Wednesday, March 7, 2018

அல்லிக்குழி கலவைக்கல் பாறைகள் / கங்லாமெரேட் பாறைகள்



——   சிங்கநெஞ்சம் சம்பந்தம்

தீக்குழம்பாய் சுழன்று கொண்டிருந்த புவிப்பந்து, குளிரத் தொடங்கியது.  கெட்டிப் பட்டது. பாறைகள் தோன்றின. இவையே  தீப் பாறைகள் அல்லது ‘அழற் பாறைகள்’ (IGNEOUS ROCKS). பின்னர் இந்த அழற்பாறைகள் அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் ஆட்பட்டு உருமாற்றம் அடைந்து  ‘உருமாற்றுப் பாறைகள்’ (METAMORPHIC ROCKS) உருவாகின.

தொடர்ந்து நிகழ்ந்து வரும் தட்ப வெப்ப மாற்றங்களால், பூமியின் மேற்பரப்பிலுள்ள பாறைகள் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டுச் சிதைவுற்று மணலாகவும், களிமண்ணாகவும் மாற்றமடைகின்றன. குவார்ட்சைட்  போன்ற வன்பாறைகள் கற்களாக உடைந்து போகின்றன. கோணல் மாணலாகச் சிதைந்து போன குவார்ட்சைட் போன்ற வன்கற்கள் ஆறுகளில் உருட்டிக்கொண்டு வரப்படும்போது உருண்டை வடிவினைப் பெற்று வழுவழுப்பான கூழாங்கற்களாக மாறிவிடுகின்றன. ஆற்றங்கரைகளில் நாம் காணும் பெரும்பாலான கூழாங்கற்கள் குவார்ட்ஸ் அல்லது குவார்ட்சைட் கற்களாகவே இருக்கும்.

இந்த சிதைவுகள் காற்று, மழை மற்றும் ஆறுகளால் அடித்துக் கொண்டுவரப்பட்டு பெரிய ஏரி – கடல் போன்ற நீர் நிலைகளில் படிகின்றன.இந்த நிகழ்வு லட்சக்கணக்கான-கோடிக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும்போது பல நூறு மீட்டர்கள் கனத்திற்குப் படிவங்கள் படிந்துவிடுகின்றன. இதனால் அடிப்பகுதியில் உள்ள படிவங்களில் அழுத்தமும் வெப்பமும் அதிகரிக்கின்றன. இதன் விளைவாகவும் இன்ன பிற புவியியல் மாற்றங்களாலும் படிவங்கள் பாறைகளாக கெட்டிப்பட்டு “படிவப் பாறைகள்” ( SEDIMENTARY ROCKS) உருவாகின்றன.

மணல் நிறைந்த படிவங்கள் மணற்பாறைகளாகவும் (SAND STONE), களிமண் நிறைந்த பகுதிகள் களிப்பாறைகளாகவும் (SHALE) உருப் பெறுகின்றன. மாறாக நிறைய கூழாங்கற்களும், மணலும், களிமண்ணும் கலந்துள்ள படிவங்கள் கெட்டிப்படும்போது ‘கலவைப் பாறைகள்’( CONGLOMERATE) உருவாகின்றன. கடலை உருண்டையில் வெல்லப்பாகில் வேர்க்கடலைப் பருப்பு பொதிந்து இருப்பதுபோல் கங்லாமெரேட்டில், அதாவது கலவைப் பாறையில் களிமண்-மணல் குழம்பில் கூழாங்கற்கள் பொதிந்து கிடக்கின்றன. 


கங்லாமெரேட் பாறைகள் பெரும்பாலும் சிறு சிறு மேடுகளாகத்தான் இருக்கும் அல்லது ஆற்றங்கரைகளில் வெளிப்பட்டிருக்கும். அவை மலைகளாக அமைந்திருப்பது அபூர்வம். ஆனால் அல்லிக்குழி குன்றுகள் அப்படியல்ல. 





அல்லிக்குழி குன்றுகள், சென்னையிலிருந்து அறுபது கி.மீ. வடமேற்கே,திருவள்ளூர் மாவட்டத்தில், ஆந்திர எல்லையில் அமைந்துள்ளன. இந்த குன்றுகள் கங்லாமெரேட் பாறைகளால் உருவாகியுள்ளன. இவை கீழ் கிரிட்டேஷியஸ் காலத்தில் ( சுமார் 13 கோடி ஆண்டிகளுக்கு முன்) உருவான கோண்டுவானா பாறைகள். இந்தப் பாறைகளில் உள்ள அழகிய வழுவழுப்பான குவார்ட்சைட் கூழாங்கற்கள் குசத்தலையாறு     போன்ற ஆற்றங்கரைகளிலும் ஓடை ஓரங்களிலும் விரவிக் கிடக்கின்றன. இந்த கூழாங்கற்களைப் பற்றி இவ்வளவு பேசக் காரணம், இவற்றில் இருந்துதான் அத்திராம்பாக்கம் பகுதியில் வாழ்ந்த பழங்கற்கால மனிதர்கள் ஆயுதங்கள் தயாரித்திருக்கிறார்கள். 



படங்கள் உதவி: உதயன் மற்றும் இணையம்


________________________________________________________________________
தொடர்பு: சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)

No comments:

Post a Comment