Friday, August 3, 2018

சிறைக் கைதிகள் ... !

— சி. ஜெயபாரதன், கனடா





பூமியே நமக்கோர் சிறை !
பரிதி மண்டலம்  மாபெருஞ் சிறை !
வான் பயணத் தடுப்பு
செய்வது ஈர்ப்பு !
காணி நிலத்தில் கட்டி வாழும்
போலி வீடு சிறிய சிறை !
காலை மாலை நம்மைத்
தாலாட்டும்
நகரம் ஓர் பெருஞ் சிறை !

வாலிபன் கண்மூடிப் பெண்ணுக்குத்
தாலி கட்டி வாழும்
போலி இல்லமோர்  சிறையே !
போட்டது நீ பெண் கழுத்தில்
பொன்விலங்கு !
வீட்டுக் குடும்பம் பலர் வாழும்
கூட்டுக் குடும்பம்
மாட்டுக் கொட்டம் போலொரு
சிறைதான் ! அங்கே நீ
போட்ட தெனக்குப்
பூவிலங்கு தான் !

அஞ்சலி தேவிக்கு
கொஞ்சும் சலங்கை கட்டி
படாதிபதி
இடுவார் கால் விலங்கு !
சேயை உண்டாக்கி
தாயிக்குத்
தப்ப முடியாத நித்தியப்
பாச விலங்கு !
மேலான ஆத்மாவுக்கு
தோல் உடம்பு போடுவது
ஆயுள் விலங்கு !

சொல்லடா ! சொல் ! சொல் !
இல்லச் சிறைதனிலே
உன்னுடைய
சிறைக் கைதி நானா ? அல்லது
என்னுடைய
சிறைக் கைதி நீயா ?
சதி பதியை எக்காலமும்
சிறையில் பூட்டி
சாவியை வீசி எறிந்து
பல்லாங் குழி ஆடிவரும்
பொல்லாத விதி !


Picture Courtesy: vintage Art - liveauctioneers.com


________________________________________________________________________
தொடர்பு: சி. ஜெயபாரதன் (jayabarathans@gmail.com)





No comments:

Post a Comment