உதயபெருமாள் கவுண்டர் (எ) துப்பாக்கிக் கவுண்டர்
வீரவரலாறு
வீரவரலாறு
காளையார் கோயில் அருள்மிகு காளீசுவரர் கோபுர வாயிலில்
துப்பாகிக் கவுண்டர் சிலை, மற்றம் அவர் சுட்டு வீழ்த்திய கரடி சிலை.
17ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கொங்குநாடு என்று அழைக்கப்படும் பகுதியில் தர்மபுரியில் பிறந்தவர் உதயபெருமாள் கவுண்டர்.
வெள்ளையரின் படையில் கவுண்டர்
வெள்ளையர் படையில் சேர்ந்து சுமார் 10 ஆண்டுகளாக துப்பாக்கி சுடுதல். துப்பாக்கி. வெடிகுண்டு. தோட்டா தயாரித்தல், ஆகியவற்றில் திறமை மிக்கவராக விளங்கினார். அதனால் அவரை உடன் பணிபுரிந்தவர்கள் துப்பாக்கி கவுண்டர் என்றே அழைத்தனர்.
வெள்ளையர் படையில் சேர்ந்து இருந்தாலும் இயல்பாகவே நாட்டுபற்று மிக்கவராக இருந்ததால் வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்துவது பிடிக்கவில்லை. எனவே, சகவீரர்களிடம் வெள்ளையர்களை எதிர்ப்பது சம்பந்தமாக நாட்டுபற்றை ஊட்டினார். இதை அறிந்த வெள்ளையர்களின் மேல் அதிகாரிகள் உதயபெருமாள் கவுண்டரை கொல்ல திட்டம் தீட்டினர். ஆனால் அவர்களின் திட்டத்தை அறிந்த உதயபெருமாள் கவுண்டர் அங்கிருந்த சில வெள்ளையரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினார். அச்சமயத்தில் சிவகங்கை சீமையில் வீர மங்கை வேலுநாச்சியார் வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்து வருவதை தமது உற்ற நண்பர்விருப்பாச்சி கோபால நாயக்கர் மூலம் ஏற்கனவே கவுண்டர் அறிந்து இருந்ததால், விரைந்து சிவகங்கை சீமை நோக்கி பயணம் ஆனார்.அந்த சமயத்தில் சிவகங்கை சீமையில் மருது சகோதரர்கள் ஆட்சி நிர்வாகம் செய்து வந்தார்கள். வேலுநாச்சியார் அவர்கள் உடல் நலக்குறைவால் விருப்பாச்சி கோட்டையில் தங்கியிருந்தார். சிவகங்கை சீமையில் கவுண்டர்
சிவகங்கை சீமையின் காரைக்குடி கழனிவாசல் பகுதிக்கு வந்து சேர்ந்த உதயப்பெருமாள் கவுண்டர், சக போராளிகள் மு்லம் அன்னை வேலுநாச்சியார் கோபால நாயக்கரின் விருப்பாச்சி கோட்டையில் தங்கி இருப்பதை அறிந்த கவுண்டர் ராணியாரை சந்திக்க விருப்பாச்சி கோட்டைக்கு சென்றார்.
வீரமங்கையைச் சந்தித்த கவுண்டரிடம், “பிரதானிகளான மருது சகோதரர்களுடன் சேர்ந்து நீ பணிபுரிய வேண்டும்” என்றும், மேலும்“சிவகங்கை சீமைக்கு கௌரி வல்லப உடையணத்தேவர் தான் எனது சுவீகார புத்திரன் என்றும, அவரை தேடி கண்டுபிடித்து இந்த ஓலை நறுக்கை ஒப்படைக்க வேண்டும்” என்றும் கட்டளை இட்டார். ராணியாரிடம் இருந்து ஓலையை பெற்றுக்கொண்டு, ராணியாரிடமும் கோபாலநாயக்கரிடமும் விடைபெற்றுக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு சிவகங்கை சீமை வந்த கவுண்டர் மருது சகோதரர்கள் படையில் சேரத் தருணம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்.
மருதிருவருடன் கவுண்டர்
பெருமழையின் காரணமாக மறவமங்கலம் கண்மாய் உடைப்பு ஏற்பட்டு மக்கள் திரண்டு உடைப்பை அடைத்துக்கொண்டு இருந்தனர்.மருதிருவரும் அங்கு வந்து மக்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருந்தனர். இந்த செய்தி அறிந்து, மக்களைக் காப்பாற்றும் பொருட்டு அங்கு சென்ற உதயபெருமாள் கவுண்டர், பம்பரமாக சுழன்று தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். கண்மாய் உடைப்பு சரிசெய்யப்பட்டதும், மக்கள் அனைவரும் மகிழ்ந்திருந்த சமயம், பெரியமருது அங்கு கூடிஇருந்த மக்களை பார்த்து, “யார் இந்த கண்மாயில் நீந்தி அக்கரைக்கு செல்கிறார்களோ அவர்களுக்கு விரும்பும் சன்மானம் வழங்கப்படும்” என்று அறிவித்தார். மருது சகோதரர்கள், படையில் சேர இது தான் தக்க தருணம் என உணர்ந்த கவுண்டர் சற்றும் தாமதியாமல் கடல் போல் விரிந்து கிடந்த கண்மாயில் குதித்து அக்கரைக்கு சென்றதுடன் திரும்பியும் நீந்தி வந்து சேர்ந்தார்.
அதிசயித்து நின்ற பெரியமருது, கவுண்டரை அழைத்து “யார் நீ” என்று கேட்டார். தான் தர்மபுரியை சேர்ந்தவன் என்றும் தனது பெயர் உதயபெருமாள் கவுண்டர் என்றும், துப்பாக்கி சுடுவதில் சிறந்தவன் என்பதால் என்னை அனைவரும் துப்பாக்கி கவுண்டர் என்று அழைப்பார்கள் என்றும் சொன்னார். பெரியமருது உதயபெருமாளை பார்த்து “நீ துப்பாக்கி சுடுவதில் வல்லவன் என்றால் அதோ அங்குவானத்தில் பறந்து செல்லும் வல்லூறுவை சுட்டு வீழ்த்து பார்க்கலாம்” என கூறினார். உடனே தனது துப்பாக்கியை கொண்டு ஒரே தோட்டாவில், அந்த பறவையை வீழ்த்தி காட்டினார். கவுண்டரின் திறமையை கண்டு வியந்த பெரியமருது அவரது பணி நமக்கு தேவைப்படும் என்று எண்ணியவாறு, உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டார். “எனக்கு பரிசு எதுவும் வேண்டாம். என்னை தங்களது படையில் சேர்த்துக்கொண்டால் போதும்” என்று உதயபெருமாள் கவுண்டர் கூறிய பதிலை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த பெரியமருது உடனடியாக சின்னமருதுவிடம் நமது படையில் துப்பாக்கி படைபிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதற்கு உதயபெருமாள்கவுண்டரை தளபதியாக்க உத்தரவிட்டார். மேலும் உதயபெருமாள் கவுண்டரை திருப்பாச்சேத்தி அம்பலகாரராக அறிவித்து திருப்பாச்சேத்தியில் சென்று தங்கும்படி கூறினார். தமது எண்ணம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்ட உதயபெருமாள் கவுண்டர், தனது மனைவி பொன்னாயி மற்றும் மகன்கள் ஆறுமுகம், உதயபெருமாள் ஆகியோருடன் திருப்பாச்சேத்தியில் தங்கினார்.மேலும், ஊர் பிரச்சனைகளை பேசி தீர்க்கவும், போராளிகளை தயார் செய்யவும் தனது வீட்டின் அருகிலேயே சவுக்கை ஒன்று அமைத்தார்.அந்த பகுதி இன்றும் “கவுண்டவளவு“ என்று அழைக்கப்படுகிறது.
மருது சகோதரர்கள் இட்ட உத்தரவுப்படி, சத்திரபதி கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சியும் தாராமங்கலத்தில் துப்பாக்கிகள் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையையும் ஏற்படுத்தி உதயபெருமாள் கவுண்டர் சிறப்பாக நடத்திவந்தார். வெள்ளையர்களைசுட்டுவீழ்த்த வெறி கொண்டு இருந்த உதயபெருமாள் கவுண்டர் தினமும் குளக்கரைக்கு சென்று, கண்ணில் படும் வெள்ளை கொக்குளை சுட்டு வீழ்த்தி தனது வெறியை தீர்த்துக்கொண்டார்.
வீரமங்கையின் மறைவு
25.12.1796ல் வீரமங்கை வேலுநாச்சியாரின் மறைவிற்கு பிறகு, ராணியாரின் சுவீகார புத்திரன் கௌரிவல்லபர் அறந்தாங்கி பகுதியில் பதுங்கி வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.
ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததும் பாளையங்கோட்டை போரும்
அதன்பின்னர், திருநெல்வேலி சீமையில் வீரபாண்டிய கட்டபொம்மனை வெள்ளையர்கள் தூக்கிலிட்டனர். கட்டபொம்மனின் குடும்பத்தாரையும் வெள்ளையர்கள் சிறை வைத்தனர். அங்கிருந்து தப்பி வந்த ஊமைத்துரை சிவகங்கை சீமையை அடைந்து மருதுசகோதரர்களிடம் அடைக்கலமாகி நடந்த விபரங்களை கூறினார். மனம் வேதனையுற்ற பெரியமருது உடனடியாக சின்னமருதுவையும் உதயபெருமாள் கவுண்டரையும் அழைத்து, தேவையான படைவீரர்களை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி சீமைக்குச் சென்றுபாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கட்டபொம்மனின் குடும்பத்தாரை காப்பாற்றி வரும்படி உத்தரவிட்டார். நடுஇரவில்பாளையங்கோட்டையை அடைந்த வீரர்கள் நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு திடீர் தாக்குதல் நடத்தி, கட்டபொம்மனின் குடும்பத்தாரை காப்பாற்றி சிவகங்கை சீமைக்கு அழைத்து வந்தனர்.
மருது சகோதரர்கள் மீது வெள்ளையரின் கோபம்
ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் பாளையங் கோட்டையிலும் மருது சகோதரர்கள் தாக்குதல் நடத்தியதால், வெள்ளையர்கள் மருது சகோதரர்கள் மீது கோபம் கொண்டனர். மருதிருவரும் இந்நிகழ்ச்சிக்கு பிறகு, வெள்ளையர் ஆதிக்கத்தை முழுமையாக எதிர்க்க முடிவுசெய்தனர். இதனால் உதயபெருமாள் கவுண்டர் தனது துப்பாக்கிக்கு வேலை வந்ததை எண்ணி, இனி குளக்கரையில் கொக்குகளை சுட வேண்டியதில்லை, பரங்கியர் தலையை சுட்டு வீழ்த்தலாம் என அகமகிழ்ந்தார்.
திருப்பாச்சேத்தி போர்
7.6.1801ஆம் ஆண்டு திருப்பூவணம் திருப்பாச்சேத்தி வழியாக இராமநாதபுரம் பகுதிக்கு மேஜர் கிரே தலைமையிலான வெள்ளையர் படை வருவதை அறிந்த உதயபெருமாள் கவுண்டர் தனது சக போராளிகளுடன் திருப்பாச்சேத்திக்கு மேற்கே 1 மைல் தொலைவில் இரு கண்மாய்கள் இணையும் இடத்தில் மரங்கள் அடர்த்தியாக இருந்த பகுதியில், மறைந்திருந்து தாக்கும் “கொரில்லா போர்” முறையில் திடீர்தாக்குதல் நடத்தினார். இந்த சண்டையில் மேஜர் கிரே சுட்டு கொல்லப்பட்டார். தளபதி நாகின் ஈட்டியால் தாக்கப்பட்டு காயமடைந்தார். லெப்டினன்ட் ஸ்டு்வர்டு தாடை எழும்பு முறிந்து பலத்த காயமடைந்தார். மேலும் வெள்ளையர் படையில் 15 பேர் கொல்லப்பட்டனர்.பரங்கியர் படை அத்துடன் புறமுதுகிட்டு ஓடியது. இந்த தாக்குதல் குறித்து “வெல்ஸ்” என்னும் வெள்ளையர் தளபதி தனது டைரியில்குறிப்பு எழுதி வைத்துள்ளார். இந்த போரில் வெற்றி பெறக் காரணமாக இருந்த உதயபெருமாள் கவுண்டரின் வீரத்தைப் பாராட்டி அவருக்கு திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் சிலை வைக்க பெரியமருது உத்தரவிட்டார். (மேற்படி சிலை திருப்பாச்சேத்தி சிவாலயத்தில் முருகன் சன்னதியில் உள்ளது).
கர்னல் அக்னியூவின் கோபம்
திருப்பாச்சேத்தியில் நடந்த போர் சண்டை குறித்து தகவல் அறிந்த கர்னல் அக்னியூ, மருது சகோதரர்களை அழிப்பதே எனது முதல் வேலை என்று, சிறுவயல் நோக்கி தனது படையுடன் புறப்பட்டார். இதை அறிந்த மருது சகோதரர்கள் தமது படையுடன் சிறுவயலில் இருந்து காளையார்கோயில் கோட்டைக்கு சென்றனர். சிறுவயல் வந்த அக்னியூ தலைமையிலான படை ஏமாற்றம் அடைந்தது.சிறுவயலில் இருந்து காளையார்கோயில் வரை அடர்ந்த காட்டு பகுதியாக இருந்ததால், பீரங்கிகளை கொண்டு செல்ல ஏதுவாக சாலை அமைக்கும் பணியில் வெள்ளையர் படை ஈடுபட்டது.
அக்னியூவின் வெள்ளை கரடி
மருது சகோதரர்கள் தமது படையை உதயபெருமாள் கவுண்டர் தலைமையில் காட்டு பகுதிக்கு அனுப்பினர். கொரில்லா போர் முறையில் வெள்ளையர் படையை தாக்கினர். அந்த சமயத்தில் அங்கிருந்த கர்னல் அக்னியூவை உதயபெருமாள் கவுண்டர் துப்பாக்கியால்,குறிபார்த்து சுட்டார். அப்போது, அக்னியூ வளர்த்த வெள்ளை கரடி குறுக்கே வந்து பாய்ந்து அக்னியூவை காப்பாற்றி தன் உயிரைமாய்த்துக்கொண்டது. கோபம் கொண்ட அக்னியூ பீரங்கியை உதயபெருமாள் பக்கம் திருப்ப உத்தரவிட்டான். நொடிப்பொழுதில் உதயபெருமாள் கவுண்டர் வேறுதிசைக்கு சென்று தனது துப்பாக்கி தாக்குதலை நடத்தினார்.
கௌரிவல்லபரை சந்தித்த கவுண்டர்
அந்த சமயத்தில், சிவகங்கை சீமைக்கு உரிமை கோரிய கௌரிவல்லபரை மன்னராக அறிவித்து வெள்ளையர்கள் கௌரிவல்லவரை தங்களுடன் வைத்துக்கொண்டனர். வேறு வழியின்றி வெள்ளையர் படையில் வந்த கௌரிவல்லபரை யார் எனத் தெரியாததால், முதலில் குதிரையைச் சுட்டு வீழ்த்தினார். தமிழ் மன்னர் போன்ற தோற்றத்தில் குதிரையில் வீற்றிருபவர் யார் என அருகில் இருந்தவர்களிடம் உதயபெருமாள் கவுண்டர் விசாரித்தபோது, அவர்தான் மன்னர் கௌரிவல்லபர் என அறிந்ததும், நிராயுதபாணியாக நின்ற கௌரிவல்லபரிடம், ராணி வேலுநாச்சியார் கொடுத்த ஓலை நறுக்கை ஒப்படைத்து விட்டு, அடுத்த கணமே அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். ஒன்றும் புரியாத நிலையில், நிராயுதபாணியான தம்மை கொல்லாமல் ஏதோ ஓலையை கொடுத்துவிட்டு செல்கிறானே இந்த வீரன் என்று எண்ணிய கௌரிவல்லபர், அந்த ஓலையை பிரித்து பார்த்தபோது ராணி வேலுநாச்சியார் தன்னை சுவீகார புத்திரன் என்று அதிகாரம் அளித்திருப்பதை அந்த ஓலை மூலம் அறிந்து பூரிப்படைந்த கௌரிவல்லபர் உதயபெருமாள் கவுண்டருக்கு தனது மனதார நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
1801 ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்கள் சிறுவயலில் இருந்து காளையார்கோயில் வரை வெள்ளையர் படை சாலை அமைத்தனர். இந்த இரு மாதங்களும் வெள்ளையர் படையும் மருதுசகோதரர்கள் படையும் நடத்திய துப்பாக்கி சண்டையில் இரு தரப்பினருக்கும் உயிர்சேதம் அதிகமானது. 1801ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ந்தேதி வெள்ளையர் படை முன்னேறி காளையார்கோயிலை அடைந்ததும், கர்னல் அக்னியூ, கர்னல் இன்ஸ், கர்னல் ஸ்பிதா ஆகியோர் வியூகம் அமைத்து காளையார்கோயில் கோட்டையை தாக்கினர்.
மாவீரனின் வீரமரணம்
உதயபெருமாள் கவுண்டரின் வேண்டுகோளின்படி. மருது சகோதரர்கள் தலைமறைவாகினர். மருதுபடை உதயபெருமாள் கவுண்டர் தலைமையில் காளையார்கோயில் கோட்டையிலிருந்து வெள்ளையர் படையை எதிர்த்துத் தாக்குதல் நடத்தினர். கர்னல் அக்னியூ, தனது வெள்ளைக் கரடியை சுட்டுக் கொன்ற உதயபெருமாள் கவுண்டர் கோட்டையிலிருந்து போர் நடத்துவதை அறிந்ததும், தனது பீரங்கியை கொண்டு தாக்கும்படி உத்தரவிட்டான். அவனது உத்தரவின்படி நடந்த பீரங்கி தாக்குதலில், வெள்ளையர் படைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த துப்பாக்கி கவுண்டர் என்று அழைக்கப்பட்ட உதயபெருமாள் கவுண்டர் வீரமரணம் அடைந்தார். பிணக்குவியலின் நடுவே காளையார்கோயில் கோட்டையில் நுழைந்த வெள்ளையர் படைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மருதிருவரை பிடிக்க முடியவில்லை.
சிவகங்கை அரண்மனையில் கௌரிவல்லபர்
5.1.01801 ஆம் ஆண்டு சிவகங்கை அரண்மனை புதுப்பிக்கப்பட்டு ஆஸ்தான மண்டபம் அலங்கரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட சிம்மாசனத்தில் மேளவாத்தியங்கள் மந்திரம் முழங்க வீரமங்கை வேலுநாச்சியாரின் சுவீகாரபுத்திரன் கௌரிவல்லபர் அரியாசனத்தில் அமர்ந்து பதவிஏற்றார்.
உதயபெருமாள் கவுண்டருக்கு சிலை
கௌரிவல்லபர் பதவி ஏற்றதும் முதல் ஆணையாக, சிவகங்கை தெப்பக்குளத்தின் மேல் கரையில் கௌரி வினாயகர் ஆலயம் அமைக்கவும், தென்கரையில் தனது தெய்வத்தாய் வீரமங்கை வேலுநாச்சியாரின் மாலையீடு மீது ஆலயம் அமைக்கவும், வெந்தியூர்காட்டில் தான் தனித்து நின்றபோது. தம்மை தாக்காமல் விட்டு. ராணியார் எப்போதோ கொடுத்த ஓலையை கடமை தவறாமல் தன்னிடம் ஒப்படைத்த உதயபெருமாள் கவுண்டருக்கு அவர் வெற்றியூர் காட்டில் கர்னல் அக்னியூவின் வெள்ளை கரடியை சுட்ட நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக காளையார்கோயிலில் உதயபெருமாள் கவுண்டர் வீரமரணம் அடைந்த இடத்தில் சிலை அமைக்கவும்உத்தரவிட்டார். அதன்படி அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் கோயில் நுழைவு வாயிலில் உதயபெருமாள் கவுண்டர் வெள்ளைகரடியை சுட்டபடி சிலை அமைக்கப்பட்டது.
கொங்கு சீமையில் பிறந்து வெள்ளையரை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சிவகங்கை சீமையில் திருப்பாச்சேத்தியில் அம்பலகாரராக இருந்து, தன் மனைவி மக்களை பிரிந்து காளையார்கோயில் போரில் வீரமரணம் அடைந்த உதயபெருமாள் கவுண்டரின் வாழ்க்கை போர்முனையில் துவங்கி, போர்முனையிலேயே முடிந்தது.
அதன்பின்னர், மருது சகோதரர்கள் இருவரும் வெள்ளையர்களிடம் பிடிபட்டபோது, தாங்கள் மானியமாக அளித்ததை திரும்பப் பெறக்கூடாது என்ற அவர்களின் வேண்டுகோளின்படி, மருது சகோதரர்களால் உதயபெருமாள் கவுண்டருக்கு அளிக்கப்பட்டிருந்த அம்பலகாரர் பட்டமும், மானிய கிராமங்களையும் கொண்டு அவரது மனைவி பொன்னாயி தன் மகன்களை வளர்த்து, அவர்களை அறப்பணியில் ஈடுபடுத்த முற்பட்டார்.
உதயபெருமாள் கவுண்டரின் வாரிசுகள்
உதயபெருமாள் கவுண்டரின் மகன்களுக்கு பிள்ளை பட்டம் வழங்கப்பட்டு, அவர்கள் ஆறுமுகம்பிள்ளை, உதயபெருமாள் பிள்ளை என்றே அழைக்கப்பட்டனர். அத்துடன் திருப்பாச்சேத்தியில், பிள்ளைமார் இனத்திலேயே மணம் முடித்து, அவர்களுடைய வாரிசுகள் பத்து தலைமுறையாக பிள்ளைமார் சமுதாயத்தினராகவே திருப்பாச்சேத்தியில் வாழ்ந்து வருகின்றபோதிலும், ஊர்மக்களால் கவுண்டபுரத்தார் என்றே அழைக்கப்படுகிறார்கள்.
கவுண்டபுரத்தாரின் அறப்பணி
உதயபெருமாள் கவுண்டரின் மகன்கள் ஆறுமுகம்பிள்ளையும் உதயபெருமாள்பிள்ளையும் அறப்பணியில் தீவிரம் காட்டினர்.திருப்பாச்சேத்தியில் உள்ள மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயிலில் சுற்றுச்சுவர், கோட்டை வாசல் கட்டினர். மேலும் வினாயகர் சன்னதி, முருகன் சன்னதி, பைரவர் சன்னதி கோயில்களை புனரமைப்பு செய்துள்ளனர். இதற்கான ஆதாரமான கல்வெட்டு மேற்படி கோயிலின் கிழக்கு வாசல் முன்மண்டபத்தில் இன்றும் உள்ளது. மேலும் யாத்திரை வருபவர்கள் தங்குவதற்கு மடமும் கட்டிஉள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக ரயில்வே துறைக்கும், காவல்துறைக்கும் இடம் விட்டு உதவியுள்ளனர்.
மேலும், உதயபெருமாள் கவுண்டரின் வாரிசுகள் தொன்றுதொட்டு இன்று வரை, ஒவ்வொரு ஆண்டும் தைபூசத்திருநாள் அன்று அன்னதானமும், நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று அம்பாள் குதிரை வாகனத்தில் கவுண்டபுரத்தார் மடத்தில் எழுந்தருளி, பின் அங்கு கவுண்டரின் வாரிசுகளான கவுண்டபுரத்தார் சார்பாக அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டு, மடத்திலிருந்து புறப்பட்டு மகரநோன்பு பொட்டலில் சென்று அம்பு விடும் நிகழ்ச்சியும் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உதயப்பெருமாள்கவுண்டர் பற்றிய ஆவண நூல்கள்
1. காளையார்கோயில் மு.சேகர் எழுதிய “வீரம் விளைந்த சிவகங்கை சீமையின் செம்மண்”.
2. தேச விடுதலையும் தியாகசுடர்களும் புத்தகத்தில் மு.ஜீவபாரதி அவர்கள் எழுதிய “துப்பாக்கி கவுண்டன்” என்ற கட்டுரை. 3. தேசிய விடுதலையில் கொங்குநாட்டினரின் பங்கு என்ற புத்தகத்தில், ஈரோடு புலவர். செ.ராசு அவர்கள். தஞ்சை தமிழ்பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை தலைவர் (ஓய்வு) எழுதிய துப்பாக்கி கவுண்டர் என்ற உதயபெருமாள் கவுண்டர் என்றகட்டுரை.
4. முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் தென்பாண்டி சிங்கம்.
5. செவல்குளம்புலவர் அ.சா.குருசாமி அவர்கள் எழுதிய மாவீரர் மருதுபாண்டியர். 6. மீ.மனோகரன் எழுதிய மருதுபாண்டிய மன்னர்கள். 7. வெல்ஸ் டைடரி வால்யூம் 1. பக்கம் 81.82 8. திருப்பாச்சேத்தி சிவாலயத்தின் கிழக்கு வாயில் முன்மண்டபத்தில் உள்ள கல்வெட்டு
திருப்பாச்சேத்தியில் கவுண்டபுரத்தார்களால் நடத்தப்படும் விழாக்கள்
1. தைப்பூசத்திருநாளில் அன்னதானம் நடத்துதல்.
2. மாசிமாதம்டூகளாpவிழாடூசிவா
3. சித்திரைமாதம் அழகியநாயகிஅம்மன் கோயில் திருவிழாவில், முதல்நாள் (சித்திரை1ம்தேதி) முதல்திருக்கண்மரியாதை, அம்மன் சிம்மவாகனத்தில் அலங்காரம் செய்தல், பிரசாதம் வழங்குதல், துண்டு அணிவித்தல்.
4. மதுரை சித்திரை திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு 10 நாட்கள் நீர்மோர் வழங்குதல்.
5. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று அம்பாள் குதிரை வாகனத்தில் கவுண்டபுரத்தார் மடத்தில் எழுந்தருளி, பின் அங்கு கவுண்டரின் வாரிசுகளான கவுண்டபுரத்தார் சார்பாக அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டு, மடத்திலிருந்து புறப்பட்டு மகரநோன்பு பொட்டலில் சென்று அம்பு விடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
6. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி கவுண்டபுரம் பங்காளிகளின் பாட்டனார் மாவீரன் உதயப்பெருமாள் கவுண்டர் என்ற துப்பாக்கி கவுண்டர் நினைவுநாள் கொண்டாடுதல்.
7. காராளருடைய அய்யனார்கோயில் புரவிஎடுப்பு விழாவில் முதல் குதிரை அரண்மனைக்கும் (சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம்) அடுத்தது கிராம கணக்கில் முதல் குதிரையும், முதல் மரியாதையும் கவுண்டபுரத்தாருக்கு கொடுக்கப்படுகிறது.
சமர்ப்பணம் இந்திய விடுதலை வேள்வியில் தமது இன்னுயிரை மண்ணுக்குத் தந்து வீரமரணம் அடைந்த பல ஆயிரம் வீரர்களில் ஒருவரான உதயபெருமாள் கவுண்டர் என்ற துப்பாக்கி கவுண்டரின் வாழ்க்கை வரலாற்றை அனைவருக்கும் தெரியப்படுத்த அவரது வாரிசுகளான நாங்கள் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் திருப்பாச்சேத்தி உதயப்பெருமாள் கவுண்டர் என்ற துப்பாக்கிக் கவுண்டரின் வாரிசுகள் நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.
மானாமதுரை சுவாமிஜி அம்மா இவர்களது முன்னிலையில்,
திருப்பாச்சேத்தி அருள்மிகு சப்பாணி கருப்பர் கோயிலில் வைத்து
4 மார்ச் 2015 அன்று கவுண்டரின் வாரிசுகள், கவுண்டர் பற்றிய செய்திகளை
முனைவர் கி. காளைராசனிடம் வழங்கினர்.
முனைவர் கி. காளைராசன்
|
No comments:
Post a Comment