Showing posts with label முனைவர் சுபாஷிணி. Show all posts
Showing posts with label முனைவர் சுபாஷிணி. Show all posts

Monday, October 9, 2017

சாயர்புரத்தில் வாழும் நெசவுக்கலை


நெசவுத்தொழில் தமிழர் பண்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் கலை. இன்றோ பல்வேறு காரணங்களினால் நெசவுத்தொழில் புகழ் மங்கி வருகின்றது. இளம் தலைமுறையினர் வெவ்வேறு துறைகளில் தங்கள் ஆர்வத்தைச் செலுத்தத் தொடங்கிவிட்டமையால் கைத்தறி போடுதல் என்னும் கலை இன்று படிப்படியாகக் குறைந்து மறைந்து போவது நிகழ்கின்றது.

சாயர்புரத்தில் நெசவுத்தொழில் பற்றிய ஒரு பதிவு செய்வதற்குத் தூத்துக்குடி சென்றிருந்த போது புதிய அனுபவங்கள் எனக்குக் கிட்டின.

சாயர்புரத்தில் உள்ள ஓரிரு நெசவுத் தொழிற்சாலைகள் மட்டும் சில தறி இயந்திரங்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆண்களும் பெண்களுமாகப் பாகுபாடின்றி இத்தொழிலைச் செய்கின்றனர். கையால் போடும் தறி மட்டுமன்றி இன்று இயந்திரத்துடன் இயங்கும் நெசவு இயந்திரங்களும் வந்து விட்டன. இவை ஒரு கைத்தறி சேலையோ, கைலியோ, துண்டோ தயாரிக்கப்படும் நேரத்தை விரைவாக்குகின்றன.

சாயர்புரத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் முன்னர் ஒரு நெசவுத்தறி இருந்திருக்கின்றது. ஆனால் இன்றோ ஒரு சில வீடுகளில் அவை செயல்படுத்தப்படாத சூழல் இருப்பதால் குழியை மூடி நெசவு இயந்திரத்தை எடுத்து விட்டனர். ஒரு சில இல்லங்களில்  இன்றும் நெசவுத் தறிகள் இருக்கின்றன.

 கிராமத்திற்குள் நுழையும் முன் எங்கு பார்த்தாலும் பளிச்சென்ற செம்மண் திடல்கள். பின்னர் பசுமையான மரங்கள். கிராமத்திற்குள் நுழைந்ததும் சின்ன சின்ன வீடுகள். தூய்மையான தெருக்கள். ஆங்காங்கே சின்னச் சின்ன தேவாலயங்கள். வித்தியாசமான காட்சியாக இது எனக்குத் தோன்றியது.

நான் தங்குவதற்காக அந்த கிராமத்தில் முக்கியமானவர் பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்களின் இல்லத்தை ஏற்பாடு செய்திருந்தனர். பதிவுகள் முடித்து அங்கு சென்று சேர்ந்தவுடன் அப்பெரியவருடனும் அவரது மனைவியுடனும் அறிமுகம் செய்து கொண்டேன். அவர்கள் வீட்டின் மாடிப்பகுதியை முழுமையாக நூலகமாக மாற்றியுள்ளனர். கணினிகளை வைத்து கிராமத்துக் குழந்தைகள் வந்து பார்த்து படித்துச் செல்ல இலவசமாக அனுமதிக்கின்றனர். அன்பு நிறைந்த தம்பதியர்.

மறு நாள் காலையில் அவரது தமிழ் ஆய்வுகள் பற்றியும் அக்கிராமத்துப் பிரச்சனைகள் பற்றியும் பல விசயங்கள் பேசினோம். மேலும் பல நண்பர்களும் அங்கு வந்து கூடினர். நெசவுத்தொழிலை வளர்ப்பதற்காகவும் கைத்தறி பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என இவர்கள் என்னிடம் தகவல் பகிர்ந்து கொண்டனர்.

பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்கள் நெசவுத்தொழிலை அறிமுகம் செய்யும் ஒரு கூடம் போன்ற ஒரு கட்டிடம் ஒன்றை தன் சொந்தச் செலவில் கட்டியுள்ளார். அதில் பயிற்சி வகுப்புக்கள், தொழில் முனைவர்களுக்கான ஆலோசனைகள் போன்றவற்றை நடத்த திட்டம் வைத்துள்ளார்.

சாயர்புரத்தில் சாலைகளில் நான் சந்தித்த பெண்கள் என்னிடம் அன்புடன் பேசினர். நான் சென்ற நாள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முதல் நாள் என்பதால் அன்று மாலை அங்கிருந்த அனைத்து தேவாலயங்களிலும் விளக்குகள் பொருத்தப்பட்டு பாடல்கள், ஜெபங்கள் சொற்பொழிவுகள் என ஒலிப்பெருக்கியில் கேட்டுக் கொண்டே இருந்தது.

இந்தப் பகுதியில் பாதிரியார் ஜி.யூ போப் அவர்கள் உருவாக்கிய பள்ளிக்கூடம் ஒன்றும் உள்ளது. அதில் கல்வி கற்று வாழ்வில் சிறந்த முன்னேற்றம் கண்டவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எனத் தயங்காமல் கூறலாம்.

சாயர்புரத்தின் நெசவுத்தொழில் மட்டுமல்ல - தமிழத்தின் பல இடங்களில் நடைபெறுகின்ற நெசவுத்தொழில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதையும் இத்தொழிலை விட்டு மக்கள் மாற்றுத் தொழிலுக்குச் செல்வதையும் காண்கின்றோம்.

இங்கு தயாரிக்கப்படும் கைத்தறி சேலைகளைப் பார்த்த போது அவை மிக அழகாக இருப்பதை என்னால் மறுக்கமுடியவில்லை. ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் கைத்தறியை விரும்புவதில்லை என்பதைக் கேட்கும் போது வருத்தம் மேலிடுகின்றது. இத்தொழிலை வளர்க்க வேண்டுமென்றால் நாம் கைத்தறி ஆடைகளை வாங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரை கைத்தறிகளைப் பற்றி யோசிக்காதவர்கள் இனிமேல் அவற்றை வாங்கி அணிய முயற்சிக்கலாமே!

முனைவர்.க.சுபாஷிணி

Sunday, January 15, 2017

தமிழரின் மரபு வளங்களைக் காப்போம்

தலையங்கம்: தமிழரின் மரபு வளங்களைக் காப்போம்

வணக்கம்.


அறிவுத்தேடல் கொண்ட சிந்தனை புதியன படைக்கும் ஆற்றலைக் கொடுக்கும். மனிதன் ஆதிகாலம் தொட்டு தனக்குத் தெரியாததைத் தெரிந்து கொள்ள முனைப்புடன் செயல்பட்டதாலும், அப்படிச் செயல்படும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் தீர்க்கவும் வழிகளைத் தேடியதாலும் தான் மனித குல நாகரிகம் என்பது தோன்ற ஆரம்பித்தது. அப்படித்தோன்றிய நாகரிகங்கள் தாம் படிப்படியாக மனித வாழ்வில் பல்வேறு தளங்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்தகைய மாற்றங்களில் ஒன்றே அறிவியல் வளர்ச்சி.

நம்பிக்கைகள் சார்ந்து இயங்கும் தளத்திலிருந்து மாற்றாக, ஆராய்ந்து அறிந்து கொள்ளும் மனப்பாங்குடன் மனிதன் ஈடுபட முனைந்ததன் விளவே அறிவியல் கண்டுபிடிப்புக்கள். ஒவ்வொரு நொடியும் உலகின் எங்கோ  ஒரு இடத்தில் புதிய கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த உலகமும் இது சூழ்ந்திருக்கும் பிரபஞ்சமும் எல்லையிலா சவால்களை மனித குலத்திற்கு அளிக்கும் வல்லமை பொருந்தியனவாக இருக்கின்றன. அந்தச் சவால்களை எதிர்நோக்க மனிதகுலம் சிந்திக்கும் திறனோடு செயல்பட வேண்டியது இன்றியமையாதது.

தமிழ்ச்சமூகத்தில் பாரம்பரியம் என்ற சொல்லைத் தவறாகப்பயன்படுத்தும் ஒரு போக்கினைக் கடந்த  காலங்களில் காண்கின்றோம். கண்மூடித்தனமாக சில நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டு அறிவிற்கு எந்த இடத்தையும் தராது செயல்படும் போக்கை “பாரம்பரியம்” பேணுதல் எனத் தவறாகப் பிரச்சாரம் செய்ததன் விளைவே இத்தகைய சிந்தனை முடக்கம் ஏற்பட்டதற்குக் காரணமாக அமைகின்றன. இதற்கு மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென்றால் மீண்டும் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டியது தேவையாகின்றது. அத்தகைய அறிவுத்தேடலுக்கு ஆதாரங்களை வழங்கும் களஞ்சியங்களாக அமைபவை நூலகங்களும் அருங்காட்சியகங்களுமாகும்.





தமிழர் சூழலில் அருங்காட்சியகங்கள் என்றால்  பள்ளி மாணவர்கள் குழுவாகச் சென்று ஏதாவது பொருட்களைப் பார்த்து விட்டு வரும் கூடங்கள் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்துவன தான் நூலகங்களும் அருங்காட்சியகங்களும் என்ற மனப்போக்கு உறுதியாக பெரும்பாலான தமிழ் மக்கள் மனதில் படிந்திருக்கின்றது. இத்தகைய போக்கு மாற வேண்டுமெனில் அருங்காட்சியகங்கள் பற்றிய பல தகவல்களை இளம் வயதிலேயே சிறார்களுக்கு ஊட்ட வேண்டியது நம் கடமை என்பதனை உணர்ந்து 2016ம் ஆண்டு இறுதி தொடக்கம், தமிழ் மரபு அறக்கட்டளை பள்ளி/கல்லூரி அருங்காட்சியகம் என்ற ஒரு கருத்தினை முன்னெடுத்திருக்கின்றோம்.


இந்த முயற்சியின் விளைவாக 206 டிசம்பர் மாதத்திலும் ஜனவரி 2017 லும் கீழ்க்காணும் பள்ளிகளில் தமிழ் மரபு அறக்கட்டளை , “பள்ளி/கல்லூரி அருங்காட்சியகங்களை” தொடக்கியுள்ளோம்.

·         சிவகங்கை மாவட்டம், மணலூர், அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி
·         மதுரை வன்னிவேலம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி
·         மதுரை சங்கரலிங்காபுரம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி
·         பாளையங்கோட்டை, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி
·         ஈரோடு, குமாரபாளையம், எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரி
·         ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி

வருகின்ற மாதங்களில் இந்த முயற்சி படிப்படியாக ஏனைய கல்விக்கூடங்களிலும் முன்னெடுக்கப்படும்.
தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ஏற்பட்டுள்ள சட்ட ரீதியான தடையை எதிர்த்து இளைஞர் சமூகம் எழுச்சியுடன் குரல் கொடுக்கும் நேரமிது.

இது நம்பிக்கை தரும் ஒரு அறிகுறி!

அறிவார்ந்த, சிந்திக்கும் ஆற்றலைக் கொண்ட இளம் சமூகத்தை உருவாக்க  தமிழ் மரபு அறக்கட்டளை முன்னெடுக்கும் இந்தக் கல்விக்கூடங்களில் அருங்காட்சியகம் என்ற கருத்தினை செயல்படுத்த எம்மோடு இணைந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம். வருக!




அன்புடன்
முனைவர். சுபாஷிணி

Friday, July 15, 2016

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழர்களின் தமிழ் மொழியும் பண்பாடும் சார்ந்த விழாக்கள்

 தேமதுரத் தமிழோசை உலகமெலாம்  பரவும் வகை செய்தல் வேண்டும்

--  முனைவர் சுபாஷிணி 

தமிழர்கள் பெருவாரியாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில், கோடைக்காலங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது போல தமிழ் மொழி சார்ந்த கருத்தரங்க நிகழ்வுகளும் ஆய்வு நிகழ்வுகளும் நடந்த வண்ணமிருக்கின்றன.

கடந்த மூன்று மாதங்களில் நான் கலந்து கொண்ட விழாக்களாக மூன்றினைக் குறிப்பிட விரும்புகின்றேன். ஜெர்மனியில் எஸ்ஸன் நகரில் நடைபெற்ற திருக்குறள் விழா,டோர்ட்முண்ட் நகரில் நடைபெற்ற திருக்குறள் ஆய்வரங்கம், வட அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ப்பேரவையின் 29வது ஆண்டு விழா ஆகியனவே இவை மூன்றும்.

கண்டங்கள் மாறுபடினும், இந்த மூன்று நிகழ்வுகளின் அளவு அமைப்பு ஆகியன மாறுபடினும், இவற்றின் அடிநாதமாக ஒலிக்கும் இரண்டு கூறுகளை நான் அவதானிக்கின்றேன்.

முதலாவது, வளரும் தலைமுறையினருக்கு தமிழ் மொழியைச் சரியான முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம். அடுத்தது, தமிழ் மொழியுடன் பாரம்பரிய இசை, கலை, வாழ்வியல் கூறுகளை தமிழர் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாட்டில் மறந்து மறைந்து விடாமல் தக்க வைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள்.

தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்ற நாடுகளான தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கை ஆகிய நாடுகளில் ஒரு தமிழ் நிகழ்வை ஏற்பாடு செய்வதை விடப் புலம்பெயர்ந்த நாடுகளில் அவ்வாறு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் என்பன அதிகமே. பொருளாதார அடிப்படை என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனை தான். அதுமட்டுமின்றி, தமிழ் மக்கள் பற்பல தூரப் பகுதிகளிலிருந்து வந்து தங்கியிருந்து நிகழ்வில் கலந்து கொண்டு செல்வது என்பதும் ஒரு சிக்கல்தான்.

இவை முக்கியப் பிரச்சனைகள் தாம் என்றாலும், இவற்றைச் சமாளித்து அயலகத்திலும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி காண முடியும் என்று நிரூபித்திருக்கின்றன இங்கு நான் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள். இவற்றின் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது இச்சங்கங்களின் ஏற்பாட்டாளர்களின் அர்ப்பணிப்புத்தன்மையும், தீவிர தமிழ்ப்பற்றும் தான் என்பது கூடுதல் புகழ்ச்சி அல்ல!

தாயகத்தில் மட்டுமல்லாமல், அயல் நாடுகளிலும் கூட பொதுவாகத் தமிழ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோர் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது நம் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கோ, ஆய்வுக் கருத்தரங்குகளுக்கோ, அல்லது மொழி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கோ தங்கள் ஈடுபாட்டை வெளிக்காட்டுவதில்லை, வந்து கலந்து கொண்டு ஊக்குவிப்பதில்லை என்பதே. இது மறுக்கப்பட முடியாத உண்மை. நான் தமிழன் என உணர்ச்சி பொங்க கூக்குரலிட்டு தமிழ்ப்பற்றை வெளிக்காட்ட நினைப்பதில் ஆர்வம் காட்டுவோர் கூட, நிறைவான தமிழ் மொழி சார்ந்த ஆய்வுகளைப் புறம் தள்ளி ஒதுக்கிச் செல்வதுதான் யதார்த்தமாக இருக்கின்றது.

பெரிய அளவில் தமிழ் மக்களை ஒன்றிணைக்க வேண்டுமென்றால் தமிழ்த்திரைப்படப் பிரபலங்களை வரவழைக்க வேண்டிய நிர்பந்தம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அமைந்து விடுகின்றது. பொது மக்களின் ஆர்வம் என்பது கலைகளில், அதிலும் குறிப்பாக திரைப்படம் தொடர்பான அம்சங்களில் தான் அதிகமாக இருக்கின்றது. குழந்தைகளுக்கு மருந்து கொடுக்குமுன் பெற்றோர்கள் தரும் சர்க்கரைபோல, இப்படி தமிழ் விழாக்களுக்குப் பொது மக்களைக் கவர்ந்திழுக்க திரைப்பட பிரபலங்கள் தமிழ் நிகழ்ச்சிகளில் தரிசனம் தருவதும் நிகழ்கின்றது. ஆக, ஏதோ ஒரு வகையில் பல சாமர்த்தியங்களையும் உத்திகளையும் கையாண்டு தான் அயல் நாடுகளில் தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை ஆர்வமுள்ளோர் நடத்தி வருகின்றனர்.

தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் இப்படி தங்கள் நேரத்தையும் உழைப்பையும் தமிழ் மொழியும் பண்பாடும் சார்ந்த நிகழ்வுகளுக்கு அர்ப்பணிக்கும் ஒவ்வொரு தமிழ்த்தொண்டரையும் போற்ற வேண்டியதும் நம் கடமை. அத்தகையோரின் சேவைகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை நினைத்துப் பார்ப்பது பெருமை கொள்கின்றது.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி









___________________________________________________________
  

முனைவர். சுபாஷிணி
ksubashini@gmail.com
___________________________________________________________

Sunday, June 19, 2016

திருக்குறள் மாநாடு - ஜெர்ம்னி டோர்ட்முன்ட் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்

--  முனைவர் சுபாஷிணி


இந்த ஆண்டில் ஜெர்மனியில் நடைபெற்ற இரண்டாவது திருக்குறள் நிகழ்வு நடைபெற்று முடிந்துள்ளது. ஐரோப்பாவில் பொதுவாகவே ஆடல் பாடல், திரைப்பட கலை நிகழ்ச்சிகள், அவ்வப்போது சில புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் என்று மட்டுமே தமிழர் நிகழ்வுகளைப் பற்றி என் காதுகளுக்கு எட்டும் செய்திகளை அறிந்திருந்த எனக்கு இது மனதிற்கு நிறைவளிக்கும் ஒரு வளர்ச்சியாகத் தென்படுகின்றது.

டோர்ட்முண்ட் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் திருக்குறள் ஆய்வு மாநாடு நேற்று டோர்ட்முண்ட் நகரில் நடைபெற்றது. உள்ளூர் பேச்சாளர்களும் இலங்கை வன்னியிலிருந்து ஐந்து பேச்சாளர்களும் கலந்து கொண்ட நிகழ்வு இது. இடையே தேநீர், மதிய உணவு, ஓரிரு நடனங்கள் என நிகழ்ச்சி தொய்வில்லாமல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாராட்டத்தக்க அம்சங்கள் சிலவற்றை குறிப்பிடத்தான் வேண்டும். குறிப்பாக நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்ட ஏறக்குறைய அனைவருமே, நிகழ்ச்சியில் ஒவ்வொரு சொற்பொழிவையும் மிகக் கவனத்துடன் ஆழ்ந்து உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டும் குறிப்புக்களை எடுத்துக் கொண்டும் இருந்தனர். ஒவ்வொரு ஆய்வுரைக்குப் பின்னரும் அரங்கில் இருந்தோர் கேள்விகளைக் கேட்டும் தங்கள் கருத்துக்களைப் பதிந்தும் ஆர்வத்துடன் கலந்து கொண்டது அவர்களுக்கு நிகழ்வின் மேல் இருந்த ஆர்வத்தைக் காட்டியது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இவ்வகை நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பங்களிப்புச் செய்கின்றனர். சிலர் தேநீர் தயாரித்தும் சிலர் உணவுப்பொருட்களைத் தயாரித்தும் கொண்டு வந்து தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

எனது உரையின் மையக் கருத்தாக நான் திருக்குறளின் வரலாறு, அது எழுந்த காலகட்டம், திருக்குறள் - திருவள்ளுவர் என்னும் விசயத்தைச் சுற்றி வலம் வரும் கருத்துக்களான அவரது பிறப்பு சமயம், குலம், தொழில் மனைவி, உருவம் என்பன போன்ற விசயங்களில் ஆய்வுகளைச் செய்வதை விடுத்து திருக்குறளின் சாரங்களைக் காலத்தின் தேவைக்கேற்ப ஆராய வேண்டியதன் அவசியத்தையும், திருக்குறள் வேற்று மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட காலம், மொழிபெயர்ப்பு தொடர்பான முயற்சிகள், மொழிபெயர்ப்பு செய்தோர் பற்றிய தகவல்கள் ஆகியனவற்றோடு இன்றைய காலகட்டத்தில் திருக்குறளுக்கு ஒரு தகுந்த டோய்ச் மொழிபெயர்ப்பு தேவைப்படுவதன் அவசியத்தையும் எனது உரையில் வழங்கினேன்.

அரங்கில் வந்திருந்த பெரும்பாலோர் நான் முன்வைத்த கருத்துக்களை வரவேற்றமையும் இது போன்ற சிந்தனை மீண்டும் பரவலாக பேசப்படவேண்டும் என்றும் கூறியமையும், ஆக்ககரமான பணியில் இந்தப் பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியமும் அதன் உறுப்பினர்களும் ஆர்வம் கொண்டிருப்பதை நன்கு உணர்த்தியது.

நிகழ்ச்சியில் இறுதியில் பேசிய முன்னாள் இலங்கை கல்லூரி முதல்வர் ஒருவர் (பெயர் நினைவுக்கு வரவில்லை) மிக அருமையான ஒரு கருத்தினைக் குறிப்பிட்டுப் பேசினார். திருக்குறள் எழுந்த காலத்தில் தமிழக நிலம் என்பது பல போர்களைச் சந்தித்து வந்த காலகட்டம். மக்களிடையே அறம் என்பந்து மலிந்து போயிருந்த காலகட்டம். அவ்வகைச் சூழலில் எழுந்த திருக்குறள் மக்கள் மத்தியில் அறத்தை நிலைநாட்டும் கருத்துக்களை முன் வைத்தது. அதற்குத் தேவையும் இருந்தது, அதே போன்ற ஒரு சூழலை இன்றும் காண்கின்றோம். போருக்குப் பின்னான இலங்கையின் இன்றைய நிலையில் திருக்குறள் சொல்லும் அறக்கோட்பாடுகளின் தேவை மிக முக்கியமான ஒன்றாகவே கருதப்பட வேண்டியது, என அவர் குறிப்பிட்டுப் பேசியதை நானும் வரவேற்கின்றேன்.

ஐரோப்பாவில் ஜெர்மனியைப் பொருத்தவரை ஆங்காங்கே பல தமிழ் அமைப்புக்கள் இருக்கின்றன. ஆயினும் அனைத்தையும் ஒருங்கிணைத்து அரவணைத்துச் செயல்படும் தாய்போன்ற ஒரு அமைப்பு ஒன்று நிச்சயமாகத் தேவை. அதிலும் டோர்ட்முண்ட் நகரம் அமைந்திருக்கும் பகுதி தமிழர்கள் நிறைந்த ஒரு பகுதியாக, அதாவது பாரிசின் லா சாப்பல் பகுதி போல இருக்கும் ஒரு பகுதி. ஆக ஜெர்மனி முழுமைக்கான தமிழர் அமைப்புக்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் ஒரு அமைப்பாக இந்தப் பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் தன்னை வளர்த்துக் கொள்வது பயனளிக்கும் என்று கருதுகின்றேன். இதனை நோக்கமாகக் கொண்டு இந்த நிர்வாகச் சபையினர் செயல்பட்டு ஜெர்மனியில் தமிழ் ஆய்வுத் துறையிலும் தமிழ் வரலாற்றுத் துறையிலும் ஆர்வம் உள்ள இளைய சமுதாயத்தினரை வளர்க்க வேண்டியது ஒரு முக்கியப் பணி என்றும் கருதுகின்றேன். இந்த நோக்கத்தோடு இந்த ஒன்றியம் இயங்கும் போது எமது தமிழ் மரபு அறக்கட்டளையும் எம்மால் முடிந்த வகையில் இந்த அமைப்பிற்கு உதவுவோம் என்ற தகவலையும் குறிப்பிட விரும்புகின்றேன்.




















பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் செயல்பாடுகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்!

முனைவர் சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை





___________________________________________________________
  

முனைவர். சுபாஷிணி
ksubashini@gmail.com
___________________________________________________________

Tuesday, May 10, 2016

ஜெர்மானிய மொழி பெயர்ப்பில் திருக்குறள் - வரலாற்று பார்வையில்

-- முனைவர்.சுபாஷிணி

முன்னுரை
உலகப்பொதுமறை என அழைக்கப்படும் சிறப்புடன் திகழ்வது திருக்குறள். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்த தமிழ்ப் படைப்புக்களில் தலையாயதாக இடம் பெறும் நூலாகத் திகழ்கின்றது திருக்குறள். உலகில் புழக்கத்தில் உள்ள பல மொழிகளில் மொழி​ ​பெயர்க்கப்பட்ட நூலாகவும் இது திகழ்கின்றது. ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான ஜெர்மானிய மொழியில் (டோய்ச்) திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு  ஜெர்மானிய மொழி பேசும் மக்கள் மத்தியில் இந்த நூல், தமிழ் இலக்கியத்துக்கு ஓர் அறிமுகமாகிய வரலாற்றுச் செய்தியை விவரிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

ஜெர்மானிய லூதரன் பாதிரிமார்களின் தமிழக வருகை
இந்திய நிலப்பரப்பில் லூதரன் பாதிரிமார்கள் சபையின் சமய நடவடிக்கைகள் 17ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் நிகழ்ந்தன. இரண்டு மறை ஓதும் பணியில் ஈடுபட்ட பாதிரிமார்களின் தமிழகத்துக்கான வருகையே இதற்குத் தொடக்க நிலையை உருவாக்கிய வரலாற்று நிகழ்வாக அமைகின்றது.

லூதரன் கிருஸ்துவ மத பாதிரிமார்கள் மதம் பரப்பும் நோக்கத்துடன் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு வருவதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கத்தோலிக்க பாதிரிமார்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வருகை தந்து தென்தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் பரவ ஆரம்ப நிலை பணிகளை மேற்கொண்டனர். 1612ம் ஆண்டில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி தஞ்சாவூரின் தரங்கம்பாடி பகுதியில் ஒரு சிறு பகுதியைப் பெறும் உரிமையை ஆண்டுக் கட்டணமாக இந்திய ரூ.3111 செலுத்தி பெற்றனர்.  அச்சமயம் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த ரகுநாத நாயக்க மன்னரின் (இவருக்கு அச்சுதப்ப நாயக்கர் என்ற பெயரும் உண்டு) அனுமதியோடு இந்த உரிமை பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த அரச ஆணையின் படி 19.11.1620ம் நாள் தரங்கம்பாடியில் டென்மார்க்கின் டேனிஷ் கொடி ஏற்றப்பட்டு தரங்கம்பாடியில் டேனிஷ் தொடர்பு உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டேனீஷ் வர்த்தகர்கள் தரங்கம்பாடி வந்திறங்கினர். வர்த்தகம் செய்வது மட்டுமே ஜெர்மனியின் மார்ட்டின் லூதர் உருவாக்கிய லூதரேனியன் சமயத்தைப் பின்பற்றத் தொடங்கியிருந்த டேனிஷ் அரசின் நோக்கமாக அமைந்திருக்கவில்லை. வர்த்தகத்தோடு மதம் பரப்பும் சேவையையும் செய்ய வேண்டும் என்பதை மன்னர் விரும்பியதால் 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்கு டேனிஷ்  அரச ஆணையுடன் முதல் அதிகாரப்பூர்வ மதம் பரப்பும் சமயக் குழு ஒன்று வந்திறங்கியது. இதில் இடம் பெற்றவர்கள் ஜெர்மானிய பாதிரிமார்கள் சீகன்பால்கும் ப்ளெட்சோவும்.

மதம் பரப்பும் பணிக்கு இவர்களுக்கு அடிப்படைத் தேவையாக இருந்தது தமிழ் மொழித்திறன். தமிழ் மொழியைக் கற்க ஆரம்பித்த சீகன்பால்க், லூத்தரன் பாதிரிமார்கள் தமிழ்கற்க உதவும் வகையில் இலக்கண நூற்களை எழுதினார். பல தமிழ் இலக்கிய நூல்களைத் தாம் கற்று,  ஜெர்மானிய மக்கள் தமிழ் கற்க உதவும் வகையில் சொற்பொருள் அகராதிகளை உருவாக்கினார். அவர் வாசித்த இலக்கிய நூல்களில் திருக்குறளும் அடங்கும் என்ற செய்தியை சீகன்பால்கின் கையெழுத்துக் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது. ( Jeyaraj, Daniel and Young, Richard Fox (transl. eds.): Hindu-Christian Epistolary Self-Disclosures: ‘Malabarian Correspondence’ between German Pietist Missionaries and South Indian Hindus (1712–1714), Wiesbaden: Harrassowitz Verlag, 2013, pp. 240 - 241.)  அப்போதைய நிலையில் திருக்குறள் அச்சு வடிவம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.

திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் 1812ம் ஆண்டில் திருக்குறள் மூலபாடம் என்னும் நூலை அச்சு வடிவில் பதிப்பித்தார் என்று அறிகின்றோம். தமிழ் மொழியில் தீவிர பற்றும் ஆர்வமும் கொண்டு நல்ல புலமை பெற்ற ஆங்கிலேயரான அறிஞர் எல்லிஸ் (F.W.Ellis) அவர்கள் 1819ம் ஆண்டில் ஆங்கிலத்திலும் அதன் பின்னர், ப்ரென்சு, ரசிய மொழி, ஸ்வீடிஷ் மொழி, ஜெர்மன் மொழி ஆகிய பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும், பணியை மேற்கொண்டிருந்தார் என அறிகின்றோம். இதற்கு முன்னரே போர்த்துக்கீசியரான வீரமாமுனிவர்  (Beschi ) அவர்கள் 1730 வாக்கில் முதல் இரண்டு பகுதிகளை மட்டும் லத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டிருந்தார். வீரமாமு​னிவரின் மொழிபெயர்ப்பின் அடிப்படையில் ஐரோப்பிய சூழலுக்கு லத்தீன் மொழி வாயிலாகத் திருக்குறள் ஏற்கனவே அறிமுகம் பெற்றிருந்தது என்பதை நாம் அறிகின்றோம்.

ஜெர்மானிய மொழியில் திருக்குறள்
ஆயினும் முதன் முதலில் முழுமையாக ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக நமக்குக் கிடைப்பது  ஆகஸ்ட் ஃப்ரெடிக் காம்மெரர் என்ற ஜெர்மானிய லூத்தரன் மதபோதகர் (August Friedrich Cämmerer)  அவர்கள் மொழிபெயர்த்து முன்னுரையும் தந்து எழுதிய நூலாகும். எல்லிஸ் அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவருவதற்கு முன்னரே ஜெர்மானிய டோய்ச் மொழியில் இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.  இந்த நூல் 1803ம் ஆண்டு ஜெர்மனியில் நூரன்பெர்க் (Nurnberg)  நகரில் அச்சு வடிவில் வெளியிடப்பட்டது. 


இந்த நூலின் பெயர் Das Thiruvalluvar Gedichte und Denksprueche என்பதாகும். இந்த நூலைப் பற்றிய விரிவான அறிமுகம் ஒன்று 1807ம் ஆண்டு ஜெர்மனியின் நூரன்பெர்க் (Nurnberg)  நகரில் வெளிவந்த  பொது இலக்கிய நாளேடு ஒன்றில் (Allgemeine Literatur Zeitung, 29.June 1807) பதிவாகியுள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகின்றது.  இந்த நாளேட்டில் ஜெர்மனியிலிருந்து மதம் பரப்பும் பணிக்காக டேனீஷ் அரசின் ஆதரவில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்குச் சென்ற லூத்தரன் பாதிரிமார்களின் இலக்கியத் தேடல்களை மையப்படுத்தி விவரிக்கும் செய்தியாக இச்செய்தி அமைந்துள்ளது. அதில் சிறு அறிமுகத்துக்குப் பின்னர் இந்த நூலைப்பற்றிய விளக்கம் வருகின்றது. குறள்களின் மொழி பெயர்ப்பு, திருவள்ளுவர் பற்றிய செய்திகள் என்ற வகையில்  காமரர் அவர்கள் படைத்திருக்கும் இப்படைப்பை விவரிக்கின்றது இந்த நாளேட்டுச் செய்தி.


Das Thiruvalluvar Gedichte und Denksprueche  என்ற இந்த  நூல் முழுமையாக ஜெர்மானிய மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. நூலில் காமெரர் அவர்கள் முதலில்  தனது அறிமுக உரையைப் பதிகின்றார். தமிழகத்தின் தெய்வ வழிபாடுகள் சமூக நிலைகள், இலக்கியம் என சில தகவல்களை இப்பகுதியில் குறிப்பிடுகின்றார். அடுத்து திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சில தகவல்களைக் குறிப்பிடுகின்றார். அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த திருவள்ளுவரைப் பற்றிய கதைகளைக் குறிப்பிட்டு திருவள்ளுவரை இந்த நூலில் அறிமுகம் செய்கின்றார்.  அதன் பின் 1330 குறள்களுக்குமான மொழி பெயர்ப்பு இந்த நூலில் பத்து பத்தாக  வரிசையாக வழங்கப்பட்டுள்ளன. 

காமெரர் அவர்களுக்குப் பின் தரங்கம்பாடி வந்த ஜெர்மானிய அறிஞர் கார்ல் க்ரவுல் அவர்கள் Der Kural des Tiruvalluver (Graul, Karl) என்ற நூலை எழுதி வெளியிட்டார். இது கிழக்கு ஜெர்மனியின் லைப்ஸிக் (Leipzig:) நகரில் 1856ம் ஆண்டில் நூல் வடிவம் கண்டது. இந்த நூலின் பெயரின் தமிழாக்கம் திருவள்ளுவரின் குறள் என்பதாகும். 216 பக்கங்கள் கொண்ட இந்த  நூலில் க்ரவுல் அவர்கள் தனது முன்னுரை,  பரிமேலழகரின் உரை, அதற்கான தனது முன்னுரை எனத் தொடங்குகின்றார். திருக்குறளின் நேரடி மொழி பெயர்ப்பு என்றில்லாமல் நல்லெண்ணங்கள், நற்கருத்துக்கள், அரசரின் மாண்பு, பண்பற்ற இச்சையின் பண்பு என்பது பற்றி திருக்குறள் கூறும் கருத்தை முன் வைத்து இந்த நூலைப் படைத்திருக்கின்றார். காதலில் களவு, பெற்றோர் சம்மதத்துடனான திருமணம் என்ற தகவல்களையும் குறிப்பிட்டு திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு என இறுதிப்பகுதியையும் சேர்த்து இந்த நூலை உருவாக்கியிருக்கின்றார். க்ரவுல் அவர்கள் தமிழ் இலக்கணத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முடிவுரை
ஜெர்மனி மட்டுமன்றி ஜெர்மன் மொழியான டோய்ச் மொழி பயன்பாட்டில் உள்ள ஏனைய நாடுகளான டென்மார்க், சுவிஸர்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளிலும் இந்த இருநூல்களும் பொது மக்கள் வாசிப்பிற்கும் ஆசிய நாடுகளின் இலக்கியங்களை ஆராய விரும்புவோர் மத்தியிலும் அறிமுகமாக வழி ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஆயினும் இந்த மொழி பெயர்ப்பும் இவற்றில் உள்ள வரலாற்றுத் தகவல்களும் முழுமையான பார்வையைத் தரும் வகையில் உள்ளனவா என்பது ஒரு கேள்வியே. உதாரணமாக தனது சூழலில் தமிழ் சமூக கட்டமைப்பில் உயர்சாதி என அழைக்கப்படும் மக்களிடம் மட்டுமே தமிழும் தமிழ் இலக்கியமும் கற்றமையினால் திருவள்ளுவரைப் பற்றிய நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட பார்வையில் வைத்து சில பகுதிகளில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. இது திருவள்ளுவரின் பின்புலத்தையும் கருத்தின் ஆழத்தையும் மொழி பெயர்ப்பில் சரியாக உட்படுத்தவில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்​த​த் தவறவில்லை. திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் விரிவான ஆய்வுத் தரவுகள் கிடைக்கின்ற இக்காலகட்டத்தில் ஜெர்மானிய மொழியில் மீண்டும் திருக்குறள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு  ஜெர்மானிய டோய்ச் மொழியில் மீள்பதிவு செய்யப்பட வேண்டியது அவசியக்கடமையாகின்றது. இதனைச் செய்வதன் வழி திருக்குறளைச் சரியான பார்வையுடன் ஜெர்மானிய மொழி பேசுவோர் மத்தியில் மீண்டும் அறிமுகப்படுத்த இயலும். தமிழ் மொழி ஐரோப்பிய சூழலில், அதிலும் குறிப்பாக ஜெர்மானிய மொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளில் அறியப்படாத மொழி அல்ல. குறிப்பிட்ட  ஒரு சில பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையின் வழி தமிழ் போதிக்கப்படுவது இங்கு நிகழ்கின்றது. இந்த ஐரோப்பிய மாணவர்களுக்கு மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு சமகால ஆய்வின் அடிப்படையில் திருக்குறள் மீண்டும் ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்பட வேண்டியது மிக முக்கிய நடவடிக்கை என்பதில் ​ஐயத்திற்கு இடமில்லை.


குறிப்பு: 7.5.2016 அன்று ஜெர்மனியின் எஸ்ஸன் நகரில் நிகழ்ந்த திருக்குறள் மாநாட்டில் படைக்கப்பட்ட  கட்டுரை.




___________________________________________________________
  

முனைவர். சுபாஷிணி
ksubashini@gmail.com
___________________________________________________________

Friday, April 15, 2016

தமிழ் வளம்

தமிழ் வளம்


தமிழ் மொழியின் தொன்மையையும் அதன் பரப்பையும் அதன் ஆளுமையையும், இது தான், என வரையறுத்துக் கூற முடியாத வகையில் நித்தம் பல புதிய செய்திகளை நம் தாய்மொழியாம் தமிழ் மொழி பற்றி அறிந்து வியக்கின்றோம். ஏனைய சில உலகமொழிகள் போல, மொழி என்பது ஒரு தொடர்பு சாதனம் மட்டுமே என்ற எல்லையைக் கடந்தும், வர்த்தக மொழி என்ற குறிப்பிட்ட வட்டத்திற்குள் அமைந்த குறியீடுகளையும் தாண்டி மனிதக்குலத்தின் எல்லா மன அதிர்வுகளையும் பதியும் தன்மை கொண்ட ஒரு மொழியாகத் தமிழ் மொழி இருப்பது மாபெரும் சிறப்பு.

பண்பாடு, வாழ்வியல், வணிகம், புவியியல், அரசியல், கலை, வானியல், அறிவியல், தத்துவம் என்ற மனித வாழ்க்கையின் பன்முகத் தன்மைகள் அனைத்தினையும் வெளிப்படுத்தக்கூடிய பலம்பொருந்திய கருவியாகத் தமிழ் மொழி விளங்குகின்றது. அகம் புறம் என இருவேறாகப் பிரித்து மனித வாழ்வினை அலசும் வளத்தைத் தமிழ் மொழி தன்னிடத்தே கொண்டுள்ளது. தமிழ் பேச்சு மொழியின் தொன்மை என்பதை இன்றளவும் ஆய்வாளர்கள் வரையறுக்க முடியவில்லை. தமிழ் வரிவடிவத்தின் தொன்மையை கணக்கிடும் தொல்லியலாளர்கள் இக்கால தமிழுக்கும் முந்தியதான வட்டெழுத்துகள், அந்த வட்டெழுத்துக்களின் மூல வரிவடிவமான தமிழி எழுத்தின் தொன்மைகளை, கல்வெட்டு ஆதாரங்களின் வழி நிலை நிறுத்தத் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முயற்சிகளின் பலனாக தமிழ் எழுத்துருக்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்கள் பல நமக்குக் கிடைத்திருப்பதும் தொடர்ந்து கிடைத்து வருவதும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ் மொழியின் தொன்மை, ஆளுமை  தொடர்பான கூறுகளை நிலை நிறுத்த மிக உதவி இருக்கின்றன. இந்த வகை ஆய்வுகள் மேலும் மேலும் விரிவாகத் தமிழக நிலப்பரப்பு மட்டுமன்றி இந்தியா முழுமைக்கும் என்பதோடு நின்றுவிடாமல், கிழக்காசிய நாடுகளிலும் தூரக்கிழக்காசிய நாடுகளிலும் நிகழ்த்தப்பட வேண்டும். இது மேலும் தமிழ் மொழியின் விரிந்த பயன்பாட்டையும் தமிழர் தம்  கடல் வழி ஆளுமையையும் ஆய்வுலகம் அறிந்து கொள்ள அடிப்படையை வகுத்துக் கொடுக்கும்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோர் பலர். சங்கம் என்ற சொல் பௌத்த சமயத்தின் தாக்கம் என்று கற்றோர் கூறுவர். அறிவுத்தேடலை நிகழ்த்தும் களமாக சங்கம் அமைந்திருந்தது.

தமிழ் வளர்த்த சங்கங்கள் பல. அந்த வரிசையில் கரந்தை தமிழ்ச்சங்கம் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும் அமைப்பாகத் திகழ்கின்றது.

1914ம் ஆண்டில் ஐவர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் மொழியின்  வரலாறு பற்றிய ஆய்வினை மேற்கொண்டு வெளியிடும் முயற்சி தொடங்கப்பட்டது. 1919ம் ஆண்டில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் முயற்சியில் தொடங்கவிருந்த தமிழ் இதழுக்கு "தமிழ்ப்பொழில்" என்ற பெயர் சூட்டப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும் சில தடங்கல்களால் தடை ஏற்பட்டாலும் 1925ம் ஆண்டில் சித்திரை முதல் நாளில் தமிழ்ப்பொழில் முதல் இதழ் வெளியீடு கண்டது.

1925ம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக 52 ஆண்டுகள் தமிழ்ப்பொழில் இதழ் வெளியிடப்பட்டது. அந்த சஞ்சிகளை அனைத்தையும் கரந்தைத்தமிழ்ச்சங்கத்தின் விருப்பத்திற்கிணங்க திரு பொள்ளாச்சி நசன் அவர்கள் மின்னூலாகச் செய்து கொடுத்திருந்தார்கள். அந்த  மின் இதழ்களை ஒவ்வொன்றாகத் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இணைத்து வெளியிடும் பணியை இவ்வாண்டு மார்ச் மாதம் 23ம் திகதி முதல் தொடங்கி உள்ளோம். இது ஒரு மாபெரும் பணி. தமிழறிஞர்கள் பண்டிதர் உலகநாதப்பிள்ளை, சதாசிவப் பண்டாரத்தார், பண்டிதர் மு.வேங்கடசாமி நாட்டார், நடேசப்பிள்ளை, மு. கோவிந்தராச நாட்டார், R. வேங்கடாசலம் பிள்ளை, மறைமலை அடிகள், ஆ. பூவராகம் பிள்ளை , இராவ்சாகிபு சு. வி. கனகசபைப்பிள்ளை, பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை, வ. பழ. சா. சாமிநாதன் செட்டியார், B. S. இரத்தினவேலு முதலியார், வே. முத்துசாமி ஐயர், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், மு. இராகவையங்கார், மு. வே. மா. வீ. உலகவூழியன், சாமி. சிதம்பரன், திரு. சோமசுந்தர தேசிகன், ஒளவை சு. துரைசாமி பிள்ளை போன்ற 20ம் நூற்றாண்டு ஆளுமைகளின் ஆய்வுப் படைப்புக்களைத் தாங்கி இந்தச்சஞ்சிகைகள் தரத்துடன் மிளிர்கின்றன.

இந்த மாபெரும் ஆய்வுப் பொக்கிஷங்கள் அடங்கிய மின்னிதழ்கள் உலக மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமிதம் கொள்கின்றோம்.

மதுரை நகரில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை  நிறுவிப்  பல தமிழ் அறிஞர்களின் ஆய்வுகளை ஊக்குவித்தவர்  இராமநாதபுர மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர். அவரது  பிறந்த நாள் மார்ச் 21ம் நாள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. அதனை இந்தக் காலாண்டு வெளியீட்டில் நினைவு கூறுதல் தகும் என்றே கருதுகின்றேன்.



இந்த ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரியின் தமிழ்த்துறையோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கையெழுத்திட்டுள்ளோம். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்த வகையில் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்கள் ஆய்வுகளில் ஈடுபடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனை முக்கியப்பொறுப்பெடுத்துக் கொண்டு ஏற்பாடுகளைச் செய்த முனைவர்.வீரமணி அவர்களை இத்தருணத்தில் பாராட்டுதல் தகும்.

தமிழின் வளத்திற்குச் சிறப்பு கவனத்தை வழங்கும் இதழாக இந்தக் காலாண்டிதழ் திகழ்கின்றது.

தமிழ் மொழி தொடர்பாக செய்யப்பட வேண்டிய காத்திரமான ஆய்வுத்துறைகள் பல இருக்கின்றன. தமிழ் மாணவர்களாகிய நாம் எல்லோருமே தரமான சிறந்த முறையிலான ஆய்வுகளைத் தமிழ் மொழி தொர்பாக தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருத்தல் மிக அவசியம். தமிழக அரசும், கல்விக் கூடங்களும் தமிழ் மொழி வளர்ச்சியில் விரிவான வகையிலான சீரிய பங்கை ஆற்ற வேண்டியது முக்கியக் கடமை என்பதைக் குறிப்பிடுதல் அவசியம் என்று கருதுகின்றேன்.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி


___________________________________________________________
  

முனைவர். சுபாஷிணி
ksubashini@gmail.com
___________________________________________________________
 

Sunday, April 10, 2016

தமிழ்ப் பொழில்



தமிழ்ப் பொழில்



                வாழி  கரந்தை  வளருந்  தமிழ்ச்சங்கம்
                வாழி  தமிழ்ப்பொழில்  மாண்புடனே – வாழியரோ
                மன்னுமதன்  காவலராய்  வண்மைபுரி  வோரெவரும்
                உன்னுபுக  ழின்நலம்  உற்று
                         - நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற மூன்றாவது ஆண்டிலேயே, திங்களிதழ் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் த.வே. உமாமகேசுவரனார் உள்ளத்தே உயிர் பெற்றது.


     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களைத் தமிழ்ப் பேருலகினருக்கு நன்கு தெரிவித்து, அன்னார் உதவிபெற்று அவற்றினை நிறைவேற்றுமாறு காண்டலும், தமிழ் மக்களையும், அவர்தம் தெய்வத் திருமொழியினையும் இழிதகவு செய்து, உண்மை சரித நெறி பிறழ எழுதிவரும் விசயங்களை நியாய நெறியில் கண்டித்தலும், மேல் நாட்டுச் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அமைத்துக் கொள்ளுதலுமாகிய, இன்னோரன்ன நோக்கங்களோடு, சங்கத்தினின்று ஓர் சிறந்த தமிழ்ப் பத்திரிக்கை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஐவர் கொண்ட குழு ஒன்று 1914 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

     திருவாளர்கள் நா. சீதாராம பிள்ளை, ஐ. குமாரசாமி பிள்ளை, த.வீ. சோமநாதராவ்,    த.வே., மற்றும் இராதாகிருட்டிணப் பிள்ளை ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இக்குழுவினர் பத்திரிக்கைத் தொடங்குவதற்காக அரசாங்கத்தின் அனுமதி பெறுவதற்குரிய பணிகளைத் துவக்கினர். இதே வேளையில் பத்திரிக்கை ஆரம்பிப்பதென்றால் அதற்கு வேண்டும் மூலதனத்தைத் திரட்டும் பணியும் தொடங்கப் பெற்றது. தமிழ் அன்பர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து நன்கொடைகள் பெறுவதற்காக வேண்டுகோள் விடுக்கப் பெற்றது.

      பத்திரிக்கை ஒன்றினைத் தொடங்குவதற்காக 1914 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனர் அவர்களால் தொடங்கப் பெற்ற முயற்சிகள், பல்வேறு காரணங்களாலும் நிதிப் பற்றாக் குறையாலும், நிறைவேறாமலே இருந்தது.  இருப்பினும் 1919 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பெற இருக்கின்ற மாதாந்திர இதழுக்கு தமிழ்ப் பொழில் என்னும் பெயர் சூட்டப்பெற்றது.  1929-21 லும் போதிய அளவு புரப்போர் சேராமையினால் தமிழ்ப் பொழில் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

     இவ்வாண்டில் திருவாளர்கள் உமாமகேசுவரம் பிள்ளை, கும்பகோணம் த.பொ.கை. அழகிரி சாமி பிள்ளை, கூடலூர் வே. இராமசாமி வன்னியர், பட்டுக்கோட்டை வேணுகோபால நாயுடு, திருச்சிராப்பள்ளி உ.க. பஞ்ச ரத்தினம் பிள்ளை, திருச்சி நா. துரைசாமி பிள்ளை, கும்பகோணம் ஆர். சாமிநாத அய்யர் ஆகியோர் தமிழ்ப் பொழில் இதழுக்குப் பங்குத் தொகை வழங்கினர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவானது, 4.9.1921 மற்றும் 5.9.1921 ஆகிய தேதிகளில், கரந்தை கந்தப்ப செட்டியார் அறநிலையத்தில், கீழையூர் சிவ. சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் போது, தமிழ் மொழியின் மேன்மையைப் பேணுதற் பொருட்டாகத் தமிழ்ப் பொழில் என்னும் திங்கட்டாளை வெளியிடுவதற்கு தக்கவாறு பொருளுதவி செய்ய வேண்டுமெனத் தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இவ்வாண்டில் திருவாளர்கள் வேணுகோபால நாயுடு மற்றும் திருச்சி டி. நாராயண சாமி பிள்ளை ஆகியோர் தமிழ்ப் பொழில் பங்குத் தொகையாக ரூ.23 வழங்கினர்.

     1913 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனார் அவர்களால் தொடங்கப் பெற்ற முயற்சியானது, பதினோரு ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவேறியது. 1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.  தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழினை அச்சிட்ட பெருமை, தஞ்சாவூர் லாலி அச்சகத்தையேச் சாரும். இதன் முதல் பொழிற்றொண்டராகப் பணிபுரிந்தவர் கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளையாவார்.


1925 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் பொழில் இரண்டாவது இதழின் அட்டை
 (முதல் இதழின் அட்டை கிடைக்கப் பெற வில்லை)


     பொதுவாக ஒரு இதழ் எனின் ஆசிரியர் அல்லது பொறுப்பாசிரியர் என்று அச்சிடுதல் மரபு. ஆனால் உமாமகேசுவரனாரோ, இதழாசிரியர் என்பதற்குப் பதிலாக பொழிற்றொண்டர் என்றே அச்சிடச் செய்தார். உறுப்பினர் கட்டணம் என்பதற்கு மாறாக கையொப்பத் தொகை என்றும், விலாசம் என்பதை உறையுள் என்றும், ஆங்கிலத்தில் வி.பி.பி. என்பதை விலைகொளும் அஞ்சல் என்றும் பயன்படுத்தத் தொடங்கினார்.

     பல்வேறு இன்னல்களைத் தாண்டி தமிழ்ப் பொழில் இதழானது வெளிவரத் தொடங்கிய பின்னரும் கூட,  ஒவ்வொரு மாதமும், இவ்விதழ் சந்தித்த சோதனைகள், தாண்டிய தடைகள் ஏராளம். தமிழ்ப் பொழில் இதழினைப் போற்றுவார் போதிய அளவு இல்லாததால் வருந்திய உமாமகேசுவரனார் அவர்கள், தமிழ்ச் செல்வர்கள், தாய் மொழித் தொண்டிற்காக, ஆண்டிற்கு இரண்டு மூன்று ரூபாய் செலவிடுவதற்குத் தயங்கும் நிலை கண்டு வருந்தினார். தமிழ்ப் பொழில் உறுப்பினராக அனைவரும் சேர்ந்து பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை
தமிழ்ப் பொழில்

கருந்திட்டைக்குடி,
விசு, சித்திரை,க

ஐயா,
     இத்துடன் பொழிற் கையொப்ப விண்ணப்பம் ஒன்று இணைத்துள்ளோம். தங்கள் நண்பருள் ஒருவரையேனும் கையொப்பக்காரராகச் சேரும்படி வேண்டி, இணைத்துள்ள விண்ணப்பத்தில் அவர்கள் ஒப்பம் வாங்கி அனுப்ப வேண்டுகிறோம். ஒருவரைத் தாங்கள் சேர்த்தனுப்புவது, பொழிலின் பயனை ஆயிரவர்க்கு அளித்ததாகும் என்பதை நினைவூட்டுகிறோம். சிறுதொண்டு பெரும்பயன் விளைவிக்கும் வகைகளுள் இது ஒன்றெனக் கருத்திற் கொள்ள வேண்டுகிறோம்.
தங்கள் அன்பன்,
த.வே. உமாமகேசுவரன்
பொழிற்றொண்டர்




     உமாமகேசுவரனார் மேற்கொண்ட அயரா முயற்சிகளின் பயனாக, தஞ்சை மாநாட்டாண்மைக் கழகத்தினரும், தஞ்சை நாட்டாண்மைக் கழகத்தினரும், பாவநாசம் நாட்டாண்மைக் கழகத்தினரும், தத்தம் ஆட்சி எல்லையிலுள்ள பள்ளிக் கூடங்களுக்கெல்லாம் தமிழ்ப் பொழில் இதழினை அனுப்பிட ஆணை வழங்கி உதவினர்.

     தஞ்சை மாநாட்டின் கல்வி நெறி ஆராய்ச்சியாளர் தலைவராக இருந்த, திரு பி.பி.எஸ்.சாஸ்திரியார் அவர்களும், இத் தமிழ்ப் பொழில் கல்லூரி பள்ளிக் கூடங்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் சிறப்பினை உடைய உண்மையை அறிவித்து, அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளிக் கூடங்களும் வாங்குமாறு செய்தார்.


மறைமலை அடிகள்
     தமிழ்ப் பொழில் இதழினைக் கண்ட மறைமலையடிகள் மனம் மகிழ்ந்து கூறியவற்றைப் பாருங்கள். தாங்கள் விடுத்த தமிழ்ப் பொழில் முதலிரண்டு மலர்களும் பெற்று மகிழ்ந்தேன். தாங்களும் ஏனை கற்றறிஞரும் எழுதியிருக்கும் தமிழ்க் கட்டுரைகளை உற்று நோக்கி வியந்தேன். தமிழ்ப் பொழில் நீடு நின்று நிலவுமாறு முயல்க. ஏனெனில், இஞ்ஞான்று பற்பல இதழ்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன. மேலும் வடசொற்கள் சிறிதும் கலவாத தனித் தமிழிலேயே, தாங்களும் மற்றைக் கல்வியறிஞரும் கட்டுரைகள் எழுதுவதை விடாப்பிடியாய்க் கைக்கொள்ளல் வேண்டும். வடசொற் கலப்பால் தமிழைப் பாழாக்க மடிகட்டி நிற்கின்றனர். ஆதலால் நம்மனோர் தமிழில் வடசொற்களைக் கலத்தற்கு சிறிதும் இடம் விட்டுக் கொடுத்தல் ஆகாது. தமிழ் மொழியை விட்டால் தமிழர்க்கு வேறு சிறப்பில்லை. தங்கள் முயற்சி நன்கு நடைபெறுக வென்று திருவருளை வேண்டுகிறேன்.


___________________________________________________________
  

முனைவர். சுபாஷிணி
ksubashini@gmail.com
___________________________________________________________