Pages

Wednesday, July 20, 2016

மருங்கூர் - சங்ககாலக் கடற்கரைப்பட்டினம்


 -- சொ.  சாந்தலிங்கம், மதுரை.


சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றில் (227.19.21)

‘விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து
எல்லுமிழ் ஆவணம்


என்றும், நற்றிணையில் (258.7-10)

‘அகலங்காடி யசைநிழற் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கட் தாக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேர்க்கும்
மருங்கூர்ப் பட்டினத்து’


என்றும் மருங்கூர்ப்பட்டினம் என்னும் ஓர் ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விலக்கியச் செய்திகள் மூலம் இது ஒரு கடற்கரைப் பட்டினம் என்பதும், வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதும் பெறப்படுகிறது.

இப்பட்டினம் பசும்பூண் பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பதிலிருந்து இது பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பகுதியில் இருந்து ஒரு பட்டினம் என்பது உறுதிப்படும். இப்பட்டினம் எங்கு இருந்தது, இருக்கிறது என்பது நீண்ட நாளைய கேள்வியாக இருந்தது. அண்மைக்கால களஆய்வின் மூலம் இப்பட்டினத்தை அடையாளங் காணத்தக்க சில சான்றுகள் பெறப்பட்டுள்ளன.[1]

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் தளிமருங்கூர், திருவாடானையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் வடக்கில் சற்று விலகி இருக்கும் ஊர் இது. கடலுக்கு அருகாமையில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இவ்வூரே மேலே குறிப்பிடப்பட்ட இலக்கியங்கள் கூறும் மருங்கூர் என்பதை நிறுவுவதே இக்கட்டுரை.

அண்மையில் இவ்வூர் தமிழக அரசு தொல்லியல் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது. மேற்பரப்பு ஆய்வுகளின் மூலம் சங்க காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படும் கருப்பு சிவப்புப் பானை ஓடுகள் அதிக அளவில் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பிற்காலப் பாண்டியர் காலத்தில் வணிகச் செழிப்பும், சமயச் சிறப்பும் பெற்ற இடமாக இருந்துள்ளமைக்கும் சான்றுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வூர் இன்று திசைகளை வைத்து இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெக்கூர், வடக்கூர் என்று அழைக்கப்படுகிறது. தெக்கூரிலும், வடக்கூரிலும் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிவன் கோயில்கள் (கி.பி.13-ஆம் நூற்றாண்டு) அமைந்துள்ளன. இக்கோயில்கள் தெக்கீசர் கோயில் என்றும், வடக்கீசர் கோயில் என்றும் இன்றும் அழைக்கப்படுகின்றன, தெக்கீசர் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் இவ்வூர் தளிமருங்கூர் என்று பெயர் கூறப்பட்டுள்ளன. வடக்கீசர் கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் அப்பகுதியை குலமாணிக்கபுரம் என்று குறிப்பிடுகின்றன. இன்று தளிமருங்கூர் என்ற ஓரே பெயரில் அழைக்கப்படும் இவ்வூர் பிற்கால பாண்டியர் காலத்தில் மருங்கூர் என்ற வேளாண் ஊராகவும், குலமாணிக்கபுரம் எனும் வணிக நகரமாகவும் இருபிரிவாக இருந்துள்ளது. இவ்வூர்  முத்தூற்றுக் கூற்றத்தில் அமைந்திருந்தது. முத்தூற்றுக்கூற்றம் சங்க காலத்திலேயே இருந்த ஒரு நாட்டுப்பிரிவு என்பதை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.. முத்தூற்றுக்கூற்றத்தில் ஒழிந்திருந்த பகைவனை பாண்டிய நெடுஞ்செழியன் வெற்றிகண்டான். கி.பி.5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலும் முத்தூற்றுக்கூற்றம் குறிப்பிடப்படுகிறது.

குலமாணிக்கபுரம் என்னும் இவ்வூர் கல்வெட்டுகளில் நகரம் என்று குறிப்பிடப்படுகிறது. சில காலங்களுக்குப் பிறகு இதுவே நானாதேசிப்பட்டினம் என்றும் பெயர் பெற்றிருந்தது. மருங்கூர் என்பதும் குலமாணிக்கபுரம், நானாதேசிப் பட்டினம் என்னும் ஊரும் ஓரே ஊராகவே ஒருகாலத்தில் இருந்துள்ளது. மருங்கூர்ப்பட்டினம் என்று இலக்கியங்களில் கூறும் பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினம் கடல் ஒட்டிய பகுதிகளில் வேறு எங்கும் இல்லாத நிலையில் இவ்வூரையே சங்ககால ஊராகக்கொள்வதில் தவறில்லை. சங்ககாலத் தடயங்களான கருப்பு சிவப்புப் பானை ஓடுகள் பெருமளவில் இவ்வூரில் கிடைப்பது இவ்வெண்ணத்திற்கு வலுவூட்டுவதாக உள்ளது.

மருங்கூர்ப்பட்டினம் இருந்த இடத்தில்தான் இன்றைய அழகன்குளம் ஊர் அமைந்துள்ளது என்று அண்மைக்கால ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] ஆனால் அக்கருத்து மறுபரிசீலனைக்குட்பட்டதாகும். அழகன்குளம் என்பதும் மருங்கூர்ப் பட்டினம் என்பது ஓரே சமயத்தில் சிறந்து விளங்கிய வெவ்வேறு கடற்கரை பட்டினங்கள் என்றே கொள்ளவேண்டும்.

பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுக்கள்
இவ்வூரின் தென்பகுதியில் தெக்கீசர் கோயில் என்றும், வடக்குப் பகுதியில் வடக்கீசர் கோயில் என்றும் இரண்டு கோயில்கள் அமைந்துள்ளன. இவ்விரண்டிலும் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுக்களும் இடம் பெற்றுள்ளன.

தெக்கீசர் கோயில்
இக்கோயில் மிகவும் இடித்த நிலையில் உள்ளது. கருவறை,அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய அங்கங்களைக் கொண்ட சிறிய கோயில் இது. விநாயகர், முருகன், பைரவர் ஆகிய தெய்வங்களுக்குச் சிற்றாலயங்கள் திருச்சுற்றில் அமைந்துள்ளன. கோயில் மிகவும் இடிந்த நிலையில் உள்ளதால் இங்குள்ள கல்வெட்டுக்களை முழுமையாகப் படிக்க முடியவில்லை. கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டு மட்டும் படிக்கும் நிலையில் உள்ளது.

இக்கல்வெட்டின் மூலம் இக்கோயிலின் பெயர் பிரம்மீஸ்வரம் உடையார்கோயில் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது. மன்னர் பெயர் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. பாண்டிய மன்னனுடைய ஆணையாக இக்கல்வெட்டு விளங்குகிறது. இக்கோயிலின் திருப்படி மாற்றுச் செலவினங்களுக்காக தளிமருங்கூருக்கு அருகில் இருந்த மாவூர் என்னும் பல்லவராயநல்லூரை விலைக்கு விற்று வழங்கிய செய்தி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. வீரகேரளபுரமான நானாதேசிப் பட்டினத்து திருவிக்கரமன் சக்கரவர்த்தியான வீரபாண்டி ஜகவீர ராம சக்கரவர்த்திக்கு அஞ்சுகோட்டைப்பற்றினைச் சேர்ந்த செழியதேவனும் குலசேகர அஞ்சுகோட்டை நாடாழ்வானும் சேர்ந்த இவ்வூரை விலைக்கு விற்றுள்ளனர். விலைக் கிரயத்தொகை கோயில் பணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.

இக்கல்வெட்டில் இடம் பெறும் மாவூர் தளிமருங்கூருக்கு அருகிலேயே தற்போது உள்ளது. பிற்காலப் பாண்டியர் காலத்தில் இவ்வூருக்கு பல்லவராசநல்லூர் என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது.

வடக்கீசர் கோயில்

ஊரின் வடபகுதியில் அமைந்துள்ளதால் இது வடக்கீசர் கோயில் என மக்களால் அழைக்கப்படுகிறது. ஆனால், இங்குள்ள கல்வெட்டுக்களில் கோயிலின் பெயர் உலகநாத ஈசுவரம் என்று குறிக்கப்பட்டுள்ளது. இங்கு நான்கு கல்வெட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. இக்கல்வெட்டுக்கள் யாவும் கி.பி. 13 – ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையே. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தவை இரண்டும் மற்றவை அவன் சமகாலத்ததாகவுமே உள்ளன. இக்கல்வெட்டுக்கள் இரண்டில் ‘குடிதாங்கி மதிதொங்கனான கங்கை நாராயண சக்கரவர்த்தி’ என்னும் அதிகாரி ஒருவன் இடம் பெறுகிறான். இவன் முன்னர் குறிப்பிடப்பட்ட தெக்கீசர் கோயில் கல்வெட்டிலும் இடம் பெறுகிறான்.

இக்கல்வெட்டுக்கள் ஓரே அரச ஆணையை அதிகாரிகள் பெற்றுத் திரும்ப கோயில் நிர்வாகிகளுக்குப் பிறப்பித்த செய்தியைத் தருகின்றன. சடையனேம்பல் என்ற ஊர் உலகநாத ஈசுவரம் கோயிலுக்காக விற்றுக் கொடுக்கப்பட்டது என்பதே செய்தியாகும். இது கங்கை நாராயணச் சக்கரவர்த்தி ஓலை என்று அரச அதிகாரியின் ஆணையாகவும் வெட்டப்பட்டுள்ளது.

வடக்கம்மன் கோயில்
வடக்கீசர் கோயிலுக்கு வடக்கில் சிறு கிராம தெய்வக் கோயில் ஒன்று உள்ளது. வடக்கம்மன் கோயில் என்று இன்று அழைக்கப்படும் இக்கோயில் ஒரு கல்வெட்டில் ’அமரர் தொழு நங்கை’ கோயில் எனப்படுகிறது. இக்கல்வெட்டின் மூலம் இக்கோயிலுக்கு இவ்வூரில் வாழ்ந்த கைக்கோளார்களில் நிரயன் சீவலஞ்சுப் பெருமான் என்பவர் செய்த ஒரு தருமம் பெறப்படுகிறது. கைக்கோளர் என்போர் நெசவுத் தொழில், துணி வணிகத்தில் ஈடுபட்ட பிரிவினராவர். இதன் மூலம் இவ்வூரின் வணிகத்தொடர்பு உறுதிப்படும்.


[1] தளிமருங்கூர் களஆய்வு இக்கட்டுரை ஆசிரியாராலும், கல்வெட்டு ஆய்வாளர்
முனைவர் வெ. வேதாசலம் அவர்களாலும் மேற்கொள்ளப்பட்டது.

[2] Abdulmajeed, A, Thulasiraman, D., and Vasanthi,
S., 1992, Alagankulam: A Preliminary Report, state Department of Archaeilogy, Madras,p.2.  




________________________________________________________


 Dr. C. Santhalingam
Mobile No: 9894687358,
Email ID: csantham@hotmail.com, pchrmadurai@gmail.com
________________________________________________________

No comments:

Post a Comment