Tuesday, March 17, 2015

பெரியாரின் பேட்டி

– தேமொழி.
அருப்புக்கோட்டை காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளரான “ஈரோடு ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கர்” என்றழைக்கப்பட்ட பெரியாருடன் அக்டோபர் 31, 1922 அன்று மாலை 8 – 9 மணி வரை நாடார் குலமக்களில் சிலர் ஒரு நேர்காணலில் பங்கு பெற்றார்கள்; அப்பொழுது நாடார்குல மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பெரியார் உரைத்த பதில்கள் சுருக்கமாக இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது. இது அக்கால தமிழக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு ஆவணம் என்ற கோணத்தில் வழங்கப்படுகிறது:
_________________
சென்னை காங்கிரஸ் பிரிவில் நாடார் இனத்தவரின் எண்ணிக்கை ஒரு நூறைக் கூட எட்டவில்லை. உங்களுக்கு காங்கிரசின் மீது நம்பிக்கை ஏற்படும்படி காங்கிரசின் நடவடிக்கை இல்லாதது இதற்கோர் காரணமாக இருக்கலாம். தற்பொழுது நடந்த மதுரை தென்காசி மாநாடுகளுக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமானதாக எனக்குத் தோன்றுகிறது.
இந்நிலைக்கு அடிப்படைக்காரணமான ஊழல்களை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. நிலைமையின் தீவிரத்தை நான் சரியாகக் கணிக்காததால், மூன்று நான்கு அதிகமான வாக்குகளினால் நாடார்களைப் பற்றிக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் * தோல்வியடைந்துவிட்டது.
பஞ்சமர்கள் கோவிலில் நுழைய ஒப்புதல் கிடைக்கும் வரை நாடார்களும் பொறுமை காத்து, பிறகு அனைவரும் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறுவது சரியல்ல. அது நாடார் குல மக்களை நையாண்டி செய்வதற்கு ஒப்பாகும்.
சென்னை மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் சாதிக்காழ்ப்புணர்வும் கண்மூடித்தனமும் அதிகமாக இருக்கிறது. வடமாவட்டங்களின் சில பகுதிகளில் நாடார்குலத்தையும்விட தாழ்ந்த குலம் என்று கூறப்படுபவர்கள் கோவிலுக்கு நுழையத் தடை இல்லை. ஆனால் நாடார்குல மக்களை தடை செய்யும் தெற்கு மாவட்ட மக்களின் இந்த மனநிலைக்குக் காரணம் புரியவில்லை.
எனது கட்டுப்பாட்டில் இருக்கும் 18 தேவஸ்தானங்களில் பஞ்சமர் என்று ஒதுக்கப்படுபவரும் கூட கோவிலுக்குள் செல்ல நான் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கம் வழங்கிய பெருமைமிகு “ராவ்பகதூர்” பட்டங்களைப் பெற்றோர் என் முயற்சியின் குறுக்கே நிற்கிறார்கள். ஆனால் விரைவில் நிலைமை மாறும் என்று தெரியும் அறிகுறிகள் சிலவற்றினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சமீபத்தில் நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற பொழுது மேலாடையை நீக்கிவிட்டு உள்ளே நுழையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். ஆனால், நான் கோவில் உள்ளே சென்ற பொழுது போலீஸ் காவலர் தலையில் தொப்பி, இடுப்பில் கச்சை, காலில் பூட்ஸ் ஆகியவற்றை அணிந்து நின்று கொண்டிருக்கிறார். இது நம் மக்களுக்கு ஏனோ கண்ணில் படவில்லை. இதைத்தான் பக்தியின் குருட்டுத்தனம் என்று நான் குறிப்பிடுகிறேன். இதற்குப் பிறகு பக்தியின் அடிப்படையில் மட்டுமே என் மேலாடையை எடுக்கச் சொன்னார்கள் என்று எப்படி நான் பொருள் கொள்வது?
உயர்வு தாழ்வு எண்ணங்களும், அதன்பொருட்டு சண்டைகளும் தமிழக தென்பகுதியில்தான் அதிகம் இருப்பது கண்டு என் மனம் கவலை அடைகிறது. இவையெல்லாம் அடியோடு ஒழிந்து சமத்துவம் ஏற்படாதவரை நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அது நிலைக்காது.
அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்யும் நிலைக்குக் காரணம் நாமே. அவர்களை வெளியேற்றுவதும் நம் கையில்தான் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே நானும் திருவாளர் வரதராஜுலு நாயுடு அவர்களும் குறைந்தது இரண்டு மாதங்களாவது தென்னகத்தின் இப்பகுதியில் பணியாற்ற எண்ணியுள்ளோம்.
காங்கிரசார் நாடர்களின் உரிமை பற்றி மாநாடுகளில் பேசுகிறார்களோ இல்லையோ, ஆனால் நாட்டின் சுதந்திரம் கிடைக்க தங்கள் நடைமுறைகளில் நல்வழியைக் கடைபிடிக்க வேண்டும். தங்கள் செயல்களில் நேர்மையின்றி, நாடர்களின் உரிமைகளைக் கருத்தில் கொள்ளாது, அவர்களுக்காக தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காவிட்டால் காங்கிரசின் செய்கையில் நேர்மை இல்லை என்றாகிறது. நேர்மை இல்லாவிட்டால் இயக்கத்தில் வெற்றி காண இயலாது. இந்த நிலைமையை நீட்டிப்பதில் பயனில்லை.
காங்கிரசில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் இருக்கிறார்கள். நாடார்களுக்கு எதிராக போலிக்காரணங்கள் கூறுவதும், நாடர்குல தீர்மானம் பற்றி தங்களுக்கு தடையொன்றுமில்லை என்றும், ஆனால், மற்றவர்கள்தான் அவர்கள் விருப்பத்திற்குத் தடை செய்வது போல பேசுபவர்களை நானறிவேன். ஆனால் இவர்களின் எண்ணிக்கையில் வெகு சிலரே. இவர்களைப் பொருட்படுத்தக் கூடாது. நாட்டுக்கு உழைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ள உண்மையான நாட்டுப் பற்றுள்ளவர்களும் காங்கிரசில் உள்ளனர்.
நாடார்குல மக்களில் சிலர் சில நாட்களுக்கு முன்னர் சமத்துவம் மறுக்கப்படும் இந்துக் கோவிலில் நுழைய முற்பட்ட செயலை நானறிவேன். உங்களுக்காக எந்த உதவியும் செய்ய நான் தயாரக உள்ளேன், ஆனால் தற்போதைய நிலைமை உதவிகரமாக இல்லை. அந்நியர் கையில் ஆட்சி இருக்கும்வரை, நமக்கு இதில் வெற்றி கிடைக்காது. இந்தியர்கள் கையில் ஆட்சி கிடைக்கும்வரை வெற்றி வாய்ப்பு குறைவு, ஆனால் நம் கையில் அதிகாரம் கிடைக்கும் நாள் நெருங்குகிறது என்பது என் கருத்து. சுதந்திரம் பெறுவது உடனே கிடைக்காவிட்டால் அது வெகு காலத்திற்கு தள்ளிப் போய்விடும். ஆகவே, அன்பு நாடார்குல நண்பர்களே அதனால் நீங்கள் இந்தியாவின் சுதந்தரத்திற்காகப் பாடுபடுங்கள்.
ஸ்ரீனிவாசய்யங்கார் உங்கள் ஆதரவாளர்தான் என்பது எனக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் அவரைப்பற்றித் தெரியும். ஆனால், மதுரை மாநாட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவரைக் குறை சொல்வதில் பயனில்லை. நாடார்களைப் பற்றிக் கொண்டுவந்த தீர்மானம் தோற்றுப் போனதில் அவர் வேண்டுமென்று உங்களுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கவில்லை என்பதாக நான் கருதுகிறேன். நாடார்குல மக்களின் தியாகங்கள் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மட்டும் இது போன்ற சமூகக்குறைகளை எதிர்கொள்ளாமல் இருந்திருக்க நேர்ந்திருந்தால் சிறந்த நாட்டுப்பற்றுள்ளவர்கள் என்பவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.
உங்களது மனக்குறைகளை கடந்த 15 ஆண்டுகளாகவே நானறிவேன். அதைப்பற்றி பலமுறை பேசியும் உள்ளேன். பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டபிறகு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக உங்களுடன் நன்கு பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. உங்களிடம் நான் நன்றியும் நல்லெண்ணமும் கொண்டுள்ளேன். இது முகத்திற்கெதிரில் கூறும் வெறும் புகழ்ச்சி உரை அல்ல. ஆனால், நீங்கள் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி. உங்களிடம் பல நல்ல குணங்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக உள்ள நல்ல குணம் நீங்கள் சொன்ன சொல் மாறது இருப்பது.
இதற்குச் சான்றாக ஒரு நிகழ்வைக் காட்ட விரும்புகிறேன். நான் மதுவிலக்குக்கு எதிராக போராடிய பொழுது “கள் குத்தகை” எடுக்கும் நாடர்கள் சிலரிடம் நாட்டின் நலத்திற்கு முன்னுரிமை அளித்து குத்தகை எடுப்பதைத் தவிர்க்கும்படி வேண்டிக் கொண்டேன். அவர்களும் என் வேண்டுகோளை ஏற்றனர். ஒருமுறை இதற்காக நாடார் ஒருவரை அணுகி என் வேண்டுகோளை வைக்கச் சென்றபொழுது, அரசு 144 தடை விதித்து, அந்த சட்டத்தின் கீழ் என்னை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார்கள். எனினும், அந்த நாடார் எனக்கு ஆறுதல் சொல்லி, நான் பேச்சு மாறமாட்டேன், உங்கள் அறிவுரைப்படி குத்தகை எடுக்க மாட்டேன் என்று கூறி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தார்.
அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றி குத்தகையும் எடுக்கவில்லை என்று நான் மகிழ்ந்தேன். ஆனால், அந்தக் குத்தகையை வேளாளர்களில் சிலரும், கவுண்டர்களில் சிலரும் எடுத்த பொழுது வருத்தமுற்றேன். இறுதியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது, சமீபத்திய நிகழ்வுகளின் காரணமாக மனம் வருந்தி காங்கிரஸ் மீது வெறுப்பு கொள்ளாதீர்கள். இயன்றால் காங்கிரஸ் உறுப்பினராகுங்கள். முதலில் நாட்டிற்கும் பிறகு உங்கள் சாதிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
உங்களை என்றும் நான் நினைவில் கொள்வேன், எனக்கு நீங்கள் கொடுத்த மரியாதை மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். திருப்பூரில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு உங்களில் ஒருசிலராவது வரவேண்டும் என்று விருப்பத்துடன் அழைக்கிறேன்.
_________________
* இத்தீர்மானம் தொடர்ந்து வந்த திருப்பூர் மாநாட்டில் நிறைவேறியது என்று இந்த இதழிலேயே மற்றொரு செய்தி அறிவிக்கிறது. ஆனால் அப்பொழுது தீர்மானத்தை நிறைவேற்ற ஏற்பட்ட தடைகளையும், மாநாட்டில் நடந்த கூச்சல் குழப்பங்களையும், தீர்மானத் தடைக்கு பாமரகள்தான் காரணம் என்று பழிபோட்ட கற்றறிந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் உண்மை குணத்தையும் கண்ட நாடார்குல மக்கள், தீர்மானம் நிறைவேறியும் மகிழ்ச்சி அடையாததை, அந்த இதழின் 4 வது பக்கத்தில் “குளிக்கப் போன இடத்திலா சேற்றைப் பூசிக்கொள்வது” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்தியொன்று குறிப்பிடுகிறது.
_________________
பெரியாரின் நேர்காணல் தகவல் இடம் பெற்ற பத்திரிக்கை:
நாடார் குல மித்திரன், பதிப்பு: நவம்பர் 11, 1922 , மலர் 4: இதழ் 8, பக்கம் எண்: 2 – 3
‘தமிழ் மரபு அறக்கட்டளை’மின்னாக்கம் செய்துள்ள இந்த இதழை இந்த சுட்டியில் காணலாம்
மற்றும் பல ‘நாடார் குல மித்திரன்’ பத்திரிக்கையின் மின்னாக்கங்களின் தொகுதியை
“தமிழ் மரபு நூலகம்” வலைத்தளத்தில் காணலாம்

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=55073

No comments:

Post a Comment