Wednesday, September 9, 2020

பழங்கால தமிழர்களின் சூழலியல் அறிவை பறைசாற்றும் சங்க இலக்கியங்கள்

பழங்கால தமிழர்களின் சூழலியல் அறிவை பறைசாற்றும் சங்க இலக்கியங்கள் 

- அகிலா செழியன்


இயற்கையோடு இயைந்து வாழத் தொடங்குவோம் - என்ற கருத்தாடல்கள்தான் இப்பெருந்தொற்றுக் காலத்திய பெரும் பேசுபொருளாக உள்ளது.

ஆனால், இப்படி எவ்வித நிர்ப்பந்தங்களும் இல்லாத சூழலிலேயே, இயற்கையைக் கூர்ந்து கவனித்த, இயற்கையோடு இயைந்து வாழ்ந்த, தமக்கென இயற்கையியல் கோட்பாடுகளையும், சூழலியல் அறங்களையும் வகுத்துக்கொண்டு சூழல்கேடற்ற ஒரு வாழ்வை வாழ்ந்த அறிவு மரபினர் தமிழர்கள் என்பது தமிழ்ச் சமூகத்தின் ஆகப்பெரும் பெருமிதம்.

"மொழிதான் சுற்றுச் சூழலின் மிகச் சிறந்த ஆவணக் காப்பகங்கள்" என்று குறிப்பிடுகிறார் ஐங்கரநேசன். அதன்படி தமிழ் நிலத்தின் இயற்கை வளம், பல்லுயிரியம் , தமிழர்களின் சூழலியல் அறிவு அனைத்தையும்பறைசாற்றுபவை சங்க இலக்கியங்கள்.

நவீன சமூகம் விலங்கியல், தாவரவியல், பறவையியல், உயிரியல் எனப் பல்துறைகளின் வழியாக கற்றுக் கொள்ளும் பல தகவல்களைப் போகிற போக்கில் இயல்பாகப் பதிவு செய்கிறது சங்க இலக்கியம். வலசைபோகும் பறவைகள், இரையை அடித்து புதருக்குள் ஒளித்து வைக்கும் புலி, மரப்பட்டையை உரித்து உண்ணும் யானை என உயிர்கள் பற்றிய பல நுட்பமான செய்திகளை உவமைகளாகப் பதிவு செய்து விடுகிறது.

ஆந்தைகள் குறித்த பேரறிவு

நற்றிணையில் வரும் ஒரு பாடல், பெண் ஒருத்தியின் காதல் உணர்வைப் பதிவு செய்யும் பொழுது கூடவே ஆந்தை என்ற பறவை இனத்தைப் பற்றிய அனைத்து செய்திகளையும் பட்டியலிட்டு விடுகிறது, எலிகளிடம் இருந்து நம் உணவுப் பொருட்களைக் காப்பாற்றித் தரும் மிகப்பெரும் உதவியைச் செய்பவை ஆந்தைகள் தான் ஆனால், பொதுவாக ஆந்தைகள் குறித்த அறிவோ விழிப்புணர்வோ நம்மிடையே பரவலாக இல்லை.

நம் மூதாதையர்களான சங்கத்தமிழர்கள் அது குறித்த அறிவைக் கொண்டு இருந்துள்ளனர். "எலி வேகமாக இனப்பெருக்கம் செய்யக் கூடிய தன்மையுடையது, ஓர் இணை எலி ஒரு சமயத்தில் 6 முதல் 8 குட்டிகளை ஈனும், அந்த எலிகள் ஒரு வருட முடிவில் 880 எலிகளாகப் பெருகும், இதே வேகத்தில் சென்றால் 5 வருட முடிவில் பல லட்சம் எலிகளாகப் பெருகிவிடும்.

இந்த நிலை நீடித்தால் மனித இனம் உற்பத்தி செய்யும் உணவு அனைத்தும் எலிகளுக்கே போதாதது மட்டுமல்ல எலிகளால் உருவாகும் நோய்களும் பெருகிவிடும். ஆனால், இயற்கை அதை அனுமதிப்பதில்லை, எலிகள் எவ்வளவு வேகமாகப் பெருகுகின்றதோ, அதே அளவு வேகமாக அதைக் கட்டுப்படுத்துபவை ஆந்தைகள்.

ஆந்தைகளின் பிரதான உணவு எலிகள் என்பதால் எலிகள் பெருகிவிடாமல் இயற்கை சமநிலையை நிலைநிறுத்தும் வேலைகளை அப்பறவைகள் செய்கின்றன எனவே, நம் உண்ணும் உணவிற்குப் பின்னால் ஆந்தையின் உழைப்பும் இருக்கிறது" என பறவையியலாளர் சலீம் அலி தனது The book of Indian birds என்ற நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

"கடவுட் முதுமரத்து" எனத் தொடங்கும் நற்றிணைப் பாடலில் தலைவி, ஒரு முதிர்ந்த பெரிய மரத்தின் அருகில் சென்று, அந்த மரத்தில் அமர்ந்து இருக்கும் ஆந்தையைப் பார்த்து, ஏ ஆந்தையே, வளைந்த அலகும் , கூரிய நகங்களும் உடைய நீ இரவில்தான் விழித்துக் கொண்டிருப்பாய் என எனக்குத் தெரியும்; மேலும், மெல்லிய பறை ஒலி எழுப்புவது போலச் சத்தம் போடுவாய்; ஆனால், இன்றைக்கு இரவு என் காதலன் என்னைச் சந்திக்க வருகிறான்; நாங்கள் இந்த மரத்தின் அடியில்தான் நின்று பேசுவோம், அப்படி நாங்கள் சந்திக்கும் பொழுது சத்தம் போட்டு எங்களைக் காட்டிக் கொடுத்து விடாதே.

அப்படி மட்டும் நீ சத்தம் போடாமல் இருந்தால் எக்கறியைச் சமைத்து , வெண் சோற்றில் இட்டு, நெய் ஊற்றிப் பிசைந்து உனக்கு உண்ணத் தருகிறேன், எனக் கூறுகிறாள்.

தன் காதலைப் பற்றி பேசும் இந்த இடத்தில், ஆந்தைகளுக்குப் பிடித்த உணவு எலிக்கறி என்பதைப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், ஆந்தையின் வாழ்விடம் எது, அதன் உருவ அமைப்பு எப்படி இருக்கும், அது எப்படி குரல் எழுப்பும், என பறவையியலில் ஒரு பறவை குறித்துக் கற்றுக் கொள்ள வேண்டியதாகப் பட்டியலிடப்படும் கூறுகளை எல்லாம், காதலைச் சொல்லும் இடத்தில் பதிவு செய்து விடுவதுதான் தமிழர்களின் சிறப்பு.

ஆறுகள் உருவாகும் அறிவியல்

பனிமலைகள் உள்ள வட இந்தியாவில் பனிமலைகள் உருகி ஆறுகள் உருவாகும், பனிமலைகளே இல்லாத தென்னிந்தியாவில் எப்படி ஆறுகள் உருவாகும் என்ற நவீன சமுகம் எழுப்பும் கேள்விக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதில் எழுதி வைத்தவர்கள் தமிழர்கள்.

" சூருடை நனந்தலை சுனை நீர் மல்க" என்ற பாடலில், குறிஞ்சி நிலத்தின் உச்சிப் பகுதிகள் மழை நீரைத் தேக்கி வைத்துக் கொள்கிறது. பின்னர் அந்த நீர் கசிந்து அங்கு உள்ள சுனைகள் நிறைகின்றன, சுனைகளில் உள்ள நீர் சேர்ந்து அருவியாக வீழ்ந்து, காட்டாறாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றன என்று ஆறுகள் உருவாகும் அறிவியலை நுட்பமாகப் பதிவு செய்துள்ளது.

இப்படி இயற்கை குறித்து சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ள தகவல்கள் ஒரு கட்டுரைக்குள் அடக்கி விட முடியாத அளவு பரந்து விரிந்து கிடக்கின்றன.

பழங்காலத் தமிழரின் அறிவு நெறிமை

இயற்கையைத் தமிழ்ச் சமூகம் அளவிற்குப் புரிந்து கொண்டவர்கள் வேறு எவரும் இல்லை என்கிறார் திணைக் கோட்பாட்டு ஆய்வாளர் பாமயன். உலகில் எத்தனையோ நாகரிகங்கள் தோன்றி வளர்ந்துள்ளன. சிந்து சமவெளி நாகரிகம், நைல் நாகரிகம், சுமேரிய நாகரிகம்,என்று பண்டை நாகரிகங்களைப் பற்றி பல்வேறு செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன.

இந்த நாகரிகத்தில் மக்கள் கூட்டத்தை இயக்குகின்ற கூறுகளாக இருப்பது சடங்குகளும், பூசனைகளும்தான். உலகின் பல்வேறு நாகரிகங்கள் பூசாரியத்தோடு தோன்றி வளர்ந்து பின்னர் பல்வேறு திரிபுகளை எட்டிய போது, தமிழ் அறிவுலகம் தனக்கென தனியானதொரு பூசாரியம் அல்லாத ஒரு வாழ்வியலைக் கைக்கொண்டிருந்தது.

தமிழ் அறிவு நெறிமையின் தனித் தன்மை என்னெவெனில், அது தன்னை சுற்றியுள்ள இயற்கை சூழலை அச்சத்துடன் பார்க்காமல் , தோழமையுடன் பார்த்தது. அதற்கு எடுத்துக்காட்டுகள் சங்கப்பாடல்கள்தான்.

உலகம் என்பதை யாரோ ஒருவர் படைத்தார் என்றல்லாது ஐம்பூதங்களின் சேர்க்கைதான் உலகம் என்பதை "நிலம்தீ நீர் விளி விசும்பொடைந்தும் கலந்த மயக்கம் உலகம்," என்று கூறியது தொல்காப்பியம். இதை இன்னும் விளக்கமாக "மண் திரிந்த நிலனும்" என்ற புற நானூற்றுப் பாடல் விளக்குகின்றது.

பகுத்துப்பார்ப்பதும் தொகுத்துப்பார்ப்பதும் அறிவியல் உலகம் கண்டறிந்த மிகப்பிரிய ஆய்வலசல் கருவிகள், ஒரு மரத்தைக் கட்டைத் துண்டாகவும், சில்லித் துணுக்குகளாகவும், பகுத்துக் கொண்டே சென்று கடைசியில் ஒன்றும் இல்லை என்று பொருள் வடிவில் முடிக்கிறது அறிவியல் மனம்.

ஆனால், ஒரு மரத்தைத் தனது உடன் பிறப்பாக, இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் தோழனாகப் போற்றுகிறது தமிழர் திணையியல் மனம். "மரம் சா மருந்துங் கொளார் " என்பதுதான் தமிழரின் பெருமை என்கிறார் பாமயன்.

அணிநிழற்காடு

பரிணாம வளர்ச்சியின் பிற்பகுதிகளில் புவியில் தோன்றிய சிற்றினமாகிய மனித இனம், இயற்கையின் மீது வரையறையற்ற ஆதிக்கத்தைச் செலுத்தியதன் விளைவாக எதிர்வினைகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது.

மனிதனின் பிரம்மாண்டங்களை எல்லாம் இயற்கை ஒரு நுண் கிருமியைப் படைத்துக் கலங்கடித்து விட்டதைப் பார்த்து அதிர்ந்து கிடக்கிறது மனித இனம். சூழலியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நின்று நவீன சமூகம் கற்றுக் கொள்ள விழையும் பாடத்தை, பல ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டை வரியில் " மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்" என்று எளிமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர் என்கிறார் சூழலியலாளர் கார்த்திகேயன்.

மேலும், vulture என்ற பறவையை நாம் பிணந்தின்னிக்  கழுகு என்று அழைக்கிறோம். ஆனால், சங்க இலக்கியத்தில் இப்பறவைக்கு "எருவை" என்ற அழகிய பெயர் உள்ளது. பொதுவாகக் கழுகு இனம் வேட்டையாடும் தன்மை உடையது.

ஆனால், இப்பறவைகள் வேட்டையாடுவதில்லை, இறந்து கிடக்கும் உயிரினங்களை, புலி போன்ற விலங்குகள் வேட்டையாடி சாப்பிட்ட பின்பு விட்டுச் செல்லும் எச்சங்களைச் சாப்பிட்டு அவற்றை மட்கச்செய்பவை, இப்பறவைகள்தான் காட்டின் துப்புரவாளர்கள் என்று அறிவியல் பதிவு செய்கிறது.

இந்த செயலை தமிழர்கள் அறிந்து இருந்தனர் என்பதை இப்பெயரிலேயே புரிந்து கொள்ள முடியும். காட்டில் கிடக்கும் எச்சங்களை உண்டு மட்கவைத்து எருவாக மாற உதவும் பறவை என்பதால் "எருவை" என்ற பெயரிட்டுள்ளனர். இப்படி சங்க இலக்கியத்தில் உள்ள உயிரினங்களின் பெயர்களை etymology அடிப்படையில் ஆய்வு செய்தால் இயற்கை குறித்த தமிழ் அறிவு மரபு நம்மை வியப்படையச் செய்யும் என்கிறார்.


நன்றி: #தமிழர்_பெருமை, பிபிசி தமிழ் 


Friday, September 4, 2020

கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்!

கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்!

-- முனைவர் ச.பாரதி   




"கடற்படை அனுபவங்கள்" 
- முதல் நாள் சிறப்புரை (31/8/2020):
            "கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்" என்ற முதல் நாள் கருத்தரங்கில், தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுபாஷிணி அவர்கள் நோக்க உரையாற்ற முனைவர் தேமொழி அவர்கள் நெறியாள்கை செய்தார்.  "கடற்படை அனுபவங்கள்" என்ற தலைப்பில் முதல் நாள் நிகழ்வில் திரு. நரசய்யா அவர்கள் தனது கடற்பயண அனுபவத்தைப் பற்றி நம்மிடம் மிக மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். அவற்றில் 1949 ஆம் ஆண்டு அவர் பயிற்சியில் இணைந்த காலம் தொடங்கி தனது முதல்  கப்பல் பயணமான “நாசகாரி கப்பல்” பற்றியும், தனது முதல் நாள் அனுபவத்தையும் நம்மிடம் பேசலானார். 

            மேலும் அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரப் பணி பற்றியும் நம்மிடம் மிகச் சுவாரசியமாகப் பேசினார்.  அதோடு, ஐ.என்.எசு. விக்ராந்தில் பணியாற்றிய காலகட்டங்களான, 1970-71களில் பாகிசுதானுடன் நடைபெற்ற போரில், அந்நாட்டு நீர் மூழ்கிக் கப்பல் ஒன்று, விசாகப்பட்டினத்திலிருந்த இந்தியாவின் ஒரே விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எசு விக்ராந்தை தகர்க்க வந்தபோது அதை விசாகைக்கு அருகே வைத்து நீரில் மூழ்கடிக்கச் செய்கிறார்கள் என்பதைப் பற்றியும் இந்த ஐ.என்.எசு விக்ராந்த் கப்பலை வாங்குவதற்காக இங்கிலாந்து சென்ற இந்தியக் குழுவில் நரசய்யா அவர்களும் இருந்திருக்கிறார் என்பதும் நமக்கு மிக ஆச்சரியமான ஒரு தகவலாகவே இருக்கிறது. 

            விமானந்தாங்கி கப்பல் குறுகிய ஓடுதளத்தில் போர் விமானங்கள் ஏறி இறங்கும் விதம் பற்றி இவர்  பேசும்போது அதனை நேரில் காண்பது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.  இதுநாள்வரை நான் அறிந்தது திரு. கடலோடி நரசய்யா என்றாலே "கடல்வழி வணிகம்" என்ற நூலை எழுதியவர் என்பது மட்டும் தான். ஆனால் இன்றைக்கு நான் அறிந்தது ஏராளம்.

"வணிகக் கப்பல்கள் அனுபவங்கள்" 
- இரண்டாம் நாள் சிறப்புரை (1/9/2020)"
         "வணிகக் கப்பல்கள் அனுபவங்கள்" என்ற இரண்டாம் நாள் பயிலரங்கில் திரு. விவேக் அவர்கள் நெறியாள்கை செய்ய,  தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுபாஷிணி அவர்கள் நோக்க உரையாற்ற  நிகழ்வானது இனிதே துவங்கியது.

         திரைகடலோடி திரவியம் தேடிய திரு. நரசய்யா அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட பல ஆச்சரியமான கடல் வழிப்பயண அனுபவங்கள்  நிகழ்வில் இணைந்த நமக்கு ஒரு மாபெரும் வியப்பினை ஏற்படுத்தியது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

                  முதல்நாள்  உரையின் தொடர்ச்சியாக,  திரு. நரசய்யா அவர்கள் நம்மிடம் அவரின் கடல் வழிப்பயணம் அனுபவத்தினை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் தாம் வேலை செய்த பிரம்மாண்டமான கப்பல்கள், கடலில் உள்ள சில  குட்டித் தீவுகள்  என பல்வேறு விதமான பரிணாமங்களில் நமது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

          இவற்றில் குறிப்பாக நம் கப்பல் படைக்கு வெளிநாட்டவரைக் கொண்டே பயிற்சிகள் கொடுக்கப்பட்டவை பற்றியும், பயிற்சித்தளமான ஐ.என்.எஸ். சிவாஜி போர்க்கப்பல்கள் பயிற்சி, ஐ.என்.எஸ். விக்ராந்த் என பல்வேறு விதமான தனது பயிற்சி, அனுபவங்களை இன்று அவர் நம்மிடம் பகிர்ந்தார். இப்படி அவர்  நம்மிடம் தனது  கடல் வழிப்பயணம் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டிருக்கும் போது தனது சிந்தனை மொழி ஆங்கிலம் என்பதைத் தெரிவித்தார் . 

          சிந்தனை மொழி ஆங்கிலமாக இருந்தாலும் எழுத்து மொழி நமது தமிழாக இருந்து சிறுகதைகளில் துவங்கிய இவரது எழுத்துக்கள், வரலாறுகள் தாண்டி சங்ககாலம், இடைக்காலம், தற்காலம் என அனைத்து விதமான காலங்களையும் தொட்டுச் சென்றுள்ளது என்பது சற்று வியப்பிற்குரியதாகவே உள்ளது. இதில் மிகவும் வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் அவர்  எழுதிய முதல் கதையே ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் பரிசு பெற்றது தான். இந்த முதல் கதையின் வெற்றியே திரு. நரசய்யா அவர்களுக்கு பல்வேறு விதமான நூல்கள் எழுதுவதற்கு ஒரு ஊக்க ஊற்றாக  இருக்கும் என நான் எண்ணுகிறேன்.

         பெரும்பாலான எழுத்தாளர்களை நாம் பார்த்தோமேயானால் ஏதேனும்  ஒரு காலத்தினை எடுத்துக் கொண்டு அது தொடர்பாகத் தனது ஆய்வினை முன்னெடுத்துச் செல்வார்கள். உதாரணமாகத் தற்காலத்தினை எடுத்துக் கொண்டவர்கள் வரலாற்றுக் காலத்திற்குச் செல்வதில்லை வரலாற்றுக் காலத்தை எடுத்துக் கொண்டவர்கள் தற்காலத்தை நோக்கிச் செல்வதில்லை ஆனால் திரு நரசய்யா அவர்கள் அனைத்து விதமான காலங்கள் பற்றியும் தொடர்ந்து கட்டுரைகளாக எழுதி வருவது மிகவும் போற்றத்தக்க ஒரு விடயமாகவே இருந்து வருகிறது. 

"கடலோடியின்  கம்போடியா நினைவுகள்” 
- மூன்றாம் சிறப்புரை (2/9/2020):
            கம்போடியாவின் நினைவுகள் என்ற மூன்றாம் நாள் நிகழ்வில் திரு. இளஞ்செழியன் அவர்கள் நெறியாள்கை செய்ய, தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர். சுபாஷிணி அவர்கள் நோக்க உரையாற்றினார்.

            உலகவங்கியால் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கம்போடியாவில் டோன்லே சாப் நதியின் ஆழத்தை அதிகரிக்கவும் அதன் போக்கைச் சரி செய்யவும் அனுப்பி வைக்கப்பட்ட திரு. நரசய்யா அவர்களின் கம்போடியா குறித்த இச்சொற்பொழிவு இங்கிருந்து  துவங்கியது.  

            “கம்போடியா நினைவுகள்” எனும் இந்த சொற்பொழிவின் வாயிலாக, திரு. நரசய்யா அவர்கள் பல்வேறுவிதமான வரலாற்றுச் சான்றுகளை நம்முன் விவரித்து இருப்பது அனைவருக்கும்  அந்த இடத்திற்குச்  சென்று பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆவலை ஏற்படுத்தி இருக்கும் என நான் எண்ணுகிறேன்.மேலும்,  இன்னும் ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய பல வரலாற்றுச் சான்றுகள் அங்கு சித்தரிக்கப்பட்டுள்ளதையும் அவர் தெரிவித்தார்.

            இதுதவிர, கம்போடியாவின் வரலாறும் அது சந்தித்த பலவகையான ஆட்சிக் கூறுகளும், கம்போடியா சந்தித்த கலவரங்களும் என திரு. நரசய்யா அவர்கள் கூறிய பல்வேறு விடயங்கள் நம்மை மிகவும் ஆச்சரியத்தில் இருக்க வைத்தது.

"நாம்  மறக்க மாட்டேமால்" 
- நான்காம் நாள் சிறப்புரை (3/9/2020):
            தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக, கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்!  உரைத்தொடரின் நான்காவது நாளில்  " நாம் மறக்க மாட்டேமால்" என்ற தலைப்பின் வாயிலாக உரை  துவங்கியது.  நிகழ்ச்சியைத்  திரு.இளஞ்செழியன் அவர்கள் நெறியாள்கை செய்ய, தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுபாஷிணி அவர்கள் நோக்கவுரையாற்றினார்.

            150 வணிகர்களின் பொருட்களை ஒரே கப்பலில் ஏற்றிச் செல்லும் அளவிற்குக் கப்பல் கட்டினான் நம் சங்கத்தமிழன். இதற்குப் பின்னர் வருகின்ற காலங்களில் குறிப்பாக இடைக்காலத்திலும்,  தற்காலத்திலும் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் சார்ந்த எந்த ஒரு புரிதலும் தேடுதலும் இல்லாது இருந்த நமக்கு, திரு. நரசய்யா அவர்களுடைய இந்த ஐந்து நாள் சிறப்பு உரைத்தொடர்  மூலம்  கப்பற் துறை சார்ந்த ஒரு முழு வடிவத்தினை அறியத் தந்துள்ளதாக நான் நினைக்கிறேன்.

            குறிப்பாக இந்த  உரையில் திரு. நரசய்யா அவர்கள் அண்மைக்காலத்தில் கண்டறியப்பட்டுள்ள, தொல்லியல் சான்றுகள் பலவற்றை உதாரணமாக எடுத்துக் கொண்டு அவற்றைச் சங்க இலக்கியத்துடன் ஒப்பிட்டு அவர்  கூறிய விடயங்கள் அனைத்தும் கடல்வழி வணிகம் குறித்த கூடுதல் வெளிச்சத்தினை நம்மிடம் ஏற்படுத்தியது. மேலும் சங்ககாலத்தில் உள்நாட்டு நுகர்வுக்கு என்றும், ஏற்றுமதிக்கு என்றும், பெரிய அளவில் பொருளுற்பத்திகள்  நடைபெற்றது என்பதைப் பல்வேறுவிதமான சான்றாதாரங்களுடன் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளார் திரு. நரசய்யா அவர்கள்.

            அதோடு பொருளுற்பத்திக்கு அடிப்படையான தொழில்நுட்ப அறிவு சங்ககாலத்தில் மேலோங்கியிருந்தது என்பதை நிரூபிப்பதற்காகப் பானை ஓடுகளை எடுத்துக்கொண்டு அதன்மூலம் தனது வாதத்தினை முன்வைக்கிறார் திரு. நரசய்யா அவர்கள்.  மேலும் கொற்கை, முசிறி போன்ற பல்வேறுவித துறைமுகங்களின் வாயிலாகச் சங்ககாலத்தில் பெரிய அளவிலான வாணிகம் எவ்விதம் நடைபெற்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"படைப்புகள்"  
- ஐந்தாம் நாள் சிறப்புரை (4/9/2020):
            ஐந்தாவது சொற்பொழிவு நாளில்  திரு. விவேக் அவர்கள் நெறியாள்கை செய்ய, தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுபாஷினி அவர்கள் நோக்கவுரையாற்றினார். கடலோடி நரசய்யாவின் நீண்டகால கடற்பயணங்கள், சந்தித்த நிகழ்வுகள், பணியில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள், சென்ற நாடுகள், உலக வங்கித் திட்டங்களில் அவரது பங்களிப்பு, அவரது இலக்கிய மற்றும் வரலாற்றுப் படைப்புகள் என ஏராளமான செய்திகளைக் கடந்த ஐந்து நாட்களாகத் தமிழ் மரபு அறக்கட்டளையில் நடைபெற்ற திரு. நரசய்யா அவர்களின் சொற்பொழிவின் மூலமாக நாம் அறியும் வாய்ப்பு கிட்டியது. 

            கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்! என்ற  சிறப்பு உரைத்தொடரின் ஐந்தாம் நாளன்று திரு நரசய்யா அவர்களின் "படைப்புகள்" எனும் தலைப்பில் சொற்பொழிவு அமைந்தது. அவர் முதலில் எழுதிய 'கடலோடி' எனும் புத்தகத்திலிருந்து,   சிறுகதைகள் (1997), தீர்க்க ரேகைகள் (2003), சொல்லொணாப்பேறு (2004), கடல்வழி வணிகம் (2005), மதராசபட்டினம் (2006), துறைமுக வெற்றிச் சாதனை (2007), ஆலவாய் (2009), கடலோடியின் கம்போடியா நினைவுகள் (2009), செம்புலப் பெயனீர் (2011) என்று மேலும் பல நூல்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

            இவை  தவிர வரலாறு, தன்வரலாறு, ஆய்வுநூல்கள், சிறுகதைகள் என்று பல இலக்கிய வகைப் பிரிவிலும் தனது இலக்கியப் பங்களிப்பிற்காகத் தமிழக அரசின் விருதுகளும் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய நான்கு நூல்களுக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது. மிகவும் போற்றத்தக்க ஒரு விடயமாகும்.  நூல்கள் தவிர்த்து இன்றுவரை தனது 80வயதுகளிலும், பற்பல சிறுகதைகளும், நூல் மதிப்புரைக் கட்டுரைகள் எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆனந்தவிகடன், சுதேசமித்திரன், இந்து நாளிதழ் என்று பல இதழ்களில் எழுதி அவரது இலக்கிய வாழ்வைத் தொடர்வது நரசய்யா என்ற எழுத்தாளரின் சிறப்பு.

            ஐந்துநாட்களும் பல்வேறுவிதமான அரிய தகவல்களை வழங்கிய திரு நரசய்யா அவர்களுக்கு நன்றி.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
இணையவழி உரைத்தொடர்  நிகழ்ச்சி
கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்!
சிறப்புரை  உரைத்தொடர் (31/8/2020 - 4/9/2020)
யூடியூப்  காணொளிகளாக @ https://www.youtube.com/Thfi-Channel

1. கடற்படை அனுபவங்கள்  - கடலோடி நரசய்யா

2. வணிகக் கப்பல்கள் அனுபவங்கள்

3. கடலோடியின் கம்போடியா நினைவுகள்

4. நாம் மறக்க மாட்டேமால்

5. படைப்புகள்


-----



குடும்பத் தலைவன்

குடும்பத் தலைவன்

 --  கவிஞர் அமீர்
___________________________________


ஆழிப்பேரலை போல்
அழிவுப்பேரலையில் இந்திய நாடு...
இதில்
தப்பிப்பிழைக்குமா
என்னுடைய வீடு...

பற்றிக்கொண்டு எரிகிறது
பாரதம் எனும் காடு...
என் பட்டாம் பூச்சிகளைப்
பாதுகாக்குமா என் சிறியகூடு...

யாரும் பார்க்க முடியா
சிம்மாசனத்தில் 
அழிச்சாட்டிய அரசனாய்
கொரோனா...
அதை எதிர்த்து
என் குடும்பத்தை நான் பத்திரமாய்
சேர்ப்பேனா?

தூண்கள் உடைந்து
துகள்களாகுவது போல்
இதயம்
தூள் தூளாகிறது
தினம் புதையும் உயிர்ப்பலி செய்தியால்...

அங்கொன்று
இங்கொன்று என்பதெல்லாம் போய்
எங்கெங்கும் என்றென்றும் 
என்றானது
இன்றைய நாட்கள்...

சுத்தம் சுகம் தரும்
ஊட்டம் எதிர்த்து நிற்கும்!
தொற்றை வெல்ல...
என் குடும்பத்தைக்  காக்க...
தோட்டத்துக்கோர் வேலியைப்போல்
அரணாக நான்!!!

-அமீர்-

Saturday, August 29, 2020

எகிப்தில் கிடைத்திருக்கும் இந்தியக் குரங்கின் எலும்புக்கூடு

எகிப்தில் கிடைத்திருக்கும் இந்தியக் குரங்கின் எலும்புக்கூடு

 - முனைவர்.க.சுபாஷிணி

அண்மைய கால உலகளாவிய அகழ்வாய்வுகளில் சுவாரஸ்யமான ஒரு தகவல் பற்றி அண்மையில் வாசித்தேன். செங்கடல் பகுதியில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மிகப் பிரசித்தி பெற்ற ஒரு துறைமுக நகரமாக இன்றைய எகிப்து நாட்டில் இருக்கின்ற பெரனிஸ் என்ற துறைமுகப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு இது.

தூங்கிக் கொண்டிருக்கின்ற குழந்தையைப் போல உடல் வைக்கப்பட்டு ஒரு இறந்த குரங்கின் உடல் புதைக்கப்பட்டிருக்கின்றது.


இந்தக் குரங்கின் எலும்புக்கூடு, இது ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும்,இது இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட குரங்கு ஒன்றின் எலும்புக்கூடு என்றும் அகழ்வாராய்ச்சி குறிப்பிடுகின்றது. இந்த எலும்புக்கூடு எகிப்தின் பண்டைய பெரனிஸ் துறைமுக நகரில் விலங்குகள் மயான பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3D scan வகை ஆய்வின் வழி இது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட குரங்கு என்பதைப் போலந்து அறிவியல் கழகத்தின் ஆய்வாளர் மார்த்தா அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதுவரை ஆப்பிரிக்கப் பகுதிகளில் இந்திய வகை குரங்குகள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்படவில்லை என்றும் இதுவே முதல் கண்டுபிடிப்பு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பண்டைய இந்தியாவிலிருந்து கடல்வழிப் பயணத்தில் தொடர்ச்சியாகப் பல வாரங்கள் கப்பலில் கொண்டுவரப்பட்டு, செங்கடல் பகுதியில் இளம் வயதிலேயே இந்தக் குரங்கு இறந்திருக்க வேண்டும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்தக் குரங்கு இறந்து போனதற்குக் காரணம் அதன் உணவு வகை மாற்றமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகின்றனர். இந்தக் குரங்கு படுத்துக்கொண்டிருக்கும் வகையில் இதனைப் புதைத்திருக்கின்றார்கள். அதன்மேல் துணி போன்ற கம்பளி மூடப்பட்டுள்ளதும் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அருகாமையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கிடைக்கின்ற சிப்பிகள், எம்ஃபோரா பானைகளின் உடைந்த சில்லுகள், மூன்று பூனைகளின் எலும்புக்கூடுகள் ஆகியனவும் கிடைத்துள்ளன.

பண்டைய ரோமானியர்களும், எகிப்தியர்களும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குரங்குகளை வீட்டு விலங்குகளாக வைத்திருக்கும் பழக்கம் இருந்திருக்கலாம் என்றும், அதற்காக குரங்குகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர் மார்த்தா கூறுகிறார்.விலங்குகளுக்கான மயானத்தில் இந்த குரங்கின் எலும்புக் கூடு புதைக்கப்பட்டுள்ளது என்று அறியும் போது இந்தப் பகுதியில் பண்டைய எகிப்தியப் பண்பாட்டில் ஈமக்கிரியை என்பது முக்கிய பங்கு வகிப்பதையும் மம்மிகள் உருவாக்கம், பிரமிடுகள் கட்டுமானம் என்ற சிந்தனையின் தொடர்ச்சியாக விலங்குகளுக்கும் தனிப்பட்ட மயானம் இருந்தது பற்றியும், அவை புதைக்கப்படும் போது அவற்றோடு மேலும் சில பொருட்களும் உடன் வைக்கப்பட்டுப் புதைக்கப்பட்ட செய்தியும் அறியக்கூடியதாக இருக்கின்றது.

இந்தியாவிற்கும் ரோமானியப்  பேரரசுக்கும் இடையிலான நீண்டகால வணிகமுயற்சிகள் மற்றும் அதன் பொருட்டு நிகழ்ந்த கடல்வழி பயணங்கள் ஆய்வாளர்களுக்கு மேலும் மேலும் பல புதிய செய்திகளை வழங்கிக் கொண்டே இருக்கின்றன. வரலாற்று ஆய்வில் அகழாய்வுகளுக்கான அதிகப்படியான கவனம் கடற்கரையோர நகரப் பகுதிகளில் நிகழ்த்தப்பட வேண்டியது அவசியம் என்பதை இத்தகைய கண்டுபிடிப்புகள் நமக்கு உறுதி செய்கின்றன.


Reference:
https://www.thefirstnews.com/article/remains-of-2000-year-old-monkeys-buried-like-sleeping-children-reveal-romans-and-ancient-egyptians-imported-them-from-india-as-household-pets-15142

வணிகமும் தமிழும்

வணிகமும் தமிழும்

முனைவர்.ப.பாண்டியராஜா


வணிகமும் தமிழும் - 1:
ஒரு பெட்டிக்கடையை எடுத்துக்கொள்வோம். அதில் சில நூறு பொருள்கள் இருக்கும். ஒருவர் கடையின் முன்பகுதியில் அமர்ந்துகொண்டு விற்பனை செய்துகொண்டிருப்பார், எந்தெந்தப் பொருள்கள் மிக அதிகமாக விற்பனை ஆகின்றனவோ, அவற்றைக் கைக்கு எட்டிய தூரத்தில் வைத்திருப்பார். எப்போதாவது விற்பனையாகும் பொருள்களைச் சற்றுத் தள்ளியோ, உயரமான இடத்திலோ வைத்திருப்பார். அவரைப் பொருத்தமட்டில் மிக அதிகமாக விற்பனையாகும் பொருள்களே மிக மதிப்பு வாய்ந்தவை. அவற்றில்  தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்.

இப்பொழுது ஒரு பெரிய விற்பனை நிலையத்தை (departmental store) எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு ஆயிரக்கணக்கான பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எனினும் எந்தெந்தப் பொருள்கள் அதிகமாக விற்பனை ஆகின்றனவோ அவற்றை மக்கள் எளிதில் எடுத்துக்கொள்ளும் வண்ணம் வைத்திருப்பார். எனவே ஒரு கடைக்காரருக்கு எந்தெந்தப் பொருள்கள் மிக அதிகமாக விற்பனை ஆகின்றன என்று தெரிந்துகொள்வதில் மிகவும் அக்கறை இருக்கும். ஒரு பொருள் விலை குறைந்ததாக இருந்தாலும் மிக அதிகமாக விற்பனையானால் அது வைக்கப்படும் இடத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அது மதிப்பு மிக்கதாகக் கருதப்படும். மிகவும் அதிகமான விலையுள்ள பொருளாக இருந்தாலும், அதிகம் விற்பனை ஆகாவிட்டால் அது பின்னுக்குத் தள்ளப்படும். அதற்கு அதிக மதிப்பு இல்லை. எனவே கடைக்காரரைப் பொருத்தவரையில் ஒரு பொருளின் மதிப்பு என்பது அதன் விலை மட்டுமல்ல, அது விற்பனையாகும் எண்ணிக்கையையும் பொருத்தது. இங்கே மதிப்பு என்பதை value என்கிறோம். விலை என்பதை Price என்கிறோம். எண்ணிக்கை என்பதை frequency என்கிறோம். இங்கு value = Price x frequency. காட்டாக, 500 ரூபாய் விலையுள்ள பொருள் 200 எண்ணிக்கை விற்றால், அதன் மதிப்பு 500 x 200 = 100000. ஆனால் 50 ரூபாய் விலையுள்ள பொருள் 2500 எண்ணிக்கை விற்றால், அதன் மதிப்பு 50 x 2500 = 125000. எனவே 50 ரூபாய்ப் பொருள் அதிக மதிப்புள்ளதாகக் கருதப்படும். 

ஒரு மிகப் பெரிய கடைக்காரருக்குத் தன் கடையில் எந்தெந்தப் பொருள்கள் மிக அதிகமாக விற்பனை ஆகின்றன, எவையெவை விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன என்று அறிந்துகொள்வதில் மிகுந்த நாட்டம் இருக்கும். இதற்குக் கணிதம் ஒரு வழி செய்திருக்கிறது. 
ஆமாம்,  இதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? பொறுத்திருங்கள். அடுத்துச் சொல்கிறேன்.


வணிகமும் தமிழும் - 2:
ABC பகுப்பாய்வு - ABC Analysis
சென்ற பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடியில் உள்ள ஆயிரக்கணக்கான பொருள்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்பான செய்திகளைப் பார்த்தோம். ஒவ்வொரு பொருளுக்கும் அதன் விலை (Price), விற்பனையாகும் எண்ணிக்கை (frequency) ஆகியவற்றைப் பொருத்து அதன் மதிப்பு (value) கணக்கிடப்படும் என்று பார்த்தோம். அதாவது ஒரு பொருளின் மதிப்பு என்பது அதன் விலை, அது விற்பனையாகும் எண்ணிக்கை ஆகியவற்றின் பெருக்குத்தொகை என்று கண்டோம். 
அதாவது value = Price x frequency.

விலை குறைந்த பொருள்கூட அதிகமாக விற்பனை ஆனால், உரிமையாளர் அதன் மீது மிக்க கவனம் செலுத்துவார் இல்லையா? அந்தப் பொருளை எங்கே வைக்கவேண்டும், எவ்வளவு வைக்கவேண்டும், தேவையான இருப்பு கைவசம் உள்ளதா என்பதில் அவர் மிக்க கவனம் செலுத்துவார். அத்தகைய பொருள்கள் A வகைப் பொருள்கள் எனப்படும். அவற்றை அடுத்து, ஓரளவு கண்காணிப்பில் இருக்கவேண்டிய பொருள்கள் B வகைப் பொருள்கள் ஆகும். ஏதோ இருக்கட்டும் என்று வைத்துக்கொள்ள வேண்டிய பொருள்கள் C வகைப் பொருள்கள் ஆகும். 

ஒருவர் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களைத் தன் கடையில் வைத்திருந்தால், சுமார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் A வகைப் பொருள்கள் என்றும், சுமார் 15 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் B வகைப் பொருள்கள் என்றும், மீதமுள்ள 5 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் C வகைப் பொருள்கள் என்றும் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, ஒரு கடையில் உள்ள பொருள்களின் மொத்த மதிப்பில் சுமார் 80 விழுக்காடு பொருள்கள் A வகைப் பொருள்கள் என்றும், சுமார் 15 விழுக்காடு பொருள்கள் B வகைப் பொருள்கள் என்றும், மீதமுள்ள 5 விழுக்காடு பொருள்கள் C வகைப் பொருள்கள் என்றும் எடுத்துக்கொள்ளப்படும். இவற்றில் A வகைப் பொருள்கள் மீது கடைக்காரர் தனிக்கவனம் செலுத்துவார். இந்த வகையாகப் பகுப்பதற்காகச் செய்யப்படும் ஆய்வே ABC Analysis எனப்படும். ஒருவரின் ஆய்வுநிலைக்கு ஏற்ப இந்த விகிதங்கள் வெவ்வேறு விதமாகக் கொள்ளப்படும்.

செய்முறை: 
1. ஒவ்வொரு பொருளின் மதிப்பும் கணக்கிடப்படவேண்டும். ஒரு பொருளின் விலை, ஒரு மாதத்தில் அல்லது வருடத்தில் விற்பனை ஆகும் எண்ணிக்கை ஆகியவற்றைப் பெருக்க அந்தப் பொருளின் மதிப்பு கிடைக்கும். value = Price x frequency.
2. பின் அவற்றின் மதிப்பின் இறங்கு வரிசையில் அடுக்கவேண்டும். அதாவது, மிக அதிகமான மதிப்புள்ள பொருள் மேலே முதலில் வரவேண்டும். அதற்குக் கீழே அடுத்த மதிப்புள்ள பொருள் வரவேண்டும். இப்படியாகக் கடைசிவரை எடுக்கவேண்டும். கடைசியில் இருப்பது மிக மிகக் குறைந்த மதிப்புள்ள பொருள்.
3 பின்னர் இந்த எண்களுக்குரிய கூட்டு மதிப்பு (cumulative value) கணக்கிடப்படுகிறது. முதலாவது பொருளுக்குரிய கூட்டு மதிப்பு அதுவேதான். அடுத்த பொருளுக்குரிய கூட்டு மதிப்பு முதல் இரண்டு மதிப்புகளுக்குரிய கூட்டுத்தொகை ஆகும். மூன்றாம் பொருளுக்குரிய கூட்டு மதிப்பு முதல் மூன்று பொருள்களுக்குரிய மதிப்புகளின் கூட்டுத்தொகை ஆகும். இவ்வாறாக ஒவ்வொரு பொருளுக்கும் உரிய கூட்டு மதிப்பு கணக்கிடப்படுகிறது. 
4. பின்பு இவை விழுக்காடாக மாற்றப்படுகின்றன.

இவற்றில் 80% வரை உள்ள பொருள்கள் A வகைப் பொருள்கள் ஆகும். 
95% வரை உள்ள பொருள்கள் B வகை பொருள்கள் ஆகும். 
மீதமுள்ளவை C வகைப் பொருள்கள்.
கீழே ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

1.பொருள்  விலை எண்ணிக்கை
 1. 46.00 200
 2. 40.00    10
 3. 5.00        6680
 4. 81.00 100
 5. 22.00   50
 6. 6.00         100
 7. 176.00 250
 8. 6.00         150
 9. 10.00    10
 10. 4.00            50

2.பொருள் விலை   எண்ணிக்கை   மதிப்பு (விலை x எண்ணிக்கை)
 1 46.00 200 9200.00
 2 40.00   10 400.00
 3 5.00       6680 33400.00
 4 81.00 100 8100.00
 5 22.00   50 1100.00
 6 6.00         100 600.00
 7 176.00 250 44000.00
 8 6.00         150 900.00
 9 10.00   10 100.00
 10 14.00   50 700.00
 மொத்தம் 98500.00

3.பொருள் விலை   எண்ணிக்கை மதிப்பு (இறங்கு வரிசையில்) 
 7 176.00 250 44000.00
 3 5.00        6680 33400.00 
 1 46.00 200 9200.00 
 4 81.00 100 8100.00 
 5 22.00   50 1100.00 
 8 6.00          150 900.00 
 10 14.00    50 700.00 
 6 6.00          100 600.00 
 2 40.00    10 400.00 
 9 10.00    10 100.00 
            மொத்தம்    98500.00

4.பொருள் விலை   எண்ணிக்கை மதிப்பு   கூட்டுமதிப்பு (cumulative value)
 7 176.00 250 44000.00  44000.00 
 3 5.00       6680 33400.00  77400.00 
 1 46.00 200 9200.00          86600.00 
 4 81.00 100 8100.00          94700.00 
 5 22.00 50 1100.00          95800.00 
 8 6.00        150 900.00          96700.00 
 10 14.00   50 700.00          97400.00 
 6 6.00         100 600.00          98000.00 
 2 40.00    10 400.00           98400.00 
 9 10.00    10 100.00           98500.00
            மொத்தம் 98500.00

5.பொருள் விலை   எண்ணிக்கை மதிப்பு   கூட்டுமதிப்பு    விழுக்காடு தரம்
 7 176.00 250 44000.00 44000.00  44.67   A
 3 5.00       6680 33400.00 77400.00  78.58  A
 1 46.00 200 9200.00  86600.00  87.92   B
 4 81.00 100 8100.00  94700.00  96.14   B
 5 22.00 50 1100.00  95800.00  97.26   C
 8 6.00         150 900.00  96700.00  98.17   C
 10 14.00 50 700.00  97400.00  98.88   C
 6 6.00        100 600.00  98000.00  99.49   C
 2 40.00 10 400.00  98400.00  99.90   C
 9 10.00 10 100.00  98500.00        100.00   C
            மொத்தம் 98500.00   100.00

அதாவது மொத்த மதிப்பான 98500.00 என்பதை 100 எனக் கொண்டால் ஏனையவற்றின் மதிப்பு மொத்த மதிப்பின் விழுக்காடாகக் கிடைக்கும். நாம் A-வகுப்பு பொருள்கள் 80% எனக் கொண்டுள்ளதால், விழுக்காடு 78.58 வரையிலான பொருள்களான முதல் இரண்டு பொருள்கள் A வகையைச் சேர்ந்தவை. மிக முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டியவை. அடுத்து, 95% வரையிலான பொருள்கள் B வகையைச் சேர்ந்தவை. எனவே, கூட்டு மதிப்பில் 87.92, 96.14 என்ற விழுக்காடுகளைக் கொண்ட 1, 4 ஆகிய பொருள்கள் B வகையைச் சேர்ந்தவை. இவை அடுத்த அளவு முக்கியத்துவம் பெறுகின்றன. மீதமுள்ள 5, 8, 10, 6, 2, 9 ஆகியவை C வகையைச் சேர்ந்தவை. பொருள் 3 விலை மிகக் குறைவாக இருந்தாலும், தேவை மிக அதிகமாக இருப்பதால், கடைக்காரரைப் பொருத்தமட்டில் மிக மிக முக்கியமான பொருள் ஆகிறது
அட்டவணை 6.(படம் பார்க்க)



இங்கே பாருங்கள், பொருள் 7, பொருள் 3 ஆகியவைதான் மிக அதிகமாக விற்பனை ஆகின்றன. பொருள்கள் 5,8,10,6,2,9 ஆகியவை எப்போதாவது விற்பனை ஆகின்றன. எனவே மிகக் குறைந்த அளவுப் பொருள்களே அதிகமாக விற்பனை ஆகின்றன. மிக அதிக எண்ணிக்கையிலான பொருள்கள் எப்போதாவது விற்பனையாகின்றன. எனவே உரிமையாளர் தன் விற்பனைத் திறத்தை மேம்படுத்தவேண்டும். இங்கு 10 பொருள்களே எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆயிரக்கணக்கான பொருள்கள் இருந்தால் இம்முறையின் சிறப்பு எளிதில் புரியும். அதிலும் கணினியின் பங்கு இங்கு அபாரமானது. விற்பனையையும், விலையையும் கொடுத்தால் அனைத்தையும் நொடியில் கணினி கணக்கிட்டு முடித்துவிடும்.

மீண்டும் நினைவில் கொள்வோம்: A பகுதியில் எத்தனைக்கெத்தனை பொருள்கள் அதிகமாக இருக்கின்றனவோ, C பகுதியில் எத்தனைக்கெத்தனை பொருள்கள் குறைவாக இருக்கின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு உரிமையாளர் மகிழ்ந்துகொள்ளலாம். 
இதனை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் இதற்கு நேர் எதிரிடையான சூழலை இலக்கியத்தில் பார்க்கப்போகிறோம்.
இலக்கிய ஆய்வில் இதன் முக்கியத்துவத்தை அடுத்துக் காண்போம். 

இந்த ABC பகுப்பாய்வைச் சங்க இலக்கியங்களுக்குப் புகுத்திப்பார்க்கலாம். 
அதற்கு முன் சங்க இலக்கியத்தைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் - அறிமுகம் இல்லாதவர்க்கு - அடுத்த கட்டுரை


வணிகமும் தமிழும் - 3:
இந்தத் தலைப்பிலான முதல் இரண்டு கட்டுரைகளில் ABC பகுப்பாய்வு (ABC Analysis) என்றால் என்ன என்று பார்த்தோம். இப்போது அதனை எவ்வாறு இலக்கியத்துக்குப் பொருத்துவது எனக் காண்போம். 
இந்த ABC பகுப்பாய்வினைச் சங்க இலக்கியத்திற்குப் பொருத்திப் பார்க்கப்போகிறோம். 
எனவே முதலில் சங்க இலக்கியம் என்றால் என்ன என்பதற்கு ஒரு சுருக்கமான முன்னுரை தரப்போகிறேன். 
இது சங்க இலக்கியம்பற்றித் தெரியாதவர்களுக்கு மட்டுமே. 
அடுத்த கட்டுரையில் அதனை ABC பகுப்பாய்வு செய்வோம்.

சங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்:
தமிழ்மொழி ஒரு செம்மொழி என்பதை இன்றைக்கு உலகம் ஒப்புக்கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம் தமிழ்மொழியிலுள்ள சங்க இலக்கிய நூல்களே ஆகும். இந்த நூல்கள் அனைத்தும் செய்யுள்கள் அல்லது செய்யுள்களின் தொகுப்புகளாகும். இந்த நூல்களிலுள்ள மொத்தச் செய்யுள்களின் எண்ணிக்கை 2381 ஆகும். இவற்றைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 473 ஆகும். இந்தப் புலவர்களில் வணிகர், குயவர் போன்ற பலவகையான தொழில்களைச் செய்வோர் உண்டு. நாடாளும் மன்னர்களும் பல பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களில் பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 30-க்கும் அதிகமாகும். இந்தச் சங்க நூல்களின் பெரும்பாலானவை கி.மு 300-க்கும் கி.பி.200 -க்கும் இடைப்பட்ட பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் பாடப்பட்டவை.

சங்கம் என்ற சொல்லுக்கு அவை அல்லது சபை என்று பொருள். தமிழ் அறிஞர்களின் சபை தமிழ்ச்சங்கம் எனப்பட்டது. தமிழ் இலக்கிய ஆய்வும் செய்யுள் இயற்றுதலும், வேறு புலவர்களால் இயற்றப்பட்ட பாடல்களைத் தொகுப்பதுவும் இதன் பணி. இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் சங்க நூல்கள் கடைச் சங்க நூல்கள் எனப்படும். இதற்கு முன்னர் முதற்சங்கம், இடைச் சங்கம் என்ற இரண்டு சங்கங்கள் இருந்ததாகவும், அவற்றில் தொகுக்கப்பட்ட நூல்கள் கடற்கோளால் அழிக்கப்பட்டன என்றும் மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. அவற்றுள் முதற்சங்கம் என்பது தென்மதுரையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்திலும் இருந்தன என்றும் அறிகிறோம். மூன்றாம் சங்கமான கடைச்சங்கம் இன்றைய மதுரையிலிருந்தது. இந்தச் சங்கங்களை உருவாக்கி, ஆதரித்து, வளர்த்தவர்கள் பாண்டிய மன்னர்கள்.

இந்தச் சங்கப்பாடல்களுள் நெடும்பாடலாக இருக்கும் பத்துப் பாடல்களைத் தொகுத்து அதனைப் பத்துப்பாட்டு என்று பெயரிட்டனர். அவை, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை என்பன. இவற்றுள் திருமுருகாற்றுப்படை காலத்தால் மிகவும் பிற்பட்டது என்பர் ஆய்வாளர். இவற்றுள் மிகச் சிறியது 103 அடிகளைக் கொண்ட முல்லைப்பாட்டு என்ற பாடலாகும். மிகப்பெரியது 782 அடிகளைக் கொண்ட மதுரைக்காஞ்சி என்ற பாடல். 

அடுத்து நூற்றுக்கணக்கான குறும்பாடல்களைப் பல்வேறு தலைப்புகளில் பிரித்து அவற்றை எட்டுத்தொகுதிகளாக ஆக்கினர். இவை எட்டுத்தொகை நூல்கள் எனப்படும். அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன. இவற்றுள் பரிபாடலும், கலித்தொகையும் காலத்தால் மிகவும் பிற்பட்டவை என்பர்.

இந்தச் சங்க நூல்கள் எதைப்பற்றிப் பாடுகின்றன? மிகப்பெரும்பாலும் அவை மனித வாழ்வின் பல்வேறு நிலைகளைப் பற்றிப் பாடுகின்றன. அதிலும் பெரும்பாலான பாடல்கள் காதல்வயப்பட்ட ஆண்/பெண்ணின் அக உணர்வுகளை மிக அழகாக எடுத்தியம்புகின்றன. அவற்றின் மூலம் பண்டைத் தமிழரின் அன்றாட வாழ்க்கைமுறைகளை அழகிய சொல்லோவியங்களாய்ப் படம்பிடித்துக் காட்டுகின்றன.  புறநானூறு என்ற ஒரு நூல் மன்னர்களைப் பற்றியும் அவர்களிடையே நடந்த போர்களைப்,பற்றியும்,  வள்ளல்களைப் பற்றியும், பெருமையுடன் விவரிக்கிறது. ஆங்காங்கே மனித வாழ்வின் ஆழ்ந்த தத்துவங்களையும் சொல்லிப்போகிறது. 
யாதும் ஊரே, யாவரும் கேளிர் (Every city is my city, Every person is my relative)
என்ற உலகம் வியந்து பாராட்டும் ஒற்றை வரி இந்தப் புறநானூற்றில் உண்டு. 

சங்க இலக்கியங்கள் சொற்செறிவு மிக்கவை. குறைந்த அளவு சொற்களில் மிகுந்த பொருளைத் தரக்கூடியனவாய்த் திகழ்கின்றன. பொதுவாக இயற்கையை ஒட்டிய விவரணங்களே சங்க இலக்கியத்தில் உண்டு. புனைவுச் செய்திகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. உவமைகளைக் கையாளுவதில் சங்கப் புலவர்கள் பெரும் திறன் வாய்ந்தவர்கள். ஒரு பறவையைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அதன் மூக்கு, சிறகு, கால்கள், கால்நகங்கள் என நுணுக்கமான வர்ணனைகளைக் கொடுப்பதில் வல்லவர்கள். 

சங்க இலக்கியங்களில் மதக் கோட்பாடுகள் குறிப்பிடப்படவில்லை. இவற்றில் மிகவும் பிற்பட்ட காலற்றவை என்று கருதப்படும் திருமுருகாற்றுப்படை, பரிபாடல், கலித்தொகை ஆகிய நூல்களில் பல இந்து மதக் கடவுளர்களும், புராணச் செய்திகளும் அதிகமாகக் காணப்பட்டாலும், சங்க இலக்கியங்கள் மிகப்பெரும்பாலும் மதச்சார்பற்றவை - non-religious - என்றே கூறலாம். 

பொதுவாக, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம், மத நம்பிக்கைகள், கலாச்சாரம், வாழ்வியல்நெறிகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைக் காண உதவும் பலகணி அல்லது ஜன்னல் என்று சங்க இலக்கியங்களைக் குறிப்பிடலாம்.

A.K.Ramanujan என்ற ஆய்வாளர் கூறுவார், “These poems are not just the earliest evidence of Tamil genius. The Tamils in all their 2000 years of literary effort wrote nothing better".


வணிகமும் தமிழும் - 4:
சென்ற பகுதிகளில் ஒரு பல்பொருள் அங்காடியில் உள்ள ஆயிரக்கணக்கான பொருள்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்பான செய்திகளைப் பார்த்தோம். ஒவ்வொரு பொருளுக்கும் அதன் விலை (Price), விற்பனையாகும் எண்ணிக்கை (frequency) ஆகியவற்றைப் பொருத்து அதன் மதிப்பு (value) கணக்கிடப்படும் என்று பார்த்தோம். அதாவது ஒரு பொருளின் மதிப்பு என்பது அதன் விலை, அது விற்பனையாகும் எண்ணிக்கை ஆகியவற்றின் பெருக்குத்தொகை என்று கண்டோம். 
அதாவது value = Price x frequency.

இதன் அடிப்படையில் ஓர் அங்காடியில் உள்ள பொருள்களை எவ்வாறு A வகைப் பொருள்கள் என்றும் B வகைப் பொருள்கள் என்றும் C வகைப் பொருள்கள் என்றும் பிரிக்கலாம் என்பதனை ஓர் எடுத்துக்காட்டுடன் கண்டோம். இப்போது இந்தப் பகுப்பாய்வை எவ்வாறு இலக்கியத்திற்குப் பயன்படுத்தலாம் என்று காண்போம். இந்த ஆய்வுக்குச் சங்க இலக்கியங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 

ABC பகுப்பாய்வு - இலக்கியத்தில் பயன்பாடு:
இலக்கிய ஆய்வுக்கு இந்த ABC பகுப்பாய்வு எந்தவகையில் பயன்படுகிறது என்பதைக் காண்போம்.

இதற்கு எடுத்துக்காட்டாக, சங்க இலக்கியங்கள் அனைத்தையும் மொத்தமாக எடுத்துக் கொள்வோம். சங்க இலக்கியங்களில் மொத்தம் 172902 சொற்கள் இருக்கின்றன. சொற்களைப் பிரிக்கும் முறையைப் பொருத்து இந்த எண்ணிக்கை ஓரளவு மாறலாம். இவற்றில் பல ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வரலாம். இந்தச் சொற்களைப் பிரித்து அவற்றை அகரவரிசையில் அடுக்கி, அவற்றில் தனிச்சொற்களை மட்டும் அவற்றின் எண்ணிக்கையுடன் கணக்கிடவேண்டும். நமது கணக்கீட்டில் சங்க இலக்கியங்களில் 25078 தனிச் சொற்கள் இருக்கின்றன. இவைதான் நமது ‘பண்டகசாலையிலுள்ள' பொருள்கள். இவற்றில் விலையுயர்ந்தவை, விலை குறைந்தவை என்ற பாகுபாடு கிடையாது. எனவே எல்லாச் சொற்களின் விலையையும் 1 என எடுத்துக்கொள்ளலாம். எனவே, இந்தச் சொற்கள் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற எண்ணிக்கைதான்(frequency) இவற்றின் மதிப்பும் ஆகிறது. 


இந்த மதிப்புகளின் இறங்கு வரிசையில் இந்தச் சொற்களையும் அவற்றின் எண்களையும் எழுதுகிறோம். பின்பு இந்த மதிப்புகளின் கூட்டு மதிப்பையும் காண்கிறோம். பின்னர் அவற்றின் விழுக்காடுகளையும் காண்கிறோம். 

இந்த 25,000 க்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்ட நீண்ட அட்டவணையில் முதல் 20 சொற்கள் இவைதான்.
1. 1248 (0.70%)( 0.70%) - என
2. 1004 (0.56%)( 1.26%) - அன்ன
3. 951 (0.53%)( 1.80%) - நின்
4. 740 (0.42%)( 2.21%) - கண்
5. 733 (0.41%)( 2.63%) - பெரும்
6. 683 (0.38%)( 3.01%) - என்
7. 644 (0.36%)( 3.37%) - நீர்
8. 629 (0.35%)( 3.72%) - அம்
9. 608 (0.34%)( 4.07%) - பல்
10. 568 (0.32%)( 4.38%) - இரும்
11. 540 (0.30%)( 4.69%) - பூ
12. 526 (0.30%)( 4.98%) - மா
13. 511 (0.29%)( 5.27%) - நீ
14. 506 (0.28%)( 5.55%) - இல்
15. 497 (0.28%)( 5.83%) - வாய்
16. 494 (0.28%)( 6.11%) - தோழி
17. 494 (0.28%)( 6.39%) - போல
18. 486 (0.27%)( 6.66%) - கால்
19. 484 (0.27%)( 6.93%) - உடை
20. 460 (0.26%)( 7.19%) - தலை

அதாவது, சங்க இலக்கியங்களில் ’என’ என்ற சொல் 1248 முறை வருகிறது. இதுதான் சங்க இலக்கியங்களில் மிக அதிக எண்ணிக்கையில் வருகின்ற சொல். மொத்தத்தில் இதன் விழுக்காடு 0.70% அடுத்துள்ள எண் விழுக்காடுகளின் கூட்டு மதிப்பு (Cumulative value). அது கூடிக்கொண்டே வருவதைக் காணலாம். இந்த நீண்ட அட்டவணையில் இறங்கிக்கொண்டே சென்றால் 6 முறை வருகின்ற சொற்களின் இறுதியில் கிடைக்கும் கூட்டு மதிப்பு 81.01% . இந்தச் சொல்லின் வரிசை எண் 4526. எனவே இந்தச் சொல்லுக்கு முன்னர் இருக்கும் 4500க்கு மேற்பட்ட சொற்கள் எல்லாம் A வகைச் சொற்கள் ஆகின்றன. மொத்தத்தில் இது 18%. இந்தப் பதினெட்டு விழுக்காடு சொற்கள்தான் சங்க இலக்கியங்களில் எண்பது விழுக்காட்டளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே மிகக் குறைந்த அளவிலான சொற்களே சங்க இலக்கியங்களில் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது சங்க இலக்கியங்களின் சொல்வீச்சின் சிறப்பை உணர்த்தும். 

நான் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டது போல, ஒரு அங்காடியில் A வகைப் பொருள்கள் மிக அதிகமாக இருந்தால் உரிமையாளர் மிகவும் மகிழ்வார். ஆனால் இலக்கியத்தில் A வகைச் சொற்கள் மிக அதிகமாக இருந்தால் அது சொல் வறட்சியைக் குறிக்கும். அந்த வகையில் இங்கு A வகைச் சொற்கள் மிகக் குறைவாக இருப்பது சங்க இலக்கியங்களின் சொல் வளத்தைக் குறிக்கும்.

அடுத்து, இதே அட்டவணையில் மேலும் இறங்கி வந்தால், 2 முறை வருகின்ற சொற்களின் இறுதியில் கிடைக்கும் கூட்டு மதிப்பு 92.21% . இந்தச் சொல்லின் வரிசை எண் 14465. எனவே A வகைச் சொற்களை அடுத்து இந்தச் சொல்லுக்கு முன்னர் இருக்கும் சுமார் 10,000க்கு சொற்கள் எல்லாம் B வகைச் சொற்கள் ஆகின்றன. மொத்தத்தில் இது 40%. இந்த நாற்பது விழுக்காடு சொற்கள் சங்க இலக்கியங்களில் 2,3,4,5 முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

14,466 -ஆவது சொல்லிலிருந்து கடைசிச் சொல்லான 25,329-ஆவது சொல் வரையுள்ள அத்தனை சொற்களும் சங்க இலக்கியத்தில் ஒரே ஒரு முறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த 10,000 -க்கும் அதிகமான சொற்கள்தான் C வகைச் சொற்கள் ஆகின்றன. இவை 40 விழுக்காட்டுக்கும் அதிகமான சொற்கள். ஒரு கடையில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமான பொருள்கள் வருடத்திற்கு ஒரே ஒரு முறை விற்றால் கடைக்காரர் நொந்துபோய்விடமாடாரா? ஆனால் இலக்கியத்தில் அப்படியில்லை. சங்க இலக்கியத்தில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமான சொற்கள் ஒரே ஒரு முறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று காணும்போது இது சங்க இலக்கியத்தின் சொல்வளத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. 
எனவே, இந்த ABC பகுப்பாய்வு மூலமாக சங்க இலக்கியத்தின் சொல் வளமும், சொல் வீச்சும் ஐயத்திற்கிடமின்றி நிறுவப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்கள் - For ABC Analysis Graph
1. 1248 (0.70%)( 0.70%) - என

2. 1004 (0.56%)( 1.26%) - அன்ன
3. 951 (0.53%)( 1.80%) - நின்
4. 740 (0.42%)( 2.21%) - கண்
5. 733 (0.41%)( 2.63%) - பெரும்
-------------------------------------------
-------------------------------------------
4520. 6 (0.00%)(80.99%) - மேக்கு
4521. 6 (0.00%)(80.99%) - மைந்தின்
4522. 6 (0.00%)(80.99%) - மொழிந்து
4523. 6 (0.00%)(81.00%) - மொழியும்
4524. 6 (0.00%)(81.00%) - மொழிவல்
4525. 6 (0.00%)(81.00%) - யாங்ஙனம்
4526. 6 (0.00%)(81.01%) - யாணர்த்து
-------------------------------------------
-------------------------------------------
11461. 2 (0.00%)(92.21%) - வைப்பவும்
11462. 2 (0.00%)(92.21%) - வையக
11463. 2 (0.00%)(92.21%) - வையகத்து
11464. 2 (0.00%)(92.21%) - வையமும்
11465. 2 (0.00%)(92.21%) - வையா
-------------------------------------------
-------------------------------------------
25324. 1 (0.00%)(100.00%) - வௌவினர்
25325. 1 (0.00%)(100.00%) - வௌவினன்
25326. 1 (0.00%)(100.00%) - வௌவினை
25327. 1 (0.00%)(100.00%) - வௌவுநர்
25328. 1 (0.00%)(100.00%) - வௌவுபு
25329. 1 (0.00%)(100.00%) - வௌவும்_காலை

இந்த அட்டவணைப்படி எண்ணிக்கை 6, அதாவது 81.01 என்ற கூட்டுமதிப்பு உள்ள சொல்லுக்கு முன்னர் இருக்கும் சொற்கள் எல்லாம் A வகைச் சொற்கள் ஆகின்றன. அதன் பின்னர், எண்ணிக்கை 2, அதாவது 92.21 என்ற கூட்டுமதிப்பு உள்ள சொல்லுக்கு முன்னர் இருக்கும் சொற்கள் B வகைச் சொற்கள் ஆகின்றன. அடுத்து வருபவை எண்ணிக்கை 1 உள்ளவை. இவை C வகைச் சொற்கள்.

முடிபாக, ஏறக்குறைய 1,70,000-க்கு மேற்பட்ட சொற்களில் 25,000-க்கு மேற்பட்ட தனிச்சொற்களுள்ள சங்க இலக்கியங்களில் 18 விழுக்காடு அளவுக்கான சுமார் 4500 சொற்கள் மட்டுமே 80 விழுக்காடு அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். எனவே சங்க இலக்கியங்களில் ஒரு கட்டுக்கோப்பான சொற்பயன்பாடு இருப்பது தெரிகிறது. மேலும் 90% - 100% பயன்படுத்தப்படும் சொற்கள் மிகவும் அரிதான சொற்கள். அவை மொத்தத்தில் 40%. அதாவது 40% சொற்கள் அருஞ்சொற்களாக இருக்கக் காண்கிறோம். இது, சங்க இலக்கியங்களின் சொல்வளத்தைக் காட்டுகிறது.



Thursday, August 27, 2020

திருக்குறளில் நகைச்சுவை!

திருக்குறளில் நகைச்சுவை! 

-- சொ.வினைதீர்த்தான்


திருக்குறளில் உவகையளித்து சிந்திக்க வைக்கும் சில குறட்பாக்கள். 

முட்டாள்களோடு நட்புக்கொள்ளுதல் மிகவும் இனிமையானதாம். ஏனென்றால் பேதையரான அவர்கள் பிரிந்து சென்றால் வருத்தம் ஏற்படாததல்லவா?
கயவரும் தேவரும் ஒத்தவராம். தேவர்களைப்போலக் கயவரும் மனம் போன போக்கில் தாம் விரும்பினதைச் செய்தலாலாம்.
அறிஞரை விடக் கயவர் திருவுடையவராம். அறிஞருக்குக் கவலை இருக்க வாய்ப்பு உண்டு. கயவருக்குத்தான் நெஞ்சத்தில் கவலையில்லையே!

ஒருத்தி சொன்னாளாம் நான் கண்ணுக்கு மை தீட்டமாட்டேனென்று; கண்ணிலே இருக்கின்ற காதலனுக்கு உறுத்தி துன்பம் தந்துவிடுமாம்!
மற்றொருத்தி கூறினாளாம் சூடாக எதையும் குடிக்க மாட்டேனென்று; நெஞ்சத்திலே இருக்கிற காதலரை அது சுட்டுவிடுமாம்.

பூவை தலையிலே வைத்தாளாம் ஒருத்தி. இடுப்பு ஒடிந்து செத்துவிட்டாளாம். பாவி பூவின் காம்பை எடுக்காமல் வைத்து விட்டாளாம்!
விண்மீன்கள் எல்லாம் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒரு நிலையில் இல்லாமல் கலங்கினவாம். தலைவியின் முகத்திற்கும் சந்திரனுக்கும் வித்தியாசம் புரியாமல் தான்!
தலைவியைப் பார்த்துவிட்டு குவளை பூ படக்கென்று தலையைத் தொங்கப்போட்டதாம்; அவளுடைய கண்ணுக்கு இணையாக மாட்டோம் என்று வெக்கத்தினாலாம்!

ஒருத்தன் தன் கண்ணின் பாவையைப் போகச்சொன்னானாம்; அவன் காதலியை அமரவைக்க இடம் வேண்டும் அல்லவா!
உன்னை நினைத்தேன் என்றானாம்; மறந்தாயா என்று அழுதாளாம்.
இந்தப்பிறவியில் பிரியமாட்டேன் என்றானாம். அடுத்த பிறப்பில் பிரிவு நேருமோவென்று கண் கலங்கினாளாம்.

தும்மிய கதையெல்லாம் சொன்னால் இந்த பதிவு நீண்டுவிடும்! வள்ளுவர் தான் எச்சரித்துள்ளாரே, “கல்லாதவரும் மிகவும் நல்லவரென்று;" எதுவரை? கற்றறிந்தவர்கள் முன்னிலையில் பேசாது அமைதியாக இருக்கும் வரையாம். ஆதலால் நிறுத்திக்கொண்டு மேற்கண்ட விளக்கங்களுக்கான குறட்பாக்களை நண்பர்கள்  பார்வைக்கு இணைத்துள்ளேன்.

//முட்டாள்களோடு நட்புக்கொள்ளுதல் மிகவும் இனிமையானதாம். ஏனென்றால் பேதையரான அவர்கள் பிரிந்து சென்றால் வருத்தம் ஏற்படாததல்லவா?//
இதை விளக்கும் குறட்பா...
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில். (குறள்: 839)

//கயவரும் தேவரும் ஒத்தவராம். தேவர்களைப்போலக் கயவரும் மனம் போன போக்கில் தாம் விரும்பினதைச் செய்தலாலாம்.
அறிஞரை விடக் கயவர் திருவுடையவராம். அறிஞருக்குக் கவலை இருக்க வாய்ப்பு உண்டு. கயவருக்குத்தான் நெஞ்சத்தில் கவலையில்லையே!//
இக்கருத்துக்களைப் பிரதிபலிக்கும் குறள்கள்...
"தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்" (குறள்: 1073)
"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்" (குறள் 1072)

//ஒருத்தி சொன்னாளாம் நான் கண்ணுக்கு மை தீட்டமாட்டேனென்று; கண்ணிலே இருக்கின்ற காதலனுக்கு உறுத்தி துன்பம் தந்துவிடுமாம்!
"கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து" (குறள்: 1127)
//மற்றொருத்தி கூறினாளாம் சூடா எதையும் குடிக்க மாட்டேனென்று; நெஞ்சத்திலே இருக்கிற காதலரை அது சுட்டுவிடுமாம்.//
"நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து" (குறள்: 1128)

//பூவை தலையிலே வைத்தாளாம் ஒருத்தி. இடுப்பு ஒடிந்து செத்துவிட்டாளாம். பாவி பூவின் காம்பை எடுக்காமல் வைத்து விட்டாளாம்!//
"அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை" (குறள்: 1115)

//விண்மீன்கள் எல்லாம் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒரு நிலையில் இல்லாமல் கலங்கினவாம். தலைவியின் முகத்திற்கும் சந்திரனுக்கும் வித்தியாசம் புரியாமல் தான்!//
"மதியும் மடந்தை முகனும் அறியாப்
பதியிற் கலங்கிய மீன்" (குறள்: 1116)
//தலைவியைப் பார்த்துவிட்டு குவளை பூ படக்கென்று தலையைத் தொங்கப்போட்டதாம் ; அவளுடைய கண்ணுக்கு இணையாக மாட்டோம் என்று வெக்கத்தினாலாம்!//
"காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று" (குறள்: 1114)

//ஒருத்தன் தன் கண்ணின் பாவையைப் போகச்சொன்னானாம்; அவன் காதலியை அமரவைக்க இடம் வேண்டும் அல்லவா!//
"கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்" (குறள்: 1123)

//உன்னை நினைத்தேன் என்றானாம்; மறந்தாயா என்று அழுதாளாம்.
இந்தப்பிறவியில் பிரியமாட்டேன் என்றானாம். அடுத்த பிறப்பில் பிரிவு நேருமோவென்று கண் கலங்கினாளாம்.//
இச்செய்திகளை உள்ளடக்கிய இரண்டு குறளமுதங்கள்...
"உள்ளினேன் என்றேன் மற்ற என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்" (குறள்: 1316)
"இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்"  (குறள்: 1315)

//தும்மிய கதையெல்லாம் சொன்னால் இந்த பதிவு நீண்டுவிடும்!.//
"வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று" (குறள்: 1317)

//வள்ளுவர் தான் எச்சரித்துள்ளாரே, “கல்லாதவரும் மிகவும் நல்லவரென்று;’ எதுவரை? கற்றறிந்தவர் முன்னிலையில் பேசாது அமைதியாக இருக்கும் வரையாம்.//
"கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்" (குறள்: 403)





ஒற்றுமை

ஒற்றுமை

-- கவிஞர் புகாரி

கவியரங்கம் என்றார்கள்
எனக்கென்ன தலைப்பென்றேன்
ஒற்றுமை என்றார்கள்
இல்லாத ஒன்றை
எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்
என்று கேட்கவே நான் இங்கு வந்தேன்

காற்று தறிகெட்டு
தாறுமாறாய் வீசிக்கொண்டிருந்தது
நீர் ஆவியாகிக்
கானல் நீராய் அலைந்துகொண்டிருந்தது
நிலம் பாளம் பாளமாய்ப்
பிளந்து கிடந்தது
நெருப்பு திக்குகளெங்கும்
திடும் திடும் என பற்றி எரிந்துகொண்டிருந்தது
வானம் ரத்தக்கோடுகள் ரேகைகளாய்ப் பாய
கிழிக்கப்பட்டுக் கிடந்தது

அலறிச் சென்ற
அவசர ஊர்தி ஒன்றின்
பின்னால் ஓடினேன்

மருத்துவமனை!
அவசர சிகிச்சைப் பிரிவு!

படுக்கையில்
அடையாளம் தெரியாமல்
ஓர் உருவம்

குளுகோஸ்
ஏறிக்கொண்டிருந்தது
ஆக்சிஜன்
பொருத்தப் பட்டிருந்தது
இதயத்துடிப்பு
கண்காணிப்பில் இருந்தது

யார் நீ…?
என்று கேட்டேன்

நான் தான் ஒற்றுமை என்றது

என்னாயிற்று…?
ஏன் இப்படி கிடக்கிறாய்…?
என்றேன்?

வெறுப்பு என்னை
வெட்டிப் போட்டுவிட்டது
அகந்தை என்னை
அறுத்துப் போட்டுவிட்டது
சுயநலம் என்னைச்
சூரையாடிவிட்டது
வன்முறை என்னை
வழித்துப் போட்டுவிட்டது
என்றது

உதவிக்கு
யாருமே வரவில்லையா…?
என்று கேட்டேன்

சகோதரத்துவமே என்னைக் காப்பாற்று
சமத்துவமே என்னைக் காப்பாற்று
அறமே என்னைக் காப்பாற்று
அன்பே என்னைக் காப்பாற்று
ஞானமே என்னைக் காப்பாற்று
என்று கதறினேன்…
என்றது

ஒன்றுகூடவா உன்னைக்
காக்க வரவில்லை…?
என்று கேட்டேன்

சிதைந்த தசைகளைக் கூட்டி
மிகுந்த சிரமப்பட்டு
வறட்சியாய்
ஒரு புன்னகையை உதிர்ந்தது

புன்னகைக்காதே
பதில் சொல் என்றேன்
கோபத்தோடு

எனக்கும் முன்பே
என்னைவிடவும் படு மோசமாய்
கிழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு
தகர்க்கப்பட்டு நொறுக்கப்பட்டு
அசரசப் பிரிவுகளில்
உயிருக்குப்
போராடிக்கொண்டிருக்கின்றன சில
சவக்கிடங்கில்
அடுக்கப்பட்டுவிட்டன பல….
என்றது

என்றால்….
மனிதர்களே இல்லாத
மயான பூமியா இது…?
என்றேன் கலவரத்தோடு

அது சரி…. நீ யார்…?
உன்னால் என்னைக் காக்க முடியுமா…?
என்று கேட்டது

அடுத்தநொடி
அங்கிருந்து அகன்று ஓடிவந்துவிட்டேன்

கவியரங்கம் என்றார்கள்
எனக்கென்ன தலைப்பென்றேன்
ஒற்றுமை என்றார்கள்
இல்லாத ஒன்றை
எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்
என்று கேட்கவே நான் இங்கு ஓடி வந்தேன்

O

குறிப்பு:  ஆகஸ்ட் 14, 2020 கவிக்கோ நினைவுக் கவியரங்கம் - தென்னாட்டிலிருந்து ஒரு பன்னாட்டுக் கவியரங்கம் - வீழ்ந்த தேவதைகள் என்ற பொதுத்தலைப்பில் ஒற்றுமை என்னும் கிளைத் தலைப்பிற்காகப் பாடிய கவிதை