Sunday, May 11, 2014

சிற்பம்/ஓவியம்/ரசனை/மஹாபலிபுரம் --- வராக மண்டபம்--2

02.வராக மண்டபம்

உலகின் தலைசிறந்த சிற்பங்களினூடே நான் என்ன செய்யப் போகிறேன்? அல்லது என்னால் என்ன செய்து விட முடியும்? நான் என்ன வரலாற்றாய்வாளனா? நான் - கல்வெட்டு, சிற்ப சாத்திரம் மட்டுமல்ல இறை வழிபாடு, புராண அறிவு என்று கூட பெரிதாகக் கற்றுக் கொள்ளாதவன் தான். இருந்தபோதும், கொஞ்ச நாட்களாக என்னால் சிற்பங்களோடு பேச முடிகிறது, என் கற்பனையை இங்கே காட்சிப்படுத்திப் பார்க்க முடிகிறது, சில புதிய கதைகளை அங்கிருந்து எடுத்துக் கொள்ள முடிகிறது. ஏடுகள், நவீன தியான முறைகள் போன்றவற்றில் கிடைக்காத அமைதி சித்திரங்களோடும், சிற்பங்களோடும் நான் இருக்கையில் கிடைக்கின்றது. இவற்றோடு என்னால் மட்டுமல்ல, உங்களாலும் பேச முடியும், சிரிக்க முடியும், உரையாட முடியும். அலங்காரச் சொற்களால் நிறைந்த போலித் தன்மை நிறைந்த மனிதர்களிடையேயான உரையாடல்களில் இல்லாததைத் துறந்து, இச்சிலைகள் அணிந்திருக்கும் நிர்வாணம் தான் நம்மிடம் உண்மையாகப் பேசும், அதுவும் நிறையவே பேசும்.. நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான் காது கொடுத்துக் கேட்க வேண்டும், அதற்காகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்- என்னைப் பொருத்தவரை ஆழ்ந்து/உற்று நோக்குதல் தான் சிற்பம் பற்றி பயில இருக்கும் ஒரே வழி.

முதற்பகுதியில் திருமூர்த்தி குகைக் கோயிலைப் பார்த்தோம்!! இப்பொழுது நாம் செல்வது வராக மண்டபத்தில், திருமூர்த்திக் கோயிலில் இருந்து தென் புறமாகக் குன்றிலிருந்து கீழிறங்கி நடக்கும் பொழுது, முதலில் வருவது விநாயகர் சன்னதி, பெரும்பாலும் பூட்டப்பட்டு இருக்கும் அறையில் கம்பிகளின் ஊடே ஐங்கரன் அருள்பாளிக்கிறார், அங்கே மட்டும் இறைவனாக இருப்பதால் இன்று வரை கன்னத்தில் ஒத்திக் கொண்டு நகர்ந்து விடுகிறேன். கொஞ்சம் அவ்வழியே மேலேறினால் முதலில் வருவது வராக மண்டபம்.



வராக மண்டபம் முன் தோற்றத்தில் நான்கு தூண்களால் ஆன மண்டபமாக குடையப்பட்டிருக்கிறது, இரண்டு தூண்கள் முழுமையாகவும், இரண்டு பாதி மட்டும் செதுக்கப்பட்டும் இருக்கும், நான்கு தூண்களும் யாளியின் முதுகில் நிற்பது போல வடிக்கப்பட்டிருக்கும். மண்டபத்திற்குள் நுழையும் பொழுதே நாம் இதில் கால் நனைப்பதற்கு ஏதுவாக வாயிலின் முகப்பில் ஒரு தொட்டி போன்ற அமைப்பு தோற்றமளிக்கிறது. இது தற்கால மல்லைக்கு மிக முக்கியமான மண்டபம், மஹாபலிபுரம் என்ற பெயருக்கு பொருந்தும் சிற்பம் இச்சன்னதியில் இருப்பதால், இதைக் கட்டிய மன்னன், இதைத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதியிருக்கிறான். இதன் காரணமாகவே இச்சன்னதியில் நுழைவதற்கு கால்களைச் சுத்தம் செய்ய ஏதுவாக ஒரு தொட்டியும் அமைக்கப்ப்ட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.


உள்ளே மூலவருக்கான சன்னதி வழக்கம் போல வெற்றிடத்துட்ன் இருந்தாலும், அதைச் சுற்றிலும் மொத்தம் நான்கு புடைப்புச் சிற்பக் காட்சிகள் இருக்கும். ஒன்று வராகச் சிற்பம், இரண்டு – மஹாபலி-வாமன சிற்பம், மூன்று -கஜலட்சுமியின் சிற்பம், நான்கு-துர்கை. இது போக கர்பகிரகத்தின் வெளிப் புறத்தில் இரு மருங்கிலும் துவார பாலகர்களின் சிலை இருக்கும், அது போக இந்த மண்டபத்தில் ஒரு அதிசயம் இருக்கிறது. அது பெரும்பாலும், வந்து செல்லும் அநேகருக்கும், ஏன் பல வழிகாட்டிகளும் அறிந்திடவில்லை, இல்லை அதைப் பற்றி சட்டை செய்து கொள்ளாமலே இருக்கலாம். இதனாலேயே நான் சில மணி நேரம் வரை அந்த மண்டபத்தில் சிற்பங்களோடு தேங்கியபடி நின்றிருந்தேன்.

முதலில் துர்கையை தரிசிப்போம், பல்லவர் சிற்பங்களில் துர்கைக்கு மிக உயர்ந்த இடம் உண்டு, பெரிய அளவில் ராஜ்ஜியத்திற்கான போர்ச் சூழலில் எதிரிகளால், பல்லவர்கள் ஆண்டு வந்த 2 – 9ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் இருந்து வந்ததால். கொற்றவை அவர்களின் நம்பிக்கைகளில் மிக முக்கியமான இடத்தைப் பெருகிறாள். கொற்றவை வழிப்பாட்டை, காளியுடன் சேர்த்து பலர் குழப்பிக் கொள்கின்றனர். கொற்றவை வேறு, காளி வேறு - கொற்றவையை நோக்கும் பொழுது அவளது இனம்(CLAN) குறித்த வரையறைகளை ஒருவரால் குறிக்க முடியும், காளியோடு அப்படி பொருத்திப் பார்க்க முடியாது. சுருக்கமாக சொல்லப் போனால், கொற்றவை மனித வரலாற்றோடு மிக நெருக்கம் கொண்டவை, அவை புனையப்பட்டதாகக் கூறினாலுமே நெருக்கமுடையது தான்.


படத்தில் இருப்பது போல, மையத்தில் இருக்கும் துர்கை, பக்தனுக்காக காட்சியளிப்பது போன்ற நிலையில்(வரமளிக்கும்), தாமரை போன்ற பீடத்தில் நின்றவாறு புடைக்கப் பட்டிருக்கிறது. நான்கு கரமுடையவளாக, சங்கையும், வட்டினையும் ஏந்தியபடி நிற்க அவள் இடது புறம் அவளை நமஸ்கரிக்கும் சிற்பமும் அதற்கு நேரே எதிரே தன் தலையை வெட்டிக் கொண்டிருக்கும் ஒரு பலியாளின் சிற்பமும் இருக்கின்றது. போர்க் காலங்களில் இத்தகைய பலி கொடுக்கும் சம்பவங்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன. இது மிகவும் உணர்ச்சியமயமான சிற்பக் காட்சி எனலாம். துர்கை பலியாகின்றவனுக்கு அருள் செய்யக் காட்சியளிக்கும் அதே வேளை, நான்கு கனங்கள் இந்தக் காட்சிக்கும் பின்புலத்தில் அதாவது இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் பூதகணங்களாக படைக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் இருக்கும் நான்கு பூதகணங்களை, இரண்டு விதமாக என்னால் பார்க்க முடிகிறது. அதாவது பூதகணங்கள் ஒரு உயிர் பிரிவதைக் (அவர்கள் உலகமான மேலுலகத்திற்கு வருவதால்) கொண்டாடுவதைக் காட்சிப் படுத்த அவர்கள் நடனம் ஆடுவது போல மெய்மறந்த நிலையில் கொண்டாடும் காட்சியாகத் தோன்றியது. அது ஒருவேளை - நான்கு கணங்களும் சேர்ந்து போடும் ஆட்டமாகவும் இருக்கக் கூடும். அதேநேரம் - அங்கே ஒரே ஒரு பூதகணம் மட்டும் துள்ளிக் குதித்து வர இருக்கும் புதிய ஆன்மாவை எதிர்பார்த்து மகிழ்வதாகவும், நடனமாடுவதாகுவும்(கூத்து) புரிந்து கொள்ளலாம். நான் இரண்டாவதாக சொன்னது போல் பார்ப்பது தான் இந்தச் சிற்பக் காட்சியை மிகவும் முக்கியமாகக் காட்டுகிறது, அதாவது ஒரே சிற்பத்தின் பல்வேறு நிலைகள் படக்காட்சி போல விரிகின்றது, காமிக்ஸ் கதைகளுக்கெல்லாம் முன்னோடியாக இவற்றைப் பார்க்கலாம். தன்னைத் தானே பலியிடல் தான் இந்த சிற்பக் காட்சியின் மையக்கரு என்பதை உணர முடிகிறது.

யுத்தகளத்தில் வெற்றிக்காக விழும்/பிரியும் முதல் உயிர் அந்த நாட்டின் சரித்திரத்திற்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லா பண்டைய நாகரிகங்களிலும் (மாயன்,எகிப்திய) இது போன்ற உயிர்ப்பலிச் சடங்குகள் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். யுத்தத்தின் போது, காலாட்படையில் முதல் சில வரிசைகளில் அணிவகுத்துச் செல்லும் எல்லோருமே கிட்டதட்ட பலி கொடுக்கப்படுபவர்கள் தான். இப்படிக் கொடுத்துதான் சாம்ராஜ்யங்கள் உருவாக்கப் படுகின்றன. இதைப் போன்ற சடங்குகளை பின்னாளில் வரும் சமூகத்திற்கு ஆதாரப் படுத்துவதற்காக மட்டுமன்று, மிகவும் சக்தி வாய்ந்த, புனிதம் மிக்க இந்த மண்டபத்தில் ஒரு பலி கொடுக்கும் நிகழ்வையும் பதிந்ததன் மூலம் அவன் போன்ற எண்ணற்ற வீரர்களுக்கு அம்மன்னன் அஞ்சலி செலுத்துகின்றான்.

இன்றும் இது போன்ற உயிர்ப்பலிகள் நம் காலத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன, ஆனால் தேசத்திற்காக தன்னைத் தானே கொடுப்பவர்கள் என்ற தியாக நிலை எல்லாம் மாறிவிட்டது. இதுவரை ஒரு அரசு நிகழ்த்தும், அரசின் நலனுக்காக நிகழ்ந்து வந்த இது போன்ற பலிகள், இன்று நிறுவனங்களின் லாபத்திற்காக, வளர்ச்சி என்ற பெயரில் நடந்து கொண்டே தான் இருக்கின்றது என்ற அரசியல் சிந்தனையும் அம்மண்டபத்தின் உள்ளே வந்து போனது. ஏனென்றால் நான் சிற்பத்தினோடு பேசுகிறேன், “உங்கள் காலத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது தெரியுமா?? நீ எங்களைக் குறை கூறாதே” என்று அந்தப் பலியாள் என்னைப் பார்த்து அரசியல் பேசியது.

அந்த மண்டபத்திற்குள் இன்னும் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன?? அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம்
(உங்கள் கருத்துகள் அவசியம்)

ஜீவ.கரிகாலன்.

6 comments:

  1. அருமை.
    ஒரு பூதகணத்தின் நான்கு நிலைகள் என்ற கற்பனை சிறப்பு.
    நடுகல்களிலும் சிரத்தை அரிந்துகொள்வதுபோல காட்டப்படுகிறது. சுயபலிக்கும் போரில் இறந்தவர்க்கும் உள்ள சிலைகளின் வேறுபாட்டை எவ்வாறு அறிவது? கொற்றவை போன்ற சிற்பங்கள் உடன் இருப்பை வைத்து அறிந்துகொள்ளலாம் என் எண்ணுகிறேன்.
    சிற்பங்களோடு பேசுகிற நண்பர் திருஜீவ கரிகலானுக்கு வணக்கமும் வாழ்த்தும்.
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.

    ReplyDelete
  2. நன்றி வினைதீர்த்தான்..

    சுயபலிக்கும், போரில் இறந்தவர்களுக்குமான வித்தியாசத்தை நடுகற்களின் சிலைகளிடம் இருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். நடுகற்களின் நோக்கமே செய்தியைச் சொல்வது தான்.. நிறைய நடுகற்களின் படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன, சுயபலி (தன்னையே மாய்த்துக் கொள்வது, போரில் வீர மரணம் அடைந்தவர்கள் (ஆயுதங்களுடன் இருப்பார்கள்) இது போகவும் காளை தழுவி, புலியைக் கொன்று என்று நடுகற்கள் இருக்கின்றன...

    தேடிப் பாருங்கள் பதிவிடுங்கள்

    ReplyDelete
  3. மகாபாரதப் போரில் அரவான் பலி நினைவுக்கு வருகிறது. நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  4. நேரில் பார்ப்பது போன்ற வருணனை.மகாபலியில் ஒரு தற்பலிச் சிற்பத்தை உணரவைத்தீர்கள் பாராட்டுக்கள் சபா.அருணசலம்.

    ReplyDelete
  5. மகாபலிபுரம் போவதற்கு முன் உங்களின் இந்தக்கட்டுரைகளைப் படித்துவிட்டுப் போகவேண்டும். சிற்பங்களுடன் பேச சிறப்பாக வழி சொல்லியிருக்கிறீர்கள். "சிற்பங்கள் பேசுவதைக் கேட்க நாம் காது கொடுக்க வேண்டும்"

    மிகச் சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. தங்கள் கருத்துகளுக்கு நன்றி சகோதர/சகோதரிகளே

    ReplyDelete