Showing posts with label ஆலடி எழில்வாணன். Show all posts
Showing posts with label ஆலடி எழில்வாணன். Show all posts

Sunday, January 9, 2022

தமிழ்த் தொண்டு செய்த மேலைநாட்டு நல்லறிஞர் வீரமாமுனிவர்

-- ஆலடி எழில்வாணன்


குறிப்பு: ஜனவரி 9, 2022 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  இணையவழி நடத்திய "'சித்திரக் கதைகள்' மற்றும்  'வீரமாமுனிவர்' - நூல்கள் திறனாய்வு" உரை நிகழ்ச்சியில் திரு. ஆலடி எழில்வாணன் வழங்கிய உரை

 
book veeramamunivar.jpg

ஜெர்மனியிலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் முனைவர் க.சுபாஷினி மற்றும் முனைவர் ஆனந்த் அமலதாஸ் அவர்களின் சீரிய முயற்சியால் “வீரமாமுனிவர்” புத்தகம்,  ஒளிவண்ணனின் எழிலினி பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது. மொழிகளின் தாயான தமிழை உலகில் பரப்பி உயர்த்திப் பிடித்த முக்கிய ஆளுமைகளில் சிறப்பிடம் பெற்றவர் இத்தாலியை சேர்ந்த Constantine Joseph Beschi (November 8, 1680 –  February 4, 1747). இவர் பின்னாளில் வீரமாமுனிவர் என அழைக்கப்பட்டு தமிழர்கள் மனதில் நிலைத்திருக்கிறார்.

பல மாதங்கள் கப்பலில் பயணம் செய்து 1710ஆம் ஆண்டு தனது 21ஆவது வயதில் கிருத்துவத்தைப் போதிக்க இத்தாலியில் இருந்து அருட்தந்தை அர்னால்டுடன் கோவா வந்தடைந்தார். உடன் வந்தவர் மலபார் பகுதியான கேரளம் செல்ல, இவர் 1711ல் மதுரை வந்தடைந்தார். மக்களோடு மக்களாகக் கலந்து இறைப்பணி மற்றும் மதபோதகம் செய்ய அந்த ஊரின் மொழி அறிதலின் அவசியத்தை உணர்ந்தார் வீரமாமுனிவர். தெலுங்கு, சமற்கிருதம் மற்றும் தமிழ் கற்றார். இதில் தனக்குச் சிறந்ததாக, மொழி கட்டமைப்பில் தனக்குத் தெரிந்த இலத்தீன், போர்ச்சுக்கீசு மொழியின் ஒற்றுமை உள்ளதாக இருந்த தமிழை இன்னும் தீவிரமாகப் பயின்றார். அவர் வாசிக்காத தமிழ் காப்பியங்களே இல்லை எனலாம்.

18ஆம் நூற்றாண்டில் கல்விக்கூடங்கள் மற்றும் தேவாலயங்கள் பல அமைத்து மதக் கோட்பாடுகளை தமிழகத்தில் காலூன்ற வைத்த காலங்களில் வீரமாமுனிவருக்கு தமிழ் மீதான அதீத பற்றுதல் பன்மடங்கு கூடியது. 1726ல் அவரது முதல் படைப்பான மேரிமாதாவை போற்றிப் புகழும் காப்பியமான தேம்பாவணி வெளியானது. 3615 பாடல்கள், அதற்கு 1729 தெளிவுரைகள் என, தான் வாசித்த தமிழ் பெரும் காப்பியங்களுக்கு இணையாக தேம்பாவணியைப் படைத்தார்.

அந்நாள் வரை Constantine Joseph Beschi தமிழகத்தில் 'தைரியநாதசாமி' என்ற பெயரில் உலவினார். தேம்பாவணி படைத்து முழு மொழி ஆளுமை பெற்றபிறகு தைரியநாதசாமி சரியான தமிழ் பெயரல்ல அது சமற்கிருதம் எனத் தெளிவு பெற்று 'வீரமாமுனிவர்' (Great Champion Devotee) என்றானார். தமிழ் மொழியை காப்பியம் மற்றும் இறை வழிபாடுடன் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல் தனது படைப்புகளில் தமிழர் வாழ்வியலைக் கலந்து படைத்தார்.

அவரது வாழ்நாளின் பிற்பகுதியில் வீரமாமுனிவரால் படைக்கப் பெற்ற படைப்புகள்:
செய்யுள் - 9
உரைநடை - 10
அகராதி - 5
இலக்கணம் - 4
உரைகள் - 5
பஞ்சாங்கம் - 2
மொழிபெயர்ப்பு - 9
இலத்தீன் - 3
எழுத்து சீர்திருத்தம் - 4
ஆக மொத்தம் 51 நூல்கள்

இதில் குறிப்பாக திருக்குறள் உள்பட பல தமிழ் காப்பியங்களுக்குத் தெளிவுரை எழுதியது, இலத்தீன் பிரெஞ்சுக்கு மொழி மாற்றம் செய்தது, தமிழ் - லத்தீன், தமிழ் - பிரெஞ்சு அகராதிகள் படைத்தது, சுவாரசியமாக பஞ்சாங்கம் மற்றும் சோதிட நூல்களை சமற்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்தது இவருடைய சாதனைகள். மிக முக்கியமாக சதுரகராதி என்பது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி மற்றும் தொடை அகராதி என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. மொழி சீர்திருத்தத்தில் முன்னோடியாகத் திகழ்பவர் வீரமாமுனிவர் என்பதும் வியப்பே. குறிப்பாக எழுத்துகளுக்கு மேல் புள்ளி வைப்பது, துணைக்கால் போல் எழுதி கீழ் இழுப்புக் கோடு ‘ர’ வீரமாமுனிவரின் தமிழ் மொழிப் பங்களிப்பு. பாடல்களாகவே இருந்த காப்பியங்களை உரைநடைத் தமிழ் (Father of Tamil Prose) என மாற்றிய பெருமை இவரையே சாரும்.

1730க்கு பிறகு அரியலூர் மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் இயேசுசபை நிர்வாகியானார். இப்பகுதி அந்நாளில் ஆற்காடு நவாப் கட்டுப்பாட்டில் இருந்தது. நவாப்களிடத்தில் நட்பாக இருந்துள்ளார் வீரமாமுனிவர். தமிழ் துறவிகளைப் போல் சாதாரண வாழ்வையே வாழ்ந்தார், சைவ உணவையே உண்டார், ஒரு பொழுது மட்டுமே உணவருந்தினார், இல்லத்தில் இருக்கும்போது காவி உடையில் இருந்தார். முக்கிய நிகழ்வுகளுக்கு வெளியே செல்லும் போது நவாப் அரசர் போன்று உடையணிந்தார் என்பது வியப்பாக உள்ளது. இதனை புத்தகத்தின் அட்டைப் படத்தில் பார்க்கலாம்.

பல இடங்களில் இந்து சமயத்தின் வர்ணாசிரமப் பிறப்பு படிநிலைக் கோட்பாட்டை இடித்துரைத்துள்ளார் வீரமாமுனிவர். ஒரே பிரம்மனின் உடலின் வெவ்வேறு பாகத்தில் இருந்து பிறந்ததால் பிராமணன்-சத்திரியன்-வைசியன்-சூத்திரன் எனப் பிரிக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை முன்வைத்தார். Son of man without an equal, I worship the newly blown flower of thy feet. இவரால் ஐரோப்பியர்கள் பலர் தமிழ் கற்றனர், தமிழ் மொழி ஆய்வுகளை மேற்கொண்டனர் என்பது கூடுதல் செய்தி. இப்படிப்பட்ட ஆளுமையின் மரணம் ஒரு சாதாரண சம்பவமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது கவலையான செய்தியாக உள்ளது.

பதிப்பாசிரியர்கள் முனைவர் க.சுபாஷினி மற்றும் முனைவர் ஆனந்த் அமலதாஸ் இருவரும் மறுபதிப்பு செய்த இந்த நூல் வரலாற்றுச் சிறப்புமிக்கது.  வீரமாமுனிவர் ஒரு வரலாற்றுக் காலப் பெட்டகம். இந்தப் புத்தகத்தில் அவரின் வரலாறு வாசிப்பவருக்கு ஆச்சரியத்தைத் தரும். தமிழ் மொழி மீது பற்றுள்ளவர்கள் வாசிக்க வேண்டிய நன்னூல்.


வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi)
நூல் ஆசிரியர்: முத்துசாமி பிள்ளை
பதிப்பாசிரியர்கள் முனைவர் க.சுபாஷினி மற்றும் முனைவர் ஆனந்த் அமலதாஸ்
பதிப்பகம்: எழிலினி பதிப்பகம்
விலை: ₹350/=
https://www.emeraldpublishers.com/veeramamunivar/
நூல்  திறனாய்வு: ஆலடி எழில்வாணன்

--







Sunday, October 31, 2021

கலைஞர்: மிக உயர்ந்தவர்



  —  ஆலடி எழில்வாணன்


Kalaignar: The Great, by M.Farook 
- கலைஞர்: மிக உயர்ந்தவர், பாரூக்
எமரால்டு பதிப்பகம் 



தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் தனது ஆற்றலால் நான்கு தலைமுறைகளின் வளர்ச்சிக்கு நேரடிக் காரணமாக இருந்தவர் கலைஞர். இனிவரும் காலமும் தமிழ் உலகம் இவர் புகழ்பாடும். அப்படிப்பட்ட மாபெரும் தமிழ் சகாப்தமான கலைஞர் மு.கருணாநிதி பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த, கைக்கு அடக்கமான, ஆழமான புத்தகம் முனைவர் M Farook எழுதிய “Kalaingar: The Great”.
 
எமரால்டு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 130 பக்கங்கள் கொண்ட இந்தப்  புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் தகவல் களஞ்சியம். திராவிட இயக்கத்தின் கூர்வாள் திரு.நாஞ்சில் சம்பத் அவர்களின் அணிந்துரையும், வளர்ந்து வரும் அரசியல் ஆளுமை விசிக திரு.ஆளூர் ஷாநவாசு அவர்களின் முன்னுரையும் இந்தப் புத்தகத்தின் தாக்கத்தை உணர்த்தும்.
 
எளிய ஆங்கிலத்தில் லைஞரின் வலிமையான வாழ்க்கையை, சாதனையை, சோதனையை 15 அத்தியாயத்தில் அழகாகக் கோர்த்துள்ளார் ஆசிரியர் பாரூக். அரிய பல சுவராசியத் தகவல்களோடு அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப வாசகரை ஒரு சாட்சியாக, பார்வையாளராக இணைக்கிறார், சிறக்கிறார். ஆசிரியரின் எழுத்தும், நடையும், கோர்வையும் அவரது மொழி ஆளுமையை விட தலைவர் கலைஞர் மீது இவருக்குள்ள பற்று மற்றும் இவர் கலைஞரின் தீவிர ரசிகர் என்பதை கலைஞர் பாணியில் உள்ளங்கையில் நெல்லிக்கனி என வெளிப்படுத்துகிறது.
 
நான் ரசித்த, வியந்த சில அத்தியாயங்களை மட்டும் உங்கள் கவனத்துக்கு எனது விமர்சனமாகப் பதிவிடுகிறேன்.
 
Kalaingar: A Promised Dravidian Messiah:
இந்த அத்தியாயத்தில் கலைஞர் திராவிட இயக்கத்தில் பெரியார், அண்ணாவுக்கு அடுத்து மூன்றாவது முக்கிய அத்தியாயமாக பரிணாமம் பெற்றதை வரலாற்று நிகழ்வுகளோடு எடுத்துரைக்கிறார். குறிப்பாக சுயமரியாதை சிந்தனை, பகுத்தறிவு, மொழிப் பற்று, மாநில உரிமை இவற்றை உள்வாங்கிய சமூகநீதி சிந்தனை, 1971ல் இட ஒதுக்கீட்டை மாற்றியது, 69% இட ஒதுக்கீட்டுக்கு அடித்தளமிட்டது, 1989ல் வி.பி.சிங் அரசால் அதை நடைமுறைப்படுத்தியது, 2006-2011 காலங்களில் உள் ஒதுக்கீடு எனப் போராடாமல் பெற்ற உரிமைகள், இறுதிவரை NEETடை தமிழகத்தில் அனுமதிக்காமல் அரணாக இருந்தது என கலைஞரின் சாதனைகளைக் கூறுகிறார்.
 
Kalaingar's Landmark, Land Reforms:
உழுபவனுக்கு நிலம் சொந்தம்; குடியிருப்பவருக்கு வீடு சொந்தம். பண்ணையார், நாட்டாண்மை என்றழைக்கப்பட்ட பெரும்நிலத்தாரிடம் இருந்து நிலங்களை நிலமில்லா விவசாயிகளுக்கு வழங்க பல சட்டங்களை இயற்றினார் கலைஞர். பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் சார்பில் “திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம்” 1952ல் நிறுவப்பட்டது. ஊதியம், நிலம்-நீர் உரிமை எனப் பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
1. 1969 - Tenancy Land Record Act
2. 1969 - Agriculture Labour Fair Wages Act
3. 1970 - Land Reforms Act
4. 1971 - Agricultural University Act
5. 1971 - Conferment of Ownership of Homestead Act
உயர் வகுப்பினரிடமிருந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விவசாய நிலங்கள் செல்லக் காரணியாக இருந்தார் தலைவர் கலைஞர்.
தரிசுநில மேம்பாட்டுத் திட்டம்,
இரண்டு ஏக்கர் இலவச நிலம் திட்டம்,
எல்லாம் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டன.
 
Kalaingar: A Versatile Wordsmith:
தமிழ் இலக்கியத்துக்காக கவிதை, கடிதம், திரைக்கதை, கதை, தன்வரலாறு, வரலாற்றுக் காவியம், நாடகம் மற்றும் வசனம் என எல்லாவிதங்களிலும் கைதேர்ந்த படைப்பாளியாக வலம் வந்தார் கலைஞர்.
ஐம்பெரும் காப்பியங்களான
சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி
வளையாபதி குண்டலகேசி
ஆகியவற்றை முழுமையாக வாசித்து உள்வாங்கியவர் கலைஞர். அவரின் எழுத்து மற்றும் பேச்சுகளில் இதன் தாக்கம் அதிகம் இருக்கும். 
 
தமிழ்த்தாய் வாழ்த்தை எல்லா அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் பாட வைத்த பெருமை கலைஞரையே சேரும்.
இறுதியாக தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடிய “செம்மொழியான தமிழ் மொழியாம்” பாடலின் ஆசிரியர் கலைஞரே.
உலகப்புகழ் நாடக ஆசிரியர் ஷேகஸ்பியர் எழுதியது 38 நாடகங்கள்; தலைவர் கலைஞர் எழுதிய நாடகங்களின் எண்ணிக்கை 34 என்ற இந்தத் தகவல் ஆச்சரியம் மட்டுமல்ல; அதற்கும் மேல்!
 
Wality 69 Fountain pen:
கலைஞர் பயன்படுத்திய எழுதுகோல் Wality 69 Fountain pen. வாழ்க்கையில் பெரும்பான்மையாக இந்த எழுதுகோலைத்தான் அதிகமாக உபயோகித்தார். சூன் 30, 2001 நள்ளிரவில் கலைஞரைக் கைது செய்து, ஒரு குற்றவாளியைக் கையாள்வது போலக் கையாண்டனர் ஏவல்துறையினர். அப்போது அவர் சட்டையை இழுத்துப் பிடித்துத் தூக்கிய போது கலைஞரின் சட்டைப்பை பகுதி கிழிந்தது. ஆனால் அந்த Wality 69 Fountain pen அவரைவிட்டுப் பிரியவில்லை.
 
Battle of Marina:
திருவாரூர் பள்ளியில் தலைமையாசிரியர் கஸ்தூரி அய்யர் அவர்களிடம் தனது 12 வயதில் போராடித்தான் வகுப்பில் நுழைந்தார் கலைஞர். அவர் இறந்த பிறகும் போராடித்தான் மெரினாவில் தனது உன்னதத் தலைவர் அறிஞர் அண்ணா அருகில் அடக்கம் செய்யப்பட்டார்; வாழ்நாள் போராட்டக்காரர் தலைவர் கலைஞர் அவர்கள். புத்தக ஆசிரியர் 2010ஆம் ஆண்டு புதிய சட்டமன்றம் கட்டும் பணி நடக்கும்போது நடந்த ஒரு நிகழ்வை இந்த அத்தியாயத்தில் அழகாக விவரிக்கிறார். இரவு சுமார் 10.00-11.00 மணிக்கு செயலாளர் திரு.ராமசுந்தரத்திடம் அண்ணா நினைவிடம் செல்வோம் என்றார். அவர்கள் இருவரும் மற்றும் சில காவலர்களும் பயணிக்கின்றனர். அண்ணா சமாதியில் இருவரும் தேநீர் அருந்தியபடியே உரையாடுகின்றனர்.
கலைஞர்: அண்ணா சமாதியில் என்ன வாசகம் இருக்கிறது தெரியுமா ?
ராமசுந்தரம்: தெரியும் அய்யா, “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது!"
கலைஞர்: அமைதியாக “எனக்கும் இங்கேதான் உறங்கணும்”
சில நிமிட அமைதி நிலவுகிறது.
ராமசுந்தரம்: அது எல்லாம் இப்போ எதுக்கு அய்யா பேசணும், நாம கிளம்பலாம் ரொம்ப லேட் ஆயிடுச்சி.
கலைஞர் நினைவிடத்தில் இன்று பொறிக்கப்பட்டுள்ள வாசகம் “ஓய்வு எடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறான்”.
 
எளிமையான உரையாடல் காலம், சூழல், இடம் காரணமாக அதனை ஆழமான உரையாடலாக்கியது. கலைஞரின் இறுதி ஆசையை நிறைவேற்றத் தயங்கிய அதிமுக தலைமையை சட்டத்தால் வென்றது கலைஞர் கட்டிக்காத்த இயக்கமான திமுக. லண்டன் West Minister Abbeyக்கு நிகராக மெரினாவின் அண்ணா சதுக்கத்தை ஒப்பிடுகிறார் ஆசிரியர் ம.பாரூக்.
 
இந்தப் புத்தகத்தில் நான் வியந்து ரசித்த சில சொல்லாடல்கள், இவற்றை அந்த அத்தியாயத்தில் அழகாகச் சேர்த்து தனது கருத்துக்கும் முலாம் பூசியுள்ளார் ஆசிரியர்.

Quotes:
Turn in any direction you like, caste is the monster that crosses your path, Ambedkar.

Tamil Nadu is a paragon of administrative innovation among Indian states, Amartya Sen.

Merely because water in the sea evaporates, it does not become a desert; merely because the river mingles into the sea, they do not dry up.

He who controls others may be powerful, but he who masters himself is mightier still.

Sleep is a symbol of peace and rest: it symbolizes innocence, purity and peace of mind.

Cowards die many times before death; the valiant never taste of death but once, Julius Caesar.

History of Dravidian movement has not been written yet. It has entered into a new phase now.

Forgive your enemies but never forget their names, John F Kennedy.

I have lived a peru vazhvu.

Kalaingarist:
சமீபத்திய அரசியல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலால் எனது வாசிப்பு சற்று குறைந்தாலும் சில வாரங்களாக இந்தப் புத்தகம் என்னோடு பயணித்தது. திராவிட இயக்கத்தின் துருவ நட்சத்திரமான தலைவர் கலைஞர் பற்றி ஆங்கிலத்தில் வாசித்தது மனநிறைவாக இருந்தது. காட்டாற்று வெள்ளத்தை அணை போட்டு அதன் வலிமையைக் காட்டலாம், கலைஞர் போன்ற மாபெரும் ஆளுமைக்கு இந்தப் புத்தகம் அவரின் தாக்கத்தை உணர்த்தும் ஓர் அணை. இந்தத் தாக்கத்தை அணையாமல் இருக்கவைப்பது திராவிட இயக்கக் கோட்பாடுகளில் நம்பிக்கை உள்ளவர்களின் கடமை.

தலைவர் கலைஞர் பற்றி பேராசிரியர் பாரூக் எழுதிய KALAIGNAR : THE GREAT
அருமையான புத்தகத்தைத் திறனாய்வு செய்ததில் மனநிறைவை அடைந்தேன். 



-------------------

Saturday, April 24, 2021

ஆதி இந்தியர்கள்

ஆதி இந்தியர்கள்

 ——  ஆலடி எழில்வாணன்

மனித பரிணாம வளர்ச்சியில் இந்தியத் துணைக்கண்டம் பகுதியை அடிப்படையாகக் கொண்டது  “Tony Joseph - Early Indians” என்ற ஆராய்ச்சி புத்தகம். ஆதி இந்தியர்கள் என தமிழிலும் இந்தப் புத்தகம் பலரை ஈர்த்துள்ளது.

எழுத்தாளர் டோனி யோசப் 30+ ஆண்டுகள் பொருளாதாரம் மற்றும் வணிகம் சார்ந்த பத்திரிக்கைகளில் (Economic Times, Business world and Business Standard) நிருபராக இருந்து ஆசிரியராக உயர்ந்தவர். தன்னை ஒரு நாத்திகவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ளத் தயங்காதவர் டோனி யோசப். இவருடைய முதல் புத்தகமே உலகப்புகழ் அடைந்தது. பரிணாமம் மற்றும் மரபணு போன்ற தலைப்புகளில் பலர் ஆராய, எழுத மற்றும் வாசிக்க என்பவற்றிற்குத் தானும் ஒரு காரணம் எனப் பெருமை கொள்கிறார் டோனி யோசப்.


அழகாக, உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்தப் புத்தகம், பார்த்தவுடன் நம்மைக் கவரும் “never judge a book by its cover” என்பதைப் பொய்ப்பிக்கிறது. 1926- ல் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட சிலையைப் பற்றிய ஆய்வுகளை,  2300 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சுமார் 15 வயது நடனப்பெண், வழக்கத்தைவிட நீளமான கைகள், 24 வளையல்கள், 4 சங்கிலிகள், சிகை அலங்காரம் என அழகாக விவரிக்கிறார்.

“If you want to write, first read” என்ற சொற்றொடருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் டோனி யோசப். இந்தப் புத்தகத்தில் அவர் மேற்கோள்களாக அடுக்கியுள்ள பல புத்தகங்கள், எழுத்தாளர்கள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இதரத் தரவுகளே இதற்கு சாட்சி. 260+ பக்கங்களுடைய புத்தகத்தில் Bibliography மட்டுமே பத்து+ பக்கங்கள் என்றால் நினைத்துப் பார்க்கவும்.

இந்நாளில் அரப்பா, கீழடி என்ற செய்திகளால் நாம் ஈர்க்கப்பட, அவற்றை எல்லாம் விஞ்சும் வகையில் சுமார் 65000 - 80000 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய மத்தியப் பிரதேசத்தில், போபால் அருகில் உள்ள பிம்பேத்கா (Bhimbetka) என்ற இடத்தில் மனித தடம் உண்டு என ஆய்வுகளின் தரவுகளை அடுக்கி முதல் பந்தில் சிக்சர் அடித்து தூள் கிளப்புவது போல், ஆரம்பத்திலேயே இந்தியாவைப் பற்றிய ஓர் அரிய தகவலைச் சொல்லி "அட" போட வைக்கிறார் டோனி யோசப்.

நல்ல சமவெளியைச் சுற்றிலும் ஏழு மலைகள், நீர்நிலைகள், சிறிய விலங்குகள், பாறைகள், குகைகள் எனப் பல இருக்க, சில குகைகளின் சுவற்றில் மனித கைத்தடங்கள், மேலும் அவற்றில் உள்ள கைகளின் அளவை வைத்து அது ஆண், பெண் அல்லது சிறுவர் என கணக்குகளைச் சொல்லி பிம்பேத்காவை விவரிக்கையில் நாம் ஆச்சரியப்படவில்லை என்றால் குறை நம்மிடமே.

“ பீட்சா (Pizza)”, இது என்ன? என ஒரு காலத்தில் கேட்டவர்கள் நாம். ஆனால் இன்று இது குக்கிராமத்தில் கூட கிடைக்கும் துரித உணவு. நம் இந்தியப் பகுதியின் 65,000 ஆண்டுகளின் மனித பரிணாமத்தை பீட்சாவோடு ஒப்பிடுகிறார் புத்தக ஆசிரியர். மனித பரிணாம ஆரம்பத்தின் பல்லாயிரம் ஆண்டுகளை பீட்சாவின் அடித்தளமாக (crust), கடந்த 10,000 ஆண்டுகளை பீட்சா மீது பரப்பும் தக்காளி குழைவு (sauce) போல, கடந்த சில ஆயிரம் ஆண்டுகளை பீட்சா மேல் தூவும் பாலாடைக்கட்டி (cheese) என, கடந்த பல நூற்றாண்டுகளைப் பலவகை உணவுகளை அடுக்குவது (toppings) என எடுத்துரைத்து நம் பரிணாமத்தை பீட்சாவுடன் சுவையாக சொல்லி சிலாகிக்க வைக்கிறார் டோனி யோசப்.

இந்தியத் துணைக்கண்டத்தில் கடந்த 65,000 ஆண்டுகளுக்கான மனித பரிணாமத்தையும், குறிப்பாக மரபணு ஆய்வுத் தரவுகளாலும் புரியவைக்கிறார். Haplogroup என்ற மரபணு குழுவால் ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதனின் பல லட்ச ஆண்டுகளின் பரிணாமத்தை மரபணு அறிவியலுடன் குறிப்பாக mtDNA போன்றவற்றை ஆசிரியர் புரியவைத்தது இந்தப் புத்தகத்தின் வெற்றி. 

உதாரணமாக உடல் செரிமானத்திற்கான DNA பற்றி கூறுகையில், ஆரியர்கள் பால் மற்றும் பால் பொருட்களை எளிதாக செரிக்கும் தன்மை உடையவர்கள் என்றும்  திராவிடர்கள் ஆடு, மாடு மற்றும் மீன்களை உண்டு செரிக்கும் தன்மை உடையவர்கள் என்றும் மரபணு வித்தியாசத்துடன் எடுத்துரைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.

குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்பதை உலகமே ஏற்றுக் கொண்ட போதிலும், சமீபகாலம் வரை சீனர்கள் இதனை ஏற்கவில்லை. தங்கள் உருவம், உயரம், சருமம் மற்றும் ரோமத்தின் வித்தியாசங்களை மேற்கோளிட்டு மறுத்தவர்கள், மரபணு ஆய்வின்படி உணர்ந்த பின்னரே ஏற்றனர்.

இது போன்ற ஆச்சரியங்களை மந்திரத்தோடு (Magic) ஒப்பிடுகிறார் டோனி யோசப். அதாவது சிறுவயதில் நாம் மந்திரங்கள் மற்றும்  மந்திரவாதிகளை முதலில் ஆச்சரியமாகப் பார்ப்போம். அதன் பின்புலத்தில் உள்ள யுக்திகள் தெரிந்த பின் சற்று தளர்ந்து “அட இவ்வளவு தானா!” என நினைத்து சில நாட்களுக்குப் பிறகு ஆழமாக உற்று நோக்குவோம். இன்றைய கால கட்டங்களில் மரபணு ஆய்வை மனிதன் உற்றுநோக்குகிறான்.

மனித இனத்தின் தொட்டிலாகத் (Cradle of Human Civilisation) திகழ்கிறது ஆப்பிரிக்கா. மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு இடம்பெயர்வு (Migration) அதி முக்கிய காரணியாகிறது. பல ஆய்வாளர்கள் OoA - Out of Africa என்ற கோட்பாட்டை நம்புகின்றனர்.

ஆடு, மாடு போன்றவற்றின் உணவுக்காக மேய்த்தல் தொழிலுடன் இடம்பெயர்வு நடந்துள்ளது. Steppe (Eurasia தென் கிழக்கு ஐரோப்பா) என்ற இடம் சமமான நீர்நிலைகளுடைய, புல்வெளி நிலப்பரப்புடன் மனிதனுக்குத் தோதாக அமைந்திருந்தது. இங்கு தான் வேளாண்மை ஆரம்பித்திருக்க வேண்டும் என டோனி யோசப் ஆதாரத்துடன் எடுத்துரைக்கிறார். வேளாண்மை வளர வளர மனிதனின் இடம்பெயர்வு குறைய ஆரம்பித்து  மக்கட்தொகை மிக வேகமாக உயர்ந்தது. சிலர் இடம்பெயர்வு செய்து இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் அரப்பா நாகரீகத்தைத் தோற்றுவித்தனர்.

மனித இனத்தின் இடம்பெயர்வு ஆப்பிரிக்காவில் தொடங்கி, ஐரோப்பா சென்று, அங்கிருந்து Steppe நிலப்பரப்பு வழியாக ஆசியா முழுக்க வெவ்வேறு திசைகளில் படர்ந்து, அலாச்கா வழியாக வட அமெரிக்கா, பிறகு தென் அமெரிக்கா என பரவி பல லட்ச ஆண்டுகளாக பரிமாணித்து இன்று பூமி முழுவதுமாக தழைக்கிறது.

தெற்காசிய துணைக்கண்டத்தில், பல திசைகளில், பல காலங்களில் இடம்பெயர்வு நடந்துள்ளது என்பதைப் பல ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோளிட்டு நிரூபிக்கிறார் டோனி யோசப். குறிப்பாக அரப்பா நாகரீகத்தைப் (Harappa Civilisation) பற்றி இந்தப்  புத்தகம் ஆழமாக அலசுகிறது. கிமு 6000 - ஆவது ஆண்டு காலத்தில் அதிக மக்கட்தொகை கொண்ட பகுதி, நகர நாகரீகம், வேளாண் சிறப்பு, வர்த்தகம், கலை, மொழி என ஏற்றமிக்கதாக விளங்கியது அரப்பா நாகரீகம்.

சாந்தி பாப்பு என்ற தொல்பொருள் ஆய்வாளர், சென்னை அருகே உள்ள அத்திரம்பாக்கத்தில்,  1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் பயன்படுத்திய கற்களாலான ஆயுதங்களை ஆதாரத்துடன் நிரூபித்தார். 

பரிணாம வளர்ச்சியால் எப்படி மனிதனின் உடலும், குணமும் காலப்போக்கில் மாறியதோ, அதனைப் போலவே மனிதன் கட்டுப்படுத்திய விலங்குகளின் தகவமைப்பும் (கொம்பு, பற்கள், வால், முடி) மனிதனுக்கு ஏற்றபடி மாறின. இதற்குத் தாவரங்களும் விதிவிலக்கல்ல. குறிப்பாக விதைகளின் தன்மை, தண்ணீரின் தேவை, வேர்கள் என பல உதாரணங்களை அடுக்குகிறார். பரிணாம வளர்ச்சியால் மனிதனின் இடப்பெயர்வு மிகவும் குறைந்து, ஆயுள் நீடித்து, மக்கள் தொகை பெருகியது. வீரமும், வலுவும் மிக்கவர்களே இடம் பெயர்ந்தனர்.

பல ஆய்வு ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தியர்களை இரண்டாக வகுக்கிறார்கள் 
ANI - Ancestral North Indians (மூதாதைய வட இந்தியர்கள்)
ASI - Ancestral South Indians (மூதாதைய தென் இந்தியர்கள்)
மூதாதைய வட இந்தியர்கள் (ANI)  Steppe வழியாக அரபு, ஆப்கானிஸ்தான் மற்றும் சிந்து சமவெளி வழியாக வந்துள்ளனர். மூதாதைய தென் இந்தியர்கள் (ASI) கடல் பகுதியை ஒட்டிய அரபிக்கடல் வழியாக தென்னகம் வந்துள்ளனர். இன்றும் வட இந்தியர்களின்  மரபணுவில் பால் மற்றும் தானியங்களை உண்டு செரிக்கும் தன்மை கூடுதலாகவும், தென் இந்தியர்களின் மரபணுவில் இறைச்சியை உண்டு செரிக்கும் தன்மை அதிகமாகவும் உள்ளது எனவும் மரபணு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஆரிய, திராவிட என இரண்டு நாகரீகங்களும் விவசாயத்தைச் சார்ந்துதான் தழைத்துள்ளன.

நீர்நிலைகளை அமைத்து நீராதாரத்தைக் கட்டுக்குள் வைத்திருந்த பகுதி மெசபடோமியாவில் உள்ள ஊருக் பகுதி. வட மற்றும் தென் இந்தியர்கள்  இந்தப் பாதையைக் கடந்து வந்துள்ளதால் நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர். அரப்பா, மெசபடோமியா நாகரீகம் போலவே தெற்கிலும் ஒரு நாகரீகம் இருந்திருக்க வேண்டும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இன்று அரப்பாவிலும், கீழடியிலும் மனிதன் நீர் மேலாண்மைக்கான சான்றுகள் பல உள்ளன.

வட மற்றும் தென் இந்தியர்களுக்குள்  மரபணு, உருவம், உணவு, உடை எனவாறு வேறுபாடுகள் பலவாக இருந்தாலும், மொழிதான் இவர்களின் தனித்தன்மையைக் காட்டுகிறது. அரப்பா மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பம் என இரண்டு பிரிவுகளாக மொழியால் உருமாறியது.  தென்னிந்திய மக்கள் பேசிய மொழி அவர்களாகவே உருவாக்கியிருக்க வேண்டும். இங்கிருந்துதான் பல சொற்கள் இடப்பெயர்ந்துள்ளன. அதே சமயம் வட இந்திய மொழிகள் அதன் இடப்பெயர்வு பகுதிகளில் பேசிய மொழியைத் தழுவி,  மருவி புதுப் புது மொழிகளாகத் தோன்றி, பலமொழிகளை வழக்கொழிய வைத்துள்ளதைக் குறிப்பிட்ட பகுதியை இந்தப் புத்தகத்தின் முக்கிய பகுதியாக உணர்கிறேன். 

மொழிகளில் திராவிட மொழியின் ஆதிக்கமே உள்ளது என மரபணு ஆய்வு உட்படப் பல ஆய்வுகளை மேற்கோள்களாகக் காட்டுகிறார். இதில் மிக சுவாரசியமானதாக, நாக்கை சுழற்றி பேசும் வார்த்தைகள் (Retroflex consonants) திராவிட மொழியின் தனித்தன்மை என நம்மை நிமிர வைக்கிறார் டோனி யோசப். 

கடந்த 2000 ஆண்டுகளாக ஆரிய மொழியினரின் ஆளுமைகள் வட மொழியை  வேத மொழி என்றழைத்து, கடவுளிடம் பேசும் மொழி என நம்பவைத்தனர். இரண்டாம்-மூன்றாம் நூற்றாண்டுகளில், மவுரிய பேரரசு காலத்தில் வேதமொழியாக சமற்கிருதம் இருந்துள்ளது. கடந்த 2000 ஆண்டுகளில் மட்டுமே இந்தியர்கள் 73 இனக்குழுக்களாக இருந்துள்ளனர். இத்தனை சிறிய இடத்தில் 73 இனக்குழுக்கள் என்பது மிக மிக ஆச்சரியமான ஒன்று. இந்த இனக்குழுக்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வர்ணங்களாக, ரிக்வேதமென மவுரியர்கள் வகுத்தனர். அவை அப்படியே காலப்போக்கில் சாதிகளாக, படிநிலைகளாக பல நூற்றாண்டுகள் இருந்துள்ளன. சைவ, வைணவ, புத்தமதம், இசுலாம், கிருத்துவ என பல மதங்களின் ஆளுமையிலும் கடவுளிடம் உரையாடும் வேதமொழி என இன்றும் இதன் தாக்கம் உள்ளது. 

காந்தி, அம்பேத்கர், மார்கசு மற்றும் பெரியாரின் சிந்தனைகள் கூட இந்தப் படிநிலைகளை இன்னமும் மீட்க முடியவில்லை. 

Out of Africa என 60-80ஆயிரம் ஆண்டுகளாக இடம்பெயர்வு, பல திசைகளிலும், பல முறைகளிலும் இடம்பெயர்வு, அரப்பா நாகரீகம், இனக்கலப்பு, பின்னாட்களில் மொழி வேற்றுமை, மொழி ஆளுமை, கடவுள் வழிபாட்டில் மொழி, மதம் என உலகில் வேறெங்கும் இல்லாத படிநிலைகளை இந்தியத் துணைக்கண்டம் பெற்றுள்ளது. பல கலப்புகள் மற்றும் பல பங்களிப்புகளின் கலவையாகவே இன்று இந்தியர் என்ற ஒற்றை குறியீட்டில் உள்ளோம். ஆனால் உண்மையில் நாம் அனைவரும் குடியேறியவர்களே! 
"YES WE ARE MIGRANTS...."