Saturday, August 29, 2015

விழுப்புரத்தில் எட்வர்டு நினைவுப் பூங்கா


--கோ.செங்குட்டுவன்.


‘Prince of wales’ என்று அழைக்கப்படுபவர் இங்கிலாந்தின் இளவரசர் (ஏழாவது) எட்வர்டு ஆவார். 1906இல் இந்தியா வந்த இவரை ‘வருக செல்வ! வாழ்க மன்னீயே’ என சுதேசமித்திரனில் வரவேற்றார் மகாகவி பாரதி.

இங்கிலாந்து இளவரசரின் நினைவாக மெல்போர்ன் நகரில் ‘குயின் விக்டோரியா கார்டன்’ எனும் இடத்தில் சிலையும், லிஸ்பனில் ‘ப்ப்ளிக் பார்க்’கும் அமைக்கப் பட்டுள்ளன.

ஏழாவது எட்வர்டுக்கு விழுப்புரத்திலும் ஓர் நினைவுச் சின்னம் இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான்.

விழுப்புரம் ஜனசகாய பண்டில் (நிதி நிறுவனத்தில்) 1930களில், ‘ஏழாவது எட்வர்டு மெமோரியல் நிதி’ எனும் கணக்கு, விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தொடங்கப்பட்டிருந்தது. இதன் மூலம் சேர்க்கப்பட்ட ரூ.4ஆயிரத்து 145இல் இலவச ஆஸ்பத்திரி கட்டுவது பற்றி நகரமன்ற உறுப்பினர்கள் அபிப்ராயம் தெரிவிக்க வேண்டும் என்று மெமோரியல் கமிட்டி சார்பில் 14.02.1932இல் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் இலவசஆஸ்பத்திரி எதுவும் கட்டப்பட்டதாகத் தெரியவில்லை.  ஆனால் நகராட்சிப் பூங்காவுக்கு ‘ஏழாவது எட்வர்டு மெமோரியல் பார்க்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.



17.05.1947 அன்று நடந்த விழாவில் அப்போதைய சென்னை மாகாண வேளாண்துறை அமைச்சர் மாதவமேனன், புதிய பூங்காவுக்கு மேற்கண்ட பெயர் சூட்டி அடிக்கல் நாட்டினார்.


11.03.1951இல் உள்ளுர் நிர்வாகம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் சந்திர மௌலி பூங்காவை திறந்து வைத்தார்.


அப்போது இதன் பெயர் ‘முனிசிபல் பார்க்’ என்பதாக மாற்றப்பட்டிருந்தது.
________________________________________________________
 
கோ.செங்குட்டுவன் 
ko.senguttuvan@gmail.com
________________________________________________________

Friday, August 28, 2015

ஓங்கி உலகளந்த உத்தமன் வருகின்றான்!

 ஓங்கி உலகளந்த உத்தமன்!

  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி,தன் பாசுரத்தில்  வேறு எந்த அவதாரத்தையாவதுவேறு  எந்த இடத்திலாவது,  உத்தமன் என்று  அழைத்துப் பாடி இருக்கிறாளா  என்று தெரியவில்லை ஆனால்  வாமனனை மட்டும்  ஓங்கி உலகளந்த உத்தமன் என்கிறாள்!  உலகளந்த என்று மட்டும் சொல்லாமல்  முதல் சொல்லாக  ஓங்கி என்றாள் ஏன்? அந்த சொல்லின் வீச்சு அற்புதமானது!

.பாரதி  ...’"ஓங்கி வளர்ந்ததோர் கம்பம். அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே...’ என்கிறபோது  கம்பத்தின்  கம்பீரம்  காட்சியாகிறது.

மகளைப்போல  தந்தை,பெரியாழ்வாரும் உத்தமன் என்கிறார் ஒருபாசுரத்தில் .
,
” பாடிப்பாடி வருகின்றாயைப்
பற்பநாபன் என்றிருந்தேன்
ஆடிஆடி அசைந்து அசைந்திட்டு
அதனுக்கு ஏற்ற  கூத்தை ஆடி
ஓடிஓடிப்போய்விடாதே
 உத்தமா.....  என்கிறார்.

நம்மாழ்வாரோ

விதியினால் பெடை மணக்கும் மென்நடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு ..
என்கிறார்.

கள்வன் என  குற்றமாய் சொல்லவில்லை. ’திருடனே’ என உற்றவர்களை  செல்லமாய் உரிமையாய் அன்பாய் அழைப்பதுபோலத்தான் இதுவும்..

 மேலும்...
மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய்
      மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக
      பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-

என்றுதான் திருமங்கையாழ்வாரும் அருள்கிறார். நிமிர்ந்தோன் என்பதைவிட ஓங்கி உலகளந்தான் என்கிறபோது  அவதாரத்தின்  பிரும்மாண்டம் கண்முன் விரிகிறது.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி.....என்கிறது திருப்பாவை பாசுரத்தின் ஆரம்ப வரிகள்.

ஆண்டாள்  பூர்ண அவதாரங்களான ராம-கிருஷ்ண அவதாரங்களப் பாடாமல்,த்ரிவிக்ரமன் பேர் பாடச் சொல்கிறாள். இதே த்ரிவிக்ரம அவதாரத்தை 17வது பாசுரத்திலும்(அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே(மறுபடி ஓங்கி உலகளந்த என்கிறாள்பாருங்கள்) என்றும், 24வது பாசுரத்தின் முதலடியிலும்(அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி! என்றும் ஆண்டாள் போற்றுகிறாள்!
 ராம-கிருஷ்ண அவதாரங்களில் முறையே ராவணன்,கம்சன் தவிரவும் பல அசுரர்களை அண்ணல் வதம் செய்கிறார்.  இந்த அவதாரத்தில் மட்டும்(மகாபலியை அழிக்கவில்லை ஆனால், அவன் அகந்தையை அழித்து, அவனைத் திருத்தி தடுத்தாட் கொண்டார் ஆகவேஅந்தக் கருணை வடிவமான வாமன அவதாரமே அவளைப்பெரிதும் கவர்ந்திருக்கவேண்டும்.

மஹாபலி பக்தனாயிருந்தும் அவன் செயல்பாடுகளில் அத்து மீறிய அதிகார துர் உபயோகமும் அட்டூழியமும் இருந்ததால் இப்படி அவனை அப்புறப் படுத்த வேண்டி வந்தது. அதிகாரக்குவிப்பு எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்லும் அதற்குத் தடைஅவசியம் என்பது எல்லாகாலங்களிலும் பொருந்துகிறதே!


பெருமாள் நெடியவர், குறுகி அறியாதவர்; எல்லா உயிர்களுக்கும் அவை வேண்டும் வரங்களை வாரி வழங்குபவர்; யாரிடமும் எதையும் கேட்காதவர்.இந்திரனுக்காக மகாபலியிடம் சென்றபோது நெடியவர் குறுகி வாமனனாகச் சென்றார். இல்லறத்தார் பிரம்மச்சாரியானார்; வாரிக் கொடுப்பவர்வெறும் மூன்றடி நிலம் கேட்கிறார்.

கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கியதில் இந்திரன் அவரோடு மாறுபட்டு அபசாரம் செய்தான். அப்படி தமக்கு அபசாரம் செய்தவனே, மகாபலியினால் தனது ராஜ்யத்தை இழந்து துன்பப்பட்டு பிரார்த்தித்த போது, அவனுக்காக மகாபலியிடம் செல்கிறார்.
 `அகலகில்லேன் இறையும்' என்று உனது மார்பை விட்டகலாத திருமகளை மறைக்க மான் தோலை மூடிக்கொண்டு நீ பிரம்மச்சாரியாகிவிட்டாய்' என்றார் வேதாந்த தேசிகர்



ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளிவந்ததில்

குறள்  சொல்லும் பாடம் இது!

(மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்து அளந்தான்...திருவள்ளுவமாலை)


பிச்சை எடுக்கும்போது ஒருவனுடைய கல்வி, கேள்வி,புகழ்,சாதுரியம்,மற்றும் வெற்றி என்ற ஐந்து தேவதைகளும் அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து மீண்டு வர இயலாத தூரத்துக்கு விலகுகிறார்கள் என்பது தெரியாதா ? அதையும் செய்தான் பெருமாள். அது வாமனாவதாரம். அவன் உத்தமன்.எனவேதான் `ஓங்கி உலகளந்த உத்தமன்' என்றார் நாச்சியார்.

பல வைணவக்கோவில்களில்  இந்தப்பாசுரத்தைசொல்லியபடியே நம் கையில் அர்ச்சனை பிரசாதங்களை தருகிறார்கள் அதுவும் ஸ்ரீவில்லிபுத்தூரில்  ஓங்கிஉலகளந்த  என்னும் பாசுரம்  எல்லா சந்நிதிகளிலும்  யாராவது ஒருவர் பாடிக்கொண்டே இருக்கிறார்கள்! தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரியும் நீங்காத செல்வமும் எங்கும் நிறைந்திருக்க  ஆண்டாள் அண்ணலிடம் விரும்பிக்கேட்டு அருளிய பாசுரம் இது!

 `
 ( மகாபலி கேட்டுக்கொண்டபடி  வருடம் ஒருமுறை அவன் தன் மக்களைக்காண வரும் திருநாள்தான்  ஓணத்திருநாள்! இன்றைய நன்னாள்!

அன்புடன்
ஷைலஜா

Monday, August 24, 2015

ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர்: ஓமந்தூரார் (1947-1949)

--கோ.செங்குட்டுவன்.

ஓமாந்தூர் ...

திண்டிவனம் – புதுவை சாலையில் 13ஆவது கி.மீ.இல் அமைந்துள்ள இவ்வூர் தமிழக அரசியல் வரலாற்றில் பிரிக்கவொண்ணா ஓர் ஊராகும்.

ஆம், சுதந்திர இந்தியாவில் சென்னை கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல் முதல்வர்-ஓமந்தூரார் என்றும், ஓ.பி.ஆர் என்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்படும், ஓமாந்தூர்  பி.இராமசாமி ரெட்டியாரின் பிறப்பிடம் இதுதான்.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஓமந்தூரார்.

1912 முதலே இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டார். 1930இல் தென்னார்க்காடு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஓமந்தூரார். விழுப்புரம் அருகே சிறுவந்தாடு கிராமத்தில் காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார்.

ஆங்கிலேய அரசின் தடைகளை மீறி தென்னார்க்காடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் மாநாடுகளை நடத்தினார். இம்மாநாடுகளில் பண்டித அசலாம்பிகை அம்மையார், பாபு ராஜேந்திர பிரசாத், தி ஹிந்து ரங்கசாமி ஐயங்கார், காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா உள்ளிட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.

1930இல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்துக்கு தொண்டர்களை அனுப்பியக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 6 மாத சிறை தண்டனை விதிக்கப் பெற்றார். இதுபோல் பலமுறை சிறைவாசத்தை அனுபவித்தார் ஓமந்தூரார்.

1938இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பை ஏற்றார்.

23.3.1947 முதல் 6.4.1949 வரை ஓமந்தூரார் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தார்.

இவரது ஆட்சியின்போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை முறைப்படுத்தும் சட்டம், ஜமீன்தாரி இனாம் ஒழிப்புமுறை, கோயில்களில் தேவதாசி முறை ஒழிப்பு, கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மற்றும் பூரண மதுவிலக்கு ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மேலும், சென்னை மாகாண அரசின் சின்னமாக திருவில்லிப்புத்தூர் கோபுரம் அறிவிக்கப்பட்டது. இந்திய மருத்துவம் வளர உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழ் வளர்ச்சிக் கழகம் உருவாக்கப்பட்டது. பாரதியார் பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.தேசிய கவி இராமலிங்கம் பிள்ளை அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.

காந்தியம் மற்றும் வடலூர் வள்ளலாரின் கொள்கைகளில் பெரும் ஈடுபாடு கொண்டவர் ஓமந்தூரார்.

விழுப்புரம் மாவட்டம் மழவந்தாங்களில் கஸ்தூரிபா தொழு நோய் நிவாரண நிலையத்தைத் தொடங்கிய இவர், வடலூரில் வள்ளலார் குருகுல உயர்நிலைப் பள்ளியையும் தொடங்கினார்.

1.2.1895இல் பிறந்த இவர் 25.8.1970இல் காலமானார்.

சென்னையிலுள்ள அரசினர் தோட்டத்துக்கு ஓமந்தூரார் அரசினர்த் தோட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரது நினைவைப் போற்றும் வகையில் மத்திய அரசு தபால் தலை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

2000ஆம் ஆண்டின் இறுதியில் ஓமந்தூர் கிராமத்துக்கு நான் சென்றிருந்தேன். முன்னாள் முதல்வர் ஒருவர் வாழ்ந்ததற்கான எந்தச் சுவடும் அங்கில்லை. கற்குவியல் ஒன்றைக் காட்டி, இங்குதான் அவர் வீடு இருந்தது என்றனர்.

இதனைத் தொடர்ந்து 9.11.2000 தேதியிட்ட குமுதம் இதழில், ‘முதல்’வரின் கிராமத்துக்கு முகவரி கொடுங்கள் எனும் தலைப்பிலான, என்னுடையக் கட்டுரை ஸ்பெஷல் ரிப்போர்ட்டாக பிரசுரமானது.

(அக்கட்டுரை உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது. (நன்றி: குமுதம்) 


கடந்த 2013 பிப்ரவரியில் ஓமாந்தூர் கிராமத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆருக்கு அழகிய மணிமண்டபம் திறக்கப்பட்டது.



________________________________________________________
 
கோ.செங்குட்டுவன் 
ko.senguttuvan@gmail.com
________________________________________________________