
     தாதளை  வண்டு  பாடும்  தழைத்தசெம்  முகத்தி  னளைப்

     பூதலம்  புகழ்ந்து  பாடும்  போற்றுவோம்  நாமும்  இங்கே.

46.இங்கிவள்  ஈடி  லாதாள்  எனமறை  செப்பும்  செய்ய
     பங்கயம்  இருந்து  வாழும்  பகல்பொலி  நிறத்தி  னாளைச்
     செங்கயல்  விழிகொண்(டு)  இந்தச்  செகத்தினுக்(கு)  அருளைச்  செய்த
     மங்கையை  வையம்  காக்கும்  மயிலினை  மறக்க  லாமோ.

47.மோகினி  வடிவு  கொண்ட  முதல்வனாய்  ஆயர் பாடி
    மோகனன்  எனவ  ளர்ந்த  முகில்வணன்  வேங்க  டத்தான்
    போகமே  நுகர  வந்த  பொன்மகள்  நீல  வண்ண
    மேகனைப்  பிரியா  தாளை  மேவினால்  வாழ லாமே.

48.மேலவர் கீழோர்  மற்றும்  மேதினி   வாழ்வோர்  எல்லாம்
    சாலவே  வணங்கித்  தங்கள்  சஞ்சலம்  அகல்வான்  வேண்டி
    மாலவன்  மணந்த  மங்கா  புரத்துறை  அலர்மேல்  மங்கை
    காலடி  தொழுவார்  தங்கள்  கடும்பவ  நோயை  வெல்வார்.

49வார்முர(சு)  ஒலித்து  வந்த  வலிமைசால்  அரக்கர்  கோடி
    நேர்எதிர்  நில்லா  வண்ணம்  வென்றதோர்  நேமி  யானின்

    பார்வையில்  ஈர்ப்புக்  கொண்ட பங்கயக்  கன்னிப்  பாவை
    சீர்பெறு  பாதம்  காணப்  பெற்றவர் சிறந்தோர்  ஆவர்.

50.ஆவதும்  அவளால்  தானே  அழிவதும்  அவளால்  தானே
     யாவையும்  அவளால்  தானர்  யாரிதை  மறக்கற்  பாலார்
     காவதம்  கடந்து  காணும்  கருடனார்  சுமந்த  மாலாம்
     தேவனை  மணந்த  தேவி  திருமலை  மங்கை  காப்பாம்.

51.காப்பிடும்  கையாள்  கண்ணன்  கழலிணை  வருடும்  கையாள்
     கூப்பிடும்  அடியார்க்(கு)  எல்லாம்  குறையினை  நீக்கி  வைப்பாள்
     மாப்பிழை  செய்தா  ரேனும்  அடியினில்  மண்டி  யிட்டால்

     காப்பது  கடனே  என்று கருதுவாள்  அடிநி  னைப்பாம்.

52.பாம்பினை   மெத்தை  யாக்கிப்  பள்ளிகொள்  நீல  மாயன்
    தாம்பினால்  கட்டுப்  பட்டுத் தயிருடன்  நெய்பால்  உண்டான்
    காம்பன  தோளி  யாளைக்  கவினுயர் திருவி  னாளை
    நாடுவார்  வாழ்க்கை  நன்றே  நற்பலன்  கிடடும்  அன்றே.


53.நீடுகொள்  தோகை  மஞ்ஞை நெடிதுற  ஆடும்  வெற்பில்
    பீடுகொள்  அலர்மேல்  மங்கை பெட்புடன்  மணந்து  கொண்ட
    தோ(டு)இவர்  காதி  னாளைத் தூயமா  மனத்தி   னாளை
    நாடுவார்  வாழ்க்கை  நன்றே  நற்பலன்  கிட்டும்  அன்றே.

54.அன்(று)இவண்  சீனி  வாசன்  அடர்வனத்(து)  ஊடு  மங்கை

     நின்றிடக்  கண்டு  நெஞ்சம்  நேயத்தால்  மகிழ்வு   கொள்ள
     மன்ற்லும்  கொண்டான்  அந்த  மலரவள்  அலர்மேல்  மங்கை
     இன்றுநம்  வீடு  தோறும்  எழுந்தனள்  எல்லாம்  ஆனாள்.

55.ஆனவர்  நெஞ்சு  தோறும்  அருள்பொழி  கண்ணி  னாளைத்
     தேனமர்  பொழில்கொள்  சோலைத்  திருமலை  இருந்து  வாழும்
     மானமர்  நோக்கி  னாளை  மறக்கலும்  இயலு  மாமோ

     வானவர்  தலைவி  பாதம்  வாழ்வெலாம்  காக்கும்  மாதோ.

56.மா(து)இவள்  காதல்  பெற்றார்  மாநிலம்  புகழ  வாழ்வார்
    காதினால்  நாமம்  கேட்டார்  காலத்தை  வென்று  வாழ்வார்
    பாதத்தை  நினைப்பார்  எல்லாம்  பலநிதி  பெற்று  வாழ்வார்
    ஆதலால்  அலர்மேல்  மங்கை  அருளினை  வேண்டி  வம்மின்.

57.மின்பொலி  இடையி  னாளை  மீன்பொலி  விழியி  னாளை
    மன்பதை  காக்கும்  மாலின்  மனத்திடம்  கொண்டாள்  தன்னை
    அன்பரின்  அகங்கள்  தோறும்  அருள்மழை  பொழிவாள் தம்மை

    இன்பமே  ஈயும்  மங்கை  இவளடி  போற்றிப்  பாடு

58.பாடகம்  ஒலிக்கும்  கால்கள்  பங்கய  வதனச்  சாயல்

    ஈடிலா(து)   இயங்கும்  கண்கள்  இறையருள்  சுரந்து  காக்கும்
    கூடிய  கைகள்  எங்கும்  கும்பிடக்  காணும்  போது
    வாடிய  மனங்கள்  கூட  வளம்பெறக்  காப்பாள்  உண்மை.


59.உண்மையின்  உருவம்  ஆனாள்  உயிர்களின்  இயக்கம்  ஆனாள்
    கண்மலர்  கருணை  கொண்டு  காசினி  முழுதும்  காப்பாள்
    பெண்மையின்  சீர்மை  காக்கும்  பெரியவள் அலர்மேல்  மங்கை
    மண்பொலி  மாந்தர்க்(கு)  எல்லாம்  மாநிதி  நல்கு  கின்றாள்.

60.நல்லவள் இவளால்  வாழ்வு  நலம்பெறும்  என்பார் எல்லாம்
   வல்லவன்  தேவி  யான  வளர்புகழ் அலர்மேல்  மங்கை

   செல்வியைச்  சிந்தை  வைப்பார்  செயலெலாம்  அவட்கே  ஆக்கி
   நல்வினைக்(கு)  ஆன  பாதை  நாளெலாம்  காண  நிற்பார்.

61.பாரெலாம்  படைத்த  ஈசன்  பாண்டவர்  தூதன்  ஆனோன்
    ஊரெலாம்  கேட்டுப்  பின்னர்  ஒன்றுமே  இல்லா  தாகப்
    போரினால்  கிடைக்க வைத்த  புண்ணியன் மணந்த  மங்கை
    சீரினால்  பாதப்  போதைச்  சேர்ந்தவர்  வாழ்வு  பெற்றர்.

62.பெற்றவள்  பேணும்  பிள்ளை போல்நமைப்  பேணிக்  காக்கும்
    உற்றவள்  அலர்மேல்  மங்கை  உடலிலே  உதிரம் ஆனாள்
    கற்றவர்  போற்றும்  கன்னி  கலைபொலி  அலர்மேல்  மங்கை
    நற்றவர்  வாழ்வு  காண  நலந்தரும்  இனிய சக்தி.

69.சக்தியாம்  அலர்மேல்  மங்கை சரண்எனக்  கொண்டார்  எல்லாம்
    முக்தியைப்  பெறுவ(து)  உண்மை  முதுமறைப்  பொருளி  னாளைப்
    பக்தியாய்த்  தொழுவார்க்(கு)  என்றும்  பரம்பொருள்  ஞானத்  தோடு
    சக்தியும்  தருவாள்  அன்னை  சத்தியம்   பொய்யே  இல்லை.


64.இல்லையே  என்பார்க்(கு)  இல்லை  இருப்பதே  என்பார்க்(கு)  உண்டு
    வல்லவள் அலர்மேல்  மங்கை  வந்த்னைக்(கு)  உகந்த  செல்வி

    புல்லொடு  பூடே  யான பொருள்களின்  மூல  மான
    நல்லவள்  மலர்ப்பா  தங்கள்  நம்துணை  என்று கொள்வோம்.

65.ஓம்எனும்  பிரண  வத்தின்  உட்பொருள்  ஆன  சத்தி
     மாமழை  போல  மங்கை  மலர்விழி   கருணை  காட்டும்

     பூமழை  பொழிய  மக்கள்  புண்ணியப்  பேறு  பெற்றார்
     நாம்அவள்  கருணை  பெற்று  நலம்பல  பெறுவோம்  ஆக.

66.ஆகமம்  ஆகி  நின்ற  அளிமுரல்  கூந்த லாளை
     நாகமேல்  துயின்ற  நாதன்   நமக்கொரு  துணைய  தான

     பாகுபோற்  சொல்லி  னாளாய்ப்  பார்மகள் அலர்மேல்  மங்கை
     ஆகியே  காக்கும்  அன்னை  அடிமலர்  போற்ற  லாமே.

67.மேகமாய்  அருள்சு  ரக்கும்  மெல்லியல்  அலர்மேல்  மங்கை
     சோகமாய்  இருப்பார்க்(கு)  எல்லாம்  சுகம்தரும்  வனசத்  தாளை
     நாகமே  சுமக்கும்  அய்யன்  நயந்தவள்  திருவின்  செல்வி
     பாகினை  வென்ற  சொல்லி  பதமலர் காப்ப  தாமே.


68.காப்பது  கடனே  யாகக்  கருதுவாள்  சேர்ந்தார்  தம்மைக்
    காப்பதே  கடமை  என்று  காட்டுவாள்  அருளாய்  நெஞ்சில்
    பூப்பவள்  அலர்மேல்  மங்கை  புண்ணியர்க்(கு)  எல்லாம்  செல்வம்

    சேர்ப்பவள்  கமலத்  தாளைச்  சிந்தையில்  சேர்ப்பாய்  நெஞ்சே.

69.சேவடிக்  கமலம்  காட்டிச்  செலவமும்  அள்ளித்  தந்த
    ஓவியம்  அலர்மேல்  மங்கை  உத்தமி  நாமம்  சொல்லி

    ஆவியை  அவளுக்(கு)  என்றே  அர்ப்பணம்  செய்தார்  வாழ்க்கை
    காவியம்  ஆகும்  கண்டீர்  கருமமும்  அதுவே  கண்டீர்.

70.கண்டவர் வீடு  காணக்  கருணைசெய்  அலர்மேல்  மங்கை

    பண்டுஅமர்  செய்த  மாலின்  பத்தினி  பணிவார்  தம்மை
    மண்டலம்  துதிக்கச்  செய்வாள் மானிடர்  போற்றச்  செய்வாள்
    தொண்டராய்த்  துலங்க  வைப்பாள்  தூயவர்  ஆக்கி  வைப்பாள்.

71.பாளையை  நிகர்த்த  மூரல்  பதுமினி  வளர்த்த  பெண்ணாள்

    காளையாம்  சீனி  வாசன்  காதல்கூர்  மனைவி  ஆனாள்
    தோளினில்  மாலை  யாகத் துலங்குவாள்  அலர்மேல்  மங்கை

    தாளைநாம்  பணிவ(து)  அல்லால்  தரணியில்  பணிவே(று)  உண்டோ.

72.உண்டுறை  செல்வம்  ஆதி  உதவிடும்  அலர்மேல்  மங்கை

    அண்டிய  அடியார்க்(கு)  எல்லாம்  அடைக்கலம்  தந்து  காப்பாள்
    கொண்டவன்  சீனி  வாசன்  கொஞ்சிடும் மயிலே  ஆனாள்

    வண்(டு)அமர்  மாலை  சூடி  வாழ்த்துவாள்  பற்றி  னாலே.

73.நாலெனச் சொல்லும்  வேதம்  நாட்டிய  பொருளே  ஆனாள்
    மாலவன்  செல்வத்  தேவி  மங்கலம்  காக்கும்  தாயின்

    காலினைப்  பிடித்தார் இந்தக்  காசினி  மன்னர்  ஆவார்
    நூலிடை  அலர்மேல்  ம்ங்கை  நோயெலாம்  தீர்ப்பாள்  மன்னோ.

74.மன்னவர்  வணங்கும்  தாளாள்  மாதிரம்  அனைத்தும்  காக்கும்
    அன்னையாய்  இலங்கும்  செல்வி  அருள்மழை  பொழிவாள்  பாதம்

    சென்னியில்  சூட்டு  வாரைச்  செங்கண்மால்  துணைவி  காப்பாள்
    கன்னல்இன்  சொல்லி  னளின்  காவலில்  வாழ்க  நாடு.

75.நாடெலாம்  போற்று  கின்ற  நங்கையாள்  அலர்மேல்  மங்கை

    ஆடகப்  பொன்போல்  மேனி ஆயிரம்  சுடர்கள்  வீசும்
    பாடகம்  சிலம்பு  கொஞ்சும்  பதமென்  மலர்கள்  போற்றித்

    தேடிய  மாந்தர்க்(கு)  அன்னை  திருவடி  தினமும்  ஈவாள்.

76.ஈவதோ  அருளை  என்றும்  இசைப்பதோ  இவள்தன்  நாமம்
    நாவினால்  இவள்தன்  நாமம்  நவின்றவர்  வாழ்வு  காண்பார்

    காவினில்  பூத்த  பூப்போல்  காணும்ஓர்  வேங்க டேசன்
    தேவியை  அலர்மேல்  மங்கைத்  திருவினை  மறந்தார்  யாரே.


77.யாரிவள்  எல்லை  கண்டார்  எனமறை  பேசக் காண்பார்
    சீரிதழ்த்  தாம  ரைப்பூச்  சேவடி  அலர்மேல்  மங்கை

    காரியான்  மேக  வண்ணன்  கலந்தவள்  ஆகி  வ்ந்த
    சீரினாள்  காப்பே  என்று  சிந்தனை  செய்வோம்  நாமே.

78.நாமமே  சொல்லு  வாரை  நாளெலாம்  நினைந்து  மக்கள்

    சேமமே  விரும்பு  வாரைச்  சேயிழை அலர்மேல்  ம்ங்கை
    தாமமே  சூடும்  அந்தத்  தனிப்பெரும்  சீனி  வாசன்
    காமமே  நுகர்ந்தாள்  பாதம்  மருந்தெனக்  கவலை  போக்கும்

79.போக்குடன்  வரவே  இல்லாப்  புனிதையைத்  தாய்மை  ஊற்றை
    மாக்கடல்  பாயல்  கொள்ளும்  மலையவன்  துணைய  தான
    பூக்குழல்  அலர்மேல்  மங்கை போற்றினார் புனிதர்  ஆக
    ஆக்குவாள்  திருவை  நல்கி  ஆதர(வு)  அளிப்பாள்  அம்மா.


80.அம்மையை  அறத்தின்  தாயை  அருள்பொலி  முகத்தி  னாளைத்
     தம்மையே  தமர்க்கு நல்கும் தனிப்பெரும்  அலர்மேல்  மங்கை
     இம்மையில் பேற்றை  நல்கும் இனியவள்  ஆய  மாதை

     நம்மனை  இருப்பாள்  தம்மை  நாடினார் அனைத்தும்  ஆவார்.

 81.ஆவினை  மேய்த்த கண்ணன்  அன்பினால்  அலர்மேல்  மங்கைத்
     தேவியை  நினைத்த  பேர்க்குத்  திருவினை  அளிப்பாள்  தம்மைப்
     பாவியர் மனத்தை  மாற்றிப்  பரம்பொருள்  தன்மை  காட்டும்

     பாவையை  வணங்கி  இன்பப்  பரவையில்  படிய  லாமே.

82.படியினை  அளந்த  மாலின்  பத்தினி  அலர்மேல்  மங்கை
    அடியினை  மனத்தில்  வைத்தார்  அகத்தினில்  திருவை  வைப்பாள்
    மடிமிசைக்  கிடத்தி  நம்மை  மகவெனக்  காத்து  நிற்பாள்
    துடியிடை  கொண்ட  தாயே  நம்துயர்  அனைத்தும்  தீர்ப்பாள்.

83.தீர்ப்பவள்  நமது  துன்பம்  தேவையை  நிறைவு  செய்து
    பார்ப்பவள்  அலர்மேல்  மங்கை  பாதமே  காப்ப  தாகச்
    சேர்ப்பவர்  இல்லம்  தோறும்  திருவினைச்  சேர்க்கும்  தேவி
    நீர்பொலி  மேகம்  போல  நித்தமும்  கருணை  பூப்பாள்.


84.கருணையின்  உருவம்  ஆனாள்  காவியை  நிகர்த்த  கண்ணாள்
    அருணனின்  கதிர்கள்  போல  அமைஒளி  மேனி  கொண்டாள்

    தரணியின்  மகள  தான  தாயவள்  அலர்மேல்  மங்கை
    வரம்அளிக்  கின்ற  தாயாய்  வாழ்வினில்  இலங்கு  கின்றாள்.

85.இலங்குவாள்  திருவின்  நங்கை  இனியவள்  அலர்மேல்  மங்கை
    துலங்குவாள்  விளக்க  மாகத்  தூயவர்  மனைகள்  தோறும்
    மலங்கெடப்  புனித  ராக  மனிதரை  மாற்று  வாளைத்
    தலங்க்ளில்  விளங்கு  கின்றாள்  தனித்ததோர்  தெய்வப்  பாவை.

86.பாவையாக  அலர்மேல்  மங்கை  பரிவுடன்  நம்மைக்  காக்கும்

    தேவியைக்  கருணைத்  தாயைத்  தென்றலின்  உருவா  னாளைச்
    சேவடி நமக்குத்  தந்த  செல்வியைத்  துயர்கள்  நீக்கும்

    ஓவியத்  திருவி  னாளை  உளத்திலே  வைத்தார்  வாழ்வர்.

87.வாழ்வினில்  செம்மை  காட்டும்  வனிதையாம்  அலர்மேல்  மங்கை
    தாழ்வுறும்  போது  வந்து  காக்கின்ற்  தாயின்  காலில்
    வீழ்வுறும்  போது  கண்டு  வெற்றியைத்  தருவாள்  நம்மைச்
    சூழ்வுறும்  வினைகள்  ஓடும்  சொர்க்கமே  வந்து  கிட்டும்.

88.கிட்டிடும்  இன்பம்  எல்லாம்  கிளையுடன்  சேர்ந்து  வாழக்
    கிட்டிடும்  கருணை  வாழ்க்கை  கீர்த்தியை  நல்கத் துன்பம்
    பட்டிடும்  அலர்மேல்  மங்கை  பார்வையால்  செல்வம்  எல்லாம்
    கொட்டிடும்  மனைகள்  தோறும்  குவிந்திடும்  வணங்க  வாரீர்.

89.வணங்கினார்  இல்லம்  தோறும்  வரத்தினை  நல்கும்  அந்த
    அணங்கினை  வேங்க  டத்தின்  அமுதினை  மறவா(து)  என்றும்
    வணங்கினார்  வாழ்வு  காண்பார்  வரத்தினை  மறந்து  வாழ்வில்

    பிணங்கினால்  ஒன்றும்  இல்லை  பேணினால்  வாழ்க்கை  உச்சம்.

90.உச்சிமேல்  நிலவு  சூடும்  உத்தமன் தனக்கே  என்றும்

    மச்சினன்  ஆன  மாலின்  மனைவியாம்  அலர்மேல்  மங்கை
    மெச்சிடு  பக்த  ராக  மேவினார்  வாழ்வு  காண
    நிச்சயம்  உதவி  செய்வாள்  நினைவெலாம்  நிறைந்து  நிற்பாள்.

91.நிற்பவள்  என்றும்  நெஞ்சில்  நிலைப்பவள் அலர்மேல்  மங்கை
    தற்பதம்  கடந்த  தாயைத்  தரணியாள்  பெற்ற  பெண்ணை

    மற்புயச்  சீனி  வாசன்  மனையென  வாய்த்த  கண்ணை
    அற்புதச்  செல்வி யான  அம்மையை  வணங்க  வேண்டும்.

92.வேண்டுவார்  பாவம்  தீர்க்கும்  வித்தகி  அருளை  என்றும்
    தூண்டுவாள்  அலர்மேல்  மங்கை  துணையெனக்  கொண்ட பேரை
    ஆண்டுவாழ்வு  அளிக்கும்  அன்னை  அருட்கழல்  தம்மைப்  போற்றி
    மீண்டுவாழ்(வு)  உற்றார்  கோடி  மேற்பட  வாழ்வர்  கோடி.


93.கோடிமா  தவங்கள்  செய்து  கும்பிடும்  தவத்தர்  தம்மை
    நாடியாள்  கின்ற  தேவி  நாரணன்  மணந்த நங்கை

    கூடிவாழ்  மனைகள்  தம்மைக்  கோவிலாய்  ஆக்கி வைக்கும்
    தோடிவர்  கூந்த  லாளைத்  துணையெனக்  கொண்டால்  என்ன.

94.என்னவள்  என்று  மக்கள்  இணையடி  தொழுவர்  ஆகில்
    அன்னவள்  திருவை  ஈவாள்  அருள்மழை  பொழிந்து  நிற்பாள்
    கன்னலை  வென்ற  சொல்லாள்  கருத்தெலாம்  நிறைந்து  நிற்பாள்
    பன்னலம்  தந்து  செல்வப்  பாவையாய்  அருள்வாள்  என்றும்.

95.என்றிவள்  கமல  பாதம்  இறைஞ்சுவோர்  வதனம்  நோக்கிக்
    கன்றினைக்  கண்ட  காரான்  களிப்புடன்  பொழிபால்  போல
    நின்(று)இவண்  அருட்பால்  ஈயும்  நிமலையை  நெஞ்சில்  ஏற்றிப்
    பொன்றிடாத்  திருவி னோடு  புகழ்நிறை  வாழ்வு  நல்கும்.

96.நல்கிடும்  மதிகொள்  ஞானம்  நாட்டிடும்  தவத்தில்  வேட்கை
    பல்வகை  நிதியி  னாலே  பாரினில்  உயர்த்தி  வைக்கும்
    வில்வழி  வெற்றி  கண்ட   வித்தகன்  மணந்த  மங்கை
    சொல்வழி  வாழ்வு  பெற்றார்  சோர்வின்றிப்  பெறுவர்  ஞானம்.


97.ஞானமும்  கீர்த்தி  தானும்  நமக்கருள்  கின்ற  தாயை
     ஊனம்இல்  தவத்தோர்க்(கு)  எல்லாம்  உயர்ந்தபே(று)  அருளிக்  காக்கும்
     தேனமர்  பூக்கள்  கொண்ட திருப்பதி அலர்மேல்  மங்கை
     வான்அமர்  பேறு  நல்கி  வளமெலாம்  ஈவாள்  அந்தோ.

98.அந்தமில்  தெய்வக்  கன்னி  அடிமலர்  பேணு  வார்தம்
     பந்தங்கள்  அகன்று  போகப்  பரிபவம்  இல்லா  தாகத்
     தந்(து)அருள்  சுரக்கும்  தேவர்  தருவென  அனைத்தும் ஈவாள்
     கந்தமென்  குழலி  ம்ங்கை  காலடி  பற்றுக்  கோடே.

99.கோட்டமில்  நெஞ்சி  னார்தம்  குறைகளை  நீக்கும்  தாயை

    வாட்டமே  போக்க  வந்த  வனிதையை  அலர்மேல்  மங்கை
    நாட்டமே  நம்மை  நோக்கி  நல்லருள்  ஈதல்  கண்டோம்
    வேட்டுநாம்  பணிந்தால்  வாழ்வில்  விளைவன  கோடி கோடி.

100.கோ(டு)இவர்  குரங்குக்  கூட்டம்   கூட்டியே  இலங்கை  சென்று
      சாடினான்  அரக்கர்  தம்மைச்  சானகி  என்னும்  தையல்
      கூடினாள்  வேங்க  டத்தின்  கோதையாம்  அலர்மேல்  மங்கை

      நீடுநாள்  தந்து  போற்றி  நினைவினில்  நிற்பாள்  பொன்னே.

             அலர்மேல்  மங்கை அந்தாதி  நிறைவுற்றது.


                                                                                  

No comments:

Post a Comment