Sunday, June 27, 2021

கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்காலத் தொழிலிடங்கள்


-- முனைவர்.ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்



இன்று ஊராட்சியாகச் சுருங்கி விட்ட கங்கைகொண்ட சோழபுரம் சோழர்காலத்தில் தஞ்சாவூருக்குப் பிறகான தலைநகராகவும் பெரும் வணிக நகரமாகவும் இருந்தது.  அதன் பகுதிகள் ஆறு மைல் விட்டமுள்ள வட்டத்திற்குள் அடங்கும். பலதரப்பட்ட வாழ்விடப்பகுதிகள் இருந்தது.

பெரும் உலைக்களங்கள் இருந்திருக்கும், நாணயச்சாலை இருந்திருக்கும்.  வணிகப் பெருந்தெருக்கள் இருந்தன, படைவீடுகள் இருந்தன. பெரும் அளவிலான மக்கள் வாழ்விடப்பகுதி அமைந்து அதில் வாழ்ந்தனர். இவற்றை அகழும் பொழுது தான் நகரின் முழுமையை அறிய இயலும். மன்னர்களின் வாழ்விடமான அரண்மனைப் பகுதியான மாளிகைமேடு தமிழகத் தொல்லியல் துறையால் அகழ்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நகரமைப்பைத் தேடும் முயற்சியில் உலைக்களங்கள் அமையப்பெற்ற உற்பத்திப் பகுதியைக் கண்டறிந்துள்ளோம். இது எம்மூரால் கொல்லங்குழி என அப்பகுதி அழைக்கப்படுகிறது. கொல்லன்கள் குடியிருப்பாக கல்வெட்டு கூறும் கம்மாளர்ச்சேரியாக இருக்கலாம் அல்லது பெரிய உலைக்களம் கொண்ட பெரும் தொழிற்சாலைப் பகுதியாக இருக்கலாம். அதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. உலைவாய், உருக்குற்றுவாய், உருக்கு கசடுகள், உலைச்சலாவாய், பானை ஓட்டுக்குவியல், குலதெய்வக்கோவில் என ஒறு நூற்றுக்கு மேல் விரிந்துகிடக்கிறது.

Gangaikonda Cholapuram.JPG

இவற்றை விவரித்தவுடன் தமிழகத் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நேரில் கள ஆய்வுக்கு வருவதாக கூறியுள்ளார். எம் கங்காபுரியின் பெருமைக்கான சான்றுகள் விரிந்துகொண்டே போகின்றன.

இதுவரை சோழர்காலத்  தொழிலிடங்கள் பொதுவாழ்விடங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை. இது புதியத்தரவுகளை அள்ளி அள்ளித்தரும் வாய்ப்புகள் உள்ளது. 




அக்கரைச் சீமையின் வீரமகள் அஞ்சலை குப்பன்



--  மலாக்கா முத்துக்கிருஷ்ணன்


மொரீசியஸ் நாட்டின் ஐரோப்பியக் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராடியவர். மொரீசியஸ் நாட்டின் கரும்புத் தோட்ட முதலாளிகளுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியவர்.  மொரீசியஸ் நாட்டின் மனித உரிமைகளுக்காக தன் உயிரையே தியாகம் செய்தவர். 1940-ஆம் ஆண்டுகளில் மொரீசியஸ் நாட்டில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சி.  கப்பலேறி வந்தாலும் சூடு சொரணை உண்டு. கைப்பிடி சோற்றிலும் கைத்துளி உப்பு உண்டு. மனித உரிமைகள் மரித்துப் போகா என்று காலனித்துவத்தை எதிர்த்த ஒரு தமிழ்ப் பெண்மணியின் வீர வரலாறு வருகிறது. அவரைச் சற்று நேரம் நினைத்துப் பார்ப்போம். அஞ்சலைக்கு அஞ்சலி செலுத்துவோம்.

மொரீசியஸ் நாட்டில் இப்போது அந்தப் பெண்மணிக்காகச் சிலை வடித்து சீர் செய்கிறார்கள். அஞ்சல்தலை வெளியிட்டுப் பார் புகழப் பெருமை செய்கிறார்கள். ஒரு விளையாட்டு அரங்கத்தைக் கட்டி மரியாதை செய்கிறார்கள். யார் அந்த அஞ்சலை குப்பன். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அஞ்சலை குப்பன் எனும் பெயர் கொஞ்சமாய் மறைந்து மங்கலாகத் தெரியும். ஏன் தெரியுமா? இந்தத் தமிழச்சியின் தியாக உணர்வுகள் குறித்து உலகத் தமிழர்களுக்கு அதிகமாய்த் தெரியாது. தெரியவே தெரியாது என்று சொன்னால் தான் சரியாக அமையும். இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு தமிழ்ப் பெண் வாழ்ந்து இருக்கிறார் என்று தெரியாமலேயே போய்விடும். அதனால் முன்கூட்டியே இப்படி ஒரு பதிவைப் பதிவு செய்துவிடுவது சாலச் சிறப்பு என்பது காலத்தின் கணிப்பு அல்ல. ஞாலத்தின் எதிர்பார்ப்பு.

மொரீசியஸ் நாட்டில் இரண்டு பெண்களுக்குச் சிலை வைத்து இருக்கிறார்கள். ஒன்று மொரீசியஸ் தலைநகரில் வைக்கப்பட்டு உள்ள இங்கிலாந்து நாட்டின் விக்டோரியா மகாராணியாரின் சிலை. உலகத்தின் கால் பகுதிக்கு மகாராணியாராகக் கோலோச்சியவர்.  மற்றொன்று அஞ்சலை குப்பன் அவர்களின் சிலை. மொரீசியஸ் தலைநகரம் போர்ட் லூயிஸ் (Port Louis) அபரவாசி (Aapravasi Ghat) வளாகத்தில் அந்தச் சிலையை வைத்து இருக்கிறார்கள். வேறு சிலைகள் எதுவும் இல்லை. ஒரு தமிழ்ப் பெண்ணுக்குச் சிலை வைத்து இருக்கிறார்கள். பெருமையாக உள்ளது.

அஞ்சலை குப்பன், மொரீசியஸின் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். 1943 செப்டம்பர் 27-ஆம் தேதி ஆங்கிலேயர்களின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தவர். அப்போது அவர் நிறைமாதக் கர்ப்பிணி. அவருக்குத்தான் அங்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது.  மொரீசியஸ் நாட்டில் 68 விழுக்காடு இந்திய வம்சாவழியினர். 27 விழுக்காடு ஆப்பிரிக்க வம்சாவழியினர். 3 விழுக்காடு சீன வம்சாவழியினர். 2 விழுக்காடு பிரிட்டிஷ் வம்சாவழியினர். ஏறக்குறைய 75,000 தமிழர்கள் வாழ்கின்றனர்.  

தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். இந்தத் தீவில் தான் அஞ்சலை குப்பன் உரிமைப் போராட்டங்கள் செய்து சாதனை படைத்து இருக்கிறார். நவீன மொரீசியஸின் வரலாற்றில் ஒரு முக்கிய மாந்தராகக் கருதப் படுகிறார். மொரீசியஸ் மக்களின் அடையாளச் சின்னமாகவும் மாறியுள்ளார். 

அஞ்சலை குப்பன்; அஞ்சலை திவாகரன்; அஞ்சலாய் குப்பன் (Anjalay Tassalam Twakaran); 1911 பிப்ரவரி 17-ஆம் தேதி ரிவியர் டு ரெம்பார்ட் (Riviere du Rempart) எனும் மாவட்டத்தில் பிறந்தார்.   1943 செப்டம்பர் 13-ஆம் தேதி பெல்லி வியூ ஹாரேல் (Belle Vue Harel) எனும் சீனி தோட்டத்தில் ஒரு பெரிய வேலைநிறுத்தம் தொடங்கியது. அதில் அஞ்சலையும் கலந்து கொண்டார். 1943 செப்டம்பர் 27-ஆம் தேதி உயிர் துறந்தார்.  அந்த நாள் மொரீஷியஸ் மக்களால் பெரிதும் போற்றப்படும் நாள். தியாக நாளாகவும் கருதுகிறார்கள். அன்றைய நாளில் தான் பிரிட்டிஷ் காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிராகவும்; தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராட்டம் உச்சம் அடைந்த நாளாகும். 

ஆங்கிலேய முதலாளிகள் கேட்பதாக இல்லை. தெரிந்ததுதானே. வரித்து விடு. பிரித்து விடு. தொலைத்து விடு எனும் சாணக்கியத்தில் ஆங்கிலேயர்கள் பேர் வாங்கியவர்கள். பரம்பரை புத்தி பாதியில் போய் விடுமா. இந்தப் பக்கம் மலாயாவில் மட்டும் என்னவாம். 1900-ஆம் ஆண்டுகளில் அதே நிலைமை தானே. நான்கு தகரத்தில் ஒரு டப்பாவைக் கட்டி வைத்து; அதற்கு கூலி லைன் என்று பெயர் வைத்து; 150 ஆண்டுகளாக மலாயத் தமிழர்களின் உயிரை வாங்கவில்லையா. அது போலத்தான். 

Anjalai Kuppan.jpg
அஞ்சலை குப்பனுக்கு அவருடைய பெயரில் ஒரு விளையாட்டு அரங்கத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் அஞ்சலை விளையாட்டரங்கம் (Anjalay Stadium, Belle Vue, Mauritius).  அது மட்டும் அல்ல. 2000 டிசம்பர் 13-ஆம் தேதி அவருக்காக அஞ்சலை அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தார்கள். பள்ளிப் பாட நூல்களில் அவரின் வரலாறு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொரீஷியஸ் நாட்டில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கட்டாயம் அஞ்சலையின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் படிக்க வேண்டும்.   2015 மார்ச் 8-ஆம் தேதி அனைத்துலக மகளிர் தினம். அதை முன்னிட்டு மொரீஸியப் பாலினச் சமத்துவம், குழந்தைகள் மேம்பாடு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரால் அதிகாரப்பூர்வமாக அஞ்சலி குப்பன் கௌரவிக்கப் பட்டார். அதன் பின்னர் பாட நூல்களிலும்  இந்த வீரமகளின்  வரலாறு இடம் பெற்றது. 


சான்றுகள்:
1. The historical significance of Anjalay Coopen - https://www.lexpress.mu/article/historical-significance-anjalay-coopen

2. Nouvelle d'Ananda Devi, La Mort d'Anjalay dans Au tour des femmes. Ed. B. Pyamootoo & R. Poonoosamy. Port-Louis:  Immedia, 1995: 67-74

3. Anjalay Coopen: Tamil Lady ‘Kabali’ of Mauritius - https://tamizharmedia.com/2019/06/30/anjalay-coopen-tamil-lady-kabali-of-mauritius/







Sunday, June 13, 2021

திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் அறியத் தரும் செய்திகள்


தேமொழி 


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் என்றவுடன் வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்று என்று பலருக்கும்; அத்துடன்  திருவல்லிக்கேணி  பார்த்தசாரதி கோயில் என்றால் சென்ற நூற்றாண்டில் பிறந்த பலருக்கு 1920 டிசம்பரில் பாரதியார் வாழைப்பழம் கொடுத்த பொழுது, அவரைத் துதிக்கையால் தாக்கி கீழே தள்ளிவிட்ட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை நிகழ்வும் நினைவு வரும்.  பாரதியாரின் நண்பர் குவளைக் கண்ணன் அவரைக் காப்பாற்றினாலும் அதிர்ச்சியில் உடல்நலிவுற்ற பாரதியார் அடுத்து வந்த 9 மாதங்களில் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்பதும் நினைவு வரும்.  

தொல்லியல் துறையில் இயக்குநராக பணியாற்றிய முனைவர் இரா.நாகசாமி அவர்கள், தொல்லியல்துறை வெளியீடாக  1970-ஆம் ஆண்டில் பதிப்பித்த "சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்" என்ற நூலானது 2009-ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. தமிழ்நாடு தொல்லியல் துறையின்  தளம் இந்நூலினை மின்னூலாகப் படிக்க வாய்ப்பளித்துள்ளது. இந்த நூலில் சென்னை மாநகரில் உள்ள பல கல்வெட்டுகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன் தரக்கூடிய சிறப்பான நூல் இது.  திருவல்லிக்கேணி  கோயில் கல்வெட்டுகள் என மொத்தம் 91 கல்வெட்டுகள்  சென்னை மாநகர்க் கல்வெட்டு நூலில் பதிவாகியுள்ளது.   இந்நூலில் அதிக அளவில் இடம் பெற்றுள்ள திருவல்லிக்கேணி கல்வெட்டுக்களைத் தொடர்ந்து மயிலாப்பூர் கோயில்களின் கல்வெட்டுகள் (88 கல்வெட்டுகள்) அதிக அளவில் பதிவாகியுள்ளன;  மேலும் சென்னையின் பற்பல பகுதிகளின் கல்வெட்டுகளாக,  வெவ்வேறு 29 சென்னை மாநகரப் பகுதிகளின் 79 கல்வெட்டுகளும் கிடைக்கின்றன, இவை பெரும்பாலும்  பிற்காலத்துக் கல்வெட்டுகளாகவும் இருக்கின்றன.  இந்நூலில் உள்ள பெரும்பான்மையான கல்வெட்டுகள் மிகவும் சிதைந்து முழுமையான செய்தி தராதவையே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கல்வெட்டுகள் மூலம் சுவையான பல வரலாற்றுச் செய்திகளை நாம் அறிந்து கொள்ள  இயலும்.  




திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கிடைப்பதில் மிகவும் பழமையான கல்வெட்டு, பல்லவர் காலத்துக் கல்வெட்டு. பொ. ஆ. 808 இல் பல்லவ மன்னர் தந்திவர்மர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. கோயிலின்  கருவறை நுழைவாயிலுக்கு அருகில்  உள்ள கல்லில் கிரந்தமும் தமிழ் எழுத்துக்களும் கொண்ட கல்வெட்டாக இது காணப்படுகிறது. அப்பொழுதே ஊரின் பெயர் திருவல்லிக்கேணி என்றுதான் கல்வெட்டில் உள்ளது. இந்நாட்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் என்று அறியப்பட்டாலும்,  இக்கோயில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்து எழுமூர் நாட்டுத்  திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கப் பெருமாள் கோயில் என்றுதான் 17 ஆம் நூற்றாண்டுவரை  கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.  எழுமூர்  என்பது இன்றைய எழும்பூர்தான். திருவல்லிக்கேணி என்ற ஊரின் பெயர் பல்லவர் காலத்தில் இருந்து தொடரும் ஒரு பழமையான பெயர். 


திருவல்லிக்கேணி கோயில்  கல்வெட்டுகள்: 
சிறப்புத் தகவல் அளிக்கும் திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகளும் சிலவும், அவை வழங்கும் செய்திகள் மூலம் நாம் அறியக் கூடிய செய்திகளும் இங்கு கொடுக்கப் படுகிறது. 

பெருமாளின் பெயர் மாறிய காலம்:
1604 ஆம் ஆண்டின் (17 ம் நூற்றாண்டு கல்வெட்டு எண்: 1967/81h)  கல்வெட்டுச் செய்திவரை பெருமாள் திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கப் பெருமாள் என்றே குறிப்பிடப் படுகிறார்.  
1793ஆம் ஆண்டின் கல்வெட்டில் (1967/210) பார்த்தசாரதி சுவாமி என்ற சொல் காணக் கிடைக்கிறது.  
இந்த இடைப்பட்ட காலத்தில், 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டுக் காலக் கட்டதில் திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கப் பெருமாள், பார்த்தசாரதி என்ற சமஸ்கிருதப் பெயர் கொண்டவராக மாற்றப்பட்டுவிட்டார். பெரும்பாலும் விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலம் துவங்கிய பொழுது கோயில்களில்  சமஸ்கிருத மயமாக்கலும் தொடங்கிவிட்டது என்ற கருத்து பரவலாக உள்ளது என்பதை நாம் அறிவோம்.  திருவல்லிக்கேணி கோயில்  கல்வெட்டுகளை மீள்பார்வை செய்கையில் இதற்குச் சற்றே மாறுபட்ட செய்தியே கிடைக்கிறது.  1564 ஆண்டு முதல்  1604 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில், குறிப்பாக விஜயநகர மன்னர்களின் ஆட்சியின் கீழ்  இருந்த காலகட்டத்தில் வெட்டப்பட்டனவாக  5 கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன. இவை யாவற்றிலுமே பெருமாள் தெள்ளியசிங்கப் பெருமாள் என்றே குறிப்பிடப்படுகிறார்.  

1639ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி சென்னையில் துவங்கி,  பின்னர் 1675 இல் முற்றிலும் நாயக்க மன்னர்கள் ஆட்சி முடிவுற்ற  பிறகே பெருமாள் பார்த்தசாரதியாகப் பெயர் மாற்றப் பட்டார் என்பதையே இக்கோயில் கல்வெட்டுகள் மூலம் நாம் முடிவெடுக்கலாம்.  ஆனால் இந்தப் பெயர் மாற்றத்திற்கும் ஐரோப்பியர்களுக்கும் எந்த  ஒரு தொடர்பும் இருந்திருக்க  வழியில்லை என்பதையும் நம்மால் ஊகிக்க முடியும்.  கோவிலில் நான்கு தெலுங்கு மொழிக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன.  1585 ஆம் ஆண்டில் விஜயநகர மன்னர் ஆட்சிக்  காலத்தில் வெட்டப்பட்ட  ஒரு தெலுங்குக் கல்வெட்டு உள்ளது.  இந்த ஒரு கல்வெட்டைத்  தவிர மற்றுமுள்ள 4 விஜயநகர மன்னர் ஆட்சிக்  காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்கள் தமிழில்தான் வெட்டப்பட்டுள்ளன, அவற்றில் பெருமாள் தமிழ்ப் பெயருடன்தான் இருந்துள்ளார்.   ஆகவே இதிலிருந்து இந்திய மன்னர்கள் ஆட்சியின் மேற்பார்வையில் தமிழ் மண்ணின் கோயில்கள்  இல்லாத ஒரு  காலகட்டத்தில்,  ஆங்கிலேயர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயன்றுகொண்டிருந்த காலத்திலும், அவர்களுக்கு இந்தியாவின் சமய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க தடை இருந்த காலத்திலும் திருவல்லிக்கேணி  கோயிலில் சமஸ்கிருதம் நுழைந்துள்ளது எனலாம். குறிப்பாக "இக்கோயிலைப் பொறுத்தவரையில்";  1700கள் முழுவதும் இந்தக் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்ட காலத்தில் அது  சமஸ்கிருதமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் கணிக்க முடிகிறது. 1793ஆம் ஆண்டு கல்வெட்டில் (1967/210) இறைவன் பார்த்தசாரதியாகிவிடுகிறார். 

தமிழ் ஆண்டுகள்: 
முன்னர் குறிப்பிட்டது போல, திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் தந்திவர்ம பல்லவர் காலத்திற்குரியதாக பொ. ஆ. 808 இல் இருந்து,   19 ஆம் நூற்றாண்டு பச்சையப்ப முதலியார் காலம் வரை கிடைக்கிறது.    சென்னை மாநகர்க் கல்வெட்டு நூலில், திருவல்லிக்கேணி  கோயில் கல்வெட்டுகள் என ஆவணப்படுத்தப்பட்டுள்ள  91 கல்வெட்டுகளையும் கால வரிசைப்படுத்திப் பார்க்கையில்:
9 ஆம் நூற்றாண்டு  - பல்லவர் ஆட்சி 
12 - 13 ஆம் நூற்றாண்டு - சோழர் ஆட்சி 
13-14 ஆம் நூற்றாண்டு - பாண்டியர் ஆட்சி 
16-17 ஆம் நூற்றாண்டு - விஜய நகர ஆட்சி 
காலத்திற்குரிய கல்வெட்டுகளாகக்  கிடைத்துள்ளன.  

கிடைக்கும் 91 கல்வெட்டுகளில் வெறும் 15 கல்வெட்டுகளே இவ்வாறு தெளிவான காலக்குறிப்பு கொண்டு அடையாளப் படுத்தப் பட்டுள்ளன. கிடைக்கும் கல்வெட்டுகளில்  முழுமையான கல்வெட்டுகள் குறைவு. பல கல்வெட்டுகளின் பகுதிகளே கிடைத்துள்ளன. வரலாற்றுக்  குறிப்பு எதுவும் இல்லாத அக்கல்வெட்டுகள் எழுத்தமைதி கொண்டோ அல்லது கல்வெட்டு குறிப்பிடும்  ஆட்சியாளர் பெயர் கொண்டோ  அவை காலம் நிர்ணயிக்கப் பட்டிருக்கலாம் என்று கருத வேண்டியுள்ளது. 

இதில் மேலும் கவனிக்கத்தக்கது என்னவென்றால்,  குறிப்பாக பிரபவ முதல் அட்சய   என்று வடமொழியில் பெயரிடப்பட்டுள்ள "அறுபது வியாழ வட்ட ஆண்டுகள்" கொண்ட கணக்கு விஜயநகர மன்னர்கள் ஆட்சியில்தான் தொடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள  முடிகிறது. வடமொழிப் பெயருடன் இருக்கும் அறுபது வியாழ வட்ட ஆண்டுகளைத்  தமிழாண்டுகள் என  ஆணித்தரமாக அறுதியிட்டுக் கூறும்  தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு குறிப்பு இது. இந்தக் காலக் குறிப்பு மாற்றம் விஜயநகர ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் தொடங்கித்தான் திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கிறது.  விஜயநகர ஆட்சிக் காலத்திற்கு முன்னர், இந்தப் பேரரசின், இந்த மன்னரின், இத்தனையாவது ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது என்று குறிப்பிடும் முறைதான் முன்னர் வழக்கமாக இருந்திருப்பது தெரிகிறது.  

13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று (1967/34) ஆவணி மாதத்தை மலையாள கொல்லம் ஆண்டு முறை குறிப்பது போல சிங்க  ஞாயிறு என்று குறிப்பிடுகிறது. 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில்  (1967/81b) மேஷ ஞாயிறு என்ற குறிப்பும் கிடைக்கிறது. 

சிதைவுற்ற சிவன் கோயில் கல்வெட்டுகள்:
திருவல்லிக்கேணி "பெருமாள்" கோயிலில் கிடைக்கும் பல கல்வெட்டுகள் சிதைவுற்ற கல்வெட்டுகளாக இருப்பதுடன் அவை "சிவன்" கோயில் கல்வெட்டுகளாகவும்  உள்ளன.  அவை  திருவான்மியூர் உலகாளுடைய நாயனார் (தற்பொழுது, அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை - 600041) என்ற சிவன் கோயிலின் கல்வெட்டுகள். 12 ஆம் நூற்றாண்டு சோழர் காலக் கல்வெட்டு ஒன்றில் மருந்தாண்டவர் (1967/137) என்றும் இறைவன் குறிப்பிடப் பட்டுள்ளார். இக்கோயில் குலோத்துங்க சோழ வளநாட்டு  கோட்டூர் நாட்டுத் திருவான்மியூர் பகுதியில் இருந்ததாகக் கல்வெட்டுகளில் குறிப்பு கிடைக்கிறது.  திருவான்மியூர் உலகாளுடைய நாயனார் என்ற சிவனும் பிற்காலத்தில் மருந்தீஸ்வரர் என்றபெயர் மாற்றம் பெற்றுள்ளார்.  12 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டுவரை திருவான்மியூர்க் கோயிலில் இக்கல்வெட்டுகள் அக்கோயிலின் பகுதியாகவே இருந்துள்ளன.  அதன் பிறகு 17 அல்லது 18  ஆம் நூற்றாண்டில்  திருவான்மியூர் சிவன் கோயில் கல்வெட்டுகள் பெயர்த்தெடுத்து  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டு கோயிலின் பல்வேறு பகுதிகளில் தரையில் பாவு கல்லாகப் பதியப்பட்டுவிட்டன என்பதைக் கணிக்கலாம். இக்கல்வெட்டுகள் பல செய்தி முழுமையாக கிடைக்காத வகையில் சிதைந்தும் உள்ளன.  நூலில் சில கல்வெட்டுக்களுக்கு  சிவன் கோயில் கல்வெட்டு என்ற குறிப்பு கொடுக்கப் பட்டுள்ளது.  ஆனால் அவ்வாறு குறிப்பிடப்படாத  சிலவற்றிலும் கூட சைவ சமயத் தொடர்புடைய சொற்களான  மகேஸ்வர, உலகாளுடைய நாயனார்,  மகாதேவர், நாயனார், ஈஸ்வர, திருச்சிற்றம்பலம், சிவப்பிராமணர் போன்ற சொற்கள் இருப்பதைக்  கொண்டு அக்கல்வெட்டுகள்  சிவன் கோயிலில் இருந்த கல்வெட்டுகள்  என்றும் அறியலாம். எனது கணக்கின்படி 25 கல்வெட்டுகளில் சைவ சமயத்தைச் சார்ந்த சொற்கள் ஏதேனும் இருப்பதாக தெரிந்தது. சிவன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்டவற்றில்.  ஒரு சில தவிரப் பெரும்பான்மை  தரையில் பாவுகல்லாகப்   பயன்படுத்தப்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது. 

திருவான்மியூர் உலகாளுடைய நாயனார் கோயிலின் கல்வெட்டுகள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மட்டுமன்றி, மயிலாப்பூர்‌ வாலீசுவரர்‌ கோயிலிலும், திருமயிலைக்‌ காரணீசுவரா்‌ கோயிலிலும் கிடைப்பதாக கோவிற் களஞ்சியம் நூல் (கோ. மு. முத்துசாமி பிள்ளை அவர்களின் கோவிற் களஞ்சியம் - அறிமுகம், 1991-பக்கம் 113) குறிப்பிடுகிறது.  திருவான்மியூர்‌ மருந்தீசர்‌ கோயில்‌ திருப்பணி செய்யப்பட்ட போது சுவாமி கோயில்‌ குறுகலாகவும்‌ உயரம்‌ குறைந்தும்‌ இருந்ததால்‌ மூலத்தானத்தைப்‌ பிரித்தெடுத்து அம்பிகை சந்நிதிக்குப்‌ பயன்படுத்திய பின்னர் புதிய கற்களைக்‌ கொண்டு சுவாமி சந்நிதி கட்டப்பட்டுள்ளது தெரியவருகிறது என்றும் இந்த நூலின் மூலம் அறிய முடிகிறது.    இந்நூல் குறிப்பிடும் கோவில்களான வாலீசுவரர், காரணீசுவரா் கோயில்கள் தவிர்த்து, மயிலைக் கபாலீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர் கோயில்களிலும் திருவான்மியூர் உலகாளுடைய நாயனார் குறிப்புள்ள கல்வெட்டுகள் இருப்பதை சென்னை மாநகரக்  கல்வெட்டுகள் நூல் மூலம் அறிய முடிகிறது.  இது போன்றே, சாந்தோம் மாதா கோயிலிலும்  மயிலாப்பூர் ஈச்சரமுடையார் சிவன்  கோயில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன.  

ஆக, திருப்பணி என்ற பெயரில் 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டு வாக்கில் திருவான்மியூர் உலகாளுடைய நாயனார் தனக்கு அளிக்கப்பட்ட சொத்துகள் பலவற்றையும்  இழந்துள்ளார் என ஊகிக்கலாம்.  இவ்வாறு நிகழக் காரணம் என்னவாக இருக்கும் என்று கணிக்க முற்பட்டால்;  ஒன்று, மக்கள் கல்வெட்டுகளில் என்ன எழுதியிருக்கிறது என்று  படிக்கும் கல்வியறிவை இழந்த அறியாமையின் காரணமாக இருக்கலாம். அல்லது, கல்வெட்டுகளைச் சிதைத்து அப்புறப்படுத்தி நகரின்  பல்வேறு பகுதிகளில்  துண்டுகளாக சிதறடித்த பின்னர்  சிவன் கோயில் சொத்துகளை உரிமையாக்கிக் கொள்ளும் எண்ணம் திருப்பணியில் ஈடுபட்டோருக்கும் கோயில் நிர்வாகக்  குழுவினருக்கும் இருந்திருக்கலாம் என்றும்  ஊகிக்க  இயலும்.  

பாவுகல்லாகப் பயன்படுத்தப்பட்டவை சிவன் கோயில் கல்வெட்டுகள் மட்டுமன்று, ஐரோப்பியர் காலத்துக் கல்வெட்டுகளும் கூட பாவுகல்லாக மாறியுள்ளன. 17 அல்லது  18 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் சில  (1967/73,  1967/76, 1967/80) ரோமன் எழுத்துருவில்  லத்தீன் அல்லது ஆங்கில மொழிக் கல்வெட்டுகளாகும்.  பாரசீகக் கல்வெட்டு எனக் குறிப்பிடப்படும் ஒரு கல்வெட்டிலும் (1967/208) ரோமன் எழுத்துருவே உள்ளது.  இவை மிகவும் சிதைந்தவனவாகவும்,  அவற்றில் என்ன செய்தி எழுதப்பட்டிருந்தது என்று அறியும் வகையில் இல்லாத நிலையிலும் உள்ளன. இவை ஏதேனும் சிதைந்த கட்டுமானங்களின் கல்வெட்டுகளாகவோ அல்லது நினைவுக்கற்களின் பகுதிகளாகக் கூட இருந்திருக்க வாய்ப்புள்ளது. 

உணவு: 
- 1599 ஆம் ஆண்டுக்  கல்வெட்டில் (1967/81e) சித்திரைத் திருநாள் திருத்தேர் நிகழ்ச்சிக்காகவும்,  வசந்தத் திருநாளுக்கும், சூடிக் கொடுத்த நாச்சியார் திருநாளுக்கும்   திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கப் பெருமாளுக்கு திருவமிர்து படைக்க கொடை அளிக்கப்பட்டுள்ளது.  அதில் உணவு வகைகளும், சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்களின் குறிப்புகளும் உள்ளன.  

சித்திரைத் திருநாள் திருத்தேர் நிகழ்ச்சிக்காகச் சமைக்கப்பட்ட உணவு வகைகள்: புளியோதரை,  பணியாரம், பருப்புப் பொங்கல், அப்பம், தோசை ஆகியனவும்;  
அதற்குத் தேவையான அரிசி, பயறு, உளுந்து, புளி, நெய், மிளகு, எண்ணை, வெல்லம், தேங்காய், பழம் போன்றவை குறித்தும்; 
வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களாக சாம்பிராணி, பூ, பனிநீர் (பன்னீர்), பனிநீர் செம்பு (பன்னீர் செம்பு), சந்தனம், நெய்,  பழங்கள், வெற்றிலை, பாக்கு, இளநீர், பந்தம் ஏற்ற எண்ணை ஆகியவற்றிற்கு  கொடை அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.  

- 1585 ஆம் ஆண்டில் தெலுங்கு மொழியில் வெட்டப்பட்ட மற்றுமொரு  கல்வெட்டு (1967/81k) தெள்ளியசிங்கப் பெருமாள், வேதவல்லி நாச்சியார், சூடிக் கொடுத்த நாச்சியார் திருநட்சத்திரங்கள் வரும் திருநாட்களில் செய்யப்பட வேண்டிய கைங்கர்யத்திற்காக தயிர்ச்சோற்றுடன், தோசை, ஆப்பம், வடை, பானகம், பணியாரம், பொங்கல், தளிகை(அமுது) யுடன் கூடிய அமுதுபடி செய்விக்கும் சமையலுக்குத்  தேவையான பொருட்களாக  வெண்ணெய், நெய், பால், புளி, வாழைப்பழம், தயிர், பால், வெல்லம், அரிசி ஆகியனவும்;  வழிபாட்டுக்குச் சந்தனம், சாம்பிராணி, பூக்கள், வெற்றிலை, வாழைப்பழம் போன்றவையும் வழங்கக் கொடை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.  

இவ்விரு கல்வெட்டுகள் மூலம் புளியோதரை,  பணியாரம், பருப்புப் பொங்கல், அப்பம், தோசை, தயிர்ச்சோறு, ஆப்பம், வடை, பானகம்,  தளிகை கோயிலின் அமுதுபடியாக இருந்ததையும், குறிப்பாக தோசை  16 ம் நூற்றாண்டு சென்னை மக்களின் உணவாக இருந்ததை அறிய முடிகிறது. 

பச்சையப்ப முதலியார் கொடையும் குலோத்துங்க சோழன் திருமாளிகையும்:
1842 ஆம் ஆண்டுக்  கல்வெட்டில் பயணிகளுக்கு (தேசாந்திரி) உணவு வழங்குவதற்காகவும், இந்துப் பிள்ளைகளுக்குச் சாஸ்திரங்களைக் கற்பிப்பதற்காக பண்டிதர் ஒருவருக்கும், ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் (உபாத்தியாயர்) ஒருவருக்கும் ஊதியம் தர பச்சையப்ப முதலியார் கொடை செய்துள்ளார்.  அதற்காக ஒரு லட்சம் வராகன் பணம் அளித்து, அதனை அறக்கட்டளையாக நிறுவி, வரும் வட்டியில் நீதிமன்றத்தின் அதிகாரிகள் மேற்பார்வையில் கொடையின் பலன் தொடரும்படி திட்டம் வகுத்துள்ளார் என்ற செய்தி கிழக்கு நுழைவாயில் கல்வெட்டில் கிடைக்கிறது. 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று (1967/59) குலோத்துங்க சோழன் திருமாளிகை  பற்றி குறிப்பிடுகிறது. 

முடிவுரை:
இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் என்ற துறையுண்டு. அது போல இன்வெஸ்டிகேட்டிவ் ஆர்க்கியாலஜி என்ற துறை தொல்லியலில் வளர்ந்தால் தமிழக வரலாற்றில் எப்பொழுது காலக் குறிப்புகள் மாறுகின்றன, எப்பொழுது பெயர்களின் பின்னொட்டாக சாதிப்பெயர்கள் தோன்றின, எப்பொழுது கோயில் இறைவர்களுக்குச் சமஸ்கிருதப் பெயர் சூட்டப்பட்டது, எப்பொழுது பெண்களுக்குச் சொத்துரிமை மறைந்தது என்பதை வரலாற்றுச் செய்திகளாக கல்வெட்டுச் சான்றுகளுடன் அறிய முடியும்.   ஏனெனில் அறுபது வியாழ வட்ட ஆண்டுகள் குறிப்பு, பெயரின் பின்னொட்டாக -  முதலியார், பிள்ளை, செட்டியார் போன்ற பல சாதிப்பெயர் இணைப்புகள், இறைப்பெயர் மாற்றங்கள் என யாவும் நிகழ்ந்தவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், சற்றொப்ப இரு நூற்றாண்டுகளுக்குள் (தோராயமாக 1600கள்  மத்தியப் பகுதி -  1775) நடந்து முடிந்தவையாக அறிய முடிகிறது.  மேலும் 1880 களின் இறுதிப்பகுதி  வரை பெண்கள் தங்கள் வீடுகளை, சொத்துகளைக் கோயிலுக்கு எழுதிவைத்து, கோயில் கட்டி திருப்பணிகளில் ஈடுபட்டிருந்த கல்வெட்டுச் சான்றுகளும் கிடைக்கின்றன. 

அரசர்களின் ஆட்சிக் காலம், கலை வளர்ச்சி, இறையாண்மை என்பனவற்றையும் கடந்து மானுடவியல் பார்வையில் தமிழ்நாட்டுக் கோயில்களின்  கல்வெட்டுச் செய்திகள் ஆராயப்படவேண்டிய தேவை மிகுதியும் உள்ளது. அது தமிழக வரலாற்றை மேலும் செம்மைப்படுத்த உதவும்.  அதற்குள் கோயில் கல்வெட்டுகளைத் திருப்பணி என்ற முயற்சிகளில் சிதைக்கப்படாமல் பாதுகாக்க வேண்டிய தேவையும் உள்ளது. கல்வெட்டுகளைச்  சிதைத்து  பல்வேறு இடங்களுக்குச் சிதறடித்ததன்  பின்புலத்தில் இருந்தது மக்களின் அறியாமை என்பதைவிட,  மக்களின் அறியாமை நிலைமையைப் பயன்படுத்தி கோயில் சொத்துகளைக் களவாடும் நோக்கமும் இருந்திருக்கலாம், தடயங்களை மறைக்கும் முயற்சி இருந்திருக்கலாம், வரலாற்றை  மறைக்கும் நோக்கமும் இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் ஆராயவேண்டிய தேவை உள்ளது.  




கட்டுரைக்கு உதவிய தரவுகள்: 
"சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்", முனைவர் இரா.நாகசாமி, 2009-ஆம் ஆண்டு, இரண்டாம் பதிப்பு - தமிழ்நாடு தொல்லியல் துறை தளம் 
https://www.tnarch.gov.in/Library%20BOOk%20PDF/Chennai%20Maanagara%20Kalvettukal.pdf

இக்கட்டுரையின் திருவல்லிக்கேணி கல்வெட்டுத் தரவுகளை கீழுள்ள சுட்டியில் பெறலாம் -
https://drive.google.com/file/d/1W7nHSqlYO02XatOUoMjLBucNXe4ArqDW/view?usp=sharing

தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை தளம் - திருக்கோயில்கள் நிலங்கள் பட்டியல் தரவுகள்: 
https://hrce.tn.gov.in/hrcehome/land_search.php?activity=land_search 


__________________________________________________________________________________


Friday, June 11, 2021

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்


 - ப்ரீத்தி ஹரி 

ஜூன் 12, 2021 

child labor.JPG
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்து, கல்வி அளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவோம் - ப்ரீத்தி

புத்தகப் பையைத் தூக்க வேண்டிய நான் 
இன்று மூட்டை தூக்குகின்றேன்.
சுவற்றில் கிறுக்கி விளையாடும் வயதில் 
வண்டியை சுத்தம் செய்கின்றேன்.
என் மெல்லிய கைகள் 
இன்று தீயினால் சுடுகிறது.
புன்னகை மலரும் என் முகம் 
இன்று வாடிய பூவாய் மாறியது.
வாய் விட்டுப் பேசப் பயந்து 
உள்ளேயே குமுறுகின்றேன் .
உள்ளத்தின் துயரம் 
என் கண்ணில் அறிவீரோ.
மறுமலர்ச்சி காணும் என் கனவை நிஜமாய் செய்வீரோ.

---- ப்ரீத்தி

World Day Against Child Labor - JUNE 12, 2021
Voice Against - Child Labour: Preethi 

Tuesday, June 8, 2021

சிற்பியின் உருவம்


-- மா.மாரிராஜன்


எத்தனையோ அழகான அதி அற்புத கற்றளிக் கோவில்கள். உயிரோட்டமான கண்கவர் சிற்பங்கள். இவற்றை உருவாக்கிய தச்சர்களும், சிற்பிகளும் எவ்வாறு இருப்பார்கள்?

ஒரு சில கோவில்களில்  இவர்கள் அடையாளம் காணப்பட்டாலும் கல்வெட்டுச் சான்றுகளுடன் இவர்தான் இக்கோயிலைக் கட்டிய சிற்பி என்று அடையாளப்படுத்துகிறது  ஒரு சிற்பம்.

சோழ மாதா செம்பியன் மாதேவியார் ஏராளமான கோவில்கள் கட்டியவர்.  செங்கற் தளிகளைக் கற்றளிகளாகப் புதுப்பித்தவர். அம்மையாரின் ஆஸ்தானச் சிற்பியின் பெயர் ஹரசரணசேகரன்.

கும்பகோணம் அருகே உள்ளது  கோனேரி ராஜபுரம் என்னும் திருநல்லம் கோவில். செங்கற்றளியான இதைக் கற்றளியாக புதுப்பித்தார் மாதேவியார். தனது கணவர் கண்டராதித்தர் பெயரால் இக்கற்றளியை எடுப்பித்தார். இவரது ஆணைப்படி கற்றளியைக் கட்டிய சிற்பிதான் ஹரசரணசேகரன்.  இச்சிற்பியின் உருவமும், உருவத்தைச் சுற்றிக் கல்வெட்டும் இக்கோவிலில் உள்ளது.

sculpture.jpg
Sculptor.jpg

கோவிலில் உள்ள ஆடவல்லானை வணங்கும் கோலத்தில் இச்சிற்பி உள்ளார். "உடைய பிராட்டியார்க்குத் திருக்கற்றளி எடுப்பித்த ஆலத்ததூருடையான் சாத்தன் குணபத்தனான ஹரசரணசேகரன்." இச்சிற்பிக்கு கண்டராதித்தரின் விருதுப்பெயரான இராசகேசரி மூவேந்த வேளான் என்னும் பட்டத்தை அளித்து பெருமைப் படுத்தினார் அம்மையார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சோழ தேசத்துச் சிற்பி இவர்.


தகவல் உதவி:
"வரலாறு - நீங்களும் நானும்"
சிறப்புரை: மருத்துவர் இரா. கலைக்கோவன்
தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையவழி உரைத்தொடர் திசைக்கூடல்-213 
---




Saturday, June 5, 2021

பனையுறை அன்றிலும் நீருறை மகன்றிலும்


 -- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


'பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை  மட்டும் அருந்திவிட்டு நீரைத் தனியாகப் பிரித்துவிடும் தகைமையது அன்னப்பறவை என்று சான்று இல்லாமல் கூறும் கூற்றுபோல தமிழ்நாட்டில் பல செய்திகள் உண்டு.  அன்றில் பறவை இணையில் ஒன்று இறப்பின் மற்றொன்றும் இறந்துபடும் என்ற செய்தியும் அவ்வரிசையில்தான் நீங்காமல் இடம்பெற்று விட்டது. கடற்கரைகளை ஒட்டிய மணற்பாங்கான பூங்கழிகளில், பனை மரங்களில் கூடுகட்டி வாழ்பவையே அன்றில் பறவைகள். 

ibis.jpg
தமிழ்நாட்டில் தூத்துக்குடி,  இராமநாதபுரம் முதலிய மாவட்டங்களில் இப்பறவைகளைக் காணலாம். இப்பறவைகள் இரவு நேரங்களிலும் செவ்வானம்  காணப்பெறும்போதும், புணர்ச்சிக் காலங்களிலும் உரத்த குரலில் அரற்றும் தன்மை கொண்டவை. இச்செயல்தான் இப்பறவையின் தனித்தன்மை.  பிரிவில் இறப்பு என்பது சான்று இயலாத அற்றாரும். 

பறவை இயல் வல்லுநர் பலரும், பி.எல். சாமி, நா. கணேசன் போன்ற அறிஞர் பலரும் அன்றில் பறவை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு கட்டுரைகள் வனைந்துள்ளனர். அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை முதலிய சங்கத் தமிழ் நூல்களிலும், மணிமேகலை, நாலடியார், ஆழ்வார் தம் பாசுரங்கள், மூவர் தேவாரப் பாடல்கள், கம்பராமாயணம் முதலிய நூல்களிலும் அன்றிலின் தோற்றம் செயல்கள் பற்றிய பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

'பிளாக் ஐபிஸ்'  எனும் ஒருவகை நாரை இனம் சார்ந்ததே அன்றில் பறவைகளாகும். வடமொழியில் கிரௌஞ்சம் என்று குறிப்பிடுவர். நாட்டுப்புற வழக்கில் கருப்பு அரிவாள் மூக்கன் என்றும் வடபுலத்தில் சாரஸ் நாரை என்றும் அழைப்பர். 

இப்பறவையின் அரற்றும் குரல்தனை ......  
ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய (அகம். 305),  
சேவலோடு புணராச்சிறுகரும்பேடை இன்னாது உயங்கும் (அகம். 120), 
அன்றிற் பேடை அரிக்கு ரல் அழைஇ (மணி.5-127), 
அன்றிலின் குரல் அடரும் (பெரிய திருமொழி), 
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்குமே (திருவாய்மொழி), 
அன்றிலம் பேடைபோல் வாய்திறந்தரற்றலுற்றாள் (கம்ப.) 
எனக் கூறப்பெற்றுள்ளள. இவை அனைத்தும் பிரிவால் நேர்ந்தவையாகும்.

மேலும், புணர்வின் போது ஒலி எழுப்பும் என்பதை  இன்னாது உயங்கும் கங்குலும் (அகம்.) 
பெடை புணர் அன்றில் உயங்குரல் அளைஇ (நற்.)
கையற நரலும் நள்ளென்யாமத்து குறுந்.) 
எனப் பலவாறாக சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன.

அன்றில் போன்றே மகன்றில் என்ற ஒருவகை நீர்வாழ் பறவை பற்றிய பல இலக்கியக் குறிப்புகள் கிடைக்கின்றன. அவற்றில் ஒட்டக்கூத்தரின் மூவருலா பாடலடிகள் குறிப்பிடத்தகுந்தவை. இராசராச சோழனுலாவில் இடம்பெறும் தலைவி ஒருத்தி தன் இல்லத்திற்கு முன்புள்ள பனை மரத்தின் மேல் இருந்துகொண்டு இராப்பொழுதில் அரற்றும் அன்றிலின் குரல் தன்னை வருத்துகின்றது. எனவே, பனையின்கண் உள்ள அன்றிற் பறவையை அகற்றிவிட்டு மகன்றிற் பறவையை அங்கு கொண்டு  வந்து ஏற்றுங்கள் என்று புலம்புவதாகக் கூறப் பெற்றுள்ளது.

'குலோத்துங்க சோழனுலா' வில் வருகின்ற தலைவியோ தனக்கு அன்றிலின் அகவல் இராப்பொழுதில் துன்பத்தைத் தருகின்றது என்று கூறி, சேரனுக்குரிய பனைமரத்தை வெட்டி வீழ்த்திய சோழன் அந்த அன்றிற் பறவை தங்கியிருக்கின்ற பனைமரத்தை வெட்டியிருக்கக்கூடாதா? எனப் புலம்புகின்றாள். 

தேவாரப் பாடல்களில் அன்றில் பற்றிய குறிப்புகள் காணப்பெற்றாலும் ஓரிரு பாடல்களில் பகன்றில் என்ற சொல் காணப்பெறுகின்றது. பகன்றில் என்பது அன்றிலையே குறிக்கின்றது என உரையாசிரியர்கள் பலர் கட்டியுள்ளனர்.

இக்கட்டுரை ஆசிரியர் ஓலைச்சுவடிகளில் அமைந்த அந்த ஏடுகளை ஆய்வு மேற்கொண்ட போது, மகர எழுத்துகள் ஏடுகளில் எழுதப்பெறும்போது அவை பகரமாகக் காட்சி அளிப்பது அறியப்பட்டது. மகன்றில் என்பதை பகன்றில் எனப் படித்து அப்படியே அச்சு நூல்களிலும் பதிப்பித்து விட்டனர். அத்தகையதோர் பாடல் திருநாவுக்கரசரின் திருவையாற்றுப் பதிகத்தில் உள்ளது.

திருக்கயிலை செல்ல முனைந்த அப்பரடிகள் ஈசனால் ஆட்கொள்ளப்பெற்று வடபுலத்து வாவியில் மூழ்கி ஐயாற்றுக் குளத்திலிருந்து எழுந்தார். கரை ஏறியபோது, இணை இணையாக விலங்குகளும் பறவைகளும் அங்கு திகழ்வதைக் கண்டார். ஐயாற்றுக் கோயிலில் கயிலை தரிசனம் பெற்ற பின்பு தான் கண்டவற்றை மாதர் பிறைக் கண்ணி யானை எனத் தொடங்கும் பதினொரு பாடல்கள் கொண்ட பதிகமாகப் பாடியருளினார். ஆறாம் பாடலில் 'வண்ண மகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்' என்று தான் கண்ட காட்சியைப் பதிவு செய்தார். பிற்காலத்திய ஏடு பெயர்த்து எழுதும்போது மகன்றில் பகன்றில் என மாற்றம் பெற்றுவிட்டது.


தாராசுரம் சிவாலயத்தில் இரண்டாம் இராசராசசோழன் இப்பதிகம் பாடும் காட்சியை சிற்பமாக்கியுள்ளதை இக்கட்டுரை ஆசிரியர் தம் ஆய்வில் கண்டறிந்து வெளிப்படுத்தினார். அதில், அப்பர் பதிகம் பாடும் ஆறாம் காட்சியில் இணையாக மகன்றில் பறவைகள் நிற்க, அவை முன்பு உழவாரம் ஏந்தியவண்ணம் அப்பர் பாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அக்காட்சியில் திகழும் மகன்றில் பறவைகள் சிறிய வாத்துகள் வடிவில் திகழ்கின்றன. நாரை இனத்து அன்றில் பறவை வடிவிலிருந்து இவை வேறுபட்டுக் காணப்பெறுகின்றன.

சோழன் படைத்த இச்சிற்பக் காட்சியால் இது வரை நாம் அறிந்திராத மகன்றில் பறவை வடிவம் யாது என்பதைக் காண முடிவதோடு, தேவாரப் பாடல்களில் காணப்பெறும் பகன்றில் என்ற சொல் ஏடு பெயர்த்து எழுதியவர் செய்த தவறே என்பது உறுதி பெறுகின்றது.


----



Tuesday, June 1, 2021

இனிய நண்பனே!


-- ருத்ரா இ.பரமசிவன்




இனிய நண்பனே!
உனக்கு 
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உலகத்தின் எந்த புள்ளியிலும்
கர்ப்பம் திறக்காத‌
தருணங்களே இல்லை.
அந்த ஒரு பொன்னான தருணத்தில்
உதித்தவனே!
நீ வாழ்க! நீடூழி வாழ்க!

வாழ்க்கை எனும் ஒரு 
மயிற்பீலி உனக்கு கிடைத்திருக்கும்.
அதை விரலில்
சுழட்டி சுழட்டிப்பார்.
அதன் வண்ணங்கள் உன்னைக்
கிறங்கடிக்கலாம்.
அந்த மயில் வேட்டையாடப்பட்டதா?
அந்த மயிலே உனக்கு
இறகு உதிர்த்துக்கொடுத்ததா?

வாழ்க்கையின் காரணங்களை
நீ
தேடிக்கொண்டிருக்கும்போது
அது உன்னை விட்டு விட்டு
பல காத தூரம் அல்லவா
சென்றிருக்கும்.
சரி!
பின்னோக்கியே செல்லலாம்
என்று 
நீ திரும்புவாயானால்
நீ வந்ததே தவறு.

பிறவி தான் 
பாவத்திலும் பெரிய பாவம்
என்கின்றவர்கள்
உன்னை அந்த குகையில் மூடி
அஞ்ஞானப்பெரும்பாறை கொண்டல்லவா
அடைத்து விடப்பார்க்கிறார்கள்.
பிரமத்தைப் பார்க்கவேண்டும் என்று
சொல்பவர்கள்
இப்படி 
நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு
அதன் அடிக்கிளையையா
வெட்டுவார்கள்.

அரிது அரிது 
மானிடராய் பிறத்தல் அரிது
என்ற ஞானமே
எல்லா பிரம்மஞானங்களையும்
பின்னுக்குத் தள்ளியது.
மனிதா!
முதலில் வாழ்க்கை உன்னை
தள்ளிக்கொண்டு போகும்
அந்த நடுக்கடல் வரை.
அப்புறம் அந்தப் படகின்
துடுப்புகளும் நீயே!
துடிப்புகளும் நீயே!

மண்டபங்களில் உபன்யாசங்கள் 
கேட்டுவிட்டு
உன் "கொள்ளிச்சட்டிக்குள்"
போய் விழுந்து கொள்ளாதே.
பிரம்மம் என்பது
உயிர் ஆற்றலின் நீண்ட சங்கிலி.
அதற்கு கோடரி தூக்கும்
வேதாந்தங்களைக் குப்பையில் போடு.

பிணங்களாய் நீ குவிந்த போதும்
இந்த வைரஸ்கள் சொல்லும் பாடத்தைப்
படித்துப்பார்.
ஆம்!
மனிதா!
நீ பெருகு!பல்கிப்பெருகு!
உன் வெள்ளமே பேரறிவு.
உன் பெருக்கமே பேரொளி!
ஆற்றலாய் பெருகு!
இந்தப் பிரபஞ்சங்களே நீ தான்.

நீ வற்றாத ஊற்று.
சுரந்து கொண்டே இரு.
பிறந்து கொண்டே இரு.
இறப்பு 
ஒரு நிறுத்தற்புள்ளி
முற்றுப்புள்ளி அல்ல.
நீ
பிறந்து கொண்டே இரு.
உனக்கு 
நிரந்தரமாய்
உன் பிறந்த தின வாழ்த்துக்கள்

இந்த 
சூரிய ஒளிப்பிழம்பில்
அச்சிட்டு அச்சிட்டு 
வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
என் இனிய நண்பனே!
இந்த பிறந்த தின வாழ்த்துக்களே
இன்னும் இன்னும் 
கோடிக்கணக்கான மைல்களுக்கு
உன்னை இட்டுச்செல்லும்.