Monday, December 11, 2017

பேசல் மிஷன்-மங்களூர்



——  து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


முன்னுரை:
    இணையத்தில், வரலாறு, கல்வெட்டு தொடர்பான சில தேடுதல்களின்போது எதிர்பாராமல் சில செய்திகள் ஈர்க்கின்றன. அவ்வாறான ஒரு தேடுதலின்போது மங்களூரில் இருக்கும் ”பேசல் மிஷன்”  (BASEL  MISSION)  பற்றிய ஒரு கட்டுரையைக் கருநாடக வரலாற்றுக் கழகத்தின் தொகுப்பு ஒன்றில் பார்க்க நேரிட்டது. கட்டுரையைப் படிக்கத் தொடங்கியதுமே, ஒரு நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் மனம் பாய்ந்துவிட்டது. மங்களூரின் ”பேசல் மிஷன்”  (BASEL  MISSION) வளாகத்துக்கருகிலேயே நாம் மூன்று ஆண்டுக்காலம் தங்கியிருந்துள்ளோமே என்று ஒரு வியப்புக் கலந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆனால், மகிழ்ச்சியைக் கடந்து, ஒரு கழிவிரக்க உணர்வு.  வரலாறு பற்றிய இப்போதிருக்கும் ஒரு விழிப்புணர்வும், ஆர்வமும், தேடுதலும் அப்போது இல்லாமல் எத்துணை மடமையோடு இருந்திருக்கிறோம் என்று ஓர் ஏமாற்ற உணர்வு. 

    1970-ஆம் ஆண்டு. கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் ஒருங்கிணைந்த ‘அஞ்சல்-தொலைத்தொடர்பு’த்துறையில் எழுத்தர் பணியில் சேர்ந்து மங்களூர் சென்ற ஆண்டு அது. பணிக்கு முன்பு, பெங்களூரில் இரண்டு மாதப் பயிற்சியின்போது அறிமுகமான நண்பருடன் மங்களூரில் ‘பல்மட்டா’  (BALMATTA)  என்னும் இடத்தில் வாடகை அறையொன்றில் உறைவிடம். தங்குமிடத்துக்கருகிலேயே ”பேசல் மிஷன்”  (BASEL  MISSION) அமைந்திருந்தது. அன்றாடம், இரவு உணவுக்காகத் தங்குமிடத்திலிருந்து பல்மட்டா கடைத்தெருவுக்குச் செல்லவேண்டும். ”பேசல் மிஷன்”  (BASEL  MISSION) வளாகத்துச் சுற்றுச் சுவரை ஒட்டியிருந்த மண்பாதையில் நடந்து செல்லவேண்டும். ”பேசல் மிஷன்”  என்பது தெரிந்திருந்தது. அது ஓர் இந்திய அமைப்பல்ல; கிறித்தவச் சமயத்தைச் சார்ந்த ஒரு வெளிநாட்டு அமைப்பு என்று தெரிந்திருந்தது. ஆனால், அந்த அமைப்பு எவ்வாறு இயங்குகிறது, என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன, வளாகத்தின் உள்ளே சென்று அறிந்துகொள்ளவேண்டாமா என்பதான சிந்தனைகள் எழாமலே காலத்தைக் கழித்துவிட்டிருக்கிறோம் என்று இப்போது நினைக்கிறேன்.

    கருநாடக வரலாற்றுக் கழகக் கட்டுரையை முழுதும் படித்தேன். அது கன்னட மொழியில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. மங்களூரில் இருந்தபோது மொழிப்புலமை மிகுதியாக ஏற்படாவிடினும், எழுத்துகளின் (லிபிகளின்) மீதான ஓர் ஈர்ப்பு, என்னைக் கன்னட எழுத்துகளைக் கற்கத் தூண்டியது. ஓரளவு பயிற்சியேற்பட்டதும், எழுத்தாளர் சிவராம காரந்த் அவர்கள் கன்னட மொழியில் எழுதியிருந்த “அழித மேலே”,  “மூக்கஜ்ஜிய கனசுகளு”  ஆகிய இரு புதினங்களைப் படித்துக் கதைகளைப் புரிந்துகொண்டேன். (’அழிதமேலே’ என்னும் புதினத்தைச் சித்தலிங்கையா என்பவர் தமிழில் பெயர்த்திருந்தார். அதையும் பின்னாளில் படித்திருக்கிறேன். மூலத்தின் முழு உணர்வையும் தமிழில் மிக இயல்பாக – மொழிபெயர்ப்பு என்னும் எண்ணமே தோன்றாதவகையில் – மிக அழகாகப் படைத்திருந்தார். தலைப்பு ‘அழிந்த பிறகு’.  அருமையான ஒரு புதினம்.. அடுத்த புதினம் ‘மூக்கஜ்ஜிய கனசுகளு’. அஜ்ஜி என்பது பாட்டியைக் குறிக்கும் கன்னடச் சொல்; ’மூக2’  என்பது ஊமையைக் குறிக்கும் சொல். கனசு என்னும் கன்னடச் சொல் கனவு என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபாதலைக் காணலாம். சிவராம காரந்தரின் எழுத்து நடை அழகானது).

    ஆண்டுகள் நாற்பத்தேழு கடந்துவிட்டதென்றாலும், மங்களூரின் சில நினைவுகள் மறையவில்லை. நாங்கள் தங்கியிருந்த பகுதி பல்மட்டா. எங்கள் அலுவலகம் ஹம்பனகட்டா என்னும் பகுதியில் அமைந்திருந்தது. தங்குமிடத்திலிருந்து அலுவலகம் நோக்கி நடந்து செல்வோம். போகும் வழியில், நகரின் புகழ் பெற்ற மோத்தி மகால் ஓட்டல். புத்தம் புதிய, அகன்ற திரை கொண்ட ”பிளாட்டினம்” என்னும் பெயருடைய திரையரங்கும் வழியிலேயே அமைந்திருந்தது. அடுத்து, மிலாக்ரஸ் (MILAGRES) தேவாலயம். அதன் வளாகத்தை ஒட்டி எங்கள் அலுவலகக் கட்டிடம். தேவாலயத்தாருக்குரியது. எங்கள் அலுவலகம் தவிர வங்கி ஒன்று இயங்கியது என நினைவு. அலுவலகத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இரயில் நிலையமும், வெண்லாக் (WENLOCK) மருத்துவமனையும். இந்த மருத்துவ மனை 1848-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கதிரி மஞ்சுநாதர் கோயில் (சமணக்கோயிலாக இருந்த இக்கோயில் சைவக்கோயிலாக மாற்றம் பெற்ற வரலாறு அப்போது தெரிந்திருக்கவில்லை. சமண எச்சங்கள் இன்னும் உள்ளன எனத்தெரிகிறது), மங்கலாதேவி கோயில் (இது கண்ணகிக் கோயில் என்று கருதப்படுகிறது) ஆகிய கோயில்கள் மங்களூரின் சிறப்பு மிகு அடையாளங்கள். ப3ந்தர் (கடலை ஒட்டிய துறை), உள்ளால் கடற்கரை, கலையரங்கக் கட்டிடம், அதன் எதிரே பெரிய திடல் ஆகியன அடிக்கடி சென்றுவந்த ஒரு சில இடங்கள். (கலையரங்கில் புல்லாங்குழல் கலைஞர் மாலி அவர்களின் குழலிசையைக் கேட்க ஆவலுடன் சென்றதும், மேடையில் இசை நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருடைய குடிப் பழக்கத்தால் நிகழ்ச்சி நின்றுபோனதும் நினைவில் நின்றவை. அப்போது அவருடன் துணையாக ஒரு வெளிநாட்டுப்பெண்மணி (மனைவி?) யும் இருந்தார்.) திடலில், ஏதோ ஒரு விழாவின்போது கேட்ட, மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும், யக்‌ஷ கானமும் நினைவில் அடக்கம். இன்னொன்றும் உண்டு. திரைப்படம் பற்றியது. தமிழ்த் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குநர் பாலச்சந்தர் தம் ஆசான் என்று கூறுமளவு பெயர் பெற்ற கன்னட இயக்குநர் புட்டண்ண கணகலின் திரைப்படங்களும், கிரீஷ் கார்நாடின் திரைப்படங்களும். முதன்முதலாகத் துளு மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பை நேரில் பார்த்த நிகழ்வு. அடடா! ஒளிப்படக் கருவி ஒன்றிருந்திருந்தால் பல ஆவணங்கள் இப்போது கைவசம் இருக்கும். முன்னுரை நீண்டுவிட்டது. நினைவுகளின் தாக்கம்.

பேசல் மிஷன்:
    பேசல், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நகரம். பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளின் எல்லையில் ரைன் நதிக்கரையில் அமைந்தது. சுவிஸ் நாட்டின் 23 மண்டலங்கள் அல்லது உள்நாட்டுப் பிரிவுகளுள் (CANTON) ஒன்றின் தலை நகர். வணிகம், கல்வி ஆகியவற்றின் மையம். 1815-ஆம் ஆண்டு. நெப்போலியனின் காலம். இரஷ்யாவுக்கும், பிரான்சுக்கும் இடையிலான போர் தொடர்பான அச்சம் எப்போதும் நிலவிக்கொண்டிருந்த சூழ்நிலை. பேசல் ஊரார் ஒன்றுகூடுகிறார்கள். போரின் தாக்கமின்றி ஊர் காக்கப்படவேண்டும் என்னும் ஒரே வேண்டுதல். வேண்டுதல் நிறைவேறினால் கிறித்தவ இறையியல் பள்ளி ஒன்று (SEMINARY)  நிறுவப்படும். இவ்வாறு, 1816-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-இல் உருவானதுதான் ”ஜெர்மன் இவாஞ்சலிகல் சொசைட்டி”  (GERMAN EVANGELICAL SOCIETY)  என்னும் இறையியல் கழகம். பின்னர், பேசல் மிஷன் எனப்பெயர் மாற்றம் பெற்றது. தொடக்கத்தில், சமயப் பரப்புக்காக ஆப்பிரிக்க நாட்டுக்கு மட்டும் சென்ற பரப்புநர்கள் நாளடைவில் வேறு நாடுகளுக்கும் செல்லத்தொடங்கினர்.

மங்களூரில் பேசல் மிஷன் (1834):
    1834-ஆம் ஆண்டு, ஜான் கிறிஸ்டோஃப் லெஹனர் (JOHN CHRISTOPH LEHNER), கிறிஸ்டோஃப் லியோனார்ட் க்ரெனர் (CHRISTOPH LEONARD GRENER), சாமுவெல் ஹெபிக் (SAMUEL HEBICH) ஆகிய மூவர் கள்ளிக்கோட்டை வழியாக மங்களூர் அடைந்து செயல்படத் தொடங்கினர். கருநாடகத்தின் தென் கன்னடம், தார்வாடா, பிஜாப்பூர் ஆகிய பகுதிகளில் கல்வி, தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் தங்கள் பணியைத் தொடங்கினர். மேற்கத்திய கல்வி முறை மதமாற்றத்துக்கு முதன்மையானது என்று கருதி மேற்கத்திய கல்வி முறையில் கருத்தைச் செலுத்தினார்கள். மேலே குறிப்பிட்ட ஹெபிக் என்பார், 1836-ஆம் ஆண்டு நான்கு மாணவர்களைக் கொண்டு ஆங்கிலப்பள்ளி ஒன்றைத் தொடங்கினார். அடுத்த ஆண்டே, மோக்லிங் (MOEGLING) என்பார் தார்வாடாவில் பள்ளியைத் தொடங்கினார். அடுத்தடுத்து, ஹுப்ளி, கடக், கொடகு (குடகு) ஆகிய இடங்களில் “ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளி”  என்னும் பெயரில் பள்ளிகள் உருவாயின.

பேசல் மிஷன்


பள்ளிகள்:
    பேசல் மிஷன் உருவாக்கிய பள்ளிகள் வியத்தகு முறையில் விரிவடைந்தன. ஒழுக்கம், தொழிற்கல்வி ஆகிய இரண்டுக்கும் முதன்மை அளிக்கப்பட்டது. 1853-இல் ஏறத்தாழ ஐம்பது தொடக்கப் பள்ளிகள்; எட்டு உயர்நிலைப் பள்ளிகள். மங்களூரில் பெல்மாண்ட் (BELMONT)  என்னும் ஒரு பெரிய மாளிகை கட்டப்பெற்று அங்கு பேசல் மிஷன் இயங்கியது. பெல்மாண்ட் என்னும் பெயர் நாளடைவில் மருவி, மிஷன் இயங்கிய அந்தப்பகுதிக்கு பல்மட்டா (BALMATTA) என்னும் பெயர் நிலைத்துவிட்டது. அங்கே பெல்மாண்ட் சர்ச் என்னும் பெயரில் ஒரு தேவாலயம் 1862-இல் கட்டப்பெற்றது. தொடர்ந்து ஹுப்ளி, தார்வாடா பகுதிகளிலும் தேவாலயங்கள் கட்டப்பெற்றன. பெல்மாண்ட் தேவாலயம் நூறாண்டுகளுக்குப் பின்னர் 1962-இல் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.
பெல்மாண்ட் (பல்மட்டா) தேவாலயம்

ஆங்கிலப்பள்ளி


மதமாற்றங்கள்:
    1842-ஆம் ஆண்டு வாக்கில் மதமாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அந்த ஆண்டில், ஆனந்தராவ் கௌண்டின்யர் என்னும் பிராமணர் கிறித்துவத்தைத் தழுவினார். அவரைத் தொடர்ந்து பகவந்தராவ் கௌசிக்,  முகுந்தராவ் கௌசிக் ஆகிய இரு பிராமணர்களும் மதம் மாறினர். இதற்குக் காரணமானவர் மோக்லிங் (REV. MOEGLING) என்பாரே. ஆனந்தராவ், குடகுப்பகுதிக்குச் சென்று சமயப்பரப்புப் பணியைக் கைக்கொண்டார். ’ஹொலெய(ர்)’, ’பில்லவர்’  ஆகிய குலத்தவர் மதம் மாறினர். கன்னட மொழியில் ‘ஹொலெயர்’  எனில், தமிழில் ‘பொலெயர்’  என்றாகிறது. தமிழகத்தில் நாம் குறிப்பிடும் புலையரே இவர்கள் என்பதில் ஐயமில்லை. பில்லவர் என்பவர் வில் கொண்டு வேட்டைத் தொழிலில் ஈடுபட்ட வில்லிகள் என்று கன்னடக் கட்டுரை எழுதிய ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

தொழிற்பயிற்சிகள் (1844):
    மதமாற்றம் பெற்றவர்கள் சமுதாயத்தினரால் புறக்கணிக்கப் பட்டதால் அவர்களின் தற்சார்பு வாழ்க்கைக்கு உதவும் பல்வேறு தொழிற்பயிற்சிகளை மெட்ஸ் (REV. METZ) என்னும் ஜெர்மானியப் பாதிரியார் வழங்கினார். குறிப்பாக நெசவுப்பயிற்சி. இது நடைபெற்றது 1844-ஆம் ஆண்டு.

மங்களூர் ஓடுகள் (1865):
    அடுத்து, ஓடுகள் செய்தல். மங்களூர்ப் பகுதியில் கும்பாரர் என்று வழங்கும் மண்ணாளர்கள் திகரி என்னும் சக்கரத்தைக் கொண்டு கைகளால் உருவாக்கிய நாட்டு ஓடுகளுக்கு மாற்றாக இயந்திரங்கள் கொண்டு ஓடுகள் உருவாக்கும் தொழிற்சாலையை பிளெபாத் (PLEBOT) என்னும் பெயருடைய ஜெர்மன் பாதிரியார்  1865-ஆம் ஆண்டு தோற்றுவித்தார். இவருடைய இயற்பெயர் ஜார்ஜ் பிளெப்ஸ்ட் (GEORGE PLEBST) என்பதாகும். பேசல் மிஷன் ஓட்டுத்தொழிற்சாலை என்னும் பெயரில் அது செயல்படத் தொடங்கியது. (நாட்டு ஓடு என்னும் தமிழ் மொழி வழக்கை அப்படியே கன்னட மொழியில் “நாட ஓடு”  என்று கன்னட ஆய்வாளர் வழங்குவது குறிப்பிடத்தக்கது. பழங்கன்னடச் சொல் தமிழை ஒட்டியே இருந்தது என்பதற்கு இதுவே சான்று. ஓடு என்பதற்குப் பின்னர் வழங்கிய கன்னடச் சொல் ஹென்ச்சு என்பதாகும்).
ஓட்டுத் தொழிற்சாலை - பெயர் முத்திரை


ஓட்டுத் தொழிற்சாலை


மற்றுமொரு தொழிற்சாலை

மங்களூர் ஓடுகள் -  ஒரு தோற்றம்


    நாள்தோறும் பன்னிரண்டு தொழிலாளிகளின் உழைப்பில் ஐந்நூற்று அறுபது ஓடுகள் வெளிவந்தன. இந்த ஓடுகள் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. பின்னர், ஐம்பத்திரண்டு தொழிற்சாலைகள்; ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள்.

பேசல் மிஷன்-அச்சுத்தொழில் (1841):
    பேசல் மிஷன் பதிப்புத்தொழிலிலும் இறங்கியிருந்தது. 1817-இல் ‘கன்னட மொழியின் இலக்கணம்’  (A GRAMMAR OF THE KARNATA LANGUAGE)  என்னும் பெயரில் கல்கத்தாவிலிருந்து பேசல் மிஷன் பதிப்பித்த நூல் வெளியானது. தொடர்ந்து, கன்னட மொழிக்கான நிகண்டு, இலக்கியம் ஆகிய துறைகளில் நூல்கள் பதிப்புப் பெற்றன. முதன் முதலில் கன்னட மொழியில் கன்னட லிபியில் விவிலியத்தை ஜான் ஹாண்ட்ஸ் (JOHN HANDS) என்பார் நூலாக வெளியிட்டார். இது அப்போதைய மதராசில் ”கமர்ஷியல் பிரெஸ்”  என்னும் அச்சகத்தின் வாயிலாக அச்சேறியது. 1824-இல், ரெவரெண்ட் ரீவ் (REV.REAVE) என்பவரது முயற்சியால் ஆங்கிலம்-கன்னடம் அகரமுதலி பதிப்பிக்கப்பெற்றது. 1840-ஆம் ஆண்டு, பெங்களூரில் வெஸ்லி மிஷனரியைச்  (WESLEY MISSIONARY)  சேர்ந்த காரெட் (GARETTE) என்பார் அரசு அச்சகத்தை நிறுவினார். இதைத் தொடர்ந்து 1841-இல் பேசல் மிஷன் அமைப்பினரும் மங்களூரில் ”ஜெர்மன் இவாஞ்சலிகல் மிஷன் பிரஸ்”  (GERMAN EVANGELICAL  MISSION PRESS)  என்னும் பெயரில் அச்சகம் ஒன்றை நிறுவினார்கள். கன்னட லிபியில் “துளு கீர்த்தனைகள்”  நூலாக வெளிவந்தது. 1843-இல் “மங்களூரு சமாச்சார”  என்னும் இதழ் வெளியாயிற்று. 1859-இல் கொங்கணி மொழியில் கன்னட லிபியில் நூல்கள் வெளியாயின. மற்ற மொழிகளிலும் செய்தித் தாள்கள் வெளியாயின. ஜெர்மன் மிஷனரியைச் சேர்ந்த ரெவ. குண்டர்ட் (REV.GUNDERT) என்னும் மொழியியல் அறிஞர் மலையாளம்-ஆங்கிலம் அகர முதலியை அச்சேற்றினார். அண்மையில் 2016-ஆம் ஆண்டு, பேசல் மிஷன் அச்சகம், 175 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடியுள்ளது.
அச்சகம்

மங்களூரில் அச்சான மலையாளம் - ஆங்கிலம்  அகரமுதலி


முடிவுரை:
    பல்லாயிரம் கற்கள் தொலைவைக் கடந்து கிறித்தவ இறையியல் பரப்பு என்னும் நோக்கத்தில் கருநாடகத்துக்கு வந்த பேசல் மிஷன் அமைப்பு பலவகைப்பட்ட சமுதாயப் பணிகளை ஆற்றிக் கருநாடக வரலாற்றில் நீண்டதொரு இடத்தைக் கொண்டுள்ளது என்பதும் நூற்று எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நின்று செயலாற்றியுள்ளது என்பதும் பெருஞ்செயலாகும்.

ஒளிப்படங்கள் : இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.





________________________________________________________________________
தொடர்பு:
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை (doraisundaram18@gmail.com)
அலைபேசி : 9444939156.





No comments:

Post a Comment