Monday, November 17, 2014

முல்லை நிலச் செய்திகளைத் தருபவர் மேகலா!

நம் தமிழர் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுபவை சங்க இலக்கியங்கள். மனித வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு புறத்திணை, அகத்திணை என இருவகைத் திணைகள் இவ்விலக்கியங்களில் சுட்டப்படுகின்றன. இவற்றில் புறத்திணை என்பது வாழ்வின் புறத்தே நிகழ்பவையான வீரம், போர், கொடை உள்ளிட்ட செய்திகளைப் பேசுவது; அகத்திணை என்பது பெயருக்கேற்றபடி அகத்தே – மனத்தே நிகழும் (பிறருக்குப் புறத்தே புலப்படுத்த இயலாத) காதலொழுக்கத்தைப் பேசுவது.

தமிழரின் மூத்த இலக்கண நூலான ’ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்’ புறத்திணையை ’வெட்சி முதல் பாடாண் இறுவாய்’ ஏழு திணைகளாகவும், அகத்திணையைக் “கைக்கிளை முதல் பெருந்திணை ஈறாய்” ஏழாகவும் வகைப்படுத்தியுள்ளது. இவ்வகத்திணையில் ’நடுவண் ஐந்திணை’ என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவை நாம் நன்கறிந்த முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியன.

சங்க இலக்கியப் பாடல்களைக் கற்குங்கால் இவை அகத்திணைச் செய்திகளையே பெரிதும் பாடியிருப்பது புலப்படும். நம் தமிழர்கள் காதலொழுக்கத்திற்குத் தந்த முதன்மையையே இது எடுத்துக்காட்டுகின்றது எனலாம்.

ஐந்திணைகள் ஒவ்வொன்றையும் வி(வ)ரிக்கப் புகுந்தால் செய்திகள் மிகும். ஆகவே அவற்றுள் தலைசிறந்த ஒன்றாகக் கருதப்படும் முல்லைத் திணையை மட்டும் நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

’நடுவண் ஐந்திணை’ என்றும் ’அன்பின் ஐந்திணை’ என்றும் சிறப்பு அடையொடு குறிக்கப்படும் ஐந்திணைகளின் வரிசையை நோக்கினால் அதில் முதலிடத்தில் வைத்து எண்ணப்படுவது முல்லைத் திணையே என்பது தெரியவரும். இதற்கு உரையாசிரியர்கள் கூறும் காரணம் யாதெனின், ’கற்பு நெறி பிறழாது மகளிர் இல்லில் ஆற்றியிருந்து நல்லறஞ் செய்தலே ஒழுக்கங்களில் தலைசிறந்தது; ஆகவே ஆசிரியர் (தொல்காப்பியர்) முல்லைத் திணையை முதலில் வைத்தார்’ என்பதாகும்.

தொல்காப்பிய நூற்பாவும் “மாயோன் மேய காடுறை உலகமும்” (மாயோனை/திருமாலைத் தலைவனாகக் கொண்ட காடுறை உலகமும்) என்றே தொடங்குவது சிந்திக்கதக்கது. முல்லை நிலமென்பது காடும், காடு சார்ந்த பகுதியும் ஆகும். முல்லைத் திணைக்குரிய காலமாகக் குறிக்கப்படுவன காரும் (கார்காலமும்), மாலையும் (மாலைப் பொழுதும்). காடுறை உலகமாகிய முல்லை நிலத்தில் முல்லை, காயா, குருந்தம், தோன்றி, குல்லை, பிடவம் எனக் கணக்கிலடங்கா மலர்கள் மலர்ந்தபோதினும் அவை யாவற்றுள்ளும் ’முல்லை’ மலரே சிறந்ததெனக் கருதப்பட்டதாகலின் அப்பூவின் பெயரே அதுசார்ந்த நிலத்திற்கும் வழங்கு பெயராயிற்று.

அகவொழுக்கத்தில், ஆற்றியிருத்தல், புணர்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்பன முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் உரிப்பொருள்களாகச் (ஒழுக்க நெறிகளாக) சுட்டப்படுகின்றன. இவ்வொழுக்கங்களில் மனத்திண்மையும், மனக்கட்டுப்பாடும் அதிகம் தேவைப்படுவது கணவனைப் பிரிந்து தனித்து ஆற்றியிருக்கும் (தன்னை ஆறுதல்படுத்தியிருக்கும்) காலத்தும் கற்புநெறி பிறழாது வாழ்ந்துவரும் முல்லை நிலப் பெண்ணுக்கே என்று தமிழ்ப்பெருமக்கள் எண்ணினர்.

கணவனைப் போர் நிமித்தமாகவோ அல்லது பொருள் தேடுதற் பொருட்டோ பிரிந்து ’அவன் எப்போது திரும்பி வருவான்?’ என்றெண்ணி ஏக்கத்துடன் அவன் வரும் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் ஓர் இளம்பெண்ணின் அவலநிலை மிகவும் வருந்தத்தக்கது.

இவ்வேளையில், “ஏன்..மற்ற நிலப் பெண்கள் கற்புநெறியைப் பின்பற்றவில்லையா…முல்லைநிலப் பெண்ணுக்கு மட்டும் என்ன முதன்மை?” என்றொரு வினா எழக்கூடும். கற்புநெறியைப் பின்பற்றுவதில் பிறநிலப் பெண்களும் குறைந்தவர்களில்லைதான்; கற்பு என்பது பெண்களுக்கான பொது அறமாகவே அன்று வகுக்கப்பட்டிருந்தது; எனினும், கற்புநெறி கால்கோள்(தொடக்கம்) கொண்டது - வேரூன்றியது முல்லை நிலத்திலேயே என்பது தமிழறிஞர்களின் துணிபு. ஆகையால், கற்புநெறி ’முல்லை சான்ற கற்பு’ என்றே பெருமிதத்தோடு அழைக்கப்பட்டது. இந்நிலத்தில் மலர்ந்த தூய்மையும், மணமும் மிகுந்த முல்லை மலரோடும் அந்நெறி பி(இ)ணைக்கப்பட்டு முல்லை மலரும் கற்பின் அடையாளமாக இலக்கியங்களில் பாராட்டப்பெற்றது.

தலைவனின் வரவுக்காகக் காத்திருந்து அவன் வரக்காணோமே என்று ஏங்கித் தன்னருமைத் தோழியிடம் புலம்பும் முல்லை நிலத் தலைவியின் மனநிலையைப் படம்பிடித்துக்காட்டுகிறார் ’ஒக்கூர் மாசாத்தியார்’ எனும் புலவர் குறுந்தொகைப் பாடலொன்றில். அப்பாடல்...

”இளமை பாரார் வள நசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவணரோ எனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கெயிறு ஆக
நகுமே தோழி நறுந்தண் காரே.” (ஒக்கூர் மாசாத்தியார்: குறுந் - 126)

”என்னுடைய இளமையை நினையாது பொருளே பெரிதெனச் சென்ற தலைவர் இன்னும் திரும்பி வரவில்லை; அவர் எங்குள்ளார் எனவும் நானறியேன். இதனைக் கண்டு, ”கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவேன்!” என்று வாக்குக்கொடுத்த உன் தலைவர் பொய்த்துவிட்டார் பார்! என முல்லை மொட்டுக்களையே தன் ஒளி பொருந்திய பற்களாகக் கொண்டு இந்தக் கார்காலம் என்னை எள்ளி நகையாடுகின்றது” என்கிறாள் தலைவனைப் பிரிந்து ஆற்றியிருக்கும் முல்லைத் தலைவி தன் தோழியிடம்.


முல்லைக்கும் கற்புநெறிக்குமுள்ள இலக்கியப் பின்னணியை இதுகாறும் கண்டோம். இனி, அதன் குமுகப் பின்னணியையும் ஆராய்வோம்.


மனித சமூகத்தின் தொடக்ககால வாழ்விடமாக இருந்தது மலைகளும், குகைகளுமே. எனவே, குறிஞ்சி நிலமக்களே உலகின் ஆதிகுடிகள்; மக்கள்தொகை பெருகப் பெருக அவர்கள் மெல்ல மெல்லப் புலம்பெயர்ந்து  காட்டுப் பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். அங்குதான் மனித நாகரிகத்தின் இரண்டாம் படிநிலை ஆரம்பமாயிற்று.

மலையைவிடக் காட்டுப்பகுதி வளம் நிறைந்ததாயிருந்தது. வேட்டையாடிக்கொண்டு நாடோடியாய் அலைந்துகொண்டிருந்த மாந்தக் கூட்டம் காட்டுப் பகுதிகளில் நிலையான குடியிருப்புக்களில் வாழத் தொடங்கியது; அதற்குள்ளாகவே மனிதர்கள் விலங்குகளை வளர்க்கப் பழகியிருந்தனர். எனவே முல்லைநிலப் பகுதிகளில் அவர்கள் ஆநிரைகளையும், ஆடுகளையும் அதிக எண்ணிக்கையில் வளர்க்கத் தொடங்கினர். ’ஆயர்கள்’ எனும் பெயரோடு அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டது அங்குதான்!

பசுக்கூட்டங்களை வளர்ப்பது, அவற்றினால் கிடைக்கும் பால்படு பொருள்களைப் பிறருக்கு விற்பது என்று ஆரம்பித்துச் செல்வ வளம் மிக்கதாய் அவர்கள் வாழ்க்கை மாறத் தொடங்கியது; ’மாடு’ என்றாலே ’செல்வம்’ என்ற பொருள் இதனால்தான் ஏற்பட்டது. திருவள்ளுவரும் ’மாடல்ல மற்றையவை’ எனச் செல்வத்தைக் குறிப்பது எண்ணத்தக்கது. ஏராளமான சொத்துக்களையுடைய ஆண்மகன் ‘கோன்’ எனும் பெயரோடு தலைவன் எனும் அதிகாரத்தைப் பெற்றான். இப்படியாகத் தந்தைவழிச் சமூகம் சிறிது சிறிதாகத் தலையெடுக்க ஆரம்பித்தது.

காதல் மணம், சடங்குகளற்ற மணமுறை முதலியவற்றிலும் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டு இன்று நாம் பின்பற்றுகின்ற ‘கற்பு மணமுறை’யும் இங்குதான் தொடக்கம் பெற்றது. முல்லை நிலத்தில் ஏறு தழுவுதலில் வெற்றிபெறும் காளைக்கே (ஆண்மகனுக்கே) தன் மகளைத் தருவான் முல்லை நிலத் தகப்பன்! ’கொல்லேற்றுக் கோடஞ்சுவானை  மறுமையும் புல்லாளே ஆய மகள்’ என்கிறது முல்லைக்கலி. பாவம் ஆண்கள்! :-)))

கற்பு மணத்தில் ஒருவனையே மணந்து அவ்வொருவனுக்காகவே வாழ்தல் என்று தொடங்கிய பெண்களின் வாழ்க்கைநிலை பின்பு, அவன் பிரிவின்போது அவனுக்காகத் காத்திருத்தல், அவன் இறந்தவிட்டானாயின் அவனோடு தானும் உடன்கட்டை ஏறுதல் அல்லது கைம்மை நோன்பு நோற்றல் என்று அடுத்தடுத்த படிநிலைகளுக்குச் சென்றிருக்கவேண்டும். L

ஆகவே பெண்களுக்கு இன்றும் வலியுறுத்தப்படும் கற்புநெறி அன்று காலூன்றியது முல்லை நிலத்திலேயே எனக் கொள்வதில் தவறில்லையல்லவா? இதனால்தான் ’முல்லை மாந்தர் கற்புடை மாந்தர்’ என்ற தனிப் பெருமையும் அவர்களுக்கே அளிக்கப்பட்டது. இவ்வாறு முல்லையும் கற்பும் இரண்டறக் கலந்த ஒழுக்கநெறியாய் அறியப்படுகின்றது.

முல்லை நில வாழ்க்கை முறையை, அதன் சிறப்பைக் கற்பனை கலந்து (சற்றே மிகைப்படுத்திச்) சித்தரிக்கும் ’முல்லைப் பாடல்கள்”  (’Pastoral Poetry’) மேல்நாட்டு இலக்கியங்களிலும் உண்டு.

அன்புடன்,
மேகலா

Thursday, November 13, 2014

மலேரியாவின் கதை

நேஷனல் ஜியாக்ராபிக் டாக்குமெண்டரி ஒன்றில் பேனாமா கால்வாய் கட்டபட்ட வரலாற்றை பார்த்துகொண்டிருந்தேன். மெய் சிலிர்க்க வைக்கும் அந்த வரலாற்றின் சிறுதுளிகள்

19ம் நூற்றாண்டின் இறுதியில் சூயஸ் கால்வாய் கட்டபடுகிறது. சூயஸ் கால்வாயை கட்டி முடித்த பிரெஞ்சு எஞ்சினியர் லெஸ்ஸாப்ஸ் அதில் நான்கில் ஒரு பங்கு தூரமே உள்ள பேனாமா கால்வாயை கட்ட களம் இறங்குகிறார்.

பனாமா கால்வாய் உலகின் மிகபெரும் எஞ்சினியரிங் புராஜக்ட். சூயஸ் எல்லாம் அதன் அருலிகேயே வர முடியாது.காரணம் பேனாமா கால்வாய் அமைந்த சிக்கலான நிலபரப்பு.மலை,ஆறு,காடுகள் அனைத்தும் இருந்தன.சூயஸ் கால்வாய் பாலைவனத்தின் குறுக்கே சென்றது.அதனால் அதை கட்டுவது சாத்தியமானது.ஆனால் பேனமா அப்படி அல்ல.அடர்ந்த காடுகளில் பணிபுரிந்த தொழிலாளிகள் மலேரியா,டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்கள்.தோண்டப்பட்ட கால்வாய் முழுக்க மீண்டும் மண்சரிந்து மூடியது. 22,000 உயிர்களை இழந்த பிறகு சூயஸ் கால்வாயால் உலகபுகழ் பெற்ற லெஸ்ஸாப்ஸ் பேனமா கால்வாயால் திவால் ஆகி ஏழையாக இறந்தார்

1903ல் அமெரிக்கா வல்லரசு அல்ல.ஆனால் வளர்ந்து வரும் அரசு.அன்று ப்ரிட்டன் மற்றும் ஜெர்மனி தான் சூப்பர் பவர்கள்.டெட்டி ரூஸவெல்ட் அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் சுமார் 10,000 மைல் பயணதூரத்தை மிச்சபடுத்தும் பேனமா கால்வாயை வெட்டினால் தான் அமெரிக்கா மேலும் வளரமுடியும் என்பதை உணர்கிறார்.கால்வாயை வெட்ட முடிவெடுக்கிரார்.(டெட்டி ரூஸவெல்ட் நினைவாக தான் குழந்தைகள் மனம் கவர்ந்த கரடிக்கு டெட்டி பேர் எனும் பெயர் சூட்டபட்டது.அது தனி கதை)

teddy-roosevelt-pince-nez.jpg


(டெட்டி ரூஸவெல்ட்)

அன்று பேனமா தனிநாடாக இல்லை.கொலம்பியாவின் ஆதிக்கத்தில் இருந்தது.பேனமாவுக்கு குறுக்கே கால்வாய் வெட்ட கொலம்பியாவிடம் அனுமதி கேட்கிறார் ரூஸவெல்ட்.கொலம்பிய அரசு அனுமதி மறுக்கிறது.அதன்பின் டெட்டி ரூஸவெல்ட் செய்த காரியம் தான் அமெரிக்காவின் பிற்கால சண்டியர்தனத்துக்கு முதல்படி என பலரும் சொல்கிரார்கள்.அப்படி என்ன செய்தார் டெட்டி? சிம்பிள்..பேனமா நாட்டின் "சுதந்திர போராட்ட அமைப்புக்கு" நிதி உதவி செய்தார்.ஆயுதம் கொடுத்தார்.புரட்சியை அடக்க வந்த கொலம்பிய படை துறைமுகத்தில் அமெரிக்க போர்கப்பல்கள் நிற்பதை கண்டு பின்வாங்கின. துளி ரத்தம் சிந்தாமல் பேனமா என்ர நாடு புதிதாக பிறந்தது.பேனமா கால்வாய் கட்டுமானமும் உடனே துவங்கியது

1904 முதல் 1914 வரை கட்டுமானம் நிகழ்ந்தது. பிரெஞ்சுகாரர்களை வாட்டி வதைத்த அதே மலேரியாவுன், மஞ்சள் காய்ச்சல் என்ர நோயும் மீண்டும் தொழிலாளரை துன்புறுத்தின.பல நூறு தொழிலாளர்கள் மஞ்சள் காய்ச்சல் எனும் நோய்க்கு பலியானார்கள்.இந்த நோய் ஏன் வருகிறது என்பதே தெரியவில்லை.சாரி,சாரியாக தொழிலாளர் மரணிக்க துவங்கியதும் பலர் கட்டுமான பணிகளை விட்டுவிட்டு தப்பி ஓடினார்கள்.கால்வாய் கட்டும் பணி ஸ்தம்பித்தது.

கோர்காஸ் என்ற ராணுவ டாக்டர் அப்போது புரட்சிகரமான ஒரு கண்டுபிடிப்பை கூறினார். மஞ்சல் காய்ச்சல் வர காரணம் கொசுகடிதான் என்றார்.கொசுவை ஒழியுங்கள்..மலேரியா மற்றும் மஞ்சள் காய்ச்சலும் ஒழியும் என்றார்.அன்று எல்லாம் யாருக்கும் இந்த வியாதி பரவ காரணம் கொசு என தெரியாது.அதனால் யாரும் அதை சீரியசாக எடுக்கவில்லை.கொசுவை ஒழிக்க மில்லியன் டாலர்(அன்று அது மிகபெரும் தொகை) திட்டம் ஒன்றை தீட்டி கொடுத்தார் கார்கோஸ்.அதை கிடப்பில் போட்டுவிட்டு ஐம்பதாயிரம் டாலரை கொடுத்து "இதை வைத்து கொசுவை ஒழி" என சொல்லி நிதி ஒதுக்கினார்கள்.

கோபமடைந்த கார்கோஸ் ராஜினாமா செய்ய முடிவெடுத்தார்.கார்கோஸின் நண்பர் ரூஸவெல்டை சந்தித்து "கார்கோஸ் திட்டத்தை நீங்கள் ஒத்துகொண்டால் உங்களுக்கு கால்வாய் கிடைக்கும்.இல்லையேல் பேனமா கால்வாயை நீங்கள் மறக்கவேண்டியதுதான்" என்றார்

யோசித்த ரூஸவெல்ட் வரலாற்றி மாற்றும் அந்த முடிவை எடுத்தார்.காரகோஸின் திட்டத்தை ஒத்துகொண்டார்

கொசுவை ஒழிக்க காரகோஸ் களம் இறங்கினார்.கோசு உற்பத்தி அவாது நீர்நிலைகளில்.அதனால் குளம்,குட்டை என நீர்நிலைகள் தேங்கி நிற்கும் பகுதிகள் அனைத்திலும் நீரின் மேல் க்ரூட் ஆயிலை ஊற்றுங்கள் என ஆலோசனை கூறினார்.க்ரூட் ஆயில் நீரில் கலந்ததும் கொசுமுட்டைகளில் இருந்து கொசு உற்பத்தி ஆகி வருவது நின்றது.பிரமிக்கதக்க வைக்கும் விதத்தில் மலேரியா,மஞ்சள் காய்ச்சல் வியாதிகளும் உடனே நின்ரன.(மருத்துவ உலகமும் அன்றுமுதல் கொசுவால் வியாதிகள் பரவும் என்பதை அறிந்து கொசுக்களை டார்கெட் செய்ய துவங்கியது தனிகதை)

e_today_02.jpg
(கொசு மூலம் மலேரியா பரவும் என்பதை கண்டுபிடித்த டாக்டர் காரகோஸ்)


அதன்பின் உற்சாகத்துடன் களம் இறங்கிய குழுவினர் பேனமா கால்வாயை கட்டிமுடித்து 1914ல் திறப்பு விழா நடத்தினர்.அதே மாதத்தில் முதல் உலகயுத்தம் துவங்கியது

பேனமா கால்வாய் அமெரிக்கா எனும் வல்லரசின் வருகையை உலகுக்கு அறிவித்தது....22,000 உயிர்பலிகளுக்கு பிறகு பிரெஞ்சு அரசால் சாதிக்க முடியாததை ஐந்தாயிரம் உயிர்களை மட்டுமே இழந்து சாதித்து காட்டிய பேனமா கால்வாய் கட்டுமானம் இன்றும் உலகின் தலைசிறந்த எஞ்சினியரிங் புராஜக்டாக பார்க்கபடுகிறது

By: செல்வன்

Friday, October 10, 2014

அன்னைத் தமிழுக்கு அணிசெய்த மு. வரதராசனார்!


-- மேகலா இராமமூர்த்தி.


தமிழகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனையோ அறிஞர்களும், புலவர் பெருமக்களும் தோன்றித் தமிழின் வளர்ச்சிக்கும், தமிழரின் மறுமலர்ச்சிக்கும் வித்திட்டுள்ளனர். அவ்வகையில், தமிழரின் தலைசிறந்த அடையாளமாய்த் திகழும் சங்கத்தமிழ் நூல்களையெல்லாம் கரையானிடமிருந்து காத்து, நம் கைகளில் தவழச் செய்தவர் ’தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. மற்றும் பதிப்புத் துறையின் முன்னோடியுமான சி.வை. தாமோதரம் பிள்ளையும் எனில், அவ்விலக்கியங்களையெல்லாம் எளிய தமிழ் நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பல கட்டுரைகளாகவும், ஆராய்ச்சி நூல்களாகவும் எழுதி வெளியிட்ட பெருமை ’மு.வ.’ என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற முனைவர் மு. வரதராசனார் அவர்களைச் சாரும்.

அறிவு முதிர்ச்சிக்கு அடையாளமான அகன்ற நெற்றி, அன்பும் அறிவும் சுடர்விடும் ஒளி பொருந்திய கண்கள், வெள்ளை உள்ளத்தை வெளிக்காட்டும் பளிச்சென்ற புன்னகை இவற்றோடு கூடிய தோற்றப் பொலிவினாலும், தமிழுக்குப் புதிய வரலாறு படைத்த தன் அற்புத எழுத்துக்களாலும் அனைவரையும் ஈர்த்த மு.வ., ஏப்ரல் 25, 1912-ஆம் ஆண்டு திருப்பத்தூரில் பிறந்தார். வேலம் என்ற ஊரிலும் பின்பு வாலாசாவிலும் தொடக்கக்கல்வி பயின்ற அவர், பின்னர் 1935-ஆம் ஆண்டு தமிழ்ப் புலவர் தேர்வு எழுதி அதில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்தார். தணியாத ஆர்வமும், புலமையும் தமிழ்பால் கொண்ட வரதராசனார் 1948-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.

1928-ஆம் ஆண்டு எழுத்தராகத் தன் பணியைத் தொடங்கிய அவர் பின்பு மாநகராட்சிப் பள்ளியொன்றில் தமிழாசிரியராகவும், அதனைத் தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், பின்னர் அங்கேயே தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். மு.வ. அங்கு பணிபுரிகின்றார் என்ற காரணத்திற்காகவே ‘பச்சையப்பனில் படிக்க இச்சை கொண்டோர் பலர்’ இருந்திருக்கின்றனர் அப்போது.

சென்னைப் பல்கலைக்கழகத்திலும் சில காலம் தமிழ்த்துறைத் தலைவராகப் பதவி வகித்த வரதராசனார், தன் பணிக்காலத்தின் இறுதிப் பகுதியில் (1971-74 வரையிலான காலகட்டத்தில்) மதுரைப் பல்கலைக்கழகத்தின் புகழ்சால் துணைவேந்தராகவும் பதவி வகித்திருக்கின்றார்.

சிறந்த தமிழறிஞரும், சிந்தனையாளருமான மு.வ. சமுதாய ஒழுக்கத்திலும், தனிமனித ஒழுக்கத்திலும் பெரிதும் அக்கறை கொண்டவர். தன் படைப்புக்கள் அனைத்திலும் இதனை அவர் வலியுறுத்தத் தவறவில்லை என்றே கூறலாம். நாவல், சிறுகதை, நாடகம், இலக்கியக் கட்டுரைகள், சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று நூல்கள், மொழியியல் நூல்கள் என்று நம் தாய்த்தமிழில் அவர் தொடாத - அவர் கரம் படாத துறைகளே இல்லை எனும் அளவிற்குப் பல்வேறு களங்களிலும் தன் ஆக்கங்களைத் தந்து அன்னைத் தமிழுக்கு அணிசேர்த்துள்ளார் அப்பேரறிஞர்!

கடித இலக்கியம் என்ற புதியதோர் இலக்கியத்துறையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. தம்பிக்கு, தங்கைக்கு, அன்னைக்கு, நண்பர்க்கு என்று அனைத்து உறவுகட்கும், நண்பர்கட்கும் ’நயத்தகு நாகரிக நடையில்’ மடல் வரையக் கற்றுத்தந்த பண்பாளர் மு.வ. அவர்கள். பின்பு இக்கடித இலக்கியத்தை அரசியல் துறையில் பயன்படுத்திப் பெருவெற்றி கண்டவர் அறிஞர் அண்ணா என்பது நாமறிந்ததே.

மு.வ.வின் கதைகளில்கூட வட்டார வழக்கை நாம் காணமுடியாது. கதை மாந்தர்களிடையே நிகழும் உரையாடல்கள் அனைத்துமே அவர்கள் பாமரராயினும் சரி, படித்தோராயினும் சரி வேறுபாடுகளற்ற தரமான ஒரே மொழி நடையையே கொண்டிருந்தன என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

அவருடைய கள்ளோ, காவியமோ?, கரித்துண்டு, அகல் விளக்கு முதலிய நாவல்கள் அன்றைய தமிழ்ச் சமுதாயத்தினரிடையே, குறிப்பாக தமிழ் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன எனில் மிகையில்லை. அவருடைய ’அகல் விளக்கு’ சாகித்திய அகாதெமியின் பரிசை வென்ற சிறந்த நாவலாகும்.

இலக்கியத் திறன், இலக்கியச் செல்வம், இளங்கோவடிகள், கண்ணகி, மாதவி, குறுந்தொகை விருந்து, நெடுந்தொகை விருந்து (அகநானூற்றிற்கு நெடுந்தொகை என்றோர் பெயருண்டு), ஓவச் செய்தி...இப்படி எண்ணிறந்த இலக்கியக் கட்டுரைகளை எழுதிக் குவித்து, கற்க அரிதான சங்க நூல்கள்மீது தமிழ் மக்களுக்கு ஆழமான காதலை ஏற்படுத்தியவர் வரதராசனார்.

சாகித்திய அகாதமியின் வேண்டுகோளுக்கிணங்கத் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் அரும்பணியை மேற்கொண்டு அம்முயற்சியில் பரவலான வரவேற்பும், வெற்றியும் கண்டவர் மு.வ. 62 ஆண்டுகளே வாழ்ந்த மு.வ., எண்பதுக்கும் மேற்பட்ட சிறந்த நூல்களைப் படைத்த சாதனையாளர். அவருடைய நூல்கள் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது அவற்றின் தரத்திற்கும், மு.வ.வின் திறத்திற்கும் சான்று பகர்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக இன்று(ம்) மு.வ. அனைவராலும் நினைவுகூரப்படுவது அவருடைய எளிய திருக்குறள் தெளிவுரைக்காக. அழகுத் தமிழில் அனைத்துத் தமிழரும் எளிதில் விளங்கிக்கொள்ளுகின்ற வகையில், அரசியல் சார்போ, அறிவுக்குப் பொருந்தாத புதிய விளக்கங்களோ இன்றி இத்தெளிவுரையைத் ’தெளிந்ததோர் நல்லுரை’யாய்ப் படைத்த தமிழ்ச் சான்றோர் மு.வ. அவர்கள். 

தன் உயரிய படைப்புக்களாலும், சிந்தனைகளாலும் தமிழ்கூறு நல்லுலகில் நிலைத்ததோர் இடத்தைப் பெற்றுவிட்ட மு.வ.,

’மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே’ என்ற புறப்பாட்டிற்கு இலக்கணமாய்த் திகழ்கின்றார் என்பதில் ஐயமுண்டோ?



குறிப்பு: அக்டோபர் 10 மு.வ. அவர்களின் நினைவுநாள் ஒட்டிய சிறப்புப் பதிவு






மேகலா இராமமூர்த்தி
megala.ramamourty@gmail.com

Tuesday, September 30, 2014

மங்கள்யான்: நாசாவை விஞ்சிய இஸ்ரோ


-- செல்வன்.

செவ்வாய்க்கு இதுவரை விண்கலம் அனுப்பிய நாடுகள், ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜன்ஸி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை மட்டுமே. சீனா செவ்வாய்க்கு அனுப்பிய யுங்ஹோ விண்கலம் தோல்வியில் முடிந்தது. இஸ்ரோவின் சாதனை, செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய முதல் ஆசிய விண்வெளி ஏஜென்ஸி என்பது மட்டுமல்ல, அதில் அது செய்த டெக்னலாஜிக்கல் சாதனைகளும் தான்.

மங்கள்யான் மிகக் குறைந்த செலவில், மிகக் குறைந்த எரிபொருள் செலவில் செவ்வாய்க்குச் சென்றுள்ளது. நிலவுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை விட, பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே உள்ள தூரம், 100 மடங்கு அதிகம். ஆனால் நிலவுக்கு ஒரு விண்கலம் செல்ல எத்தனை எரிபொருள் பிடிக்குமோ, அதே அளவு எரிபொருளில் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிச் சாதனை புரிந்துள்ளது இஸ்ரோ. 1998இல் செவ்வாய்க்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம் எரிபொருள் தீர்ந்து, விண்வெளியில் காணாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் "செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்ப ஆன செலவு, கிராவிட்டி எனும் ஹாலிவுட் படத்தை எடுக்க ஆன செலவை விடக் குறைவே". ஒரு சராசரி ஹாலிவுட் படம் எடுக்க இன்று நூறு மில்லியன் டாலர் ஆகும். ஆனால் மங்கள்யான் வெறும் $74 மில்லியன் செலவில் செவ்வாய்க்குச் சென்றுள்ளது. சமீபத்தில் செவ்வாய்க்குச் சென்ற மேவன் எனும் நாசா விண்கலம், சுமார் ஏழு பில்லியன் டாலர் செலவில் சென்றுள்ளது.


இத்தகைய தொழில்நுட்பச் சாதனையை இஸ்ரோ எப்படி சாதித்தது?

ஒரு விண்கலனை மேலே எழுப்பத் தான் எரிபொருளில் பெரும் பங்கு செலவாகும். அதன்பின் விண்வெளியில் பயணம் செய்யவும் எரிபொருள் அவசியம். நாசா, ஐரோப்பிய ஸ்பேஸ் எஜென்ஸி விண்கலன்கள் விண்வெளிக்குச் சென்ற பின்னும் எரிபொருளைப் பயன்படுத்தி எங்கேயும் நிற்காமல் நேராகச் செவ்வாய் சென்றன.

ஆனால் மங்கள்யான் புவியீர்ப்பு விசையையையும், விண்வெளியின் எடையற்ற தன்மையையும் மிக அழகாகப் பயன்படுத்தியது. இதன்படி பூமிக்கு மேலே உயர்ந்த மங்கள்யான், உடனே செவ்வாய் செல்லாமல் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரத் தொடங்கியது. பூமி எப்படி சூரியனைச் சுற்றிவர எரிபொருள் தேவையில்லையோ, அதே போல் மங்கள்யான் பூமியைச் சுற்றி வரவும் எரிபொருள் தேவைப்படவில்லை. இப்படியே மங்கள்யான் பூமியை மணிக்குப் பல்லாயிரம் மைல் வேகத்தில் சுற்றிவரும் சூழலில் கொஞ்சம், கொஞ்சமாக மங்கள்யானின் நீள்வட்ட பாதையை விரிவுபடுத்தி ஒரு கட்டத்தில் மங்கள்யானின் எஞ்சினை இயக்கி, மங்கள்யானைச் சூரியனை நோக்கித் தள்ளியது இஸ்ரோ. செவ்வாய், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் தருணம் இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அந்த ஒரே உந்தில் சூரியனை நோக்கி விரைந்த மங்கள்யானுக்கு அதன்பின் எரிபொருள் தேவைப்படவில்லை. காரணம் மங்கள்யானை அதன்பின் சூரியனின் ஆகர்ஷண சக்தி தன்னை நோக்கி இழுத்தது. இந்தச் சூழலில் செவ்வாய், சூரியனுக்கு அருகில் வரவும் எஞ்சினை மீண்டும் இயக்கி, தன் வேகத்தைக் குறைத்து, செவ்வாயை நெருங்கி அதன் ஈர்ப்பு விசையால் செவ்வாயைச் சுற்றிவரத் தொடங்கியது மங்கள்யான். இது நிகழ்ந்ததும் மங்கள்யான் தன் நோக்கத்தை எட்டிவிட்டது.

ஆக, மங்கள்யானின் வெற்றி வெறுமனே "நானும் செவ்வாய்க்குப் போனேன்" என இல்லாமல் தொலைதூர விண்வெளிப் பயணங்களை மிகக் குறைந்த எரிபொருள் செலவில் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி எப்படி சாதிக்க முடியும் என்பதை உலகுக்கே சுட்டிக் காட்டுவதாகவும் அமைந்து உள்ளது. அவ்விதத்தில் மங்கள்யான் இந்தியாவின் மிகப் பெரும் வெற்றிச் சின்னம் என்பதில் சந்தேகம் இல்லை.











செல்வன்
email:  holyape@gmail.com

Monday, September 15, 2014

அறிஞர் அண்ணா அவனி வந்த நாள்!

 -- மேகலா ராமமூர்த்தி.


தமிழக அரசியல் வரலாற்றில் தந்தை பெரியாரின் தொண்டராய்த் திராவிடர் கழகத்தில் (நீதிக் கட்சியே பின்பு திராவிடர் கழகமாக மாறியது) களமிறங்கிய காஞ்சிபுரம் திரு. நடேசன் அண்ணாதுரை அவர்கள் பின்பு பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாய்த் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கியதும், தி.மு.க என்று அழைக்கப்பட்ட/படுகின்ற அவ்வரசியல் கட்சி பின்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்ததும் தமிழர்களாகிய நாம் நன்கறிந்ததே.

மிகச் சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன்வாய்ந்த திரு. அண்ணாதுரை அவர்கள் ’அறிஞர் அண்ணா’ என்று கழகத் தொண்டர்களாலும், தமிழக மக்களாலும் அன்போடும், ஆசையோடும் அழைக்கப்பட்டவர்.

தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் ’spontaneous overflow’ என்று வியக்கத்தக்க வகையில் ஆற்றொழுக்காகப் பேசக்கூடியவர் அண்ணா. அதுமட்டுமா? மொழிபெயர்ப்புக் கலையிலும் வித்தகர்!

அதற்கான சான்று…

ஒருசமயம், சென்னையில் ஒருவிழாவில் ஆங்கிலத்தில் உரையாற்றவிருந்த சிறந்த கல்வியாளரான திவான் பகதூர் சர். ஏ. இராமசாமி முதலியார் அவர்களின் ஆங்கிலப் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்க அண்ணா அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக வந்த வெள்ளையனான இராபர்ட் கிளைவ் பின்பு இந்தியாவையே கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனாக மாறினான் எனும்பொருளில் “He came to India as Robert Clive and became Robber Clive” என்று தன் பேச்சினூடே சொல்விளையாடல் நிகழ்த்தினார் இலட்சுமணசாமி முதலியார். அவையிலிருந்தோர் அனைவரும் இதனை மிகவும் ரசித்ததோடல்லாமல் அண்ணா இத்தொடரை எவ்வாறு தமிழில் மொழிபெயர்க்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடும் ஆவலோடும் முதலியாருக்கு அருகில் நின்றிருந்த அண்ணாவையே விழி இமைக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தனராம்.

அண்ணாவோ, "திரு. கிளைவாக இந்தியா வந்தவன் பின்பு திருடன் கிளைவாக மாறினான்" என்று அநாயாசமாக அதனை மொழிபெயர்க்கவும் அனைவரும் வியப்பில் விழிவிரிய விண்ணதிரக் கரவொலி எழுப்பினராம். அண்ணாவின் மொழிபெயர்ப்புத் திறன்கண்ட முதலியாரும் அவரை ஆரத்தழுவித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம்.

அறிஞர் அண்ணாவைப் பொறுத்தவரை அவர் அரசியல் தலைவராக மட்டுமல்லாது திரைப்பட வசனகர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் முத்திரை பதித்துத் தமிழ்நாட்டு ‘பெர்னார்ட்ஷா’ எனும் சிறப்புப் பெற்றவர்.

“வேலையற்றதுகளின் உள்ளங்களில் விபரீத எண்ணங்கள்; சாலையோரத்திலே சலசலப்பு; மரத்திலே பிணம்; மடியிலே பணம்; அரசே இது காலத்தின் குறி” என்பது (எஸ்.எஸ். ராஜேந்திரன், கே. ஆர். ராமசாமி போன்றோர் நடித்த) ’சொர்க்க வாசல்’ எனும் படத்தில் அவர் எழுதிய புகழ்பெற்ற வசனம்.

’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்பது அண்ணாவின் மற்றொரு புகழ்பெற்ற வசனம்.

தன் மேடைப் பேச்சுக்களால் அனைவரையும் சொக்கவைத்தவர் ஒருவர் தமிழகத்தில் உண்டென்றால் அது அண்ணாவாகத்தான் இருக்கமுடியும்!!

ஒருமுறை அரசியல் கூட்டமொன்றில் பேசுவதற்காக அண்ணா ஓரிடத்திற்குச் (ஊரின் பெயர் நினைவில்லை) செல்லவேண்டியிருந்தது. அவர் வருவதாகச் சொன்னநேரம் கடந்துவிட்டிருந்தது; அவர் பேச்சைக் கேட்க ஆவலோடு வந்தவர்களோ இரவு எத்தனை மணியானாலும் சரி…அண்ணாவின் பேச்சைக் கேட்டுவிட்டுத்தான் அவ்விடம் விட்டு நகர்வது என்ற உறுதியோடு அங்கேயே பாய், தலையணை சகிதம் உட்கார்ந்துவிட்டனர். கடைசியாக விழா நாயகர் ‘அண்ணா’ வந்தார். தன் கடிகாரத்தைப் பார்த்தார். அப்போது மணி இரவு 10:30.

’சர்’ என்று யாருமறியாவண்ணம் மூக்குப் பொடியை உறிஞ்சினார். தொண்டையைச் செருமிக் கொண்டார். தன் வெண்கலக் குரலில்

"மாதமோ சித்திரை
மணியோ பத்தரை
உங்களைத் தழுவுவதோ நித்திரை 
மறக்காது இடுவீர் எமக்கு (திமுக) முத்திரை"
என்றாரே பார்க்கலாம். எழுந்த கரவொலியில் வானமே அதிர்ந்ததாம்! 

 "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு", "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" போன்றவை அண்ணாவின் புகழ்பெற்ற வேறுசில சொல்லாடல்கள். இவற்றில் ’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்பது திருமூலரின் திருமந்திரம்; அண்ணா இதனை அடிக்கடிப் பயன்படுத்தியதால் பலர் இது அண்ணா உருவாக்கிய சொற்றொடர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அண்ணாவின் மொழியாளுமை மக்களைக் கட்டிப்போட்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அரசியலிலே அண்ணாவை ஓர் மிதவாதி என்றே குறிப்பிடலாம். எதிலும் தீவிரவாதப் போக்கை அவர் கைக்கொண்டதில்லை. (அதனை அவருடைய குறையாகவும் சிலர் விமரிசித்தனர்.) அரசியலில் எதிர்க்கட்சியினரையும் எதிரிகளாய் எண்ணாமல் அவர்களோடும் அன்பாகப் பழகியவர் அவர். தரக்குறைவான சொற்களால் யாரையும் விமரிசிக்காதவர்; அரசியலிலும் நாகரிகத்தைப் பேணியவர்.

கடவுள் மறுப்பிலும் பெரியார் அளவிற்கு அவர் முனைப்புக் காட்டினாரில்லை. நான் ”தேங்காயும் உடைப்பதில்லை; பிள்ளையாரும் உடைப்பதில்லை” என்பதே அண்ணாவின் கொள்கையாக இருந்தது. (It sounds he must be an Agnostic like Pandit Nehru.)

தமிழக முதலமைச்சராக இரண்டாண்டுகள்கூட முழுதாகப் பதவி வகிக்கவில்லை அண்ணா என்பது மிகவும் வருந்தத்தக்கது. எனினும், தான் பதவியிலிருந்த சிறிது காலத்திலேயே ‘மதராஸ்’ எனும் பெயரை மாற்றித் ’தமிழ்நாடு’ எனும் புதிய பெயரைத் தமிழகத்திற்குத் தந்தார். 1968-இல் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்திக் காட்டினார்.

அசாதாரணத் திறமைகளும், பல்துறை அறிவும், பகட்டற்ற எளிமையும் கொண்ட அறிஞர் அண்ணா எப்போதும் படித்துக் கொண்டிருப்பதையே விரும்புவாராம் (he was an avid reader). தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்து எமனின் வரவை அவர் எதிர்பார்த்திருந்த வேளையிலும்கூடத் தன் மரணம் பற்றிக் கவலைப்படாமல் தன் தலைமாட்டில் வைத்திருந்த புத்தகங்களைப் படித்துமுடிக்காமல் போகப் போகிறோமே என்றுதான் கலங்கினாராம்.

தன் கவிதைகளால் பாமரர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பாரதிபோல், தன் தனித்தன்மை வாய்ந்த மேடைப் பேச்சுக்களாலும், அற்புதமான எழுத்துக்களாலும் பாமர மக்களின் உள்ளங்களில் பாசமிகு ’அண்ணனாக’ இடம்பிடித்தவர் அறிஞர் அண்ணா.

அவருடைய பிறந்தநாளான (செப்.15) இன்று அவருடைய நினைவைப் போற்றுவோம்!








மேகலா ராமமூர்த்தி
megala.ramamourty@gmail.com

Thursday, September 11, 2014

பஞ்சலோக விக்ரஹம் செய்வது எப்படி? பகுதி 2

பாகம் 2.

உலகிலேயே மிகப் பெரிய சிவன் நடராஜன் விக்ரகத்தை  இந்த ராஜன் இன்டஸ்ட்ரி நிறுவனத்தினர்   செய்திருக்கிறார்கள், அந்த விக்ரகம் இப்போது ஸ்விட்சர்லாந்தில் ஜெனிவாவில் உள்ள ப்ரூஸ்லன்ட் என்னும் இடத்தில்  அட்டாமிக் காஸ்மிக் சென்டரில்  நியூக்ளியர்  அட்டாமிக் ஆராய்ச்சி செய்கிறார்கள். அங்கே இந்த நடராஜர் விக்ரகத்தை வைத்திருக்கிறார்கள். அங்கே  ஏன்  வைத்திருக்கிறார்களென்றால்  இந்த நடராஜரின் நடனத்துக்கும்  அணுவுக்கும்  தொடர்பு உள்ளது.அங்கே அணுவை எப்படி உருவாக்குவது, எப்படி அழிப்பது என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். அதற்கு இந்த நடராஜரின் நர்த்தன அமைப்பு முறையாக ஒத்துப் போகிறது  என்று நிரூபித்திருக்கிறார்கள். அதற்காக இந்திய அரசாங்கமே இந்த சிலையை செய்யச்சொல்லி  அங்கே வைத்திருக்கிறார்கள்  என்று ஒரு அருமையான செய்தியைச் சொன்னார் திரு சுரேஷ் அவர்கள்.
அவர்களின் தொழில் நுணுக்கத்தைப் பற்றிப் பேசும்போது அவர் சொல்கிறார் டெல்லியிலே உள்ள மொரதாபாத் என்னும் இடத்திலே இப்படிப்பட்ட விக்ரகங்களைக் கொண்டு சென்று அந்த விக்ரகத்தை பாகம் பாகமாக வெட்டி ப்ரதி எடுத்து அப்படியே மோல்டிங் முறையில் செய்து  விற்கிறார்கள் என்று.  விவரம் தெரியாத பலர் அவர்களிடம் விக்ரகங்களை வாங்கி ஏமாறுகிறார்கள். ஆனால் விக்ரகங்களின் நுணுக்கம் தெரிந்தோர் இவரிடம் வந்து செய்யச்சொல்லி எடுத்துப் போகிறார்கள் என்கிறார் இவர்.

விக்ரகம் செய்யும் முன்னர் அந்த விக்ரகம் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் பின்னர்தான் விக்ரகம் செய்யத் தொடங்குவார்கள்.ஒவ்வொரு விக்ரகத்தின் கைகளும்  அந்தந்த விக்ரகத்துக்கு ஏற்ப என்ன முத்திரையைத் தாங்கி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அந்த முத்திரைக்கேற்ப விரல்களை அமைக்கவேண்டும்.
அபய ஹஸ்தம் என்றால்  உள்ளங்கை  அந்த விக்ரகத்தை பார்ப்பவர்களுக்கு ஆசி வழங்குவது போல்   ஆள்காட்டி விரல் முதல் சுண்டு விரல் வரை ஒன்றாக இணைந்து மேல் நோக்கியும் , கட்டை விரல் பக்கவாட்டில் சற்றே விலகியோ அல்லது சேர்ந்தோ இருக்கவேண்டும்
நர்தன சிவன் என்றால் கால்கள் அந்த நர்த்தனத்தில் எந்த பாகத்தைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்து  கால்கள் மே நோக்கியோ, அல்லது ஒரு கால் மடித்து மறுகால் அகலமாக  தரையைத் தொடுவது போலவோ அமைக்கவேண்டும்.
விரித்த செஞ்சடையோடு ஆக்ரோஷ நடனம் என்றால் அதற்கு  கால்கள், கைகளின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து நடன முத்திரைகளை முறையாக புரிந்துகொண்டு அதற்கேற்ப    அந்தந்த முத்திரைகளை அமைப்பது பொருத்தமனாது .
ஆலிலை மேல் படுத்துக் கிடக்கும் கிருஷ்ணன் என்றால்  அந்தக் கிருஷ்ணனின்  பாதம் எப்படி இருக்க வேண்டும், கைகள் எப்படி இருக்க வேண்டும், அல்லது  காலிங்க நர்த்தனத்தில்  இருக்கும் கிருஷ்ணன் என்றால் கால்களும்  ,கைகளும்   அங்க அசைவுகளின் வடிவம்    நடன பாவத்துக்கேற்ப ஒத்துப் போவது போல் அமைக்க வேண்டும்.
ஆக இந்த விக்ரகம் செய்வோருக்கு  மிக நுணுக்கமாக  கூர்ந்து கவனித்து வடிவங்களை அமைக்க பொறுமையும்  நுணுக்கமும் வேண்டும்.

முத்திரைகள் என்றால் அவற்றில் யோக முத்திரைகள் , நாட்டிய  முத்திரைகள் உண்டு,
.
யோக முத்திரைகள் : . கை விரல்----குறிக்கும் மூலம்
1. பெரு விரல்---    சூரியன்
2. ஆட்காட்டி விரல்---     காற்று
3.நடு விரல்--- ஆகாயம் (வானம்)
4.  மோதிர விரல்--- மண்
5. சுண்டு விரல்--- நீர்
என்று நம்முடைய ஐந்து விரல்களும்  ஐந்து பூதங்களாகிய பஞ்ச பூதங்களோடு  தொடர்புடயவையே.

நம் உடல் நலக் குறைவு வரும்போது  அந்தக் குறையை நீக்க இந்த விரல்களைப் பயன்படுத்தி எந்த விரலோடு  எந்த விரலை சேர்த்துப் பிடித்தால் அந்த நோய் தீரும்  என்று தெரிந்து கொண்டு  ,அல்லது பஞ்ச பூதங்களில்  எந்த பூதத்தை எந்த பூதத்தோடு சேர்த்து வைத்தால் நோய் தீரும் என்று தெரிந்துகொன்டு அதற்கேற்ப  முத்திரைகளை அமைத்து நிவாரணம் பெறுவது யோக முத்திரையின் சிறப்பு.
நாட்டிய முத்திரைகள்:
நாட்டிய முத்திரைகள் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்துக்கு  ஏற்ப  அந்தப் பாத்திரம் செயல்படும் கதைக்கேற்ப அமையவேண்டும். நட்டுவனாருக்கு இந்த முத்திரைகள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டியம் ஆடுவோருக்கு அவர் சரியான முத்திரைகளை, அடவுகளை சொல்லித்தர முடியும்.  நடன முத்திரையில் பாவங்களைக் காட்ட எந்த விரலோடு எந்த விரலை சேர்த்தால் அந்தக் குறிப்பிட்ட பாவம் வரும் என்று  தெரிந்துகொண்டு  அமைத்து பாவம் காட்டி  நடனமாடுவது.
1.பதாகம்    கொடி பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடித்தல்.  
2.திரிப்பதாகம்      மூன்று பாகம் கொண்ட கொடி அல்லது மரம்  பதாகத்தில் மோதிர விரலை மடித்தல்.
3.அர்த்தப்பதாகம்   அரைக்கொடி திரிப்பதாகத்தில் சுண்டி விரலை மடித்தல்.  
4.கர்த்தரீமுகம்     கத்தரிக்கோல்      திரிப்பதாகத்தின் மடித்த விரல்களுடன் பெருவிரலை சேர்த்தல்.  
5.மயூரம்     மயில் திரிப்பதாகத்தில் மடித்த மோதிர விரலுடன் பெருவிரலை சேர்த்தல்.  
6.அர்த்தச்சந்திரன்   அரைச்சந்திரன்     பதாகத்தில் உள்ள பெருவிரலை நீட்டுதல்.  
7.அராளம்    வளைந்தது  சுட்டு விரலுடன் பெருவிரலை சேர்த்துப் பிடித்தல்.
8.சுகதுண்டம் கிளி மூக்கு  பதாகத்தில் சுட்டு விரலையும் மோதிர விரலையும் மடித்தல்.  
9.முட்டி(முஷ்டி)    முட்டிகை   அனைத்து விரல்களையும் பொத்துதல்.
10.சிகரம்     உச்சி  முட்டியில் உள்ள பெருவிரலை விரித்தல்.
11.கபித்தம்   விளாம்பழம் சிகரத்தின் பெருவிரலை சுட்டு விரலால் பொத்துதல்.
12.கடகாமுகம்      வளையின் வாய்   நடுவிரல் பெருவிரல் மற்றும் சுட்டுவிரல் ஆகியவற்றை சேர்த்துப் பிடித்தல்.
13.சூசி ஊசி  முட்டியில் உள்ள சுட்டு விரலை நீட்டுதல்.
14.சந்திரகலா பிறைச்சந்திரன்     சூசியில் உள்ள பெரு விரலை நீட்டுதல்.
15.பத்மகோசம்     தாமரை மொட்டு   கையின் விரல்களை அரைவாசிக்கு மடித்தல்.
16.சர்ப்பசீசம் பாம்பின் படம்     பத்மகோசத்தைவிட சற்று மடித்து S வடிவில் சுற்றல்.  
17.மிருகசீசம் மான் தலை பெருவிரல் மற்றும் சுண்டிவிரல் தவிர்ந்த விரல்களை 45° இல் மடித்தல்.
18.சிம்மமுகம்      சிங்கத்தின் முகம்   நீட்டியபடியுள்ள நடுவிரலையும் மோதிரவிரலையும் பெருவிரலுடன் சேர்த்தல்.
19.காங்கூலம் அங்குலத்தை விட குறைந்தது   மோதிரவிரலை மடித்து மற்ற விரல்களால் மடித்துப் பிடித்தல்.
20.அலபத்மம் மலர்ந்த தாமரை   சுண்டி விரலை அதிகம் மதிப்பதோடு மோதிரவிரலையும் சற்று மடித்தல்.
21.சதுரம்    சாதூர்யம்   மிருகசீசத்தில் உள்ள பெருவிரலை உள்ளே மடித்தல்.
22.பிரமறம்  வண்டு      ஆட்காட்டி விரலை உள்ளே மடித்து பெருவிரலையும் நடு விரலையும் சேர்த்துப் பிடித்தல்.
23.கம்சாசியம்      அன்னத்தின் அலகு பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் நீட்டியபடி சேர்த்தல்.மற்ற விரல்கள் விரிந்து இருக்கும்.
24.கம்சபக்சம் அன்னத்தின் சிறகு  மிருகசீசத்தில் நீட்டி உள்ள பெருவிரலை ஆட்காட்டி விரல் பக்கமாக சேர்த்தல்.
25.சம்தம்சம் இடுக்கி      விரல்களை நீட்டியபடி மூடி திறந்து மூடுதல்.
26.முகுளம்  மொட்டு     விரல்களை நீட்டியபடி சேர்த்துப் பிடித்தல்.
27.தாம்ரசூடம்      சேவல்      மற்ற விரல்கள் பொத்திய நிலையில் ஆட்காட்டிவிரலைஅரைவாசி மடித்தல்.
28.திரிசூலம்  சூலம் மற்ற விரல்கள் மூடிய நிலையில் சுண்டிவிரளையும் பெருவிரலையும் சேர்த்துப் பிடித்தல்.    ஆகிய முத்திரைகள் உள்ளன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பஞ்சலோகம்  என்றால் ஐந்து உலோகங்கள்
அதுபோல் ஐந்து என்னும் சிறப்பானவை வேறு என்னென்ன  இருக்கின்றன என்று ஆராய்ந்தேன். அவற்றில் விக்கிபீடியாவில், மற்றும்  இணையத்தில்  கிடைத்த விவரங்களைக் கீழே எழுதியுள்ளேன்.
பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால்
பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்
பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead)
பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்
பஞ்சலிங்கத் தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம்.
பஞ்சபட்ஷிகள் :  வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில்
பஞ்ச கங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை.
பஞ்சாங்கம் –     திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                      
பஞ்ச ரிஷிகள் –    அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                                                                                                      
பஞ்ச குமாரர்கள் –     விநாயகர்,முருகர்,வீரபத்திரர்,பைரவர்,சாஸ்தா.                                                                                                            
பஞ்ச நந்திகள் –  போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி,                                                              



பஞ்ச மூர்த்திகள் –  விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.                                                                                                                
பஞ்சாபிஷேகம் –  வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர்,பச்சை            கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர் ,கிராம்பு,கொரோசனம் கலந்த நீர் ,    விளாமிச்சை வேர் , சந்தனாதி தைலம் ஆகியவாசனை       பொருட்கள் கலந்த கந்த தோதகம்.                                                          
பஞ்ச பல்லவம் –    அரசு,அத்தி,வில்வம்,மா,நெல்லி.                                                                                                  
பஞ்ச இலைகள் –   வில்வம்,நொச்சி,விளா,துளசி,கிளுகை.                                                                                                                  
பஞ்ச உற்சவம் –   நித்ய உற்சவம்,வார உற்சவம்,பட்ச(மாதம் இருமுறை)உற்சவம்,    மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.                                                    
பஞ்ச பருவ உற்சவம் – அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி,மாதப்பிறப்பு.                                                                                          
                                                                     
பஞ்ச சபைகள் –    ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.                                                        
பஞ்ச ஆரண்யம் –     உஷத் காலம், கால சாந்தி, உச்சிகாலம், சாயரட்சை,  அர்த்தஜாமம்.                                                
பஞ்ச முகங்கள் (சிவன்)- தத்புருஷம்,அகோரம்,சத்யோஜாதம்,வாமதேவம்,ஈசானனம்                                              
பஞ்ச முகங்கள் (காயத்திரி)- பிரம்மன்,விஷ்ணு,சதாசிவன்,ருத்ரன்,ஈஸ்வரன்.                                                                                          
பஞ்ச மாலைகள் –   இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.                                                                    
பஞ்சமா யக்ஞம் –    பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்.                                        
பஞ்ச ரத்தினங்கள் –  வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
                                                       
பஞ்ச தந்திரங்கள் –  மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.                                                    
பஞ்ச வர்ணங்கள் – வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.                                                                                                                
பஞ்ச ஈஸ்வரர்கள் –  பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,மகேஸ்வரன்,சதாசிவன்                                                                                                            
பஞ்ச கன்னியர்கள் –  அகலிகை, திரௌபதி, சீதை, மண்டோதரி, தாரை.
                                                               
 பஞ்ச பாண்டவர்கள் – தர்மன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன்.
                                                               
 பஞ்ச ஹோமங்கள் –      கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்.                                            
பஞ்ச சுத்திகள் –  ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.                                                        
பஞ்ச கோசம் –     அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.                        
பஞ்ச காவ்யம் (பசு)-     பால், தயிர், நெய், கோமியம், சாணம்.                                                              
பஞ்ச லோகம் –   தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்.                                                                                                                      
பஞ்ச ஜீவநதிகள் –  ஜீலம், ரவி, சட்லெட்ஜ், பீஸ்(பீயாஸ்), ரசனாப்.                                                              
பஞ்ச ஆயுதங்கள்(மகாவிஷ்ணு) – சங்கு, சக்கரம், கதை, வாள், வில்.                                                                        
பஞ்ச நிலங்கள் –   குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை                                                                                                                        .பஞ்ச காப்பியங்கள் – மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம்.                            
பஞ்சமா பாதகங்கள் – காமம், கள்ளுண்டல், களவு, கொலை, பொய்.                                                                  
பஞ்ச சயனம் –   அழகு, குளிர்ச்சி, வெண்மை, மென்மை, மணம்                                                                                                                        
பஞ்ச புராண ஆசிரியர்கள் –  நால்வர், கரு ஆருத்தேவர், சேத்தனார், சேக்கிழார், கச்சியப்பர்.                                                                                          
 பஞ்சராத்ரங்கள், பஞ்சாங்கம், பஞ்சமுத்திரைகள் பஞ்சபட்ஷி சாஸ்திரம் பஞ்ச புராணம், பஞ்சலிங்கம், பஞ்சமுகக் குத்துவிளக்கு, பஞ்சரத்தினக் கீர்த்தனைகள்
ஆகமொத்தம் பஞ்ச பூதங்கள்  ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உள்ளே பொருந்தி  பஞ்சபூதங்கள் இல்லாமல் இந்த ப்ரப்ஞ்சத்தில் எதுவுமே இல்லை என்று நிரூபித்த வண்ணமாக இருக்கிறது.
பஞ்சலோக விக்ரகங்கள் செய்யும் முறை பாகம் 2  காணொளியைக் கண்டு மகிழ
https://www.youtube.com/watch?v=zWQ_U72P8-4

அன்புடன்
தமிழ்த்தேனீ

Wednesday, September 10, 2014

பஞ்சலோக விக்ரஹம் செய்வது எப்படி?

எனக்கும் என் துணைவியாருக்கும் திருமணமாகி 40 ஆண்டுகள் ஆயிற்று, அதைக் கொண்டாட எங்கள் குல தெய்வமான ஶ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையில் எழுந்தருளி இருக்கும் ஶ்ரீ ஆதி வினாயகரையும், ஶ்ரீலக்‌ஷ்மி சமேத ஶ்ரீனிவாசனையும் தரிசிக்க சென்றோம்.
அங்கிருந்து ராமநாதபுரம் சென்று ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் இருந்த பஞ்சலோக விக்ரகம் செய்யும் இடத்தைப் பார்வையிட்டு அங்கே உரிமையாளரிடம் பேட்டி எடுத்து அதைக் காணொளியாக அளித்திருக்கிறேன்.

“ விஸ்வகர்மா “

மஹாசக்தி என்பது விஸ்வரூபம் ,அதிலிருந்து பிரிந்து இப்புவனத்தில் ஜீவராசிகளாகப் பிறந்து நீந்துவன, பறப்பன, தவழ்வன, ஓடுவன, நடப்பன என்று பலரூபங்களாகப் பிரிந்து அதிலிருந்து சற்றே அறிவை மேம்படுத்திக் கொண்டு பரிணாம வளர்ச்சியால் மனிதன் என்னும் உருக்கொண்டு மானுடராக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம் . பல கலைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் நாம் .

நம் முன்னோர்கள் முதலில் பஞ்ச பூதங்களின் வழியாகத்தான் இறைவனை உணர்ந்தனர், அதன் பின்னே ஆத்ம யோகம், ஆழ்ந்த பக்தி, தியானம், தவம் போன்றவைகளால் இறைவனை அடைய முயற்சித்தனர்.

அப்படி அவர்கள் கண்டு பிடித்த பல வழிகளில் கலை பிறந்தது. அவை ஆய கலைகள் அறுபத்தி நான்காக பரிமளித்தது. இசை வடிவமாகவும், நாட்டியம் நடனம் மூலமாகவும், கல்லினால் சிற்பங்கள் வடித்து அவற்றை மூல விக்ரகமாகவும் பஞ்ச லோகத்தை வைத்து விக்ரகங்கள் செய்து அவற்றை உற்சவ மூர்த்தியாகவும் ஆவிர்பவித்து அவற்றை வணங்குதல் மூலமாகவும் மொத்தத்தில் கலைகளின் மூலமாகவும்

இறைவனையே துதிக்கவும் நம் முன்னோர்கள் பலவிதமான பயிற்சிகளையும், நல்ல உற்சவங்களையும், நல்ல பண்டிகைகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.
நம் முன்னோர்கள் கற்றுவைத்திருந்த பல கலைகளை, அவைகளின் நுணுக்கத்தை பாரம்பரியமாகப் போற்றி நாமும் கற்றுக்கொண்டிருக்க வேண்டும், ஆனால் தவறிவிட்டோம்.
ஆயினும் இக்காலத்திலும் சிலராவது பாரம்பரியமாக

தங்களின் ஆதி கலைகளை மறக்காமல் கற்றுக் கொண்டு முறையாக பராமரித்து கடைப்பிடிப்பதால்தான் இன்னமும் பல கலைகள் முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட கலைகளில் சிற்ப சாஸ்திரத்தைக் கைக்கொண்டு கல் விக்ரகங்கள் வடித்தல், உலோக விக்ரகங்கள் வடித்தல் என்னும் கலை அபூர்வக் கலையாகும்.

கல்லிலே விக்ரகங்களை வடிப்பவர்களை சிற்பிகள் என்று அழைக்கிறோம். உலோகங்களில் முறையாக சிற்பங்களை வடிப்பவர்களை விஸ்வகர்மா என்றழைக்கிறோம்.
இந்த விஸ்வகர்மா என்னும் பாரம்பரியத் தொழில் கலைஞர்கள், இன்றளவும் பஞ்ச லோகங்களை உருக்கி அவற்றின் கலவையால் விக்ரகங்களை வடிக்கிறார்கள்.
ராமநாதபுரத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் தஞ்சாவூர் மாவட்டத்திலே ஸ்வாமிமலையருகே திம்மக்குடி என்னும் ஊரிலே உள்ள ராஜன் இண்டஸ்ட்ரீஸ் என்னும் இடத்திலே பஞ்சலோக விக்ரகங்களை சிற்ப சாஸ்திர முறைப்படி முறையாகக் கற்றுக் கொண்டு வம்சாவழியாக செய்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்டு அந்த விக்ரக ஆலையினுள் ஆர்வத்துடன் நுழைந்தோம்.

அங்கே அந்த ஆலையின் நிறுவனராக திரு சுரேஷ் என்பவர் எங்கள் ஆர்வத்தைக் கண்டு மரியாதையாக உள்ளே அழைத்து அவர்கள் எப்படி பஞ்சலோக சிற்பங்களைத் தயாரிக்கிறார்கள் என்று இதமாக பதமாக பொறுமையாக விளக்கினார்
அங்கே முதன்மையாக இருக்கும் திரு ஶ்ரீனிவாசன் என்பவர் பஞ்சலோக விக்ரகங்களை வடிக்கும் முறையை எங்களுக்கு தெளிவாக விளக்கினார்.

இந்தப் பஞ்சலோகங்களை . எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அவர் கூறினார். இந்தப் பஞ்ச லோகங்களுக்கு அடிப்படை பஞ்ச பூதங்கள் என்றும்
பிரிதிவி ---- அப்பு ---- தேயு ---- வாயு ---- ஆகாயம்
மண் ---- நீர் ---- நெருப்பு – காற்று ---- வெளி ஆகியவையே என்று குறிப்பிட்டார்.
உலகில் இவை ஐந்தும் குறிப்பிட்ட சதவிகித அளவிலேதான் இருக்கின்றன
பஞ்சலோக சிலைகளின் இரசாயன ஆய்வு முடிவுகள்
உலோகங்கள்
கி.பி. 9ம் நூற்றாண்டு கி.பி. 10-11ம் நூற்றாண்டு கி.பி. 13ம் நூற்றாண்டு கி.பி. 15ம் நூற்றாண்டு கி.பி. 17ம் நூற்றாண்டு
செம்பு
Copper 83 - 39 86 - 88 91 - 05 96 - 29 91 - 25
தகரம்
Tin 16 - 61 10 - 44 2 - 86 2 - 58 6 - 66
ஆர்செனிக்
Arsenic Tr Tr Tr Tr Tr
ஈயம்
Lead Tr 1 - 48 6 - 09 1 - 9 2
இரும்பு
Iron Tr 1 - 19 Tr 0 - 06 0 - 07
நன்றி விக்கிபீடியா
ஆகவே இந்த மண் ---- நீர் ---- நெருப்பு – காற்று ---- வெளி என்கிற பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) ஆகிய உலோகங்களைக் கொண்டு அவைகளை உருக்கிக் கலந்தே இந்தப் பஞ்சலோக விக்ரகங்கள் வடிக்கப் படுகின்றன.
மண், நீர்,நெருப்பு,காற்று, ஆகாயவெளி ஆகிய ஐந்துமே நம் வாழ்க்கையில் ப்ரதான இடம் வகிக்கிறது.இந்த ஐந்தும்தான் நாம் நோயற்று வாழ உதவும் சாதனங்கள்.

இவற்றை நன்கு உணர்ந்த சித்தர்கள், யோகிகள், தவஸ்ரேஷ்டர்கள் இந்த ஐந்தையும் நம் வாழ்க்கையில் இன்றியமையாமல் நாம் முறையாக உபயோகித்து நலமுடன் வாழ வழிகாட்டுகிறார்கள்.

இந்த ஐந்தையும் கலந்தே வியாதிகள் நீக்கும் மருந்துகளாக்கி நமக்களிக்கிறார்கள், ஆயினும் இப்பிறவியில் நம் ஆயுள் முடிந்து போகுமானால் ஜீவராசிகள் எல்லாமே மீண்டும் பிரிந்து பஞ்ச பூதங்கள் என்னும் இந்த ஐந்துடன் மறுபடியும் ஒன்றிப் போகிறது.

ஆகவே ஆதியும் அந்தமும் , தொடக்கமும் முடிவும் இந்தப் பஞ்ச பூதங்களிலேதான் உருவாகிறது , அடங்குகிறது
இப்படி பஞ்ச பூதங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஐந்து உலோகங்களைக் கொண்டு வடிக்கப்படும் விக்ரகங்கள்தான் சக்தி பெற்று ஆலயங்களில் உற்சவ மூர்த்தியாக இருக்கின்றன.

இப்படி பஞ்ச பூதங்களை அடிப்படியாகக் கொண்டு இந்த விக்ரகங்களை வடிப்பதால் இயற்கையான அடிப்படை சக்தி இந்த பஞ்ச லோக விக்ரகங்களுக்கு கிடைத்துவிடுகிறது, அதன் பின்னர் ஆகம முறைப்படி அந்த விக்ரகங்களுக்கு தேவையான அபிஷேக ஆராதனைகள், பூஜை புனஸ்காரங்கள் மேலும் சக்தியை ஊட்டுகின்றன.

ஆலயங்களுக்கு வந்து கர்பக்கிருஹ கடவுளை வணங்க இயலாத பெரும்பாலான மக்களின் குறைதீர்க்க இந்தப் பஞ்சலோக உற்சவ மூர்த்திகள் மாடவீதிகளில் உலாவந்து ஜீவராசிகளுக்கு அருள் தரவே திருமாடவீதி புறப்பாடு என்பது நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.

ஆகவே இந்தப் பஞ்சலோக தயாரிப்பு முறையைக் கண்ணால் கண்டு இன்புற்ற நாங்கள் “ நாம் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறட்டுமே” என்று அங்கே நடந்த எங்கள் சந்திப்பை ஒளி,ஒலிப்படமாக ஆக்கி அந்தக் காணொளியை கணிணியிலே செதுக்கி அளித்திருக்கிறேன். கண்டு களியுங்கள்.

இந்தத் தொடுப்பை உபயோகித்து என்னுடைய வலைப்பூவான http://thamizthenee.blogspot.com தளத்திலும் காணொளியைக் காணலாம்

https://www.youtube.com/watch?v=nYL_YBnM0pQ&list=UUVfKwpJPdHKd-FAQFSNG8lA

அன்புடன்
தமிழ்த்தேனீ