Showing posts with label இரா.குமரகுருபரன். Show all posts
Showing posts with label இரா.குமரகுருபரன். Show all posts

Saturday, September 14, 2019

வாழ்வை அதன் போக்கில் கண்டவர் புதுமைப்பித்தன் !


 ——   இரா.குமரகுருபரன்


            கடவுளை ‘கீழே இறக்கிய’ பெருமை புதுமைப்பித்தனுக்கு உண்டு என்று பீடிகை போட்டார் மொழிபெயர்ப்பாளரும் ஆங்கிலப் பேராசிரியருமான செல்லப்பன்...  தமது மையக் கருத்துரையில் அவர் புதுமைப்பித்தனின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார்.

            புதுமைப்பித்தன் எழுதிய மொத்தச் சிறுகதைகளையும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு சாகித்திய அகாதெமி மொழிமாற்றம் செய்துள்ளது. தமிழ், மலையாளம் அறிந்த மொழியியல் அறிஞரும் எடின்பர்க் பல்கலைக் கழகத்தின் மொழியியல் பேராசிரியருமான ஆர். இ. ஆஷர், ஆங்கில மொழிப் பேராசிரியர் முனைவர் வி.சுப்பிரமணியன் இருவரும் இணைந்து மொழிபெயர்த்த “புதுமைப்பித்தன்: தி கம்ப்ளீட் ஷார்ட் ஸ்டோரீஸ்” என்ற நூலை, ஆகஸ்ட் 23 அன்று சென்னை பல்கலைக் கழக- தொல்காப்பியர் அரங்கில் துணைவேந்தர் முனைவர் இரா. தாண்டவன் வெளியிட்டார். துணைவியார் உடல்நலக் குறைவினால் மொழிபெயர்ப்பாளர் ஆஷர் கூட்டத்துக்கு வந்து தலைமை ஏற்க இயலவில்லை. புதுமைப்பித்தனின் புதல்வி தினகரி சொக்கலிங்கம் உள்ளிட்ட பிரமுகர்கள் விழாவில் பங்கு கொண்டனர்.

            நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் புதுமைப்பித்தனின் பொருத்தப்பாட்டை நினைவு கூர்ந்து பேச்சைத் துவக்கிய சாகித்திய அகாதெமியின் சென்னை பொறுப்பு அலுவலர் அ. சு. இளங்கோவன், "மேலை அறிஞர்களும், கிறித்தவத்தொண்டு நிறுவனங்களும் அறிமுகம் செய்த பின்னரே தமிழுலகம் பெரிய படைப்புகளை உணரத் துவங்கியது. கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற பலரும் தமிழ் கற்றபின் தமிழுக்குத் தொண்டு செய்தனர். ஒருமுறை சாகித்திய அகாதெமி ஏற்பாடு செய்திருந்த ஆஸ்திரேலிய அறிஞர்கள் கூட்டத்தில் ஆஷர், புதுமைப்பித்தனின் பெருமையை விளக்கிப் பேசினார். இளம் வயதிலேயே மறைந்த புதுமைப்பித்தன் சாவைக் கண்டு அஞ்சாதவர். தனது இறப்பைக்கூட எவ்விதத்திலும் துக்கமாக அனுசரிக்க வேண்டாம் என்றே உறுதியாகச் சொன்னவர். ‘ஜீனியஸ்’ என்பவர்கள் நெடுங்காலத்துக்குப் பின்னரே கிடைப்பார்கள். புதுமைப்பித்தனுக்குப் பின்னர் ஜெயகாந்தன் ஜீனியஸ் ஆக விளங்கி வருகிறார்.சென்னைப் பல்கலைக்கழகம் இந்தியாவில் முதலில் தோன்றிய பல்கலைக்கழகங்களில் ஒன்று, அதில் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இந்த நிகழ்வு நடைபெறுகிறது" என்று அவர் சிலாகித்தார்.

பேரா. செல்லப்பன், தமது மையக் கருத்துரையில் குறிப்பிட்டது வருமாறு :
            "சென்ற நூற்றாண்டு எழுத்தாளரைக் கவுரவப்படுதுவது சிறப்பு. புதுமைப்பித்தனை ஆங்கிலத்தில் நினைப்பது புதுமைதான். மொழிக்கு அங்கீகாரம் தரும் அமைப்பு சாகித்ய அகாதெமி. பாரதி கவிதைக்குப் புரட்சி செய்தார் என்றால், உரை நடை இலக்கியத்தில் புதுமையும், புரட்சியும் செய்தவர் புதுமைப்பித்தன். மு.வ. எழுதிய இலக்கிய வரலாற்றில் சிறுகதையின் தந்தை என்று ஐந்து பக்கங்கள் புதுமைப்பித்தனுக்கு ஒதுக்கினார்! வ.வே.சு. அய்யரும், பாரதியும்தாம் முதலில் உரைநடையை வசப்படுத்தினர். முழுக்க முழுக்க யதார்த்த பாணியில் சந்துபொந்துகளில் அலசி உயிருடனான பாத்திரங்களாகக் கதைகளில் உலவ விட்டது புதுமைப்பித்தன்தான். வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள், சராசரி மனிதர்கள் பற்றி அவர் எழுதினார். இலக்கியம் மன ஆவேசத்தின் எழுச்சி என்பதை உணர்ந்த புதுமைப் பித்தன் நடைமுறையை எழுதுவதில் கவுரவக் குறைச்சல் பார்க்காதவர்.

வாழ்வை அதன் போக்கில் கண்டவர் புதுமைப்பித்தன்: 
            சாதாரண மனிதர்களின் அசாதாரணத்தைச் சாதாரணத் தமிழில் கொண்டுவந்தவர்.சிறுகதைகளில் கடவுளை மனிதர்களாகக் கீழிறக்கியவர் அவர். “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்“ சிறுகதையில், கடவுள் கந்தசாமிப்பிள்ளையிடம் ‘உங்களுக்கு வரம் கொடுத்துவிட்டுப் போய்விடவேண்டும்‘ என்று சொல்லும்போது, 
'அதற்குத்தான் லாயக்கு’ என்பார் கந்தசாமிப்பிள்ளை. இப்படியாக கடவுளைக் ‘கீழே இறக்கிய’ பெருமை புதுமைப்பித்தனுக்கு உண்டு.

             "சாப விமோசனம்" கதையில் அகலிகை பாத்திரம் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தை அந்நியமாக்கியது அவர்தான். நனவோடை உத்தி முறையிலமைந்த அவரது படைப்புகளை வர்ஜீனியா வூல்ஃப், ஜேம்ஸ் ஜாய்ஸ் படைப்புகளுடன் ஒப்பிடலாம். வாழ்க்கை அனுபவங்களூடே அர்த்தத்தைக் காட்டுவது இது. பிரக்ஞை மற்றும் எல்லா உணர்வுகளையும் போகிற போக்கில் விட்டுவிட்டு, அதிலிருந்து கண்டுபிடிப்பது.

            ராமன் சென்றபின்னர் சீதைக்கும், அகலிகைக்கும் நடைபெறும் உரையாடலில் ராமன் அக்கினிப்பிரவேசம் நிகழ்த்தச் சொல்லியதை அகலிகை கேட்கும்போது,                       
           “...என்ன, அவன் அப்படிக்கேட்டானா?” என்று துடித்துக் கத்துவாள்...
            ”உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா?” என்று கூறிச் சிரிப்பாள் சீதை....
            ”உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா? நிரூபித்து விட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா ..” என்று அகலிகை கேட்பாள். 
பதில் சொல்லமுடியாது சீதைக்கு. அகலிகை மீண்டும் கல்லானாள் என்பதாகக் கதை முடியும். ஒரு பெண்ணின் பெரும் கலகக் குரல் இது. 

            ராமாயணம் படிப்பவர்களைப் பற்றி கவலையே படாதவர் புதுமைப்பித்தன்! “சாப விமோசனம்“ கதைத் தொடக்கத்தில் இராமாயண பரிச்சயமுள்ளவர்களுக்கு இந்தக்கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை என்பார். யதார்த்தம், புனைவு, சர்ரியலிசம் இணைந்த கலவை அவரது படைப்பு! “மகாமாசானம்“ கதையில் பிச்சைக்காரனின் பிணம் மூலம், வாழ்வையும் மரணத்தையும் அருகருகே வைத்து ஒப்புநோக்கி ஊடாடல் நிகழ்த்துகிறார்.

            "கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்" கதையில் கடவுளுக்கும் மனிதனுக்கும் என்றால், "சாபவிமோசனத்தில்" குழந்தைக்கும் கிழவனுக்குமாக; பிறப்புக்கும், இறப்புக்குமாக நிகழும். ‘தகரப்பீப்பாயைப் பிடித்துக் கொண்டு செத்துக்கொண்டு’ சம்பூர்ணமாகிப்போவான். எவ்வளவு பெரிய உண்மை! குழந்தைக்குச் சாவே புதுமையாகத் தோன்றும். இறப்புக் கோட்பாடு பற்றி குழந்தையின் அழகியல் கோட்பாட்டில் நின்றுகொண்டு, புதுமைப்பித்தனுக்கு இயல்பாகச் சொல்ல முடிகிறது! 

            ஈ மொய்க்கும் கிழவனின் மரணத்தருவாயில் மாம்பழம் வாங்கி வரும் அப்பாவிடம், “வாசனையா இருக்கே! “ என்று பழவாசனை குறித்துப் பேசமுடிகிறது குழந்தைக்கு... என்ன அற்புதமான படைப்புத் திறன்! மரணத்தைத் தாண்டி வாழ்வின் மீது பிடிப்பு ஏற்படுத்தும் யதார்த்த அறிவிப்பல்லவா அது! சாவுக்குமேல் தன்னை நிலைநாட்டும் வாழ்வு பற்றி அந்தக் குறுகிய கணத்தில் உண்மை வெளிப்படுகிறது.

            ஒரு துளியில் வாழ்வின் நிரந்தரம் பற்றி எழுதிய உரைநடைக் கவிஞன் புதுமைப்பித்தன்.மொழிபெயர்ப்பில் தங்குதடையில்லை.  ஆஷரின் ஆங்கில மனமும், சுப்பிரமணியத்தின் தமிழ் மொழி நடையும் இணைந்து படைப்பில் வெளிப்படுகிறது.புனைவு என்பது கவிதையை விடச் சிக்கலானது. வாழ்வுடனான முரண்கள் பற்றிப் பல மொழிகளும் பேசுகின்றன. சென்னை மாநகரின் கலிடாஸ்கோப் தரிசனம் வியக்க வைக்கிறது. புதுமைப்பித்தன் பாதையில் நாமும் நடந்திருக்கிறோம். 

            மொழிபெயர்ப்பில் கவிதையாக எஞ்சி நின்று விரிகிறது படைப்பு! வேட்கைகளை, மொழிபெயர்ப்பு புதுப்புது அர்த்தங்கள் மூலம் புதிதாகப் படைக்கின்றது. பிளேட்டோ சொன்னது போல, உலகமே 'போலச்செய்வதுதான்'; மொழிபெயர்ப்பு என்பது 'போலச் செய்தலின்' போலச் செய்தலே... "போலச்செய்தல் மூலம் யதார்த்தத்தை அடையமுடியும்" என்றார் தெரிதா. மொழிபெயர்ப்பின் மூலமே உண்மை உணர்தல், வளர்ச்சி சாத்தியப்படும். ஒவ்வொரு பிரதிக்கும் உள்ளே பொதிந்து கிடக்கும் உபபிரதி மூலமாக முழுமைபெறாது தொடர்கிறது படைப்பு. தேடிக்கொண்டே இருக்கும் திறனாய்வாளர்கள், படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் இந்த அறிதல் சாத்தியமாகிறது." 

            மொழிபெயர்ப்பில் உள்ள நுட்பமான பிரச்சனைகளை, வட்டார வழக்குகளை எடுத்துரைத்தார் சகமொழிபெயர்ப்பாளர் வி.சுப்பிரமணியம்.   எழுத்தாளர் மாலன், முனைவர் பா.வளன் அரசு, அபிலாஷ், பேரா. ஆர்ம்ஸ்ட்ராங் ஆகியோர் உரையாற்றினர். சென்னைப் பல்கலை ஆங்கிலத் துறை-சாகித்திய அகாதெமி சார்பில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.   காலச்சுவடு பதிப்பகத்துக்காக 2000-ஆவது ஆண்டில் ஆ. இரா. வெங்கடாசலபதி தொகுத்த புதுமைப்பித்தனின் 99 சிறுகதைகளும் சாகித்திய அகாதெமியின் இந்த வெளியீட்டில் இடம் பெற்றிருக்கின்றன.



குறிப்பு:  ஆகஸ்ட் - 2014, "யாம் பெற்ற  இன்பம் பெறுக இவ்வையகம்" நிகழ்வின் தொகுப்பு




Thursday, October 18, 2018

தமிழ்ப் பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள் கருத்தரங்கம் - நிகழ்வுத் தொகுப்பு

—   இரா.குமரகுருபரன்



எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று உலகப்பொதுமறை கூறும். தமிழகத்து நாட்டுக்கலைகளில் சதிர் மறைந்து பரதநாட்டியம் வளர்ந்தது.  சமஸ்கிருதம் நல்ல கலை இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து வெற்றிகண்டது. பரதக்கலை இதைப்பின்பற்றியது. சரித்திரமற்ற அகதிகளாக நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருவது போன்று, பூர்வகுடித்தொடர்பின்றி  உள்நாட்டில் தமிழ்மக்கள் அகதிகளானோம்! நம்மை மீட்டெடுக்க வேண்டிய காலகட்டாயத்தில் உள்ளோம்.

தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் முனைவ‌ர் சுபாஷிணி ஐடி துறை சம்பாத்தியத்தில் தமது நேரம் சக்தியைச் செலவிடுவதற்குப் பதிலாக தமிழ்ச்சேவை செய்து வருகிறார்!... அவருடன் நானும் அமெரிக்காவின் 'பெட்னா' கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இந்திய ஆட்சிப் பணி வகிக்கும் திரு. த. உதயச்சந்திரன் பள்ளிக்கல்வித்துறை வந்து எதிர்கால சந்ததியினருக்கு பயன்பெறும் வகையில் பாடத்திட்டத்தை அளித்துவிட்டு, தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டு, கீழடி ஆய்வுக்கு நிதியுதவி பெற்றுத் தந்திருக்கிறார்!... தமிழக அமைச்சர் மாண்புமிகு பாண்டியராஜன் அவர்களும் கீழடியில் தனிக்கண்காட்சிக்கூடம் அமைய இடமொதுக்கி உதவிவருகிறார்.

கீழடி மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டு. இங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் நாட்டியப்பெண், கொற்றவை சிற்பங்கள் கிடைத்துள்ளன. வீரமிகு பெண்கள் வழிபாடு  இது. மூத்தோர் வழிபாடு வேறு, மதநம்பிக்கை வேறு. ஆய்வுகள் மூலம் உண்மைகள் வெளிவரும். 

திருவள்ளுவர் சமணத்துறவி என்று ஆய்வுகள் கூறுகின்றன. 'இலக்கியம் இருண்ட காலம்' என்பதாகச் சொல்லப்படும் களப்பிரர் காலகட்டத்தில்தான் திருக்குறள், சமணக்காப்பியங்கள் சிலப்பதிகாரம், வளையாபதி, பவுத்தக் காப்பியமான மணிமேகலை எழுதப்பட்டன!

மொட்டையடித்த சமணத்துறவிகள் சிலைகள் முருகன்- வள்ளி -தெய்வானை என்று மாற்றப்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.  ஆளுகின்ற அரசு ஆதரவுடன் இது நிகழ்த்தப்பட்டுள்ளது. இங்கு மட்டுமல்ல, ரோமிலுள்ள பாந்திய மதக் கோவில், கிறித்தவ தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது! சமுதாயச் சூழலில் என்னென்னவோ மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 

பல்துலக்க உப்பும் சாம்பலும் உபயோகித்த நமது மக்களைக் கிண்டல் பண்ணிவிட்டு, "உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கிறதா?" என்று கேட்டு வசதியாக விற்பனை செய்கிறது நவீன மார்கெட்டிங் தொழில்நுட்பம்!... இதையும் நாம் ஏற்றுக்கொண்டு விட்டோம்!... தற்காப்புக் கலையான சிலம்பம் பொழுதுபோக்குக் கலையானது!"புதியன புகுதலும் பழையன கழிதலும்!"... எதை ஏற்பது? எதைக் கழிப்பது? இது எளிதான காரியமல்ல. 

"பாரடைஸ் லாஸ்ட்" காவியக்கவிதை எழுதிய ஆங்கிலக் கவி ஜான் மில்டன்  சொல்வது போல, 'தேர்ந்தெடுத்த அறிஞர்கள்' மூலம் நம்மை நாமே மீட்டெடுக்கும் முயற்சிகள் கட்டாயம் தேவை. மனதில்  உறுதியுடன் பயணிப்போம்." என்ற திருமிகு கோ.பாலச்சந்திரன், இ.ஆ.ப. (ஓய்வு)  வாழ்த்துரையுடன் தமிழ் மரபு அறக்கட்டளை, சங்கம் -4 ஒருங்கிணைப்பில் "தமிழ்ப்பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள்" கருத்துரையாடல் நிகழ்வு, ஆனந்தன் (முரசு) குடும்பத்தினர் பறையிசை முழங்க,  சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையிலமைந்த தமிழ் மையத்தில், அக்டோபர் 14, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கியது.

தமது நெறியாள்கையில், "நல்ல தெளிவுடன் தமிழுக்கான சிறந்த முன்னெடுப்பு, நாட்டுக்கலை பற்றிய திருமிகு பாலச்சந்திரன்  அவர்கள் ஆற்றிய உரை" என்று தமிழ்மரபு  அறக்கட்டளைத் தலைவர் முனைவர் சுபாஷிணி குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், "தமிழ்புராதனச் சின்னங்கள் பற்றிய விழிப்புணர்வை  தமிழகம் மட்டுமின்றி மலேசியா, ஐரோப்பிய நாடுகள், கனடா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் ஏற்படுத்துவதில் தமிழ்மரபு  அறக்கட்டளை எடுத்து வருகிறது. தூத்துக்குடி, நாகை மாவட்டங்களில் கிடைக்கும் தமிழ்மரபுச் சுவடுகள் மூலம் முன்னோடிகள் பங்களிப்பை அறியமுடிகிறது. அமெரிக்காவின் பெட்னா நிகழ்வில் பறையிசையுடன் தொடங்கியதைப்போல இங்கும் நிகழ்ந்திருக்கிறது.

காந்தி, கவுதம சன்னா  உள்ளிட்ட வழக்கறிஞர்கள்  சான்றுகளுடன் ஆராய்ந்து,  உண்மைகளை வெளிக்கொணர்கின்றனர். இது வரப்பிரசாதம். நாடகக்கலையில் கவுதம சன்னா எழுதிய "மத்தவிலாச மறுப்பு என்னும் சுத்த விலாச விவேகம்" எனும் மறுப்பு நாடகப்பனுவலின் பகுதிவாசிப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ள மு. புருஷோத்தமன், பேரா. டே. ஸ்டான்லி, க.வெங்கடேசன், கவிஞர் முத்துக்கந்தன் பேரா. பிரபாகரன் ஆகியோரை வரவேற்கிறேன். ஓவியர் 'சந்ரு' வரைந்த ஓவியங்களுடன் எனது முன்னுரையுடனும் தயாராகிக் கொண்டிருக்கும் நூல் அது" என்று தெரிவித்தார். பிரஹசனம் இலக்கியத்தில் கேலி வகைமையில் அமையும். கி.பி. 590-630 ஆண்டுகளில் மகேந்திரவர்மபல்லவன் எழுதிய மத்தவிலாச பிரஹசனம் நாடகப்பனுவலில் காபாலிகர்கள், பவுத்த பிக்குகள், காளாமுக சைவர்கள் பாத்திரங்கள்  இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பனுவல் வாசிப்பு நிகழ்ந்தது.  

"தமிழ்ப்பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள்" கருத்துரையாடலில்  சென்னைப் பல்கலைக்கழகம்-தமிழிலக்கியத் துறை  இணைப்பேராசிரியர் கோ. பழனி, திருப்பூர் எல்ஆர்ஜி. அரசினர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் ஜா. அமைதி அரசு, சென்னை மாநிலக் கல்லூரிப்பேராசிரியர் இரா. சீனிவாசன், கரந்தைத் தமிழ்ச் சங்கக்கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் மு. செல்லன், செய்யாறு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் க.வெங்கடேசன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.  

"கண்ணப்பத் தம்பிரான் வழிவந்த சம்பந்தன் இரணியவதம் தஞ்சை மாவட்டப் பதிவு ஆகும்.  தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வ. அய். சுப்பிரமணியன் துணை வேந்தராக இருந்த காலத்தில் கேரள கதகளியானாலும் யக்ஷகானம் ஆனாலும் கலைஞர்களுக்குப் பாகுபாடின்றி ₹ 6000 வழங்கி, கூத்து, அடவுகளை
ஆவணப்படுத்தினார். தப்படிக்கும் ஆதிக்கலை நாடகாசிரியர் சே. இராமானுஜம் முன்முயற்சியில் கல்லூரிகளில் பிரபலமானது. நந்தன் கதை நாட்டார் கலையானது. குடவாயில் பாலசுப்பிரமணியன் பங்களிப்பும் முக்கியமானது.  மனுநீதி ராஜா கதை மீட்டுருவாக்கம் காத்திரமானது.  இழவுவீட்டில் தப்பு அடிப்பவன் காசு கொடுப்பவன் முகம் பார்த்துக் கொண்டே அடிக்கவில்லை என்றால் பிழைப்பில்லை...இது தெரிவது அவசியம்...பிரகலாத சரித்திரம் அமுதுப்படையல், அரவான், அரிச்சந்திரன் குறித்த பதிவுகள் உண்டு. பாடல்கலைஞர்கள் ஏற்பாட்டில்  'தவளை பஸ்கி', கம்பு சுற்றுதல், பின்னல்  ஆட்டம். மார்ஷல் கலைகள், சவுராஷ்டிரர்களின் பஜனைமடம், ருக்மாங்கதன் ஏகாதசிப் பட்டினி (மாமியார் மருமகள்) ஆகிய அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்" என்று அமைதி அரசு வலியுறுத்தினார். 

கோ. பழனி கருத்துரையில் "அருகிவரும் லாவணிக்கலை குறித்து அக்கறை தெரிவித்தார். சடங்கிலிருந்து விலகிச் சென்றால் இக்கலையைக் காப்பாற்ற முடியாது. வடிவம் சார்ந்த மாற்றம் புதுப்பித்தலில் கவனம் வேண்டும்.வடக்கத்தி, தெற்கத்தி, மேற்கத்திய பாணிகள் உள்ளிட்ட உட்பிரிவுகள் இதில் உண்டு.  107  கலைஞர்கள் களஞ்சியத்தை நான் தொகுத்துள்ளேன். அறியப்படாத படைப்பாளிகள்,  36  பழங்குடியின மக்கள் மொழிகள் ஆவணப்படுத்தப்படவில்லை" என்று குறிப்பிட்டுப் பேசினார். 

இரா. சீனிவாசன் கருத்துரையில்,  "நாட்டுப்புறக் கலை ஆய்வுகள் பனுவலாகவும் காட்சிவடிவக் கலைகளாகவும் பதியப்படவேண்டும். கோட்பாட்டுச் செல்நெறிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். எம்.டி. முத்துக்குமாரசாமி (நாட்டாரியல் மையம்) பங்களிப்பு காத்திரமானது. நரிக்குறவர் குடும்பங்களுக்குப் பயிற்சி, ஒப்பனை, கலைவடிவக் கருவிகள் செய்ய ஏற்பாடு, ஆபரணப் பனுவல்த் தொகுப்புருவாக்கம் உள்ளிட்ட அடிப்படை நடவடிக்கைகள் தேவை. வட்டார அளவில் கலைகள் பராமரிப்பது அவசியம். லாவணியில் 100  பாணிகள்  உண்டு. அறிவுபூர்வமாக அறிவார்ந்த புலமை தானாகத் தோற்றுவாயிலிருந்து உருவாக வேண்டும். எனது ஆய்வு  தொண்டை மண்டல கதைப்பாடல்களில்தாம். முத்துப்பட்டன் கதை, கதைப் பாடல்களாக (ballads) வழங்கப்படுகிறது. தோற்பாவைக்கூத்துக் கலைஞர்கள் இரவு பத்து மணிக்குத் தொடங்கி, காலை ஐந்து மணிக்கு முடிப்பதுண்டு...ஒரே கலைஞரும் இதைச்செய்வதுண்டு!  பெண்கள் பகுதிக் கதைப்பாடல்களில் மூக்குச்சந்திரன் உருப்பாட்டு முக்கியமானது.  இதில் பனுவலை  உளவியல் ரீதியாக  மேம்படுத்துவது (improvisation) பெண்களே" என்று குறிப்பிட்டார்.

செல்லன் தமது கருத்துரையில், "உள்ளூர்க்கதை மறைக்கப்படுதலைப் பாளையங்கோட்டை நாட்டாரியல் மையம் கூத்துக் களஆய்வு செய்து தெரிவித்துள்ளது. சமகாலச் சிந்தனை மாற்றம் முக்கியமான விஷயம். தோலினால் பறைசெய்யப்படுவது மறைந்து, செயற்கைத்தோலினால் (fibre) ஆக்கப்படுகிறது. கூத்து 'காஸ்ட்யூம்' ஆய்வில் வைக்கோல் ஆடைகள், கஞ்சிப்பசையிட்ட பருத்திச்சேலைகள் வரவு ஆகியவற்றால் அரை கிலோவாகக் குறைந்து பிளாஸ்டிக் வடிவில் வந்து விட்டது தெரியவருகிறது. இனக்குழு வகைமை பரிணாமம் 
( Ethnic type evolution) ஏற்பட்டுவிட்டது.  ஆற்காட்டுப் பாணி தெருக்கூத்துக்கலை திரௌபதையம்மன் கோவில் இருக்குமிடங்களில் ஜீவிக்கிறது. பத்தாயிரம் கலைஞர்கள் உண்டு. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கடலூர், விழுப்புரம், புதுவை, அரியலூர் (ஒருபகுதி ), ஆந்திரா, ஈழம்(வடமொழி,தென்மொழி, மலையகத்தமிழர் கூத்துகள் ) உள்வேறுபாடுகளுடன் நடத்தப்படுகின்றன. இதில் கல்வராயன் மலைக்கூத்துக் குழுக்கள் கோவையிலும், கன்னடம் பேசும் கலைஞர்கள் நிகழ்த்தும் கூத்துகளில் இரணியன் கூத்திலும் வேறுபாடு ஏற்பட்டது. குரும்ப இளைஞர்கள் ரத்தத்திலேயே கூத்து கலந்துள்ளது. ஒருசிலரே பெண் கலைஞர்கள்;  அரவாணிகள் பெண்பாத்திரங்கள் தாங்கி நடிக்கின்றனர்!" என்று குறிப்பிட்டார். 

நாட்டார் பாடல்களைப்பாடி விளக்கத்துடன் தகவல்களை வழங்கினார் க.வெங்கடேசன். 

தகவல் வங்கி, இணைந்தவகைச் செயல்பாடு (Network), கல்லூரிகளில் நான்கு அல்லது ஐந்து துறைகள் இணைந்து கூட்டமைப்பு ஏற்படுத்துவது, வாட்ஸப் குழு அமைப்பு, 'தமஅ' தொழில்நுட்பப் பயிற்சி நடத்துவது, புலம்பெயர்ந்தோருக்கான குழு அமைப்பு, விழிப்புணர்வுக் கருத்தரங்கம், கருவிகள்/காட்சிப்படுத்துதல், மரபுவிளையாட்டுக் கலைக்கண்காட்சி, பேருந்து ஏற்பாடு ஆகிய முதல்கட்ட நடவடிக்கைகளை எடுக்க, தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் தலைவர் முனைவ‌ர் சுபாஷிணி முன்மொழிந்தார்.  இன்னம்பூரான், சந்திரபோஸ், சவுந்தரராஜன்,  குமரகுருபரன், லோகநாதன் ஆகியோர் உரிய ஆலோசனைகளை வழங்கினர். ஸ்ரீதேவி உதயன் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.  காந்தி, கவுதம சன்னா ஆகியோர் ஏற்பாடு உதவி செய்தனர். அசோக்,  சிவரஞ்சனி, செழியன், நானா ஆகியோர் அரங்கப்பணியில் உதவினர்.

அரங்கம் ஏற்பாடு செய்து உதவிய ஜகத் கஸ்பர், நிகழ்வுக்கு உதவிய கோ. பாலகிருஷ்ணன், இஆப உள்ளிட்ட ஆளுமைகளுக்கும் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும்  முனைவர் சுபாஷிணி நன்றி கூறினார்.