Saturday, September 2, 2017

கள்ளிகுடி கல்வெட்டு

முனைவர் கி. காளைராசன்:
திருப்பணிகள் செய்து வரும் இராமநாதபுரம் மெய்யன்பரிடம் இருந்த கோயில் திருப்பணிகள் தொடர்பான படங்களில் திருவாடாணை வட்டம் கள்ளிகுடியில் உள்ள அருள்மிகு உத்தமபாண்டீசுவரர்  கோயில் கல்வெட்டு படமும் ஒன்று கிடைத்தது. கல்வெட்டின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருவாடாணை வட்டம் கள்ளிகுடியில் உள்ள 
அருள்மிகு உத்தமபாண்டீசுவரர்  கோயில் கல்வெட்டு

 படம் உதவி: முனைவர் காளைராசன் 


கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு துரை  சுந்தரம், கோவை: 
கல்வெட்டுப்படம் தெளிவாக உள்ளது.

கல்வெட்டின் பாடம்:
1 தொளிப்ப வில்லவர் செம்பியர் வி
2 ..றப் பணிய இருநேமி அளவு மொ
3 ச நாடக மன்னிவளர மணிமுடிசூடி வி
4 ல் மாடக்குளக்கீழ் மதுரைக் கோலியி (பா)
5 திருவாய் மொழிந்தருளினபடி இத்தேவற்
6 ம் ஆண்டு முதல் அந்தராயம் உள்பட
7 டும் நிமந்தக்களுக்கு இன்னாட்டு ..(கை)


குறிப்பு :  முதல் மூன்றுவரிகளும்  பாண்டிய அரசனின் மெய்க்கீர்த்தி வரிகள். வில்லவர்(சேரர்), செம்பியர் (சோழர்), இருவரும் பணியுமாறு தன் ஆணைச் சக்கரத்தை நடாத்துகின்றவன் என்னும் பொருள் அமைகிறது.  ஆனால், அரசன் யாரென்பது தெரியவில்லை (இவ்வாறான கல்வெட்டுகளில் சுட்டப்பெறும் அரசரை மெய்க்கீர்த்தி வழியே இனம் காண மெய்க்கீர்த்திகளின்  தொகுப்பு  ஒன்று இன்றியமையாதது).

அரசன் கோயிலின் இறைவர்க்குக் கொடையாக அந்தராயம் போன்ற வரிகளின் வருமானத்தை அளிப்பதாகக் கொள்ளலாம். மாடக்குளத்தின் மதுரைக் கோயிலில் அரசன் வீற்றிருந்து  வாய்மொழி ஆணையிடுகிறான். கோயிலுக்கு வேண்டும் நிமந்தங்களுக்கும் ஏற்பாடு செய்கிறான்.   கல்வெட்டில் பெரும்பாலும் 'நிவந்தம்' என்பது  நிமந்தம் என்றே  எழுதப்படுகிறது. நிபந்தம் என்னும் சொல்லும் காணப்படுவதுண்டு.

 
முனைவர் கணேசன்:
கல்வெட்டில், கோயிலி(ல்)  என்பது கோலியி(ல்) என  இடவல மாற்றமாகப் பிழையாக வந்துள்ளது. பாண்டியன் மதுரை அரண்மனையில் இருந்து நிவந்தம் கொடுத்துள்ளான்.

 
திரு. நூ.த.லோக சுந்தரம்:
இக்கல்வெட்டுப்படிப்பு  (பொது ஆண்டு 1190 -1218  ஆட்சி புரிந்த) சடையவர்மன் குலசேகரபாண்டியன் என்ற மன்னனின்  மெய்க்கீர்த்தி ஆகும் என அறிய முடிகின்றது. மதுரைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள  பாண்டிய-சோழர் மெய்க்கீர்த்திகள் தொகுப்பில் (http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0134.html) முழு மெய்க்கீர்த்தியையும் காணலாம். அவ்வரிகள் கீழே:

1.9 சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218) - 3
1.9.3 (14)

ஸ்வஸ்திஸரீ
பூவின் கிழத்தி மேவிவீற் றிருப்ப
மேதினி மாது நீதியிற் புணர
வயப்போர் மடந்தை சயப்புயத் திருப்ப
மாக்கலை மடந்தை வாக்கினில் விளங்கத்
திசையிரு நான்கும் சையிலா வெறிப்ப     - 5
மறைநெறி வளர மனுநெறி திகழ
அறநெறிச் சமயங்கள் ஆறும் தழைப்பக்
கானில் வேங்கை வில்லுடன் தொடர்ந்துற
மீனம் கனகாசலத்து வீற் றிருப்ப
எண்கிரி சூழ்ந்த எழுகடல் எழுபொழில்     - 10
வெண்குடை நிழற்ற செங்கோல் நடப்பக்
கொடுங்கலி நடுங்கி நெடும்பிலத் தொளிப்ப
வில்லவர் செம்பியர்
விராடர் மராடர்
பல்லவர் திறையுடன் முறைமுறை பணிய
ருநேமி யளவும் ஒருநேமியோங்க     - 15
ன்னமுதாகிய யலிசை நாடகம்
மன்னி வளர மணிமுடி சூடி
விளங்கு கதிரொளி வீரசிம்மா சனத்து
கற்பகநிழற்கிழ் கலைவல்லோர் புகழ்
மன்னவர்தேவியர் வணங்கி நின்றேத்தும்     - 20
அன்ன மென்னடை அவனி முழுதுடை
யாளொடும் வீற்றிருந் தருளிய
மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதல்
கோச்சாடய பன்மரான திரிபுனச்
சக்கரவர்த்திகள் ஸரீகுலசேகர தேவர்க்கு     - 25
யாண்டு பதின்முன்றாவதின் எதிராமாண்டு . . .

12 வரியில் காணும்  "தொளிப்ப வில்லவர் செம்பியர்"  என முடியும் வரி தான் மிக மிகத் தெளிவாக இந்த மன்னனைத்தான் ஐயமின்றிக் காட்டுகின்றது. சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்கு மூன்று விதமாக மெய்க்கீர்த்திகள் உண்டு அதனில் இது மூன்றாவது விதம் ஆகும்.


தகவல் வழங்கியோர்:
முனைவர் கி. காளைராசன்,  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு துரை  சுந்தரம்,
முனைவர் கணேசன் மற்றும்  திரு. நூ.த.லோக சுந்தரம்

1 comment:

  1. இது புல்லுகுடி ஸ்ரீகயிலாயமுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டு. முழு கல்வெட்டும் படிக்கப்பட்டுவிட்டது. மேலதிக தகவல்களுக்கு எனது வலைப்பதிவைக் காணுங்கள். நன்றி.

    http://thiruppullaniheritageclub.blogspot.in/2017/07/1201.html

    ReplyDelete