Saturday, December 2, 2017

சங்கம்



——   இராம.கி.


 —— 1 ——  


    மொழிவளர்ச்சி என்பது, ஒரு சிக்கிலா நூற்கண்டை நீளவலிப்பதுபோல் எண்ணுற்று (quantify) நிகழ்வதில்லை. காலமாற்றத்தில் மொழிபேசுவோர் எண்ணிக்கை கூடக்கூட எழுத்து, சொல்,  பொருள், யாப்பு, அணி போன்றவற்றில் மொழிமாற்றம் ஏற்படலாம். ஓரிட விதப்பு (specialized) வழக்கு இன்னோரிடத்துப் புரியாது போகலாம். ஒருசொல்-பலபொருள், பலசொல்-ஒருபொருள் தன்மை மொழியில் மிகுத்து வரலாம் இதுவரையிலாத பொருட்பாடுகள் கூட ஒரு சொல்லிற்கு ஏற்படலாம். ('நாற்ற'ப்பொருள் இற்றைத்தமிழில் மாறியதே?) மொழிவளர்ச்சி தெரியா விடில் சொல்தோற்றம் எப்படியென முடிவுசெய்வதில் முரண்வரலாம். மொழித்தொனியும் இடத்திற்கிடம் மாறும். (ஈழம், தென்பாண்டி, கொங்கு, வடதமிழகத் தொனிகள் வேறானவை).  மொழிக்கிளைகளின் இத்தகைய இயல்பு வேறுபாட்டைத் தான் இயல்மொழிக் கிளைப்பென்றும் முரணியக்க மொழிவளர்ச்சி (dialectic language development) என்றுஞ் சொல்கிறார்.

    20ஆம் நூற்றாண்டிலெழுந்த ”சங்கவிலக்கியச்” சொற்கூட்டின் தோற்றம்பற்றி சில மாதங்கள்முன் மின்தமிழ்க்குழுவில் ஓர் உரையாட்டெழுந்தது. சொற்கூட்டை முதலில் யார்சொன்னார் என்பது ஒரு விதயமெனில் ”சங்கச்”சொல்லிற்கு மரபுப் பின்புலத்தில் தமிழ்வேர் சுட்டுவது இன்னொரு விதயம். தமிழ் போலும் மொழிகளில் சொல்லின் பொருட்பாடுகள் ஒன்றிலிருந்து இன்னொன்றென வெவ்வேறு காலங்களில் சரம்போல் எழும். (சில பொருட்பாடுகள் சரத்தில் விலகித் தோன்றின, ஒன்றிற்கு மேலும் சரங்கள் உண்டென்றோ, செய்யப்படும் அலசலில் தவறென்றோ பொருளாகும். "சங்கப்" பின்புலம் தெரிந்துகொள்ளுமுன் தமிழ், பாகத, சங்கத மொழிகளின் ஊடேவரும் இடையாற்றத்தைத் தெரிந்துகொள்வது தேவையானது.

    தமிழிற் பயனுறும் சில சொற்களின் மேலோட்ட வடமொழித்தோற்றங் கண்டு, அவற்றின்வேர் சங்கதத்தில் உள்ளதெனத் தமிழரிற் பலரும் கருதுகிறார். இக்கருதுகோளின் பின்னுள்ள தரகுவருக்கப்புரிதல், தமிழர் பண்பாட்டுத்தளத்தை அவ்வளவு ஆள்கிறது. ”மெய்யியலா? அறிவார்ந்த உரையாடலா? பழைய அறிவியற் கருத்தா? சங்கதத்திலிருந்தே மாநிலங்களுக்குப் போகும்” என இந்தியாவெங்கணும் சொல்லப்படுகிறது. இதைமறுப்போர் குமுகாயத்தில் ஒதுக்கப்படுகிறார். மாநில மொழிகளுக்கும், சங்கதத்திற்குமான இருவழிப் போக்குவரத்தைப் பலருமுணர்வதில்லை. இத்தனைக்கும் பழங்கலைஞர், தொழில்முனைவோர் மாநிலமொழிகளிலேயே தத்தம் வித்தைகளை மாணவர்க்குச் சொல்லிக்கொடுத்தார். பல கலைச்சொற்களின் வேர்கள் வட்டாரமொழிகளிற்றான் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பரிமாற்றமொழியாய் (exchange language) வேலைசெய்த சங்கதம் இவற்றைத்தான் பல்வேறு இந்திய வட்டாரங்களிலிருந்த படித்தமக்களிடையே பரப்பியது. இருந்தாலும் பல சொற்களின் ஊற்று சங்கதமென்றே சொல்லப்படுகிறது. ஒருமுறை மின்தமிழ் மடற்குழுவில் “வடமொழி என்பது சங்கதமா?” என்ற கேள்வியை திரு.பானுகுமார் கேட்டு குழுமக்கருத்தறிய விழைந்தார். அவர்கேள்வி கீழே:
----------------------------------------
    தொல்காப்பியத்தில் “வடமொழி” என்பதற்கு சங்கதம் (சமஸ்கிருதம்) என்றே நிறைய உரையாசிரியர் எழுதிச்சென்றுள்ளார். ஆனாலும் சில அறிஞர் (குறிப்பாக, கார்த்திகேசு சிவத்தம்பி, தெ.பொ.மீ) அதைப் பிராகிருதமென்றே பொருள்கொள்வார். http://tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051452.htm. ”தொல்காப்பியர் காலத்திருந்தே தமிழோடு மிகநெருங்கிய தொடர்பு கொண்ட மொழி சமஸ்கிருதமெனப்படும் வடமொழியாகும். தொல்காப்பியர் வடக்கிலுள்ள மொழிபற்றிப் பொதுவாக வடசொல்லெனக் குறிப்பிடுவார். அதனால் இச்சொல் பிராகிருதம், பாலியாகிய மொழிகளையும் குறிப்பதாக வேண்டுமெ”ன்று தெ.பொ.மீ. குறிப்பிடுவார். 1. உண்மையில் வடமொழியென்பது சங்கதம் மட்டும் தானா? அல்லது பாகதம் சேர்த்தே, பொருள் கொள்ள வேண்டுமா? 2. அப்படிச்சேர்த்தே பொருள்கொள்ள வேண்டுமெனில், கிடைத்த கல்வெட்டுகளின்படி தமிழுக்கும், பாகத்திற்கும் மட்டுமே கி.மு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. சங்கதக் கல்வெட்டோ, மிகப்பிந்தியது. தொல்காப்பியமெழுந்த காலம் கி.மு.என்றால், அக்காலத்தில் சங்கதக் கல்வெட்டுக்களில்லை. அதிகாரப்பூர்வ சங்கதக் கல்வெட்டின் காலம் கி.பி.150ஆம் நூற்றாண்டு. எழுத்தில்லாத மொழிக்கு இலக்கணம் படைக்கமுடியுமா?"
----------------------------------------
    பலருக்கும் இக்கேள்வி எழலாம். சங்கதக் கட்சியார் பலருங் கவனமாய், பாகதச்சங்கத ஊடாட்டம் ஒதுக்கி, ”சங்கதம் தாய் பாகதம் மகளெ”னத் தலைகீழ்ப்பாடம் படிப்பார். பொ.உ.மு. 1000-200 இல், குறிப்பாய், சனபதக்காலத்தில் (பொ.உ.மு.1000-600), வடக்கே பாகதமே பரந்தது. கத்துவதைக் கத்தம்>கதம். ஈழப்பேச்சில் கதைத்தல், பேசுதலைக்குறிக்கும். பா+கதம்= பரவற்பேச்சு. இதைப் பெருகதம் (prakrit), மாகதம்/மாகதி என்றுஞ் சொல்வார். தமிழைத் தனித்துச்சொல்வதில் எத்தனை அருகதையுண்டோ, அது பாகதத்திற்குமுண்டு. அகண்ட மகதப்பேரரசின் கிளை வழக்குக் கலவையாய் (முகலாயப் பேரரசிலெழுந்த இந்துத்தானி போல்) சம்+கதம் எழுந்தது. சங்கதத்தின் திருந்திய மொழி செங்கதம் (செம்+கதம்). இந்துத்தானியில் எழுந்த சர்க்காரி இந்திபோல் இதைக்கருதலாம். சங்கதமும் செங்கதமும் ஒரே மொழியின் 2 வழக்குகள். இன்றோ பேச்சுமொழியின்றி, ஏட்டுச்செங்கதத்தைச் சங்கதமாய்க் கொள்கிறார். அதிற்றான் குழப்பமே! (பேச்சுத்தமிழின்றிச் செந்தமிழ் மட்டும் எஞ்சினால் எப்படி?)

    ஒருமொழிக்கிளைகள், கால இடைவெளியால், வட்டாரப்போக்குவரத்து இல்லாததால், நுட்பியல் பரிமாறாததால், பொருளியல், வணிக, ஆட்சித் தாக்கங்களால், அரசியல் குமுக நடைமுறையால், தனித்தனி மொழிகளாகலாம். 2000/3000 ஆண்டில் தமிழுக்கும் அதுநடந்தது. அருவத்தமிழ் தெலுங்காகி. கொங்கணத்தமிழ் துளுவாகி. கங்கர்தமிழ் கன்னடமாகி, சேரலத் தமிழ் மலையாளமாகி, எழுத்து/சொல்/பொருளில் சிச்சிறிதாய்மாறிப் பங்காளிமொழிகளாயின. ”இவ்விடங்களிற்புழங்கிய தமிழிலிருந்தே, இவைதோன்றின” என்பதைமறுத்து, நொதுமலாய்ச் (neutral) சில ஆய்வாளர் முந்து / தொடக்கத் திராவிடம் (proto-/early Dravidian) என்றாலும், நான் அப்படிச்செய்யேன். தயங்காது திராவிடத்தைத் தமிழியமென்பேன். நானறிந்தவரை முந்து திராவிடம் 95/98 % தமிழே. இதை ஏற்கமறுப்போரே முந்து திராவிடக் கதைபடிப்பார். [அதேபொழுது, அறிவுப்புலப்போட்டியில், கல்விச்சாலை அரசியலால் (academic politics) எழும் ’முந்து திராவிடம்’ புரிந்துகொள்கிறேன். மொழித்தொடர்ச்சி, விதப்பு, நுணுக்கம் போன்றவற்றில் நமக்கெவ்வளவு உரிமையுண்டோ, அதேயுரிமை பழந்தமிழ்ச் சேய்களான மற்ற திராவிட மொழிகளுக்குமுண்டு.]     

    பாகதத்திலும் பாஷை (இதுவும் ’பேச்சு’ம் ஒன்றே; பொ.உ.மு.1500-1200 களில், வேதமொழி, வழக்குமொழிப் பங்களிப்பில், இற்றை இலாகூர் சுற்றி சந்தசு/பாஷை மொழியெழுந்தது. பொ.உ.மு.500 இல் இதற்கே பாணினி இலக்கணஞ்செய்தான்), மராட்டி (படித்தான-Paithan மொழி.), மாகதி (2500 ஆண்டுகள்முன் பிம்பிசாரன் தொடங்கி நந்தர், மோரியர், சுங்கர், கனகரெனப் பலர்புரந்த, பேச்சுமொழி. தேரவாத இலக்கியப்பாலி இதிற்கிளைத்தது. மகாயானமோ பொ.உ.500களில் சங்கதங்கலந்த பாலியில் தொடங்கி முடிவில் சங்கதத்திற்கே வந்தது), அருத்தமாகதி (மகததின் வடக்கே வச்சிரம் புழங்கிய, மகாவீரர் பேசிய, மொழி. திகம்பரச்செயினம் இன்றுமிதைக் காப்பாற்றும். சுவேதாம்பரம் சங்கதங்கலந்த அர்த்தமாகதிக்கு மாறியது), அங்கமொழி (வங்கத்தின் முந்தைமொழி), கூர்ச்சரி (குசராத்தியின் முந்தைவடிவம்), சூரசேனி [வடமதுரையின் பேச்சுமொழி. இதன்கீழ்வந்த காடிபோலியின் (அங்காடிப்பேச்சின்) திரிந்தவடிவமே நடுவணரசின் முற்றாளுமையாற்பரவும் இந்தி, மைதிலி (பீகார் மிதிலையிற் பரவிய பேச்சு. இந்தித் தாக்கத்தில் குன்றியது), அவந்தி, காந்தாரி போன்ற வழக்குகளும் வடக்கேயுண்டு. இவற்றைத் தனிமொழிகளென்று சொல்லவிடா அளவிற்கு ஆங்காங்கே ஏமாற்றும் நடக்கிறது.

    2500 ஆண்டுகளுக்கு முன் வடக்கே பாகதர், தெற்கே தமிழரெனக் கிடந்த நாவலந்தீவில், விண்டம்>விந்தம்>விந்தியம் வரையில் தமிழாட்சியிருந்தது. (விள்ளல்>விண்டல்=பிரித்தல். விண்டமலை தமிழ் வரலாற்றோடு தொடர்புற்றது. அதுவே வெள்ங்+கடம்>வெங்கடம்>வேங்கடம் (வெள்+து=வெட்டு; கடம்=மலை) என்றானது. (வேங்கடத்தையே வேங்குன்றம்>வேகுன்றம்> வைகுண்டமென்று தெலுங்கின்வழி வைகுண்டமாக்கினார். விண்டம், வேங்கடத்தின் பழைய அடையாளங்களை வெங்காலூர்க் குணாவின் “தமிழரின் தொன்மை” என்ற பொத்தகவழி அறியலாம். அந்நூலின் எல்லா வரைவுகளையும் நான் ஒப்பாவிடினும் படிக்கவேண்டிய நூலென்றே சொல்வேன். இதையே ”வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகமெ”ன்று தொல்காப்பியர்காலப் பனம்பாரனார்பாயிரங் குறிக்கும். அப்புறம் என்ன முந்து திராவிடம்? ஆழ்ந்துநோக்கின், தமிழாட்சி, மூவேந்தர் எல்லைகளைவிடப் பெரியது. (இன்றுந் தமிழின் ஆட்சியெல்லை, தமிழ்நாட்டைவிடப் பெரியது.)

    பழவிலக்கியத்தை அலசின், விண்டத்தின் தெற்குநாடுகள் பற்றி வடவருக்கு நெடுங்காலந் தெரியாதது புரியும். விண்டப்பிரிப்பை பொ.உ.மு.500-200களில் மோரியரும், பொ.உ.மு. 230-பொ.உ..220 களில் (இற்றை ஔரங்காபாதின் அருகே கோதாவரிப் படித்தானத்தில் எல்லையதிகாரிகளாய் அரசாண்ட) நூற்றுவர்கன்னருமே முதலிலுடைத்தார். ’மொழிபெயர் தேயமெ’ன்ற மாமூலனாரின் சங்கச்சொற்றொடர் மூலமும், நாணய இருபுறங்களில் இருமொழிகளில் அச்சடித்ததாலும், கன்னராட்சியில் தமிழும் பாகதமும் ஆண்டது புரிபடும். இந்தியவரலாற்றில் வடபுல/தென்புல நாகரிக, பண்பாட்டு ஊடாட்டமறியக் கன்னராட்சியை உறுதியாக ஆயவேண்டும். இதையறியாத தனித்தமிழ் ஆர்வலர், நூற்றுவர் கன்னரைக் குறைத்துப்பேசுவார். “வடுகரெனும்” கண்ணோட்டம் நம் கண்ணை மறைத்துவிடக்கூடாது.

    தாய்வழி உறவுற்ற அவர்நாட்டில் அகநானூறு போலவே ’அகம்எழுநூறு (கஹசத்தசை; ’கதாசத்தசை’ என்றுஞ்சொல்வர்.)’ என்ற நூலெழுந்தது. தமிழரிடை பரவிய பெருங்கதை (உஞ்சை உதயணன் கதை) கன்னரவையில் எழுந்தது. வேதநெறி/மறுப்புநெறிகளை ஒருசேரப்புரந்ததும் கன்னர் கல்வெட்டுக்களிற் புலப்படும். இவர்நாட்டின் வழிதான் செயினமும், புத்தமும் தெற்கு நுழைந்தன. தென்னக அற்றுவிகம் (ஆசீவிகம்) வடக்கே சென்றது. தமிழகம்போல் சமயப்பொறை இங்குமிருந்தது. மகதம்போகும் தென்னகச் சாத்துகள் படித்தானம்வழி சென்றன. தவிரக் கன்னர், சேரரின் மேலைத் துறைமுகங்கள் மேலை வணிகத்திற்கும், சோழ, பாண்டிய, கலிங்க, மகதரின் கீழைத் துறைமுகங்கள் தென்கிழக்காசிய வணிகத்திற்கும் கால்கோலின. பல்வேறு ஒற்றுமைகள் கொண்ட கன்னருக்கும் தமிழர்க்குமான நட்பைச் சிலப்பதிகாரம் பேசும். (இச்சான்றுகளை மறுத்துத் தமிழர் வரலாற்றைக் குலைக்க முற்படுவோரே சிலம்பைப் புதினமென்பார். கூடவே கொங்குவஞ்சியை குடவஞ்சியோடு குழப்புவார்)..

    கன்னராட்சியின் தென்கிழக்கிற் பாகதமும், அருவத்தமிழும் ஊடிப்பிறந்தது பழந்தமிழருக்கு வடுகாயும், பாகதர்க்குத் தெலுகு/தெனுகாயும் ஆனது; [தெல்/தென்/தெற்கு) இதைத் தக்கணம் என்றுஞ் சொல்வர். ’திரிகலிங்கின்’ திரிவு ’தெலுங்கெ’ன்பதற்கு ஆதாரமில்லை.] வடுகு/தெலுகுப் பெயர் விளையாட்டே மொழியுண்மை காட்டும். கன்னர், பிந்தைச்சளுக்கர் தொடர்பால், ஒருகாலத்தில் கன்னடமும் வடுகெனப் பட்டது. தமிழ்ப்பலுக்கின்படி படகரும் வடகரே. சிலம்பிற்பயிலும் ’கொடுங்கருநாடர்’ என்பது, ”கொடுகிய (தமிழ்)பேசும் கருநாடரைக்” குறித்தது. [கொடுகு = வளைவு, திரிவு. எதிலிருந்து கொடுகியது?- என்றுகேட்டால், பொ.உ.மு.80களில் உருவான பழங்கன்னடத்தின் தொடக்கம் புரியும். இப்படிக் கேள்வி கேட்க நாம் தயங்குகிறோம்.] ஒருகாலத்தில் மலையாளிகள்  தமிழ்த்தொன்மை பேசத்தயங்குவர். இன்றோ சங்கப்பின்புலத்தை அவருஞ் சொல்கிறார். நாம் கேள்விகேட்கக் கேள்விகேட்கக் கன்னடரும் இதை ஏற்றுக்கொள்வார். இந்தியெதிர்ப்பை இப்பொழுது புரிந்துகொள்கிறாரே?

    வரலாற்றோட்டத்தில், தெற்கே தமிழர் சுருங்க, தெலுங்கரும்/கன்னடரும் விரிய, வேங்கடப்பொருள் சிச்சிறிதாய் மாறியது. முதற்பொருளான விண்டமலையைக் குறியாது, வடபெண்ணை ஒட்டி வெய்யில் கொளுத்தும் இராயலசீமையை இரண்டாம் பொருளாய்க் குறிக்கத்தொடங்கியது. வேம்+கடம்=வேங்கடம்= வெய்கடமென்பார் ந.சுப்புரெட்டியார். இன்று இதுவும் மாறி மூன்றாம் பொருளில் திருமலையை வேங்கடமென்கிறார். ஏற்கனவே கடத்திற்கு மலைப்பொருள் உண்டெனில் (காடு, பாலைநிலவழி என்ற பொருள்களுமுண்டு) வேங்கடாசலமென இன்னோர் அசலம் (மலை) எப்படிவந்தது? இந்த.அசலச்சேர்ப்பே, திருமலை=வேங்கடம் என்பதைப் பிந்தைப்புரிதலாய்க் காட்டும். (விண்டமலையில் விண்டுகோயிலுண்டா?- ஆயவேண்டிய கேள்வி.) தமிழக வடகிழக்கின் உள்ள ஓரமலை சங்ககாலத்தில் எப்படி நமக்கு முழு வடக்கெல்லையாகும்? காலங்காலமாய்த் தமிழ்நிலமும், சிந்தனையுஞ் சுருங்கி, காலப்பிறழ்ச்சியிட் பொருட்பிறழ்ச்சியாகி இதுவே உண்மையென நாம் மயங்கிக்கிடக்கிறோம்.

    சங்ககாலத்தில் கடற்பக்க ஆந்திரம் பெருங்காடு. (அதனுள் சாலைபோட்டு வடக்கேபோனது, பேரரசுச்சோழர் காலத்தில்.) சங்ககாலத்தில் வடக்கேகிய சாத்துகள் இராயலசீமையின் வேங்கடங் கடந்து படித்தான (>பைத்தான்) வழி, தக்கணப்பாதையில் மகதம் போயின. சங்கநூல்களில் நூற்றிற்குப்பாதி பாலைப்பாட்டுகளே. (தக்கண, உத்தரப் பாதைகளறியாது இந்தியத் தொன்மை புரியாது. தமிழாய்வும் விளங்காது. தமிழறிஞர் என்றிதை உணர்வாரோ அன்றே முன்நகர முடியும். இல்லாவிடிற் குண்டுசட்டிக்குள் குதிரையோட்ட வேண்டியது தான்.) பாலை தாண்டி வடக்கே மகதம் போகாது, தென்கிழக்கு, மேற்கு நாடுகளுடன் கடல் வாணிகஞ் செய்யாது, தமிழகம் வளரவில்லை, நம் ’அகமும் புறமும்’ ஆழ்ந்துசொல்வதை எப்போது புரிந்து கொள்வோம்.? பொருளியல் புரியாது வரலாறு புரியுமா?

    பல்வேறு கிளைமொழி கலந்து பாணினிக்கப்புறம் கி.மு.300களில் வடமேற்கின் பாஷாவை (சந்தஸ்) அடிப்படையாக்கிச் சங்கதம் (கலப்புமொழி) எனும் எழுதாக்கிளவியைப் படிப்பாளிகள் உருவாக்கினர். பாணினி சங்கதப்பெயரைப் பகரவில்லை. பிற்காலத்தில், குப்தரின் ஆட்சிமொழியாகிச் சங்கதம் செங்கதமானது. குப்தவரசு பெற்ற அகல்வளர்ச்சியில் வட்டார இலக்கியங்கள் சங்கதம் பெயர்க்கப்பட்டன. (பஞ்சதந்திரம், பெருங்கதை போன்றவை குப்தர்காலத்தில் சங்கதம்வந்த மொழிபெயர்ப்புகள்.) வட்டாரமொழிகளைச் சிச்சிறிதாய்ச் சங்கதம் விழுங்கிப் பரவியது. காளிதாசன்முதல் பல்வேறுபுலவர் குப்தர் அவையிற் சங்கதவிலக்கியம் படைத்தார். (குப்தரும், ஓரளவு பல்லவரும் இல்லாது போயிருந்தால் இன்று சங்கதம் இல்லை.) பொ.உ.150களில் பாகத எழுத்தால் (பெருமி; brahmi) இதை எழுதினார். பொ.உ.9-10 ஆம் நூற்றாண்டில் பெருமி நகரியானது. வெவ்வேறு அரசுகளின் எழுத்துமுறைகள் வெவ்வேறு காலங்களில் இதுபோல் தோன்றின.

    சாதவாகனரின்கீழ் அதிகாரிகளான பல்லவர் இராயலசீமையிலிருந்து இறங்கிவந்து வடதமிழக ஆட்சிகொண்டார். இவராட்சியில் பாகதம் கொஞ்சங் கொஞ்சமாய் வெளியேறிச் சங்கதப் புழக்கங் கூடியது. தமிழெழுத்திலிருந்து கிரந்தம் உருவாக்கிச் சங்கதமெழுதினார். கிரந்தம், நகரியெழுத்திற்கும் முந்தியது. இவ்வரலாற்றைக் கூடத் தமிழர் மறந்தார். கிரந்த ஆர்வலரும் பேசக்காணோம். இதுபோன்ற நம் உரிமைகளை ஒருபக்கம் விட்டுக்கொடுத்து, இன்னொருபக்கம் ”கிரந்தத்திலிருந்து தமிழெழுத்துப் பிறந்ததெ”ன்று தலைகீழ்ப்பாடம் ஓதுவார். வேறொன்றுமில்லை இருக்க இடங்கொடுத்தாற் படுக்க இடங்கேட்பது வாடிக்கை. வெற்றிபெற்றோர் வரலாறெழுதுவதுபோல் எல்லாவற்றிற்கும் சங்கதமே ஊற்றென இன்று மாறி உரைக்கிறார். (மீண்டும் குப்தர்காலத்தைக் கொண்டுவர எண்ணுகிறார் போலும்.)

    வடமொழி என்பது இடத்தைவைத்துப் பெயரிட்ட சொல். வடபுலத்தின் தொலைவிலுள்ள நமக்கு அது ”வடக்கிருந்த/இருக்கும் மொழி” அவ்வளவு தான். குப்தர் காலத்தில் மட்டுமே இது சங்கதம். சங்க காலத்தில் இது பெரிதும் பாகதம்; படித்தோர்வழிச் சிறுபான்மையிற் பாஷா/சந்தஸ். வரலாற்றுப்பொருள் காலத்திற்கேற்ப மாறியது. நாளாவட்டத்தில் பல்லவர் தாக்கத்தில் பாகதப்புரிதல் குறைந்தது. பின் ஏற்பட்ட கருத்துமாற்றத்தைச் சங்ககாலத்திற் கொண்டுபோய் வலிந்துபொருள்கொள்வது தவறு. அக்காலத் தென்னகமொழி, தமிழே. இன்றுள்ள மற்ற தென்மொழிகள் அக்கால வட்டாரக் கிளைமொழிகள் ஆக இருந்தன. (இன்றோ, தென்மொழியெனத் தமிழைப் பொதுப்படச் சொல்வது தவறு.) 


 —— 2 ——   


    ஒருசொல் தமிழெனில், ”சங்கவிலக்கியத்தில் இதுவுண்டா?” எனக் கேட்கும் விந்தைப்பழக்கஞ் சிலரிடமுண்டு. அப்படிக் கேட்பது தவறில்லை. ஆனால் ”நாலுவேதங்களிற் குறிப்பிட்ட சொல்லுண்டா?” எனச் சங்கதம் நோக்கிக் கேட்டு நான் பார்த்ததில்லை. இருக்குவேதந் தொடங்கி பொ.உ.400வரை வந்த சங்கிதை (ஸம்ஹித); ஆரணம் (ஆரண்யக), பெருமானம் (ப்ராஹ்மண), உள்வநிற்றம் (உபநிஷத) என எல்லாவற்றையும் வேத இலக்கியம் என்றாக்கி, பொ.உ.1400 வரையுள்ள மகாபாரதம், இராமாயணம், காளிதாசம், புராணங்களையுஞ் சேர்த்துக் ”குறித்த சொல்” எங்கு வந்தாலும் அதைச் சங்கதம் என்பது எப்படிச் சரியாகும்? பெரும் ’பக்தி’யில் சங்கத இலக்கியக் காலத்தை இப்படி அகட்டுவது பற்றிக் கேள்வியே எழாது. சங்கவிலக்கியங்களுக்கு மட்டும் மனத்தடையெழும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவிற்குச் சங்க இலக்கியப் பரப்பைக் குறைத்துக் காலத்தைப் பின்நகர்த்துவார்; கல்வெட்டு, பானைப்பொறிப்புக்களையும் உடனழைப்பார். ஒப்பிலக்கிய ஆய்வு பார்க்கலாமெனில் அந்தப் பருப்பும் இவரிடம் வேகாது. சங்கதத்திலிருந்தே தமிழ் copy எனக் காரணமின்றிச் சொல்லிச் சண்டித்தனமும் செய்வார். ஒரு கண்ணிற் சுண்ணாம்பு; இன்னொரு கண்ணில் விளக்கெண்ணெய். அவ்வளவு தான்.

    (இத்தனைக்கும் தமிழிற் பானைப்பொறிப்பு பொ.உ.மு.490 இல் தொடங்கியது; இதையுஞ் சிலர் பூசி மெழுகிச் செயினத்தைத் துணைக்குக் கூப்பிடுவர். (செயின நூல்கள் எழுத்தானது பொ.உ.மு. 200 க்கு அப்புறமே. பார்க்க: The Jaina sources of the History of Ancient India - Jyotiprasad Jain. Munshirm Manoharlal publishers. அதுவரை அவரும் மனப்பாடமே செய்துவந்தார்.) செயினத் துறவிகளால் தமிழகத்தில் எழுத்துப் பரவியதென்பது உரையாசிரியரால் நெடுநாள் பரவிய தொன்மம். உருப்படி ஆதாரம் அதற்கில்லை. இத்தொன்மம் 20 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டியலுக்குஞ் சென்றது. அற்றுவிக (ஆசீவிக) இயலுமைகளை முற்றவொதுக்கி, எல்லாம் செயினமென்பது ஒருவித முன்முடிவே. (பேரா.க.நெடுஞ்செழியனும், குணாவும் விடாது வினவ, கல்வெட்டாளர் சற்று செவிமடுக்கிறார்.) என்னைக் கேட்டால், சங்ககாலக் கல்வெட்டுக்களில் மீளாய்வு தேவை. (செயினத் தாக்கத்தை யாருங் குறைக்கவில்லை.) இதுவரை கிடைத்த தரவுகளடிப்படையில் தமிழியே முதலானது. பெருமிக் கல்வெட்டுக்கள் பிந்தையன. தமிழியும், பெருமியும் (Brahmi) ஒன்றெனச் சொல்ல முற்படுவதும் குழப்பவாதமே. எல்லாநேரமும் வறட்டுத்தனம் பேசினாலெப்படி? சங்கதக்கல்வெட்டோ பொ.உ.150 இல் தான் எழுந்தது.)

    இன்னொரு சிக்கலுமுண்டு. சங்கதக் காப்பிய மரபுகளையும், பரதநாட்டிய சாற்றத்தையும் முன்னோடியாக்கி, அதன்வழி தமிழ்த்திணைகள் எழுந்ததாய்ச் சொல்லி, 9ஆம் நூற்றாண்டில் பிற்றைப்பாண்டியர் ஆணையில் 5/6 plagiarist புலவர் room போட்டு ஓர்ந்து, “மாமூலனார், கபிலர், பரணரெ”ன்று கற்பனையில் புலவர்பெயர் உருவாக்கி, பெருத்த ஏமாற்றுத் திட்டமொடு சங்கதநூல்களைப் படியெடுத்துச் சங்கநூல் படைத்ததாய் நெதர்லாந்துப் பேரா. எர்மன் தீக்கன் ஆதாரமில்லாது ‘ஞானங்’ கூறுவார். உடன் தமிழருந் தண்டனிட்டு “சாஷ்டாங்கமாய்க்” கீழே விழுவார். இதற்கு உறுதுணையாய், சங்கத ஆடி விழும்பமே (mirror பிம்பம்) தமிழென நம்மூர் இரா.நாகசாமியுங் கூறுவார். அவருக்குஞ் சிலர் “ததாஸ்துப்” போடுவார். இவற்றை மறுத்துச் சொன்னால், சற்றும் வாதச் சமமற்று (assymmetrical), ”தமிழ் ஓதிகளா? தாழ்வு மனத்தர், வெறியர்” எனும் உளத்தாக்கலும் அவ்வப்போது நடக்கும். ”யார் வெறியர்?” என்பதில் அறிவு தடுமாற வைத்துவிட்டால், அதிகார வருக்கம் ஆர்ப்பாட்டமிடலாமே? சங்கதம்-தமிழ் அறிவுய்திகள் (Intelligentia) இடையே வாதாடுவதென்பது (அதன்பகுதி ’சங்கச்’சொல் பற்றிய வாதம்) இப்போதெல்லாம் சென்னையில் நடக்கும் நீர்க்குழாய்ச் சண்டைபோல் ஆகிவிட்டது. 

    இன்னொரு வேடிக்கை தெரியுமோ? சங்க இலக்கியங்கள், தமிழுக்காக முன்னோர்படைத்த அகரமுதலிகளல்ல. அற்றைத்தமிழில் 100 சொற்களெனில் அத்தனையும் சங்க இலக்கியத்துள் வருமா, என்ன? (சங்க இலக்கியங்கள் பலவற்றைப் பலவாறாய் அழித்தோமே?) அவை சொல்லா நிகழ்வுகள், நடைமுறைகள், சொல்லாட்சிகளுண்டு. (காட்டாகச் சங்கிற்கிணையான பிறசொற்களே சங்க இலக்கியத்தில் பெரிதும் பயின்றன. தொடக்க இலக்கியங்களில் ’சங்கு’ குறைந்தே வரும். ஆனாற் பேச்சுவழக்கிலோ சங்கே இன்றுள்ளது. மற்ற “இலக்கியச்சொற்கள்” பழகவேயில்லை. விந்தையல்லவா?) பல சொற்கள் பிற்கால இலக்கியங்களிற் பதிவாகலாம். (பெயர், வினை, இடை, உரி என) எவற்றைப் பெய்யவேண்டுமோ அவற்றைக்கொண்ட சங்கப்பாடல்களில் உள்ளடக்கம் பெரிதே தவிர, அவற்றின் சொற்றொகுப்பு அவ்வளவு பெரிதல்ல. தாமறிந்த சொற்களைக் கொணர்ந்து கொட்டுவதும் சங்கப்புலவர் குறிக்கோளல்ல. பாடல் தொகுத்தோரும் அவற்றை நாடித் தொகுக்கவில்லை. (சங்க இலக்கியத்தில் ஒருசொல் வந்துள்ளதா?- என்ற கேள்விக்கு விடைதரும் முகமாய், பேரா. பாண்டியராஜாவின் sangam concordance போல இன்று தான் சிலர் சொவ்வறை/software மூலஞ் செய்கிறார்.)

    ஒருசொல்லின் சங்கவிலக்கியப் புழக்கத்தை ஏரணத்தோடு தமிழ்க்கிடுக்கியரிடம் (critics) நிறுவுவதிலுஞ் சிக்கலுண்டு. பொது இயலுமைகளைப் (possibilities) பார்க்கமாட்டார். குறிப்பிட்ட வட்டாரப்புழக்கம் பிடித்துக்கொண்டு, மற்றவற்றை ஒதுக்குவார். பேச்சையும், எழுத்தையும் பொருத்திக்காணார். ஒருபொருள் குறிக்க 4 சொற்களிருந்தால் மரபுகருதி ஒருசொல் பாடல்களில் திரும்புவதை “stock phrases" என்று கேலிசெய்து ’மற்றவை கடன், குறிப்பாய்ப் பாகதம்’ என்பார். (சங்கதப்பேச்சு சிலரிடம் அருகிவிட்டது.) தமிழிலிருந்து பாகதம் ஏன் கடன்வாங்கக்கூடாது?- என்பதற்கு இவரிடம் விடைகிடையாது. வினைச்சொல் இருப்பின் அதன்வழி உருவான பெயர்ச்சொல்லை ஏற்கார். பெயர்ச்சொல்லிருப்பின் உள்ளிருக்கும் ஊற்று வினைச்சொல்லை ஏற்கார். இடை, உரிச்சொற்களுக்கும் இவரிடஞ் சிக்கலுண்டு. விகுதி -பெயர்த்தொடர்பு சொன்னால் அதை ஏற்கமறுப்பார். ஆண்பாற் பெயரிருந்தால் பெண்பாற் பெயரில்லையென்பார். மொத்தத்தில் ”வேண்டாத மருமகள் கைபட்டாற் குற்றம், கால்பட்டாற் குற்றம்.”

நான் விளையாட்டிற்குச் சொல்லவில்லை. ஒருசமயம் ctamil மடற்குழுவில் பேரா. செல்வக்குமார் ”அச்சி” என்ற சொல் தமிழில் அம்மாவைக் குறிக்குமென்றார். நானும் அதையேற்று ”தமிழ்மன்றம்” மடற்குழுவில் ”அத்தன்/அச்சன் இருந்தால் அத்தி/அச்சியென்று பெண்பாற்சொல் இருக்குமே?” என்றேன். ”ctamil" குழுவிலோ சிலர் ‘கிடையாதெ’ன்று சாதித்தார். அதேபொழுது புருஷவெனுஞ் சங்கத ஆண்பாற் சொல்லிற்கு புருஷியென்ற பெண்பாற்சொல்லைப் பொதுவானதென இவரே ”மின்தமிழ்” மடற்குழுவிற் கற்பித்துச்சொன்னார். (சங்கதம் நன்குதெரிந்த இன்னொருத்தர் ”புருஷி” என்ற சொல் சங்கத இலக்கியத்துள் இல்லையென்றார்.) எங்கே ஒருவனுக்கு ஒருவளென்று சொல்லிப்பாருங்களேன்? புருஷியைப் பரிந்துரைத்தவரே ஏற்கமாட்டார். ’ஒருத்தி மட்டுமே’ என்று அடம்பிடிப்பார். தமிழ் இவருக்குத் தெரிந்ததல்லவா? அப்படியானால் ’ஒருத்தன்’ என்னாவது? மொத்தத்தில் தான்பிடித்த முயலுக்கு மூன்றே கால். இப்படித்தான் தமிழ்-சங்கத முன்னுரிமை வாதங்கள் நடக்கின்றன. 

    2000 ஆண்டுகள்முன் பெரிதான பாகதமும் தமிழும் பல கலைச்சொற்களைச் சங்கதத்திற்கு அளித்துள்ளன. சொற்பிறப்பியல் பலருக்கும் தெரியாக்காரணத்தால், பல சங்கதச் சொற்களினடியில் தமிழ்வேர் இருப்பதும். அவை வடபூச்சுப் பெற்ற இருபிறப்பிகள் என்பதுந் தெரிவதில்லை. (காட்டாகத் தமிழ் உணவும், சங்கத அன்னமும் தமிழ் வேரால் தொடர்புற்றவை.) தெரியாததை ஏற்க உறுதி வேண்டும். அறிவியற்புலமை பெற்றதாலேயே அறிவியற்சொல்லின் வேர் எங்கெனச் சொல்லமுடியுமோ? அகழாய்வுபோலமையும் சொற்பிறப்பியல் ஒரு தனித்துறை. பலகாலம் ஆழ்ந்தவரையும் வழுக்கிவிடும். புதுப் பழஞ்செய்திகள் தெரிகையில் இதுவரைகட்டிய கோட்டை சீட்டுக்கட்டாகும். அண்மையில் “தமிழிற்கையாளும் பிரபஞ்சம், சக்தி, அக்கினி, உஷ்ணம், பூமி, சூரியன், சந்திரன், வாயு, விஞ்ஞானம் போன்ற சொற்களின் வேர் வடமொழி” என ஒரு பெரியவர் அடம்பிடித்தார். ஆழ்ந்துபார்த்தால், பெருவியஞ்சம்>பிரபஞ்சம், சத்தி>சக்தி, அழனி>அக்னி, உருநம்>உஷ்ணம், பும்மி>பொம்மிக் கிடப்பது பூமி (புடவி போன்ற சொல்), சுள்>சுர்>சூரன்>சூர்யன் = சுள்ளென எரிப்பவன், சாந்து>சந்து>சந்தன்>சந்த்ரன் = குளிர்ச்சியானவன், வாயில்வருங் காற்று வாயு, ஞாதலில் வருவது ஞானம்” என்று புலப்படும். ”தமிழ் விஞ்ஞானம் கையாளும் இச்சொற்கள் தமிழ்வேர் கொண்டவை” என்பதும் பெரியவருக்குப் புரிந்திருக்கும். ஆனால் சங்கதத்தின் மேலுள்ள பற்று அவர் போன்றவரைச் சிந்திக்கவிடாது செய்கிறது.

    இதேபோற் பூருவ நுண்ணாய்ந்தை (நுண்ணாய்ந்தை>நூணாய்ஞ்சை>mimaamcai=investigation), உத்தர நுண்ணாய்ந்தை, சார்ங்கம்(>சார்ங்க்யம்>சாங்க்யம்>caankyam=எண்ணியம்), ஓகம்(>யோகம்>yoogam), யாயம்>ஞாயம்(>ஞ்யாயம்>ந்யாயம்>nyaayam), விதத்திகம் (>விதேத்திகம்>விதேஷிகம்>விஷேஷிகம்>visheeshikam), என்ற 6 தெரியனங்களைச் (தெரியன>தெரிசன>தர்சன> dharsana) சங்கதம் பெரிது என்போர் விதந்துபேசுவார். கொஞ்சம் பொறுமையும், நீண்டநேரமும், பரந்தமனப்பான்மையும் இருந்தால் இவற்றின் அடியிலுள்ள தமிழ்ப்புலங்களை விளக்கமுடியும். அதற்கு மாறாய், எல்லாஞ் சங்கதம் என மூடுமனங்கொண்டால் அப்புறம் என்செய்வது? ”சரி, எல்லாமே பின் தமிழா?”- என்றுகேட்டால் "அதுவுமில்லை. (இப்படி நான் சொல்வதால் தனித்தமிழார் கவலுறுவார்.) இரண்டிற்கும் கொடுக்கல் வாங்கலுண்டு. சற்று ஆழக்கவனியுங்கள்” என்பேன். 2 செம்மொழிகளில் சங்கதமே மேடு, தமிழ் பள்ளமெனும் ஓரப்பார்வை சரியில்லை. இரண்டிற்கும் இடையே ஒரு சமநிலம் வேண்டும்.

    ”தமிழ்ச்சொற் பிறப்பை பலரும் பலவிதங் காட்டுகிறாரே? இவற்றில் நெல்லெது? பதரெது? ஏரணமுறை எது?” என நண்பர் நா.கண்ணன் ஒருமுறை கேட்டார். எளிதில் மறுக்கக்கூடிய உலகு தழுவிய உன்னிப்புச் சொற்பிறப்பு (folk etymology), ’கதா காலாட்சேபப் பௌராணிகர்’ போல் சொற்களைப் பொருளிலா ஒற்றசைகளாய்ப் பிரித்துப் பொருள்சொல்லல் ஆகியனவற்றைக் கண்டு அரண்டுவிட்டார் போலும். நெல்லின் இறுகியபால்பிடிப்பைக் கண்டுகொள்ள வெறுஞ் சொல்லொலிப்புப் பற்றாது, மரபு, வரலாறு, இலக்கியம், இலக்கணம், ஏரணமெனப் பல்வேறு கோணங்களில் சொல்லை அலசவேண்டும். ஆழப்பார்த்தால், சொற்பிறப்பாய்விற்கு செயினத்திற் சொல்வது போல் ’அநேகாந்தப்’ பன்முனைப் பார்வை கட்டாயந் தேவை. இவ்வளவு நீண்ட பின்புலப் புரிதலோடு ’சங்கத்திற்கு’ வருவோம்.

 —— 3 ——   


    ’சங்கத்’திற்குச் சங்கதமூலங் காட்டுவதிலுஞ் சிக்கலுண்டு. மோனியர் வில்லியம்சின் படி, அதர்வண வேதம் [அருத்த சாற்றம் (Arthasastra) வேதங்களைத் த்ரயீ என்பதால் அதர்வணக் காலம் பொ.உ.மு. 300க்கு அப்புறமே], மகாபாரதம் [பொ.உ.300/400இல் எழுத்துற்றது. http://en.wikipedia.org/wiki/Mahabharata], பாகவத புராணம் [https://en.wikipedia.org/wiki/Bhagavata_Purana பொ.உ 800-1000. சிலர் ~பொ.உ.600 என்பர்] ஆகியவற்றிற்கு முன்னால் தேடினால் ”சங்கத்”திற்குச் சங்கதத்தில் நேரடிப்பொருளில்லை. இருக்குவேத (~பொ.உ.மு.1200) வழியிற் பார்த்தாலும் சுற்றிவளைத்தே பொருள்வரும். ஆயினும், தமிழ் - சங்கதப் பரிமாற்றங்களுக்குச் சங்கத மூலங் காட்டச் சிலர் விழைகிறார்; ஒரே நிலத்து 2 மொழிக்குடும்பங்களிடையே எழுதா வரலாற்றின் முன்னும் சொற்கள் பரிமாறியிருக்கலாமே? அவற்றை எப்படிக் கணக்கிடுவது? எழுத்துப் பயன்பாட்டை மட்டும் வைத்து ’இது இம்மொழி’ என்று சொல்ல வலுத்த ஆதாரம் தேவையில்லையா? அவையின்றிச் ’சங்கம்’ சங்கதவழி எழுந்து, தமிழிற் கடனென்று சொல்வது எப்படி? 2 மொழிக்குடும்பங்களுக்கும் இது பொதுவாகலாமே?. ஆய்வு வலுப்படும் வரை இதுபோன்ற சொற்களைத் தொகுப்பதைத் தவிர்த்து வேறு ஏதேனும் வழியுண்டா?

    தமிழ்வழி பார்த்தால், ’சங்கத்திற்கு’ 3 பொருட்களுண்டு. முதலாவது வளைவுப் பொருள். இதன்வழி உருவான சொற்கள்: சங்கு, 9 குபேர நிதிகளுள் ஒன்று, கைவளை, நெற்றி, குரல்வளை, கைக்குழி, கணைக்கால், அழகு ஆகியவை. இரண்டாவது கூட்டப் பொருள். இதன்வழி ஈறாறு கூடுமிடம், ஆறு கடலோடு கூடுமிடம். சேர்க்கை, அவை, புலவர்கூட்டம், முச்சங்கங்கள், செயின புத்த சங்கங்கள், அன்பு, புணர்ச்சி முதலிய சொற்களமையும். மூன்றாவது கூட்ட நீட்சியான எண்ணிக்கைப் பொருள். இதன்வழி எழுந்தவை: இலக்கங்கோடி, படையிலொரு தொகை என்பன. இனி நெய்தல் வழி வந்த வளைவுப் பொருளைப் பார்ப்போம். சொற்பிறப்பினுள் நேரே செல்லாது, பலவிடங்களிலிருந்து தொகுத்த பழைய நெய்தற் செய்திகளையே முதலிற் சொல்கிறேன். சற்று நீளம்தான். பொறுத்துக் கொள்க!

    70000 ஆண்டுகளுக்குமுன் ஆப்பிரிக்காவிலிருந்து அரேபியா, இரான் வழி, பழங்குடி மாந்தர் (Homosapiens Sapiens) இந்தியாவினுள் நுழைந்ததாய் இசுபென்சர் வெல்சின் (Spencer wells) ஈனியலாய்வு சொல்லும். Y குருமிய (Chromosome) அடையாளப்படி இவரை M130 என்பார்; 1,50,000 ஆண்டுகள் முன் இந்தியா நுழைந்த அத்திரம்பாக்க நிமிர்ப்புமாந்தனிலும் (Homo Erectus) இவர் வேறுபட்டவர். ”இந்நெய்தலார் (coastal people) பேசியது தமிழா?” என்பது தெரியாது. ஆனால் உறுதியாக ஏதோவொரு மொழியை இவர் பேசினாரென்றே இற்றை அறிவியல் சொல்கிறது. (தமிழ் இங்கே உருவாகி இருக்கலாம். அதையெல்லாஞ் சொல்லச் சரியான தரவுகள் நம்மிடமில்லை. ஆனாலும் இன்று தமிழ்பேசுவோரின் மரபுகள் பல பழங்குடிக் கூறுகளைக் கொண்டுள்ளது உறுதி.) இந்தியாவுள் நுழைந்து இவர் குமரிசேர்ந்தது ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குள் இருக்கலாம். இவரிருப்பை உறுதிசெய்யும்படி இற்றைக்கு 35000 ஆண்டுகள் முந்தைய தொல்லியலடையாளம் இலங்கையிற் கிடைத்தது.

    இந்தியாவிலும் இவரிருப்பை உறுதிசெய்வதாய், 2001 அக்தோபரில் விழுப்புரம் மாவட்டக் கடற்கரையில் 1 கி.மீ தள்ளிய ’ஓடை’யெனுமூரில் இரும்புக்காரை மத்திகைக்குள் (ferricrete matrix; ferruginous and concrete matrix.-இரும்பு மண்ணூறலும் காரையுஞ்சேர்ந்து கற்காரைபோல் அமையும் மத்திகை) புதைந்துகிடக்கும் குழந்தையின் தலைப்படிமம் (fossil) கிடைத்தது. பாறையுடைத்து, மண்டையோட்டை எடுக்கவியலாக் காரணத்தால் நேராத (indirect) முறையில் ஆய்வுகள் நடந்தன. தலைப்படிமத்தின் காலம் பெரும்பாலும் மீப்பெரும் பனிக்காலத்தின் (Pleistocene epoch) நடுவில் அமையலாமென்றே இவ்வாய்வின் முடிவு சொல்கிறது. அப்படியெனில் ஏறத்தாழ இற்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முந்தைய தலைப்படிமம் இதுவாகும். ஆக ஈனியல் முடிவிற்கும், தொல்லியல் ஆய்விற்கும் முரணில்லை.

    இப்பழங்குடிமாந்தரே, ஏறத்தாழ 55000 ஆண்டுகள்முன் (பர்மிய, தாய்லந்திய, கம்போடிய, இந்தொனேசியா சேர்ந்த) சுந்தாலந்து (Sundaland) வழி உதிரிக்குடும்புகளாய் (100 கி.மீக் கடற்பயணந் தவிர) நடையாய் நகர்ந்து, வடக்கு ஆத்திரேலியாவரை போய்ச்சேர்ந்தார். இவரே இற்றை ஆத்திரேலியப் பழங்குடியாரின் முன்னோராவார். ஒருவகையிற் பார்த்தால் ஈனியல்வழி தமிழருக்கும், ஆத்திரேலியப் பழங்குடிகளுக்கும் பெருத்த உறவுள்ளதாம். (தேனியைச் சேர்ந்த நம்மூர் விருமாண்டி பற்றிப் பலரும் அறிந்திருப்பார்.) இற்றைக்கு 9000 ஆண்டுகள் முன்னுங்கூட ஆத்திரேலியப் பழங்குடிகளுக்கும் தமிழருக்கும் இடையே இரண்டாவது முறை கலப்பு ஏற்பட்டிருக்கலாமென்று அண்மை ஈனியலாய்வுகள் சொல்கின்றன. இதுவரை நம்மூர் அறிவியலார், மொழியியலார் யாரும் இந்த ஆய்வுகளைத் தொட்டுப் பார்க்கவில்லை. குமரிக்கண்டம் என்ற, அறிவியற் சான்றுகள் அதிகமில்லாத, 19ஆம் நூற்றாண்டுத் தேற்றத்திலே ஆழ்ந்துகிடக்கிறார். (நானும் ஒருகாலத்தில் அப்படியிருந்தேன். இப்பொழுது மாற்றுக் கோணத்தை நாடுகிறேன். அழிந்துபோன குமரிநிலம் என்பது வேறுசெய்தி. அது உறுதியாய் நடந்தது.) ஆப்பிரிக்காவில் நெய்தலார் விட்டுவந்த தொடர்புகளையும் எத்தியோப்பியா, சோமாலியா போன்ற இடங்களில் தேடவேண்டும். மாந்தவியல் (anthropology) வழியான ஆய்வுகளும் தொடரவேண்டும்.
    
    அடுத்தசெய்தி இந்தியப்பெருங்கடலின் ஆழம்பற்றியது. 16500 ஆண்டுகள்முன் 130/140 மாத்திரிகள் (metres) கடலாழங்குறைந்து இந்தியக்கடற்கரை இன்னுந்தள்ளிக் கடலுளிருந்தது. வெதணமாற்றத்தில் (climate change) பனிப்பாறைகளுருகிக் கடலுயர்ந்தது. அப்போது சிலவிடங்களிற் கூடவும், சிலவற்றில் குறைந்தும், இந்தியநிலம் அழிந்தது. குமரியின்தெற்கே 250 கி.மீவரை நிலமழிந்ததுண்டு. இதுபோல் கடலுயர்ந்ததால், பழங்குடிமாந்தன் இந்தியத்துணைக்கண்டத்துள் வந்துசேர்ந்த தடயங்கள் பெரிதும் அழிந்துபோய், முன்சொன்ன ’வரலாற்றிற்கு முந்தைய’ தமிழக, இலங்கைத் தடயங்கள் தொடர்பின்றி உள்ளன. எண்ணிக்கையிற் கூடுமுன் இந்தியப் பழங்குடிகள் நெடுங்காலம் நெய்தலில் வாழ்ந்திருக்கலாம் என்றே சொல்ல வேண்டியுள்ளது. தவிர, தீவக்குறையின் திணையொழுங்கால் நருமதைக் கழிமுகந் தாண்டித் தெற்கே வந்தால், நெய்தலும், குறிஞ்சியும், முல்லையும் சில அயிரமாத்திரிகள் (கி.மீ.) அகலத்திலேயே நெய்தலையடுத்து இருப்பதால், ஒரு திணையிலிருந்து இன்னொரு திணைக்குத் தாவிப் போதலும், மாறி மாறி நகர்வதும் அவ்வளவு கடினமல்ல. தென்னிந்திய மேற்குக்கரையின் பூகோள அமைப்பு அப்படியிருக்கிறது. இது இயற்கை நமக்குக் கொடுத்த வரம்.

    ஒவ்வொரு திணையாக மக்கள் நகர்ந்தாரென இடதுசாரி ஆய்வாளர் சொல்வர். ஆனால் எல்லாத் திணை வாழ்க்கைகளும் சமகாலத்தில் இருந்திருக்கலாமென இப்பொழுது சிந்திக்க வேண்டியுள்ளது. இசுபென்சர் வெல்சின் தேற்றஞ்சொல்லும் நெய்தல் முகன்மை, (குறிஞ்சி. முல்லை, மருதம், நெய்தலென்று படித்துவளர்ந்த) நம்மூர் ஆய்வாளருக்கு, குறிப்பாகக் குமரிக்கண்டமெனும் ஒருமுனையாருக்கும், வேதம், சங்கதமெனும் மறுமுனையாருக்கும் பேரதிர்ச்சி தரலாம். ஈனியலாய்வை முடிந்தமுடிவாய்க் கொள்ளாவிடினும் அறிவியல் அடிப்படையில் இதைநான் பெரிதாய்க் கருதுவேன். திராவிடமொழியார் 8000 ஆண்டுகள்முன் இரான், பலுச்சித்தான், சிந்துசமவெளி வழி தெற்கே வந்தாரெனும் Dravidian Descent தேற்றத்தை விட Coastal Descent and subsequent Dravidian Ascent எனும் மாற்றுத்தேற்றம் மாந்தவியல், தொல்லியல் தடயங்களுக்குப் பெரிதும் சரியாய்ப் பொருந்துகிறது. இதன் நெளிவு சுழிவுகளையும் என் புரிதலையும் வேறொரு கட்டுரையில் விளக்குவேன்.

    ஆயிரமாண்டுகளில் மேற்கிலிருந்து தெற்கு சுற்றிக் கிழக்குக்கடற்கரை வழிநடந்த மாந்த நகர்ச்சியில் நெய்தலாருக்கு கடலோடலோடு கூடிய நெய்தற் பட்டறிவு சிச்சிறிதாய்க் கூடியிருக்கலாம். அதனால், புணை, கலம், ஓடமெனப் பல்வேறு ஏந்துகள் வடிவெடுத்தன. இத்தனை வடிவுகள் இக்கடற்கரைப் பகுதியிலெழ, மேற்சொன்ன திணைகள் அருகிருந்ததும் காரணமாகும். காட்டாய், ஆற்றுக் கழிமுகத்தில் விளையும் கோரைப்புற்கட்டைக் கடலிலிட்டால் மிதந்ததுகண்டு, பிணை>புணை செய்யமுற்பட்டார். [கொடு>கோடு>கோரை எனச் சொல்லெழும். தமிழ்நாட்டிற் பலவிடங்களில் - சென்னைப் பள்ளிக்கரணை, சிதம்பரம்-சீர்காழிவழி கொள்ளிடந்தாண்டிய தைக்கால், திருநெல்வேலி-செங்கோட்டைச் சாலையில் சேரன்மாதேவிக்கு முந்தையப் பத்தமடை- எனப் பலபகுதிகளிற் கோரை செழித்துவளர்கிறது. மேற்குக் கடற்கரையிலும் கோரைகளுண்டு. சிந்தாறு கடலிற் சேருமிடத்திலும் இவை வளர்ந்தன. கனம், கோல், சன்னம், நாணல் எனக் கோரைகளிற் பல விதப்புகளுண்டு. உலோத்தல் போன்ற சிந்துவெளித் துறைமுகத்தில் இதுபோன்ற புணைகள் செய்யப்பட்டிருக்கலாம். நம்மூர்க் கோரைகளை வைத்து ஆழமான ஆய்வுகளும், செய்துபார்த்துப் பிழைதவிர்க்கும் முயற்சிகளும் எழவேண்டும்.]

    கோரைக்கட்டுகளைப் பிணைத்தது புணை. அகம் 186-12 இல் கொழுங்கோல் வேழத்துப் புணையை பரணர் சொல்வார். கொழுங்கோல் வேழம்= கொழுத்த கொறுக்கம்புல் தட்டை (கரும்பிற்கும் வேழம் என்றதாற் குழம்புகிறோம் வெள்ளைநார்த் தட்டை வேழமாகும்.) 38 இடங்களுக்கு மேல் புணைபற்றிய சங்கக் குறிப்புகளுண்டு. (எகிப்து, சுமேரியா, சிந்து, அசிரிய, பாபிலோனிய. பொனீசிய, அசுடெக், மாய, இங்க்கா, ஈசுடர்தீவு, பாலினீசியப் பழம்நாகரிகங்களிற் புழங்கிய) கோரைப்புற் கட்டுகளாலான. reed-ship, read boat போன்றதே நம்மூர்ப் புணை. அழகன்குளத்தில் கண்டெடுத்த ஓட்டுச்சில்லிற் கீறிய ஓவியமும் இப்புணையைக் காட்டியது. மேற்சொன்ன நாடுகளிலெல்லாம் புணைநுட்பியல் தனித்தனியாய் எழ வாய்ப்பில்லை. அதேபொழுது முதலில் எங்கெழுந்தது? அறியோம். இவற்றைக் கட்டும் நுட்பம் இன்று சிலநாடுகளில் மட்டுமே எஞ்சியுள்ளது. எகிப்திய, சுமேரிய, இங்க்கா சான்றுகளைக் காண்கையில் 100பேர் பயணஞ்செய்யவும், பெருஞ்சுமை கொண்டுசெல்லவும் புணைநுட்பியல் உதவியது புரிகிறது. ஒருகாலத்தில் இவற்றைக்கொண்டு மாந்தர் பெருங்கடலையுங் கடந்திருக்கலாம். இற்றைக்கப்பல் நுட்பியல்கூடப் புணையிலிருந்தே வளர்ந்திருக்கலாம்.

    அடுத்தது கல்லப்(=தோண்டப்)பட்ட கலம்/ dug-out canoe. கடற்கரையில் உயர்ந்துவளர்ந்த மரந்தோண்டி உருவாகிய தொள்ளையும், தொண்டலும், தோணியுங்கூடத் ”தோண்டற்” பொருளின. குயவன் தோண்டியதும் தோண்டியே. களிமண்தோண்டிக் குடஞ்செய்யவும், மரந்தோண்டி கலஞ்செய்து நீர்கடக்கவும் முடிந்தது. உண்கலன், கொள்கலன், அணிகலன், படைக்கலன், அறைகலன், மென்கலன் என்று பொருட்பாடு விரிந்தது. கலமென்ற சொல் வளர்நிலையிற் dug-out canoeவை மட்டுங்குறியாது, பல்வகைக் கடலோடங்களைக் குறித்தது. தோணியும், புணையும் கலந்துசெய்த ஓட(raft) நுட்பியல் வந்தது. அதற்கப்புறம் அடித்தண்டோடு (நெஞ்செலும்புகளைப் போன்று) இருபக்கம் மரச்சட்டம் பொருத்திக் குவியும் கூட்டுச்சட்டம் வந்தது. (கூட்டிற்கும் hull ற்கும் சொற்பொருட் தொடர்புண்டு. நம்மூர் சீரை> சீலையே sail ஆனது. கப்பல் நுட்பியல் பற்றிய உலகின் பல்வேறு சொற்களுக்கும் தமிழுக்குமான ஆழ்தொடர்பைப் பாவாணர் சொல்வார்: இச்சொற்களை விரித்தால் அவை தனிக்கட்டுரையாகும்.)

    முடிவாக (நெஞ்சாங் கூட்டைத் தசைகளாலும், தோலாலும் மூடுவது போல்) நீர்நுழையாத படி மரப்பலகைகளை இழைத்துப் பொருத்தி, கயிறு, மர ஆணிகளாற் (இரும்பாணிகள் அப்புறம்) கூட்டை மூடி/ கவ்வி/கப்பிச் செய்யும் கப்பல் நுட்பியல் உலகெங்கும் பரவியது (”கப்பல்” என்ற சொல் எழுந்தவகை இப்போது புரிகிறதா?) பொதுவாக மரத்தில் கல்லியதென்றும், விதப்பாக மரச்சட்டங்களின் மேற் கப்புகளை வைத்துமூடும் நுட்பியலாற் கப்பல் செய்யப்பட்டது. குறைக்கொண்மையால் (carrying capacity), மரத்தோணி நுட்பியல் பெரிதும் வளரவில்லை. தமிழருக்கும் கப்பல்நுட்பியலுக்குமான தொடர்பு வரலாற்றில் பலவிடங்களில் வெளிப்பட்டது. பொ.உ.1421 இல் சீனவேந்தர் ஆணையால் உலகைச்சுற்ற முற்பட்ட சீன மாநாய்கன் செங்ஃகோ தன் கலங்களுக்கான ஏவலை (order) கோழிக்கோட்டிற் கொடுத்து, ஓராண்டு அங்கு தங்கி தனக்கு வேண்டியபடி கப்பல்செய்து போனானாம் ஏன் இங்குவந்து கப்பல் செய்யவேண்டும்? திறமை கருதித் தானே? (வாஸ்கோடகாமாவும் இங்கே வந்திறங்கினான்.)

    சாலியாற்றங்கரையும் அதனருகு சேரர் தொண்டியும் தெளிந்த கப்பல் நுட்பத்தால் சிறப்புற்றன போலும். (சேரலர்>கேரளர் அப்போது வட்டாரத்தமிழே பேசினார்.) தொண்டி>தோண்டியும், தோணியும், கப்பலுஞ் செய்ததால் தொண்டி என்றபெயர் அத்துறைக்கு ஏற்பட்டிருக்கலாம். (ஒருசிலர் தொள்ளப்பட்ட நிலமெனப் பொருள்கொள்வர். அச்சிந்தனை பொருத்தமில்லாதது.) பல்வேறுவிதமாய் ஆய்ந்து பார்த்தால், சேரரின் பழந்தொண்டி, பெரும்பாலும் கோழிக்கோட்டிற்கு மிக அருகில் இருந்திருக்கலாம். பன்னாட்டுக் கடல்நுட்பக் கலைச்சொற்கள் தமிழ்மூலம் காட்டுமென்று முன்சொன்னேன். (நுட்பந் தெரிந்தோரின் சொல் உலகெங்கும் பரவாதா? இந்தையிரோப்பிய மொழிகளின் ”ship” நம் கப்பலோடு s சேர்த்துத் தமிழ்த்தொடர்பு காட்டும். Old English scip "ship, boat," from Proto-Germanic *skipam (cognates: Old Norse, Old Saxon, Old Frisian, Gothic skip, Danish skib, Swedish skepp, Middle Dutch scip, Dutch schip, Old High German skif, German Schiff), "Germanic noun of obscure origin" [Watkins]. Others suggest perhaps originally "tree cut out or hollowed out," and derive it from PIE root *skei- "to cut, split.")
 

 —— 4 ——   


     கப்பல் நுட்பத்திற்கும் நெய்தல் வாழ்க்கைக்குமான இடையாற்றம் ஒருபக்கமிருக்க, கடற்கரைகளிற்கிடக்கும் தொல்பழங் கடலுணவு எச்சங்களின் அகழாய்வுச்செய்திகளை இன்னொரு பக்கம் பார்ப்போம். கடலுணவின் பரிமானம் அகன்றது. .ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவழி ஆத்திரேலியா போய்நகர்ந்த நெய்தலார் ஆயிரமாயிரம் ஆண்டுகள் முதலுயிரி (Protozoa), புரையுடலி (Porifera), குழிக்குடலி (Coelentterata), மெல்லுடலி (Mollusca), கணுக்காலி (Arthropoda), தண்டுடை (Chordata) ஆகிய பொலியங்களைச் சேர்ந்த பல்வேறு உயிரிகளையுண்டார். (Phylum; பொலிதல்=தோன்றிமிகுதல். கணமும் பொலியமும் ஒரேபொருளன.) இவற்றில்தான் மீன், நண்டு, இறால், கடல்நத்தை போன்ற உயிரிகளுண்டு.

    கடல் நத்தைகளும் நில நத்தைகள் போன்று முதுகிற் கூடுகளைக் கொண்டவை [அகட்டுக்காலி (gastropoda; அகடு=வயிறு) வகுப்பிலுள்ள நிலநத்தைகள் தம் வயிற்றையே கால்போல் ஆக்கி முன்தள்ளி நகர்வதால் நத்தைப்பெயர் ஏற்பட்டது. நுந்துவது தமிழில் முன்தள்ளைக் குறிக்கும். ) இவற்றின் கூடுகள் வீடுகளாய்த் தோற்றமளிக்கும். மெல்லுடலி வகையில் துருவலைக்(Turbinella) குடும்பஞ் சேர்ந்த துருவலைப் புருவமெனும் (Turbinella pyrum) கடல்நத்தையும் (sea snail with a gill and an operculum, a marine gastropod mollusk in the family Turbinellidae. இதையே சங்குயிரி என்கிறோம்), இன்னும் நால்வேறு கடல்நத்தைகளும் (நத்திலிகள் எனும் nautilusகள் அவற்றிலொரு வகை) கூடவே இறாலும் தென்னிந்தியக் கடற்கரையில், குறிப்பாகத் தமிழகத்தில், இணைந்தே வளர்கின்றன.   

    இந்தியாவில் கச்சு (130கி.மீ நீளம்), கேரளம் (65கி.மீ), தமிழகம் (720கி.மீ), ஆந்திரம் (கோதாவரிக் கழிமுகம்) வரை சங்குயிரி வளர்கிறது. (ஆந்திரத்தில் சங்குயிரியின் வளர்ச்சி குறைந்தது.) குறிப்பாக, வழுவழுப்பான, ஆழமில்லாத, வண்டல்கலந்த கடல்மணற்பகுதியில் (கடலுள் ஏறத்தாழ 16 கி.மீ அகலம்வரை), பவளப்பாறை/கடற்பாசிப் பகுதிகளில் சங்குயிரி வளர்கிறது. கடந்த 5000 ஆண்டுகளில் மேற்சொன்ன பகுதிகள் தவிர்த்து வேறிடங்களில் இது வளர்வதாய்த் தெரியவில்லை. கடலிற் கரைந்த உப்புச் சுண்ணாம்பே திரைந்துபோய் பீங்கான் படிகமாகிச் சுரித்துச் சங்குக்கூடாகிறது. The shell surface is strong, hard, shiny, and somewhat translucent, like porcelain. இந்தச் சங்குக்கூடுகளும், சிப்பிகளும், கிளிஞ்சல்களுமே நெய்தற்பகுதியில் சுண்ணாம்புத் தேவைக்கான இயல்பொருட்கள் ஆகும்.

    2 பரிமானத்தில் புரிச்சுருவை (spiral curve) எப்படியமையுமோ, அதுபோல் முப்பரிமானத்தில் 3 சங்குப்புரிகள் ஒன்றிற்குள் இன்னொன்றாயமையும். நத்தை, புரிகளுள் பதுங்குவதும் வெளிவருவதுமாய் தன் சேமத்தை (safety) நிலைநிறுத்திக் கொள்ளும் .(கடல்நந்தையின் குறுக்குவெட்டைப் புரி>spiral என்பார். தோற்றம் புரியாது நாமும் ஆங்கிலச்சொல் கையாளுவோம்.) சங்கில் இடம்புரி, வலம்புரி, சலஞ்சலம், ஐஞ்சுன்னமென 4 வகையுண்டு. புரியும் சலமும் (சுல்>சல்>சலம்), சுன்னமும் (சுல்+நம்=சுன்னம்) சுற்று, சுரி, சுழிகளைக் குறிக்கும். (சொற்பிறப்புத் தெரியாது சிலர் சலஞ்சலம், ஐஞ்சுன்னத்தைச் சங்கதம் என்பார். ஐஞ்சுன்னத்தைப் பாஞ்சசன்யமெனச் சங்கதத்தில் மொழிபெயர்ப்பார்.)




    புரி/புரியத்திற்கே (pyrum) சங்குப்பொருளுண்டு. (கடிகைச் சுற்றாய்) வலமிருந்து இடமாகப் புரிகளெழுந்தால் இடம்புரியென்றும். (எதிர்க்கடிகைச் சுற்றாய்) வலமெழுந்தால் வலம்புரியென்றுஞ் சொல்வர். இடம்புரிகளே எளிதிற் கிட்டும். பெருதகைப் (Probability) படி, 1000 இடம்புரிகளுக்கு 1 வலம்புரி கிட்டும். (ஒரு வலம்புரிக்கு 1000 இடம்புரி விலையுண்டு.) சலம்புரி = சங்கு. சலம் = நீர்வட்டம்; முத்துக்குளிக்கும் துறை. சலஞ்சலம் 4 புரிகளானது; வலம்புரியினும் அரிது. 1000 வலம்புரிகளுக்கு 1 சலஞ்சலம் கிட்டும். 5 புரிகள் கொண்ட ஐஞ்சுன்னம் இன்னும் அரிது. 1000 சலஞ்சலங்களுக்கு 1 ஐஞ்சுன்னம் கிட்டுமாம். சலஞ்சலம், ஐஞ்சுன்னம் இன்று கிடைப்பதாய் யாருங் கூறுவதில்லை.

    கம்பு>கம்புள், கவடு>கோடு, சுரிமுகம், நத்து>நத்தை, நந்து>நந்தம், நாகு, பணிலம், வளை போன்ற சொற்களும் சங்கைக்குறித்தன. கொற்கையருகே கடலுளழிந்த, சங்குநிறையக் கிடைத்தவூர் கவாடபுரம் ஆகும். (மேற்குறித்த இலக்கியச் சொற்கள் பேச்சுவழக்கின்றி சங்கே இன்று வழக்குள்ளது.)  ”விளங்குகொடி நந்தின் வீங்கிசை” என்ற சிலம்பு 26:203 வரியால் நந்தென்ற சொல் சங்கிற்கு இணையாய்ப் பயன்பட்டதும், சங்கோசை தமிழர்வாழ்வில் இருந்ததும் விளங்கும். நுகும் (முன்தள்ளும்) வினை, நுகு>நுகல்>நகலென விரியும். நகல்தல் நகர்தலாகி move ற்கு இணையாய்ப் பயன்படுத்துகிறோம். நகலும் உயிரி நகலியாகும். நாகு>நாவு>நாவாய் = துடுப்பால் முன்தள்ளும் கப்பல். நாகுதல்>நாவுதலை ஒட்டிப் பல சொற்கள் தமிழிலுள்ளன. அவற்றை இங்கு விரிக்கின் பெருகும்.

    ஆங்கில snail என்பது நகலியின் திரிவே. snail (n.) Old English snægl, from Proto-Germanic *snagila (source also of Old Saxon snegil, Old Norse snigill, Danish snegl, Swedish snigel, Middle High German snegel, dialectal German Schnegel, Old High German snecko, German Schnecke "snail"), from *snog-, variant of PIE root *sneg-"to crawl, creep; creeping thing" (see snake (n.)). The word essentially is a diminutive form of Old English snaca "snake," which literally means "creeping thing." Also formerly used of slugs. Symbolic of slowness since at least c. 1000; snail's pace is attested from c. 1400.

    வளர்ச்சிபெறாச் சங்குகளைச் சங்குப்பூக்களென்றும் இளநாடுகளென்றுஞ் சொல்வர். கடல்நீரில் முக்குளித்துச் சங்குபுரட்டி எடுத்துவருவது சலம்பல்>சலப்பலாகும். சலம்புமிடம் சலாபம். பரந்து கிடக்கும் சங்கு, முத்து விளையிடங்கள் ”பார்” என்றுஞ் சொல்லப்படும். கடல்நத்தைக் கறியை அதன் மென்தசை காரணமாய்ப் பச்சையாகவும், சமைத்துஞ் சாப்பிடுவர். மிஞ்சும் கழிவுகளும், கடல்தாவர வழிப் பெற்ற பொருள்களுமான சங்கு, மீனெலும்புகள், பல்வேறு உயிரியோடுகள், சிப்பிகள், கிளிஞ்சல்கள், முத்து, பவளம், போன்ற பொருள்களையும் தூக்கிப் போடாது, செய்துபார்த்துத் பிழைதவிர்க்கும் (trial and error) முறையில் படைக்கலன், உண்கலன், கொள்கலன், அணிகலனெனப் புதுப்பயன் வடிவுகொண்ட பொருள்களை பழங்குடிமாந்தர் செய்தார்.

    அப்படிச் செய்ததின் முதற்படியாக்கமே, ஓய்வுநேரத்தில் சங்கின் உச்சிவழி துளையிட்டு [by cutting a hole in the spire of the shell near the apex] ஓசையெழுப்பி மற்றோரை அழைத்ததாகும். இன்றும் நாட்டுப்புற வாழ்வில், பிறப்பு, திருமண, பிறவிழா, இறப்பு நிகழ்வுகளில் மற்றோரையழைக்கச் சங்கு பயன்படும். பழங்காலக் குடியிருப்புகளில் நாட்டுப்புறங்களில் 6 மணிக்குச் சங்கூதுவதும் உண்டு. இன்றும் பலவூர்களில் மின்சங்கூதுவர். (தமிழரோடு ஈனியலுறவுகொண்ட ஆத்திரேலியப்பழங்குடிகளின் நடுவிலும் சங்கூதும் பழக்கமுண்டு.) ஒரு காலத்தில் கப்பலோட்டத்திலும் ஒருங்குமுயற்சிக்குக் கடலோடிகளை அழைக்கச் சங்கே பயன்பட்டது. போர்தொடங்கவும் சங்கே பயன்பட்டது. இற்றை வீளைக்கு (whistle) மாறாய்ச் சங்கு பயனாகியது. ”சங்கே முழங்கு” என்ற கூவல் வெற்றானதல்ல.

    நெய்தல்வாழ்க்கையிற் சங்கு மட்டுமல்ல முத்தும் பவளமுங்கூடக் கிடைத்தன. சிப்பியில் மட்டுமின்றி, கடல்நத்தை போன்ற மெல்லுடலிகளிலும் முத்து பிறக்கும். இவ்வுயிரிகளுக்குள் ஒரு நுண் குருணை புகுந்து உறுத்துகையில் உமிழ்நீர்சுரந்து குறுணைமேல் தொடர்ந்துபடிந்து சுண்ணாம்புப்படிகமாகி உருள்முத்தாய் (முள்>முட்டு>முத்து) மாறி வளரும். மு>நு திரிவில் முத்தை நுத்தென்றுஞ் சொல்வர். நுத்து> நித்து>நித்தில் ஆகும். வரலாற்றுவளர்ச்சியில் நித்தில்>நிதில்>நிதியாகிச் செல்வத்தைக் குறித்தது. அக்காலத்தில் முத்தே சங்க நிதியானது. (பாண்டியர்க்குப் பெரிதாயும் சேரர்க்குச் சிறிதாயுங் கிடைத்தது.) பவளம் பதுமநிதி ஆயிற்று. (சோழநாட்டில் பவளம் அதிகம் கிடைத்தது.) கடலிற் சோழி/கவரி/கவறு போன்றவையே 3 நாடுகளிலும் சிறுநாணயங்களாயின. மாழை கிடைத்து நாணயம் அச்சடித்தது நெடுநாட்கள் கழித்தேயாகும். (நாணயம் என்ற சிந்தனைகூட நெய்தலில் தொடங்கியிருக்கலாம்.) இதுபோக மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்குச் சாரலில் பல்வேறு வகைக் கனிமங்கள் கிடைத்த கதை இன்னும் பெரியது. (பாண்டியர்/சேரரின்) முத்து, (சோழரின்) பவளம், (கொங்கின்) மணிகள், (கோலாரின்) தங்கம், (சேர்வராய மலையின்) கனிமமெனத் தமிழகத்தில் வளமான பொருளியல் வளர எல்லா வாய்ப்புக்களும் அமைந்தன. நாகரிகம் எழுமளவிற்குப் பழங்குடி மாந்தர் இங்கேயே நெடுங்காலம் தங்கியிருந்தார். ஆனால் நாகரிகம் என்றெழுந்தது என்பது சரியாய்த் தெரியாது.

    நெய்தல் நாகரிகம் படிப்படியாக வளர்ந்து மற்ற திணைகளுக்கும் பரவியது. பெருத்த ஆமையோடே குடிசைக் கவிப்பாயிற்று. பெருமீன்களின் தோல்கள் பல்வேறு ஆடைகளுக்குப் பயன்பட்டன. கடற் பாசிகள் சாப்பாட்டிற் சேர்ந்தன. பெருமீனின் விலாவெலும்பைத் தூக்கி எறிந்தால் சக்கரம்போற் சுழலும் வளைதடியானது. (மாலவன் கைச் சக்கரமென்றவுடன் ஓவியர் கொண்டையராஜு வரைந்த சக்கரப் படிமையை நம்மிற் பலரும் எண்ணிக்கொள்கிறோம். ஆய்வுநோக்கிற் பார்த்தால், கடிதோச்சி மெல்ல எறியும் கைக்கு வாகாயும், தூக்கியெறிந்தால் பார்ப்போருக்குச் சக்கரம்போல் தோற்றந்தருவதும் வளைதடியே. இவ்வியலுமையை யாரும் எண்ணாதுள்ளோம். பெருமாளின் கைச்சக்கரம், பெரும்பாலும் வளைதடியாக இருக்கலாம்.) பெருத்த எலும்புகளே நெய்தலிற் குண்டாந்தடிகளாயின. ஈட்டிகளும் சூலங்களும் எலும்பின் ஒடிப்பாலும் கல்லுடைப்பதாலும் பெறப்பட்டன. வாள்தவிர்த்து நம்மூரில் சொல்லப்பட்ட எல்லாக் கொலைக்கருவிகளுக்கும் முதன்மை இயல்பொருள் (raw material) எலும்பாக இருந்ததிருக்கலாம். கல்லையும், இரும்பையும் பின்னர் பழகியிருக்கலாம். 

    நெய்தல் நாகரிகத்திற் கிளைத்த அடுத்த ஆயுதம் வில்லாகும். பெருமீன்களின் (ஒல்லியான) மார்பெலும்புகளை (கற்றாழைக்கயிறு போன்ற) நரற்கயிற்றாற்கட்டி கல்முனை அம்புகளைப் பொருத்தி இதைச் செய்திருக்கலாம். எளிதிலொடியும் இவ்வகை வில்களிலிருந்து சிலகாலங்கழித்து ஆற்றுக்கழிமுகங்களில் வளரும் பிரம்புத்தடியால் (Calamus rotang; முன்கூறிய பள்ளிக்கரணை, தைக்கால், பத்தமடை போன்றவற்றில் இதுவும் வளர்கிறது. கேரளத்திலும் வளரலாம்.) புதுவகை வில்களைச்செய்தார்; இன்னுங்காலஞ்செல்ல மலையில்வளரும் திண்மூங்கில்கள் (solid banboos; கேரளம்/தமிழ்நாடு எல்லையில் உள்ள ஆனைமுடியில் வளரும் Arundinaria densifolia and Arundinaria walkeriana. எல்லா மூங்கில்களும் திண்மூங்கில்கள் அல்ல. பல மூங்கில்களின் கணுக்கள் (nodes) கூடானவை) கொண்டுசெய்தார்.

    மேலுங் காலங்கழித்து ஞெமை (Anogeissus latifolia. இதற்கு Dhavala என்ற சங்கதப் பெயருண்டு.) மரக்கிளைகளை நேராக்கிச் செய்தார். (சங்கநூல்களில் 9 வெள்ஞெமைக் குறிப்புகளுண்டு). அடுத்து வில்லைச் செய்யக் குங்கிலியமரத்திற்கும் (Shorea robusta. இதை யா/ஆச்சாவோடு சிலர்குழப்புவர். யா/ஆச்சா = Hardwickia binata) தாவினார். தெற்கே குங்கிலியம் வளர வாய்ப்புக் குறைவு. வடக்கு வணிகத்திற்றான் அது வரவேண்டும். வடக்கிலிதைச் சாலமரமென்பார். மகதத்தின் வடபகுதிகளில் நன்றாகவே வளர்ந்தது.) முடிவில் உள்ளூர் வெண்மருதிற்கும் (Terminalia arjuna; சங்கதத்தில் Kukubha என்பர்) வந்துசேர்ந்தார். நெய்தலையொட்டி மற்ற திணைகளில் இத்தனையும் கிடைத்த காரணத்தால், எண்ணிக்கை கூடுமளவிற்கு நெய்தலில் பழங்குடிகள் நெடுநாள் வாழ்ந்திருக்கலாம்.

    கத்தி/வாள் எனும் ஆயுதம் நெடுநாட் கழித்து, இரும்பைக் கண்டுபிடித்த பின்னர் முல்லைவாழ்க்கையில் நுழைந்தபின் எழுந்து குமுகமாற்றத்திற்குக் காரணமானதுபோல் தெரிகிறது. (செம்பு சிலவிடங்களிற் கிடைத்தது. செம்புக்குப் பின்தான் இரும்பு வந்ததென்பது தமிழகத்தைப் பொருத்தவரை ஒருவகை வறட்டுவாதமே. இக்காலத் தொல்லியலார் பலருமிதைக் கேள்வி கேட்கிறார்). ஆயுதங்கள் போக, பேச்சிற்குப்பின் எழுந்த எழுத்தையும் கூட நெய்தல் நிலத்தாரே முதலிற் பழகியிருக்கலாம். (எல்லாமே குறிஞ்சி என்பதை நாம் கேள்விகேட்க வேண்டும்.) தாழை, கடற்கரைப் பனையோலை வழியாகப் எழுத்துப்பழகுவதற்கும் நெய்தலில் வழிகளுண்டு. இவ்வளவு தொலைவு நான்சொல்லக் காரணம் நெய்தல்நிலத்தாரை வெறும் மீனவரென நம்மிற்பலர் குறைத்துமதிப்பிடுவதே. குறிஞ்சி/முல்லை/.மருதத்தின் பெருமையே நம்மூரில் பலவிடங்களில் பேசப்படுகின்றன. ஆனால், நெய்தலின் இயலுமையைக் காணும் மாற்றுக்கோணம் ஏன் உண்மையாய் இருக்கக்கூடாது?

 —— 5 ——  


    இனிச் சங்கென்ற சொல்லின் சொற்பிறப்பிற்கு வருவோம். வரலாற்றுக் கண்ணோட்டத்திற் பார்த்தால் சங்கின் வளைவுப் பொருளே முதலிலெழ வாய்ப்புண்டு. வளைவுப்பொருள் கொண்ட சுல்லெனும் வேர்ச்சொல்லில் கிளைத்த நூற்றுக்கணக்கான சொற்களை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். சுல்>சுள்>சுழி, சுழி>சுரிதல்>சுரித்தல்; சுரிகுழல், சுரிகை, சுரிதகம், சுரிந்து, சுரிப்புறம்=சங்கு, நத்தை, சுரிமுகம்= சுழித்தமுகமுடைய சங்கு, சுரிகுழல், சுரியாணி, சுருங்கு, சுருக்கு, சுருட்டு, சுருணை, சுருள், சுலவுதல், சுழல், சுளுக்கு, சுறட்டுக் கோல், சுறு> சுற்று> சுத்து எனப் பல சொற்கள் நினைவிற்கு வருகின்றன.  சங்கையும் அதன் தொடர்பான சக்கு, சக்கரம், சகடம் தவிர்த்த மற்றவற்றை இங்கு நான் விளக்கவில்லை. அப்படிச்செய்தால் கட்டுரை நீளும்.

    சுல்க்கு> *சல்க்கு> சக்கு என்பது வட்டப் பொருளையும், உருண்டைப் பொருளையுந் தரும். சக்கு>செக்கு= வட்டமாய்ச் சுற்றி எள்நெய் பிழிவிக்கும் இயந்திரம். (அகரச்சொற்கள் எகரத்தில் தெரிவது பல சொற்களில் நடந்துள்ளது. பரு>பெரு.) வட்டப் பொருளே இச்சொல்லில் முகன்மை. வட்டமாய்ப் பூக்கும் பூஞ்சாளம்/பூஞ்சணமும், உருண்டைக்கண்ணும் சக்கெனப்படும். (முகத்தின்வழி பார்ப்பதற்குக் கண், மீன்போல் தோற்றமளித்தாலும், கண்ணுறுப்பைத் தனியே எடுத்துப் பார்த்தால் அது உருண்டையே.) சக்கான பலாப்பழம் சக்கைப்பழம். மலையாளத்தில் இதுவே பரவலாய்ப் புழங்கும். (நீளுருண்டை ஆயினும் சக்கையின் பெயர் அப்படித்தான்.) குண்டுமுல்லை சக்கைமுல்லை எனப்படும். உடல்வலியற்றுக் குண்டாய்ப் பருத்தவன் சக்கையன் எனப்படுவான். (யாழ்ப்பாண அகராதி). உருண்டையில் இருந்து மிகுதிப் பொருள் வரும். ”மழை சக்கையாய்ப் பெய்கிறது.”

    சக்கிற் பெரியது சக்கம். இதற்கும் வட்டப் பொருளுண்டு. சக்கத்தின் நீட்சி சக்கடம். சக்கடவண்டி என்பது மேற்கூடில்லாத கட்டைவண்டி. நாட்டுப்புறங்களில் வேளாண் ஊடாக இன்றும் சக்கடவண்டி புழங்குகிறார். சக்கடவண்டி சக்கரவண்டியாகவும் திரியும். சக்கரத்தைச் சங்கதம் உள்வாங்கிச் சக்ரமாக்கும். (சக்ரமே முதலென்போர், மேலே சொன்ன மற்றசொற்களை ஒதுக்கிவிடுகிறார். சிக்கலே இங்கு தான் உள்ளது. வெறுமே ஒற்றைச்சொல்லைப் பார்த்து முன்னுரிமைகளைச் சொல்லமுடியாது. மொத்தக் கூட்டத்தையும் பார்த்தே சொல்ல வேண்டி யுள்ளது. அதனாற்றான் இராம.கி.யின் கட்டுரைகள் நீளமாயுள்ளன.) சக்கு>சக்கம்>சக்கடம்>சக்கரம்>சக்ரம். சக்கடமிருந்தால் ”*சக்கடு” இருந்திருக்கலாம். ஆனால் அதன்பயன்பாடு நமக்குத் தெரியவில்லை. அதன்தொகுதியான சகடும், சகடமும் ”சக்கரம், வண்டி”யென்ற பொருட்பாடுகளில் இன்றும் பயிலப்படுகின்றன. சக்கு>*சக்கடு>சகடு>சகடம். அம் ஈற்றிற்கு மாறாய் ஐ எனும் ஈற்றைச்சேர்த்து சகடை என்ற சொல் உருவாகி, வண்டியைக் குறித்தது.

[சகடு-சகடை-சகடம் என்ற சொல்லிணை போலவே உருள்-உருளி-உருளம் என்ற இணையுமுண்டு. இங்கும் முதற்சொல் சக்கரத்தையும், 2,3 ஆம் சொற்கள் வண்டியையும் குறித்தன. எப்படிச் சோளம்> சோழம் என்பது தெலுங்கில்போய் டகரம் ஆகி (சோடம்; தெலுங்குச் சோடர்) இன்னும் வடக்கேபோய்த் தகரமாய்த் திரிகிறதோ, அதுபோல் உருளம்>உருடம்>(உ)ருதம் என்றாகி உகரவொலி மறைந்து அகரவொலியேறி ரதமாகும். (தமிழரில்பலரும் ரதமும் தேரும் வேறானவை என்றெண்ணுகிறார். இரண்டும் ஒருபொருட்சொற்கள் தாம்.) ரதத்தை ஒட்டி இந்தையிரோப்பியச் சொற்கள் பலவிருக்கின்றன. இன்னும்பார்க்கின், சக்கரத்திற்கும் மேலைமொழிகளின் chariot, car க்குங்கூட ஆழ்தொடர்புண்டு. (மூலந்தெரியாது சிந்தனை மயங்கிய நிலையில், முரணைப் பேசாது, car ஐச் சகடை/சகடம் என்றழைக்க நம்மில் எத்தனைபேர் முன்வருவர்? மரபோடு இவற்றைப் பொருத்தாவிடின், சுற்றிவளைத்துக் காலகாலமும் மகிழுந்தைப் புழங்கவேண்டியதுதான்; அன்றேல் காரைக் கடன்வாங்கி எழுதவேண்டியதுதான்.]

    சக்கின் மெல்லோசைச் சொல் சங்கு. சங்கிற் பெரியது சங்கம். சக்கு>சங்கு>சங்கம். வடிவியலில் 360 பாகையில் சுற்றிவரும் போது ஒரே நீள ஆரங் கொண்டிருந்தாற் கிடைக்கும் வடிவம் வட்டமாகும். சக்கரம் வட்டவடிவம். இதில் வளைச்செலுத்தம் (turning process) மட்டும் நடைபெறுகிறது. மாறாக ஒவ்வொரு பாகைக்கும் வளைச்செலுத்தமொடு ஆரநீளமும் சீராகக் கூடுமெனில், வளைச்செலுத்தம்+ ஆரநீட்டம் ஆகிய செலுத்தங்களால் புரிச்சுருவை (spiral curve) உருவாகும். சங்கு என்பது முப்பரிமானப் புரிச்சுற்றில் எழுந்தது. அடிப்படையில் வட்டம், மூடிய சுற்று. புரிச்சுருவையோ மூடாச் சுற்று. உயிரியலில் சங்குயிரியின் அஃகில்நெக்காடியைப் (DNA; Deoxytibo Nucleic Acid/ அஃகிலரப நெற்றுக் காடி) பொறுத்து, இடம்புரி, வலம்புரி, சலஞ்சலம், ஐஞ்சுன்னம் என்று பல்வேறு வகைச் சங்குகள் விளையும். நம் விரலிற் காணும் வரிகளில் [வரிகையே சங்கதத்தில் (வ்)ரேகையானது.] கூட ஒருவகை சங்காயும். இன்னொன்று சக்கரமாயும் அமையலாம்.

    இதுவரை சங்கின் வளைப்பொருள் பார்த்தோம். குபேரநிதிகளைச் சேர்ந்த சங்கநிதி (முத்து), பவளநிதியும் சங்கோடு தொடர்புற்றவை தான். சங்கை அறுத்துப்பெற்ற கைவளையும், சங்கு போல் வளைவு கொண்ட நெற்றியும், சங்கைப் போல் ஓசையெழுப்பும் துளைகொண்ட குரல்வளையும், சங்கு போல் வலக்கை, இடக்கைகளைப் பிடித்துக்காட்டுவதால் அமையும் உள்ளடங்கிய கைக்குழியும், காலிற் சங்கு பொருத்தியதுபோல் அமையும் கணைக்காலும் என எல்லாமே சங்கோடு மரபு வரிதியாய்த் தொடர்புற்றன. முடிவில் அழகெனும் பொருளும் சங்கின் வெண்மை கருதி ஏற்பட்டது. சங்கு நிறையக் கிடைத்த இடங்களில் நிலவிய வட்டார மொழிச்சொல் இந்தியா எங்கணும் பரவி நிலைக்குமா? சங்கதப்பெயர் நிலைக்குமா? சங்கு தமிழில்லையென்பது எப்படிச் சரியாகும்? கடலை விட்டுப் பெரிதும் தள்ளிவளர்ந்த, படித்தவரிடையே மட்டுமிருந்த, சங்கதத்திலா “சங்கென்று” பெயரிடுவார்? இனிச் சங்கு பற்றிய, பொ.உ. 6 ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய, இலக்கியச் சொல்லாட்சிகளைப் பார்ப்போம்..

பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணாது
இருங்கடன் மூழ்குவார் தங்கை - இருங்கடலுள்
முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே
ஒத்தனம் யாமே யுளம்.

என்ற கணிமேதாவியாரின் திணைமாலை நூற்றைம்பதில் 33.ஆம் பாடலே நானறிந்தவரை சங்கின் நேரடிப் பயன்பாட்டிற்கு முதற்சான்று. சிலப்பதிகாரத்தின் காலம் பொ.உ.மு.75 என்று என்’ சிலம்பின் காலம்” நூலில் நிறுவினேன். அதில், ”பகையணங்காழியும் பால்வெண்சங்கமும், பணில வெண்குடை” என்று வரும் (11:43). சிலம்பு பொ.உ. 5 ஆம் நூற்றாண்டென்பதை நான் ஒப்புவதில்லை.

”தத்துநீர் அடைகரைச் சங்கு உழு தொடுப்பின்
முத்துவிளை கழனி முரிசெம் பவளமொடு”

என்ற பொ.உ.400 களைச் சேர்ந்த மணிமேகலையின் 8: 3-4 ஆம் வரிகள் சங்கின் தொடர் பயன்பாட்டை உறுதிசெய்யும்.

‘சங்கறுப்ப தெங்கள் குலஞ்சங் கரர்க்கங் கேதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோ மினி‘

என்பது நக்கீரர் பாடியதாகச் சொல்லப்படும் பாடல். இதன்காலம் தெரியாது. பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக்கும் சங்கரனெனும் பெயருண்டு. ஏனையக்கடவுளர் எதோவொரு தாய் வயிற்றில் பிறந்தவராம். பிறவாயாக்கைப் பெரியோனுக்குக் குலமில்லையாம். சுடலைப்பொடி பூசிப் ’பிச்சாஞ்தேகி’யாகிக் கபாலத்தில் பிச்சையெடுத்து உண்பதாகப் புராணங்கள் சொல்லும். நக்கீரர் பின்னிரண்டு அடிகளில் சிவனின் இரந்துண்டுவாழும் செயலைக் குறிப்பிட்டு ”நாங்கள் சங்கை அரிந்துண்டு வாழ்வோமேயன்றி உம்போல் இரந்துண்டு வாழோமெ”னச் சொன்னதாய் இப்பாடல் கூறும்.  

 
 —— 6 ——  


    70000 ஆண்டுப் பழங்குடிகளின் மிச்சசொச்சமாய்த் தமிழர் இருந்திருக்கலாம் என்று எண்ணுவதற்கு இன்றுமுள்ள சங்குப்பயன்பாடும் விளக்கங்களும் ஒரு காரணமாகும். கூட்டம் பெரிதானபின், சங்கின் பயன்பாடு ஓசையெழுப்புவதற்குப் பயன்பட்டிருக்கலாம். ஒருவேளை கூட்டக்கருத்தே கூட இதன்வழி தான் எழுந்ததோ, என்னவோ?. விரைந்த நகரவாழ்வில் இன்றிது அரிதாகினும், தென்பாண்டியின் நாட்டுப்புற வீடுகளில் பொங்கல் நாளில் தங்கள் வீட்டிற் “பால் பொங்குவதைச்” ஊராருக்குத் தெரிவிக்கச் சங்குமுழங்குவது நம்மைச் சிந்திக்க வைக்கிறது. ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் குறுஞ்செய்தி தெரிவிக்கச் சங்கூதுவதும் முரசறைவதும் வெள்ளைக்காரன்காலம் வரையிலும் இங்கிருந்த பழக்கம். கட்டபொம்மன் காலையுணவு அருந்துமுன் திருச்செந்தூரில் முருகனுக்கு பூசையாயிற்றா என்று நாளும் அறிய விழைவானாம். ஒரு கல்லிற்கு ஒருக்காய் செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு முரசறைவித்துச் சங்கும் ஊதுவராம். இது போன்ற செயற்பாடுகள் தமிழகத்தில் ஏராளம். ”குழந்தை பிறந்தபோது ஊதப்படும் முதற் சங்கம், திருமணத்தின்போது ஊதப்படும் இரண்டாஞ் சங்கம், வாழ்நாள் முடிகையில் ஊதப்படும் மூன்றாஞ் சங்கம்” பற்றிப் பட்டினத்தார் பாடுவார்.

முதற்சங் கமுதூட்டும்; மொய்குழலார் தம்மை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச்சங்கம்
ஆம்போ ததுவூதும்; அம்மட்டோ? இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த தலம்.

    இதுபோன்ற செயல்கள் வழக்கிலிருந்தவை தாம். பிறந்த பிள்ளைக்கு சங்கின்வழி மருந்தூட்டுவதும் கூட அண்மைக்காலம் வரை நாட்டுப்புறங்களிலிருந்த பழக்கமே. நெய்தலிலிருந்து மற்ற திணைகளுக்கு இதுபோன்ற சங்குப் பயன்பாடுகள் விரிந்தன போலும். ஆனால் சங்கின் கூட்டப்பொருள் சொற்பிறப்பின்வழி ஏற்பட்டதாவென்பது வேறுகேள்வி. அடிப்படையில் இரு வேறு சொற்பிறப்பில் உருவாகி ஒரே மாதிரி ஒலிக்குஞ் சொற்களாகவே இவை தோன்றுகின்றன. விரிவாய்ப் பார்ப்போம்.

    உம்முதலெனில் பொருந்துதல், கூடுதலென்று பொருள் கொள்ளும். ”அவனும் நானும், இனியனுமாய் பள்ளிக்கூடம் சென்றோம்.” இங்கே உம் எனும் உருபு கூட்டப்பொருளைக் குறிக்கிறது. உம்>அம் என்றாகி, அம்முதலுங் கூடப் பொருந்தலைக் குறிக்கும். அம்>அமை; அமைதல் = பொருந்தல். தெலுங்கில் அம்முதல் என்பது "ஒருபொருளின் மதிப்பில் உடன்பட்டு விற்றல்" என்று பொருள்கொள்ளும். அம்முதலில் வந்ததே தமிழிலுள்ள சிறப்புச்சொல்லான அங்காடி. தெலுங்குச்சொல் தெரியாது போயிருந்தால், அங்காடி எப்படி வந்ததென நமக்குத் தெரியாமலே இருக்கும். உம்முதலின் முன்னே சகரம் சேர்த்தமையலாம். சும்>சும்மை என்பது மிகுதியைக் குறிக்கும். சும்மைக்கு முந்திய ’சும்முதல்’ எனும் வினைச்சொல் (கும்முதலைப் போல்) மிகுத்தலைக் குறித்திருக்க வேண்டும். [மிகுத்தலில் இருந்து கூட்டப்பொருளும் பருத்தற் பொருளும் இயல்பாக வரும்.] சும்முதல் தொடர்பான பெயர்ச் சொற்களைப் பதிந்த அகரமுதலிகள் வினைச்சொல்லைப் பதிவாக்கவில்லை. வியப்புறுகிறோம்.] சும்மையொட்டி, சுமை, சுமடு, சும்மாடு, சுமத்தலென்று பல்வேறு சொற்களும் அகரமுதலிகளிற் பதிவாகியுள்ளன.

    சம் என்ற சொல்லிலிருந்து சமமென்ற சொல்லுமெழும். சமம்போன்ற அடிப்படைச் சொல்லைத் தமிழ் கடன் வாங்கியிருக்க வழியில்லை. சம்முதல், சமத்தல், சமலுதல் = ஒன்றைப் போல் இன்னொன்றாய் ஒருங்கிருத்தல் என்பதற்கான வினைச்சொல் இந்தையிரோப்பியனிலும் நேரடியாயில்லை. same என்ற பெயர்ச்சொல் மட்டுமே சுற்றிவளைத்துக் கூடுதல், உடனிருத்தல் பொருளில் எழுந்துள்ளது. உடன் இருப்பன ஒன்று போல் இருக்க வேண்டுமென்று புரிந்து கொள்கிறோம்.
.
    perhaps abstracted from O.E. swa same "the same as," but more likely from O.N. same, samr "same," both from P.Gmc. *samon (cf. O.S., O.H.G., Goth. sama; O.H.G. samant, Ger. samt "together, with," Goth. samana "together," Du. zamelen "to collect," Ger. zusammen "together"), from PIE *samos "same," from base *sem- "one, together" (cf. Skt. samah "even, level, similar, identical;" Avestan hama "similar, the same;" Gk. hama "together with, at the same time," homos "one and the same," homios "like, resembling," homalos "even;" L. similis "like;" O.Ir. samail "likeness;" O.C.S. samu "himself"). O.E. had lost the pure form of the word; the modern word replaced synonymous ilk (q.v.).

    இதே கருத்தைச் சமமென்ற சொல்லை மட்டுமின்றி, இன்னும் பல சொற்களைச் சேர்த்து ஒட்டு மொத்தமாக ’சமயம்’ என்ற தலைப்பில் நண்பர் ஆசீப்பின் வேண்டுகோளுக்கிணங்கி அவர்களின் கானல் சிறப்பிதழில் எழுதினேன். பின் அதை என் வலைப்பதிவிலும் பதிந்தேன். கீழே சுட்டிகள் கொடுத்திருக்கிறேன்.

http://valavu.blogspot.com/2006/03/1.html
http://valavu.blogspot.com/2006/03/2.html
http://valavu.blogspot.com/2006/03/3.html
http://valavu.blogspot.com/2006/03/4.html
http://valavu.blogspot.com/2006/03/5.html
http://valavu.blogspot.com/2006/03/6.html

    இக்கட்டுரைத் தொடரிற் சொல்லியிருப்பதை மீண்டுஞ் சொல்வதிற் பொருளில்லை. எனவேதான் சுட்டிகள் கொடுக்கிறேன். சமமென்ற சொல்லிற்கு இணையாகத் திராவிட மொழிகள் பலவற்றிலும் [சமம் - மலையாளம், சம-கன்னடம், படகர், சமமு-தெலுங்கு] சொற்களுள்ளன. சமத்தை ஒட்டிய பல சொற்களும் மற்ற திராவிடமொழிகளிலுண்டு. அவற்றில் சிலவற்றை பர்ரோ-எமெனோவும் பதிவுசெய்துள்ளார். வெறும் ஒற்றைச்சொல்லை மட்டும் பார்க்கும் பழக்கத்தை அருள்கூர்ந்து நிறுத்தித் தொடர்புடைய பல்வேறு சொற்களைத் திராவிட மொழிகளிற் பார்க்கப் பழகுங்கள். இத்தனை மொழிகளில் இக்கருத்தும், கருத்தின் வளர்ச்சியும் இருந்தால் அது முந்து திராவிடத்திலும் இருந்திருக்குமென அறிவூகம் (intuition) சொல்லும். [முந்துதமிழென நான்சொன்னால் முன்சொன்னதுபோல் பலரும் ஏற்கார்.. பொதுவாகப் புகர் நிறத்தார், கருப்பர் சொல்லை மற்றதமிழர் கேட்பதில்லை :-)))] அப்படிப்பட்ட முந்துதிராவிடக் காலத்தில் வேதமொழி இந்தியாவினுள் நுழையவில்லை என்றே வரலாற்று மொழியியல் சொல்கிறது.

    அப்படியும் மீறி முந்துதிராவிடத்திலும், இந்தையிரோப்பியத்திலும் ஒரேபொருளில் ஒருசொல் அமையுமானால் அது பழஞ்சொற்களின் மிச்சசொச்சம் என்பதே அறிவிற்குகந்தது. திராவிடமொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் இடையே ஏதோ உறவு முந்து பழங்காலத்தில் நாகரிகந் தோன்றுங் காலத்தில் இருந்திருக்கிறதென்று கருதுகோள் கொண்டால் இதுபோல் ஒப்புமைகளை ஆராயலாம். [நான் அப்படியொரு கருத்துக்கொண்டவன்.] மாறாக ஒப்புமைப்பொருள் சொல்லத் தமிழருக்குச் சொல் கிடையாதென்று அச்சடித்தாற்போல் வேதமோதி, ”வடமொழிமேடு, தமிழ்பள்ளம், மேட்டிலிருந்து பள்ளத்திற்கு நீர்பாய்ந்தது” என்று கிளிப்பிள்ளைபோல் கூச்சலிட்டு முட்டுச்சந்திற்குள் முன்னும்பின்னும் போய்வந்து கொண்டிருக்கலாம். I take சமம் as common stock of Dravidian and Indo-European. Period. Such common stock is to be ascertained over a long period of research. முடிவாக same = சம என்றே நான் கொள்ளுகிறேன்.

    சமம், சமன், சமல் என்பவை பல்வேறு ஈறுகளில் முடியும் ஒருபொருட் சொற்களில், சமம் என்பதையே பெருவாரியாகப் பயன்படுத்தி மற்ற இரண்டையும் இக்காலத் தமிழில் துறந்து கொண்டுள்ளோம். கும்முதல் = கூடுதல் போலவே சம்முதல் = கூடுதல் என்பதும் பிறந்தது. கூடும்பொருட்கள் ஏதோ ஒருவகையில் ஒரேமாதிரி இருக்கவேண்டிய காரணத்தால், ”ஒன்று போலிருந்தல்” என்ற வழிப்பொருள் பிறந்தது. முதற்பொருள் கூடுதலே. இரண்டாம் பொருளே ஒன்றுபோலிருத்தல். சம்மோடு தொடர்புடைய செம்முதலையும், அதையொட்டி செ, செம், செவ், செய் போன்ற முன்னொட்டுக்களையும், அவை உருவாக்கிய சொற்களையும் இங்கே எண்ணிப்பார்க்கலாம். 

    அம்முதல் = பொருந்துதல்; அம்>அங்கு>அங்கம் = பொருந்திய உறுப்பு; கும்முதல் = குற்றுதல்; கும்>குங்கு = குன்றியது; கும்முதல்>கொம்முதல் = குவிதல்; குங்கு>கொங்கு = குவிந்த மேடான பகுதி; மலைகளையும், குன்றுகளையும் ஒதுக்கி நிரவலாய்ப்பார்த்தால் தமிழகத்தில் கொங்குப் பகுதியே மேட்டு நிலம். சும்முதல்= தொகுத்தல்; சும்>சுங்கு= ஆடையின் கொய்சகம்.. சுங்குடிப்புடவை. = சுங்கிய இடங்களில் சாயம் தோய்த்துப் புதுத்தோற்றங் கொண்ட புடவை. இப்படிப் பல்வேறு இணைகளைப்போல், சம்முதல்= கூடுதல்; சேர்தல்; சம்>சங்கு>சங்கம்= கூட்டம் என்றசொல் எழுந்தது.

    கூட்டப் பொருள் என்பது ஈறாறு கூடுமிடம், ஆறு கடலோடு கூடுமிடம் (சங்குமுகம். ஒரு தாலாட்டு வரி "சங்குமுகம் ஆடி சாயாவனம் பார்த்து, முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ" என்று போகும். சங்குமுகத்தைத் தொகுத்துச் சங்கமமாக்கிச் சங்கதம் எடுத்துக்கொள்ளும். அதைமீண்டுங் கடன்வாங்கிச் சங்கமித்தல் என்று சிலதமிழர் உருவாக்குவார்), சேர்க்கை, அவை, புலவர் கூட்டம், முச்சங்கங்கள், செயின புத்த சங்கங்கள், அன்பு, புணர்ச்சி முதலிய பல்வேறு பொருட்பாடுகளைக் குறிக்கும். சங்கமென்ற சொல் தமிழிலக்கியத்தில் கூட்டப் பொருளில் முதன் முதல் ஆளப்பட்டது. மணிமேகலையின் (7.113-114) ”வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்ப, புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க” என்ற வரிகள் ஆகும். புலம்புரிச் சங்கம் என்பது கூட்டபொருளில் அமைந்தது தான். இதைக்காட்டிக் கூட்டப்பொருளில் மணிமேகலையின் காலத்திற்றான் ’சங்கம்’ எழுந்ததென்பது பெருந்தவறு. முன்சொன்ன காரணங்களால் சங்கத்திற்குக் கூட்டப்பொருள் முன்பே ஏற்பட்டிருக்கலாம்.   

    [(இடைவிலகலானாலும்) மணிமேகலையின் காலம் பற்றி இங்குச் சொல்லவேண்டும். சிலம்பும், மணிமேகலையும் ஒரே காலத்தில் அடுத்தெழுந்த நூல்களென்றே பலருங் கொள்கிறார். அப்படிக்கொள்வதால் தமிழர் வரலாறும், தமிழிலக்கிய வரலாறும் தடுமாறிப் புரிந்துகொள்ளப்படுகின்றன. பெரும் ஆய்வாளாரே இதில் தடுமாறியுள்ளார். ஆழவாய்ந்தால் கதை நடந்த காலத்திற்கருகில் 2,3 ஆண்டுகளுக்குள் சிலம்பு எழுந்திருக்கலாமென்றும், அதில் வரலாறு மிகுதியாய், புனைவு குறைவாய் உள்ளதையும் உணரலாம். என் ஆய்வின் படி சிலம்பின் காலம் பொ.உ.மு.75 ஆகும். ”அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும், உரைசால்பத்தினியை உயர்ந்தோரேத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” என்ற உண்மைகளோடு, சோழ, பாண்டிய, சேர இனக்குழுக்களை விதப்பாய்ப்பாராது மொத்தத்தமிழரின் சிறப்பையும் தேசியநோக்கிற் பேசவந்த நூல் அதுவாகும். தவிர, எல்லாச் சமயங்களையும் குறையின்றி விரித்துப் பேசிய அந்நூலை வெறுமே செயின சமயநூலென்று குறுக்குவதும் சரியல்ல.

    மணிமேகலையோ, ஒருசில சிலம்புக் கதைமாந்தரை தன் கதைமாந்தராய் எடுத்துக்கொண்டு அளவிற்கதிகம் புனைவுசேர்த்து பல்வேறு காலநிகழ்வுகளைக் கலந்து, கதையாக்கிச் சிலம்பிற்கு அப்புறம் 500 ஆண்டுகள் கழித்து (பெரும்பாலும் பொ.உ.425 இல்) தமிழகத்தில் புத்தமுயர்ந்த களப்பிரர் காலத்து நூலாகும். (இதற்கீடாக செயினப்பெருமை பேசும் நீலகேசியைச் சொல்லலாம்.) எப்படி விக்கிரமனின் ’நந்திபுரத்து நாயகியும்’, கல்கியின் ’பொன்னியன் செல்வனும்’ ஒன்று மற்றதின் தொடர்ச்சியாய் அதேபொழுது தத்தங் காலங்களில் வேறாய் எழுந்தவையோ, அதுபோற் சிலம்பையும், மணிமேகலையும் கொள்ளவேண்டும். இதைச்செய்யாது ஆய்வுக் குழப்பத்தால் சிலம்பை வலிந்து கீழிழுத்துப் புதினமென்பது முற்றிலும் தவறானபோக்கு. இதுபோன்ற தவறு ஏறத்தாழ 100 ஆண்டுகளாய் நடந்துவருகிறது.] 


 —— 7 ——   


    சங்கமென்ற சொல்லிற்கான பொருள்வரிசையில், மூன்றாவதாய் அமைவது ”கூட்டநீட்சியான” எண்ணிக்கை. இதன்வழிப் பொருட்பாடுகள் "இலக்கங்கோடி, படையிலொரு தொகை" என்பன தமிழிய, வட இந்திய, மேலை மொழிகளின் எண்ணுச்சொற்களிடையே வியத்தகு ஓரிமையிருப்பதாகவே நான் உணர்கிறேன். சொற்கள் வேறாயினும், உள்ளிருக்கும் செலுத்தமும் (process) பொருளும் (meaning) ஒன்றுபோற் காட்டும். தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் முன்தொடர்பு இருக்குமென நான்சொல்ல இதுவுமொரு காரணம். தமிழில் எண்கள் எழுந்த வகை சொல்ல ஏராளம் உண்டு. அதேபொழுது இந்நீள்தொடரை மேலும் நீட்டுவது முறையல்ல என்பதாற் சுருங்கச்சொல்கிறேன். முதற்கருத்தீடு ’ஒன்றைப்’ பற்றியது.

    விலங்கியல், மாந்தவியல் அறிவின்படி, மாந்தனின் உணவுப்பழக்கமே அவனைக் குரங்கிலிருந்து வேறுபடுத்தியது என்பர். பல்வேறு மாந்தக்குரங்குகளில் இறைச்சி சாப்பிடத்தொடங்கியவன் அவனே. ஒருகாலத்தின் அவன் மூளை கிடுகிடுவென வளரத்தொடங்கியதும் இறைச்சிசாப்பிடத் தொடங்கியதாற்றான். இன்றைக்கு மரக்கறி உணவை வலியுறுத்தும் பலருக்கும் இது வியப்பாகலாம். ஆனால் உண்மை அதுதான். ஒந்நு/ ஒந்து/ ஒண்டு/ஒண்ணு எனுஞ்சொற்கள் (ஒன்னு/ ஒன்று பின் ஏற்பட்ட திருத்தங்கள்) பெரும்பாலும் வாயுட்புகும் இறைச்சியால் ஏற்பட்டனவோ என்றே ஐயுற வேண்டியுள்ளது. ஊனிற்கும் ஊணிற்குமான எழுத்துப்போலி இந்த ஊகத்தை நமக்கு எழுப்புகிறது. இதன் விளக்கத்தை இங்கு நான் கூறவில்லை. வேறு தொடரிற் பார்க்கலாம்.

    இரண்டென்பது ஊனை ஈரும், இரளும் வினையில் எழுந்ததாய்த் தோற்றுகிறது. துமி>துவி என வட இந்திய, மேலை மொழிகள் கையாளும். (துமித்தலும் கூட ஈர்தலே.)  முன்றென்பது முன் வந்து காட்டும் மூ>மூக்கு, நூ>நுதி>நுசி>நாசி, தூ>துயி>துதி (ஒருபொருட் சொற்கள்) என்றெழுந்தது. (வடவிந்திய, மேலை மொழிகள் வழக்கம் போல் ரகரத்தை உள்நுழைத்து துயியைத் த்ரயி> three என்றாக்கும். உலகின் பல பழங்குடிகளும் (1,2, பல) என்றோ, (1,2,3, பல) என்றோ, எண்ணுவதில் தேங்கிநின்றார். இன்னுஞ் சிலகுடிகள் கைவிரல் கொண்டு, ஐந்தெனும் கருத்தீட்டுள் வந்தார். ஐ, ஐது, ஐந்து, செய் என்றும் இவை தமிழிற் சொல்லப்படும் அஞ்சென்பது ஐந்து>அய்ஞ்சின் பேச்சுவழக்கு. இன்னும் வளர்ச்சியடைந்தோர், 4,6,7,8 ஆகியவற்றை ஊடே எண்ணி வளர்ந்துள்ளார்.

    நால்கை என்பது நலிந்த கையைக் குறிக்கும். ஐந்திற் குறைந்துபோன கை. நால்கை> நால்கு> நான்கெனத் திரியும். கையிலாத நால்/நாலும் பழக்கத்தால் 4 ஐக் குறிக்கும். ”ஆறு, ஏழு, எட்டு” என்பவை 1,2,3,5 என்ற அடிப்படைகளைக் கொண்டு கூட்டப்பொருளில் எழுந்தன. சற்றுநீளமான அவற்றின் சொற்பிறப்புக்களை இங்கு நான் சொல்லவில்லை. ’பல’வெனுங் கருத்தும் முன்னேறிய பழங்குடிகளிடம் இருந்துள்ளது. 10 எனும் அளவிற்கு எண்ணிக்கையில் முன்னேறியவர் புதுக்கற்கால நிலையில் இருந்திருக்கலாமென மாந்தவியற் குறிப்புகள் சொல்கின்றன. பல என்ற சொல்லை வரையறுத்து 10 ஐக் குறித்தது சிந்தனை வளர்ச்சி தான். தொடக்கத்தில் பல், வெளுப்பு நிறத்திற் பிறந்து, பொருள்நீட்சி பெற்று, வாய்ப்பல் குறித்தது. மேலும் பொருள் நீட்சியில் பன்மையைக் (many) குறித்து, முடிவிற் பல்து> பஃது> பத்து என்றாகி 10 ஐ வரையறுத்தது. மேலைமொழிகளின் ten னுங் கூடத் தந்தம்/பல்லைத் தான் குறித்தது. ஈரைந்து என்பதைத் ’துவிசெய்’ ஆக்கி தச எனத்திரித்து வடபுலத்தில் ஆள்வர்.

    10 வந்தபின், 9 ஏற்படுவது இயல்பு. துவள்ந்து>துவண்டு போன பத்து, தொண்பதானது, தொண்பது>தொன்பது>ஒன்பது ஆயிற்று. தொள்ளும் ஒள்ளும் ஒரேபொருளன. எப்படிக் கையைத் தொகுத்து நால்/ நாலு, நான்கைக் குறித்ததோ, அப்படித் துவள்>தொள்>தொண்டு என்பது ஒன்பதைக் குறித்தது. நமுத்தல்>நவுத்தல்>நவத்தலும் குறையைச் சுட்டும். நவமென்ற வடபுலச் சொல் அப்படியெழுந்தது. இங்கும் மொழிகளிடை ஒரே சிந்தனை தென்படுவதைக் காணலாம். கூர்ந்துபார்த்தால், ஊனில் தொடங்கி, பின் ஈர்ந்து, அடுத்து மாந்தரை மையமாக்கி (anthropocentric) 3,5,10 ஆகிய எண்களைச் செய்துள்ளார். எண்ணியற்படி இவையே அடிப்படை எண்கள். இவற்றை வைத்தே, 4,6,7,8,9 என்ற வழிப்படு (derived) எண்களை உருவாக்கியுள்ளார்.

    அடுத்தது நூறு. இதைச்செய்கையில் மாந்த உறுப்புச் சிந்தனை போதாமலானது. சில குடிகள் கைவிரல் 10 ஐயும், கால்விரல் 10 ஐயுஞ் சேர்த்து 20 எனும் அலகை உருவாக்கி எண் கட்டகம் numeric system) செய்தார். (தென்னமெரிக்க மாயன்கள் இவ்வகையினர்.) சுமேரியர் போன்றோர் 60 ஐ வைத்து எண்ணுமுறை உருவாக்கினர். ஒரு மணிக்கு 60 நுணுத்தம், ஒரு நுணுத்தத்திற்கு 60துளிகள் என இன்றுஞ் சொல்கிறோமே, அது சுமேரியர் வழி வந்தது. பெரிதும் 10 ஐ அடிப்படையாகவும் சிறுபால் 60 ஐ அடிப்படையாகவுந் தமிழர் கொண்டார். ஒரு நாளுக்கு 60 நாழிகை. ஒரு நாழிகைக்கு 60 விநாழிகை என்பதும் சுமேரியர் மாதிரிச் சிந்தனை தான். அதே பொழுது 10 இன் சிந்தனை தமிழரிடம் மறையவில்லை. இருபது, முப்பது, ......எழுபது, எண்பது என்று அமைவதும் நம் மரபு தான்.

    அடுத்த வளர்ச்சி மாந்தவுடலிலிருந்து புவியிற்காணும் கல், மண் என நகரத் தொடங்கியது. உடையக்கூடிய (கல் போன்ற) ஏதோவொன்றைக் கீழேபோடுகையில் ஒன்று பலதாவதுபோல், வலிந்து கீழிட்டு நுறுக்கும்>நொறுக்கும் போது நூறாகிறது. முற்றிலும் அழிகிறது. நூறெனும் சொல்லிற்கு சங்க இலக்கியங்களில் இப்பொருள் நெடுகவுள்ளது. நூறு>நீறு=பொடி. நுறுக்குவதற்கு இன்னொரு சொல் சதைத்தல்> சதாய்த்தல். “போட்டு சதாய்ச்சிட்டான்பா” என இன்றுஞ் சொல்வோம். சதைத்தலின் இன்னொரு வடிவம் சாத்துதல். சதைத்தலிலெழுந்த வடசொல் சதம். சங்க காலத்தில் தமிழருக்கு வடக்கே (இற்றை மராட்டியக் கோதாவரிக் கரையில் ஔரங்காபாது அருகில்) படித்தானத்தைத் (Paithan) தலைநகராய்க் கொண்ட நூற்றுவர்கன்னர் (பாகதத்தில் சதகர்ணி) ஆண்டார். தமிழகத்தையும் மகதத்தையும் வணிகத்தால், இடையாற்றங்களால், இணைத்தவர் இவரே. எதிரிகளை நூறும் அடைப்பெயரை இவர் பெற்றார். கன்னர் (= கருநர்) என்பது சேரர்/சோழர்//பாண்டியர் போல் ஓர் இனக்குழு அடையாளம்.

    தமிழிய, வடவிந்திய மொழிகளிடையே எண்களில் இணைச்சிந்தனை நிலவியது நெடுகவும் உண்மை. அவை தனித்தனியே தேர்ந்துகொண்ட சொற்கள்தாம் வேறு. மேலைச்சொல்லும் நூறுதல். சதைத்தல் போலவே அமையும்..100 க்கான மேலைச்சொற்கள் கொத்துதற் கருத்தில் எழுந்தவை. ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலி பொருள்கூறாது வெறுமே சொல்லிணைகளை மட்டுங் காட்டும். Old English hundred "the number of 100, a counting of 100," from Proto-Germanic *hundratha- (source also of Old Frisian hundred, Old Saxon hunderod, Old Norse hundrað, German hundert); first element is Proto-Germanic *hundam "hundred" (cognate with Gothic hund, Old High German hunt), from PIE *km-tom "hundred," reduced from *dkm-tom- (source also of Sanskrit satam, Avestan satem, Greek hekaton, Latin centum, Lithuanian simtas, Old Church Slavonic suto, Old Irish cet, Breton kant "hundred"), suffixed form of root *dekm- "ten. கொத்துதலும் சாத்துதலும் ஒரேபொருள் கொண்டவை. சகரமும் ககரமும், ஹகரமும் மேலைமொழிகளில் போலிகள். ஒரு பக்கம் ககரம் சகரமாக, இன்னொரு பக்கம் ககரம் ஹகரமாகும். பொருள் ஏதோ ஒன்றுதான்.

    நூறென்ற எண்ணுப்பொருள் சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் பலவிடங்களில் வந்துள்ளது. “நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்று” (திரு.155-156), “நூற்றிதழ்த் தாமரை” (ஐங்.20-2), ”பதிற்றுக்கை மதவலி நூற்றுக்கை ஆற்றல்” (பரி 3-40), “மையிரு நூற்றிமை உண்கண் மான்மறி தோள் மணந்த ஞான்று ஐயிருநூற்று மெய்ந்நயனத்தவன் மகள் மலர் உண்கண் மணிமழை தலைஇயென” (பரி 9-8,9,10), “நூற்றிதழ் அலரின் நிரை கண்டன்ன” (புறம் 27-2), ”புரிபுமேல் சென்ற நூற்றுவர் மடங்க, வரிபுனை வல்வில் ஐவர் அட்ட” (கலி 104 57,58), “மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனை” (கலி 52-2), “பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்” (புறம் 62.10),”நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே” (புறம் 184.3) என்பன அவையாகும்.

    அடுத்தது ஆயிரம். நுறுக்குவதற்கும் கீழே, விடாது துவட்டி/தவட்டி எடுக்கையில் கல், தவடு>தவிடு பொடியாகிறது. தவட்டுதல் = சிறு பொடியாக்குதல். துவையலும் சிறுபொடியாக்குவதே. என்ன? ஈரஞ் சேர்ந்து பொடியாக்குவது. தவட்டுதல்>தவடு>தவிடு என்பதற்கும் மேலைமொழிகளின் thousand ற்கும் தொடர்புள்ளதுபோல் தோற்றுகிறது; தவிடு பொடியாதல்; தவட்டுதல், தென் மாவட்டங்களில் சவட்டுதல் ஆகும். சவடென்பது வண்டல்மண்ணையும், ஆற்றுமணலையுங் குறிக்கும். (ஊரெலாம் காணும் ஆற்றுமணற் கொள்ளை சவட்டுமணற் கொள்ளையே.) இதே பருமையில் ஆனால் கடற்கரையிற் கிடக்கும் மணல் சற்றே திரிந்து, உப்பையுணர்த்தி, சவடு>சவரென அழைக்கப்படும். சவத்தலே சவர்த்தலாயிற்று. சவ்வு>சவ்விரம்>சவிரம்>சாவிரம்> சாயிரமென இச்சொல் திரியும். கன்னடத்தில் சாயிரம் = ஆயிரம். (கன்னடச்சொல் தெரியாவிடின் ஆயிரத்தின் சொற்பிறப்பறியத் தடுமாறியிருப்போம்.) இதற்கு இணையாய்த் தமிழில் அயிரம்/அயிரை = நுண்மணல், கண்ட சருக்கரை. அயிர் = நுண்மை.

    சாயிரம்>சகயிரமாகி, பின் சகஸ்ரமாகி, சங்கதத்திற் புழங்கும். இதைத் தலைகீழாய் ஓதி ”சகஸ்ரமே ஆயிரமாயிற்று” என்றும் சிலர் சொல்வர். சவட்டுதலின் தொடர்பான சவளுதல் = துவண்டு போதல், சவித்துச் சவலையான பயிர் சாவி,. சவித்தழிந்த உடல் சவம். சாவட்டை= சாவிப்பயிர், சாம்பிப்போதல்> சாவிப் போதல்= ஒடுங்குதல் போன்ற சொற்களைப் பாராது இவர் சொல்கிறார். சவைத்தலின் இன்னொரு வெளிப்பாடு அவைத்தல்; அரிசி குற்றலைக் குறிக்கும். அவல்= flattened rice. இவற்றையும் சங்கதத்தார் கவனிப்பதில்லை. ஆயிரம் தமிழில்லையெனில் இத்தனையும் தமிழில்லை என்றாகும். ஒரு சொல்லைத் தனித்துப்பாராது, சொற்றொகுதியாய்ப் பார்க்கும்படி நான்சொல்வது அதற்கே. ஆயிரம் போலவே இன்னொன்று அயிர்தம். சகஸ்ரத்தை ஆயிரத்திற்கு வைத்து, அயிர்தம்>அயுதத்தை வடபுலத்தார் பத்தாயிரத்திற்குப் பயனுறுத்தினார். சாயிரம் புழங்காத தமிழரோ அயிர்தமும், ஆயிரமும் ஏறத்தாழ ஒன்றாய் ஒலிப்பதால், குழப்பந் தவிர்க்க, பத்தாயிரமென்கிறோம்.

    ’ஆயிரம்’ பழகிய சங்கச்சொல்லாட்சிகள் ”அடையடுப்பறியா அருவி ஆம்பல் ஆயிரவெள்ளம் ஊழி வாழி, ஆத வாழிய பலவே”  (பதி.63.19-21), “ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள” (பரி.3-42), ”ஆயிர அணர்தலை அரவவாய்க் கொண்ட” (பரி 3-59), “அந்தர வான்யாற்று ஆயிரம் கண்ணினான் இந்திரன் ஆடும் தகைத்து” (பரி.தி.2-95-96), ”சாலிநெல்லின் சிறைகொள்வேலி ஆயிரம் விளையூட்டாக” (பொரு. 247-248), “தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய” (மது 11), “ஆயிரவெள்ளம் வாழிய பலவே” (பதி 21.38), “ஆயிரம்விரித்த அணங்குடை அருந்தலை” (பரி 1.1),  மாசில் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம்” (பரி.3.22), “மின்அவிர் சுடர்மணி ஆயிரம் விரித்த கவைநா அருந்தலைக் காண்பின் சேக்கை” (பரி 13.27-28), “அணங்குடை அருந்தலை ஆயிரம் விரித்த” (பரி.தி.1.79), “அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்” (கலி.105.15), ”வளஞ்சால் துளிபதன் அறிந்து பொழிய வேலியாயிரம் விளைக நின் வயலே” (புறம் 391.19-21 என்பனவாகும். ஆயிரமென்ற எண்ணிற்கு மேற்பட்ட சொல்லாட்சிகள் தமிழிற்குறைவு. ஆனால் இல்லாதில்லை. நிகண்டுகளிலும், ஒருசில காட்டுக்களிலுமுண்டு. (மறவாதீர். சங்க இலக்கியங்கள் அகரமுதலிகள் அல்ல.)

    அயிர்தலுக்கும் கீழே நொய்வது நொய்தலாகும். நொய்>நொசி, என்பது ஆங்கிலத்தின் nice ஓடு இணைகொண்டது. ”அந்த மண்ணைத் தொட்டுப்பார், நொய்யாக இருக்கும்.” நொய்தல், நெய்தல் என்று திரிந்து 100000 (=10^5) த்தைக் குறிக்கும். இலவுதல்>இலகுதலும் நொய்தலைக் குறிக்கும். இலகல்= நொய்ம்மை. இலகுதல் தன்வினை. இலக்குதல் பிறவினை.. இலக்கலிற் பிறந்த இலக்கம், முற்றிலும் தமிழே. இலக்கத்தைச் சங்கதம் இலக்ஷ என்னும்.. பிறகு, ”தமிழ் அங்கிருந்து கடன்வாங்கியது” என்பர். ”நெய்தலும் குவளையும் ஆம்பலும், சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி ஈட்டம் கழிப்பிய வழுமுறை” என்று பரி. 2.13- 15 ஆம் வரிகளிற் பயிலும். ஆயிரத்திற்கு மேற்பட்டு அடுத்தடுத்துயரும் எண்களாய் கால எண்ணிக்கை சொல்லப்படும். இலக்கமும் (10^5) நெய்தலும் ஒன்றென வடபுல நூல்களைப் பார்த்தே அறிந்தேன். நெய்தலை வடக்கெ ந்யுதமென்பார். (தமிழாய்வர் கொஞ்சமாவது பாகதம், சங்கதம் படிக்க வேண்டும். நம்மூர்ச்சிந்தனை வடக்கே பெயர்ந்துகிடக்கிறது. வேரிங்கே விளைவங்கே. உண்மையறிய இப் படிப்பு கட்டாயந் தேவை) நெய்தல், இலக்கத்தோடு நூறாயிரமும் நம் வழக்கில் உண்டு. “நூறாயிரம் கை ஆறறி கடவுள்” என்பது பரி. 3.43.

    அடுத்தது கோடி. நுணுகிய துகள்களைக் குவ்விக் குவிப்போம். குவ்வியது குவலும்/குவளும். 10^7 எனும் எண்ணுணர்த்தி குவளை என்ற பெயர்ச்சொல் உருவாகும். (இதில் கூடிய எண்ணிக்கை என்ற உட்பொருள் இதிலுள்ளது.) குவளை குவளியாகி தெலுங்கிற் குவடியாகி முடிவிற் கோடியாகும். வடக்கே கோடியே புழங்கியது. ’குவளை’ அங்கில்லை. தமிழில் இரண்டும் உண்டு. ஆனால் கோடியே மிகுதி. “ஒன்று பத்தடுக்கிய கோடிகடை இரீஇய பெருமைத்தாக நின் ஆயுள் தானே” (புறம் 12.5-6), “கோடியாத்து நாடுபெரிது நந்தும்” (புறம் 184-6), “கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய” (புறம் 202-7) ஆகியவை இதற்கான சொல்லாட்சிகள். (குவளை = கோடி என்ற இணையைத் தமிழருக்குப் புரியவைத்தவர் சொல்லறிஞர் இரா.மதிவாணன். (அவருடைய கட்டுரையை அடையாளங் காட்ட பரணில் தேடினேன். இப்போது கிட்டவில்லை. தெலுங்குமொழி பலவகையில் பாகதத்திற்கும் தமிழுக்குமான பாலமே. நூற்றுவர்கன்னர் ஆட்சியில் ஏற்பட்ட விளைவு இது.)  

    நெய்தல், குவளை என்றசொற்கள் குவிந்த நுண்துகள்களாய் காட்சியளித்தாலும், நீர்ப்பூக்களெனும் மாற்றுப்பொருளுமுண்டு. அகப்பாட்டுக்கள் பலவற்றில் அப்படியே ஆளப்படும். அந்த  மிகுதியே நம்மை எண்ணுப்பொருள் காட்டவிடாது தடுக்கும்.) ஒவ்வோர் எண்ணுக்கும் ஏழெட்டு நிகர்ச்சொற்களை மரபு கருதி மறைப்பாகப் புழங்குவது இந்தியாவெங்கணும் நடைமுறை யாகும். காட்டாக வானம்= 1, கை= 5, திசை= 8, கைத்திசை =  58. இப்படிப் பல்வேறு சொற்களையும் சொற்கூட்டுகளையும் வட்டார மரபுக்கேற்பப் புழங்குவர். குழூஉக்குறி புரியாதோர் விளங்காது நிற்பர். [”நாலுபேர் சொல்வாங்க” என்ற மரபுப்பேச்சிற்கு ”நாலுதிசையிலும் உள்ளவர் சொல்வர்” என்பதே பொருள். ”4 ஆட்கள் சொல்வர்” என்பதல்ல.] இலக்கத்திற்கு நெய்தலும், கோடிக்கு குவளையும் அடையாளமாய்க் கொள்ளப் பட்டன. நெய்தலையும், குவளையும் இப்படிப் புழங்கியபிறகு ஆம்பலையும், தாமரையையும் விட்டுவைப்பாரா, என்ன? ஆம்பல், சங்கம், தாமரை என்ற எண்சொற்களும் பிறந்தன.

    நூறுகோடி = 10^9 என்ற எண்ணைக் குறிக்க ’ஆம்பல்’ புழங்கியுள்ளது. அவைத்தல்பற்றி முன்னே சொன்னேன் அல்லவா? அவல்மட்டுமின்றி அவமென்ற பெயர்ச்சொல்லும் அதிற்கிளைக்கும். அதற்கும் மிக நுண்ணிய பொருளுண்டு. ஒருபொருளை அவத்திவிட்டால் (10^9 பங்காக்குவது பின் என்ன?) அழிந்துதான் போகும். எனவே அவத்திற்கு அழிவுப்பொருளும் வந்தது..அவம்>ஆம் எனத் தொகும். ஆம்புதல், ஆமுதல் போன்ற வினைகளை எழுப்பும். ஆம்பல் பேச்சுவழக்கில் ஆம்ப என்றாகும். சங்கதத்தில் ஆம்ப்ய ஆகி, மகரந்தொலைத்து ஆப்ய என்றாகும். யகரமும் ஜகரமும் வடசொற்களில் பலவிடங்களிற் (மேலைமொழிகளிலும் போலி தான்) ஆப்ய என்பது ஆப்ஜ ஆகும். வடநூல்களில் இதேபொருளில் இச்சொல் புழங்கியது. இதைக் குமுதம்> குமுத> சமுத> சமுத்ர என்றுஞ் சொல்வார். வடபுலத்திலும் 10^9 என்பதே இதன் பொருளாகும். ஆம் என்பதற்கு நீரென்ற பொருளுமுண்டு. கொஞ்சங்கொஞ்சமாய் எண்ணுப் புலம் கல்>மண்>மணல் என நீருக்குள் வந்துவிட்டது பாருங்கள். இன்னொரு வகையில் அம்பல்>ஆம்பல். அம்புதல்= கூம்புதல் என்பதால் அல்லியைக் குறிக்கும். அல்= இரவு. பகலிற் கூம்பி, இரவில் மலரும் அல்லிக்கு ஆம்பல் பெயர் ஏற்பட்டது.

    அடை/இலை பக்கத்தில் உள்ளது நீராம்பல் பூ. அடையடுப்பறியா நீராம்பல் பூ = 10^9. பூத்த வஞ்சி/ பூவா வஞ்சி என்ற இணையை இங்கு எண்ணிக்கொள்ளுங்கள். ”அடையடுப்பறியா அருவி ஆம்பல் ஆயிரவெள்ளம் ஊழி வாழி” என செல்வக்கடுங்கோ வாழியாதனை பதி.63.19-21 இல் கபிலர் அழகுறப்பாடுவார். ”நெய்தலும் குவளையும் ஆம்பலும், சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி ஈட்டம் கழிப்பிய வழுமுறை” என்று பரி. 2.13-15 ஆம் வரிகளில் அடுத்தடுத்த பெரிய எண்ணாய் ஓர் ஒழுங்குமுறை தெரியும். இதுவரை பார்த்தபடி, நெய்தல்/ இலக்கம்/நூறாயிரம் = 10^5. குவளை/கோடி = 10^7. ஆம்பல்/நூறுகோடி = 10^9.  இனிச் சங்கத்திற்கு வருவோம். இதன்மதிப்பு இன்னுங்கூட.

    சங்குபற்றி முன்சொல்கையில் 1000 இடம்புரிச் சங்கிற்கு 1 வலம்புரிச் சங்கு கிடைக்குமென்ற பெருதகை (probability) சொன்னேன். அதுபோல் 1000 வலம்புரிச் சங்கிற்கு 1 சலஞ்சலம். ஆயிரம் சலஞ்சலத்திற்கு 1 ஐஞ்சுன்னம். இதைப் பெருக்கிப்பாருங்கள். 1000* 1000* 1000 = 10^9 என்றாகும். இதற்குமேலும் இதே பெருதகையில் ஓரெண் வேண்டுமெனில் அது 10^12 தான். சங்கமென்ற சொல்லுக்கு இதையே வழிப்பொருளாக்குவர். வடநூல்களில் இதேபொருள் சொல்வர். 10^12 = 10^5 * 10^7 = இலக்கங் கோடி. தமிழ் அகரமுதலிகளில், நிகண்டுகளில் இப்பொருளுள்ளது. இப்போது புரிகிறதா, சங்கத்தின் எண்ணுப்பொருள்? அடுத்தது நூறுசங்கம் 10^14. இதை வெள்ளமென்று குறித்திருக்கிறார். சங்கதத்தில் ஜலதி என்பர். இதுவரை சொன்னதில் தாமரை விட்டுப்போனது. அது சங்கத்திற்கும் வெள்ளத்திற்கும் இடைப்பட்டதெனப் பரி. 2.13-15 ஆம் வரிகள் சொல்லும். எனவே பத்துச்சங்கம் = 10^13 = தாமரை ஆகலாம். என்னால் உறுதியாய்ச் சொல்லமுடிய வில்லை. வேறு ஏதேனும் விளக்கம் தோன்றினால் பின்னர் சொல்கிறேன். 


 —— 8 ——  


    ’சங்கச்’ சொல்லிற்கான வளைவுப்பொருளையும், கூட்டப்பொருளையும், அவற்றின் படியாற்றங்களையும் இதுவரை பார்த்தோம். இனிக் கூட்டநீட்சியாய் எண்ணிக்கைப்பொருள் பார்ப்போம். இதன்வழி. "படையிலொரு தொகை" என்றவொரு பொருள் குறிப்பிடப்பட்டுள்ளது. படையும், படைத்தொகையும் எனப்பார்த்தால் அது பெரியபுலனம். இதன் விவரங்கள் சங்கவிலக்கியங்களில் நேரடி கிடைப்பது அரிது. ஏனெனில் சங்கநூல்கள் அடிப்படையில் அகப், புற நூல்கள். புறமென்றாலும் கூடப் பரணி நூல்கள் போல் போரை நேரடியாக விவரிப்பனவல்ல. வடபுல நூல்களைச் சார்ந்தே இச்செய்திகளை அணுகவேண்டியுள்ளது. இதனாலேயே தமிழ்நூல்கள் பின்வந்தவை என்று சிலர் கருதலாம். வேர்ச்சொற்கள் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. பொ.உ.மு.600 - பொ.உ.200 வரைக்கும் வடக்கிலும் தெற்கிலும் படைதொடர்பாக பல இடையாற்றங்கள் இருந்ததாகவே சொல்லமுடிகிறது. என்னால் முடிந்தவரை, படைத்தொகைச் செய்திகளை, கீழே சுருங்கச் சொல்கிறேன்.

    மரஞ்செடிகளின் தண்டுபோலவே மாந்தனுக்கும் கால்களுண்டு. குத்திநிற்பதை நட்டநிற்பதாய்ச் சொல்வர். ’நடை’ச் சொற்பிறப்பை என்றேனும் நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? ஒருகாலை முன்நகர்த்திப் பின்நட்டு, இரண்டாங்காலை முன்நகர்த்திப் பின்நட்டு,, அடுத்தடுத்துத் தொடர்வதே நடப்பதாகும். இதிலெங்கு தவறினும் விழவேண்டியதுதான் ஆக, நடுவதில் விளைவது நடை. 70000 ஆண்டுகள் முன் ஆப்பிரிக்காவிலிருந்து நடந்துவந்து இந்தியத் துணைக்கண்டத்துள் மாந்தர் நுழைந்தார். இனி நிலம் படும் பாதத்திற்கு வருவோம். நடந்துவந்த பாதையிற் சுவடின்றி யாரும் நடக்கமுடியுமோ? படு>படி>பதி என்பது ”பதம்>பாதத்தின்” தொடக்கம். பாதம் படுவதுபோல் மற்றசெயல்களில் மாந்தர் படிவதையும் படுதலென்பார். பட்டுவ வாக்கியங்களிற் (passive voice) இதைப் பயன்படுத்துவோம். ”பொத்தகம் என்னால் படிக்கப்பட்டது”. தன்வினையிலும் ’படு’ என்பது துணைவினையாகும். ”அவன் செயற்பட்டான்”. ஒருவகையிற் பார்த்தால் படுதல் என்பது கட்டகச்சொல் (systemic word).

    ஒரு வேட்டையில் 4 ஆட்கள் போவதாய் வையுங்கள். ஆட்களோடு, ஆயுதங்கள் (படைக்கலன்கள்), துணைப்பொருட்கள் (தளமாடப் பயனுறும் தளவாடம்). என எல்லாமுஞ் சேர்ந்தாற்றான் வேட்டை ஆடமுடியும், குறிப்பிட்டசெயலைச் சாதிக்கும் இதை வேட்டைக் கட்டகமென்போம். இதுபோல் படுதலைச் செய்யுங் கட்டகம் படை. இதுவொரு பொதுமைச் (generic) சொல். வேட்டை, நிலந்தோண்டல், இன்னொரு மாந்தக்கூட்டம் அழித்தல் என்பன எல்லாமும் படைச்செயல்களே. ஓர் இனக்குழுவின் நிலைப்பு என்பது எப்போது சிக்கலாகிறதோ, அப்போது இனக்குழுவிற்காகப் படை ஏற்பட்டே தீரும். நாளாவட்டத்தில் காவல், தாக்கல், அழிவென்ற கண்ணோட்டங்கள் இதனுள் வரும். விலங்காண்டி காலத்திலிருந்து இன்றுவரை படையளவு கூடியதே தவிர, கருத்தீடு மாறவில்லை.

    துணைக்கண்டத்தின் நெய்தலிலும், அடுத்தடுத்துள்ள திணைகளிலும் மாந்தநகர்ச்சிக்கு நெடுநாட்கள் நடையே வழியானது. நடைக்கு அடுத்த நகர்ச்சி சகடங்களால் விளைந்தது. விலங்காண்டி நிலையிருந்து வளர்ந்தபின், குறிப்பிடத்தக்க நுட்பியல் மாற்றமாய்ச் சக்கரம், சகடம், சகடை, தேர், உருளம்>உருடம்>உருதம்>ரதம் போன்றவை குமுகத்தில் உருவாகின. இவை எப்பொழுது எங்கு முதலில் உருவாகின என்பது இன்னுந்தெரியாது. ஆனாற் சிந்துசமவெளியில் இவையிருந்ததற்குச் சான்றுகளுண்டு. [தொடக்கத்தில் காளைகளே சகடங்களை இழுத்திருக்கலாம். கால்>காள்>காளை; கால்நடையென இன்றும் சொல்லப்படுவதே ”காளைச்” சொற்பிறப்பைக் காட்டும்]. இதே போன்ற சான்றுகள் எகிப்திய, சுமேரிய நாகரிகங்களிலும் கிடைத்துள்ளன.

    பொ.உ.மு.9000-1800 வரை சிந்துசமவெளியில் குதிரைப் புழக்கம் இருந்தது போல் தெரியவில்லை. இத்தனைக்கும் ஆவ்க்கனித்தான், இரான், நடு ஏசியா போன்ற மேற்கு நாடுகளில் குதிரை உலவியது. ஆரியருக்கும் குதிரைப்பழக்கமுண்டு. இட்டைட், மித்தனி போன்ற நாகரிகங்களில் குதிரை / குதிரைவண்டி கொண்டே ஆரியர் முன்னிலைக்கு வந்தார். சிந்துவெளி நாகரிக முடிவில் குதிரைத் தாக்கம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கலாம். பாரசீகம், அரேபியா போன்ற நாடுகளிலிருந்து நிலம் மூலம் வடக்கேயும், நருமதைத் துறைகள் தொடங்கி தீவகற்பம் முழுதும் கப்பல் மூலம் தெற்கேயும் குதிரைகள் இறக்கப்பட்டன. இதன்பின்னர் சுமை வண்டிகளைக் காளைகளும், வேக வண்டிகளைக் குதிரைகளும் இழுத்தன. இந்திய நாகரிகத்தில் பொ.உ.மு. 2000/1800 க்கு அப்புறமே படைவேலைகளுக்குக் குதிரை பயன்பட்டது. குதிரையையும், வண்டிகளையும் இணைந்த பின்னாற்றான் சாலைகளிற் கல்லைப் பாவும் பழக்கமும், மேடுபள்ளம் இல்லாது சாலைகளை அமைக்கும் நுட்பமும் இந்தியாவிற் பரவியது.

    இதேநேரத்தில் இந்தியாவில் யானைகளும் மாந்தவேலைக்கு உதவியாய்ப் பழக்கப்பட்டு வந்தன. அவற்றை வைத்து எதிரிக் கோட்டைகளை அழிப்பது பொ.உ.மு.2000க்கு முன்னாலும் இருந்திருக்கலாம். இப்பழக்கம் எப்போது ஏற்பட்டதென உறுதியாய்ச் சொல்லமுடியவில்லை. பொ.உ.மு. 1800க்கு அப்புறம், சகடங்களும், யானைகளும், குதிரைகளும் போர் உத்திகளில் சேர்ந்து பயன்படத் தொடங்கின. போரையொட்டிய இலக்கிப்பு முயற்சியில் (logistic effort. இலக்கு= குறிப்பிட்ட இடம்; இலக்கிப்பு= குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்த்தல்.) தேரும், யானையும் ஒன்றுபோல் கருதப்பட்டன தேரை நகர்த்துவதும், யானையை நகர்த்துவதும் அவற்றின் எடை கூடக்கூட ஒரேயளவு மாந்தமுயற்சி கொண்டவையாகக் கருதப்பட்டன. சதுரங்கத்திலும் கூட rook ஐச் சிலர் தேரென்பர். வேறு சிலர் யானையென்பர். இவற்றிற்கிடையே ஒற்றுமைகளும் இருந்தன, வேற்றுமைகளும் இருந்தன. (இரண்டையும் நடத்துவோர் நம்மூரில் ஒரேமாதிரியாய்ப் பாகரென்றே சொல்லப்பட்டார்.)

    படையின் முதலலகு பட்டி/பண்டி/பத்தி/பந்தி என்றழைக்கப்பட்டிருக்கலாம். (சரியான சொல் ஏதென்று சொல்லமுடியவில்லை.) இன்றும் பட்டி என்பது கால்நடைத் தொகுதியையும், கால்நடைகள் கட்டும் இடத்தையும் குறிக்கிறது. (முல்லைநில ஊர்கள் பட்டியென அழைக்கப்பட்டன.) ’பண்டி’ வண்டியையும், யானையையுங் குறித்தது. வடபுல நூல்களிலும் (மோனியர் வில்லியம்சு அகரமுதலி, மகாபாரதம், அல்பெருனியின் பயணக்குறிப்புகள்), தமிழ் நிகண்டுகளிலும், அகரமுதலிகளிலும், இலக்கியங்களிலும் குதிரைகட்டுந் துறை “பந்தி” என்றழைக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டுசேர்ந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி எழுதிய திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத்தில் இச்சொல் வரும். இக்கட்டுரையில் இப்போதைக்குப் பட்டியென்றே பயில்கிறேன். மற்றசொற்களை ஆய்ந்து முடிவிற்கு வரவேண்டும்.

    மகாபாரதப் படி பட்டியில் 1 தேர், 1 யானை, (தேரை/யானை சுற்றி) 3 குதிரைகள், ஒவ்வொரு குதிரையையுஞ்சுற்றி 5 காலாள்கள் இருந்ததாய்ச் சொல்வர். குதிரைகளுக்கும் ஆட்களுக்குமான மொத்தக் கணக்கைச் சரியாய்ப் புரிந்துகொள்ளவேண்டும். (அல்பெருனி இதில் தவறினார்.) 1 தேரிழுக்க 4 குதிரைகளெனில் பட்டியில் மொத்தம் 4+3+3= 10 குதிரைகள் இருந்தன. ஆட்களைக் கணக்கிட்டால் தலைவன், முன்னால் யானைப்பாகன், பின்னால் துணை யானைப்பாகன், தலைவன் வேல்வீச யானைமேலிருந்து உதவும் 2 வீரர், யானையோடு கீழோடிவரும் உதவியாளென 1 யானைக்கு 6 பேருண்டு. இதுபோல் தலைவன், தேர்ப்பாகன், மெய்க்காவலன், தலைவனுக்குத் தளவாடம் கொடுத்துதவும் 2 வீரர், தேர்ப்பழுது பார்க்கும் தச்சனென 1 தேருக்கும் மொத்தம் 6 பேருண்டு. எனவே மகாபாரதப் படி, 1 பட்டியில் 2*[6+3*(1+5)] = 48 ஆட்களிருந்தார். தேர், யானை, குதிரைகள், ஆட்களின் விகிதம் (1:1:10:48). சனபதங்களுக்குச் சற்றுமுன்னிருந்த குரு, பாஞ்சால அரசுகளில் இது வழக்கம் போலும்.

    மாறாகக் குடிலரின் அருத்தசாற்றப் படி பார்த்தால், 1 தேர் அல்லது 1 யானையைச் சுற்றி 5 குதிரைகள், 1 குதிரைசுற்றி 6 காலாட்கள் என்று வரும். இக்கணக்கின்படி தேர்: யானை: குதிரைகள்: ஆட்கள் ஆகியோரின் விகிதம் 1:1:(4+5):.2*[6+5*(1+6)] = (1:1:14:92) ஆகும். மகத அரசில் இதுவே பழக்கம் போலும். (பாரதக் காப்பியம் பொ.உ.மு. 1000-800 ஐ ஒட்டிய கதையைச் சொல்லும். அக்காப்பியம் பொ.உ.மு.400 களில் எழுதப்பட்டு படிப்படியாக இடைச்செருகல்கள் பெற்று பொ.உ.400 வரை எழுதப்பட்டுக்கொண்டே வந்தது. படை பற்றிய விரிவான குறிப்புகள் பெரும்பாலும் இக்காலகட்டத்தின் பிற்பகுதியில் வரையப் பட்டிருக்கலாம்) பட்டிக்கு மேலும் அக்காலத்தில் படையணிகளுண்டு. இவற்றைக் கீழே கொடுத்துள்ளேன். சங்கதப் பெயர்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் சங்கதப்பெயர்களே உள்ளன. தமிழ்ப்பெயர்களை பெருமாய்விற்கு அப்புறமே அடையாளங் கண்டுகொள்ள முடிந்தது. அவற்றைக் கீழே சொல்லியுள்ளேன்.

3 பட்டிகள்                  = 1 படைமுகம்   [சேனாமுகம். மகாபாரதக் கணக்கு (3:3:30:144),                          அருத்தசாற்றக் கணக்கு (3:3:42:276)];
3 படைமுகங்கள் = 1 குழுமல்           [குல்ம.                மகாபாரதக் கணக்கு (9:9:90:432),                          அருத்தசாற்றக் கணக்கு (9:9:126:828)];
3 குழுமங்கள்           = 1 கணம்               [கண,                    மகாபாரதக் கணக்கு (27:27:270:1296),                 அருத்தசாற்றக் கணக்கு (27:27:378:2484)]);
3 கணங்கள்               = 1 வானி                [வாகினி.            மகாபாரதக் கணக்கு (81:81:810:3888),                  அருத்தசாற்றக் கணக்கு (81:81:1134:7452)];
3 வானிகள்               = 1 தானை              [ப்ரிதனா            மகாபாரதக் கணக்கு (243:243:2430:11664)          அருத்தசாற்றக் கணக்கு (243:243:3402:22356)];
3 தானைகள்            = 1 குமம்                 [சமூ                     மகாபாரதக் கணக்கு (729:729:7290:34992)          அருத்தசாற்றக் கணக்கு (729:729:10206:67068)];
3 குமங்கள்               = 1 சேனை              [அனீகினி          மகாபாரதக் கணக்கு (2187:2187:21870:104976) அருத்தசாற்றக் கணக்கு (2187:2187:30618:201204)];
10 சேனை                 = 1 அக்கவானி.     [அக்க்ஷௌகினி/அக்குரோனி].

    இக்கணக்கை நினைத்துப் பார்க்கவே திகைப்பாயுள்ளது. ஒரு சேனையில் 2187 யானை/தேர்களென்பது சாத்தார எண்ணிக்கையல்ல. 2187 யானைகளைப் பழக்கவேண்டுவதும் பெரிய வேலையே. அருத்த சாற்றப் படி நேரடித் தொடர்பிலா ஆள்பேர் அம்பென இன்னும் பலர் படையொட்டி வேலை செய்திருப்பார். மொத்த நாடே எங்கு பார்த்தாலும் படைமயமானது போலும். ஏறத்தாழ 3 சேனைகளைக் குறிக்கும் 6000 யானைகளை நந்தர் வைத்திருந்தாரென அலெக்சாந்தர் காலக் கிரேக்கக் குறிப்புகள் சொல்லும். [பல்வேறு நாடுகளைப் பிடித்த பின்னால், அலெக்சாந்தர் சிந்தாற்றங்கரைக்கு வந்தபோது, பெருமாண்ட நந்தர் படையில் 6000 யானைகளுக்கு மேல் இருந்ததாகவும், கிரேக்கர் அதை வெல்லமுடியாதென்று கருதியும், வீடுவிட்டு தொலைவு வந்த தம் வீரர் பல்வேறு போர்களாற் சோர்ந்தார் என்பதாலும், ”இனியும் நகரவேண்டாம், ஊருக்குத் திரும்புவோம்” என்றே அலெக்சாந்தர் முடிவு செய்தானாம் போகும் வழியில் பாபிலோனில் அலெக்சாந்தர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனானாம்.]

    நந்தரை வென்று, பேரரசுருவாக்கிய மோரியர் இன்னும் ஓரிரு சேனைகள் அதிகம் கொண்டிருக்கலாம். வேந்தரின் கனவு சேனையாற் கூடியது பொ.உ.மு.400- பொ.உ. 0 என்று தெரிகிறது. மோரியருக்கு அப்புறம் சுங்கர், கனகரிடம் சேனைகள் குறைந்தன. சேனையளவு படைகொண்ட செங்குட்டுவன் வடக்கே போகையிலிருந்த கனகர் நலிந்துபோனவர். (செங்குட்டுவனுக்கு முன் தமிழ்வேந்தர் யாரும் சேனைகள் வைத்திருந்தது போல் தெரியவில்லை.) தவிர, இந்தியாவில் எவரும் 10 சேனைகள் வைத்திருந்ததாய் வரலாற்றிற் குறிப்புகளில்லை. மேலேவரும் அக்கவானி போன்றவை முற்றிலுங் கற்பனை உருவகங்களாய் தோற்றுகின்றன. உயர்வுநவிற்சியின் உச்சகட்டமாய் கௌரவர் பக்கல் 11 அக்கவானிகளும், பாண்டவர் பக்கல் 7 அக்கவானிகளும் மகாபாரதத்திற் பேசப்படும். இத்தகைய படையைக் குருச்சேந்திரம் தாங்கியிருக்குமா என்பதே பெருங்கேள்வி.

    அடுத்தது அக்கவானி. போர்நடுவே படையினருக்கு ஆணையிடச் சங்கூதும் அளவிற்குப் பெரிதான வானி எனும்பொருளில் பெரும்படையணிக்கு இப்படிப் பெயரிட்டார் போலும். சங்கத்தின் முதற்குறை அங்கம். அங்கத்தின் வலித்த ஒலிப்பு அக்கம். சங்கம்>அங்கம்>அக்கம். வளைவுப்பொருளிலிருந்து கூட்டப்பொருளை முன்கொண்டது போல், சங்கிலிருந்து இங்கும் எண்ணிக்கைப் பொருள் எழுந்தது. அக்கவானி என்ற சொல்லே கற்பனையையுணர்த்தும். மகாபாரதந் தவிர்த்து ’அக்ஷௌகினி’ வேறெங்கும் பயின்றது தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் தானையே பெரிதும் பேசப்படும். (தானைக்குத் தண்டமெனும் பெயருமுண்டு.) தானை பயிலும் சங்கநூல்வரிகளைப் பேசினால் கட்டுரை நீளும். எனவே சேனைபேசும் பழைய நூல்வரிகளை மட்டும் இங்கு விவரிக்கிறேன்.

    ”இகல்வேந்தன் சேனை” என்பது கலி 108 -1 இல் வரும் சொல்லாட்சி. சிலம்பின் 19 ஆம் காதைமுடிவில் வரும் வெண்பாவில் ”விற்பொலியும் சேனை” என்ற கூற்று வரும். இவ்வெண்பா பிற்காலப் புலவரால் இடைச்செருகப்பட்டதென வேங்கடசாமிநாட்டார், உரையிற் கூறுவார். காதைகளின் இடைவரும் வெண்பாக்கள் இளங்கோ எழுதியதல்ல என்று “சிலம்பின் காலம்” நூலில் நான் சொன்னேன். “வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன் புட்கைச் சேனை பொலியச் சூட்டி” என்பது சிலம்பு 25 ஆம் காதையின் 146-147 ஆம் வரிகள். ”தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும் வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத” என்பது சிலம்பு 26 ஆம் காதையில் 80-81 ஆம் வரிகள். வஞ்சியிலிருந்து வடக்கேகிய படைகள் கடல்விளிம்பைத் தொட்டுப்போந்தனவாம். விடாது ”கொங்குவஞ்சியே உண்மை, குடவஞ்சி இல்லை”யெனச் சொல்லிவரும் திரு.நா.கணேசன் இந்த இருவரிகளையும், சேனையின் அளவுகளையும் பார்த்தால் ஒருவேளை குடவஞ்சியின் இருப்பு அவருக்குப் புரியக்கூடும்.

    அதே 26 ஆம் காதையில் செங்குட்டுவன் நூற்றுவர் கன்னரின் சஞ்சயனுக்குச் (= தூதனுக்கு) சொல்வதாய் 162-165 ஆம் வரிகள் வரும். ”கூற்றங் கொண்டுஇச் சேனை செல்வது நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன வங்கப் பெருநிரை செய்க தாம்” என்றுவரும். செங்குட்டுவன் வெறுந்தானைகளைக் கொண்டிருந்த மன்னனல்லன். பெருஞ்சேனைகளைக் கொண்டு, கனகரைப் பொருதுமளவிற்கு வடக்கே போனவன். மேலும் சிலம்பு 25ஆம் காதையில் 191-194ஆம் வரிகள் ”தாழ்கழல் மன்னன் தன்திரு மேனி வாழ்க சேனா முகம் என வாழ்த்தி இறைஇகல் யானை எருத்தத்து ஏற்றி அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கென்” என்றுவரும்.

    ”தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்” என்பது மணிமேகலை 8.59. இருபெரும் மன்னர் மணிபல்லவப் புத்தபீடிகையை தாமே கொள்வதற்காக தம்பெருஞ் சேனைகளால் சண்டையிட்டாராம் அடுத்து, சேர, பாண்டியரின் யானை, தேர், குதிரை மாவொடு, வயவர் நிரம்பிய சேனைகளோடு வஞ்சியிற் பொருதி சோழன் காரியாற்று மாவண் கிள்ளி அடைந்த வெற்றி பற்றி,

வஞ்சியினிருந்து வஞ்சி சூடி
முறஞ்செவி யானையும் தேரும் மாவும்
மறங்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த
தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர்
சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை
ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி
ஒளியொடு வாழி ஊழிதோ றூழி.

என்று மணிமேகலை 19, 120-128 வரிகள் சொல்லும். இவைபோக, சேனைத்தலைவர் பற்றி நாலாடியார் 3 ஆம் பாட்டும், சேனை, சேனாபதி பற்றி நான்மணிக்கடிகை 52, 55 உம், கார்நாற்பது 20 உம் கூறும். இக்கூற்றுகளைப் பார்க்கும்போது சேனையளவிற்குத் தமிழர் படைதிரட்ட முடிந்தது பொ.உ.மு.200க்கும் அப்புறமென்றே தெரிகிறது. பொ.உ.மு.462 க்கு அருகில் முதற்கரிகாலன் சேனைகொண்டு படையெடுத்து அசாதசத்துவின் மகன் உதயபட்டனோடு பொருதினானா அல்லது ஒரு சில தானைகளைக் கொண்டு பொருதினானா என்பது தெரியவில்லை. சேனைகளுக்கான ஆள்-அம்பு வலுவைப் பார்க்கும்போது அவ்வளவு முந்தையகாலத்தில் பெருஞ்சண்டை நடந்திருக்குமா என்றும் ஐயப்படவேண்டியுள்ளது. இதேபோல் தான் மகாபாரதப் போர்ச்செய்திகளும் பின்னால் சேர்க்கப்படவையோ என்று ஐயுறுகிறோம். படைகள் பற்றி வேறொரு கட்டுரையில் விரிவாய்ப் பார்க்கலாம். இதுகாறும் சொன்னவற்றால், வளைவு, கூட்டம், எண்ணிக்கை எனும் 3 பொருள்களின் வழியே பார்த்தால், சங்கம் என்பது அடிப்படையில் தமிழ்ச்சொல்லாகவே தெரிகிறது.
 





படம் உதவி: விக்கிபீடியா 
https://commons.wikimedia.org/wiki/File:Neptunea_-_links%26rechts_gewonden.jpg

________________________________________________________________________
தொடர்பு: இராம.கி. <poo@giasmd01.vsnl.net.in>
http://valavu.blogspot.com





No comments:

Post a Comment