Thursday, February 8, 2018

அரவக்குறிச்சிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்


——   து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



முன்னுரை
அண்மையில் அறிமுகமான நண்பர் சுகுமார் பூமாலை. அரவக்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்தவர். சென்னையில், ஒளிப்படக் கலைஞராகத் தன்னிச்சைப்  பணி. வரலாற்றிலும், தொல்லியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு அவை பற்றிய  அறிவை வளர்த்துக்கொண்டதோடு , தேடுதல்கள் மூலம் தம்முடைய பகுதியில் தொல்லியல் தடயங்களைக் கண்டறிந்து வருகிறார். அவ்வாறு தாம் கண்டறிந்த பல செய்திகளைத் தம்முடன் நேரில் பார்வையிட அழைப்பு விடுத்திருந்தார். 30, ஜனவரி 2018 அன்று அவரோடு இணைந்து அவர் காண்பித்த தொல்லியல் தடயங்களைப் பார்வையிட்டது பற்றிய ஒரு பதிவு இங்கே.

அரவக்குறிச்சி
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி ஒரு வட்டம். குறிச்சி என்னும் பின்னொட்டுக் கொண்ட ஊர்கள் தமிழகத்தில் நிறைய உண்டு. அவை, குறிஞ்சி நிலச் சூழலில் அமையும் ஊர்கள் என்று பொதுவாகக் கருதலாம். அரவக்குறிச்சி என்றும் அரவங்குறிச்சி என்றும் இரு வகையில் வழங்குகிறது. இரண்டிலுமே முதற்சொல் அரவம் அல்லது அரவு. அரவு என்பது பாம்பை மட்டிலுமே குறிக்கும். ஆனால், அரவம் என்பது பாம்பு என்பதோடு தமிழையும் குறிக்கும். ஊர்ப்பெயர்க் காரணம் இவற்றோடு தொடர்புடையதா இல்லையா எனத் தெரியவில்லை. கோவையிலிருந்து பல்லடம், காங்கயம், வெள்ளக்கோவில், தென்னிலை, சின்னதாராபுரம், அரவக்குறிச்சி என்பதான சாலைப்பயணம். அரவக்குறிச்சியின் சுற்றுப்பகுதியில் அமராவதி, குடகனாறு ஆகிய ஆறுகள் அமைந்துள்ளன. இவை தவிர, நல்காசி ஆறு எனறோர் ஆறு இங்கே உண்டு. இது நங்காஞ்சி ஆறு என்றும் வழங்குகிறது. இரண்டு வழக்காறுகளிலுமே ஊர்ப்பெயர்கள் இயல்பாக அமைந்துள்ளன. காசியும், காஞ்சியும். காசிக்குச் சென்ற பலன்/புண்ணியம் கிட்டும் ஊர் என மக்கள் கருதுவதாக நண்பர் கூறினார்.

குதிரை குத்திப்பட்டான் கல்
அரவக்குறிச்சி  கரூர் சாலையில், அரவக்குறிச்சிக்கருகில் கரடிப்பட்டி என்றொரு சிற்றூர். அங்கு, நல்காசி(நங்காஞ்சி) ஆற்றின் கரையோரம் ஒரு கோயில்; புலிகுத்தி அம்மன் கோயில் என்பது மக்கள் வழக்கில் உள்ள பெயர். நண்பர், அங்கிருப்பது நடுகல் சிற்பங்களுள் ஒன்றான குதிரை குத்திப்பட்டான் சிற்பம் என்று சொல்லி அழைத்துச் சென்றார். ஒரு மண்டபத்தில் மேடையமைத்துச் சிற்பத்தை நிறுத்தியிருக்கிறார்கள். சிற்பத்தை நேரடியாக நிறுத்தாமல் ஒரு சுவரைப் பின்புலமாக அமைத்து நிறுத்தியுள்ளனர். சிற்பம, நாலேகால் அடி உயரமும் இரண்டேமுக்கால் அடி அகலமும் கொண்ட ஒரு பலகைக் கல்லில் புடைப்புருவமாக வடிக்கப்பட்டுள்ளது. வீரன் ஒருவன் தன் இடக்கையால் குதிரையின் வாயைப் பிடித்தவாறும், வலக்கையால் குறுவாளைக்கொண்டு குதிரையைத் தாக்குகின்ற நிலையிலும் காணப்படுகிறான். குதிரை தன் பின்னங்கால்களில் நின்றவாறு முன்னங்கால்களை உயர்த்தி வீரனைத் தாக்குகின்ற தோற்றத்தில் உள்ளது. வீரன் தன் இடையாடைக்கச்சிலும் ஒரு வாளினை வைத்திருக்கின்றான். அவனது இடையாடை முழங்கால் வரையில்கூட அமையுமாறு பெரிதாக இல்லை. சிற்றாடை. ஆடையமைப்பு அழகுறத் தோன்றுகிறது. முகமும், வலக்காலும் முன்புறம் நேர்ப்பார்வையில் உள்ளன. இடக்கால், முன்புறப்பார்வையில் அமையாமல் பக்கவாட்டில் முன்னோக்கி அடியெடுத்து வைக்கும் கோணத்தில் உள்ளது. ஆலிடா ஆசனம் என்று சிற்பக் கலையில் சுட்டப்படும் ஒரு தோற்றநிலையை ஒத்துள்ளது. வீரனின் தலைமுடி நேர்க்கொண்டையாயுள்ளது. காதிலும், மார்பிலும், கைகளிலும் அணிகள் காணப்படுகின்றன. முகத்தின் உறுப்புகள தெளிவாகத் தெரியாவண்ணம் தேய்மானம் கொண்டுள்ளது. மொத்தத்தில் அழகான சிற்பம். சிற்ப அமைதியைக் கொண்டு, நாயக்கர் காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது எனக்கருதலாம். இந்த நடுகல்லைத், திருப்பூர்ப் பகுதியில் உள்ள ஒரு குடியினர் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் வரலாற்று மையத்தினர் இந்நடுகல்லைப் பற்றிய செய்தியை நாளிதழ்களில் வெளியிட்டு இதன் வரலாற்றுப் பின்னணியையும் தொன்மையையும் மக்களிடையே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். 

குதிரை குத்திப்பட்டான் கல்

தி இந்து”  ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில் ஒரு பகுதி கீழே:

‘Rare’ hero stone discovered
TIRUPUR:, JUNE 13, 2016 00:00 IST

A team of archaeologists attached to Tirupur-based Virarajendran Archaeological and Historical Research Centre has discovered a hero stone, which is estimated to be nearly 800-years-old.
It was erected for a person who died fighting horses belonging to a cavalry from neighbouring territory that invaded the village.
The memorial was found near a river bank at Karadipatti hamlet situated on the border of Tirupur and Karur districts.
“This is a rare sculpture for a ‘hero’ who died fighting horses trained for combating people after the chieftain and his cavalry from the neighbouring territory invaded to loot the resources in the said village.

நடுகல்  சதிக்கல்
அடுத்து நாங்கள் பார்த்தது ஒரு நடுகல் சிற்பம். மேற்குறித்த சாலையிலேயே சிறிது தொலைவு சென்றதும், நாகம்பள்ளிப் பிரிவு என்றொரு பிரிவுச்சாலைக்கருகில் நடுகல் உள்ளது. குறிப்பாக அந்த இடத்தை மக்கள் தகரக்கொட்டகைப் பேருந்து நிறுத்தம் என்றழைக்கிறாகள். சாலைக்கருகில் ஒரு பழைய மண்டபம். மண்டபத்தை ஒட்டி இரண்டரை அடி உயரமும், இரண்டடி அகல்மும் உள்ள பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம். இரு கைகளையும் கூப்பியவாறுள்ள ஆண், பெண் உருவங்கள். ஆண் உருவத்தின் தலை முடிக் கொண்டை தெளிவாகத் தெரியவில்லை. தலைப்பாகை போன்ற அமைப்பாக இருக்கலாம். பெண்ணுருவத்தில் தலைமுடி வலப்புறக் கொண்டை அமைப்பில் உள்ளது. இரண்டு உருவங்களிலும், முகத்தின் உறுப்புகள தெளிவாகப் புலப்படவில்லை. இரு உருவங்களிலும் அணிகலன்கள் உள்ளன. ஆடை அமைப்பு எளிமையாய் உள்ளது. இரு உருவங்களின் தலைப்பகுதிகளுக்கிடையில் ஒரு சிவலிங்கம் காணப்படுகின்றது. இருவரும் மேலுலகம் அடைந்தனர் என்பதன் குறியீட்டாகவே இச் சிவலிங்க உருவம். இது ஒரு சதிக்கல் சிற்பம். வீரன் இறந்துபட்டதும், அவன் மனைவியும் உடன்கட்டை ஏறுதல் மரபில் உயிர் நீத்ததன் காரணமாக எடுக்கப்பட்ட நினைவுக்கல். கல்லின் பீடப்பகுதியில் எழுத்துகள் காணப்படுகின்றன. ஆனால் பீடப்பரப்பு மட்டமாக இழைக்கப்படாததாலும், எழுத்துகளின் தேய்மானத்தாலும் கல்லெழுத்துகளைப் படிக்க இயலவில்லை. இருப்பினும், “பெண்”,  “அம்மா” ஆகிய சொற்களை இனம் கண்டுகொள்ள முடிந்தது. சதி மரபில் உயிர்நீத்த பெண்ணின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கவேண்டும்.

        நடுகல்  சதிக்கல்


மலைக்கோவில்
அடுத்து நாங்கள் சென்ற இடம் மலைக்கோவிலூர். மலைக்கோவில் இங்குள்ளதாலேயே ஊர்ப்பெயரும் மலைக்கோயிலூர் என அமைந்தது. ஒரு சிறிய குன்றுப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில். கற்றளிக்கோயில். கொங்குச் சோழர் காலத்தது. கொங்குச் சோழர் மற்றும் கொங்குப் பாண்டியர் கல்வெட்டுகள் இங்குள்ளன. கல்வெட்டுகள் இன்னும் பதிவாகவில்லை என்றே தோன்றுகிறது. நண்பர் சொன்ன குறிப்புகளின்படி, இக்கோயில் நீண்ட காலம் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உரிய பேணுதல் இன்றிச் சிதைவுற்றுள்ளது. வாரம் ஒரு முறை, இந்தப்பகுதியில் உள்ள வெஞ்சமாங்கூடல் கோயிலின் பூசையாளர் வந்து நடை திறந்து பூசை செய்துவிட்டுப் போகும் நிலை உள்ளது. மற்ற நேரங்களில் பூட்டப்பட்டுள்ளது. சிவலிங்கத்திருமேனியாக இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை, அர்த்தமண்டபம் ஆகியன எப்போதும் பூட்டப்பெற்றிருந்தாலும் கோயில் வளாகம் முற்றும் நாள் முழுதும் எவரும் வந்து போகும் வகையில் உரிய பாதுகாப்பின்றிக் கிடக்கின்றது.

மலைக்கோவில்  - சில தோற்றங்கள்



                 பிரநாளம்       


குன்றுமேட்டின் தொடக்கத்தில் ஒரு மரத்தடி மேடையில் பிள்ளையார் குடிகொண்டுள்ளார். குறட்டு வாசல் திண்ணையுடன் கூடிய நுழைவாயில் மண்டபத்தை அடையக் கற்களாலான படிகள். நுழைவாயிலைக் கடந்து உள் நுழைந்ததும் நந்தி மண்டபம். இந்த நந்தி மண்டபம் கோயிலின் தெற்குச் சுவரை நோக்கியமைந்துள்ளது. கோயிலினுள் நுழையவும் தெற்கு நோக்கிய வாசலே. பூட்டப்பெற்றிருந்தது. எனவே அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றைக் காண இயலவில்லை. அர்த்த மண்டபத்தின் கிழக்குப்பகுதிச் சுவரில் ஒரு கற்சாளரம் உள்ளது. சாளரம் வழியாகப் பார்த்தால், கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம், சற்று நேரம் இருளில் பழகிய கண்களுக்குப் புலப்படுகிறது. சாளரத்துக்கு எதிரே ஒரு நந்தி மண்டபத்தில் உள்ள நந்தி, சாளரம் வழியே சிவலிங்கத்திருமேனியைக் காணுமாறு அமைத்திருக்கிறார்கள். கருவறைச் சுவர்களில் தேவ கோட்டங்கள் உண்டு. அர்த்தமண்டபச் சுவர்களில் இல்லை. தேவ கோட்டங்களில் பிற்கால இணைப்பாகத் தென்முகக் கடவுள், அண்ணாமலையார்(இலிங்கோத்பவர்) ஆகிய சிற்பத் திருமேனிகள். கற்றளியின் அதிட்டானப் பகுதி, தரை மட்டத்தில் ஜகதி, முப்பட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சுவர்களின் அரைத்தூண்களில் சோழர் காலப் போதிகை அமைப்பு உள்ளது. அடுத்துள்ள கூரைப்பகுதியில், கூடுகளும், யாளி வரிசையும் காணப்படுகின்றன. கற்றளி அமைப்பைச் சுற்றிலும் செங்கற்களாலான சன்னதிகள். முருகன், பிள்ளையார், சண்டேசுவரர், கால வைரவர் ஆகியோர்க்கு. சண்டேசுவரர் சன்னதிக்கு எதிரே, கருவறையின் வடக்குப்பக்கத்தில், கருவறையின் தளத்திலிருந்து திருமஞ்சன நீர் வெளியேறப் பயன்படும் பிரநாளம் என்னும் உறுப்பு உள்ளது.

கல்வெட்டுகள்
அர்த்தமண்டபத்தின் நுழைவாயிலின் நிலைக்கால்கள் இரண்டிலும் இரு கல்வெட்டுகள், பிள்ளையார் சன்னதிச் சுவரில் ஒரு கல்வெட்டு, தூண் ஒன்றின் சதுரப்பகுதியில் ஒரு கல்வெட்டு, சாளரத்தின் கீழ் அதிட்டானத்துப் பட்டிகையில் ஒரு கல்வெட்டு, சண்டேசுவரர் சன்னதிக்கு எதிரே பிரநாளத்துக்கருகில் அதிட்டானத்துக் குமுதத்தில் ஒரு கல்வெட்டு என ஆறு கல்வெட்டுகள் இக்கோயிலில் கண்டறியப்பட்டன. கல்வெட்டுகள் பல இடங்களில் தேய்மானம் கொண்டுள்ளதால் முழுமையாகப் படிக்க இயலாவிடினும், நான்கு கல்வெட்டுகள், கல்வெட்டுகள் எந்த அரசர்கள் காலத்தில் வெட்டப்பட்டன என்னும்  பயனுள்ள செய்தியைத் தருகின்றன. மேலும், கல்வெட்டுகளின் காலத்தில் நடைமுறையில் இருந்த, கொங்கு மண்டலத்தின் நாட்டுப் பிரிவுகள் யாவை என்னும் செய்தியும் நமக்குக் கிட்டுகின்றது. கொங்குச்சோழனான வீரராசேந்திரனின் கல்வெட்டுகள் மூன்றும், கொங்குப்பாண்டியன் வீரபாண்டியனின் கல்வெட்டு ஒன்றும் ஆக நான்கு கல்வெட்டுகள் மேற்குறித்த செய்திகளைக் கூறுகின்றன.

கொங்குச் சோழன் வீரராசேந்திரன்
கொங்குச்சோழனான வீரராசேந்திரனின் ஆட்சிக்காலம் கி.பி. 1207-1256. இவன் தன் ஆட்சிக்காலத்தில், தென் கொங்கில் 1207 முதல் 1221 வரையிலும், பின்னர் வடகொங்கு, தென்கொங்கு ஆகிய இரு பகுதிகளையும் சேர்த்து 1256 வரையிலும் ஆட்சி செய்துள்ளான். நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்த அரசன் இவன் ஒருவனே. இக்கோயிலில் கிடைக்கும் இவ்னது கல்வெட்டுகள், இவனுடைய 14-ஆம் ஆட்சியாண்டில் ஒன்று, 18-ஆம் ஆட்சியாண்டில் இரண்டு என அமைகின்றன. 14-ஆம் ஆட்சியாண்டு, கி.பி. 1221 ஆகும். எனவே, கோயிலின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பதும், கோயில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதும் கல்வெட்டுச் சான்றுகளால் பெறப்படுகிறது.  

கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் கல்வெட்டு-1
பிள்ளையார் சன்னதிச் சுவரில் ஒற்றைக்கல்லில் வெட்டப்பட்ட கல்வெட்டு கி.பி. 1221-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இதன் பாடம் கீழ் வருமாறு:

1         ஸ்வஸ்தி சிரீ கோவிராச கெசரி ப
2         ந்மரான திரிபுவன சக்கரவத்திக
3         சிரீ வீரராசேந்திர தேவற்கு யாண்டு பதிநா
4         லாவது (வீர)சோழமண்டலத்து வெங்கால நாட்
5         டுப் பழநாகந் பள்ளி வெள்ளாழரில் அந்துவ
6         ரில் (பெவ)க்கந் வஞ்சிவேளா(னா)ன ...கோயிலில்
7         .....இ..............................


வீரராசேந்திரனின் கல்வெட்டு-பிள்ளையார் சன்னதிச் சுவர்

விளக்கம்:
கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் பதிநாலாவது ஆட்சியாண்டான கி.பி. 1221-இல் பழநாகந் பள்ளி என்னும் ஊரைச் சேர்ந்த அந்துவன் குலத்து வெள்ளாளரில் வஞ்சி வேளான் என்பவன் இக்கோயிலுக்கு ஒரு நிவந்தம் (கொடை) அளித்துள்ளான் என்பது கல்வெட்டுச் செய்தியாகும். சோழர்கள் காலத்தில் தமிழகம் மண்டலம், கோட்டம், நாடு ஆகிய நிருவாகப் பிரிவுகளைக் கொண்டிருந்தன. கரூர்ப் பகுதி வீரசோழ மண்டலம் என்னும் மண்டலப் பிரிவின்கீழ் இருந்துள்ளது. கொங்கு நாடு இருபத்து நான்கு நாட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் கரூர்ப் பகுதி வெங்கால நாட்டின்கீழ் அமைந்திருந்தது. கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் பழநாகன் பள்ளி என்னும் ஊர் தற்போது நாகம்பள்ளி என்னும் பெயரில் அமைந்துள்ளது. இக்கோயில் உள்ள பகுதி இன்றும் நாகம்பள்ளி ஒன்றியத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரலாற்றறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தம்முடைய “சமணமும் தமிழும்” நூலில் பழநாகந் பள்ளியைப் பற்றிக் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்:

"பழநாகப்பள்ளி:  கரூர் தாலூகா நாகம்பள்ளி கிராமத்தில் உள்ள மகாபலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ள சாசனம் திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவர் காலத்தில் எழுதப்பட்டது. இச்சாசனத்தில் பழநாகப்பள்ளிக் கோயிலுக்கு திருவிளக்குத் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இதில் குறிக்கப்பட்ட பழநாகப்பள்ளி என்பது சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை. இதனால் இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது.”
       
  கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் கல்வெட்டு-2
அர்த்தமண்டபத்து வாயிலின் நிலைக்கால்கள் இரண்டில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் முதலாவது கல்வெட்டு கி.பி. 1225-ஆம் ஆண்டைச் சேர்ந்தது.  இதன் பாடம் கீழ் வருமாறு:

1         (ஸ்வஸ்)தி ஸ்ரீ கோவி(ராச)
2         கேசரி பந்ம(ரான)
3         (திரி) புவந சக்(கரவத்தி)
4         (க)ள் ஸ்ரீ வீரரா(சேந்)
5         திர தேவற்கு யா(ண்)
6         டு பதிநெட்டா(வது)
7         (வீ)ர சோழ மண்(டலத்)
8         து வெங்கால..........
9         பழநாக(ந் பள்)ளி
10     (வே)ளாழந் ஆ(ந்தை)
11     (க)ளில்.............
12     (நான) புருஷ(மா)
13     (ணி)க்க(நேன்)
14     .....................வ..............
15     .............(ஆ)ளுடை(யாற்)
16     (கு) வச்ச சந்(தி)
17     (விளக்)கொந்(றுக்)
18     கு ஒடுக்கிந பொ(ன்)
19     ...............கழஞ்சு.....
20     கோயில் கா(ணி)
21     (உ)டைய சிவ
22     (பிராமண)ந் ....


   வீரராசேந்திரனின் கல்வெட்டு- நிலைக்கால்-1


விளக்கம்:
கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் பதினெட்டாவது ஆட்சியாண்டான கி.பி. 1225-இல் பழநாகந் பள்ளி என்னும் ஊரைச் சேர்ந்த (ஆந்தை) குலத்து வெள்ளாளரில் புருஷமாணிக்கன் என்பவன் இக்கோயிலுக்கு சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்காக கழஞ்சு என்னும் பொன் கொடையாக அளித்துள்ளான். இப்பொன்னைக் கோயிலில் பூசை செய்யும் உரிமை (கோயில் காணி) பெற்ற சிவப்பிராமணன் ஒருவன் பெற்றுக்கொண்டு மேற்படி சந்தி விளக்கு எரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறான் என்பது கல்வெட்டு தெரிவிக்கும் செய்தியாகும்.

கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் கல்வெட்டு-2
அர்த்தமண்டபத்து வாயிலின் நிலைக்கால் கல்வெட்டுகளில் இரண்டாவது கல்வெட்டும் கி.பி. 1225-ஆம் ஆண்டைச் சேர்ந்தது.  இதன் பாடம் கீழ் வருமாறு:

1         ஸ்வஸ்தி ஸ்ரீ (கோ)
2         விராசகே(சரி)
3         (ப)ந்மராந திரி(பு)
4         (வந) சக்கரவத்திகள்
5         (ஸ்ரீ)வீரராசேந்தி
6         (ர தேவ)ற்கு யாண்டு
7         (ப)திநெட்டா


    வீரராசேந்திரனின் கல்வெட்டு- நிலைக்கால்-2


விளக்கம்:
கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் பதினெட்டாவது ஆட்சியாண்டான கி.பி. 1225-இல் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கொடை பற்றிய செய்திகள் தெரியவில்லை. முதல் ஏழு வரிகளுக்குப் பின்னர் எழுத்துகள் தேய்ந்துள்ளதால் முழுச் செய்தியும் அறியக்கூடவில்லை.

கொங்குப்பாண்டியன் வீரபாண்டியனின் கல்வெட்டு
தூண் ஒன்றின் சதுரப்பகுதியில் ஒரு கல்வெட்டு இருப்பதாக முன்னர் குறிப்பிட்டோம். தென்முகக் கடவுளின் கோட்டச் சிற்பத்தின்கீழ் படிக்கட்டாகக் கிடத்தப்பட்டுள்ள ஒரு தூணின் இரண்டு சதுரப்பகுதிகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது கொங்குப் பாண்டியர்களில் வீரபாண்டியனின் கல்வெட்டாகும். கல்வெட்டில் இவனது ஆட்சியாண்டு குறிக்கப்பெற்ற பகுதியில் எழுத்துகள் தேய்ந்துள்ளதால் கல்வெட்டின் காலத்தைத் துல்லியமாகச் சொல்ல இயலவில்லை. வீரபாண்டியனின் ஆட்சிக்காலம் கி.பி. 1265-1285. எனவே, கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது பெறப்படுகிறது. இதன் பாடம் கீழ் வருமாறு:

முதல் சதுரப்பகுதி

1         கோப்பர
2         கேசரி பன்
3         மரான திரி
4         (பு)வனச் (சக்ர)
5         வத்திக
6         (ள்) ஸ்ரீ வீ(ர)
7         (பா)ண்டி(ய)
8         தேவற்கு
9         (யா)ண்டு...
10     ...வது வீ(ர)
11     சோழ ம
12     (ண்)டலத்

இரண்டாம் சதுரப்பகுதி -  மேற்படிக்கல்வெட்டின் தொடர்ச்சி.

13     து வெங்
14     கால நாட்
15     டு ...நாக
16     (ந்ப)ள்ளி

     வீரபாண்டியனின் கல்வெட்டு - தூண்


விளக்கம்:
அரசன் பெயர், வெங்கால நாட்டுப்பெயர், (பழ)நாகந்பள்ளி என்னும் ஊர்ப்பெயர் ஆகியவை மட்டுமே கல்வெட்டில் காணப்படுகின்றன. கொடை பற்றிய செய்திகள் அமைந்த பகுதியில் எழுத்துகள் முற்றிலும் தேய்ந்துவிட்டதால் செய்திகள் அறியப்படவில்லை.

புங்கம்பாடி - சிவன்கோயில்
மலைக்கோவிலைப் பார்த்துக் கல்வெட்டுகளையெல்லாம் ஒளிப்படம் எடுத்தபின்னர் நாங்கள் சென்ற இடம் புங்கம்பாடி. புங்கம்பாடி செல்லும் வழியில் கொளிஞ்சிவாடி என்னும் சிற்றூர்ப் பகுதியில் தொல்லியல் சின்னங்களுள் ஒன்றான நெடுங்கல் (MENHIR)  ஒன்றைக்கண்டோம். மிகவும் உயரமானதொன்றல்ல. அடுத்து, புங்கம்பாடியில் இருக்கும் பழமையான சிவன் கோயிலைப் பார்வையிட்டோம். கோயில் பழமையான தோற்றத்தைக் கொண்டிருந்தது. கோயிலின் பெரிய வளாகத்தை உள்ளடக்கி நெடிதுயர்ந்த ஒரு சுற்றுமதில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் கட்டுமானம் பழமையை எடுத்துக்காட்டிற்று. மதிற்சுவரின் அடித்தளத்தில் மூன்று வரிசை கல்கட்டுமானம். அதனை அடுத்துச் செங்கல் கட்டுமானம். காரைப்பூச்சு ஏதுமின்றி செங்கல் மட்டுமே தோற்றமளித்தது. செங்கல் கட்டுமானத்தில் காணப்பட்ட நேர்த்தியும் தோற்றப் பொலிவும் குறிப்பிடத்தக்கவை. சுவரின் உச்சியில் செங்கற்கள் கலையழகுடன் வடிவமைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும், இது போன்ற சுற்றுமதிலைக் கூத்தம்பூண்டி பாண்டியர்காலக் கோயிலில் கண்டது நினைவுக்கு வந்தது. நுழைவாயிலில் தூண்களோடு கூடிய குறட்டு வாசல் அமைப்பு  இரு புறமும் திண்ணையோடு - உள்ளது. அதன் இருபுறமும் இரு சன்னதிகள், சூரிய சந்திரர்க்கு.

      புங்கம்பாடி - சிவன்கோயில் - சில தோற்றங்கள்



       கோயில் மதிற்சுவரின் அழகிய தோற்றங்கள்







குறட்டு வாசலையடுத்து நந்தி மண்டபம். அதனையடுத்து முன்மண்டபம். முன்மண்டபத்தின் உட்பகுதியில் உள்ள கற்றூண்களில், இக்கோயிலின் உருவாக்கத்துக்குத் துணை நின்ற பாளையக்காரத் தலைவர்கள் அல்லது ஜமீந்தார்களது உருவச் சிலைகள் காணப்படுகின்றன. சிற்பங்களில் தலைப்பாகையும், தலையின் ஒரு பக்கமாகச் சரிந்த கொண்டை முடியும், காதணிகளோடு கூடிய நீண்ட  செவிகளும்,  பெரிய மீசையும், கழுத்தணிகளும், இடையில் குறு வாளும் என அமைந்த தோற்றம் நாயக்கர் காலச் சிற்பக்கலையின் தொடர்ச்சியைக் காட்டுவனவாக உள்ளன.

கோயிலின் கருவறை விமானம், ஒரு தள விமானம் ஆகும். நாகரம் என்னும் சதுர அமைப்பைக்கொண்ட விமானம். முறையான பேணுதல் இன்றி கருவறையின் மேற்கூரை, விமானத்தின் செங்கற்தளம் ஆகியவை சிதைவுற்றுள்ளன. கூரைப் பகுதிகளில் செடிகள் முளைத்துள்ளன. முன்மண்டபத்தின் தென்பகுதிச் சுவர்ப்பகுதியில், முற்றாகக் கற்கள் கட்டுமானத்திலிருந்து கழன்று விழுந்துவிட்டிருக்கின்றன. கற்கள் விழுந்த நிலை, சுவர்கள் எவ்வாறு உறுதியாக எழுப்பப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. சுவரின் உட்புறமும், வெளிப்புறமும் உறுதியான கற்கள் நடுவில் இடைவெளி விட்டு அடுக்கப்படுகின்றன. இடைவெளியில் சிறு சிறு கற்களும் சுண்ணாம்புக் காரையும் கலந்து இருபுறக் கற்களையும் பிணைக்கின்றன. இயல்பாகக் கரடு முரடாக இருக்கும் கற்கள், நம் பார்வை படும் பரப்பில் நன்கு செதுக்கப்பட்டும் இழைக்கப்பட்டும் சமனாக்கப்படுகின்றன.

கல்வெட்டுகள்
கோயிலில் இரு கல்வெட்டுகள் உள்ளன. முன்மண்டப வாயிலின் இடப்பக்கம் சுவரில் ஒரு கல்வெட்டு. மற்றொன்று மடப்பள்ளிச் சுவரில். முன்மண்டபச் சுவர்க் கல்வெட்டு கி.பி. 1702-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. மடப்பள்ளிச் சுவர்க் கல்வெட்டு மிகவும் அணமைக் காலத்தது. கல்வெட்டில் காலக்குறிப்பேதுமில்லை. கோயில் முந்நூறாண்டுப் பழமை கொண்டது என்பதை மேற்படிக் கல்வெட்டுச் சான்றால் அறிகிறோம்.

முன்மண்டபச் சுவர்க் கல்வெட்டு

1         ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாத்தம் வரு. 1624 கலியுக சகார்த்தம் வரு.
2         4803 ...கு செல்லாநின்(ற) சித்திரபானு வரு. ஆனி மாசம் 13 தேதி சுக்கிறவார(த்)தில்
3         த்ரயோதெசி ரோகிணி ..(இ) சூல நாம யோகம் ......
4         ................இப்படீபட்ட சுபதினத்தில்

          முன்மண்டபச் சுவர்க் கல்வெட்டு

 விளக்கம்:
கல்வெட்டில் காலக்குறிப்பு உள்ளது. சாலிவாகன ஆண்டு 1624, கலியுக  ஆண்டு 4803 ஆகியன குறிக்கப்பெறுகின்றன. இரு ஆண்டுக்கணக்குகளும் கி.பி. 1702-ஆம் ஆண்டைச் சரியாகச் சுட்டுகின்றன. இந்த ஆண்டில் கோயில் திருப்பணி நடைபெற்றதாகக் கருதலாம். அறுபது ஆண்டுகள் கொண்ட வட்டத்தில் வருகின்ற தமிழ் ஆண்டான சித்திரபானு ஆண்டும் கி.பி. 1702-உடன் பொருந்துகிறது. மாதம் (ஆனி), கிழமை (சுக்கிறவாரம்), திதி (திரயோதசி), நட்சத்திரம் (ரோகிணி), யோகம் (சூலம்) ஆகிய பஞ்சாங்கக் குறிப்புகள் இக்கல்வெட்டில் தரப்பட்டுள்ளன. கரணம் என்னும் குறிப்பு மட்டும் இல்லை.

மடப்பள்ளிச் சுவர்க் கல்வெட்டு

1         தடவை கோயில் காணியாளனாகிய
2         ஆண்டியப்ப பிள்ளை குமாரன்
3         குமாரசுவாமி பிள்ளையவர்கள்
4         மீனாட்சி சுந்தரேசுபரர்
5         சன்னதி கட்டிவிச்ச
6                   உபயம்

                           மடப்பள்ளிச் சுவர்க் கல்வெட்டு


விளக்கம்:
கல்வெட்டு மிகவும் அண்மைக்காலத்தது என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். காலக் குறிப்புகள் கல்வெட்டில் இல்லை. கோயிலின் திருப்பணியாக மீனாட்சி சுந்தரேசுவரரின் சன்னதியைக் கட்டுவித்த செய்தியைக் கல்வெட்டு கூறுகிறது. திருப்பணி செய்தவர், மன்னர் காலத்தில் கோயிற்காணி உரிமை பெற்ற ஒருவரின் குடி வழியினர் என்பதைத் “தடவை கோயில் காணியாளனாகியஎன்னும் தொடர் குறிக்கிறது. அவர் தற்போது “தடா கோயில்  என்று அழைக்கப்பெறும் ஊரினர். “தடா கோயில்  என்று தற்போது அழைக்கப்பெறும் ஊர், பண்டைய நாள்களில் தடவை கோயில் என்னும் பெயரால் வழங்கிற்று என்பதை இக்கல்வெட்டால் அறிகிறோம்.

குடகனாற்றுப் பாறைக்கல்வெட்டுகள்
புங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் கோயிலைப் பார்த்துவிட்டு, அடுத்து நாங்கள் சென்ற இடம் குடகனாற்றுப் பாலம். புங்கம்பாடி ஆத்துமேடு-மேல்கரை என்று மக்கள் குறிப்பிடும் அந்த இடத்தில் பாலத்தடியில், பாறைப்பரப்பில் இரு கல்வெட்டுகளை நண்பர் கண்டறிந்து வைத்துள்ளார். தொல்லியல் தடயங்களைத் தேடும் ஆர்வமும் அறிவும் உடையவர்கள் மட்டுமே இவை போன்ற கல்வெட்டுகளை இனம் காண முடியும். புதிய கண்டுபிடிப்புகள் தருகின்ற மகிழ்ச்சி இந்தப் பாறைக்கல்வெட்டுகளைக் கண்டபோதும் எழுந்தது. இரு கல்வெட்டுகளில் ஒன்று அரபு எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்தது. வேற்று மொழிக் கல்வெட்டுகள் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று. மற்ற கல்வெட்டு தமிழ்க்கல்வெட்டு. தமிழ்க்கல்வெட்டின் எழுத்துகள் நேர்த்தியாகப் பொறிக்கப்படவில்லை. எழுத்துகளும் பல காரணங்களால் தேய்ந்துவிட்டன. எனவே, தமிழ்க்கல்வெட்டு சுட்டும் செய்திகள் தெரியவில்லை.


பத்தாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு
பயணத்தின் இறுதியாக நாங்கள் சென்று பார்த்தது மொட்டை ஆண்டவர் திருக்கோவில். அரவக்குறிச்சி வட்டத்தில் கணக்குவேலம்பட்டி என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள இடம் ஒரு சிறிய கரட்டுக் குன்று இருக்குமிடம் ஆகும்.  சிறு குன்றுப்பாதையில் சற்றே மேலே ஏறிச் சென்றால் சமதளமாகக் காணப்படும் பெரிய பாறைப்பரப்பு. ஓரிடத்தில் பசிய இலைகள் படர்ந்து நிற்கும் சுனை நீர்ப்பள்ளம். மற்றோரிடத்திலும் சிறிய சுனை ஒன்று. பாறைப்பரப்பைக் கடந்து சற்று மேலே சென்றால், பெரிய குன்றுப்பாறையின் கீழ் சிறிய குகைத் தளம். சமணத்துறவிகள் தங்கியிருக்கும் படுக்கையும் காணப்படுகிறது. குகைத் தளத்துள் நீர் புகுந்துவிடாமல் பாறையின்மீது மழைநீர் வடிந்து வெளியேறக் கல்லில் விளிம்பு வெட்டியிருக்கிறார்கள். குகை அமைப்பு மிகச் சிறிது. மற்ற இடங்களில் இருப்பதுபோல், பாறையே கூரையாக மடிந்து காணப்படும் சூழல் இங்கு இல்லை. இதுபோன்ற இடங்களில், கூரை போன்ற செயற்கை அமைப்பு உருவாக்கப்படும். அதற்கேற்றவாறு, பாறையில் குழிகளை அமைப்பது வழக்கம். பாறையில் அத்தகைய குழிகள் காணப்படுகின்றன.



        சுனை நீர்ப்பள்ளம்


குகைத்தளத்திலிருந்து  திரும்பும் வழியில் பாறைச் சமதளத்தில் தாம் கண்டுபிடித்த வட்டெழுத்துக் கல்வெட்டினைத் தேடிக்கொண்டிருந்தார் நண்பர். செந்நிறம் கொண்ட பாறை முழுதும் வரிவரியாக ஓவியம் போல, எங்கு பார்த்தாலும் எழுத்துப்போலவே தோற்றமளித்து நம்மை மயங்கவைத்தது. முடிவில் கல்வெட்டு இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது. நிறைய எழுத்துகள் இருந்திருக்க வேண்டும். ஆனால், ஆறு எழுத்துகள் கொண்ட ஒரு வரியும் அதன்கீழ் ஒன்றன்கீழ் ஒன்றாக இரண்டு எழுத்துகளுமே தற்போது காணப்படுகின்றன. கல்வெட்டு அறிஞர் திரு.பூங்குன்றன் அவர்களிடம் இக்கல்வெட்டின் படத்தைக் காண்பித்துக் கருத்துக் கேட்டபோது, இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டாகும் எனக் கூறினார். கல்வெட்டின் பாடத்தைப் படிப்பது இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது.

               வட்டெழுத்துக் கல்வெட்டு



முடிவுரை 
அரவக்குறிச்சிப் பகுதியில் இதுவரை வெளிப்படாத தொல்லியல் தடயங்களான, மலைக்கோயில் சிவன்கோயில் கல்வெட்டுகள், நடுகல், புங்கம்பாடிச் சிவன் கோயில் கல்வெட்டு, குடகனாற்றுப் பாறை அரபுக் கல்வெட்டு, சமணக் குகைத்தளம், ஆதிநாதர் சிற்பம், வட்டெழுத்துக் கல்வெட்டு ஆகியவற்றைக் கண்டு அவை பற்றிய பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து பகிர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பு மிகுந்த மகிழ்வையும் நிறைவையும் அளித்த்து. தொல்லியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடும், பாராட்டுக்குரிய வரலாற்று ஆர்வலர் சுகுமாரன் பூமாலை போன்ற இளைஞர்கள் நிறைய முன்வரவேண்டும்.



நன்றி . 
துணை நின்றவர்:
திரு. இராமச்சந்திரன், தொல்லியல் துறை (பணி நிறைவு), சென்னை.

தொல்லியல் தேடலுக்கு மூலமாய் நின்றவர்:
திரு. சுகுமார் பூமாலை.

___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.comகல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.













"கல்வெட்டில்" அரசியல்



——   தேமொழி 



    தமிழக வரலாற்றை ஆய்வு செய்தவரும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவராகவும் இருந்த மறைந்த ஜப்பானியத் தமிழறிஞர் நொபோரு கரஷிமா தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுமுறையை  அறிந்துகொள்ளும் செய்திச் சுரங்கமாகவே தமிழகம் தந்த கல்வெட்டுச் செய்திகளைக் கருதினார்.     சமூகம் எப்படி இயங்கியது, எப்படி மாறியது என்பது தெரியாமல் ஒரு நாட்டின் அரசியல் வரலாற்றையும் ஆட்சி வரலாற்றையும் புரிந்துகொள்ள முடியாது என்னும் கொள்கையுடன்  கல்வெட்டுச் செய்திகளை ஆய்வுக்குப் பயன்படுத்தி இடைக்காலச் சோழ சமூகத்தைப் பற்றிய ஆய்வுகள் செய்தவர் நொபோரு கரஷிமா. அவர் தமிழ் ஆய்வில் இக்கால அரசியல் தாக்கம் செலுத்துவதை விரும்பாதவராகவும் இருந்தார்.  கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்து நாளிதழுக்கு அளித்த செவ்வி ஒன்றில்  'கல்வெட்டியல் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ளவிட்டால், இந்த நாட்டின் பண்டைய அல்லது இடைக்கால வரலாற்றை ஆய்வு செய்ய முடியாது' என்று கவலையுடன் எச்சரித்தார்.

    தமிழகத்துடன், தமிழக பல்கலைக்கழக ஆய்வுகளுடனும் 1960கள் முதற்கொண்டு அவர் தொடர்பு கொண்டிருந்த கடந்த ஐம்பது ஆண்டுகளில், பல்கலைக்கழக கல்வெட்டியல், தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதாக அவர் கருதினார்.  அத்துடன் மத்திய அரசின் தொல்லியல் துறையான ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியா (ASI) நிறுவனத்தின்  தலைவர் தொல்லியல் ஆய்வுப் பின்புலம் கொண்ட வல்லுநர் என்று இருந்த நிலைமை மாறியதும், அக்கறையற்ற நிலையில், இடையில் பல ஆண்டுகள் தொல்லியல் பின்புலம் இல்லாத ஐ.ஏ.எஸ். பட்டம் பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர்கள் வழிநடத்தலில் துறையை   ஒப்படைத்த நிலையும் பின்னடைவுக்குக்  காரணம் என்பது அவரது கருத்து. 

    அவ்வாறே, தமிழகத்தில் உள்ள  தொல்லியல் துறையின் கிளையலுவலக நிலையும் உள்ளது. தொல்லியல் துறைசாரா இந்திய ஆட்சிப் பணியாளர்கள் மேலாண்மையின் கீழ் கவனிப்பாரன்றி, தேவைக்கு ஏற்றவாறு புதிய தொல்லியல் துறை ஆய்வாளர்களையும் பணிக்கு அமர்த்தாத செயல்களே பின்னடைவுக்குக் காரணம்.  ஊட்டியில் 1962 இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை அலுவலகம் இருந்த காலத்தில் நான் கண்ட  சிறப்பான நிலை இன்று இல்லை.  சிறந்த முறையில்  இத்துறைகளை மாற்றி அமைக்காவிட்டால் தொல்லியல் கல்வெட்டியல் ஆகியவற்றின் வாயிலாக பண்டைய இடைக்கால இந்திய வரலாற்றை அறிய முடியாத நிலை ஏற்படும் என்றக் கவலையையும் அவர் வெளிப்படுத்தினார்.

    தமிழ்பல்கலைக் கழகம் சமீபத்தில்  மைசூர்  ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியாவுடன் இணைந்து சில எண்ணிம வடிவமாக்கும் பணியில் ஈடுபட்டதும், காலியிடங்களில் புதிய பணியாளர்கள் சிலரை நியமித்தும்  நிலைமை மாறும் என்று கொஞ்சம் நம்பிக்கை கொள்ள வைக்கிறது என்றும் கூறினார். அத்துடன், நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இந்தியா தனது வரலாற்றுக் கருவூலங்களை இழக்கும் என்று அச்சப்படுகிறேன்.  அந்த நிலைக்குச் சென்றுவிட்டால் வரலாற்றுச் சான்றுகள் உதவியின்றி எண்ணங்கள், கருத்துக்கள் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்திய வரலாற்றைக் கட்டமைக்க நேரும். இது மிகவும் கவலை கொள்ள வேண்டிய ஒரு நிலை என்றும் கூறினார்.

    தமிழ்க் கல்வெட்டுகளின் மதிப்பைத் தமிழர்களைவிட, இந்தியர்களைவிட வெளிநாட்டவர்களே உணர்ந்து அக்கறையுடன் பாதுகாக்கும் எண்ணம் கொண்டிருப்பது தெரிகிறது. முதன்முதலில் தொல்லியல் துறை இந்தியாவில் துவங்கப்பட்டதும் ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட பொழுதுதான், 1860-ம் ஆண்டு 'ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியா' என்ற இந்திய தொல்பொருள் ஆய்வகத் துறையை அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் உருவாக்கினார். பிறகு ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியாவின் கல்வெட்டியல் பிரிவு 1886 இல் துவங்கப்பட்டு 150 ஆண்டுகள் கடந்துவிட்டன, சுமார் 73,000  கல்வெட்டுச் செய்திகள் படிக்கப்பட்டு இந்திய வரலாறு அறியப்பட்டுள்ளது. ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியாவின் தென்னிந்தியப் பிரிவு திராவிடமொழி கல்வெட்டுகள் மற்றும் சமஸ்கிரத கல்வெட்டுகளுக்கான பொறுப்பையும்; நாக்பூரில் இருக்கும் வடஇந்தியப் பிரிவு பாரசீக அரேபிய கல்வெட்டுகளிலும் கவனம் செலுத்தி வருகின்றன. முதலில் பெங்களூரில் துவக்கப்பட்ட கல்வெட்டியல் அலுவலகம் ஊட்டிக்கு மாற்றப்பட்டு 1903 ஆண்டில் இருந்து  1966 ஆண்டுவரை 63 ஆண்டுகள் ஊட்டியில் இயங்கியது.  பிறகு அங்குப் பணிபுரிந்த  கர்நாடகாவைச் சேர்ந்த தலைமை அதிகாரி  எடுத்த முடிவின் காரணமாக  தலைமையகம் மைசூருக்கு  மாற்றப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. பின்னர் லக்னோவிலும் சென்னையிலும் கல்வெட்டியல்  துறையின் கிளை அலுவலகங்களும் துவக்கப்பட்டன. 

    நொபோரு கரஷிமாவின் நேர்காணலுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து, இந்து நாளிதழில் வெளியான கல்வெட்டியல் துறையின் மேலாளர் டி ஆர். ரவிசங்கர் அவர்களின் நேர்காணலில் அவரும் நம்பிக்கையூட்டும் விதமான செய்திகளை முன்வைக்கவில்லை.  இன்றைய சமூகத்தில் அதிக ஊதியம் தரும் பணிகளை விரும்பிச் செல்லும் இக்காலத்  தலைமுறையினர் தொல்லியல், வரலாறு, கல்வெட்டியல் கல்வியில் ஆர்வமற்றவராக இருப்பது கல்வெட்டியலின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளதாகக் கூறியுள்ளார்.    மேலும்  அரசு தக்க நடவடிக்கை எடுத்துப் பாதுகாக்காவிட்டால்  இப்பொழுது உள்ள பெரும்பாலான கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுவிடும்  ஆபத்தும் உள்ளதாகவும் கூறியுள்ளார். தொல்லியல் தடயங்களின் அருமை அறியாது வணிக நோக்கில் மக்கள் அவற்றைச் சீரழிக்கும் நடைமுறை அதிகரிக்கிறது என்றும், இருப்பவை அழியுமுன்னர் இவற்றைப் பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டியத் தேவையுள்ளதாகக் குறிப்பிட்டார். வரலாற்று மரபு வளங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், பரவலாகப் பள்ளி கல்லூரி மாணவர் வரை கல்வெட்டியல் கல்வியைக்  கொண்டு செல்லவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும் அவர் கோணமாக இருந்தது. ஊதியம் அதிகம் கிடைக்கக்கூடிய தொழில்நுட்பக் கல்விக்கே மாணவர்கள் முன்னுரிமை அளிக்கும் பொழுது கல்வெட்டியல் கல்வி புறக்கணிக்கப்பட்டுவிடுகிறது என்பதும் அவர் கருத்து.

    இவ்வாறு தொல்லியல் துறையில் தகுதியுள்ளோர்களை பணிக்கு அமர்த்தாமல் பல காலியிடங்கள் உள்ளன, தக்கோர் தலைமையில் துறை வழிநடத்தப் படவில்லை என்று அயல்நாட்டுத் தமிழறிஞர் ஒருபுறமும்; பணிக்குத் தகுந்த கல்வெட்டியல் திறமையாளர்கள் கிடைக்கவில்லை, மக்கள் வணிக நோக்கில் தொல்லியல் சான்றுகளை அழிக்கிறார்கள் என்று தொல்லியல் துறை கல்வெட்டியல் தலைமை அதிகாரி காரணங்களை அடுக்கும் செய்திகள் வெளியாவது வரலாற்று ஆர்வலர்களுக்கு கவலையளித்து வருவது ஒரு கோணம் மட்டுமே.

    இவ்வகையில் தொல்லியல் ஆய்வு காணும்  முடக்கம் தரும் கவலையையும்  மிஞ்சிவிடுவது,  அழிந்து வரும் கல்வெட்டு படிகளின் நிலை பற்றியும், மொழி அரசியல் காரணமாக கல்வெட்டுப் படிகளின் மறைவது குறித்து தமிழக பத்திரிகைகள் பன்னிரு ஆண்டுகளாகச் செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கும் அதிர்ச்சி தரும் மற்றொரு கோணம். 

    ''கடந்த நூறாண்டுகளாகக் கண்டு பிடிக்கப்பட்டு வரும் கல்வெட்டுக்கள், படித்துப் பார்க்கப்பட்டு, அவற்றில் உள்ள விஷயங்கள் நூல்களாக வெளியிடப்படவில்லை. படி எடுக்கப்பட்ட காகிதங்களும் சரியான பராமரிப்பின்றி அழிந்து கொண்டிருக்கின்றன'' என்று வரலாற்றாய்வாளர்களின் குமுறல்களை ஜூனியர் விகடன் இதழின்  2006 ஆண்டு வெளியான கட்டுரை ஒன்று  குறிப்பிடுகிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப்பேராசிரியர் டாக்டர் எஸ்.சாந்தினி பீ அவர்கள் அவர்கள்  சேகரிக்கப்பட்டுள்ள கல்வெட்டுப் படிகளில் பெரும்பான்மையும் தமிழ்க்கல்வெட்டுச் செய்திகளே என்பதால் இதில் தமிழர்கள் அதிக அக்கறை கொள்ளவேண்டியத் தேவையிருக்கிறது. கண்டுபிடிக்கப்பட்டுப் படியெடுக்கப்பட  கல்வெட்டுகள் மைசூர்  தலைமையகத்தில்  கடந்த நூறு ஆண்டுகளாகத் தக்க முறையில் பராமரிக்கப் படாமல் இருக்கின்றன என்று கவலை தெரிவித்தார்.

    கல்வெட்டுகளின் பராமரிப்பு செலவு அதிகரிப்பதாலும், கல்வெட்டுகளில் 60% தமிழ் என்பதால் மாற்றான் தாய் மனப்பான்மையோடுதான் இந்திய தொல்பொருள் ஆய்வகம் நடந்து கொள்கிறது. தமிழின்  60,000 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் 10,000 கல்வெட்டுகள் மட்டுமே 22 தொகுதிகளாக வெளியாகியுள்ளன. இவ்வாறு தொகுதிகளாக வெளியானவை  யாவும் ஆங்கிலேயர் ஆட்சியில் (1907 வரை) கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள்.  தற்கால மொழி அரசியல், நதிநீர் அரசியலில் தாக்கங்களில் வரலாற்று ஆய்வாளர்களுக்கு மைசூர் அலுவலகத்தில் ஆய்வுக்கு ஒத்துழைப்பு கிடைக்கப்படுவதில்லை, இந்த நிலை மாற்றப்பட நடவடிக்கை தேவை என்கிறார்  டாக்டர் எஸ்.சாந்தினி பீ.

    நூலாகத் தொகுத்து அச்சிட அனுப்பப்படுவதும் கவனிப்பாரற்று அங்கேயே தேங்கிவிடுகிறது, பிழை சீர் பார்க்கவும் ஆளில்லை.  துவக்கப்பட்ட சென்னை கிளை அலுவலகத்திலும் படிகளைப் படிக்கவும் ஆள் பற்றாக்குறை.  இருப்பவர்களுக்கும் பணியில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பதவி உயர்வும் கொடுக்கப்படாத நிலை.  கல்வெட்டியல் ஆய்வகத் துறையையே தொல்லியல் துறையில் இருந்து  தனியாகப் பிரித்து விடும் திட்டத்தில் கல்வெட்டியல் துறையில் காலியான இடங்கள்  நிரப்பப்படவில்லை, இவை அனைத்திற்கும் காரணம் தமிழ்க் கல்வெட்டுகள் அதிகம் என்பதும், தென்னிந்திய வரலாற்றுக்கு  முக்கியத்துவம் கிடைக்கக்கூடாது என்ற குறுகிய எண்ணமும்தான் காரணம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத தொல்லியல் துறையைச் சார்ந்த  தென்னிந்திய  உயர் அதிகாரி  ஒருவர் ஜூனியர் விகடனில் குறிப்பிட்டுள்ளார். 

    இச்செய்தி வெளியானவுடன் ஆட்சியில் இருந்த தமிழக முதல்வர் கருணாநிதி ஊட்டியில் இருந்து  மைசூருக்கு மாற்றப்பட்டுவிட்ட தென்னிந்திய கல்வெட்டியல் தலைமையகத்தை மீண்டும் தமிழகத்திற்கே மாற்றவும், சென்னையில் உள்ள கிளை அலுவலகத்தை ஆய்வு நிறுவனம் என்ற நிலைக்கு உயர்த்தவும் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுக்குக்  கடிதம் எழுதினர். அன்றைய  மத்திய அரசின்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துறையின் மத்திய அமைச்சராக இருந்த அம்பிகா சோனியும் மைசூர் தலைமை அலுவலகத்திற்குத் தமிழகம் கோரிய மாற்றம் குறித்து பரிந்துரை அனுப்பியுள்ளார்கள். இதை மைசூர் தலைமை அலுவலகம் தட்டிக் கழித்துவிட்டார்கள்.  ஊட்டியின் தலைமை அலுவலகத்தில் கடைசி யாகப் பணியாற்றிய கர்நாடகாவைச் சேர்ந்த  அதன் உயர் அதிகாரி,  தம்முடைய வசதிக்காக அலுவலகத்தை ஊட்டியிலிருந்து மைசூருக்குக் கொண்டு சென்று விட முடிந்தது.  ஆனால், மாநில மத்திய அரசுகளால் செய்ய இயலவில்லை என்பதை எந்த வகையில் சேர்ப்பது என்பதும் வியப்பாக இருக்கிறது.

    மைசூர் அலுவலகத்தில் இருக்கும் கல்வெட்டுப்படிகளை தொகுக்க விரும்பிய தமிழக அரசு அதற்காக சில லட்சங்கள் நிதியை தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வகத்திற்கு (Tamilnadu State Dept of Archaeology -TNSDA) ஒதுக்கி மைசூர் அலுவலகத்திற்கு உதவ உத்திரவிட்டது. இந்த முயற்சியின் விளைவால் ஓராண்டு கல்வெட்டுகள் தொகுக்கப்பட்டன, ஆனால் இவ்வாறு தொகுத்துக் கொடுத்ததை அச்சில் கொண்டுவர ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியாவிற்கு ஐந்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

    அடுத்த கட்டமாக ஏற்கனவே படி எடுக்கப்பட்ட சுமார் 50,000 தமிழ் கல்வெட்டுகளை எண்ணிம வடிவில் மாற்ற (Digitalistion) தமிழக அரசு எடுத்த முயற்சியைத் தட்டிக் கழிக்க முடியாமல், தமிழகத்தின் தஞ்சைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மைசூர் கல்வெட்டியல் தலைமையகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட ஓராண்டு காலத்தில் கிழிந்துபோன படிகளையே எட்டு மாதத்திற்கு மைசூர் தலைமையகம் ஒட்டி ஒட்டி  சீர் செய்து கொண்டிருந்தது. அதனால், தமிழக அரசு ஒதுக்கிய 25 லட்சத்தில் ரூபாய் 22 லட்சங்களைப் பயன்படுத்த முடியாமல்  தமிழ் பல்கலைக்கழகம் அரசுக்கே திருப்பி அளித்தது என்று டாக்டர்.எஸ்.சாந்தினி பீ  குறிப்பிட்டுளார்.  ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, விரைவில் செயல்படாத நிலைக்கு ஆள் பற்றாக்குறையே காரணம் என்று மைசூர் தலைமையகத்தின் அதிகாரிகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்  மீது குற்றம் சாட்டுகிறார்கள். அத்துடன் திறமையானவர்கள் இல்லாமல் போனதால் பணியில் ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு மிக மெதுவாகப் பணி தொடர்வதால் பல காலம் ஆவதாகவும், இந்தநிலைக்கு மத்திய அரசே பொறுப்பு எனவும் மத்திய அரசையும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.  இப்பொழுது எண்ணிமப் படுத்தும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    மைசூர் தலைமையகத்தில்  மட்டுமல்ல, கிளை அலுவலகமான சென்னை தொல்லியல் ஆய்வகத்திலும் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பல கல்வெட்டியலாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ASI மற்றும் TNSDA சார்பில் ஒரு வருட பி.ஜி டிப்ளமா பயிற்சி பெற்று தயாராகும் கல்வெட்டியல் மாணவர்களுக்கு  உரியக் காலத்தில் கல்வெட்டியலாளர் பணி கிடைக்காத பொழுது அவர்களும்  வேறுபணிகளுக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

    மார்ச், 2008 ல் மைசூர் தலைமை அலுவலகம் வேறொரு  புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது அங்குப் படி எடுக்கப்பட்டு வைத்திருந்த பல நூறு தமிழ் கல்வெட்டுகள்  பதிப்பிக்கப்படாமலே அழிந்து போய் விட்டதாகக் கூறப்பட்டது. கர்நாடகா அலுவலகத்தில் இவ்வாறு அழிந்து போகும் தமிழ்க் கல்வெட்டுகளுக்கு மொழி அரசியல்தான்  அடிப்படைக் காரணம்  என்பதைச் சராசரி மக்கள் கூறுவதில்லை,  கல்வெட்டு ஆய்வாளர் நெல்லை நெடுமாறன், டாக்டர்.எஸ்.சாந்தினி பீ போன்ற அத்துறையின் வல்லுநர்கள்தான் வருத்தத்துடன் கூறுகிறார்கள். காழ்ப்புணர்வால் தமிழ்க் கல்வெட்டுகள் பராமரிப்பின்றி ஆவணப்படுத்தப்படாமல் போவது கேரளாவிலும் நிகழ்கிறது. அங்குக் கிடைக்கும் தமிழ்க் கல்வெட்டுகளைக் கேரள அரசும் பதிப்பிப்பதில்லை தொல்லியல் துறைவசமும் ஒப்படைப்பதில்லை என்று கல்வெட்டு ஆய்வாளர் நெல்லை நெடுமாறன் சுட்டிக் காட்டியுள்ளார்.

    இதுநாள்வரை சேகரித்துவைக்கப்பட்ட 75 ஆயிரத்துக்கும் மேலான தமிழ்க் கல்வெட்டுகளின் படிவங்களையும் , பாதுகாக்கவும் பராமரிக்கவும் தமிழ் தெரிந்த தொல்லியல் அறிஞர்களைப் பணியில் அமர்த்தாத நிலையில், அவை  தமிழ்ப்பண்பாட்டின் மீது வெறுப்பும்  மொழிவெறியும் கொண்ட தொல்லியல் துறை அலுவலர்களால் அழிக்கப்படுவதாகவும், ஆய்வாளர்கள் ஆய்வுக்காக படிகளைக் கேட்கும்பொழுது அனுமதி மறுக்கப்படுவதுடன் பல காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுவதாகவும் மீண்டும் செய்திகள் தொடர்ந்து சமீபகாலம் வரை  வெளியாகி வருகின்றன.  இருப்பவை அழியும் முன்னர் அவற்றை அச்சில் கொண்டுவரவும் எண்ணிம வடிவிலும் பாதுகாக்கும் அவசியத்தை ஆய்வாளர்கள் அரசிடம் முன்வைத்தும் வருகிறார்கள்.

    தமிழ் மொழிக் கல்வெட்டுகளைத் தவிர பிறமொழி கல்வெட்டுகள் அச்சிலேறும் பணி விரைவாக நடப்பதாகவும் அப்பணி வரும் பத்தாண்டுகளில் முடிந்துவிடலாம் என்று கணிக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ்க்கல்வெட்டுகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகத்தான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.




கட்டுரைக்குத் துணைநின்றவை:
1) Archaeological Survey of India, Government of India - Epigraphy Branch; http://asi.nic.in/asi_epigraphical_sans_epibranch.asp


2) ஜப்பானியத் தமிழறிஞர் நொபோரு கரஷிமா காலமானார், டாக்டர் இ. அண்ணாமலை, 26 நவம்பர் 2015, பிபிசி செய்தி நிறுவனம்; http://www.bbc.com/tamil/global/2015/11/151126_noburuobit

3) ‘காவிரியும் போச்சு... கல்வெட்டும் போச்சு?’, 18/06/2006, ஜூனியர் விகடன்; https://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=78555

4) தமிழ் கல்வெட்டுகளை அழிக்கும் கர்நாடகா... கண்டு கொள்ளாத தமிழகம்! ஆர். ஷஃபி முன்னா, விகடன், 02/05/2013; https://www.vikatan.com/news/coverstory/14440.html

5) மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள் வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி, பிப் 04, 2018, தினமலர்; http://www.dinamalar.com/news_detail.asp?id=1951851

6) ‘Unless knowledge of epigraphy develops, no ancient or medieval history of this country can be studied', Parvathi Menon, December 02, 2010, The Hindu; http://www.thehindu.com/opinion/interview/lsquoUnless-knowledge-of-epigraphy-develops-no-ancient-or-medieval-history-of-this-country-can-be-studied/article15576712.ece

7)‘Epigraphy staring at an uncertain future', R. Krishna Kumar, February 13, 2012, The Hindu; http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/epigraphy-staring-at-an-uncertain-future/article2887483.ece




________________________________________________________________________
தொடர்பு: தேமொழி (jsthemozhi@gmail.com)







Wednesday, February 7, 2018

உலகமயமாக்கலும் வாழ்வியல் மொழியியல் மாற்றங்களும்



—  முனைவர். வீ. ரேணுகாதேவி      
                 

    உலகமயமாக்கல் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது அந்நாட்டு மக்களின் வாழ்வியல் நெறிமுறைகள், பேசும் மொழி ஆகியவற்றிலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே உலகமயமாக்கல் பற்றிய எந்த விவாத்திதிலும் விவரணையிலும் பொருளாதர விவகாரங்களை விவாதித்தல் மிக முக்கியமான பகுதியாக இருந்தாலும், அதை மட்டுமே உலகமயமாக்கல் என்பதாகக் குறுக்கி விடமுடியாது. உலகமயமாக்கல் என்பது எந்தவொரு தனித்த கருத்தமைவிலும் முடக்கப்பட்டு விட முடியாத பல பரிமாணமுள்ள சமூக நிகழ்வுகளின் தொகுதி ஆகும். உலகமயமாக்கலின் மாறுதலுண்டாக்கும் சக்திகள் தற்காலச் சமூக வாழ்க்கையின் பொருளாதார, அரசியல், கலாச்சார, தொழில் நுட்பம், சுற்றுச்சூழல், மொழி பரிமாணங்களுக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்கின்றன.

    தொழில் நுட்பத்தின் மீதும், அதன் விளைவாக உற்பத்தியாகும் வெகுஜனச் சந்தை பொருட்களின் மீதும் தீராத வெறி கொண்ட நிலை இன்று காணப்படுகின்றது. ‘உலகமயமாக்கல்’ என்ற சொல் 1960களில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. மரபுவழிப்பட்ட அரசியல், பொருளாதாரம், கலாச்சார, புவியியல் எல்லைகளை மீறுகின்ற, மேலும் ஏற்கனவே இருந்து வருகின்ற, சமூக வலைப்பின்னல்களையும் செயல்பாடுகளையும் மென்மேலும் ‘பெருக்குவதையும்’ ‘படைப்பதையும்’ உலகமயமாக்கல் உள்ளடக்கியிருக்கிறது (மான்ஃப்ரெட் பி.ஸ்டெகர், 2006:13).

    உலகமயமாக்கல் பல்வேறு பரிமாணங்களையும், பல்வேறு தாக்கங்களையும் உள்ளடக்கியதாக இருந்த போதிலும் இக்கட்டுரை மக்களின் அன்றாட வாழ்க்கை முறைமையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களையும், அதன் விளைவாக அம்மக்கள் பேசும் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

    சமீபத்தில் சென்னை நகர நட்சத்திர விடுதி ஒன்றில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்த்து. கருத்தரங்கு முடிவுற்ற பின் பின்னிரவு வரை அந்த விடுதியில் தங்கும் சூழல் ஏற்பட்டது. அந்த நட்சத்திர விடுதியின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். சுமார் இரவு 10 மணியளவில் பதின்ம வயது பெண்களும் ஆண்களும் வரிசையாக வர ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் காதை கிழிக்கும் இசையின் ஓசையுடன் ஆட்டமும் பாட்டமும் ஆரம்பித்த்து. அது நள்ளிரவையும் தாண்டி 1.00 மணி வரை நீடித்தது என்னவென்று கேட்டதற்கு அங்கு ‘pub’ என்று அழைக்கப்படுகின்ற கேளிக்கை அரங்கு இருக்கின்றது. வார இறுதி நாட்களில் இவ்வாறான பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் என்றார்கள். அந்த இசை நம் பாரம்பரிய இசை அல்ல, அவர்கள் அணிந்த உடை நம் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இல்லை, அங்கு பரிமாறப்பட்ட உணவு வகைகள் நம் பாரம்பரிய உணவுகள் அல்ல. நமக்கும் இரவு நேரக் கேளிக்கைகள் இருந்தன கதாகலாட்சேபங்கள், நாடகங்கள், பாட்டு, வீர விளையாட்டுகள் என. ஆனால் இன்றைய இந்த இரவு நேர கேளிக்கைகள் மேலை கலாச்சாரத்தின் தாக்கமாகவே காணப்படுகின்றது.

    விழாக்களுக்குப் பதிலாக கொண்டாட்டங்களே உலகமயமாக்கலின் விளைவுகளாகின்றன. தமிழர் திருநாள், பொங்கல், தீபாவளி, காரமடையான் நோன்பு போன்றவை மெல்ல விடைபெற, மகளிர் தினம், காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் என வரிசையாக பல்வேறு தினங்கள் தான் இன்று வெகு சிறப்பாக இளையோர்களாலும், ஊடகங்களாலும் கொண்டாடப்படுகின்றன. ஊடகங்கள் இக்கொண்டாட்டங்களை பிரத்யோகமாக நாள் முழுவதும் காட்சிப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. கலாச்சாரம் என்ற பெயரில் வணிகத்தைப் பெருக்கும் ஒரு முயற்சியே இக்கொண்டாட்டங்கள்.

    நம் உணவு பழக்க வழக்கங்களும் மிக விரைவாக மாறி வருகின்றன. இளைய தலைமுறையினரின் விருப்ப உணவாக நூடுல்ஸ், பிரைடுரைஸ், பர்க்கர், பிரஞ்சு பிரைஸ், சிக்கன்65, கே.எப்.சி, நான், மேக்டொனால்ட்ஸ், சாப்ஸ்டிக்ஸ், கோகோ கோலா, தம்ஸ் அப். பெப்சி, ஆப்பிள் பை, சீஸ், பன்னீர் என்னும் மேலை நாட்டு உணவு வகைகளே இருக்கின்றன. அவையும் அமர்ந்து உண்ணப்படுவதில்லை நின்று கொண்டே உண்ணும் ‘பப்பே’ முறையே பெரிதும் காணப்படுகின்றது.

    நம் பாரம்பரிய  உணவு வகைகளான இட்லி, தோசை, சோறு, சாம்பார், கூட்டு, பொரியல், அவியல், புட்டு, களி, கூழ், அப்பம், வற்றல், பொரிவிளங்காய், சிறுதானிய வகைகளைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு உணவு வகைகள் நம் உணவுப் பண்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல விடைபெற்று சென்று கொண்டிருக்கின்றன.

    ஆதிக்க நாடுகளின் ஒரே மாதிரியாதலின் வெளிப்பாடுகள் இங்கு புலப்படுகின்றன. உலகின் பல பகுதிகளிலும் துரித உணவகங்கள் ஆதிக்கம் பெற்று வருகின்றன. இவற்றின் பரவலுக்கு வீச்சுமிக்க சமூகக் கலாச்சாரப் போக்குகள் உறுதுணையாக உள்ளன. இவற்றைக் குறிக்க அமெரிக்கச் சமூகவியலாரான ஜார்ச் ரிட்டர் ‘மேக்டொனால் டைசேஷன்’ (Mc Donaldization) என்ற சொல்லை உருவாக்கினார். மேம்போக்காகப் பார்த்தால் மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நம்பகமான வழிகளை அளிக்கும் முயற்சிகளுக்குத் துணை நிற்பவை என்ற அளவில் இவை தர்க்க ரீதியாகவே தொன்றுகின்றன. ஆனால் திரும்ப திரும்ப ‘உங்களை மகிழ்விப்பதே எங்கள் இலட்சியம்’ எனக் கூறும் பகற்றுத் தோற்றத்துடன் நம்மீது திணிக்கப்படும் வணிக விளம்பரங்களின் பகற்றுத் தோற்றத்தினைக் கிழித்துப் பார்த்தோமானால் தீவிரப் பிரச்சனைகள் இருப்பது தென்படுகின்றன. எடுத்துக்காட்டாக துரித உணவுகளின் மிகக் குறைந்த ஊட்டச்சத்தும், குறிப்பாக அவற்றில் கொழுப்பு சக்தி மிகுதியும், இதய சம்பந்தமான நோய்கள், நீரிழிவு, புற்றுநோய், சின்னஞ்சிறு வயதில் ஊளைச் சதை போன்ற தீவிரமான உடல்நலப் பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டலாம்.

    உடல் நலம் பேணுவதற்கு விளையாட்டுகள் தேவைப்படுகின்றன. அவ்விளையாட்டுகளில் கூட நம் பண்பாட்டுடன் இணைந்து இருந்த கபாடி, பல்லாங்குழி, தட்டாங்கல், மல்யுத்தம், வாட்போர், பாண்டி, சிலம்பம், பச்சைக் குதிரை, குலை குலையா முந்திரிக்காய், பரமபதம், தாயம், ஆடுபுலி போன்ற விளையாட்டுகள் அரிதாகி விட்டன. இன்று எங்கெங்கு காணினும் கையில் மட்டையுடன் நின்று கொண்டிருக்கின்றனர். கிரிக்கெட் மோகம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. நம்பாரம்பரிய வீர விளையாட்டுகள் மெல்ல மெல்ல காணமல் போய்க் கொண்டிருக்கின்றன.

    உடைகளும் அவ்வாறே நாட்டின் சீதோச நிலைக் கேற்ற உடைகளான சேலை, தாவாணி, வேட்டி, துண்டு என்பவற்றை காண்பது அரிதாகிவிட்ட்து. சல்வார், குர்தா, சூட், கோட், டை, ஸ்கார்ட், ஜீன்ஸ், நைட்டி, லெக்கின்ஸ் என்ற உடைகளே பரவலாக அணியப்படுகின்றது.

    இசையிலும் மாற்றத்தை உணர முடிகின்றது. நம் இசை மெல்லிசை, வீணை, தம்பூர், ஹார்மோனியப் பெட்டி, மிருதங்கம், நாதஸ்வரம், தபேலா, பறை என்னும் இசைக் கருவிகள் எங்கே? அவற்றிற்குப் பதிலாக பாப், ராக், சிம்பனி என்னும் இசை வடிவங்களே இளைஞர்களால் இன்று பெரிதும் விரும்பப்படுகின்றன.

    அன்றாடம் பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருட்களும் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட பொருள்களாகவே உள்ளன.

    குடும்ப அமைப்பு முறையிலும் அந்நிய கலாச்சாரம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டு குடும்ப வாழ்க்கை சிதைந்து கொண்டிருக்கிறது. கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பமாகி தனிமனித குடும்பமாகிக் கொண்டிருக்கின்றது. குழந்தைகளும், முதியோர்களும் அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏங்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. கூட்டுக் குடும்ப சிதைவின் நீட்சியாக இன்று நிறைய முதியோர் இல்லங்களையும், சிறுவர்களைப் பாதுகாக்கும் பாலர் இல்லங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன. வீட்டிற்கு ஒரு குழந்தை, தனித்து வளரும் குழந்தை முரட்டு பிடிவாதத்துடன் தான் எனது என்ற மனப்பான்மையுடன் வளர்கின்றது. பகிர்ந்து உண்ணும் மனப்பான்மை அறவே இல்லை. மழலையர் மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

    உலகமயமாக்களின் விளையாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு தொழில் விவசாயம். உழவு மாடுகள், நெல் வகைகள், சிறுதானிய வகைகள் போன்றன ஏறக்குறைய அழிந்து விட்டன் எனலாம்;  92 வகை நாட்டு மாடு வகைகள் நம்மிடம் இருந்தன. அவற்றில் எத்தனை வகை மாடுகள் இன்று நம்மிடம் உள்ளன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு அதை மீட்டெடுக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பாலைத்தரும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஜெர்சி மாடுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

1.அத்தக்கருப்பன்
2. அழுக்குமறையன்
3.அணறிகாலன்
4. ஆளைவெறிச்சான்
5. ஆனைச்சொறியன்
6. கட்டைக்காளை
7. கருமறையான்
8. கட்டைக்காரி
9. கட்டுக்கொம்பன்
10. கட்டைவால் கூளை
11. கருமறைக்காளை
12. கண்ணன் மயிலை
13. கத்திக்கொம்பன்
14. கள்ளக்காடன்
15. கள்ளக்காளை
16. கட்டைக்கொம்பன்
17. கருங்கூழை
18. கழற்வாய்வெறியன்
19. கழற்சிக்கண்ணன்
20. கருப்பன்
21. காரிக்காளை
22. காற்சிலம்பன்
23. காராம்பசு
24. குட்டைசெவியன்
25. குண்டுக்கண்ணன்
26. குட்டைநரம்பன்
27. குத்துக்குளம்பன்
28. குட்டை செவியன்
29. குள்ளச்சிவப்பன்
30. கூழைவாலன்
31. கூடுகொம்பன்
32. கூழைசிவலை
33. கொட்டைப்பாக்கன்
34. கொண்டைத்தலையன்
35. ஏரிச்சுழியன்
36. ஏறுவாலன்
37. நாரைக்கழுத்தன்
38. நெட்டைக்கொம்பன்
39. நெட்டைக்காலன்
40. படப்பு பிடுங்கி
41. படலைக் கொம்பன்
42. பட்டிக்காளை
43. பனங்காய் மயிலை
44. பசுங்கழுத்தான்
45. பால்வெள்ளை
46. பொட்டைக்கண்ணன்
47. பொங்குவாயன்
48. போருக்காளை
49. மட்டைக் கொலம்பன்
50. மஞ்சள் வாலன்
51. மறைச்சிவலை
52. மஞ்சலி வாலன்
53. மஞ்ச மயிலை
54. மயிலை
55. மேகவண்ணன்
56. முறிகொம்பன்
57. முட்டிக்காலன்
58. முரிகாளை
59. சங்குவண்ணன்
60. செம்மறைக்காளை
61. செவலை எருது
62. செம்ம(ப)றையன்
63. செந்தாழைவயிரன்
64. சொறியன்
65. தளப்பன்
66. தல்லயன் காளை
67. தறிகொம்பன்
68. துடைசேர்கூழை
69. தூங்கச்செழியன்
70. வட்டப்புல்லை
71. வட்டச்செவியன்
72. வளைக்கொம்பன்
73. வள்ளிக் கொம்பன்
74. வர்ணக்காளை
75. வட்டக்கரியன்
76. வெள்ளைக்காளை
77. வெள்ளைக்குடும்பன்
78. வெள்ளைக்கண்ணன்
79. வெள்ளைப்போரான்
80. மயிலைக்காளை
81. வெள்ளை
82. கழுத்திகாபிள்ளை
83. கருக்காமயிலை
84. பணங்காரி
85. சந்தனப்பிள்ளை
86. சர்ச்சி
87. சிந்துமாடு
88. செம்பூத்துக்காரி
89. செவலமாடு
90. நாட்டுமாடு
91. எருமைமாடு
92. காரிமாடு

ஏறக்குறைய 120 நெல் வகைகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன, அவையும் எங்கே சென்றன எனத் தெரியவில்லை. இப்போது நமக்குத் தெரிந்த நெல் வகைகள் ஐ.ஆர்.20, கர்நாடக பொன்னி, ரப்பர் போன்றவைதான்.
1. அன்னமழகி
2. அறுபதாங்குறுவை
3. பூங்கார்
4. கேரளா ரகம்
5. குழியடிச்சான் (குழி வெடிச்சான்)
6. குள்ளங்கார்
7. மைசூர்மல்லி
8. குடவாழை
9. காட்டுயானம்
10. காட்டுப்பொன்னி
11. வெள்ளைக்கார்
12. மஞ்சள் பொன்னி
13. கருப்புச் சீரகச்சம்பா
14. கட்டிச்சம்பா
15. குருவிக்கார்
16. வரப்புக் குடைஞ்சான்
17. குறுவைக் களஞ்சியம்
18. கம்பஞ்சம்பா
19. பொம்மி
20. காலா நமக்
21. திருப்பதிசாரம்
22. அனந்தனூர் சன்னம்
23. பிசினி
24. வெள்ளைக் குருவிக்கார்
25. விஷ்ணுபோகம்
26. மொழிக்கருப்புச் சம்பா
27. காட்டுச் சம்பா
28. கருங்குறுவை
29. தேங்காய்ப்பூச்சம்பா
30. காட்டுக் குத்தாளம்
31. சேலம் சம்பா
32. பாசுமதி
33. புழுதிச் சம்பா
34. பால் குடவாழை
35. வாசனை சீரகச்சம்பா
36. கொசுவக் குத்தாளை
37. இலுப்பைப்பூச்சம்பா
38. துளசிவாச சீரகச்சம்பா
39. சின்னப்பொன்னி
40. வெள்ளைப்பொன்னி
41. சிகப்புக் கவுனி
42. கொட்டாரச் சம்பா
43. சீரகச்சம்பா
44. கைவிரச்சம்பா
45. கந்தசாலா
46. பனங்காட்டுக் குடவாழை
47. சன்னச் சம்பா
48. இறவைப் பாண்டி
49. செம்பிளிச் சம்பா
50. நவரா
51. கருத்தக்கார்
52. கிச்சிலிச் சம்பா
53. கைவரச் சம்பா
54. சேலம் சன்னா
55. தூயமல்லி
56. வாழைப்பூச் சம்பா
57. ஆற்காடு கிச்சலி
58. தங்கச்சம்பா
59. நீலச்சம்பா
60. மணல்வாரி
61. கருடன் சம்பா
62. கட்டைச் சம்பா
63. ஆத்தூர் கிச்சிலி
64. குந்தாவி
65. சிகப்புக் குருவிக்கார்
66. கூம்பாளை
67. வல்லரகன்
68. கௌனி
69. பூவன் சம்பா
70. முற்றின சன்னம்
71. சண்டிக்கார் (சண்டிகார்)
72. கருப்புக் கவுனி
73. மாப்பிள்ளைச் சம்பா
74. மடுமுழுங்கி
75. ஒட்டடம்
76. வாடன் சம்பா
77. சம்பா மோசனம்
78. கண்டவாரிச் சம்பா
79. வெள்ளை மிளகுச் சம்பா
80. காடைக் கழுத்தான்
81. நீலஞ்சம்பா
82. ஜவ்வாதுமலை நெல்
83. வைகுண்டா
84. கப்பக்கார்
85. கலியன் சம்பா
86. அடுக்கு நெல்
87. செங்கார்
88. ராஜமன்னார்
89. முருகன் கார்
90. சொர்ணவாரி
91. சூரக்குறுவை
92. வெள்ளைக் குடவாழை
93. சூலக்குணுவை
94. நொறுங்கன்
95. பெருங்கார்
96. பூம்பாளை
97. வாலான்
98. கொத்தமல்லிச் சம்பா
99. சொர்ணமசூரி
100. பயகுண்டா
101. பச்சைப் பெருமாள்
102. வசரமுண்டான்
103. கோணக்குறுவை
104. புழுதிக்கார்
105. கருப்புப் பாசுமதி
106. வீதிவடங்கான்
107. கண்டசாலி
108. அம்யோ மோகர்
109. கொள்ளிக்கார்
110. ராஜபோகம்
111. செம்பினிப் பொன்னி
112. பெரும் கூம்பாழை
113. டெல்லி போகலு
114. கச்சக் கூம்பாழை
115. மதிமுனி
116. கல்லுருண்டையான் (கல்லுருண்டை)
117. ரசகடம்
118. கம்பம் சம்பா
119. கொச்சின் சம்பா
120. செம்பாளை


பாரம்பரிய விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டு விளையாடப்பட்டன.
சிறுவர் (பையன்கள்) கைத்திறன்:
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு (எல்லா வயதினரும், ஆண், பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

அணி விளையாட்டு:
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

நீர் விளையாட்டு:
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி:
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

இருபால் இளைஞர்   உடல் திறன்:
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உத்தித் திறன்:
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்):
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு:
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்:
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்:
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்:
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..  கலை விளையாட்டு:
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்
   
கால் திறன்:
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

குழு விளையாட்டு:
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

உல்லாசம்:
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா
6. இதென்ன மூட்டை
7. கிளி செத்துப்போச்சு
8. ஊதாமணி
9. என் உலக்கை குத்து குத்து
10. ஒருபத்தி இருபத்தி
11. ஒளிதல்
12. குச்சு குச்சு ரங்கம்மா
13. குறிஞ்சி வஞ்சி
14. கொடுக்கு
15. சிறுவீடு விளையாட்டு
16. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
17. ராட்டு பூட்டு
18. தவிட்டுக் குஞ்சு
19. பிஸ்ஸாலே பற
20. பூசனிக்காய் விளையாட்டு
21. பூப்பறி விளையாட்டு
22. பூப்பறிக்க வருகிறோம்
23. பூப்பூ புளியம்பூ
24. மச்சிலே யாரு
25. மத்தாடு
26. மோரு விளையாட்டு
27. வேடிக்கை விளையாட்டு
28. ஊஞ்சல்
29. ஈசல் பிடித்தல்
30. உப்பு விற்றல்
31. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
32. கரகர வண்டி
33. கள்ளன் போலீஸ்
34. காற்றாடி
35. கிய்யா கிய்யா குருவி
36. கிழவி விளையாட்டு
37. கிறுகிறு மாம்பழம்
38. குலையா குலையா முந்திரிக்காய்
39. சங்கிலி விளையாட்டு
40. தட்டான் பிடித்தல்
41. தட்டை
42. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
43. பந்து, எறிபந்து
44. பந்து, பிடிபந்து
45. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
46. பூக்குதிரை
47. வண்டி உருட்டல்

பாப்பா விளையாட்டு:
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு (ஐலேலம் ஐலகப்பல் விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

தெய்வ ஆடல்கள் மக்கள் ஆடல்கள் விழா விளையாட்டு:
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு:
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி

    மேற்கூறப்பட்டவை தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இளைய தலைமுறையினர் நம் பண்பாடு, உணவு, உடை, விளையாட்டு, தொழில், கலை ஆகிய அனைத்திலிருந்தும் விலகிச் செல்கின்றனர். இந்த மாற்றங்கள் தமிழர்களின் வாழ்வியலில் மட்டுமல்லாமல் அவர்கள் பேசும் மொழியிலும் மாற்றங்க்ளை ஏற்படுத்தியுள்ளன. ஒரு மொழி வளர அம்மொழியின் சொற்களஞ்சியம் விரிவடைய வேண்டும். ஆனால் நம் சொற்களஞ்சியம் மேலே கூறப்பட்ட அத்தனை சொற்களையும் இழந்து விட்டது. சொற்கள் இன்றைய பயன்பாட்டில் இல்லை அதற்கு பதிலாக சொற்களஞ்சியத்தில் ஏராளமான கடன் வாங்கப்பட்ட சொற்கள் சேர்ந்துள்ளன. அதனால் தமிழ் மொழியின் கட்டமைப்பில் மாற்றங்கள் காணப்படுகின்றது. அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் கூட தமிழ் சொற்களாக இல்லை. ஆங்கிலச் சொற்களே ஆட்சி செய்கின்றன. அரிசி ரைஸ் என்றும், உப்பு ‘சால்ட்’ என்றும், வேம்பு ‘நீம்’ என்றும், கற்றாழை ‘ஆலிவோரா’ என்றும், மஞ்சள் ‘டர்மரிக்’ என்றும், பால் ‘மில்க்’ என்றும், தண்ணீர் ‘வாட்டர்’ என்றும் கையாளப்படுகின்றது.

    ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அவர்களின் மொழியை முதலில் அழிக்க வேண்டும். மொழியின் அழிவு ஒரு பண்பாட்டிற்கு முற்று புள்ளி வைக்கும். உலகமயமாக்கல் என்னும் பொருளாதார கோட்பாடு நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது மக்களின் வாழ்விலும் அவர்களின் மொழியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை அன்றாட நிகழ்வுகளில் பார்த்துக் கொண்டு நிற்கின்றது தமிழ் சமுதாயம்.

துணைநூற்பட்டியல்
மான்ஃபிரட் பி. ஸ்டெகர், 2006, உலகமயமாக்கல், அடையாளம், பூதநத்தம்.
Renuga devi, V., 2010, Globalization and Cultural Genocide, Aayukkoovai, Madurai, Vol.4, pp. 2436 - 2442.
   



தொடர்பு:
முனைவர். வீ. ரேணுகாதேவி
தகைசால் பேராசிரியர்
மொழியியல் துறை
மதுரை காமராசர் பல்கழை கழகம்
மதுரை – 62502.

Friday, February 2, 2018

காமம்செப்பாது கண்டது மொழிமோ!


——  ருத்ரா இ.பரமசிவன்.





ஓங்கி உலகளந்த அழகனை
ஏங்கி உள்ளச் சிமிழுக்குள்
வாங்கினாள் ஆண்டாள் என்கின்ற‌
நம் மண்ணில் பூத்த மின்னற்பெண்!
தமிழ் ந‌றும்பூவின் சொல்லினிலே
அமிழ்தின் மழைதனை பெய்வித்தாள்.
தமிழைக்குழைத்தாள் தன் உள்ளமதாய்!....(1)

மார்கழிப் பனியின் விழுதுகளில்
ஊஞ்சல் ஆடினாள் தமிழிசைத்து.
பிரம்மம் என்பது உடலா? இங்கு
பிரம்மம் என்பது கடலா? அலையா?
கவலை அந்த கன்னிக்கில்லை
பொறி வண்டுகள் பூவைத் துளைக்க
பொறி அங்கு வைத்தது பிரம்மம் தானே.....(2)

கூர்த்த மதியும் குவியும்  உணர்வும்
தூர்த்து போமோ? அவள் செந்தமிழில்.
பாடல் தோறும் பாடல்தோறும்
பாற்சோற்றின் தீஞ்சுவை போல
ஊன்சோற்றுள் ஊடிப்  பற்றி
ஞானத்தீயும்  செஞ்சுவை ஊட்டும்.
விண்டத்தமிழில் அண்டம் விரிந்தது......(3)

இரண்டு ஆன்மக்கூடல் அங்கு
இருட்கடல் பிளந்து ஒளியாகி
கல்லும் மண்ணும் பூவும் புள்ளும்
கலந்த விண்வெளி யானதுவே! அவள்
பள்ளியெழுச்சி பாடலெல்லாம்
துள்ளிய ஞானச் சுடர்வரியே!
அள்ளிய நெஞ்சில்  அமிழ்தொலியே!....(4)

சிறுபூ தொட்டும் பெரும்பூ அணைந்தும்
அளைந்தாள் அவனை அணைத்தாளே..தன்
உயிர் மகரந்தம் தூவிக்கொடுத்து
சூடிக்கொடுத்தாள் தன் உயிர்மாலை.
விண்ணவன் மேனி வருடியதெல்லாம்
அவள் உயிரின் உயிரின் பூக்களே தான்.
அவள் மனங்களின்அந்தம் மகரந்தம்......(5)

பக்தி என்றோர்   சிறு சொல் போதா.
பெருங்கடல் கூட சில் துளி  தான்..அவள்
அன்பின் விரிவே ஆயிரம் அண்டம்!
அவன் அவதாரம் பாடினாள்.
அவன் அரிதாரம் பாடினாள்.
உருவம் கொண்டு அவளுக்குள்
உருண்டு திரண்டது பிரம்ம மதாய்.....(6)

வீட்டுப்பூட்டுள் ஒலிக்கும் பூங்கிளி
"வீடு"பேறு தேடி கோயில்
இதயம் புகுந்து கொண்டதுவே
பிரம்மம் என்னும் பேரின்பம்
பெருங்கனிச் சுவைத்து உண்டதுவே
அத்தனை சுவையும் தமிழாகி
அருஞ்சுவைப் பாட்டாய் ஒலித்ததுவே...(7)

சின்ன இன்பம் பெரிய இன்பம்
வேறுபாடுகள் தெரிவதெங்ஙன்?
ஆண்டவனுக்கே சூடிக்கொடுக்க தன்
ஆத்மப்பூக்கள் தொடுத்தாளே.
அத்தனைப்பாட்டும் நரம்பை மீட்டும்
அத்தனைப்பாட்டும் தமிழை மீட்டும்.
சொற்றுளியெலாம்  சோதிப்பெருங்கடல்.....(8)

ஒருபுறம் பார்த்தால் அங்கு
தமிழை ஆண்டாள்  அவள் ஆனாள்
மறுபுறம் பார்த்தால் அங்கு
தமிழால் ஆண்டாள் அவள் ஆனாள்.
பாற்கடல் பள்ளிக்கூடலும் தமிழ்ப்
பாற்கடல் பள்ளிக்கூடமே..அவள்
படித்ததெலாம்   அங்குப் பரந்தாமன்.....(9)

உணர்வுத்தீயை பக்தி என்பீர்!
உணவுத்தீயும் அதுவே தான்.
ஞானமும் உண்ணலாம் அறிவீரோ?
ஞானப்பசியே உலகம்  ஆச்சு.
ஒவ்வொரு சோறும் வரலாறு ..மண்ணின்
ஒவ்வொரு துளியும் வரலாறு.
வரலாறு இன்றி வாழ்க்கை இல்லை.......(10)

மிருகமாய்த் தோன்றிய போதினிலே
இரைகள் தானே நம் இலக்கு...அந்த
இரையும்  காமமும் இறைவன் ஆகி
அவதாரம் வந்த கதைகளும் உண்டு.
அதையெலாம்  மறப்பது அறிவீனம்.
இறையாண்மை என்பதும் கூட
இரையாண்மையின் அடிப்படையே ....(11)

மனிதன் உருவில் இருந்தாலும்
இறைவன் உருவில் இருந்தாலும்
ரத்த சதையாய் இருந்தாலும்
ஆவிகளாய் திரிந்தாலும்  அது
பசியின் ஒளியே அறிந்து கொள்
அறிவின் பசியே உணவுகள் ஆகி
உலகு சுழற்றும் அறிவாய் நீ..............(12)

காமம் செப்பாது கண்டது மொழிமோ!
காமம் அங்கொரு அக்கினிக்குஞ்சாய்
காமம் அங்கொரு பொந்திடை இருந்து
காட்டிய வெளிச்சம் ஆயிரம் ஆயிரம் .
வெந்து தணிந்தது காடு காடு.
வேகாமல் நின்றது மனித சிந்தனை.
சாகாமல் நின்றது மனிதம் மனிதம்.......(13)



படம் உதவி: விக்கிப்பீடியா
https://commons.wikimedia.org/wiki/File:The_Saint_Andal_LACMA_M.86.94.2.jpg



________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com) 






ஐஸ் பிரியாணியின் புலம்பல்

                                            ஐஸ் பிரியாணியின் புலம்பல்
BY: கண்மணி  

அரை நூற்றா ண்டுக்கு முன்பு வரை என் அருமை எல்லோருக்கும் தெரிந்து தானே இருந்தது.
எதனால் இந்த திடீர் மாற்றம்?

என்னை எல்லோரும் ஒதுக்கி விட்டார்கள்.

வெறும் வயிற்றில் ஒரு செம்பு நிறைய என்னை ஊற்றிக் குடித்துவிட்டு தெம்பாக வேலை பார்த்த பாட்டாளி வர்க்கத்திற்கு  இப்போது என் நினைவே இல்லாமல்  போய் விட்டதே !? அந்த அளவிற்கு போலி நாகரிகம் மேலாதிக்கம் செலுத்துகிறது.

வட்டில் நிறைய என்னைப் போட்டு கெட்டித்தயிர் ஊற்றி  பச்சை மிளகாயைக் கல்உப்போடு சேர்த்துக் கடித்துச் சுவைத்தவர் அளவிட முடியுமா?
பச்சை வெங்காயத்தைக் கூட்டி பசியாற்றியதோடு ஆரோக்கியத்தையும் கட்டிக் காத்ததெல்லாம் பழைய கதையாகி விட்டது.
ஊறுகாயும் ,வடகமும் ,வத்தலும் என எத்தனை எண்ணிலடங்கா கூட்டாளிகள்.எல்லாம் எளிமையின் சின்னங்கள்.
ஒருவேளை இந்த எளிமை தான் என்னை ஓரங்கட்ட வைத்து விட்டதோ?!

என்னோடு சேர்த்து வைத்துச்  சுவைத்த பக்கஉணவுகள் ----அவற்றுக்கு எல்லாம் இன்னும் மவுசு குறையவில்லை.
மாதா ஊட்டாத சோறு மங்கா ஊட்டும் என்பார்களே ---ஒரு ராஜபாளையம் சப்பட்டை ---தோல் சீவி துண்டு போட்டால் ---இந்த இணைக்கு ஈடு எது?
பங்குனி சித்திரை கத்தரி வெயிலின் போது களைப்பு நீங்க என்னளவிற்குத்  தகுதியான வேறு உணவு எது?
சப்பட்டை சீசன் ஓய்ந்து பஞ்சவர்ணம் வந்தால் தோலைச் சீவ வேண்டியதில்லை.---உரித்து விட்டு என்னோடு  கடித்துச் சாப்பிடுவது தானே ருசி.
எல்லா மாம்பழமும் வரத்து குறையும்போது வரத்தொடங்கும் காசாலட்டு;சும்மா கழுவித் தோலோடு வைத்துக்கொண்டு ஒருவாய்சோற்றுக்கு ஒருகடி  

சைவம் மட்டும் அல்லாமல் அசைவத்திற்கும் ....அசராமல் ஈடு கொடுத்தேன்.
ஒரு விரலளவு சீலா கருவாடு போதும்;அப்படியே எல்.பி.ஜி .காஸ் அடுப்பிலேயே சுட்டு விடலாம்...பானை சோறும் காலி.
இன்னும் வக்கணையாக வேண்டுமென்றால் ......
                                                                                          "மையூன் தெரிந்த நெய்"யில் வெடித்து வேகத் தொடங்கும் .....வெடிகறி   
இப்படியே இன்னும் நீட்டிக்கொண்டே போகலாம்.
நீர்ச்சோறு /பழையது என்றெல்லாம் பெயர் பெற்ற எனக்கு மாணவர் கூட்டம் வைத்த பெயர் தான் ஐஸ் பிரியாணி.
என்னோடு போட்டி போட .....ஹைதராபாதி /செட்டிநாடு /ஆம்பூர் .....இன்னும் என்னென்ன .....
பருப்புச் சோறுக்கு நெய் ஊற்றித்  தயிரோடு உண்ணும் கூட்டத்தைப் பார்த்து ரசித்துச் சிரித்து விடலாம்.......குழந்தைக் கூட்டம் என்று ....
ஆனால் அதைக் கூகைக்குப் பலியாகப் படைத்த சமுதாயம் தமிழ்ச் சமுதாயம் என்றால் ......கொடுமை ...கொடுமை என்று கூக்குரலிடத் தோன்றுகிறது.
உஷ்ஷ் ....எழுத்து கத்தக் கூடாது .
அமைதி ...அமைதி ......அமைதி 


Thursday, February 1, 2018

எல்லாம் வல்ல கொலம்பஸ்!!!




8. எல்லாம் வல்ல கொலம்பஸ்!!!


https://books.google.com/books?id=YTRCDwAAQBAJ&pg=PA66

By: தேமொழி 

கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லா, அரசர் ஃபெர்டினாண்ட் ஆகியோரின் நன்னம்பிக்கையையும் பண உதவியையும் பெற்று, ஸ்பெயின் நாட்டிற்காக இந்தியாவுடன் வணிகம் செய்ய  ஒரு புதிய கடல்வழித்தடத்தைக் கண்டுபிடிக்க கடற்பயணம் மேற்கொண்டார்.  பொது ஆண்டு 1492 இல் தொடங்கி தொடர்ந்து பத்து ஆண்டுகளில் நான்கு முறை ஐரோப்பாவில் இருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்து இந்தியப்பெருங்கடலை அடைய விரும்பினார்.  ஆனால் அவர் ஒரு முறை கூட வெற்றியடையவில்லை என்பதுடன், அமெரிக்கக் கண்டத்தை வந்தடைந்து அதுதான் இந்தியா என்று நம்பி, அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை இந்தியர்கள் எனவும் அழைக்கத் துவங்கினார்.  இந்தியாவிற்குப் புதிய கடல்வழிப்பாதையைக் கண்டுபிடிக்கும் போட்டியில் போர்த்துக்கீசியர்களிடம் ஸ்பெயின் தோல்வி அடைய நேர்ந்தது. வாஸ்கோடகாமா பொது ஆண்டு 1498 மே, 17ல் இந்தியாவில் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார்.


இருப்பினும்  ஸ்பெயின் நாடு அமெரிக்கக் கண்டத்தில் வலுவாகக் காலூன்றிவிட்டதற்குக் கொலம்பஸ் செய்த உதவியே காரணம்.  அமெரிக்கக் கண்டத்தில் உள்ள எத்தனையோ நாடுகளுக்கு ஸ்பெயின் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஸ்பானிஷ் மொழிதான் இந்நாட்களில் தேசியமொழி.   கொலம்பஸ் செய்தது தவறான கணிப்பாக இருந்தாலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் குடிபுக, ஆட்சி செய்ய ஒரு வழி வகுத்துக் கொடுத்து கடற்பயண வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கொலம்பஸ் என்பதை மறுப்பதற்கில்லை. கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்க கண்டத்தில் பஹமாஸ் பகுதியில் கரையேறிய நாள் 1492 ஆம் ஆண்டு அக்டோபர் 12 வது நாள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ஆம் நாள் கொலம்பஸ் நாளாக அமெரிக்காவில்  கொண்டாடப்படுகிறது.


கொலம்பஸ் தினமான அக்டோபர் 12, 2014 க்கு சில தினங்களுக்கு முன்னர் அக்டோபர் 8, 2014 அன்று நிகழ்ந்த முழுச்சந்திரகிரகணமும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்ததில் பலருக்கு சந்திரகிரகணத்தையும்  கொலம்பசையும் இணைக்கும் ஒரு சுவையான நிகழ்ச்சியையும் நினைவிற்குக் கொண்டு வந்தது.


தனது இந்தியப் பயணங்களில் மூன்று முறை தோல்வியடைந்திருந்த கொலம்பஸ் தனது கடலோடிக் குழுவினரையும், பழங்குடி மக்களையும் கொடுமைப்படுத்திய காரணத்திற்காகக் கைகால்களில் விலங்கிடப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்.  கரீபிய தீவுகளில் ஆளுநர் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. ஆனால் ஸ்பெயின் மன்னரும் அரசியும் மனமிரங்கி  அவரை மன்னித்து மீண்டும் ஒருமுறை பயணம் செய்து இந்தியாவிற்கு வழி கண்டுபிடிக்க உதவ முன் வந்தனர். நான்காவது  முறையாகத் தனது  கடற்பயணத்தை 1502 ஆம் ஆண்டு மே 12 ஆம் நாள் துவக்கினார் கொலம்பஸ். இப்பயணத்தில் அவருடைய சகோதரர்கள் பார்த்தலோமோ, டியாகோ மேண்டேஸ், கொலம்பஸின் 13 வயது மகன் ஃபெர்னாண்டோ ஆகியோரும் உடன் பயணித்தனர்.


'காப்டியானா', 'கல்லீகோ', 'விஸ்கைனா', 'சாண்டியாகோ டி பாலோஸ்' என்ற நான்கு கப்பல்களில் மேற்கு நோக்கிப் பயணம் செய்தனர்.  கடற்புழுக்கள் கப்பலின் மரத்தைக் கரையான் போல அரித்துவிட, இரு கப்பல்களில் துளைகள் விழுந்து நீர் உள்ளே வரத் துவங்கிய காரணத்தினால் கொலம்பஸ் அந்தக் கப்பல்களைக் கைவிட நேர்ந்தது. கரீபியன் கடல் பகுதியை அடைந்து, அங்குத் தீவுகளையும் மத்திய அமெரிக்க பகுதிகளையும் சுற்றிவரும்பொழுது கியூபா நாட்டின் பகுதியில் ஏற்பட்ட புயலில் சிக்கி அடுத்த இரு கப்பல்களும் சேதமடைந்து 1503 ஆம் ஜூன் மாதம், ஜமைக்காவின் வடகரையில் 'செயின்ட் ஆன்' வளைகுடாப் பகுதியில் கரைதட்டி நின்றன.  சென்ற முறை அங்கு வந்திருந்த பொழுது ஏற்படுத்திய ஸ்பானிஷ் குடியிருப்புகளின் உதவியை நாடித்  தகவல் அனுப்பச் சிறு படகொன்றில் சிலரை அனுப்பிவிட்டு தனது குழுவினருடன் ஜமைக்காவில் கொலம்பஸ் காத்திருந்தார். இவ்வாறு சற்றொப்ப ஓராண்டுக் காலம் போல அப்பகுதியில் தங்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.


அப்பகுதியில் வாழ்ந்த  'அராவாக்' (Arawak Indians) பழங்குடியினர் நட்புள்ளம் கொண்டவர்கள் என்றாலும், கொலம்பஸும் அவர் குழுவினரும் செய்யும் அடாவடிகள், கலவரம், கொள்ளை ஆகியவற்றில் மிகவும் வெறுத்துப் போயிருந்தார்கள்.  முதலில் அன்புடன் உதவியவர்கள், பின்னர் கொலம்பஸ் கேட்ட அளவிற்கு அவர் குழுவினருக்கு உணவு அளித்துப் பராமரிக்க மறுத்துவிட்டனர். கடற்பயணிகள் வழங்கிய பண்டமாற்றுப் பொருள்கள் யாவும் அவர்களுக்கு உதவும் வகையிலும் இல்லாமல் (தகர ஊதுகுழல்கள் போன்றவை) அவர்கள் ஆர்வத்தையும் கவரவில்லை.  இதன் விளைவாக கொலம்பஸ் குழுவினர் பசி பட்டினியில் நொந்து போனார்கள்.  தங்களுக்கு உதவி வரும் வரை எப்படித் தாக்குப் பிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த கொலம்பஸிற்கு, நூல்களைப் புரட்டியதில் ஒரு யோசனையும் கிடைத்தது.


அக்காலத்தில் கடற்பயணம் செய்பவர்கள் மிகத் தடித்த வானியல் குறிப்புக்கள் கொண்ட நாட்குறிப்பு நூல்களை தங்கள் பயணத்திற்குத் துணையாகக் கொண்டு செல்வார்கள்.   இது 'அல்மனக்' (Almanac) என்றழைக்கப்படும்.  இந்திய மக்கள் வானின் கோள்களைக்  கணித்துப் பயன்படுத்தும் பஞ்சாங்கம் போன்றே சூரியன், சந்திரன், மற்ற பிற கோள்களின் நிலையையும், பயணத்திற்கு வழிகாட்டி உதவும் விண்மீன் கூட்டங்களையும், பருவநிலை, தட்பவெட்ப நிலைக் குறிப்புகளையும்  கொண்ட நிரல்களும் அட்டவணைகளும் கொண்டது இந்த அல்மனக். அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த ஜெர்மன் நாட்டுக் கணிதமேதையும் வானியல் வல்லுநருமான 'ரிஜியோமாண்ட்டனஸ்' கோள்களைக் கணித்து வழங்கிய நாட்குறிப்பில் (Ephemeris of the German astronomer Regiomontanus) கொலம்பஸிற்கு ஒரு தகவல் கிடைத்தது.  அந்த 1504 ஆம் ஆண்டு, பிப்ரவரி  மாதம் 29 ஆம் நாள் ஜமைக்கா பகுதியில் முழுச்சந்திரகிரகணம் தோன்றும் என்ற குறிப்பு அந்நூலில் அவருக்குக் கிடைத்தது.




இத்தகவல் தெரிந்ததும் கொலம்பஸ் அராவாக் பழங்குடியினருடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். தங்களை வெறுத்துச் சரிவர நடத்தாமல், உணவும் வழங்காத பழங்குடியினர் மீது அவருடைய கிறிஸ்துவக் கடவுள் மிகக் கோபமான இருக்கிறார்.  தான் கோபம் கொண்டதை உணர்த்த இரு நாட்களில் நிலாவை மறையச் செய்து அதனைச் செந்நிறமாக்கி தனது கோபத்தை பழங்குடியினருக்கு உணர்த்துவார்.  அவர்களது நடவடிக்கை மாறாவிட்டால் பழங்குடியினருக்கு  கேடு காலம்தான் என்று   மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் கொலம்பஸ் கதைகட்டினார்.  பழங்குடியினர் அதை நம்பவில்லை, சிலர் பகடி செய்தும் நகர்ந்தனர்.  ஆனால் கொலம்பஸ் குறிப்பிட்ட நாளில் கீழ்வானில் நிலா வழக்கம் போலத் தோன்றினாலும், சிறிது நேரத்தில் கிரகணம் துவங்கி, இருள் சூழத் துவங்கியது.  பழங்குடியினர் அச்சமடைந்து கொலம்பஸ்ஸிடம் ஓடிவந்தார்கள்.



"பழங்குடியினர் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு பல திசைகளில் இருந்தும் கப்பலை நோக்கி ஓடிவந்தார்கள்.  தங்களுக்காக கொலம்பஸ் கடவுளிடம் பேசி கடவுளை அமைதிப்படுத்த வேண்டும், இனி தவறாது உணவு தர சம்மதம் என்று உடன்பட்டார்கள்" என்று கொலம்பஸின் மகன் ஃபெர்னாண்டோ தனது குறிப்பில் எழுதியுள்ளார்.  கொலம்பஸ் தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு மணற்கடிகாரத்தை நிமிர்த்தியும்  கவிழ்ந்தும்  காலத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார்.  கிரகணம் முடியும் சில நிமிடங்களுக்கு முன் வெளிவந்து கடவுள் இனி அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டார், தனது கோபத்தை மறந்து அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யப்போவதில்லை என்பதற்கு அடையாளமாக நிலா சில நிமிடங்களில் மீண்டும் பழைய நிலையை அடையும் என்று அறிவித்தார். அவ்வாறே நிலவும் சிறிது நேரத்தில் கிரகணத்தில் இருந்து விடுபட்டது, பின்னர் பழங்குடியினர் ஒத்துழைப்பும் அவருக்குத் தவறாது கிடைத்தது.


கொலம்பஸ் ஜமைக்கா பகுதியில் வந்து சேர்ந்த ஓராண்டுக் கழித்து 1504 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு உதவிக்  கப்பல் வந்து சேர்ந்தது.  அந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பெயின் திரும்பினார், பின்னர் தனது 54 ஆவது வயதில், முடக்குவாதம் கொடுத்த மூட்டுவலியின் காரணமாகவும், உணவு ஒவ்வாமையின்  காரணமாக இரு ஆண்டுகளில் (மே 20, 1506) அவர் மரணமடைந்தார்.


இந்த நிகழ்ச்சியை ஒவ்வொருவரும் அவரவர் பின்னணியின் காரணமாக கொலம்பஸ் செய்தது புத்திசாலித்தனம் என்றும், அவர் செய்தது அறநெறிக்கு மீறிய சூழ்ச்சி, பழங்குடியினரை ஏமாற்றியது சரியல்ல என்றும் கருத்தில் வேறுபடுவர்.  ஆனால் இது அறிவிப்பது 'அறிவே சக்தி' (Knowledge is Power) என்பதைத்தான். ஆர்வமூட்டும் இந்த நிகழ்வு சில எழுத்தாளர்கள் கவனத்தைக் கவர, இதை அடிப்படையாக வைத்து கதைகள் எழுதத் துவங்கினர். சிலர் சூரியகிரகணம் என்று மாற்றியும் கதைபுனைந்தனர்.  அவற்றில் குறிப்பிடத்தக்கன, எச். ரைடர் ஹாகர்ட் எழுதிய  'கிங் சாலமான்ஸ் மைன்ஸ்' (H. Rider Haggard's King Solomon's Mines) என்ற கதையும், மார்க் டுவைன் எழுதிய  'எ கனிக்ட்கட் யாங்கீ இன் கிங் ஆர்தர்ஸ் கோர்ட்' (Mark Twain's A Connecticut Yankee in King Arthur's Court) என்ற கதையும், டின் டின் படக்கதையான, 'ப்ரிசனர்ஸ் ஆஃப் தி சன்' (Hergé's Tintin adventure Prisoners of the Sun) என்ற கதையுமாகும்.  தங்கள் கதைகளில் அவர்கள் குறிப்பிடப்பட்ட நாட்களில் எந்தக் கிரகணமும் நிகழவில்லை என்பதையும் சில ஆசிரியர்கள்  கவனமின்றி கையாண்டும் உள்ளார்கள்.