Pages

Thursday, May 12, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 13

- செல்வன். 

பேரா யூகோ: உங்கள் இயக்கம் இப்போது ஒரு அரசியல் கட்சியாக மாறிவிட்டது. அரசியல் கட்சியாக மாறியபின் உங்கள் கொள்கைகளும், நோக்கங்களும் மாறிவிட்டனவா?

சன்னா: எங்கள் தலைவர் திருமாவளவன் கூறியதுபோல் எங்கள் உத்திகள் மாறினவே ஒழியக் கொள்கைகளில் மாற்றம் எதுவுமில்லை. கட்சியின் ஐந்து குறிக்கோள்கள் தொடர்ந்து எங்கள் இலக்காக நீடிக்கின்றன. இவற்றை அடைய நாங்கள் கடைபிடிக்கும் உத்திகள் காலப்போக்கில் மாறுதல் அடையலாம். எந்த இயக்கமும் ஒரே உத்தியை எல்லாக் காலத்திலும் பின்பற்றிக்கொண்டிருக்க முடியாது. ஆகத் தேர்தல் களத்தில் இறங்கியபின் எங்கள் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டோம், அல்லது கொள்கைகளை நீர்த்துப்போக விட்டோம் எனும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் கிடையாது. எங்கள் கொள்கைகள் நிலையாக மாற்றமின்றி உள்ளன. அவற்றை அடையத் தொடர்ந்து போராடி வருகிறோம்

பேரா யூகோ: சரி கொள்கைகளில் மாற்றமில்லை என்றால் கட்சியின் கட்டமைப்பில் மாற்றம் நிகழ்ந்துள்ளதா? கட்சியின் இரண்டாம்
ட்ட தலைவர்கள் இன்னமும் தமிழக அளவில் பெரியதாக அறியப்படவில்லை என நான் கருதுகிறேன்

சன்னா: இது பரவலாக சொல்லப்படும் குற்றச்சாட்டேயாகும். ஊடகங்கள் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவோ, அவர்களே இரண்டாம்
ட்ட தலைவர்கள் ஆகிறார்கள் என நினைக்கப்பட்டாலும், உண்மை என்னவெனில் கட்சியின் தலைவர் யாரை அங்கீகரிக்கிறாரோ அவர்களே இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆகிறார்கள். நான் யாரையும் குறிப்பிடாமல் பொதுவாகச் சொல்கிறேன். ஒருவர் நேற்றுவரை சினிமா நடிகராக இருப்பார். இன்று கட்சியை துவக்குவார். ஊடகங்கள் உடனே ஒன்றுசேர்ந்து அவரைப் பெரிய தலைவராகச் சித்தரிக்கும். இதுநாள்வரை அவர் மக்களுக்கு என்ன செய்தார், எத்தகைய போராட்டங்களை நடத்தினார் என்பது போன்ற கேள்விகள் எதுவும் எழாது. ஊடகங்கள் தான் இங்கே தலைவர்களை உருவாக்குகின்றன. விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை இத்தனை நாள் மக்களுக்காகப் போராடியவரையே தலைவராக ஏற்கிறோம். அவரே திருமாவளவன்

பேரா யூகோ: பிரச்சனை ஊடகங்கள் மட்டுமல்ல

சன்னா: ஆம். ஊடகங்கள் மட்டுமில்லை. நான் ஒவ்வொன்றையும் படிப்படியாக விளக்குகிறேன். ஊடகங்கள் ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அவர் முகம் மக்களிடையே பிரபலமாகிறது. அதே சமயம் ஒவ்வொரு கட்சியிலும் மக்களுக்கு அறிமுகமான பிரபல தலைவர் என ஒருவரே இருப்பார். இரண்டாம்
ட்ட தலைவர்கள் கட்சிக்குள் அங்கீகாரம் பெற்றால் தான் ஊடகங்களில் கவனம் பெறுவார்கள். நாங்கள் அடிமட்ட அளவிலிருந்து எழும் கட்சி என்பதால் எல்லாரும் தலைமை வகிக்க ஆசைப்படுவார்கள். அதனால் ஒவ்வொரு பதவிக்கும் கடும் போட்டி உருவாகும். அத்தகைய போட்டியின் மூலமே இரண்டாம் கட்டத் தலைமை உருவாகும். அடுத்ததாக இப்போது இரண்டாமிடத்தில் உள்ளவர்களை மக்கள் இரண்டாம் கட்ட தலைவர்களாக ஏற்கிறார்களா என்றால் இல்லை. தமிழக அளவில் சிந்தனையாளராக அறியப்பட்ட என்னைப் போன்ற ஐந்தாறு பேரை ஏற்கவே எதிர்ப்பு இருக்கிறது.

இந்த எதிர்ப்பை எப்படிச் சமாளிப்பது? அது நேருக்கு நேர் நின்று போராடி மாற்றக்கூடிய விஷயமல்ல. மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வித கருத்து இருக்கும். அவர்கள் திருமாவளவனை ஏற்றதே மிகப்பெரிய விஷயம். இப்போது அவர்கள் "நாங்கள் மற்ற இரண்டாம் கட்ட தலைவர்களையும் ஏற்றுக் கட்சியை வளர்க்க வேண்டுமா" என தங்களுக்குள் விவாதிக்கிறார்கள். ஆக இதில் தலித் அல்லாதவர்களால் பிறரை ஏற்பதில் பலருக்கு தயக்கம் உண்டாகிறது. இந்த இரு பிரச்சனைகளுக்கு மத்தியில் விடுதலைச் சிறுத்தைகளின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்குச் சரியான முறையில் அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கலேற்படுகிறது

பேரா யூகோ: ஆனால் கட்சியால் அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் செயல்பட முடியும் அல்லவா? (சன்னா: ஆம்). இப்போது மதிமுகவை எடுத்துக்கொண்டால் நாஞ்சில் சம்பத் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளில் திருமாவை தவிர்த்து அப்படி யாரும் இல்லை. (சன்னா: ஆம்). திருமாவை தவிர்த்து இன்னொருவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டால் அவரும் மக்கள் மனதில் பதிந்துவிடுவார்

சன்னா: இது உண்மையே. ஆனால் பேச்சாளர்கள் இல்லை எனச் சொல்ல முடியாது. இருக்கிறார்கள்

பேரா யூகோ: நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை

சன்னா: நட்சத்திர பேச்சாளர்களும் இருக்கிறார்கள்.

[தொடரும் ... ]

___________________________________________________________
 

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________

No comments:

Post a Comment