Sunday, April 10, 2016

தமிழ்ப் பொழில்



தமிழ்ப் பொழில்



                வாழி  கரந்தை  வளருந்  தமிழ்ச்சங்கம்
                வாழி  தமிழ்ப்பொழில்  மாண்புடனே – வாழியரோ
                மன்னுமதன்  காவலராய்  வண்மைபுரி  வோரெவரும்
                உன்னுபுக  ழின்நலம்  உற்று
                         - நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற மூன்றாவது ஆண்டிலேயே, திங்களிதழ் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் த.வே. உமாமகேசுவரனார் உள்ளத்தே உயிர் பெற்றது.


     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களைத் தமிழ்ப் பேருலகினருக்கு நன்கு தெரிவித்து, அன்னார் உதவிபெற்று அவற்றினை நிறைவேற்றுமாறு காண்டலும், தமிழ் மக்களையும், அவர்தம் தெய்வத் திருமொழியினையும் இழிதகவு செய்து, உண்மை சரித நெறி பிறழ எழுதிவரும் விசயங்களை நியாய நெறியில் கண்டித்தலும், மேல் நாட்டுச் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அமைத்துக் கொள்ளுதலுமாகிய, இன்னோரன்ன நோக்கங்களோடு, சங்கத்தினின்று ஓர் சிறந்த தமிழ்ப் பத்திரிக்கை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஐவர் கொண்ட குழு ஒன்று 1914 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

     திருவாளர்கள் நா. சீதாராம பிள்ளை, ஐ. குமாரசாமி பிள்ளை, த.வீ. சோமநாதராவ்,    த.வே., மற்றும் இராதாகிருட்டிணப் பிள்ளை ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இக்குழுவினர் பத்திரிக்கைத் தொடங்குவதற்காக அரசாங்கத்தின் அனுமதி பெறுவதற்குரிய பணிகளைத் துவக்கினர். இதே வேளையில் பத்திரிக்கை ஆரம்பிப்பதென்றால் அதற்கு வேண்டும் மூலதனத்தைத் திரட்டும் பணியும் தொடங்கப் பெற்றது. தமிழ் அன்பர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து நன்கொடைகள் பெறுவதற்காக வேண்டுகோள் விடுக்கப் பெற்றது.

      பத்திரிக்கை ஒன்றினைத் தொடங்குவதற்காக 1914 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனர் அவர்களால் தொடங்கப் பெற்ற முயற்சிகள், பல்வேறு காரணங்களாலும் நிதிப் பற்றாக் குறையாலும், நிறைவேறாமலே இருந்தது.  இருப்பினும் 1919 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பெற இருக்கின்ற மாதாந்திர இதழுக்கு தமிழ்ப் பொழில் என்னும் பெயர் சூட்டப்பெற்றது.  1929-21 லும் போதிய அளவு புரப்போர் சேராமையினால் தமிழ்ப் பொழில் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

     இவ்வாண்டில் திருவாளர்கள் உமாமகேசுவரம் பிள்ளை, கும்பகோணம் த.பொ.கை. அழகிரி சாமி பிள்ளை, கூடலூர் வே. இராமசாமி வன்னியர், பட்டுக்கோட்டை வேணுகோபால நாயுடு, திருச்சிராப்பள்ளி உ.க. பஞ்ச ரத்தினம் பிள்ளை, திருச்சி நா. துரைசாமி பிள்ளை, கும்பகோணம் ஆர். சாமிநாத அய்யர் ஆகியோர் தமிழ்ப் பொழில் இதழுக்குப் பங்குத் தொகை வழங்கினர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவானது, 4.9.1921 மற்றும் 5.9.1921 ஆகிய தேதிகளில், கரந்தை கந்தப்ப செட்டியார் அறநிலையத்தில், கீழையூர் சிவ. சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் போது, தமிழ் மொழியின் மேன்மையைப் பேணுதற் பொருட்டாகத் தமிழ்ப் பொழில் என்னும் திங்கட்டாளை வெளியிடுவதற்கு தக்கவாறு பொருளுதவி செய்ய வேண்டுமெனத் தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இவ்வாண்டில் திருவாளர்கள் வேணுகோபால நாயுடு மற்றும் திருச்சி டி. நாராயண சாமி பிள்ளை ஆகியோர் தமிழ்ப் பொழில் பங்குத் தொகையாக ரூ.23 வழங்கினர்.

     1913 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனார் அவர்களால் தொடங்கப் பெற்ற முயற்சியானது, பதினோரு ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவேறியது. 1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.  தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழினை அச்சிட்ட பெருமை, தஞ்சாவூர் லாலி அச்சகத்தையேச் சாரும். இதன் முதல் பொழிற்றொண்டராகப் பணிபுரிந்தவர் கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளையாவார்.


1925 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் பொழில் இரண்டாவது இதழின் அட்டை
 (முதல் இதழின் அட்டை கிடைக்கப் பெற வில்லை)


     பொதுவாக ஒரு இதழ் எனின் ஆசிரியர் அல்லது பொறுப்பாசிரியர் என்று அச்சிடுதல் மரபு. ஆனால் உமாமகேசுவரனாரோ, இதழாசிரியர் என்பதற்குப் பதிலாக பொழிற்றொண்டர் என்றே அச்சிடச் செய்தார். உறுப்பினர் கட்டணம் என்பதற்கு மாறாக கையொப்பத் தொகை என்றும், விலாசம் என்பதை உறையுள் என்றும், ஆங்கிலத்தில் வி.பி.பி. என்பதை விலைகொளும் அஞ்சல் என்றும் பயன்படுத்தத் தொடங்கினார்.

     பல்வேறு இன்னல்களைத் தாண்டி தமிழ்ப் பொழில் இதழானது வெளிவரத் தொடங்கிய பின்னரும் கூட,  ஒவ்வொரு மாதமும், இவ்விதழ் சந்தித்த சோதனைகள், தாண்டிய தடைகள் ஏராளம். தமிழ்ப் பொழில் இதழினைப் போற்றுவார் போதிய அளவு இல்லாததால் வருந்திய உமாமகேசுவரனார் அவர்கள், தமிழ்ச் செல்வர்கள், தாய் மொழித் தொண்டிற்காக, ஆண்டிற்கு இரண்டு மூன்று ரூபாய் செலவிடுவதற்குத் தயங்கும் நிலை கண்டு வருந்தினார். தமிழ்ப் பொழில் உறுப்பினராக அனைவரும் சேர்ந்து பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை
தமிழ்ப் பொழில்

கருந்திட்டைக்குடி,
விசு, சித்திரை,க

ஐயா,
     இத்துடன் பொழிற் கையொப்ப விண்ணப்பம் ஒன்று இணைத்துள்ளோம். தங்கள் நண்பருள் ஒருவரையேனும் கையொப்பக்காரராகச் சேரும்படி வேண்டி, இணைத்துள்ள விண்ணப்பத்தில் அவர்கள் ஒப்பம் வாங்கி அனுப்ப வேண்டுகிறோம். ஒருவரைத் தாங்கள் சேர்த்தனுப்புவது, பொழிலின் பயனை ஆயிரவர்க்கு அளித்ததாகும் என்பதை நினைவூட்டுகிறோம். சிறுதொண்டு பெரும்பயன் விளைவிக்கும் வகைகளுள் இது ஒன்றெனக் கருத்திற் கொள்ள வேண்டுகிறோம்.
தங்கள் அன்பன்,
த.வே. உமாமகேசுவரன்
பொழிற்றொண்டர்




     உமாமகேசுவரனார் மேற்கொண்ட அயரா முயற்சிகளின் பயனாக, தஞ்சை மாநாட்டாண்மைக் கழகத்தினரும், தஞ்சை நாட்டாண்மைக் கழகத்தினரும், பாவநாசம் நாட்டாண்மைக் கழகத்தினரும், தத்தம் ஆட்சி எல்லையிலுள்ள பள்ளிக் கூடங்களுக்கெல்லாம் தமிழ்ப் பொழில் இதழினை அனுப்பிட ஆணை வழங்கி உதவினர்.

     தஞ்சை மாநாட்டின் கல்வி நெறி ஆராய்ச்சியாளர் தலைவராக இருந்த, திரு பி.பி.எஸ்.சாஸ்திரியார் அவர்களும், இத் தமிழ்ப் பொழில் கல்லூரி பள்ளிக் கூடங்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் சிறப்பினை உடைய உண்மையை அறிவித்து, அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளிக் கூடங்களும் வாங்குமாறு செய்தார்.


மறைமலை அடிகள்
     தமிழ்ப் பொழில் இதழினைக் கண்ட மறைமலையடிகள் மனம் மகிழ்ந்து கூறியவற்றைப் பாருங்கள். தாங்கள் விடுத்த தமிழ்ப் பொழில் முதலிரண்டு மலர்களும் பெற்று மகிழ்ந்தேன். தாங்களும் ஏனை கற்றறிஞரும் எழுதியிருக்கும் தமிழ்க் கட்டுரைகளை உற்று நோக்கி வியந்தேன். தமிழ்ப் பொழில் நீடு நின்று நிலவுமாறு முயல்க. ஏனெனில், இஞ்ஞான்று பற்பல இதழ்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன. மேலும் வடசொற்கள் சிறிதும் கலவாத தனித் தமிழிலேயே, தாங்களும் மற்றைக் கல்வியறிஞரும் கட்டுரைகள் எழுதுவதை விடாப்பிடியாய்க் கைக்கொள்ளல் வேண்டும். வடசொற் கலப்பால் தமிழைப் பாழாக்க மடிகட்டி நிற்கின்றனர். ஆதலால் நம்மனோர் தமிழில் வடசொற்களைக் கலத்தற்கு சிறிதும் இடம் விட்டுக் கொடுத்தல் ஆகாது. தமிழ் மொழியை விட்டால் தமிழர்க்கு வேறு சிறப்பில்லை. தங்கள் முயற்சி நன்கு நடைபெறுக வென்று திருவருளை வேண்டுகிறேன்.


___________________________________________________________
  

முனைவர். சுபாஷிணி
ksubashini@gmail.com
___________________________________________________________
 

No comments:

Post a Comment