Sunday, May 3, 2020

யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வெளியிடப்பட்ட முருகப் பெருமானைக் குறிக்கும் அரிய நாணயங்கள்

யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வெளியிடப்பட்ட முருகப் பெருமானைக் குறிக்கும் அரிய நாணயங்கள்

 – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்


            யாழ்ப்பாண அரசு கால நாணயங்கள் பற்றி ஆராய்ந்த பலரும் அவர்கள் சேது என்ற மங்கல மொழி பொறித்த நாணயங்களை மட்டுமே வெளியிட்டனர் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் எமது தொல்லியல் ஆய்விற் கண்டுபிடித்த நாணயங்களிலிருந்து யாழ்ப்பாண மன்னர்கள் கந்தன், ஆறுமுகன் ஆகிய பெயர்கள் பொறித்த நாணயங்களையும் வெளியிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவற்றுள் முதலாவது வகை நாணயத்தில் இடப்புறம் பார்த்த நிலையில் உள்ள மயில் சின்னம் காணப்படுகிறது. ஏனைய நாணயங்களில் மயிலின் வாயில் பாம்புச் சின்னம் காணப்படுகின்றது. ஆனால் இந்நாணயத்தில் உள்ள சின்னம் பாம்பு உருவத்திலிருந்து சற்று வேறுபட்ட உருவமாக உள்ளது. மயிலுக்கு மேலே விளிம்பை ஒட்டியவாறு பிறைச்சந்திரன், சூரியன் என்பன காணப்படுகின்றன. நாணயத்தின் பின்புறத்தில் வேல் சின்னத்துடன் தமிழில் “கந்”(தன்) என்ற பெயர் காணப்படுகின்றது. இதன் கீழ், கால்களைக் குறிக்கும் இரு கோடுகள் காணப்படுகின்றன. 

            இரண்டாவது வகை நாணயத்தில் உள்ள மயில் இடப்புறம் பார்த்த நிலையில் காணப்படுவதுடன் அதன் வாயில் காணப்படும் பாம்பும் தெளிவாகத் தெரிகின்றது. நாணயத்தின் பின்புறத்தில் “ஆ” என்ற எழுத்துக் காணப்படுகிறது. இதனுடன் இணைந்த நிலையில் முதலாவது நாணயத்தில் வருவது போல் மனித வடிவில் அமைந்த கால் உருவங்கள் காணப்படுகின்றன. இதற்கு இடது, வலது புறமாக முதலாவது நாணயத்தில் வரும் சின்னங்கள் காணப்படுகின்றன. இவ்வகை நாணயங்கள் வடஇலங்கையைத் தவிர இலங்கையின் ஏனைய பாகங்களிலோ தென்னிந்தியாவிலோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழக நாணயங்களில் முக்கிய சின்னமாக இடம் பெறும் அரச இலச்சினை எதுவும் இந்நாணயங்களில் காணப்படவில்லை. ஆகவே இந்நாணயங்கள் யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வெளியிடப்பட்டதென்பதில் ஐயமில்லை.


            மேற்குறிப்பிட்ட இரு நாணயங்களில் ஒன்றில் மயில், வேல் சின்னத்தோடு “கந்” என்ற பெயரும், மற்றையதில் இதே சின்னங்களுடன் “ஆ” என்ற எழுத்தும் இடம் பெற்றுள்ளன. இரு நாணயங்களிலும் உள்ள மயிலின் தோற்ற அமைப்பு, சின்னங்களிடையேயும் காணப்படும் ஒற்றுமைகள், நாணயங்களின் வடிவமைப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இவை குறிப்பிட்ட காலப் பகுதியில் குறிப்பிட்ட ஒரு வம்சத்தால் அல்லது மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் என்பது தெரிகின்றது. இரு நாணயங்களிலும் மயில், வேல் ஆகியவை முக்கிய சின்னங்களாக இடம் பெற்றிருப்பதைக் கொண்டு இந்நாணயங்களை வெளியிட்ட மன்னர்களும், அவர்களின் ஆட்சிக்குட்பட்ட மக்களும் முருக வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது. 

            சேது மொழி பொறித்த நாணயத்தில் உள்ள நந்திக்கு முன்னால் சிறு உருவமாக வடிவமைக்கப்பட்ட மயில் இவ்விரு நாணயங்களிலும் பிரதான சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள “கந்”, “ஆ” என்பவை கந்தன் ஆறுமுகன் ஆகிய தெய்வப் பெயர்களின் குறுக்கமாகும். அப்பெயர்கள் இறைவனின் தலைப்பாகத்தையும், கீழ் உள்ள பாகம் இறைவனின் உடற்பாகத்தையும் குறிக்கின்றது. இம்மரபில் நாணயங்கள் வெளியிடும் முறை இடைக்காலத் தென்னிந்தியாவிலிருந்துள்ளது. இதற்கு சேரமன்னர் நாணயங்களில் பயன்படுத்திய ‘ச” என்ற எழுத்தையும் (ஆவைநெச 1998 : 160 – 1). மூன்றாம் வல்லாள மன்னன் ஆட்சியில் (கி.பி.1292 – 1345) வெளியிட்ட நாணயங்களில் வரும் ‘ப’ என்ற எழுத்தையும் குறிப்பிடலாம். இங்கே “ஆ” என்ற எழுத்திற்கும், “கந்” என்ற பெயருக்குக் கீழே நடுவில் உள்ள பகுதி இறைவனின் இடுப்புடன் இணைந்த காற்பகுதியாகத் தோன்றுகின்றது. இதை “ஆ” என்ற எழுத்துப் பொறித்த நாணயங்களில் தெளிவாகக் காணமுடிகின்றது.

            இந்த இடத்தில் யாழ்ப்பாண அரசு காலத்தில் நல்லூரில் அமைக்கப்பட்ட கந்தன் ஆலயம் தொடர்பாக கைலாயமாலையில் வரும் குறிப்பை மேற்கூறப்பட்ட நாணயங்களுடன் தொடர்புப்படுத்திப் பார்க்கும் போது இந்நாணயங்களை வெளியிட்ட மன்னன் யார் என்பது ஓரளவுக்குத் தெரியவரலாம். கைலாயமாலையில் வரும் தனிச் செய்யுள் நல்லூரில் கந்தன் ஆலயத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் அமைத்தவன் புவனேகபாகு எனக் கூறுகின்றது. இச்செய்யுள் குறிக்கும் காலத்தைச் சக வருடம் எண்ணூற்றெழுபதாக எடுத்துக் கொண்டு பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மந்திரி புவனேகபாகு காலத்தில் அரசும், கந்தன் ஆலயமும் தோன்றியதாக முதலியார் இராசநாயகம் அவர்கள் கூறுகின்றார். ஆனால் இக்கூற்றை ஏற்கக் கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைக்கவில்லை. இலங்கையில் புவனேகபாகு என்ற பெயரில் 7 மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களுள் 6ஆம் பராக்கிரமபாகு தென்னிலங்கையில் ஆட்சி செய்த காலத்தில் அவன் வளர்ப்பு மகனாகிய சபுமால்குமர என்ற மலையாள இளவரசன் செண்பகப்பெருமாள் 1540 இல் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் புவனேகபாகு என்ற பெயருடன் ஆட்சிபுரிந்துள்ளான். இதை யாழ்ப்பாணத்தின் பிரதான வீதியில் கிடைத்த இவன் காலத் தமிழ்க் கல்வெட்டும் உறுதிப்படுத்துகின்றது. இக்கல்வெட்டு யாழ்ப்பாணம் பிரதான வீதியிலிருந்த தேநீர் சாலையில் வாசல் படியாகப் பயன்படுத்தப்பட்ட கற்தூணில் எழுதப்பட்டிருந்தது. 25 வரிகளில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டில், 15 வரிகளே ஓரளவு தெளிவாகக்காணப்பட்டன. 1968 ஆம் ஆண்டு இலங்கைத் தொல்லியற் திணைக்கழகம் இக்கல்வெட்டைப் படியெடுத்திருந்தாலும் 1969ஆம் ஆண்டு பேராசிரியர் இந்திரபாலா அவர்கள் மீளப்படியெடுத்து அவரால் வாசிக்கப்பட்டதன் பின்னரே இக்கல்வெட்டின் வரலாற்று முக்கியத்துவம் வெளிச்சத்திற்கு வந்தது. அக்கல்வெட்டிலிருந்து யாழ்ப்பாண வைபமாலை, கைலாயமாலை முதலான நூல்கள் குறிப்பிடும் புவநேகபாகு கி.பி.15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் ஆட்சிபுரிந்த செண்பகப்பெருமாள் என்பதும் அவனே கோட்டை மன்னன் ஆறாம் பராக்கிரமபாகுவின் பெயரில் இக்கல்வெட்டை வெளியிட்டான் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இக்கல்வெட்டு ஒரு கட்டிடத்தின் பாகமாக இருப்பதால் அது புவநேகபாகு கட்டிய நல்லார் கந்தன் ஆலயமாக இருந்திருக்கலாம் எனப் பேராசிரியர் இந்திரபாலா கூறுகின்றார்.

            இந்நாணயங்கள் சேதுமொழி பொறித்த நாணய மரபிலிருந்து வேறுபட்டு இருப்பதைக் கொண்டு யாழ்ப்பாண அரசை ஆட்சி புரிந்த செண்பகப்பெருமாளே இந்நாணயங்களை வெளியிட்டுள்ளான் என்ற முடிவுக்கு வரமுடிகின்றது. இம்முடிவைப் பொருத்தமானதெனக் கூறியுள்ள பேராசிரியர் பத்மநாதன் இந்நாணயங்களின் வரலாற்று முக்கியத்துவம் பற்றிய தனது கருத்தையும் அண்மைக்கால ஆய்வொன்றில் பின்வருமாறு கூறுகிறார்:
‘கந்’ என்ற எழுத்துக்கள் கந்தசாமியினது பெயரையும், ‘ஆ’ என்ற எழுத்து ஆறுமுகசுவாமியினது பெயரையுங் குறிப்பனவாதல் வேண்டும். அவ்வாறாகில் இந்த நாணயங்கள் கந்தக் கடவுளின் பெயரால் வழங்கப்பட்டவை. அவற்றைச் செண்பகப்பெருமாள் வெளியிட்டான் என்று கொள்ள முடிகின்றது. ஆதியான கந்தசாமி கோயிலை அவனே அமைத்தான் என்பது பல நூற்றாண்டு காலமாக நிலவி வரும் ஐதீகம் என்பது குறிப்பிடற்குரியது. இந்த அடிப்படையில் நோக்குமிடத்து யாழ்ப்பாண தேசத்தவரது சமய வழிபாட்டு மரபுகளுக்கும் மொழி வழக்கிற்கும் ஏற்றவகையிலேயே தனது பதவிக்கும் அதிகாரத்திற்கும் உரிய சின்னங்களை அமைத்துக் கொண்டான் என்பது தெளிவாகிறது. அது பிரமிக்கத்தக்கவொன்று. அது குடியாட்சி அரசியல் நெறி புரிந்துணர்வின் வழி ஏற்பட்ட நல்லெண்ணத்தின் அடையாளம். நல்லெண்ணத்திற்கு நல்லதொரு உதாரணம்”.

            இந்நாணயங்களின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரையைப் படித்த தென்னிலங்கை நண்பர் ஒருவர் தன்னிடம் உள்ள இவ்வகை நாணயங்களின் புகைப்படங்களை அண்மையில் எனக்கு அனுப்பிவைத்தார். அவரிடம் இந்நாணயங்கள் எங்கிருந்து கிடைத்ததென வினாவிய போது அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக் கடையொன்றில் பணம் கொடுத்து வாங்கியதாகக் கூறினார். ஆனால் விலைமதிக்க முடியாத இந்நாணயங்களை தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் அருங்காட்சியகத்தைத் தவிர இலங்கையின் எந்த பல்கலைக்கழகத்திலோ, அருங்காட்சியகத்திலோ காணமுடியவில்லை.




தொடர்பு:
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
https://www.facebook.com/push.malar




No comments:

Post a Comment