— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
முன்னுரை:
தமிழகத் தொல்லியல் துறையின் வெளியீடான ”சோழர் சமுதாயம்’ என்னும் நூலைப் படித்துக்கொண்டிருந்தேன். நூலில் திரு. இல. தியாகராசன் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று. ”சோழர் காலக் குற்றங்களும் விசாரணைகளும்” என்னும் தலைப்புக்கொண்டது. மன்னர்களின் காலத்தில் எவ்வகைக் குற்றங்கள் நிகழ்ந்தன என்பதையும், குற்றவாளிகள் எவ்வகையில் தண்டிக்கப்பெற்றார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள அக்கட்டுரை ஓரளவு துணை செய்தது. மேலும் சில செய்திகளைத் தேடும் முயற்சியை உள்ளம் நாடியது. அவ்வாறு கிடைத்த செய்திகளையும் சேர்த்த பதிவை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
தொடக்கமாக, மேற்குறித்த நூலில் காணப்பட்ட சில செய்திகள். அரசுக்கு வரி செலுத்தாமல் ஏய்த்தல் இன்று பரவலாக நாம் காணும் குற்றம். அரசர் காலத்திலும் இக்குற்றம் இருந்துள்ளது. பொதுச் சொத்துகளை முறைகேடாகத் தனியார் பயன்கொள்ளுதல். அரசின் உள்ளாட்சி நிருவாகத்தில் முறையான கணக்குக் காட்டாதிருத்தல். கோயில்களில் ஏற்படுத்தப்பட்ட நிவந்தங்களைச் சரிவரச் செய்யாதிருத்தல். கோயில் செல்வங்களைத் திருடுதல். சோழ அரசர்களின் சிறந்த நிருவாகத்தையும் கடந்து இவை போன்ற முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளன என்பதைக் கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.
கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில், மேற்சொன்ன குற்றங்களை மிகுதியும் செய்தவர்கள் பிராமணர்களும் தேவகன்மிகளும் எனக் காண்கிறோம். தேவகன்மிகள் என்போர் கோயில்களில் பணிபுரிவோர். பிராமணர்கள், தேவதான ஊர்களையும், பிரமதேயச் சதுர்வேதிமங்கலங்களையும் நிருவாகம் செய்தவர்கள். அரசன் ஓர் ஊரையே கோயிலுக்குக் கொடையாக அறிவித்தல் வழக்கம். அவ்வூரின் வருவாய் கோயிலுக்கே சேரும் என்பது அக்கொடையின் நோக்கம். அவ்வகை ஊர்களின் நிருவாகப் பொறுப்பும், ஊரின் வருவாய் முறையாகக் கோயிலுக்குச் சென்றடைவதைக் கண்காணிக்கும் பொறுப்பும் ஊர்ச்சபையைச் சார்ந்தது. அவ்வகை ஊர்ச் சபையில் பிராமணரே மிகுதியும் இருந்தனர் எனலாம். அடுத்து, வேதம் வல்ல பிராமணர்க்கு ஓர் ஊர் அல்லது ஊரின் ஒரு பகுதியை அரசன் உரிமையாக்குவான். அவ்வகை ஊர்கள் சதுர்வேதி மங்கலங்கள் எனப் பெயர் பெறும். இவ்வூர்களின் நிருவாகப்பொறுப்பு சபை, பெருங்குறி என்னும் அமைப்பைச் சாரும். இவ்வகைச் சபையில் இருப்போர் பிராமணரே. இவ்விருவகை ஊர்களும் தன்னாட்சி பெற்றவை. மிகுந்த அதிகாரம் உடையவை.
வரி ஏய்ப்பு:
அரக்கோணம் வட்டம், திருமால்புரம் ஊர்க்கல்வெட்டு வரி ஏய்ப்பு ஒன்றைப்பற்றி விரிவாகக் கூறுகிறது. வரி ஏய்ப்பைப் பற்றிய இக்கல்வெட்டின் வரிகளே நூற்றுக்குமேல் உள்ளன என்பது வியப்பு; சிறப்பும்கூட. தற்காலத்தில், சில நிதி முறைகேட்டுக் குற்றங்களைப்பற்றிய ஆவணங்கள் நூறு, ஆயிரம் எனப் பக்கங்களைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். திருமால்புரத்துக் கோயிலுக்குக் கொடையாகச் சிற்றியாற்றூர் என்னும் ஊர் அளிக்கப்பட்டது. அவ்வூரின் இறையாக (அதாவது அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியாக) மதிப்பிட்ட விளைச்சல் வருவாய், 3561 காடி நெல்லும், 200 கழஞ்சுப் பொன்னும் ஆகும். ஆனால், பொறுப்பிலிருந்த பிரமதேயச் சபை, இதை அரசு வரிப்பொத்தகத்தில் பதிக்கவில்லை. அரசு இறைக்கணக்கில் எழுதவில்லை. கல்வெட்டுச் சொல் வழக்கில், இதை “வரியிலிடுதல்” என்று குறிப்பர். வரியிலிடாது ஏய்த்த இந்தக் குற்றம் கி.பி. 893 முதல் கி.பி. 974 வரை ஏறத்தாழ எண்பத்திரண்டு ஆண்டுகள் நடந்துள்ளது. குற்றம் கண்டுபிடிக்கப் பட்டுச் சினமடைந்த அரசன் ஊர் நிலங்களைக் கோயில் நிருவாகத்தாரின் பொறுப்பில் மாற்றிவிடுகிறான். பிரமதேயச் சபையினர் தண்டிக்கப்படுகிறார்கள்.
இறைவனுக்குப் படைக்கும் அமுதுபடியில் ஊழல்:
மேற்குறித்த திருமால்புரத்து அக்னீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைக் கோயிலில் பூசை உரிமை பெற்ற உண்ணாழிகை உடையார்கள் (சிவப்பிராமணர்கள்) தங்கள் உடைமையாகப் பயன்படுத்தியதோடு, கோயிலின் வழிபாட்டு நிவந்தங்களைச் செய்யாது விடுகின்றனர். இறைவனுக்குப் படைக்கும் அமுதுபடியில், கறியமுது, நெய்யமுது, தயிரமுது ஆகியன இடம்பெறுதல் நடைமுறை. இங்கே ஊழல் செய்த சிவப்பிராமணர்கள், வெறும் அரிசியை அவித்துப் படைத்தனர்; கறியமுது, நெய்யமுது, தயிரமுது ஆகியன இல்லை. குற்றமிழைத்தவரிடமிருந்து எழுபத்து நான்கு கழஞ்சுப்பொன் தண்டம் பெறப்பட்டது.
மற்றுமொரு ஊழல்:
திருச்சானூர் திருப்பாலதீசுவரர் கோயில் திருவிழா நடத்தக் கொடையாகக் கோயில் பண்டாரத்தில் (கருவூலத்தில்) முதலாகச் செலுத்தப்பட்ட இருபத்தாறு கழஞ்சுப் பொன்னைக் கடனாகப் பெற்றுக்கொண்டு அதன் பொலிசையில் (வட்டியில்) திருவிழாவினை நடத்த ஒப்புக்கொண்ட பிரமதேயச் சபையினர், அதைச் செயல்படுத்தாமல் ஏமாற்றியுள்ளனர். இவ்வாறு 217 ஆண்டுகள் கடந்தபின்னர், ஊழலைக் கல்வெட்டுச் சான்றுகளோடு கோயிலின் கண்காணிகளான மாகேசுவரர்கள் அரசனிடம் நிறுவியபின், அரசன் பிரமதேயச் சபையினரின் உரிமையைப் பறித்ததோடு முதலாக வைத்த இருபத்தாறு கழஞ்சுப் பொன்னைக் கோயில் கருவூலத்தில் திரும்பக் கட்டவைத்தான்.
தேடுதல் மூலம் கிடைத்த செய்திகள்:
தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருக்கொள்ளிக்காடு ஊரில் உள்ள அக்னீசுவரர் கோயிலின் நிலத்தை, ஊரிலிருந்த சிலர் தம் உடைமையாக்கிக்கொண்டு பலனைப் பெற்றுவந்தனர். கோயில் மாகேசுவரர் அரசன் முதலாம் இராசேந்திரனிடம் வழக்குத் தொடுத்தனர். அரசனின் ஆணைப்படி வழக்கினை ஆராய்ந்த இராசேந்திரசோழ மூவேந்த வேளான் ஊழல் நடந்தது உண்மை என அறிந்து குற்றவாளிகளைத் தண்டிக்கிறான். தண்டமாக நானூறு காசுகள் செலுத்தவேண்டும். செலுத்த இயலாமல் குற்றவாளிகள் நிலத்தை இறையிலி செய்து கோயிலுக்கே கொடுத்துவிடுவதாக வேண்டியதால், அந்நிலம் அவ்வாறே இறையிலி செய்யப்பட்டது. (இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை எண்: 139/1935-36.).
திருத்துறைப்பூண்டி திருத்துறை நாயனார் கோயிலைச் சேர்ந்த கணக்கர், தானத்தார், முதலிகள் சிலர் கோயிலின் சொத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தமையும், அவர்கள் சிவத்துரோகிகள் என்று அடையாளப்படுத்தப்பெற்று, சிவத்துரோகிகள் பெறும் தண்டனைக்குள்ளானமையும் இக்கோயில் கல்வெட்டு ஒன்றின்மூலம் தெரியவருகின்றன. (கல்வெட்டு எண்: 139/1976-திருத்துறைப்பூண்டிக் கல்வெட்டுகள்-துறை வெளியீடு-1978.)
தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுதமங்கலம் சோமநாத சுவாமி கோயில் கல்வெட்டு கூறும் செய்தி சற்றே மாறுபட்டது. சோமநாத சருப்பேதி மங்கலம், சீதக்க மங்கலம் என இரு மங்கலங்கள். முடிகொண்ட சோழப்பேராற்றிலிருந்து அணைவழி நீர்ப்பாசனத்திற்காக நீர் பாய்ச்சுவது பற்றி இரு ஊராரிடையே ஒரு பிணக்கு ஏற்பட்டது. (தகராறு என்னும் சொல்லுக்கு அன்று வழங்கிய அழகிய தமிழ்ச்சொல் பிணக்கு. கல்வெட்டில் “அணைப்பிணக்கு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.) இந்தப்பிணக்கின் காரணமாக ஒருவன் தண்டிக்கப்படவேண்டும். ஆனால், தவறுதலாக வேறொருவன் தண்டிக்கப்பட்டுவிடுகின்றான். இது தெரியவந்த பின்னர், தவறுதலாகத் தண்டிக்கப்பட்டவனின் மகனுக்கு இழப்பீடு தரப்படுகிறது. இது போன்ற குறிப்புகளில், ஒருவனுக்குப் பதில் இன்னொருவன் என்று நாம் வழக்கமாக எழுதுவோம். பதில் என்பது வடமொழிச் சொல் என்று எனக்குத் தோன்றியதால், அதைத் தவிர்த்து எழுத ”தவறுதலாக வேறொருவன்” என்று மேலே நான் எழுதியுள்ளேன். ஆனால், கல்வெட்டு எழுதப்பெற்ற கி.பி. 13-ஆம் நூற்றாண்டில், கல்வெட்டில் “பதில்” என்பதற்குத் ”தலைமாறு” என்று நல்ல தமிழ்ச் சொல்லைக் கையாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தவறான தண்டனை தரப்பட்டது தெரிந்தவுடன், தண்டனை பெற்றவனின் மகனுக்கு இழப்பீடாக நிலம் அளிக்கப்பட்டது. இது போன்ற நிலக்கொடை, “உதிரப்பட்டி” என்று அழைக்கப்பட்டது. (தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை-நன்னிலம் கல்வெட்டுகள்-1980. க.வெ.எண்: 267/1978)
சோழர் காலத்தில் குற்றமும் தண்டனையும்:
கே.கே.பிள்ளை அவர்கள் தாம் எழுதிய “தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்” என்னும் நூலில், சோழர் காலத்துச் சூழல் எவ்வாறிருந்தது எனக்குறித்துச் செல்கிறார். குற்றங்கள், இருவகையாகப் பார்க்கப்பட்டன. ஒன்று உடலைப் பற்றிய குற்றங்கள்; மற்றது உடைமையைப் பற்றிய குற்றங்கள். குற்றங்களுக்குத் தண்டனையாகக் குற்றவாளிகளின் உடைமைகளைப் பறிமுதல் செய்வதைத்தான் கிராம நீதிமன்றங்கள் முறையாகக் கொண்டிருந்தன. திருடு, பொய்க் கையொப்பம், விபச்சாரம் ஆகியன கொடுங்குற்றங்களாகக் கருதப்பட்டன. சில குற்றங்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதில்லை. குற்றவாளிகள், கோயில்களுக்கோ அன்றி மடங்களுக்கோ இவ்வளவு தானம் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
சில தீர்ப்புகள் வியப்பளிக்கக் கூடியவை. பிராமணனைக் கொன்ற ஒருவனைச் சிலர் எருமைக்கடாவின் காலில் பிணித்து விட்டனர். கடாவினால் அவன் அங்குமிங்கும் இழுப்புண்டு மாண்டுபோனான். அவ்வாறு கொன்றவர்களுக்குக் கழுவாயாக மடத்தில் சிறப்பு வழிபாடு ஒன்று நிறுவ வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பரிவேட்டைக்குச் சென்ற செல்வப்பேரரையன் என்பானைத் தேவன் என்பவன் கைப்பிழையால் அம்பெய்து கொன்றுவிட்டான். இவன் அறியாமல் செய்த குற்றத்துக்குக் கழுவாயாகக் கோயிலுக்கு அரை நந்தா விளக்கு வைத்து வர வேண்டுமென்று தீர்ப்பாயிற்று. (கட்டுரை ஆசிரியர் கருத்து: அரை நந்தா விளக்கு எப்படி என்னும் ஐயம் எழலாம். முழு நேரம் எரிகின்ற விளக்கு அரை நேரம் எரிந்தால் அரை விளக்கு எனக் கொள்ளவேண்டும். முழு நேர விளக்குக்குத் தொண்ணூறு ஆடுகளைக் கொடுக்கவேண்டும் என்பது அன்றைய வழக்கம். எனவே, அரை விளக்கெரிக்க நாற்பத்தைந்து ஆடுகள் தரப்படவேண்டும்).
இந்தியத்தொல்லியல் ஆண்டறிக்கை:
இந்தியத்தொல்லியல் ஆண்டறிக்கைகளில், 1887 முதல் 1905 வரையிலான ஒரு தொகுதியைப் படித்துக்கொண்டிருந்தபோது இரு செய்திகள் தெரியவந்தன. சீயமங்கலம் என்னும் ஊரிலுள்ள தூணாண்டார் கோயில் கல்வெட்டு ஒன்று (க.வெ. எண்: 64/1900) கூறும் செய்தி: ஒருவன், தவறுதலாகத் தன் ஊரினன் ஒருவனைக் கொன்றுவிடுகிறான். ஆண்டறிக்கை, இந்நிகழ்ச்சியை “shot a man by mistake“ என்று குறிப்பிடுவதால், கொலை, அம்பெய்தியதன் காரணமாகவே நிகழ்ந்திருக்கக்கூடும் எனலாம். அரசு சார்பாக நிருவாக அலுவலர் ஒருவரும், நாட்டார் சபையினரும் ஒன்றுகூடிக் கொலைக்குற்றத்தை ஆராய்கிறார்கள். குற்றம், பிழையினால் நேர்ந்ததால் குற்றவாளி இறக்கவேண்டியதில்லை என்றும், சீயமங்கலம் தூணாண்டார் கோயிலில் விளக்கொன்றை எரிக்கவேண்டும் என்றும் தீர்மானித்தார்கள். அதன்படி, குற்றவாளி, பதினாறு பசுக்களைக் கொடையாகக் கோயிலுக்கு அளிக்கிறான்.
திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்று (க.வெ. எண்: 77/1900) கூறும் செய்தி: குற்றம் சாட்டப்பட்டவன், வேட்டைக்குச் சென்றபோது, அவனது குறி தவறி, ஆள் ஒருவனைத் தாக்கி அவன் இறந்துபோகிறான். நாட்டார் சபை கூடிக் குற்றவாளி கோயிலுக்குப் பதினாறு பசுக்களை அளிக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறது. (இந்நிகழ்ச்சி, மேலே கே.கே. பிள்ளை அவர்களின் நூலில் காணப்படுகின்ற செய்தி என்றே கொள்ளலாம். பதினாறு பசுக்கள், அரை விளக்குக்காகவும், முப்பத்திரண்டு பசுக்கள் ஒரு விளக்குக்காகவும் கொடையாக அளிக்கப்பட்ட செய்திகள் கல்வெட்டுகளில் வருகின்றன. ஆடுகளாகக் கொடுக்கும்போது, ஒரு விளக்குக்குத் தொண்ணூறு ஆடுகள் எனவும், தொண்ணூற்றாறு ஆடுகள் எனவும் இருவகையாகக் கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன. மேற்குறித்த இரு கல்வெட்டுகளிலுமே, ஒரு இராசகேசரிவர்மன் குலோத்துங்கன் குறிப்பிடப்பெறுகிறான். எனவே, 12-ஆம் நூற்றாண்டுச் சூழலை இக்கல்வெட்டுகள் உணர்த்துவதோடு, குற்றமிழைத்தவன் இறக்கவேண்டியதில்லை என்னும் தீர்ப்பு மொழி, கொலைக் குற்றத்துக்குத் தண்டனையாக மரணமே வழக்கத்தில் இருந்ததைப் புலப்படுத்துகிறது என்று ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.
திருப்புலிவனம் வியாக்கிரபாத ஈசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்றிலும், மேற்குறித்தவாறு, பிழையால் நேர்ந்த கொலைக்குத் தண்டனையாகக் குற்றவாளி பதினைந்து பசுக்களைக் கோயிலுக்கு அளிக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடப்படுகிறது.
கதம்பர் காலக் குற்றம் ஒன்று:
கதம்பர் குல அரசன் இரண்டாம் ஜயகேசியின் காலத்தில் (12-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்) நீதி நிருவாகம் எவ்வாறிருந்தது என்னும் ஒரு குறிப்பில் ஒரு குற்றமும் அதன் தண்டனையும் கூறப்பட்டுள்ளது. பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தவல்ல குற்றங்களில் அரசனின் நேரடித் தலையீடும், தீர்ப்பும் இருந்தன. பிற குற்றங்களின் தன்மைக்கேற்ப, குற்றங்களை “த4ர்ம அத்4யக்ஷ” என்னும் தலைமை நீதியரசரும் அவரின்கீழ் இருந்த நீதியரசர்களும் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கினர். கள்வர், திருடர், பகைவர் யாராயினும் அவர்கள் உடலால் தாக்கப்படக்கூடாது எனச் சட்டம் இருந்தது. அவர்களுக்கு மூன்று க3த்3யாணம் பொன் தண்டமாக விதிக்கப்பட்டது. கொலைக்குற்றத்துக்குத் தண்டனையாக மரணம் இருந்ததில்லை. இழப்பீடாகப் பணம் தண்டமாகப் பெறப்பட்டது. கொலையுண்டவரின் குடும்பத்துக்கு நூறு க3த்3யாணம் பொன் தரப்பட்டது. அதில் பகுதியான ஐம்பது பொன் அரசபண்டாரத்தில் செலுத்தப்பட்டது.
நரசிம்மர் கோயில் ஒன்றில், இறைவனுடைய அணிகலன்களைக் கோயிலின் செல்வாக்குள்ள வைணவப் பிராமணன் ஒருவன் களவாடிய குற்றம் அரசன் இரண்டாம் ஜயகேசியின் முன்னிலைக்கு வருகிறது. களவாடப்பட்ட அணிகலன்களுக்கு ஈடான மதிப்புள்ள பிராமணனின் சொத்துகள் அவனிடமிருந்து மீட்கப்படுகின்றன.
”காலப்போக்கில் தமிழகக் கல்வெட்டுகள்” என்னும் கட்டுரையில் (வரலாறு-ஆய்விதழ் 2016) தொல்லியல் துறை அறிஞர் சு.இராசகோபால் அவர்கள் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறார்:
இடைக்காலத்தில் பல்வேறு இடங்களில் கைப்பிழையால் உயிர்ச்சேதங்கள் நிகழ்ந்தபோது தண்டனையாகக் கோயில்களில் விளக்கெரியச் செய்தமையைக் கரந்தை, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகளால் அறியலாம். குடுமியான்மலையில் காய்ச்சிய கொழுவினை உருவு பிரத்தியம் செய்து பிழை அல்லது பிழையின்மையை உறுதி செய்ததை ஒரு கல்வெட்டுப் பதிவு காட்டுகிறது. ஜம்பையில், அதிக/தவறான வரிவிதிப்புக் காரணமாகப் பெண்ணொருத்தி தன் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தியும் பதிவாகியுள்ளது.
தண்டனை போன்றதொரு சடங்கு:
கருநாடகத்தில் 17-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு சடங்கு தண்டனை போன்ற தன்மையைக் கொண்டுள்ளதைக் காண்கிறோம். மைசூர் மாவட்டம் யளந்தூரில் உள்ள 17-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கூறும் செய்தி குறிப்பிடத்தக்கது. கருநாடகத்தில் குயவர்கள் கும்பார செட்டிகள் என அழைக்கப்பெறுகிறார்கள். மேற்படிக் கல்வெட்டில் அவர்கள் “கோவர்” எனக்குறிக்கப்பெறுகின்றனர். தமிழகக் கல்வெட்டுகளில் இடம்பெறும் “வேட்கோவர்” என்னும் சொல்லின் வடிவமே இது என்பதில் ஐயமில்லை. இந்தக் கோவர்கள் மறுக்கப்பட்ட சில உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடுகையில், கொதிக்கின்ற நெய்யில் தம் கைகளை அமிழ்த்தி எடுக்கிறார்கள். இச்சடங்கில் அவர்கள் வெற்றி பெறுவதாகக் கல்வெட்டு கூறுகிறது.
மண்டியா மாவட்டம், மத்தூர் வட்டத்து ஊர் ஒன்றில் ஒரு நிலக்கிழான் (வேளாளத்தலைவன்), கோயில் சொத்து மற்றும் பூசை உரிமைக்காகப் பிராமணர்க்கெதிரான ஒரு வழக்கில், கொதிக்கும் நெய்யில் மூன்று முறை கைகளை அமிழ்த்தி வென்றதை அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டின் காலம் கி.பி. 1654.
காய்ச்சிய நெய்யில் கையை விட்டு மெய்யை வெளிப்படுத்தும் மரபு தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளமை, கொங்குமண்டலச் சதகத்தில் கூறப்பட்ட செய்தியொன்றால் அறியலாகும்.
கொங்கு மண்டல சதகம் 52
ஆணூர் என்னும் ஊர் காரையூர் எனவும் வழங்கப்பட்டுவந்தது.
இதன் ஊர்த்தலைவர் “சர்க்கரை”.
இவர் மீது பாடப்பட்ட நூல்களுள் ஒன்று “நல்லதம்பி சர்க்கரை காதல்”.
இவர் காயும் நெய்யில் கையை விட்டுச் சத்தியம் செய்த செய்தி இந்த நூலிலும் கூறப்பட்டுள்ளது.
கீழக்கரைப் பூந்துறை நாட்டில் இருப்பது திருச்செங்கோடு.
இவ்வூரில் வீரபத்திரர் என்னும் புலவர் ஒருவர் இருந்தார்.
இவருக்குக் காமிண்டன் என்னும் பெயரும் உண்டு.
இவர் ஏகாலியர் (வண்ணார்) குலத்தவர்.
இவர் சர்க்கரையாரின் கொடை பற்றிக் கேள்விப்பட்டுக் காரையூர் வந்தார்.
சர்க்கரையார் வீரபத்திரரிடம் அன்புடன் உரையாடினார்.
வீரபத்திரருக்கு விருந்தளிக்க விரும்பினார்.
“இதோ வந்துவிடுகிறேன். உணவு உண்டு செல்லலாம்” என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டு சமையலறைக்குள் சென்றார்.
சமையலறையில் சற்றே காலம் தாழ்ந்தது.
அந்த வேளையில் வீட்டு வேலையாள் ஒருவர் வந்து “உணவு படைக்கச் சற்றே காலமாகும்” என்றார்.
இந்தச் சொற்களைக் கேட்ட புலவர் காமிண்டன், சர்க்கரையார் தம்மைப் புறக்கணிப்பதாக எண்ணினார்.
சர்க்கரையார் வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
சர்க்கரையார் சமையல் முடிந்த பின்னர் புலவரை அழைக்க வந்தார்.
புலவரைக் காணவில்லை.
தேடிச் சென்று கண்டார்.
விருந்துண்ண வருமாறு அழைத்தார்.
“எதிர்த்தவருக்கு மிண்டன்; புலவருக்குத் தொண்டன் என்று உங்களைப் பற்றிச் சொல்லக் கேட்டு வந்தேன். தாங்கள் என்னைப் புறக்கணித்து விட்டீர்கள்” – என்றார் புலவர்.
இதைக் கேட்ட சர்க்கரையார் புலவரை வீட்டுக்கு அழைத்துவந்து காயும் நெய்யில் தன் கையை விட்டு, “தங்களைப் புறக்கணிக்கவில்லை” என்று சத்தியம் செய்தார்.
புலவர் அமைதி பெற்று அவர் அளித்த உணவை உண்டார்.
பின்னும் நிறைவடையவில்லை.
உண்ட எச்சில் வாயையும், கையையும் கழுவி விடவேண்டும் என்றார் புலவர்.
சர்க்கரையார் அவற்றையும் செய்தார்.
இத்தகைய சான்றோர் வாழ்ந்தது கொங்குமண்டலம்.
முனைவர் ந. ஆனந்தி உரை விளக்கம்:
முகம் சோர்ந்து அகன்றிரும் ஏகாலிப் பாவலன் முன்னம் நின்றே
இகழ்ந்தேன் இலை ஐய என்று சுடு நெயினில் கையை விட்டு
உகந்தே உணும் எச்சில் வாயைக் கழுவி உவப்பியற்றி
மகிழ்ந்தே புகழ் பெறு சர்க்கரையும் கொங்கு மண்டலமே. 52
கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)
துணை நின்ற நூல்கள் (கட்டுரையில் குறிப்பிடாதவை):
எபிகிராஃபியா கர்னாடிகா – தொகுதி-4,7 – மைசூர்ப் பல்கலை வெளியீடு-1975
___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி : 9444939156.
No comments:
Post a Comment