Pages

Saturday, September 26, 2015

மயிலாடும்பாறைக் கல்வெட்டு

--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.


விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், பொ. மெய்யூர்

என்னும் சிற்றூரில்  மயிலாடும்பாறை என ஊர் மக்கள் குறிப்பிடும் பாறையில் ஒரு கல்வெட்டைக் கண்டிருக்கிறார் அவ்வூரைச் சேர்ந்த ச.குப்பன் என்பவர். அக்கல்வெட்டின் ஒளிப்படத்தை அனுப்பியிருந்தார்.

அது ஓர் அருமையான கல்வெட்டு. இராசராசனின் தமையன் ஆதித்த கரிகாலன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு. கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக்குறிப்பிடப்பெறுகிறான்.

ஒளக் கண்டனாகிய சிங்க முத்தரையன் என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக் கொடுத்ததோடு  ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து கொடுத்துள்ளான்.  ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை

“ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது.  ”பட்டி” என்பது நிலத்தைக்குறிக்கும். சில நடுகற்களில் வருகின்ற “உதிரப்பட்டி” என்னும் சொல்லை ஒப்பிடுக. இறந்த வீரனின் குடும்பத்தாருக்கு (இரத்த உறவு உள்ளவர்) நிலம் கொடையாக அளிக்கப்படுவதை “உதிரப்பட்டி” என்பார்கள். கல்வெட்டுப்பாடமும் கல்வெட்டுப்படமும் கீழே தரப்பட்டுள்ளன.



ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியனைத்தலை
கொண்ட கோப்பரகேசரி ப(ந்)மற்கு யாண்டு
............வது மிலாடுக்குறுக்கைக் கூற்றத்து
..... உடைய ...ஒளகண்டனாகிய சிங்க
....னேன்  இவூர்க்கு நஞ்செயரை
..(ஏ)ரிப்பட்டியாக இறைஇழிச்சி உ(ப)
யஞ்செய்த அட்டிக்குடுத்தேன் சிங்க(மு)
தரையனேந் இத்தர்மம் ரக்‌ஷித்தான் பா
தம் என்றலைமேலன இதிறக்கினான் கெ
ங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்
தார் செய்த பாவமெல்லாங்கொள்வான்
மேலை கற்றூபும் இட்டாருமிவரே


”கற்றூபும்” எனப்பிழையாகப் பொறித்திருக்கிறார்கள். “கற்றூம்பும்” என்பதே சரி. கல்+தூம்பு=கற்றூம்பு.

 ________________________________________________________


து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156.doraisundaram18@gmail.com
________________________________________________________


No comments:

Post a Comment