Friday, June 19, 2015

அலெக்சாந்தரும் சமண முனிவர்களும்


-செல்வன்.

இந்தியா மேல் படையெடுத்து வந்த அலெக்சாந்தர் தட்சசீல நகரத்தை பிடித்தான். அந்த நகரில் ஜைன சன்னியாசிகளுடன் அவனுக்கு ஏற்பட்ட தொடர்பை பழங்கால கிரேக்க வரலாற்று ஆசிரியர் ப்ளுடார்க் உள்ளீட பலரும் விவரிக்கிறார்கள்.

தட்சசீல நகரில் நிர்வாண ஜைன சாமியார்கள் இருப்பதாக கேள்விப்பட்டதும் அலெக்சாந்தருக்கு வியப்பு தாங்கவில்லை. அவர்கள் தட்சசீல மக்களை அலெக்சாந்தருக்கு எதிராக தூண்டிவிடுவதாக புகார் வந்தது. சரி என சொல்லி அவர்களை பிடித்துவர அலெக்சாந்தர் படைகளை அனுப்பினான். பத்து நிர்வாண சாமியார்களை பிடித்துவரவும் அவர்களை பார்க்க ஒட்டுமொத்த கிரேக்க படையே கூடிவிட்டது.



"நீங்கள் எல்லாம் யார்?" என அலெக்சாந்தர் கேட்க

"நீ யார்?" என அவர்கள் தலைவரான தண்டமிஸ் (கிரேக்க ஒலிபெயர்ப்பு) திருப்பி கேட்கிறார்

"நான் அலெக்சாந்தர். கடவுளின் மகன்" (கிரேக்க கடவுள் ஜீயஸின் மகன் அலெக்சாந்தர் என்பது அன்றைய நம்பிக்கை)

"நானும் தான் கடவுளின் மகன்.."

இந்த பதிலால வியப்படைந்த அலெக்சாந்தர் "உங்கள் துடுக்குதனத்துக்கு எல்லாருக்கும் மரணதண்டனை விதிக்கிறேன். ஆனால் நீங்கள் ஞானிகள் என எல்லாரும் சொல்லுகிறார்கள். அதனால் உங்களை சில கடினமான கேள்விகளை கேட்பேன். யார் தவறான விடையை முதல் முதலாக சொல்கிறார்களோ அவர்களை முதலில் கொல்வேன். அடுத்து மற்றவரை கொல்வேன். இதுக்கு தண்டமிஸ் தான் நீதிபதி. அவர் தான் யாருடைய பதில் மோசம் என சரியாக சொல்லவேண்டும்" என்கிறான்

சரி என்றதும் முதல் கேள்வியை கேட்கிறான்

"எண்ணிக்கையில் அதிகமானவர்கள் யார்? உயிருடன் இருப்பவர்களா? இறந்தவர்களா?"

"உயிருடன் இருப்பவர்கள் தான். இறந்தவர்கள் யாருமே இப்போது இல்லையே?"

"பெரும் உயிரினங்களை உற்பத்தி செய்வது எது? கடலா, பூமியா?"

"பூமிதான். கடலே பூமியில் தானே இருக்கிறது?"

"இருப்பதிலேயே அதிக தந்திரமான மிருகம் எது?"

"இன்னும் மனிதனால் கண்டுபிடிக்க முடியாத மிருகம் தான்.."

"நீங்கல்லாம் எதுக்கு தட்சசீல மக்களை எனக்கு எதிராக தூண்டினீர்கள்?"

"அவர்கள் தைரியமாக வாழவேண்டும், அல்லது தைரியமாக சாகவேண்டும் என்பதால்.."

"எது முந்தி வந்தது, இரவா, தினமா?"

"தினம் தான்..ஒரு தினம் முந்தி.."

"மிகவும் விரும்புதலுக்குரிய மனிதன் யார்?"

"அதிக பலமிருந்தும், பிறர் அவனைகண்டு அஞாமல் இருக்கும் தன்மை உள்ள மனிதனே அனைவராலும் விரும்பபடகூடியவன்..."

"மனிதன் என்ன செய்து கடவுளாக முடியும்?"

"மனிதனால் செய்ய முடியாத ஏதோ ஒரு விஷயத்தை செய்வதன் மூலம்.."

"ஒரு மனிதன் எத்தனை நாள் வாழவேண்டும்?"

"வாழ்வதை விட சாவதே மேல் என நினைக்கும் காலம் வரை..."

"வாழ்வு, சாவு? இரண்டில் எது வலுவானது?"

"வாழ்வு..ஏனெனில் அது பல நோய்களையும்,. பிரச்சனைகளையும் தாங்குகிறது..சாவால் அது முடிவதில்லை"

இப்படி அனைத்து கேள்விகளுக்கும் அனாசயமான பதில் வரவும் அசந்த அலெக்சாந்தர் "இதில் மோசமான பதிலை சொன்னது யார்?" என கடைசிகேள்வியை தண்டமிஸை நோக்கி கேட்கிறான்

"முதல் பதில் தான் இருப்பதுலேயே மோசமானது....அதன்பின் 2,3,4.." என வரிசையாக எல்லா பதிலும் மோசம்" என்கிறார் தண்டமிஸ்

"இப்படி ஒரு தப்பான தீர்ப்பை கொடுத்ததுக்கு உன்னை முதலில் கொல்லுவேன்" என்கிறான் அலெக்சாந்தர்

"என்னை முதலில் கொல்ல  முடியாது. ஏன் என்றால் முதல் முதலாக மோசமான பதிலை சொன்னவரை முதலில் கொல்வதாக தான் சொன்னீர்கள். என்னை நீதிபதியாகவும் நியமித்தீர்கள். என் தீர்ப்பு முதல் சன்னியாசியின் விடைதான் முதல் தவறான விடை" என்றதும் மகிழ்ச்சியடைந்த அலெக்சாந்தர் அனைவருக்கும் பரிசுகளை கொடுத்து விடுதலை செய்து அனுப்பினான்

இப்படி அன்றைய கிரேக்க தத்துவஞானிகளால் விடைகாண முடியாத கேள்விகளுக்கு அனாசயமாக பதில்கூறி படையெடுப்பில் யாராலும் வெற்றிகொள்ளமுடியாத மகா அலெக்சாந்தருக்கு ஆன்மிகரீதியான தோல்வியை பரிசளித்தார்கள் நம் சமண முனிவர்கள்.இவர்களை குறிக்க ஜிம்னோசொபிஸ்ட் (நிர்வாண ஞானிகள்) எனும் வார்த்தை அன்றுமுதல் கிரேக்க மொழியில் ஏற்பட்டது.



________________________________________________________

செல்வன் - holyape@gmail.com
________________________________________________________


No comments:

Post a Comment