Pages

Thursday, June 21, 2018

கல்வெட்டுச் செய்தி: ஜிந்துபிட்டி கல்வெட்டு


தேமொழி:
இலங்கை ஜிந்துபிட்டி புனிதர் தோமாவின் ஆலயத்தில் உள்ள கல்வெட்டு குறித்து  இணையதளம் ஒன்று தரும் செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பார்க்க: 
புனிதர் தோமாவின் ஆலயம்,  ஜிந்துபிட்டி
ref: http://tamilchristianarticle.blogspot.com/2015/04/blog-post.html

ஜிந்துபிட்டி புனிதர் தோமாவின் ஆலய கட்டிட முறையானது பண்டைய கோதிக் முறையில் கட்டப்பட்டதாகும். கொரிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் தோமஸ் நாம் 2011 ஆம் ஆண்டு இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்தபொழுது இவ்வாலயத்தின் கட்டிட தோற்றத்தைப் பார்த்து ஆசியாவிலேயே புனிதர் தோமாவின் பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஏழு ஆலயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்றார்.

புனிதர் தோமாவினால் நிர்மாணிக்கப்பட்ட அனைத்து ஆலயங்களும் கடற்கரையோரமாக குன்றின் மீதே அமைக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள அனைத்து ஆலயங்களும் இவ்வாலயத்தை ஒத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கமைய தோமா தான் வருகை தந்த அனைத்து நாடுகளிலும் அந்நாடுகளின் கடற்கரையை அண்மித்த குன்றுகளிலேயே இயேசுவைக் குறித்துப் பிரசங்கித்ததாகவும் இப்பேராசிரியர் தெரிவித்தார். பேராசிரியர் தோமஸ்நாம், புனிதர் தோமா குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல நூல்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தில் காணப்படும் நினைவுச்சின்னங்களும் கல்வெட்டுக்களும் ஜிந்துபிட்டி புனிதர் தோமாவின் ஆலயத்தில் காணப்படும் அநேகமான கல்வெட்டுக்களும் நினைவுத் தூபிகளும் இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்களும் நினைவு தூபிகளும் அன்றைய காலத்து மக்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் பிறநலசேவையையும் பறைசாற்று கின்றனவாய் அமைகின்றன. இக்கல் ஆலயத்தின் கட்டிட கலை வெட்டுகளில் பிரதானமான ஒன்று நம் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.



இக்கல்வெட்டு பண்டைய தமிழ் மொழியில் அழகாக செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இக்கல்வெட்டு 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இதில் ஓர் இளம் தமிழ் வாலிபன் தன்னுடைய தாய் நாட்டின் மீது கொண்ட பற்று மற்றும் பாசத்தின் காரணமாகத் தாய் நாட்டைக் காக்க அன்னிய ஆக்கிரமிப்பாளர்களுடன் போராடி கடலில் உயிர் துறந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டில் இந்த இளைஞனின் வீரமும் அவன் தாய் நாட்டின் மேல் கொண்ட தீராத காதலையும் பாசத்தையும் பற்றையும் குறித்து சிறப்பாகச் சிலாகித்து எழுதப்பட்டுள்ளது.

வாசிப்போரை இது மெய்சிலிர்க்க வைக்கின்றது. தொன்று தொட்டு தமிழர்கள் தம் தாய் நாட்டின் மீது கொண்ட விசுவாசத்தை இது பறை சாற்றுவதாக அமைகின்றது.


து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை:
கல்வெட்டு, சில இடங்களில் தெளிவில்லையாதலால் 
முற்றாகப் படிக்க இயலவில்லை. ஒரு பாடல் வடிவக் கல்வெட்டு,
அதன் பாடல் வடிவில் வரிகளை மடக்காமல், கல்வெட்டு மரபில் எழுதப்பட்டுள்ளது.

பாடம்:
1  (தார்)கொண்ட காதலன் . . 
2  . . .  ராபுயனகற்ற (ந).....த
3  ............யு(ங்) கருவினிலுதித்
4  த............ஞ்சு (தீ)...............
5  .....ன்ற கல்லறை தனில் வா
6  சகம் சீர்கொண்ட ஆண்டா
7  யிரத்தெழுநூற்றுடன் செய்ய
8  பதின்மூன்று சென்ற திங்கள்
9  மார்கழி தனில் அஞ்சு நாள் மு
10 ..விலே செகதலத்தே பிறந்து 
11 ஏர்கொண்ட ஆயிரத்தெழுநூ
12 ற்றுயிருபத்து ரெண்டாண்டு 
13 ஆடி மாதம் ஈரொன்பதுட
14 னொன்று சென்ற நாளிருநில
15 த்தின் வாழ்வதை வெறுத்
16 தே பார்கொண்ட பொருளோ
17 டு (யாத்)தொகைகள் யாவும்
18 படைத்திடுஞ் சறுவ வல்ல (பா)
19 (னு)டைய (பா)தாரவிந்தமது காண
20 இப்பற்று விட்டேகினானே

பாடல் வடிவில்:
(தார்)கொண்ட காதலன் . . .  ராபுயனகற்ற (ந).....த .........யு(ங்) கருவினிலுதித் த............ஞ்சு (தீ)..ன்ற கல்லறை தனில் வாசகம்
சீர்கொண்ட ஆண்டா யிரத்தெழுநூற்றுடன் செய்ய பதின்மூன்று சென்ற திங்கள் மார்கழி தனில் அஞ்சு நாள் மு ..விலே செகதலத்தே பிறந்து
ஏர்கொண்ட ஆயிரத்தெழுநூற்றுயிருபத்து ரெண்டாண்டு  ஆடி மாதம் ஈரொன்பதுடனொன்று சென்ற நாளிருநிலத்தின் வாழ்வதை வெறுத்தே 
பார்கொண்ட பொருளோடு (யாத்)தொகைகள் யாவும்  படைத்திடுஞ் சறுவ வல்ல (பா) னு)டைய (பா)தாரவிந்தமது காண இப்பற்று விட்டேகினானே 

குறிப்பு:
1713-ஆம் ஆண்டு மார்கழி 5-ஆம் நாள் பிறந்த ஒருவர், 
1722-ஆம் ஆண்டு ஆடி மாதம் 19-ஆம் நாள் இறந்து போனார்
(இந்த இரு நிலத்தில் வாழ்வதை வெறுத்து இறைவனின் 
மலரடி சேர்ந்தார்) என்பதாகலாம். 


தேமொழி:
கல்வெட்டுச் செய்தியை வழங்கியமைக்கு, படித்து விளக்கமளித்தமைக்கு மிக்க நன்றி திரு. சுந்தரம்.
இக்கல்வெட்டு 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இதில் ஓர் இளம் தமிழ் வாலிபன் தன்னுடைய தாய் நாட்டின் மீது கொண்ட பற்று மற்றும் பாசத்தின் காரணமாகத் தாய் நாட்டைக் காக்க அன்னிய ஆக்கிரமிப்பாளர்களுடன் போராடி கடலில் உயிர் துறந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டில் இந்த இளைஞனின் வீரமும் அவன் தாய் நாட்டின் மேல் கொண்ட தீராத காதலையும் பாசத்தையும் பற்றையும் குறித்து சிறப்பாகச் சிலாகித்து எழுதப்பட்டுள்ளது.
என்று கட்டுரையாளர் தந்த செய்தியுடன் கல்வெட்டுப் பாடம் பொருந்தவில்லையே.

முதற்பகுதி விளக்கமாகக் கிடைக்கவில்லை என்றாலும், பிறந்த மற்றும் இறந்த ஆண்டுகளின் அடிப்படையில் ...
இறந்தவரின் நடுகல் அவர் ஒரு 9 வயதே ஆன சிறுவன் என்றல்லவா காட்டுகிறது !!!!!

கட்டுரையாளர் உங்களைப்போல செய்தியைப் படிக்காமல், இவ்வாறு எழுதியுள்ளது என்று பிறர் கூறுவதன் அடிப்படையில் கட்டுரையில் செய்தியைத் தந்துள்ளார் என்று புரிந்து கொள்கிறேன்.
மேலும் இது ~300 ஆண்டுகளுக்கு முன்னர் பொறிக்கப்பட்ட செய்தி என்றும் தெரிகிறது. 


நா. கணேசன்: 
கல்வெட்டைக் கழுவி, மாவுபூசிப் படியெடுத்தால், முழுப்பாடலும் தெளிவாகக் கிடைக்கும். கல்வெட்டுகளில் பாடல்கள் அரிது.

தமிழ் மாதம், தேதி கொடுத்துள்ளதால் ஆண்டு சக அப்தம் என்று கொள்ளவேண்டும். அப்படிப் பார்த்தால் கல்லறையில் கிடத்தப்பட்ட சிறுவன் இறந்த ஆண்டு கி.பி. 1800 ஆகும்.

இங்கிலாந்து சர்ச் மதபோதகர்கள் வந்தவுடன் ஏற்பட்ட கல்வெட்டு.  அவர்கள் ஈழத் தீவு வந்ததே 1796-ல் தான்.

https://en.wikipedia.org/wiki/Church_of_Ceylon
The first services were held on the island in 1796 and missionaries were sent to Ceylon to begin work in 1818.[2]  

The cemetery  date in 1800 CE matches with the rise of English church in Ceylon.

கல்வெட்டின் காலம் இலங்கையில் ஆங்கிலேயர்கள் சர்ச் தோன்றத் துவங்கிய காலத்துடன் ஒத்துப் போவதைக் காணலாம். 




No comments:

Post a Comment