Showing posts with label முனைவர் த.ஜான்சி பால்ராஜ். Show all posts
Showing posts with label முனைவர் த.ஜான்சி பால்ராஜ். Show all posts

Sunday, February 20, 2022

சாதி எதிர்ப்பும் கிறித்தவமும்!!

 -- முனைவர் த. ஜான்சி பால்ராஜ்


சாதி, சமயச் சடங்குகள், மரபுசார் நம்பிக்கைகள், பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில்  மக்களின் மூளைக்கு விலங்கிட்டு சமூகத்தில் ஆங்காங்கே ஒருசிலர் தங்களை மேல்மட்டத்தினராகக்  காண்பிக்கும் ஒரே நோக்கத்தில் அடுத்தடுத்த அடிமைமுறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே தங்களின் வசதியான வாழ்கையைத் தக்கவைத்துக் கொண்டிருந்த சமூகத் தீமை இன்றுவரையிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையின் ஆரம்பக் காலகட்டம் மிகக் கொடூரமானதாக இருந்திருப்பதை வரலாற்றுப் பின்புலங்கள் சுட்டி நிற்கின்றன. அறியாமைகளின் அளவைப்பொறுத்தே ஒரு நாடு அல்லது சமூகம் அயலார்களின் கொடுக்குப் பிடிக்கு இலக்காகும் தன்மையை தெளிவாக வெளிப்படுத்தும்.  இயற்கை வளமும் சிறந்த கலாச்சார மரபுகளையும் தாங்கி நின்ற நமது நாடும் அதன் சிறப்புகளை மக்கள் மற(றை)க்கும் அளவுக்கு அறியாமை திரைகளுக்குள் மூழ்கிக்கிடந்தது. 

பல இனத்தவரும் மதத்தினரும் ஒன்றிணைந்து வாழ்ந்த கூட்டுச் சமூகத்தில் சொந்த நாட்டினரே ஒருவரையொருவர் சாதி சமய பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த அடிமைத் தனங்களைப் போட்டிப்போட்டுத் திட்டமிட்ட ஆதிக்கத்தைச் செலுத்திவந்தனர்....!  வேடிக்கையான இந்நிலையை நமது நாட்டிற்கு நாடு கண்டு போகவந்தோர் பலரும் வியந்துரைத்துப் போயிருக்கின்றனர். இதுவே ஐரோப்பியர்களின் இந்தியக் காலனியாதிக்கத்திற்கும் அடிகோலியது என்பர்...!

இந்தியக் கலாச்சாரத்தின் ஒருபகுதியான சாதியவெறி தங்களுக்குக் கீழிருந்த சாதியினரை ஆதிக்கம் செய்து மகிழ்வதிலேயே தன்நிறைவைப் பெற்றுக் கொண்டிருந்தன.  தங்களுக்கு மேல்நிலையிலிருந்தோருக்கு அடிபணிந்து போவதைப் பெருமையாகக் காண்பித்தும் தங்களுக்குக் கீழிருந்தோருக்கு அதைப் பாடமாக கற்பித்தும் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர். இதன் நிறுத்தமற்ற, கண்செருகிப் போன, மிக மலிவான எண்ணத் தாக்குதல்களால் சமூகம் கூறுபட்டுக் கிடந்தது...!

இந்நிலையில் வாணிப நோக்கில் வந்த ஐரோப்பியர்களாலும்,  சமயப் போதனைகளையும் வழிபாட்டு முறைமைகளையும் மேற்கொள்ள வந்த பாதிரிமார்களாலும்  இந்தியர்களிடையே கிறித்தவம் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் வந்த கத்தோலிக்கப் பாதிரிமார்கள் பலரும் இங்கிருந்த மக்களின் சாதி சமய நிலைமைகளை முழுமையாக அறிய இயலாமல்  அவர்களிடமிருந்த சாதியத்தையும் சேர்த்தே கிறித்தவத்தில் சேர்த்தனர். அவரவர் சாதி முறைமைகளை விட்டு விட வேண்டியதில்லை, கிறிஸ்துவை ஏற்றால் போதும் என்ற விதத்திலேயே சுவிசேஷத்தை நற்செய்தியாக அறிவித்தனர். குறிப்பாக ராபர்ட்_டி_நொபிலி தன்னை இத்தாலிய பிராமணன் என்று சொல்லிக் கொண்டு உயர் சாதியினராக கருதப்பட்ட பிராமணர்களுக்கு கிறிஸ்துவை நற்செய்தியாக அறிவிக்க முயன்றார். அவரது நோக்கம் சமூகத்தின் உயர்மட்டத்தினரை ஏற்க செய்துவிட்டால் ஏனையோர்களும் எளிதில் 'போலச்செய்தல்' என்ற பின்பற்றும் இயல்பினால் எளிதில் ஏற்கச் செய்துவிடலாம் என்றிருப்பினும்,  மறைமுகமாக கிறித்தவம் உயர்சாதியினருக்கானது என்ற தவறான போக்கிற்கு அவரது செயல்பாடு வழிவகுத்து நின்றது.

கான்ஸ்டன்டைன் நோபிள் எனப்பட்ட வீரமாமுனிவரைத் தவிர மற்றவர் அனைவருமே தமிழகத்தின் சாதியக் கொள்கைகளை அதன் விஷமம் புரியாமல் அப்படியே ஏற்றிருக்கின்றனர்.  இதன் நீட்சியாகவே இந்தியாவில் சமத்துவத்தை உலகிற்குப்  போதித்த கிறித்தவ  தேவாலயங்களுக்குள்ளும் சாதிப்பாகுபாடு கடைபிடிக்கப்பட்டது. மிகக் குறைவான எண்ணிக்கைகளில் தான் அன்றைய உயர்ந்த சாதியினராக கருதப்பட்டோர் கிறித்தவத்தை ஏற்றிருந்தனர்.

அவர்களும் ஆலயத்திற்குள் மற்ற தாழ்த்தப்பட்ட சாதியினர்களோடு அமரவோ புனிதத் திருவிருந்தென்ற "ஐக்கியத்தில்" பங்குபெறவோ மாட்டோம் என்றதால்  அவர்களுக்கு ஒரு திசையிலும் மற்றவர்களுக்கு நேர் எதிர் திசையிலும் இடமளிக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றிருக்கின்றன...!   ஆரம்பக்கால தமிழகக் கிறித்தவத்தில் அனுமதிக்கப்பட்ட இப்பிழையான அனுசரிப்பால்  இன்றுவரை ஒரே ஊரில் சாதிக்கொரு சபையென்பது கிறித்தவக் கொள்கைகளுக்கு எதிரான தவறென்ற உணர்வின்றி மிக எதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் மனப்போக்கை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை.

இந்நிலை சுமார் இரு நூறாண்டுகள் தொடர்ந்து கிறித்தவத்தில் புரையோடிப் போய் சாதியத்தின் தாக்கத்தை அதிகப்படுத்தியிருந்தது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கிறித்தவ சமய எழுப்புதலினால் இந்தியாவிற்கு மிஷனெரிமார்களின் வருகை அதிகரித்தது. இவர்கள் புராட்டஸ்டண்ட் (Protestant) பிரிவு கிறித்தவத்தினர். இவர்களும் ஏற்கனவே இருந்துவந்த சாதியக் கொள்கைகளை ஏற்பது தான் சமயப்பணிக்குச் சாத்தியம் என்று கருதிச்  செயல்பட்டனர். இதற்கு விதிவிலக்காக ஒன்றிரண்டு மிஷனெரிகள் சாதிப் பாகுபாட்டினால் மக்கள் அடையும் இன்னல்களையும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளையும் நீக்க முயற்சித்திருக்கின்றனர்.

திருநெல்வேலி அப்போஸ்தலன் - ரேனியஸ்:
அவர்களுள் 'திருநெல்வேலி அப்போஸ்தலன்' என்ற பெருமைக்குரிய சார்லஸ் தியாப்பிலஸ்  ஈவால்ட் ரேனியஸ் (Charles Theophilus Ewald Rhenius;  November 5, 1790 – June 5, 1838) என்பவர் முதன்மையானவர். ஜெர்மன் தேசத்தினரான இவர் கி.பி 1814 ஆம் ஆண்டு இந்தியா வந்து,  1820 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையைத் தலைமையிடமாக கொண்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஒரு சிறு பகுதியைக் கூட விடாமல் சுவிசேஷத்தை நற்செய்தியாய் அறிவிக்க அரும்பாடு பட்டார். இருப்பினும்,  அவரது பணிகளை ஆய்வு செய்தால் அவர் வெறுமனே கிறித்துவ  சமயப்பணிகளை மட்டுமே செய்யவில்லை, மக்கள் மீது உண்மையான அன்பும் கரிசனையும் கொண்டார், தமிழகத்தில் காணப்பட்ட சாதியம் சார்ந்த அடக்குமுறைகளையும் தீண்டாமை கொடுமைகளையும் கண்டு அவற்றைக் களைய முற்பட்டார் என்பது புலனாகும். குறிப்பாக, சாதிப்பாகுபாடற்ற தமிழ்ச் சமூகம் உருவாக வேண்டுமென கனவு கண்டார். எனவே முதலில் கல்விப்பணியைத் துவங்கிய அவர், அதில் எள்ளளவும் சாதிப்பாகுபாடுகள் இருந்துவிடக்  கூடாதென்பதில் மிகக் கவனமாக செயல்பட்டார். மாணக்கர்கள் தங்களுக்குள்  எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இன்றி கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தினார். தாம் சமயப்பணி செய்த ஊர்களிலெல்லாம்  பள்ளிகளையும் ஏற்படுத்தினார்.


அதில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்க வேண்டி, தங்கும் விடுதியுடனான ஆசிரியப் பயிற்சிப் பள்ளியும் (செமினெரி) நடத்தினார். அவற்றில்  சாதி வேறுபாடு பாராட்டிய உயர்சாதி மாணாக்கர்கள் தங்களுக்கும் தாழ்ந்தசாதியின மாணாக்கர்களுக்கும் இடையே தடுப்புச் சுவர் அல்லது தட்டி மறைவு வைக்க வேண்டும் என்று ரேனியசோடு வாதிட்டனர். ஆனால் எவ்விதத்திலும் சாதி வேறுபாட்டை செமினெரியில் அனுமதிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார் ரேனியஸ். 'அவர்களது  பார்வையில் இல்லாமலாவது நாங்கள் இருந்து உணவு உண்கிறோம், இல்லையேல் எங்களை சாதியை விட்டே நீக்கிவிடுவர்'  என்று அவர்கள் கெஞ்சியும் அனுமதி தர மறுத்து சாதி வேறுபாட்டை அனுசரித்துத்தான் இதை நடத்தியாக வேண்டுமென்றால் இந்தச்  செமினெரியே வேண்டாமென்று அதை மூடிவிட்டார். 1818 ல் துவக்கப்பட்ட அச்செமினெரி அவரது இப்புரட்சிகரமான சிந்தனையால் 1821ல் மூடப்பட்டது. ஆனாலும் மிகவிரைவில் சாதிமதப் பேதமற்ற ஆசிரியப் பயிற்சிப் பள்ளியாக திறக்கப் படும் என்ற அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. மீண்டும் அது 1822ஆம் ஆண்டு திறக்கப்பட்டு சாதிப் பாகுபாடற்ற பள்ளியாக நடைபெற்றது. அதில் ஒருபோதும் சாதி வேறுபாடு  கடைபிடிக்கப்படவில்லை.

கிறித்தவ மிஷனெரிமார்கள் இந்தியாவில் கல்விப் பணியையும் இன்னும் பிற சமூகப்பணிகளையும் அவர்களது சமயப்பணியின் வளர்ச்சிக்காகவே செய்து போயினர் என்ற வரலாற்றாசிரியர்கள் சிலரின் கூற்று ஏற்கத்தக்கதல்ல...!    இந்தியர்களிடையே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இச்சாதியத்தை அயல்நாட்டினரான மிஷனெரி ரேனியஸ் தான் முதன் முதலில் எதிர்த்தவர் என்பது இந்திய சாதி எதிர்ப்பு வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது கண்டு கொள்ளப்படாத உண்மை.

தமிழகத்தில் ரேனியஸ் மேற்கொண்ட இதே சாதி எதிர்ப்பைக் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி 1924 ஆம் ஆண்டு சமத்துவத்தை விரும்பிய சில அரசியல் தலைவர்களால்  திருநெல்வேலியில் உள்ள சேரன்மாதேவியில் ஏற்படுத்தப்பட்ட 'தமிழ் குரு குலத்திலும்' ரேனியஸ் செமினெரியில் நடந்த அதே சாதிப்பாகுபாடு காணப்படுவதை அறிந்து அதற்கு எதிராக நடந்த சர்ச்சைகள் ஏராளம். அந்தச் சமூக ஆரோக்கியத்திற்கு அடிகோலிய அப்போராட்டம் 'குருகுலப் போராட்டம்' (கி.பி1925) என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டு வியக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

மனிதச் சமூகத்தின் உள்ளார்ந்த வளர்ச்சிகளுக்கு முக்கியம் அளிக்கப்படாத வெற்று சமயப் பக்திகளும் அதுசார்ந்த செயல்பாடுகளும் என்றும் நிலைப்பதில்லை, மக்கள் மனத்திலும், இறைவனின் பார்வையிலும்..!! 
       
     

முனைவர் த.ஜான்சி பால்ராஜ்,  வரலாற்று ஆய்வாளர்

------

Sunday, January 9, 2022

ரேக்ளா: தொடரும் தமிழர் பாரம்பரியம்


-- முனைவர் த. ஜான்சி பால்ராஜ்


தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் பண்டிகையில் மகிழ்ச்சியை அதிகரித்துக் குதூகலமாக்குவதில் விளையாட்டுகளின் பங்களிப்பு மிக அதிகம். அதிலும் நம் பழந்தமிழரின் வீர விளையாட்டுகளுள் ஒன்றான மாட்டுவண்டிப் பந்தயம் (ரேக்ளா ரேஸ்) இன்றுவரை மக்களைப் பெரிதும் கவர்ந்துவருகிறது. பொங்கலுக்குச் சில நாட்களுக்கு முன்பே இந்த மாட்டுவண்டிப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதிலும் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. குறிப்பாக, மதுரையில் அவனியாபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடியைச் சுற்றியுள்ள பகுதிகள், நாகர்கோவில் போன்ற இடங்களிலும் தொடர்ந்து நடைபெறுகிறது.





தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, கோயம்புத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், ஈரோடு, கரூர் போன்ற இடங்களிலிருந்து மாட்டுவண்டிப் போட்டியாளர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு, தமிழ்ச் சமூகத்தின் தொன்றுதொட்டு வரும் கலாச்சாரத்தை இன்றும் வளர்த்துவருகின்றனர். இப்போட்டிகள் மிக அதிக அளவில் மாட்டுப் பொங்கலன்று நடைபெறுகின்றன.

மனித நாகரிக வளர்ச்சிக்கு அடிகோலிய எதேச்சையான, மிக முக்கியக் கண்டுபிடிப்புகளுள் மாட்டுவண்டியும் ஒன்று. பாரம் சுமப்பதற்கும் தூரம் கடப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட மாட்டுவண்டிகள், மக்களின் வேலைகளை எளிமையாக்கி நேரத்தை மிச்சப்படுத்தின. இதன் மூலம் மக்களின் வாழ்க்கை முறையில் சிறப்பான மாற்றங்கள் நிகழ்ந்தன.

நாட்கணக்கில் நடந்தே கடந்த பெருந்தொலைவுகளையும் எளிதில் கடக்க முடிந்ததோடு வணிகமும் தழைத்துச் சமூகப் பொருளாதார நிலையும் மேம்பட்டது. இதனால், சமூகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை மக்கள் அதிக அளவில் மேற்கொள்ளத் தொடங்கினார்கள். மக்களின் இந்நிலைக்குக் காரணமான மாட்டுவண்டியும் அதனை இயக்கப் பயன்படுத்திய மாடுகளும் சமூகத்தின் மிக முக்கிய அங்கமாகின.

செய்யும் தொழிலையே தெய்வமாகக் கருதும் தமிழர்கள், ஆண்டு முழுவதும் உழைக்கும் மாடுகளை அன்றாடப் பணிகளிலிருந்து விடுவித்துப் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபடுத்தி மகிழ்ந்தனர். ஆரம்பத்தில் தங்கள் பயன்பாட்டுக்கு வைத்திருந்த மாட்டுவண்டிகளை விவசாய நிலப் பகுதிகளில் ஓடவிட்டு, முந்தி இலக்கை அடையும் வண்டிக்கு வெற்றிவாகை சூடி ஆரவாரித்தனர். மக்களுக்கு இதன்மீது ஏற்பட்ட அலாதிப் பிரியத்தால் தொடர்ந்து அடிக்கடி இப்போட்டியை நடத்தத் தொடங்கினர். குறிப்பாக, மக்கள் ஒன்றுகூடும் திருவிழாக்களில் போட்டிகள் நடத்தித் தங்கள் விழாக் கால மகிழ்ச்சியை அதிகப்படுத்திக்கொண்டனர். நாளடைவில் பொங்கல் மற்றும் கிராமப்புறப் பெண் தெய்வ வழிபாட்டு விழாக்களில் மாட்டுவண்டிப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட ஆரம்பித்தன. காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களோடு சிறப்பான முறைகளில் இப்போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. பொழுதுபோக்கு நிகழ்வுகள் அதிகம் இல்லாத அக்காலகட்டத்தில், இப்போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் சமூகத்தில் ஏற்படுத்தின. இதனால், போட்டிகளுக்கென்றே வண்டிகள் வடிவமைக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட காளைகள் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன.

மாடுகளால் இலகுவாக இழுக்கத்தக்க விதத்தில் இரண்டு பேர் மட்டுமே அமரும்படியான வண்டிகள் உருவாக்கப்பட்டன. இரண்டு முதல் மூன்று வயது வரையிலான மாடுகளுக்கான சிறிய அளவிலான ஒற்றைப் போல் வண்டிகளும் நான்கு வயதுக்கு மேலான மாடுகள் இழுக்கத்தக்க பெரிய அளவிலான இரட்டைப் போல் வண்டிகளும் தயாரிக்கப்பட்டன. இத்தோடு பயணத்துக்குப் பயன்படுத்தப்படும் வில்வண்டிகளும் போட்டிகளில் பங்கேற்கின்றன. பந்தயங்கள் பெரும்பாலும் புறவழிச் சாலைப் பகுதிகளில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினரின் அனுமதியுடனும் உதவியுடனும் நடைபெறுகின்றன.

பந்தய வண்டிகளை இழுத்துச் செல்லும் காளைகளாக நல்ல உடல் வலிமையும் கம்பீர தோற்றமும் உடைய காங்கேயம், ஒட்டங்காளை போன்ற நாட்டுமாடுகள் இளங்கன்றிலிருந்தே வளர்க்கப்படுகின்றன. இதற்கென்றே ஒன்றரை வயது முதல் இரண்டு வயதுக்குள் மாடுகளை வண்டியிழுக்கப் பழக்குவிக்கின்றனர். முதலில் குறைந்த எடையுடைய சிறிய வண்டிகளில் இளங்கன்றுகளை இணைத்துப் பழக்குகின்றனர். பின்னர், குறிப்பிட்ட தொலைவை அவற்றின் இயல்பான வேகத்தில் இழுத்துச்செல்லப் பயிற்றுவிக்கப்படுகின்றன. தொடர்ச்சியான பயிற்சிகளால் காளைகள் போட்டிகளுக்குத் தயாராகிவிடுகின்றன. காளைகள் பந்தய வண்டிகளை வேகமாக இழுத்துச் செல்லக் கட்டுக்கோப்பான உடலமைப்பும் ஆரோக்கியமும் இருப்பதற்காக போட்டி தொடங்குவதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே அவற்றின் உணவு முறைகளிலும் பயிற்சிகளிலும் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.

பந்தயத்தில் ஈடுபடும் காளைகள் வயது மற்றும் அவற்றின் உயரத்தின் அடிப்படையில் பெரியவை, நடுத்தரம், கரிச்சான், பூஞ்சிட்டு மாடுகள் எனத் தரம்பிரிக்கப்பட்டுப் போட்டிக்கான தூரம் தீர்மானிக்கப்படுகிறது. பெரிய மாடுகளுக்கான தூர அளவு 15 அல்லது 16 கிமீ, நடுத்தர மாடுகளுக்கு 12 கிமீ, கரிச்சான் மாடுகளுக்கு 10 கிமீ, பூஞ்சிட்டு மாடுகளுக்கு 7 கிமீ என்று தூரம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு பந்தய வண்டியிலும் இரண்டு பேர் பொறுப்பாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள். ஒருவர் வண்டியின் உரிமையாளர், மற்றொருவர் உதவியாளர். வண்டியை இலக்கை நோக்கி ஓட்டுபவராக வண்டியின் உரிமையாளர் அமர்ந்திருக்க, உதவியாளர் காளைகளைத் துரத்தியபடி ஓடுவார். இவ்விருவரது சாமர்த்தியமான உந்துதலே காளைகளின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும். ஏற்கெனவே பயிற்சியால் பழக்கப்பட்ட காளைகள் இவர்களின் மன ஓட்டத்தை உணர்ந்து, வேகமெடுத்து இலக்கை அடைவதில் தீவிரம் காட்டும். 

குறைந்த நேரத்தில் இலக்கை அடையும் வண்டிகள், வெற்றிபெற்ற வண்டி உரிமையாளர்கள், மாடுகளுக்குச் சிறப்புகளும் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. மாட்டின் கொம்புகளில் வெற்றி சால்வைகள் சுற்றப்பட்டும் மாலைகள் அணிவிக்கப்பட்டும் அக்காளைகள் கௌரவிக்கப்படுகின்றன. வெற்றியை வண்டி உரிமையாளரின் ஊரார் அனைவருமே தங்களது வெற்றியாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்களுள் ஒன்றான மாட்டு வண்டியின் பயன்பாடு குறைந்துவிட்டபோதிலும் தென்மாவட்டங்களில் ரேக்ளா ரேஸ் என்று அழைக்கப்படும் மாட்டுவண்டிப் பந்தயம் மக்களின் வரவேற்பை அதிகமாகவே பெற்றுவருகிறது.



நன்றி: இந்து நாளிதழ் 







Friday, November 5, 2021

இன்றைய நவீனக் கல்விக்கு வித்திட்ட கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் - ரேனியஸ் ஐயர்

  —  முனைவர் த.ஜான்சி பால்ராஜ்


ஐரோப்பாவிலிருந்து கிறித்தவத்தின் ஒளியை உலகெங்கும் ஏற்றிட விளைந்த மிஷனெரிகளின் பணிகள் மகத்தானவை!

வெறும் சமயம் பரப்புதல் மட்டுமே இவர்களது பணியாக இருந்திருந்தால் பிற மதப் பரப்புநர்களைப் போலவே இவர்களையும் காணாமல் போக விட்டிருக்கலாம் நாமும்! ஆனால் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை முதற்கண் நிறைவேற்றி அந்தந்த நாடுகளில் காணப்பட்ட ஆதிக்க நிலையையும் அடிமை முறைகளையும் களைந்து, விடுவித்து அதன் பின்னரே தாங்கள் கண்டுணர்ந்த ஆன்மீக வெளிச்சத்தைக் காண்பித்தனர் இவர்கள்.

அதற்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியது ஜெர்மனின் ஹலே பல்கலைக்கழகத்தின் மிஷனெரி பயிற்சிக் களத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளே! அவற்றுள்:
 1. அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும். 
2. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைக்கான தொழில் பயிற்சி அளிக்க வேண்டும். 
என்ற இவ்விரு அடிப்படைத் தேவைகளையும் அளித்தலின் விளைவால் தான் நமது சமய ஏற்பு அமையப் பெறல் வேண்டும் என்பதே அதன் மையக் கருத்தாக்கம். அத்தகைய அழுத்தமான பயிற்சிக்குப்பின்னரே அவர்கள் பிற நாடுகளுக்குச் சமயப்பணியாளர்களாகச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அவ்விதத்தில் ஹலே பல்கலைக்கழகத்தினால் பட்டைத்தீட்டப்பட்ட வைரமாய் கி.பி.1814 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தவர் தான் சார்லஸ் தியோபிலஸ் ஈவார்ட் ரேனியஸ் என்ற செயல் வீரர். 1790 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாள் ஜெர்மன் நாட்டில் பிறந்த இவர்.  

Rhenius.png

இந்தியாவிற்கு வந்த அனைத்துக் கிறித்தவ மிஷனெரிகளிலும் மிகவும் சிறப்பிற்குரியவராகத் திகழ்ந்த இவர், வெகு துணிச்சலோடு இந்தியக் கட்டமைப்பின் மிக மோசமான சாதியத்தின் சாதி வேரை முதன் முதலில் அசைத்தவர்!

ஆதிக்க வர்க்கத்தினரால் ஏற்படுத்தப்பட்ட அடிமைத்தன மரபுவழிச் சாசனங்களின் சூட்சுமங்களைப் பாமர மக்கள் தாங்களாகவே உணராதவரை அவர்களை அதிலிருந்து விடுவிப்பது என்பது தற்காலிகமானதாகவே இருந்து வந்தது. நிரந்தரமான தீர்வை, கல்வியைக் கொண்டுதான் அடையச் செய்ய முடியும் என்பதை உணர்ந்திருந்த ரேனியஸ் தாம் ஏற்படுத்திய சபைகள் அமைந்திருந்த ஊர்களிலெல்லாம் சாதி சமயப் பாகுபாடின்றி கல்வியைக் கட்டாயமாக்கினார். அவருக்கு முன்பு இங்கு வந்திருந்தோரும் கல்விப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் இவரது கல்விப்பணி நவீனக் கல்விமுறைக்கு முதல்தர விதைகளாயின.கல்வியே அறியாமையை அகற்றும் ஆயுதமாதலால் கல்வியில் அதிகக் கவனம் செலுத்தினார்.

வெறும் எண்ணும் எழுத்தும் தான் கல்வி என்ற நிலையை மாற்றி, பொது அறிவு, தாவரம், மண்வளம், வரலாறு, புவியியல், கணிதம், கனிப்பொருள்கள், மொழியறிவு என்று இன்றைய கல்விமுறையை ஒத்த கல்வித் தரத்தை ஏற்படுத்த நூல்களையும் தாமே எழுதி இச்சமூகத்தின் அறிவுக் கண்களைத் திறந்து வைத்தார்.

அதில் கி.பி1832 ல் அவரெழுதிய பூகோள சாத்திரம் என்ற அறிவியல் நூல் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாயிற்று! இந்நூல் இந்தியர்களின் தவறான அறிவியல் பார்வையை மாற்றி தீர்க்கமாக சிந்திக்கத் தூண்டியதில் முதலிடம் பிடித்தது; ஆசியாவிலேயே முதன்முதலாக எழுதப்பட்ட அறிவியல் நூலாக ஏற்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு பிரதி  வரலாற்றுச் சங்கத்தின் நூலகத்தில் இருப்பது பெருமைக்குரியதாகும்.
அந்நூலில் வானம், பூமி, சூரியகிரகணம், சந்திரகிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகளைத் தம் கற்பனையில் தோன்றிய கதைகளாகப் புனைந்து அவற்றை எழுத்துக்கள் வாயிலாகவும் வாய்வழிச் செய்தியாகவும் மக்கள் நம்பிக்கொண்டு வந்தவற்றை மாற்றியமைக்க ரேனியஸ் அரும்பாடுபட்டிருப்பதை அதில் அறியமுடிகிறது!

முறையான கல்வியளிப்பதிலும் அதில் செழுமையடையச் செய்வதிலும் பெரும் கல்வியாளராகவே செயல்பட்டிருக்கிறார் ரேனியஸ். ஏனோதானோ வென்று பெற்றோர்களின் அக்கரையற்று பெயரளவில் செயல்பட்ட பள்ளிகளை மூடினார். பள்ளிகளுக்கென்றே சிறந்த ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சிப் பள்ளிகளை(செமினரி) ஏற்படுத்தி மிகச் சிறந்த ஆசிரியர்களை உருவாக்கினார். சாதியத்தைக் கடைப்பிடிப்பதைத் தமது பள்ளிகளிலும் ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளிலும் கடுமையாக எதிர்த்தார். பள்ளியின் கல்வித் தரத்தை ஆராய, கல்வி விசாரணை அல்லது பரீட்சிக்கும் ஆசிரியர் என்றதொரு(பதவியை) ஆய்வுக் குழுவையும் ஏற்படுத்தி (Inspecting School Master I.S.M) அவ்வப்போது பள்ளிக்கல்வியின் தரத்தைச் சீரமைத்தார். இச்செயல் முறை இந்தியாவில் முதன்முதலாக ரேனியசால் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கு முறையாகவே அறியமுடிகிறது!

பெண்கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்து அதற்கென்றே பெண்கள் பள்ளிகளை ஏற்படுத்தி அனைவருக்குள்ளும் சமத்துவச் சிந்தையை விதைத்தவர் ரேனியஸ். கி.பி1823 ஆம் ஆண்டு பெண் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் , பெண் ஆசிரிய பயிற்சிப்பள்ளியையும் ஏற்படுத்தினார். இப்பள்ளியே இந்தியாவில் இரண்டாவது பெண்களுக்கான தங்கும் விடுதியுடனான பள்ளியாகும்.இன்றும் இது பாளையங்கோட்டையில் மேரி சார்சன்ற் பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அடுத்தவர் சீரமைத்த நிலங்களை விளைவிப்பது எளிது! ஆனால் காட்டையும் மேட்டையும் திருத்தி விளைநிலமாக்கும் பணிகள் கடினமானவை! அதனை சுமார் 24 ஆண்டுக்காலம் நேர்த்தியாக செய்து புரையோடிப் போய்க்கிடந்த தமிழக மண்ணின் அசுத்தங்களை அறிவொளிப் புகுத்தி, அடையாளங்கண்டு ஒதுங்கவும் ஒழிக்கவும் செய்தவர் சமூகச் செயற்பாட்டாளர் ரேனியஸ் அவர்களே!!

1838 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் தனது 48 வது வயதில் இவ்வுலகவாழ்வை நிறைவு செய்தார்.அவரது கல்லறை, பாளையங்கோட்டை, தூய யோவான் ஆலயக் கல்லறைத்தோட்டத்திற்கு வெளியே சற்று தள்ளி ஊரின் நடுவில் அமைந்துள்ளது.


---