நம்மில் எத்தனை பேர்கள் மகாத்மா காந்தியைப் பார்த்திருப்போம்? ’48 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்காது. இதற்கு முன் பிறந்தவர்களிலும் எத்தனை பேர்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கும்? அவரைப்பற்றிக் கேள்விப்படும்போதும், புகைப்படங்களில் அவரைப் பார்க்கும்போதும் இந்த மகாத்மா நம்மிடையே இப்போது நடமாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நம்மில் பலர் நினைக்காமல் இருந்திருக்கவும் முடியாது. இந்தியர்கள் பலரின் இந்தக் கனவு நனவாகியது 1983 ஆம் ஆண்டு, ஸர் ரிச்சர்ட் அட்டன்பரோ என்கிற இங்கிலாந்து இயக்குனர் மூலம். வாழ்க்கை வரலாற்றுச் சித்திரங்களை எடுப்பதில் மன்னன் என்று பெயர் பெற்ற இவர் தனது ‘காந்தி’ திரைப்படம் மூலம் நம் கண் முன்னே காந்தியை நடமாடவிட்டார்.
சமீபத்தில் மறைந்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் வெள்ளித்திரையின் மீதான காதலுக்கு வயது 60. முதல் முதலில் மேடை நடிகராக வெள்ளித்திரைப் பயணத்தைத் தொடங்கிய அட்டன்பரோ இயக்குனராக மாறினார். நடிகராக எந்த அளவிற்கு விரும்பப்பட்டாரோ, அதே அளவு இயக்குனராகவும் எல்லோராலும் விரும்பப்பட்டார். இரண்டு துறைகளிலும் வெற்றிக் கோடி நாட்டினார்.
1923 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜில் பிறந்த அட்டன்பரோ தனது 12 ஆம் வயதில் நடிக்கத் துவங்கிவிட்டார். ராயல் அகாதமி ஆப் டிராமடிக் ஆர்ட் –இல் பயிற்சி பெற்ற இவர் 1941 ஆம் ஆண்டு முதன்முதலில் மேடை ஏறினார். இதற்கு ஒரு வருடத்திற்குப் பிறகு நோயல் கவர்ட் – இன் ‘இன் விச் வி சர்வ்’ (In Which We Serve) என்ற படத்தில் தன்னை நம்பியவர்களை கைவிட்டுவிட்டு ஓடும் கப்பல் மாலுமியாக, சிறிய ஆனால் மிகவும் கனமான பாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களைக் கவர்ந்தார். தொடர்ந்து வந்த திரைப்படங்களில் இதே போன்ற கதாபாத்திரங்களே இவருக்குக் கிடைத்தன. 1947 ஆம் ஆண்டு ‘ப்ரைடன் ராக்’ (Brighton Rock) படத்தில் மனநோய் பீடித்த இளம் தாதாவாக நடித்த திரைப்படம் இவரது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது.
அடுத்த முப்பது ஆண்டுகளில் பல பிரித்தானிய படங்களில் நடித்தார். ‘50 களில் பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தார். இவர் தனது மேடை வாழ்க்கையின் துவக்கத்தில் நடித்த அகாதா கிறிஸ்டியின் நாடகம் ‘தி மௌஸ்ட்ராப்’ உலகத்தில் நீண்ட நாட்களுக்கு நடிக்கப்பட்ட நாடகங்களுள் ஒன்று. இவரும் இவர் மனைவியும் இந்த நாடகத்தில் நடித்த ஆரம்ப கால நடிகர்கள். 1952 இல் மேடையேறிய இந்த நாடகம் 2007 வரை நடந்து வந்திருக்கிறது.
1969 இல் வெளிவந்த ‘ஓ! வாட் அ லவ்லி வார்’ (O! What a Lovely War!) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அப்போதிலிருந்து நடிப்பதை குறைத்துக் கொண்டார். 50 களின் இறுதியில் திரைப்படங்களை தயாரிக்கவும் தொடங்கினார். திரைப்படத் துறையைச் சார்ந்த பல அமைப்புகளில் தலைவர் பதவியையும் வகித்தார்.
இரண்டாம் உலகப் போரில் ராயல் விமான படையில் பணியாற்றிய இவர் ஆங்கில நடிகை ஷீலா சிம் என்பவரை 1945 ஆண்டு மணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள். 2004 ஆம் ஆண்டு மூத்தமகள், பேத்தி ஆகியோரை ஆசிய சுனாமியில் பறிகொடுத்தார். இவரது மகன் மைக்கேல் அட்டன்பரோவும் ஒரு இயக்குனர். அட்டன்பரோவின் தந்தை லீசெஸ்டர் பல்கலைக் கழகத்தின் முதல்வராக இருந்தவர். ரிச்சர்ட் அட்டன்பரோ இந்தப் பல்கலைக்கழகத்தின் புரவலர். 1997 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் பெயரில் அவரை கௌரவிக்கும் வகையில் ‘ஊனமுற்றோர்களுக்கான கலை மையம்’ இந்த பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
காந்தி திரைப்படம் மட்டுமல்ல, இவரை இந்தியர்களுக்கு அடையாளம் காட்டியது; நாம் மிகவும் ரசித்துப் பார்த்த ‘ஜுராசிக் பார்க்’ படத்திலும் நடித்தவர் இவர். ஜான் ஹம்மண்ட் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்த ‘ஜுராசிக் பார்க்’ படத்தை அவ்வளவு சுலபமாக நம்மால் மறக்க முடியாது. இந்தப் படத்தின் ஆரம்பத்தில் அழிந்த விலங்கினத்தைச் சேர்ந்த டைனோசர்களை மறுபடியும் தாம் உருவாக்கியிருக்கும் விந்தையை மிகவும் பெருமையுடன் சொல்லும்போதும், இறுதியில் தான் உருவாக்கிய ஜுராசிக் பார்க்கை தானே மூடும் நிலை வரும்போது கடைசி முறையாக அந்த இடத்தை திரும்பிப் பார்த்து வேதனைப்படும்போதும் இவரது நடிப்பை நாம் மிகவும் ரசிக்கலாம்.
காந்தி திரைப்படம்:
இந்தத் திரைப்படம் அட்டன்பரோவின் நீண்ட நாளைய கனவு. ஏற்கனவே காந்தியைப் பற்றிய திரைப்படம் எடுக்க வேண்டும் என்று 1952 இல் கேப்ரியல் பாஸ்கல் என்பவர் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். ஆனால் பாஸ்கலின் மறைவினால் (1954) இத்திட்டம் கைவிடப்பட்டது. 1962 இல் அட்டன்பரோவிற்கு இந்திய வெளிநாட்டுத் தூதரகத்திலிருந்து மோதிலால் கோத்தாரி தொலைபேசினார். காந்தியைப் பற்றி ஒரு திரைப்படம் அட்டன்பரோ எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். லூயிஸ் ஃபிஷர் எழுதிய காந்தியின் வரலாற்றைப் படித்த அட்டன்பரோ அடுத்த 18 ஆண்டுகளை இந்தத் திரைப்படம் தயாரிப்பதில் செலவிட்டார். லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் மூலம் நேருவையும் இந்திரா காந்தியையும் சந்தித்தார். நேரு, காந்தி படத்திற்கு தனது ஒப்புதலைத் தெரிவித்து அதன் தயாரிப்பிற்கு உதவுவதாகவும் கூறினார். நேருவின் மறைவு (1964) படத்திற்கு மறுபடியும் பின்னடைவை உண்டுபண்ணியது. மனம் தளராத அட்டன்பரோ 1976 இல் திரும்பவும் வார்னர் பிரதர்ஸ் உதவியுடன் படத்தைத் துவக்கினார். இந்தியாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இந்தியாவில் திரைப்படத்தை படமாக்க முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியாக 1980 இல் படம் எடுப்பதற்கு தேவையான நிதி உதவியும், இந்தியாவில் படமெடுக்கக் கூடிய சூழ்நிலையும் உருவானது. பட ஒளிப்பதிவு 26 நவம்பர் 1980 ஆம் ஆண்டு துவங்கி மே 10, 1981 ஆண்டு முடிவடைந்தது. காந்தியின் இறுதிச்சடங்கில் பங்கு கொள்ள மூன்று லட்சம் உதவி நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர். இது ஒரு கின்னஸ் சாதனை. இந்தப் படம் எடுத்த போது அட்டன்பரோவிற்கு 60 வயது.
‘காந்தி’ திரைப்படம் அட்டன்பரோவிற்கு சிறந்த இயக்குனர் என்ற ஆஸ்கார் விருதைப் பெற்றுத் தந்தது. பதினோரு பிரிவுகளில் இந்தப் படம் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. எட்டு பிரிவுகளில் விருதுகளை வாங்கிக் குவித்தது. இந்தப் படத்திற்காக தனது லண்டன் வீட்டை அடமானம் வைத்தும், தனது கலைப் பொக்கிஷங்களை விற்றும் பணம் சேர்த்தார் அட்டன்பரோ. ஆஸ்கர் விருதுகளை மட்டுமல்லாமல் செலவழித்த பணத்தைப் போல 20 மடங்கு அதிகப்பணத்தையும் அள்ளிக் கொடுத்தது இந்தப் படம்.
இவரது மனைவி மறதி நோயால் பாதிக்கப்பட்டு டென்வில் ஹாலில் உள்ள முதியோர் நலப் பாதுகாப்பு இல்லத்திற்குச் சென்றுவிட்ட நிலையில், சென்ற ஆண்டு தானும் தனது மனைவியும் வாழ்ந்து வந்த லண்டன் வீட்டை 18.4 மில்லியன் டாலருக்கு விற்றுவிட்டு, அட்டன்பரோவும் அங்கு தன் மனைவியுடன் சேர்ந்து கொண்டார்.
இவரது மறைவு குறித்து ஜுராசிக் பார்க் படத்தை இயக்கிய ஸ்பீல்பெர்க் கூறுகிறார்: ‘தான் விரும்பியதையெல்லாம் செய்ய நேரம் ஒத்துக்குவார் அட்டன்பரோ. இந்தத் திரைப்பட உலகிற்கு அவர் விட்டுச் சென்றுள்ள பரிசு காந்தி திரைப்படம். அவரை ரசித்த பல கோடி மக்களின் வரிசையில் நானும் நின்றுகொண்டிருக்கிறேன்’
நமது மனம் கவர்ந்த இந்த இயக்குனருக்கு நாமும் நம் இறுதி அஞ்சலியை செலுத்துவோம்.
எழுதியவர் ரஞ்சனி நாராயணன்.
வெப் துனியாவில் வெளியிட்டது.

No comments:
Post a Comment